வியாச மனம் முதல் அத்தியாயத்தில் கைகேயி பற்றிய குறிப்பொன்று தந்திருப்பேன்.முற்றாக முழுதாக விதியின் கருவியாக மட்டுமே இருந்து தன்னிலையில் இருந்து தாழ்ந்து போகும் பாத்திரங்கள் வாசகனின் புரிதலுக்குள் சில சலுகைகளைப் பெறுகின்றன.இராமன் மீது அளவிடற்கரிய பாசம் கொண்ட கைகேயி மனம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு வெளிப்படையான காரணம் மந்தரையின் போதனை,

‘தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது’

என்கிற கம்பன் அத்துடன் நிறுத்தாமல்,அரக்கர்களின் தீமையும் முனிவர்கள் செய்த அறமும் இராமனை கானகத்திற்கனுப்ப கைகேயியை கருவியாக்கியதைக் குறிப்பிடுகிறான்.

ஆனால் சுக்ரீவனுக்கு இராமன் உபதேசம் செய்யுமிடத்தில்  ஒரு பாடல் கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

“மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கையின்றுணர்தி வாலி செய்கையால் சாலும்-இன்னும்
அங்கவர் திறத்தினானே அல்லலும் அழிவும் ஆதல்
எங்களில் காண்டியன்றே,இதனின் வேறுறுதி உண்டோ”

என்கிறான்.இதில், எங்களுக்கேற்பட்ட அழிவுக்கும் பெண்களே காரணம் என இராமன் எவரை,ஏன் சொல்கிறான் என்பது தீராத கேள்வி. மந்தரையா கைகேயியா சீதையா சூர்ப்பநகையா ,அல்லது இவர்கள் எல்லோருமா?

மனைவியை மீட்பதற்காக வாலியை மறைந்திருந்து கொல்ல வேண்டி வந்ததே என்னும் வருத்தமா?இத்தனை கேள்விகளும் அந்தப் பாத்திரத்தின் உளவியல் பாங்கை விரிவு செய்து கொண்டே போகின்றன.

ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் உளவியல் கூறுகளை உள்வாங்கி ஆராய்ந்து அந்தப் பாத்திரத்தைப் பற்றிய அபிப்பிராயங்களைக் கட்டமைத்துக் கொள்கிறோம்.

இதில் பாத்திரங்கள் என்னதான் தன்னைப் பற்றிப் பேசினாலும் வாசகனின் மதிப்பீட்டில்தான் எல்லாம் இருக்கிறது. தன்னகங்காரத்தில் முதிர்ந்த பாத்திரங்கள் பல,தங்கள் தவறுகள் பற்றிப் பேசாமல் விடுவதே நல்லதென்று  காவிய கர்த்தாக்கள்  முடிவு செய்வார்கள்.

இராமனைப் பார்த்து, ‘இவனோ வேதமுதற் காரணன்” என வியக்கும் இராவணன்,’ஆரே ஆயினும் ஆகுக’ என்று தன் தீர்மானத்தில் தொடர்கிறான்.

முதற்கனலில் சற்றும் இரக்கமற்ற பாத்திரமாய் நாம் காணுவது சத்தியவதியைத் தான்.தன் எல்லாப் பிழைகளையும் நியாயப்படுத்தி அவள் பீஷ்மனிடம் பேசுகிற பேச்சு அவள் மீதான நம் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.

நோயுற்றிருக்கும் தன் மகனுக்கு மூன்று பெண்களையும் சிறைப்பிடித்து வரச்சொல்வது அவள் செய்த முதல் அநியாயம். அஸ்தினபுரத்திற்கு சுயம்வர ஓலை வராததற்காக ஒரு பெண்ணாகஇருந்தும் மூன்று பெண்கள் வாழ்வில் விளையாடத் துணியும் சத்தியவதி..( அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்தாறு அரிவாள் என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது)

இவளுடன் கலந்தால் இறப்பேன் என விசித்திரவீரியன் சொன்ன பின்னும் அரச தர்மத்தை மேற்கோள் காட்டி சொந்த மகனை சாகடிக்கும் சத்தியவதி…

தன் வாரிசுகளே நாடாள வேண்டுமென சந்தனுவிடம் வரம் கேட்டதற்குப் பிறகு தன்னால் பிரமசரியம் ஏற்கும் பீஷ்மனிடம் வேறு வழியின்றி பிள்ளை பெற்றுத் தரச் சொல்லும் சத்தியவதி…..

வேதங்களை வகுத்த வியாசனுக்கே குற்றவுணர்வு வரும் விதமாய் அவனை வற்புறுத்தி பிள்ளை பெற்றுத் தரச் சொல்லும் சத்தியவதி….

இத்தனை அட்டூழியங்களையும் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.தன் செயல்களை நியாயப்படுத்தி அவள் பீஷ்மனிடம் பேசுகிற வார்த்தைகள் பீஷ்மனை பால்மணம் மாறாக் குழந்தையாய் கற்பனை செய்து கொண்டு பிதற்றுவதாக இருக்கிறது.

குறிப்பாக விசித்திரவீரியனை மனம் நோகப் பலமுறை பேசி அவன் மீதுள்ள அளவுகடந்த பாசத்தால்தான் அவன் மீது பாசம் காட்டவில்லை என்றெல்லாம் பேசும் சத்தியவதியை நம்மால் விசித்திரமாகத்தான் பார்க்க முடிகிறது.

மூன்று பெண்களையும் தூக்கி வரச் சொன்னது விதியாக இருக்கலாம்.ஆனால் தானே எல்லாவற்றையும் இயக்கி நடத்துவதாய் அலட்டிக் கொள்ளும் சத்தியவதி தன் அகங்காரம் காரணமாக அவளே அனைத்திற்கும் காரணம் என்னும் குற்றச்சாட்டை வலிய தன் மேல் ஏற்றிக் கொள்கிறாள்.

‘என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம்.ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே’என்று சத்தியவதி பேசுவதும்,

“அன்னையே தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன்.ஆனால் சக்கரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாகப் புரிந்து கொள்கிறேன்.நீங்கள் சுயநலம் கொண்ட எளிய பெண்ணல்ல.இந்தபாரதவர்ஷத்தின்விதியை சமைக்கப் போகும் பேரரசி”
என்று தொடங்கி பீஷ்மன் பொழியும் ஆதரவுச் சொற்களும் அவர்களை விட்டு
மேலும் மேலும் விலகி நிற்கவே செய்கிறது,(ப-289)

அம்பிகை அம்பாலிகைக்கு பிள்ளைவரம் தந்த பின்பு வியாசர் ஒருவிதமான குற்றவுணர்வுக்கு ஆளாகி,தன் மகன் சுகப்பிரம்ம ரிஷியிடம் தான் செய்தது சரியா என்று கேட்க “கருணையின் பாற்பட்டு செய்யும் எதுவும் ஒழுக்கமே’ என சுகப்பிரம்மர் சொல்வது மிகவும் அருமையான இடம்.(ப-354)

அதேபோல அம்பையை வராஹி அம்சமேறிய தெய்வப்பித்தியாக்கி அவள்
தன்னிடம் விதிவசத்தால் வளரும் சிகண்டினி என்னும் குழந்தையை சிகண்டியாக்குவதாய் ஜெயமோகன் சொல்கிறார்.சாக்த வழிபாட்டில் பகையை அழிக்கும் பெருந்தெய்வமாய் வராஹி வணங்கப்படுகிறார். மறு பிறவியில் அம்பை சிகண்டியாகப் பிறந்ததாய் மூலப்பிரதி சொல்ல, அம்பையின் ஆவேசத்தையும் வன்மத்தையும் உள்வாங்கி வளர்பவன் சிகண்டி என்று சொல்வது   காவியத்தின் போக்கை மேலும் செழுமை செய்கிறது.

இன்னொரு பிறவிவரை கூடப் பொத்தி வைக்க முடியாத வன்மமும் கோபமும் அம்பை மனதில் தீக்கனலாய் கொழுந்துவிட அதே சூட்டுடன்
சிகண்டிக்கு அதைக் கடத்திவிட்டு நிருதனையும் சிகண்டியையும் சாட்சியாக்கி
கனலில் கலக்கிறாள் அம்பை(அ-369-370).

  சத்குரு ஶ்ரீ பிரம்மா

தன் குருநாதர் ஆணைப்படி தியானலிங்கம் அமைக்க இரு பிறவிகளாய் முயற்சித்த சத்குரு  ஶ்ரீ பிரம்மா என்னும் திகம்பர சந்நியாசி,அந்தப் பிறவியும் முடிகிற சூழலில் அடுத்த பிறவிவரை பொறுமையின்றி மகாராஷ்டிராவில் உயிர் நீத்த பாலயோகி ஒருவரின் உடலில் புகுந்து முயற்சி மேற்கொண்டார் என்பது,நான் பின்பற்றும் குருமரபில் சொல்லப்படுகிற செய்தி.இந்தக் கோணத்தில் அம்பை எடுக்கும் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

காவியத்தில் எப்போதும் கவிக்கூற்றுக்கு மதிப்பு அதிகம்.சூதகர் குரலாகவும் நிமித்திகர் குரலாகவும் ஜெயமோகனின் கவித்துவமிக்க அவதானிப்புகள் மணிகளாய் மின்னுகின்றன.

இருள் நிலையானது.ஒளி வந்து வந்து போவது என்பது ஞான மரபில் நீளப் பேசுப்படும் விஷயம்.இறைவனை  “சோதியனே” என்றதுமே ‘துன்னிருளே” என மாணிக்கவாசகர் பாடுவதும் ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே’
என்பதும் இதனால்தான்.(நள்ளிரவில் அல்ல)

முதற் கனலை ஜெயமோகன் இப்படி நிறைவு செய்கிறார்.

“பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது.விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னிப் பெருவெளியை நெய்தது.நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது.கனவுகளாக உயிரில் கனத்தது.இச்சையாக
எண்ணங்களில் நிறைந்தது.செயல்களாக உடலில் ததும்பியது.சிருஷ்டியாக எங்கும் பரவியது.ஒளியைச் சிறுமகவாகத் தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகை செய்தது.(ப-503)

தன்னுள் நிகழ்ந்திருக்கும் வியாச வியாபகத்திற்கு முழு முக்கியத்துவம் தரும் விதமாய் தன்னையே அதற்குத் தந்திருக்கும் சகோதரர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கமும் அன்பும்..

(நிறைந்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *