நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து முன்பு விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர்.

1. அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம்

2. பாதுகாப்புத் தேவைகள்: இயற்கை, பணியிடம், எதிரிகள் ஆகியவற்றிலிருந்து…

3. அன்புத் தேவைகள்: குடும்பம், அலுவலகம், சமுதாயம் ஆகியவற்றிலிருந்து…

4. சுய மரியாதைத் தேவைகள்: சக பணியாளர்கள், மேலதிகாரிகள் நடுவில்…

5. சுய மேம்பாட்டுத் தேவைகள்: அறிவு, அனுபவம், செயல்திறன் வளர்ச்சி…

ஆனால், காலப்போக்கில் இந்தக் கோட்பாடு பரந்த நோக்கில் இருப்பதாக உணரப்பட்டதே தவிர துல்லியமான கோட்பாடாகக் கருதப்படவில்லை.

இருந்தாலும், ஒரு பணியாளரின் நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் வரையறுக்க விரும்புகிற மேலாளர்கள் இந்த ஐந்து அம்சங்களுக்குள்ளாக அவற்றை அடக்கிவிட முடியும்.

இந்தக் கோட்பாட்டைக் காட்டிலும் வலிமையானதாகக் கருதப்படுவது, ஹெர்ஸ்பெர்க்கின் “இருமுனைக் கோட்பாடு” 1950களில் இந்தக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இருமுனைக் கோட்பாடு உருவான கதையே மிகவும் சுவாரஸ்யமானவை. வெவ்வேறு நிறுவனங்களின் பணிபுரியக்கூடிய 200 பேர்களைத் தங்கள் அதிருப்திகளைப் பட்டியலிடுமாறு ஹெர்ஸ்பெர்க் தெரிவித்தார். அந்த அதிருப்திகள் பணிச்சூழல் பற்றி இருந்ததுடன் பெரும்பாலும் ஒரே மாதிரியான குறைகளாகவே சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

அதேபோல, அதே மனிதர்களை, பணிச்சூழலிலும் பணியிலும் திருப்தி தருகிற விஷயங்களாகப் பட்டியல் போடச் சொன்னார். அவையும் பொதுத்தன்மை கொண்டவையாகவே இருந்தன.

திருப்தியான பணியாளரின் ஊக்கம், அதிருப்தியான பணியாளரின் ஊக்கக்குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் அவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. இதுதான் இருமுனைக் கோட்பாடு.

இந்த இருமுனைக்கோட்பாடு வலியுறுத்துவது என்னவென்றால், “வேலையில் ஏற்படும் திருப்திக்கு எதிர்முறை அதிருப்தி அல்ல. திருப்தியில்லாத சூழல். அதே நேரம், அதிருப்திக்கு எதிர்முனை, திருப்தியல்ல. அதிருப்தி ஏதும் இல்லாத சூழல்.”

ஊக்கம் மிகுந்த பணியாளர் – ஊக்கம் குறைந்த பணியாளர் ஆகிய பிரிவுகளுக்கு நடுவே இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு பிரிவு இருக்கிறது. திருப்தியோ அதிருப்தியோ இல்லாத பிரிவு.

இந்தப் பிரிவை ஊக்கமுள்ள பணியாளர்களாக மாற்றுவதிலேதான் நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று சொல்கிற ஹெர்ஸ்பெர்க், அதற்கான பரிந்துரையையும் தருகிறார். பணியின் உள்ளீடு, பொருள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் அமைந்தாலே ஒரு பணியாளர் ஊக்கம் பெறுகிறார் என்பதுதான் அந்தப் பரிந்துரை.

நிறைய சம்பளம் தருவது பணியாளர்களை ஊக்கப்படுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், 1992இல், மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு இதற்கு நேர்மாறான விஷயத்தைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் கூடுதல் சம்பளம் கொடுத்து, அதற்கு ஈடாக, விடுமுறைகளையும் ஓய்வு நேரத்தையும் குறைத்தால் 28% பணியாளர்களே இதற்கு உடன்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வு.

மேஸ்லோவின் கோட்பாடு, ஹெர்ஸ்பெர்க்கின் கோட்பாடு இரண்டைப் பற்றியும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. பல விஷயங்களைப் பொதுவானதாகவே இந்தக் கோட்பாடுகள் கருதுவதாலேயே அவற்றுக்கு நம்பத்தன்மை இல்லை என்பதுதான் அது.

இவற்றுக்கு மாற்றாகவும், கூடுதல் நம்பகத் தன்மை கொண்டதாகவும் கருதப்படுவது, “எதிர்பார்ப்புக் கோட்பாடு.” இதன்படி ஒரு பணியாளர், தான் செய்யும் செயல்களால் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே ஊக்கமடைந்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவார்.

மாறாக, என்ன செய்தாலும் ஒரேவிதமான சம்பள உயர்வு, செயல்திறனுக்கேற்ப கூடவோ குறையவோ செய்யாத சலுகைகள், கிணற்றில் போடப்பட்ட கல் போலப் பரிசீலிக்கப்படாமல் கிடக்கிற கோரிக்கைகள் ஆகியவை ஒரு பணியாளரின் எதிர்பார்ப்பை குன்றச் செய்து, செயல்திறனையும் மழுங்கிவிட வைக்கிறது என்பதே எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் சாரம்.

ஒரு பள்ளி மாணவன், நன்கு படித்தால் நிறைய மதிப்பெண் கிடைக்கும் என்று நினைப்பதுபோல், ஒரு பணியாளர் நன்கு உழைத்தால் நிறைய ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் என்பதே எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் உள்ளீடு.

எனவே, நிர்வாகம், எல்லாப் பணியாளர்களையும் ஒன்றுபோல் நடத்தாமல், செயல் திறனுக்கேற்ப சலுகை, சம்பளம் போன்றவற்றை நிர்ணயிக்க இந்தக் கோட்பாடு பரிந்துரை செய்கிறது.
இந்தக் கோட்பாடு, நிர்வாகவியலில், 1964ஆம் ஆண்டில் விக்டர் எச்.ஸ்ரூம் எழுதிய பணியும் ஊக்கமும் (Work and Motivation) என்கிற புத்தகத்தின் அடிப்படையில் உருவானது.

ஆனால், இந்த நிர்வாகவியல் சூத்திரம், இரண்டாயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் இருப்பதுதான் ஆச்சரியம்.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *