மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை ‘பச்சக்’ என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனையாளர்கள்.

எப்படி இரட்டையர்களை சரியாகப் பிரித்தறிவது கடினமோ அதேபோல இப்போதெல்லாம் மார்க்கெட்டிங் துறையினர்க்கும் விற்பனைத் துறையினருக்கும் வித்தியாசம் காண்பது கடினமாகிவிட்டது.

இந்த நேரத்தில், மார்க்கெட்டிங் துறைக்கு மட்டுமில்லாமல் வாழ்வுக்கென்றே வகுக்கப்பட்ட ஒரு பொது விதியின் நம்பகத்தன்மை குறித்து நாமொரு விசாரணைக் கமிஷன் அமைக்கலாம்.

“வெற்றிக்கு எல்லையே இல்லை” என்கிறார்களே இது எவ்வளவு தூரம் நிஜம் என்கிற கேள்வியைத்தான் நாம் கேட்க வேண்டும். இப்படிச் சொல்கிற பழக்கம் ஏன் வந்தது தெரியுமா? ஒரு துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் அந்தத் துறையின் முந்தைய சாதனைகளை முறியடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் எல்லை என்று நம்பப்பட்ட இடத்தை அவர்கள் அனாசயமாகத் தாண்டும்போது, அடுத்த எல்லை உருவாகிறது. அந்த எல்லையையும் அவர்களே முறியடிக்கிற போது வெற்றியின் எல்லை மேலும் விரிவடைகிறது.

மார்க்கெட்டிங் துறையும் விரிவடைந்து கொண்டே போகிறது. தகுதிகள் வளர வளர வாய்ப்புகள் மலர்கின்றன. அடிப்படைத் தகுதிகளுடன் ஆரம்பிப்பது போதாது. தகுதிகளை வளர்த்துக் கொண்டே போகிறபோதுதான் வெற்றிகளும் வசந்தங்களும் தொடர்கதைகள் ஆகின்றன.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் சரி, விற்பனைத்துறையில் இருப்பவர்களும் சரி, சறுக்கிற இடம் ஒன்று பேச்சின் வீச்சு பிரமாதமாக இருக்கவேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, “வளவள++வென்று பேசித் தள்ளுகிறார்கள். இது வாடிக்கையாளர்களை எளிதில் எரிச்சலடையச் செய்யும் என்பதை ஏனோ பலரும் உணர்வதில்லை.

தலைசிறந்த தகவல் தொடர்புக்கலை என்பது பேசுவது மட்டுமல்ல, பேச வைப்பதும் கூட. வாடிக்கையாளர் விரும்புகிற தகவல்களைத் தருவதுடன், அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து பேசவைப்பதன் மூலம் உடனடியாக ஓர் உறவுப் பாலத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள். உங்களுடன் இன்னும் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்கிற உணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துவதே பாதி ஜெயித்தது போலத்தான். ஏனெனில் மனிதர்கள் முதலில் மனிதர்களையே நம்புகிறார்கள்.

மனிதர்கள் மூலமாகத்தான் நிறுவனங்களை அறிகிறார்கள். மனிதர்களை எடை போட்டுத்தான் தயாரிப்புகளை வாங்குகிறார்கள். சிங்கப்பூர் பயணமொன்றில் தனக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை ஷிவ்கெரா ஒருமுறை பகிர்ந்து கொண்டார். சென்று சேர வேண்டிய இடத்தை டாக்ஸி ஓட்டுநரிடம் சொல்லி பயணத்தைத் தொடர்கிறார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்ட ஓட்டுநரால் அந்த வீதியை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சில நிமிடங்கள் சுற்றிய பிறகே, அந்த இடத்தை வந்தடைந்தார். டாக்ஸி மீட்டர் காட்டியதோ 11 டாலர்கள். ஓட்டுநர் சொன்னாராம், “இந்த இடத்தை நேராக நான் வந்து அடைதிருந்தால் 10டாலர்கள்தான் ஆகியிருக்கும். நான் இடத்தை சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. தார்மீகப் படி எனக்கு சேர வேண்டியது 10டாலர்கள் தான்”.

அந்த டாக்ஸி ஓட்டுநர் சொன்ன அடுத்த வார்த்தைதான் அபாரமான வார்த்தை. “நான் டாக்ஸி ஓட்டுநர் மட்டுமில்லை. உங்களைப் போன்ற அயல்நாட்டுப் பயணிகளுக்கு சிங்கப்பூரின் தூதுவன்கூட”. தன்னுடைய நிறுவனம் பற்றியும், தன்னுடைய தேசம் பற்றியும் மிக உயர்ந்த அபிப்பிராயத்தை அனாயசமாக ஏற்படுத்திய அந்த டாக்ஸி ஓட்டுநர், மிக நிச்சயமாய் ஒரு மார்க்கெட்டிங் நிபுணர்தான்!!

அதிகம் பேசாமல் அழுத்தமாய்ப் பேசியே ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அந்த டாக்ஸி ஓட்டுநர் தகவல் தொடர்புக் கலைக்கும் முன்னுதாரணமாய் மிளிர்கிறார். ஒரு தயாரிப்பின் தரம் என்பது அதனை அறிமுகம் செய்யும் மனிதர்களின் ஆளுமைப் பண்புகள் வழியாகவும் அடையாளம் காணப்படுகிறது.

மனிதர்கள் வெளிப்படுத்தும் நம்பகத்தன்மையே தயாரிப்பின் மீதும் ஏற்படுத்துகிறது. மிகையான உத்திரவாதங்கள், பலநேரம் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தும். குறிப்பிட்ட தேதியில் தயாரிப்பைத் தருவதாக சொல்லிவிட்டுத் தாமதப்படுத்துவது, சந்தேகத்தை அதிகரிக்கும். மார்க்கெட்டிங் துறையாகட்டும், விற்பனைத் துறையாகட்டும், அவர்களின் முக்கியக் கவனம், முடிந்த வரையில் வாடிக்கையாளர்களின் மனநிறைவை அதிகரித்துக் கொண்டே போவது தான்.

வாடிக்கையாளர்களின் வாக்குமூலங்கள், ஒரு நிறுவனம் முயன்று பெறுகிற சர்வதேசத் தரச்சான்றிதழ்களைக் காட்டிலும் பல மடங்கு பலம் பொருந்தியவை!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *