சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி
செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த
எழுத்தாளர் திரு.ஆ.மாதவன்.

ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு பூனையுடன் நெருங்கிப் பழகுகிற பெண்ணொருத்திக்கு,தனக்குப் பிறக்கப்
போவதே ஒரு பூனைதான் என்று தோன்றிவிடுகிறது. குழந்தை பிறந்ததும்,தாதி,”மஹாலட்சுமிபோல் ஒரு பெண்குழந்தை” என்பது
இவள்செவிகளில் “மஹா லட்சணமாய் ஒரு பூனைக்குழந்தை” என்பதாக விழுந்து விடும்.இவள் ஒரு கதையின் நாயகி

இறந்த தன் தாயாருக்காக அயல்நாட்டிலிருந்து தருவித்த அழகான
சேலையை அவள் பிரேதத்துடன் சேர்த்து எரிப்பதில் “வெற்றி” கண்ட பப்பநாவன், திரையரங்கில் வெட்டியான் மனைவி அதே சேலையுடன் நிற்பதைப் பார்க்கும் போது நடந்து கொள்கிற விதம் இன்னொரு கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

கடை சார்த்துகிற நேரத்தில் தங்கள் முதலாளியுடன் “கதை” பேச
வரும் பிள்ளை சாரின் தொல்லை பொறுக்காமல் கடை சிப்பந்திகள் எடுக்கிற
ஒழுங்கு நடவடிக்கையின் சாயலில் ஒரு காட்சியை அங்காடித்தெருவில்
பார்க்கலாம்.

நெடுங்காலமாய் எழுதிவரும் ஆ.மாதவனின் கைகளை,அவருடைய நாவலிலேயே வரும் கபட வாசகன் போல் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூட இலக்கிய அமைப்புகள் துணியாத போது, ஜெயமோகனின் வாசக நண்பர்கள் சேர்ந்து அமைத்திருக்கும் “விஷ்ணுபுரம் இல்க்கிய வட்டம்” அவருக்குத் தங்கள் முதல் விருதை வழங்கிச் சிறப்பிக்கிறது.

19.12.2010 மாலை 5 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிக் கலையரங்கில் விருதும்ரூ.50,000 பணமுடிப்பும் வழங்குகிறார்கள். வாசகர்களின் அங்கீகாரம் என்பதே விஷ்ணுபுரம் விருதின் விஸ்வரூபம் என்று சொல்லத் தோன்றுகிறது.ஆ.மாதவன் இனி பெறப்போகும் எந்த விருதும் இந்த விருதின் அன்புக்கு நிகராகாது.

கோவை ஞானி, இயக்குநர் மணிரத்னம், புனத்தில் அப்துல்லா, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளைக் கொண்டு ஆ.மாதவனுக்குக் கோலமிடப் போகிறது கோவை.

மணிரத்னம் முன்னிலையில்,ஜெயமோகனும் நாஞ்சில்நாடனும்
தளபதி படத்தின் “காட்டுக்குயிலு மனசுக்குள்ளே…” பாடலை,
ரஜினி-மம்முட்டி ரேஞ்சுக்குப் பாடப்போவதாகவும் ஒரு வதந்தி……

Comments

  1. அண்ணன் , கடைசியில ரசினி மாதிரி ஒரு பஞ்சா , நன்றி ,

    உங்கள் ஊக்கமே எங்களை தூண்டியது.

  2. அய்யா,
    விழா முடிந்து நாட்கள் பல ஆகின்றன. விழாவில் நீங்கள் எதிர்பார்த்தபடி அந்தப்பாடலை பாடினார்களா என்று சொல்லவே இல்லையே?!

    Essex சிவா

  3. ..என்ன இப்படிச் சொல்லிப் போட்டீங்க..அந்த நாகர்கோயிலு எழுத்தாளங்க ரெண்டு பெரும் பாடினது மட்டுமா..சும்மா ராசு சுந்தரம்,பிரவு தேவா மாரி என்னமா ஆடினாங்க..அதிலும் குறிப்பா "போடா எல்லாம் விட்டுத் தள்ளு ;கவலை எல்லாம் சுட்டுத் தள்ளு ,புதுசா இப்போ பொறந்தோம் இன்னு எண்ணிக் கொள்ளுடா டே.." அப்படின்னு செயமோகன் பாட்டில சொன்னதும்,நாஞ்சிலார் திடுக்கிட்டுப் போனாரே பாக்கலியா ..? (சரி சரி..நீங்க காப்பி குடிக்கப் போன நேரத்திலதான் இந்த டான்சு நடந்து முடிஞ்சிருச்சு..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *