வெளிச்சம் என்பது எழும்போது -அதன்
வேலைகள் எல்லாம் தொடங்கிவிடும்
ஒளியின் கீற்றுகள் வரும்போதே – இருள்
உயிர்ப்பை இழந்து ஒடுங்கிவிடும்
துளித்துளியாய் அது பறந்தாலும் – அதன்
தீட்சண்யங்கள் தெரிந்துவிடும்
ஒளிபோல் நிகழட்டும் உன் வாழ்க்கை – இந்த
உலகின் திசைகள் விடிந்துவிடும்.

மின்னலின் வெளிச்சம் நிலையல்ல – ஆனால்
மழையை மண்ணுக்குத் தருகிறது
சின்ன வெளிச்சம் இருந்தாலும் – அதன்
செயலால் நன்மை வருகிறது
உன்னையும் என்னையும் இவ்வுலகில் – வரும்
ஊழிவரை வைக்கப் போவதில்லை
என்றால் கூட ஏன் கவலை – நாம்
ஏற்றிடும் வெளிச்சங்கள் தீர்வதில்லை!

ஜோதியின் அம்சம் நாமெல்லாம் – இங்கு
சுடர்விடத் தானே பிறந்துவந்தோம்
ஏதுநம் தொழிலாய் இருந்தாலும் – அதில்
ஏற்றம் தரத்தான் வளர்ந்து வந்தோம்
வேதனை இருள்வந்து சூழ்கையிலே – நெஞ்சில்
வெளிச்சம் கிளம்பி வரவேண்டும்
சாதனை வெளிச்சம் பரப்பிடவே – அந்த
சூரியன் நமக்குள் எழவேண்டும்.

Comments

  1. மின்னலின் வெளிச்சம் நிலையல்ல ஆனால் மழையை மண்ணுக்கு தருகிறது.. சின்ன வெளிச்சம் இருந்தாலும் அதன் செயலால் நன்மை வருகிறது… அனைத்து வரிகளிலும் தன்னம்பிக்கை உயிர் பெருகிறது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *