ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், “ஊரிலிருக்கிறாரா?”என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சத்குருவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தோம் என்றால் திரு.கிருஷ்ணனும் நானும். புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு சத்குருவை நீங்கள் சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. புதன்கிழமை 12.12.12 என்பது நினைவுக்கு வந்தபின்தான் மதியம் 12.00 மணி என்பதன் பொருத்தமும் புத்தியைத் தொட்டது.

மதியம் 11.55க்கெல்லாம் அவர்முன் அழைத்துச் செல்லப்பட்டோம். பணிந்தெழுந்ததும் தோள்களைத் தட்டி “என்ன முத்தையா நல்லாருக்கீங்களா” என்ற வாஞ்சையான -வழக்கமான வரவேற்பை வழங்கினார். என்னெதிரே தரையில் அமர எத்தனித்த திரு.கிருஷ்ணனிடம் “கீழே உட்கார முடியுமா? நாற்காலி வேணுமா?” என்று சத்குரு விசாரிக்க பதறிப்போய் என்னைப் பார்த்தார் கிருஷ்ணன். “நான் சொல்லவில்லை” என்பதாகத் தலையசைத்தேன். விஷயம் இதுதான். கடந்த சிவராத்திரிக்கு முன் யக்‌ஷா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்த கிருஷ்ணன் நெடுநேரம் தரையில் அமர்ந்திருந்ததில் முதுகுவலி வந்ததாய் என்னிடம் சொல்லியிருந்தார்.

ராதே ஜக்கி

ராதே நாட்டிய நிகழ்ச்சி அழைப்பிதழைக் கைகளில் வாங்கியவர் கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார். ஞாயிறு தோறும் சந்திப்போம் நல்லதையே சிந்திப்போம் என்ற தலைப்பில் வாராவாரம் கோவையில் கிருஷ்ணன் நிகழ்ச்சிகள் நடத்திவருவதைச் சொன்னதும் சத்குருவிடம் ஒரு மலர்ச்சி.”சங்கீதம், நாட்டியம் மாதிரியான விஷயங்களை ரசிக்க மக்களை பழக்கியே இருக்கணும். அவங்களுக்கு  பிடிச்சுட்டா விடமாட்டாங்க.இருபது வருஷம் முன்னால மஹாசிவராத்திரிக்கு நான் சாஸ்திரிய சங்கீதம் வைச்சப்போ எல்லாரும் உக்கார முடியலைன்னு சொன்னாங்க. இப்போ யாருக்குமே எழுந்து போக முடியலை.பழகீட்டா விடமாட்டாங்க.இல்லேன்னா ஒரே பொழுதுபோக்கு டீவி தான்னு ஆயிடும்”என்றார் சத்குரு.

“அரசாங்கம் ஒரு சட்டம் பண்ணிக்கணும். காலையில ஒன்பதிலேயிருந்து சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் எந்த சேனல்லேயும் எதுவும் வரக்கூடாது. அப்போ எல்லாம் போய் வேலை பண்ணிக்கணும்தானே!” என்றவர், “முன்னே எல்லாம் தமிழ்நாட்டில என்ன பிரமாதமான விஷயம்னா காலையில ஆறு மணிக்கே எழுந்து வயலுக்கு உற்சாகமா வேலைக்குப் போனாங்க. இப்போ வேலை பார்க்கணும்ங்கிற எண்ணமே போயிடுச்சு.ஒரு தேசத்தில வேலை பார்க்கிற எண்ணம் குறைஞ்சா ரொம்ப சிக்கலாயிடும். அவங்க பழக்கத்தை மறந்துட்டாங்க. அவங்க சாப்பாட்டை மறந்து ஏதேதோ சாப்பிட்டுக்கறாங்க” என்றார் சத்குரு.

“கிராமிய உணவுகள் பலதும் இப்போ வழக்கிலேயே இல்லை என்ற கிருஷ்ணன்,தங்கள் இனிப்பகத்தில் அதிரசத்திற்காக பாரம்பரிய குடும்பங்கள் சிலவற்றமமர்த்தியிருப்பதாகவும் அவர்கள் பகுதிநேரமாக வேலை பார்க்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைப்பதில்லை.அதனால் அதிரசத்தின் அடிப்படை சுவை மாறுவதில்லை”என்றார். “என்ன பண்ணினாலும் ஈடுபாடா பண்ணினாதான்  நல்லாயிருக்கும்.இன்னைக்கு மனிதர்கள் காலையில எழுந்து வேலைக்கு போய்வர்றதே ஒரு போராட்டமா இருக்கு”என்றார்.

விழா ஏற்பாடுகள் பற்றி பேச்சு திரும்பியது. “குறித்த நேரத்தில் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். மாலை மரியாதை போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பதில்லை’ என்றதும் சத்குரு சொன்னார். “சில இடங்களில பார்க்கிறேன். அவங்க கொண்டுவர்ற மாலைகளோட சைஸ் பார்த்தா யானைக்குப் போடலாம் போல இருக்கு. ஒருதடவை என்கிட்டேஅப்படியொரு பெரிய மாலையை தூக்கிட்டு வந்தாங்க.அப்படியே கொண்டு போயிடுங்க இந்த பெரிய மாலையை வாங்கிக்கறது ரொம்ப ஆபாசமா இருக்கும்னு சொல்லீட்டேன்” என்றார் சத்குரு. கடிகாரத்தைப் பார்த்தேன்  அப்போதுதான் மதியம் 12.12ஐ கடந்தது.

வெவ்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு திரும்பியது. கலாச்சாரத்தை மீட்டெடுப்பது பற்றி சத்குரு கொண்டிருக்கும் கவனமும் அதற்கான திட்டங்களும் பேசப்பட்டன. சத்குருவின் சூன்யா குடிலை ஒட்டிய பாதையில்  வைக்கோல் ஏற்றிய மாட்டுவண்டியொன்று அசைந்தசைந்து சென்றது. பண்டைக்கால முனிவரொருவரின் பர்ணசாலையில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெற்றேன். விடைபெறும்போது சத்குரு ஆசீர்வதித்துத் தந்த வெண்ணிற மலரொன்றை கண்களில் ஒற்றிக் கொண்டேன்.சுவாசத்தில் கலந்தது அதன் வாசம்.

அதுசரி..ராதே நாட்டிய நிகழ்ச்சிக்கு டிசம்பர் 16ல் சத்குரு வருகிறாரா என்றா கேட்கிறீர்கள்? “நான் சொல்ல மாட்டேன்..அதைமட்டும் நான்சொல்ல மாட்டேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *