செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப்போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளரவிடுவதில் இரண்டுவிதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப்போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் மன அழுத்தமும் எதிர்விளைவுகளாய் ஏற்படும்.

ஆரம்பநிலையிலேயே சலிப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு நீக்க வேண்டியது அவசியம். இதைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் ஓரிரு விஷயங்களை உங்கள் ஆழ்மனம் அடிக்கோடிட்டுக் கொள்ளும். சலிப்பு என்பது உணர்வு சார்ந்தது. நிறைய பேர், சலிப்பு தொடங்கியதுமே அதற்கு மாற்றாக உற்சாகம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, மனதை உற்சாகப்படுத்தி வேலைக்குத் திரும்ப முயல்வார்கள். நேரெதிர் திசையில் பயணம் நேர்கிறபோது, மனம் உலுக்கப்பட்டது போல் உதறிக்கொண்டு எழும் என்பது உண்மைதான். ஆனால் பொழுதுபோக்கில் உடனே நாட்டம் சென்று மீண்டும் வேலையை நோக்கி மனதைக் குவிப்பதால் கணிசமான நேரம் காணாமல் போய்விடும்.

மனம் சலிப்பு என்கிற உணர்வால் சீண்டப்படும்போது அதை அறிவின் துணைகொண்டு கையாள்வதே நல்லது. உதாரணமாக, உங்கள் அன்றாட வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படுகிறதா? உங்கள் மனதுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்துங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பதற்காக கொஞ்சம் மௌனமாகவே அந்தப் பேச்சு வார்த்தை நடத்துங்கள்.

முதலில், இந்த வேலையை எதற்காக செய்ய வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். 1) இந்த வேலையைச் செய்வதால் நமக்கு சம்பளம்/ வருமானம் கிடைக்கிறது. 2) இதை சரியாகச் செய்தால் நல்ல பெயர் கிடைக்கிறது. 3) இதை இப்போதைக்குத் தள்ளிப் போட்டால் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தோ, நாட்கள் கழித்தோ, நாம்தான் செய்ய வேண்டும். அப்போது செய்வதை இப்போதே செய்தால் என்ன? இதை மனதுடன் நிகழ்த்தும் மானசீகமான கலந்துரையாடலாக்கிக் கொண்டு, “இந்த வேலையை இப்போதே செய்ய வேண்டும்” என்பதை தீர்க்கமாகத் தீர்மானித்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். சலிப்பு எட்டிப் பார்க்கிற போதெல்லாம் இப்படி சொல்லிப் பார்த்துக் கொள்வதால் உணர்வு எழுப்பிய தடையை அறிவு அகற்றுகிறது. இதே நிலை பல சூழல்களிலேயும் தொடர்கிறபோது சலிப்புணர்வு தோன்றுவது மெல்ல மெல்லக் குறைந்து காலப்போக்கில் காணாமலேயே கூடப்போய்விடும்.

அலுவலகங்களில் சலிப்புணர்வைத் தடுக்க, அலுவலக சூழலுக்குள்ளேயே சின்னச் சின்ன மாற்றங்களை அவ்வப்போது செய்யுங்கள். இடங்களை – முடிந்தால் அறைகளை மாற்றுவது போன்ற சிறிய புதுமைகள் அவ்வப்போது தேவை.

படைப்பாளர்கள், தங்கள் பணிச்சூழலை அடிக்கடி மாற்றுவதன் அடிப்படை இதுதான். ஈடுபட்டுச் செய்யும் எந்த வேலையிலும் சலிப்பு வருவதற்கு சாத்தியமில்லை. சிலருக்கு சிறிது நேரத்துக்குப்பிறகு வரப்போகிற சந்தோஷத்தை நினைத்து, இப்போது செய்கிற வேலையில் சலிப்புத்தட்டும். மாலையில் குடும்பத்தோடு திரைப்படத்துக்குப் போவதென்று தீர்மானம் ஆனால் அதுவரை மனம் வேலையில் ஈடுபடாமல், “பர பர”வென்றிருக்கும். இது பக்குவக் குறையின் விளைவு. போகப்போகச் சரியாகிவிடும். கடமையை நன்றாகச் செய்வதே அதிகபட்ச ஆனந்தம் என்ற விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். சலிப்பு நீங்கி சந்தோஷம் உருவாகும்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *