கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருந்தோம்பலில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாய் நடைபெறுகிறது.

இவர்களில் தங்கவேல் சரவணன் என்றோர் இளைஞர். மரபாளர்களுக்கே மறந்து போன பழந்தமிழில் திருமுகம் வரைவது தொடங்கி வெண்பா கட்டளைக் கலித்துறை என்று வெளுத்து வாங்குவார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் அவருடைய சொந்த ஊர். அங்கு கோவில் கொண்டுள்ள உலகம்மை மீது பிரபந்தங்கள் பாடிய நமச்சிவாயக் கவிராயர்தான் அவருடைய ஆதர்சக் கவிஞர். கவிராயரின் பாடல்கள் இவருக்குக் கரதலப் பாடம். தங்கவேல் சரவணன் எழுதும் காதல் கவிதைகள் பெரும்பாலும் வெண்பாக்கள். சொல்விளையாட்டு,  மடக்கு, திரிபு அந்தாதி என்று எழுதித் தள்ளுவார். அவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு காதல் தோன்றுவதொன்றும் அத்தனை எளிய காரியமில்லை.

இளஞ்சேரல் ஜான்சுந்தர் ஆகியோர் பொறுப்பில் இப்போது ஊஞ்சல் அசைந்து கொண்டிருக்கிறது. கடந்தவாரம் நிகழ்ந்த அமர்வில் தங்கவேல் சரவணன், தாமிரபரணியை எப்படியெல்லாம் நமச்சிவாயக் கவிராயர் பாடியிருக்கிறார் என்றோர் உரை நிகழ்த்தினார்.“அடுத்த பிறவியிலும் நின் நன்னதியையும் சன்னதியையும் சேர வேண்டும்” என்பது போன்ற பிரார்த்தனைகள். “முத்தலை ஆடும் பொருநை” என்று கவிராயர் பாடியதன் அழகை நிறுவ, முத்துப்போன்ற நீர்த்துளிகள் தெறிக்கும் அலை என்பதையும் தாமிரபரணி சங்கமிக்கும் கொற்கையில் கொழிக்கும் முத்துக்களையும் சொல்லி, “முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்” என்ற குற்றாலக் குறவஞ்சி வரியினையும் ஒப்பிட்டுக் காட்டினார்.

தாமிரபரணி என்பதை அவர் “செம்பாறு” என்னும் நேர்த்தியையும் வியந்து விளக்கிய தங்கவேல் சரவணன் அடுக்கிக் கொண்டே போன வரிகளில் அபரிமிதமான ஆச்சரியங்கள் கொட்டிக் கிடந்தன. உரை முடிந்ததும் தமிழிலக்கியங்களில் ஆறுகள் நதிகள் பற்றிய வர்ணனைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் காணப்படும் “நீர்வழிப் படூஉம் புணை” தொடங்கி சமயத்தமிழ், கம்பன் என்று வளர்ந்து கவிஞர் வைரமுத்துவின் “மதுரை” கவிதைக்கு வந்தது விவாதம்.

வைகை நதி

“மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்-வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி-இவை
கொள்ளையடித்த வையை நதி
நாளும் ஓடிய நதிமதுரை-நீர்
நாட்டியமாடிய பதிமதுரை”




என்ற பத்தியை நான் சொன்னதுமே, “ஒரு சந்தேகம்” என்று இடைமறித்தார் அவைநாயகன். சுற்றுச்சூழல் பற்றிய அபாரமான கவிதைகள் எழுதி வருபவர். நீர்நிலைகள், வனங்கள், விலங்குகள், பறவைகள் குறித்தெல்லாம் மிகத்துல்லியமான விபரங்களை விரல்நுனிகளில் வைத்திருப்பவர்.

“சுரபுன்னை” என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். “சுரம்” என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?”என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.

பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், “கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்” என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். “சுரர்’ என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்” என்றார்.

கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டேன். கந்தசுப்பிரமணியத்தின் கருத்தை ஒப்புக் கொண்டவர் தங்கவேல் சரவணனின் விளக்கத்தை ரசித்தார். இதுபோன்ற விவாதங்கள் இலக்கியத்தை உயிர்ப்பாக வைத்திருப்பவையல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *