வாழ்க்கையைப்பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாக ஆக்கினோம்.

அந்த மூன்று அம்சங்கள் இவைதான்: பணம், பரிவு, பக்குவம்.

உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத்தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.

பணம் என்கிற முதல் விஷயத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக அணுகினாலேயே பரிவு – பக்குவம் ஆகியவற்றை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.

ஓரளவு பணம் சேர்க்கத் தொடங்குகிறீர்கள். அந்தப் பணம் உங்களை நம்பிக்கை மிக்கவராக ஆக்குகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் தாண்டி அதிகமான சில தேவைகளையும் உங்களால் எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. இந்தப் பணம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய ஒரு கருவி என்ற அளவில் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். சிலபேர், பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவி என்று கருதிவிடுகிறபோது அவர்கள் கண்களைப் பணம் மறைக்கிறது.

வாழ்க்கையின் உறவுகளை, உற்சாகத்தை, உணர்வுகளை எல்லாம் அடகு வைத்துவிடுகிறார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் விலகி நிற்கிறார்கள், வெறுப்பாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் சில செல்வந்தர்களைப் பாருங்கள் – சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அவர்களை ஆர்வமாய் நெருங்குகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். என்ன காரணம்? அந்தப் பணக்காரர்கள், தங்களிடம் சேர்ந்த பணத்தை ஒன்றும் பார்ப்பவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுப்பதில்லை.

ஆனால், அந்தப் பணத்தால் தங்களுக்கு வாழ்க்கை மேல் ஏற்பட்ட நம்பிக்கையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். தங்களால் முடிந்த அளவு பணத்தைப் பிறர் நலனுக்கு உதவினாலும், எல்லையே இல்லாத அளவுக்கு அடுத்தவர்கள்மேல் அக்கறை கொள்கிறார்கள். மனிதர்களை, அவர்களின் இப்போதைய நிலைமையை வைத்து எடைபோடாமல், மதித்துப் பழகுகிற பக்குவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல. வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் பணம் ஒரு கருவி என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது பணத்திற்கு மட்டுமல்ல. உங்களிடம் இருக்கும் கூடுதல் திறமை எதற்கும் இது பொருந்தும். அறிஞர்கள், நம்மிடையே நிறைய உண்டு. சில அறிஞர்கள் அரங்கத்தில் பேசுகையில் அவர்களின் அபாரமான அறிவால் ஈர்க்கப்பட்டு அருகே செல்பவர்கள், பழகிப் பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் விலகி வருவதுண்டு, என்ன காரணம்?

தங்கள் தனித்தன்மையான ஆற்றலைக் காரணமாக வைத்து மற்ற மனிதர்களிடமிருந்து விலகியிருக்கிற விசித்திரமான எண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.

சில அறிஞர்களோ, உரை நிகழ்த்தும்போது காட்டும் அதே அக்கறையையும், பக்குவத்தையும் தங்களிடமும், நெருங்கி வருபவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.

பணம் என்பது உங்களிடம் இருக்கிற கூடுதல் சிறப்பம்சத்தின் குறியீடு. எல்லோரிடமும் நெருங்கிப் பழகினால், அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்ய வேண்டி வருமோ என்ற கவலையாலேயே சிலர் விலகி நிற்பதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அது நியாயமென்று பட்டு நீங்கள் உதவுகிற நிலையிருந்தால் உதவலாம். அல்லது நாசூக்காக மறுத்துச் சொல்லிவிடலாம்.

உங்களை ஆளுமைமிக்க மனிதராக செதுக்கிக்கொள்ள என்ன வழியென்று இப்போது வரைபடம் ஒன்றைப் போடலாம். முதல் விஷயம், உங்களை தனிப்பட்ட முறையில் தகுதிமிக்கவர் ஆக்கிக் கொள்வது. அது பொருளாதாரம் – சமூக மதிப்பு – செல்வாக்கு என்று எந்தத் தகுதியாகவும் இருக்கலாம். அதனை உங்கள் முயற்சியால் பெருக்கிக் கொள்வது.

இரண்டாவதாக, சக மனிதர்களிடமிருந்து உங்கள் தகுதிகளே உங்களை பிரித்துவிடாமல் பார்த்துக்கொள்வது, இதற்குத்தான் பரிவு என்கிற அம்சத்தைப் பற்றிப் பேசுகிறோம். அடுத்த மனிதரிடம் நீங்கள் பரிவு காட்டும்போது உங்களை நீங்களே கொஞ்சம் விரிவுபடுத்திக் கொள்கிறீர்கள்.

உங்கள் அடிப்படையான எல்லையின் சக்தி இன்னும் விரிவடைகிறது. எத்தனை எத்தனை மனிதர்களிடம் நீங்கள் பரிவு காட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் சக்தி விரிவடைந்துகொண்டே போகிறது.

இதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் தன்மைக்குப் பக்குவம் என்று பெயர் சொல்கிறார்கள். உங்கள் செல்வம் – கல்வித்தகுதி – சமூகத்தில் உங்களுக்கிருக்கும் சிறப்பு நிலை எவற்றோடும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், மேலும் பணிவுடன் எளிய மனிதராய் நடந்துகொள்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு – இந்தக் கட்டுரையில் கூட எழுத முடியாத அளவுக்கு சூட்சுமமான உள்நிலை வளர்ச்சிகள் உங்களுக்கு உருவாகின்றன.

நீங்கள் பகட்டாக இருப்பதைவிட, பணிவாக இருப்பது வசதியானது என்பதற்கு நகைச்சுவையான காரணம் ஒன்றை நான் சொல்வதுண்டு. உங்கள் பெருமைகளைப் பற்றி உங்களுக்கு ஒரு பெருமித உணர்ச்சி இருக்குமானால் அதில் ஓர் அடிப்படை சிரமம் இருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டியிருக்கும். ஆனால் பலம் பொருந்திய நிலையில் இருந்தும், நீங்கள் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துகொண்டால் ஒரு வசதி இருக்கிறது. உங்கள் பெருமைகளை, உங்களைத் தவிர எல்லோரும் பேசுவார்கள்.

பணம் என்கிற ஒரு பலத்தை எப்படி விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் சம்பாதிக்கிறீர்களோ, அதே விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் பரிவு – பக்குவம் ஆகிய அருங்குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைச் சுற்றி அபரிமிதமான ஈர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் நடமாடும் இடங்களில் உங்களைப் பற்றிய நல்லெண்ண அலைகள் தோன்றும். அவையே கவசமாய் இருந்து உங்களைக் காக்கும்.

உங்களையும் அறியாமல், உங்கள் செல்வாக்கு வட்டம் விரிவடைந்துகொண்டே போகும். உங்களைப் பற்றி யாரோ, எங்கோ பேசிக்கொண்டார்கள் என்று உங்கள் காதுக்கு வருகிற செய்திகளில் பெரும்பான்மையானவை, உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களாகவே இருக்கும்.
மீண்டும் சொல்கிறேன், இது மந்திர சக்தியல்ல, மனித சக்தி. பணம் – பரிவு – பக்குவம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வெற்றி!

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *