சில சாதனைகளைப் பார்க்கிறபோது எல்லாம் வெகுசீக்கிரமாக நடப்பதுபோல் தெரிகிறது. குறி பார்த்து அம்பை விடுகிற மனிதன், அனாயசமாகச் செய்துமுடிப்பதுபோல் படுகிறது. ஆனால், அந்த அரை நிமிட அரங்கேற்றத்தின் பின்னணியில் ஆறு வருட அவஸ்தையும் அயராத பயிற்சியும் இருந்திருக்கும்.

சொல்லப்போனால், நம் திறமை மீது நமக்கு முழு ஆளுமையும் நம்பிக்கையும் இருப்பதன் அடையாளமே, அந்தச் செயலை அனாயசமாகச் செய்துமுடிப்பதுதான்.

நம்மால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்போதுதான் செய்கிற தொழிலை ரசிக்க முடியும். சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அது நம்பிக்கையைக் குலைக்கும். எனவே, நம்மை எவ்வளவுக்கெவ்வளவு தகுதிப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்க்கை எளிதாக இருக்கும்.

அப்படியானால், இந்தத் தகுதிப்படுத்துதல் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை ஆராய வேண்டும். நம் கனவுக்கும் நம் கனவைப் பற்றிய நம் அபிப்பிராயத்துக்கும் இருக்கிற இடைவெளிதான் தகுதிக்கு முதல்தடை. ஓர் உயரமான கனவு உள்மனதில் உருவாகிறது. அதே நேரம், அதை நம்மால் எட்ட இயலாது என்கிற சந்தேகமும் எங்கேயோ தலைகாட்டுகிறது.

அசாத்தியங்கள் பற்றிய நம் அச்சம்தான் சாத்தியமாகக்கூடிய சாதனைகளைக்கூட அவநம்பிக்கையோடு பார்க்கத் தூண்டுகிறது. எனவே கொஞ்சம் முயன்றால் எட்டக் கூடிய கனவுகளைக்கூட வேண்டாத அச்சத்தால் சிலர் விலக்கிவிடுகிறார்கள்.

இந்த இடைவெளியைக் கடந்தவுடனேயே உங்கள் அபாரமான வளர்ச்சி ஆரம்பமாகிறது. உங்கள் கனவின் முதல் ரசிகர் நீங்கள்தான். உலகம் ஊக்கம் தரும் முன், உங்களுக்கு நீங்கள் ஊக்கம் தருவது மிக முக்கியம். அது தடைப்படும்போதுதான் திறமையை முழுதாக வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. “இது நம்மால் ஆகிற காரியமா?” என்கிற கேள்வியை முளையிலேயே கிள்ளி எறிவது முக்கியம்.

ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பி, அதை நோக்கி உற்சாகமாக முன்னேறத் தொடங்கும் போது, உலகம் முதலில் வினோதமாகப் பார்க்கும் உங்கள் உறுதியை அசைத்தும் பார்க்கும். போகப் போக, நீங்கள் உரத்தோடும் பலத்தோடும் நிற்பது கண்டு உங்களை ஆதரிக்கத் தொடங்கும்.

பாராட்டும் ஊக்குவிப்பும் கொடுக்கிற உற்சாகத்தில் படிப்படியாக வெற்றி உங்கள் வசமாகும்.
அவநம்பிக்கையோடு பார்த்த விஷயத்தை நீங்களே அநாயசமாக செய்து முடிப்பீர்கள். அந்தத் துறையில் ஒரு நிபுணராக உருவாவீர்கள்.

இதற்கு அடிப்படையான அவசியத் தேவை, உங்கள் மேல் உங்களுக்கிருக்கிற நம்பிக்கை. அதற்கென்று சில ஆரம்பப் பயிற்சிகள் உண்டு.

உங்கள் பள்ளிப்பருவம் தொடங்கி, இன்றுவரை நீங்கள் வெற்றிகரமாக செய்திருக்கும் சின்னச் சின்ன விஷயங்களைப் பட்டியலிடுங்கள். ஒரு சின்ன ஓவியத்தை பிள்ளைப் பருவத்தில் நீங்களாக வரைந்தது, கோபித்துக் கொண்ட நண்பனை சமாதானப்படுத்தியது. மிகுந்த பயத்திற்குப் பிறகு பக்கத்துவீட்டு நாய்க்குட்டியைத் தொட்டுப்பார்த்து சிநேகம் கொண்டது என்று தொடங்கி கல்லூரியில் விருப்பப்பட்ட துறையில் சேர்ந்தது, தானாக வேலை வாய்ப்பு தேடிக்கொண்டது என்று ஒரு பெரிய வெற்றிப்பட்டியலே உங்கள் வசம் இருக்கும்.

அப்படியானால், செயல்களைச் சரியாகவும் இயல்பாகவும் செய்கிற ஆற்றல் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.

இரண்டாவதாக, ஒரு சிறுதோல்வி ஏற்பட்டதுமே நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள். ஒருவரிடம் ஓர் உதவி கேட்கிறீர்கள். கிடைக்கவில்லை. உடனே சோர்ந்துவிடுகிறீர்கள் என்றால் உங்களுக்குள் அவநம்பிக்கை அரும்புவதாக அர்த்தம்.

ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்ட மறுவிநாடியே, “அதனாலென்ன? வேறொரு பக்கம் கேட்கலாம்” என்ற நம்பிக்கை பளீரென்று மனதில் படிகிறதென்றால் நீங்கள் சாதிக்கத் தயாராகியிருப்பதாக அர்த்தம்.
அடிப்படையில் உங்களை ஆயத்தமாக்கிகக் கொள்ளுங்கள். அடுக்கடுக்கான வெற்றிகள் அதன் பின்னே தொடரும். மறந்துவிடாதீர்கள், அம்பைத் தொடுக்க அரை நிமிஷம்தான். அதற்கான பயிற்சியோ பல வருடங்கள்.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *