சில நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதையை கவனித்தால் விசித்திரமாக இருக்கும். ஒரு தேக்க நிலை ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்போது அந்த நிறுவனமே புதிதாகப் பிறந்தது போன்ற பொலிவுடன் இருக்கும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிதியாண்டுமே புதிதாகப் பிறப்பதுபோலத் தான். புதிய இலக்குகள் திட்டங்கள் போன்றவற்றை எட்ட வேண்டுமென்றால் நிறுவனத்தின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தத் தயங்கக்கூடாது.

உணவுப் பொருட்களின் சூடு ஆறாமல் பாதுகாக்கும் “தெர்மோ” பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்படியரு ஒட்டு மொத்த மாற்றத்திற்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டது. அதன் மூலம் வெற்றியும் கண்டது. 90களின் தொடக்கத்தில் மான்டே பீட்டர்சன் என்கிற தேர்ந்த நிர்வாகி, தெர்மோ நிறுவனங்களின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். அவரது அறிமுகம்தான் தெர்மல் எலக்ட்ரிகல் க்ரில். புகை இல்லாமல், நெருப்பில்லாமல் சமைக்கிற அந்த மின் சாதனத்தின் அறிமுகம் மிகத் தேவையாக இருந்த காலம் அது.

ஏனென்றால், சமையலறையின் புகை அமெரிக்கர்கள் வாழ்க்கையை அழுக்காக்கிக் கொண்டிருந்தது. தென் கலிபோர்னியாவில் புகை தடை செய்யப்பட்டிருந்தது. நெருப்பால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேண்டி நியூ ஜெர்ஸியில் அபார்ட்மெண்ட்களில் கேஸ் அடுப்பு தடை செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில்தான், தெர்மல் எலக்ட்ரிகல் க்ரில் உருவாக்கத்திற்கென்று ஆறுபேர் கொண்ட குழுவை உருவாக்கினார் பீட்டர்சன்.

இந்த ஆறுபேரும், தெர்மோஸ் நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள். பொறியியல், உற்பத்தி, மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் போன்ற துறைகளைச் சார்ந்த இவர்கள், தெர்மல் அடுப்பு தயாரிக்கும் குழுவாகத் தங்களைப் பிரகடனம் செய்யவில்லை.

மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கப்போகும் குழுவாகத் தங்களைப் பிரகடனம் செய்துகொண்டது. மக்களின் சமையல் பழக்கங்கள், உணவு சார்ந்த விருப்பங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்தக்குழு துல்லியமாக ஆராய்ந்தது.

இந்த க்ரில்லை வடிவமைப்பதற்கு இந்தக் குழு இரண்டாண்டு காலம் எடுத்துக் கொண்டது. இந்தக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், திட்டம் உருவாகி வர, சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். கள ஆய்வுக்கான காலம் வரும்போது, மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்தவர் தலைமையேற்பார். தொழில் நுட்பம் சார்ந்த முடிவுகள் எடுக்க வேண்டிய சூழலில் உற்பத்திப் பிரிவைச் சேர்ந்தவர் தலைமை ஏற்பார்.

இந்தக் குழுவில் இருப்பவர்கள், வேறு எந்தப் பொறுப்புகளையும் முதுகில் சுமக்காமல், நிறுவனத்தின் நிர்வாகத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

களஆய்வு முடிவடைந்த நிலையில், வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் இந்தக்குழு படிப்படியாக முன்னேற்றம் கண்டது.

உணவையோ, திரவங்களையோ சூடாக வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். “வேக்குவம் தொழில்நுட்பம்”தான். அதற்கென்று பிரத்யேக வடிவமைப்பைக் கொண்டு இந்த மின் அடுப்புகள் தயாரிக்கப்பட்டன.

முதல் நூறு தெர்மோஸ் அடுப்புகளும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தரப்பட்டன. கடுமையான முறையில் அவற்றைக் கையாண்டு, பயன்படுத்திப் பார்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

“எங்கள் தயாரிப்பின் குறைகளை, எங்கள் வாடிக்கையாளர்கள் கண்டறிந்து, சொல்லும் முன்பே எங்கள் உறுப்பினர்கள் அறிந்து சொல்ல வேண்டும்” என்பது நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது.
அதிக அளவு உணவின் எடையைத் தாங்க வேண்டிய சக்தியுடன், இன்னும் வலிமையான பிளாஸ்டிக் கட்டமைப்பு தேவை என்பதை இந்த நூறு பேர்தான் சொன்னார்கள்.

சமையலறையில் மட்டுமின்றி சமூக அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் புதிய தயாரிப்பு, போதிய ஆய்வுக்கு உட்படாமல் வந்திருந்தால் வாடிக்கையாளர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும்.

தெர்மோஸ் நிறுவனம் மேற்கொண்ட இந்த அணுகுமுறை, துல்லியமான திட்டமிடுதல், கூட்டு முயற்சி, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பல்துறை ஒருங்கிணைப்பு போன்ற அரிய நிர்வாகவியல் பண்புகளுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *