வெள்ளிமலை காண்கின்ற விருப்பமுடன் செங்கதிரும் எழுகின்றதே
புள்ளினங்கள்இசைபாடப்பொன்காலைப் பொழுதொன்று புலர்கின்றதே
உள்ளமெலாம் நெக்குருக உமைபாகா உன்வாசல் தேடிவந்தோம்
வெள்ளியங்கிரி ஆளும் வேதாசலா பள்ளி எழுந்தருளாயே

தென்கைலா யமென்னும் வெள்ளியங்கிரி ஆளும் தேவதேவா
உன்பாதம் சரணென்னும் அடியார்கள் முகங்காண நீயும்வாவா
வெண்மேகம் அலைபாயும் மலையேறி வருகின்றோம்எங்கள்நாதா
இன்னமுதே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே

சித்தர்களும் யோகிகளும் சிவஞான முனிவர்களும் சேர்ந்துநாளும்
பத்தியுடன் தொழுதேத்தும் பரமேசா இளங்காலை புலர்கின்றதே
முத்திதரும் அருளாளா மூலமென நிற்கின்ற ஆதிமூர்த்தி
வித்தகனே வெள்ளியங்கிரிநாதா பள்ளி எழுந்தருளாயே

காஞ்சனமாம் நொய்யல்நதி கலகலென சலசலென வருகின்றதே
தீஞ்சுவையாம் தேவாரம் திருவாசகம் எங்கும் கேட்கின்றதே
வான்முழுதும் ஆதவனின் விரிகிரணம் நதியாகப் பாய்கின்றதே
மான்மழு ஏந்துகிற மாதவச் செல்வா பள்ளி எழுந்தருளாயே

காலைக் கதிரழகும் சிகரமதில் படியும்விதம் பார்த்திலாயோ
மேலைச் சிதம்பரமாம் பேரூரின் கோயில்மணி கேட்டிலாயோ
நீல மயில்களுமே நடம்புரியும் பேரழகைக் காண்கிலாயோ
காலகாலனே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே

ஓசைஒலி எழுத்தெல்லாம் உன்னுடைய வடிவன்றோ மூலமூர்த்தி
பூசையிடும் அடியார்கள் பூர்வவினை தீர்க்கின்ற புண்ய மூர்த்தி
ஆசைவிடும் துறவியரின் ஆருயிரில் ஒளிர்கின்ற ஆன்ம மூர்த்தி
ஈசனே வெள்ளியங்கிரி ஆண்டவா பள்ளி எழுந்தருளாயே

சூழும்வினை பொடிபடவே சுந்தரனே உன்பாதம் தேடிவந்தோம்
வாழும்வகை காட்டிடுவாய் வள்ளலே உன்கோயில் நாடிவந்தோம்
ஏழுமலை சூழ்கின்ற வெள்ளியங்கிரிஆளும் எங்கள்நாதா
தோழனென்றும் வருகின்ற தேவதேவா பள்ளி எழுந்தருளாயே

மூலாதாரம் என்னும் சக்கரத்தின் வடிவான முதல்மலையே
காலங்கள் ஆள்கின்ற வெள்ளைவிநாயகனின் காவல்நிலையே
தூலமெனும் உயிர்தாண்டி தூண்டாத விளக்காகும் உயிரின்நிலையே
கோலங்கள் காட்டிடும் வெள்ளியங்கிரிநாதா பள்ளி எழுந்தருளாயே

சுவாதிஷ்டா னமென்னும் சக்கரத்தின் வடிவே இரண்டாம் மலை
தவவாணர் நீராடும் பாம்பாட்டி சுனையெங்கும் அருளின் மழை
அவாவோடு வழுக்குப்பாறைமீதில் ஏறி வந்தோம்
சிவக்கொழுந்தே வெள்ளியங்கிரிஆண்டவா பள்ளி எழுந்தருளாயே

மணிப்பூரகச் சக்ர வடிவான மூன்றாம் மலையில் வந்தோம்
பிணியாவும்போக்கிவிடும் கைதட்டிச் சுனையதுவும்கண்டுவந்தோம்
உணர்வெல்லாம் வியாபிக்கும் உத்தமனே உன்நாமம் பாடிவந்தோம்
கணமெல்லாம்சூழ்கின்றவெள்ளியங்கிரிவாசனேபள்ளிஎழுந்தருளாயே

ஆதாரம் நான்கான அநாகதத்தின் அம்சமே நான்காம் மலை
ஆதாரம் நீயென்னும் அடியவராம் ஒட்டரின் சமாதிநிலை
பாதாளம் கொண்டிருக்கும்பாதைவழி பரமனே நம்பிவந்தோம்
வேதங்கள்தொழுகின்றவெள்ளியங்கிரிஆண்டவாபள்ளிஎழுந்தருளாயே

தூண்டுகிற விசுக்தியெனும் சக்கரத்தின் திருவடிவே ஐந்தாம்மலை
பாண்டவர்கள்தவம்செய்தபெருமையெலாம்கொண்டபுனிதமலை
தீண்டுகிற தீவினைகள் தீர்ந்திடவே அருள்செய்யும் எங்கள்நாதா
ஆண்டவனே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே

ஆக்ஞையெனும் சக்கரத்தின் அம்சமென நிற்கின்ற ஆறாம்மலை
பூக்களுடன் ஆண்டிசுனை பாய்ந்தோடுகின்ற திருநீற்றுமலை
தூக்கிவிடும்உன்மாயக் கரங்களையே துணையென்று நம்பிவந்தோம்
நோக்கரிய பேரழகே வெள்ளியங்கிரிவாசா பள்ளி எழுந்தருளாயே

சஹஸ்ரஹாரமெனும் சக்கரம்போல் ஆனந்தம் ஏழாம்மலை
ஹரஹர ஹரோஹரா முழக்கமுடன் பக்தரெல்லாம் கூடும்மலை
வரமருளும் சுயம்புவே சுவாமிமுடி மலையேறி வந்தோமய்யா
அருள்நிதியே வெள்ளியங்கிரி ஆண்டவா பள்ளி எழுந்தருளாயே

மனோன்மணியாம் மங்கையுமேஇடப்பாகம் சேர்கின்ற பரமேஸ்வரா
கனவினிலும் நனவினிலும் காட்சிதரும் அற்புதமே ஜகதீஸ்வரா
அனுதினமும் அனுக்ரஹமே அருளுகிற பேரழகே யோகேஸ்வரா
மனக்கோவில்வாழ்கின்றவெள்ளியங்கிரிஆண்டவாபள்ளிஎழுந்தருளாயே

வெள்ளிமலை உச்சியிலேவெள்ளமெனஅருள்வழங்கும்சுயம்புலிங்கம்
கள்ளமிலா யோகியரின் கருத்தினிலே நின்றொளிரும் ஆன்மலிங்கம்
எல்லையில்லா சக்தியுடன் அடிவாரம் தனிலிருக்கும் தியானலிங்கம்
வல்லமையின்பேரொளியேவெள்ளியங்கிரிவாசாபள்ளிஎழுந்தருளாயே

ஊன்றிமலை ஏறிடவே ஒவ்வொருவர் கைகளிலும் மூங்கிலுண்டு
தோன்றும்வினை பொடிபடவே ஐந்தெழுத்துமந்திரமும் நாவிலுண்டு
வான்முகில்கள்வந்துதொழும்வெள்ளிமலைவந்தவர்க்குஞானமுண்டு
தேனமுதே வெள்ளியங்கிரி ஆண்டவா பள்ளியெழுந்தருளாயே

நவகோடி சித்தர்களின் நிகரில்லாப் பெருந்தலைவன் சுப்ரமண்யன்
தவம்கோடி செய்தவர்க்கு உபதேசம் தந்தருள இங்குநின்றான்
யுகம்கோடி முன்பாக குமரிமுனை காணாத சோர்வில்வந்து
தவம்செய்தபரமேசாவெள்ளியங்கிரிநாதா பள்ளியெழுந்தருளாயே

விழிப்பென்னும் துயிலென்றும் வினையேதுமில்லாத வேதரூபா
அழிப்பென்றும் உயிர்ப்பென்றும் அனைத்திற்கும் மூலமே ஆதிரூபா
நினைப்பென்றும் மறப்பென்றும் நிலையேதும் காணாத நாதரூபா
மன்ப்பொய்மைநீக்கிடும்வெள்ளியங்கிரிவாசாபள்ளியெழுந்தருளாயே

தென்தமிழும்வடமொழியும் திருவடியின் சிலம்புகளாய் தோன்றியாட
இன்றுவரை சூட்சுமமாய் யோகிகளும் ஞானிகளும் இங்குவாழ
நின்றுமழை தரும்முகில்கள் நிமலாஉன் பெருமைகளை நாளும்பாட
என்றுமுளதத்துவமேவெள்ளியங்கிரிஆண்டவாபள்ளியெழுந்தருளாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *