1. தோள்கள் தொட்டு பேசவா?

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும். ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம்.

தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது.
நாம் ஒவ்வொருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிகள்தான். நம்மில் சில சூறாவளிகள் கரை கடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் உள்ளங்கள் சொல்ல முடியாத சோர்வில் சிறைப்படும் அவலம் சில பொழுது நேர்கின்றதே.. ஏன்?

எதிர்காலம் பற்றி யோசிக்கும் போதும், நம்பிக்கைச் சிந்தனைகளை வாசிக்கும் போதும் புடைத்தெழுந்து நிற்கும் புதுமைக் கனவுகள், நடைமுறைக்கு வரும்போது நடுக்கம் காண்கிறதே… எதனால்?

எந்த கேள்விக்கு விடைகளைக் கண்டறியவும், நம் கால்களைக் கட்டிப் போடும் தடைகளை களைந்தெறியவும் இந்தக் கட்டுரைகள் நமக்குக் களமமைத்துக் கொடுக்கும்.

நானறிந்த வரையில், புதிய வெற்றிகளைப் பெறவிடாமல் தடுப்பதில் முதலிடம் பெறுவது எது தெரியுமா? நம் பழைய தோல்விகளின் பிம்பங்கள்தான். மாணவர்களையே எடுத்துக்கொள்ளுங்கள். காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அரையாண்டுத் தேர்வு நெருங்க நெருங்க நடுக்கம் வருகிறது. இறுதித்தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் போட்டு அழைத்தது போல் காய்ச்சல் வருகிறது.

தெரிந்த விடைகளைக் கூட மூளை தற்காலிகமாகத் தொலைத்துவிடுகிறது. தேர்வு அறையை விட்டு வெளியேறும்போது சரியான விடை வழியெல்லாம் தென்படுகிறது. இதற்கென்ன காரணம்? காலாண்டுத் தேர்வின் கலவரப் பதிவுகள் மூளையை முற்றுகையிட்டதுதான் காரணம்.

தேர்வுத் தோல்வியைவிட, அதன் தொடர்ச்சியாய்க் கிடைத்த அவமானங்கள்தான் சோர்வு தருகின்றன.
இது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும். பழைய தோல்விகளின் வடுக்களை, நம் மனதில் முளைக்கும் மாயக் காரணமொன்று குத்திக் குத்தி மீண்டும் காயம் செய்கிறது. அந்த வலியோடு மேற்கொள்ளும் வாழ்க்கைப் பயணத்தில், பின் தங்கிப்போக நேர்கிறது.

மற்றவர்களின் வெற்றிகளைப் பற்றிப் பாடம் பயில்கிற நாம், அவர்களின் தோல்வித் தழும்புகளைத் தெரிந்து கொள்வதில்லை. சோதனை என்கிற முரட்டுக்காளையின் இரண்டு கொம்புகளையும் முறித்துப் போட்டால்தான் சாதனை. தொடர் பரிசோதனைகளின் தோல்விகள்தான் பல அறிவியில் வெற்றிகளின் அடித்தளம். ஆனால் சிலர், தோல்வி உரசிப் போனால்கூடத் துவண்டு விடுகிறார்கள். ஒருமுறை வணிகத்தில் தோல்வி கண்டவன் புதிய முயற்சிக்குப் பயப்படுகிறான். எல்லாம் பழைய ஞாபகங்களின் பயமுறுத்தல் காரணமாகத்தான்.

வெற்றி என்பது, சிகரங்களைத் தொடுவது என்பது பொதுவான நம்பிக்கை. அதற்குமுன் பழைய பள்ளத்தாக்குகளில் இருந்து எழுவதற்கு உதவும் கைதான், நம்பிக்கை.

நம் பெயரை இந்த உலகம், நாம் வெல்லும்போதுதான் சொல்லும். அதுவரை வெல்லப் போகிறாய் என்று உள்ளத்திற்கு உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் நாம்தான்.

“நம்மால் முடியுமா?” “மூன்றாண்டுகளுக்கு முன்னர் விழுந்து முகத்தில் மண். மறுபடி தோற்றால் மதிக்க மாட்டார்களே” என்று கடந்த காலத்தின் சோகத்தை மறுபடி மறுபடி உயிர்ப்பித்தால் மனம் சோகங்களின் மியூசியமாய் ஆகும்.

அன்று பழுதாய்ப் போனதை மறப்போம். இன்று புதியதாய் மறுபடி பிறப்போம். இந்த உறுதியின் விளைவாய் உலகம் மீதான பார்வை புதிதாகும். உள்ளம் உற்சாக ஊற்றாகும். ஆதிநாள் தொடங்கி இன்றுவரை பூமி தன்னையே சுற்றிப் பார்க்கிறது. ஏன் தெரியுமா? குறையில்லாத மனிதன் ஒருவனாவது கண்ணுக்குப் படுகிறானா என்றுதான் தேடுகிறது. அப்படியரு பிறவியை உலகம் இதுவரை சந்திக்கவேயில்லை. அதனால்தான் சாதனையாளர்கள், தங்கள் பலவீனமான பக்கங்களை சிந்திப்பதேயில்லை.

ஓடுதளத்தில் எட்டிப் பிடிக்கும் இலக்கில் ஒரு ரிப்பன் கட்டப்பட்டிருக்கும். தடகள வீரருக்கு கடக்க வேண்டிய தூரம் கண்ணுக்குத் தெரியாது. எட்டிப் பிடிக்க வேண்டிய இலக்கு மட்டும் புலப்படும். தூரம் பார்த்து ஏங்கினாலோ ஓடத் தோன்றாது.

தூரம் பார்த்தாலே சோர்வு வருகிறது. பாரம் சுமந்துகொண்டே தூரம் கடப்பது சாத்தியமா?
மனதில் இருக்கும் பழைய பாரங்களை முற்றிலும் அகற்றும்போதுதான் சாதிப்பது சாத்தியம்.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *