விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும் பெயர், வேறொரு வட்டாரத்தில் அறிமுக நிலையில் மட்டுமே இருக்கும்.தான் தலையில் சுமக்கும் கிரீடங்கள் கண்ணுக்குத் தெரியாத பிரதேசத்தில் அறிமுக நிலையில் ஓர் அரசரை நிறுத்தினால் அவஸ்தைப்படுவாரா இல்லையா?

பல தயாரிப்புகள் அப்படிதான் புதிய பிரதேசங்களில் கால்வைக்கும் போது, தங்கள் பழைய பெருமைகளை சுமக்கவும் முடியாமல் புதிய அறிமுகமாய் நிற்கவும் முடியாமல் தடுமாறுவதும் உண்டு.

இதற்கு முக்கியக் காரணம் முடிவெடுக்க முடியாமை. புதிய சூழலுக்குள் புதுமுகமாகவே அறிமுகமாக வேண்டுமென்ற எங்கிருந்தாலும் அங்கெல்லாம் வெற்றி நிகழ்ந்து விடுகிறது.

அறிமுக நிலையிலேயே அதில் தொடர்புள்ள அத்தனை பேரையும் ஈடுபடுத்துவது விவரிக்க முடியாத பொறுப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உற்சாகத்தையும் முழு ஈடுபாட்டையும் கொண்டு வருகிறது. மார்க்கெட்டிங் துறையில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தங்கள் தயாரிப்பு பற்றிய நேரடி அனுபவம் இருந்தால் மிகவும் நல்லது. அவரால் பயன்படுத்த முடியாத தயாரிப்புகளை அவர் குடும்பத்தினர் பயன்படுத்திப் பார்க்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

தன் குடும்ப வட்டத்திலிருந்து கிடைக்கும் அபிப்பிராயம் மார்க்கெட்டிங் அலுவலரின் உற்சாகத்தை உறுதி செய்கிறது.

விற்பனையாளர் ஒரு தயாரிப்பை தன்னுடன் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கொள்வது போலவே நுகர்வோர் அந்தத் தயாரிப்புடன் அந்தரங்கமாய் ஒரு சொந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள உரிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

பெரும்பாலும் எந்த வட்டாரத்திலும் ஒரு தயாரிப்பு அறிமுகமாகிறதோ,அங்கே உள்ள பழக்கவழக்கங்கள், உள்ளூர்ப் பண்டிகைகள் போன்றவற்றுடன் இந்தத் தயாரிப்பைத் தொடர்புபடுத்தத் தெரிந்திருக்க வேண்டும். உலக சந்தையின் நாயகர்கள் உள்ளூர்ப் பண்டிகைகளின் அங்கமாக இருப்பதன் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முடியும்.

இதைவிட முக்கியமானது உள்ளூர் மொழிப்பிரயோகம் தெரிந்திருப்பது. பெரும்பாலான தேசீயத் தயாரிப்புகள் வட நாட்டிலேயே விளம்பரங்களை உருவாக்கி அங்கேயே மொழி பெயர்த்து வடிவமைப்பை செய்து விடுகின்றன. இந்த மொழி பெயர்ப்புகள் பெரும்பாலும் ஒட்டவே ஒட்டாது.

அந்தக் காலத்தில் ஜுனூன் என்ற தொலைக்காட்சித் தொடர் தமிழர்களுக்குப் புரியாத தமிழில் வெளிவந்து ஜுனூன் தமிழ் என்றே வழங்கப்பட்டது. இன்று சின்னச் சின்ன கிராமங்களில் ஊடுருவ நினைக்கும் தேசீயத் தயாரிப்புகள் பலவும் இந்தத் தப்பைச் செய்கின்றன.

உதாரணமாக சமீபத்தில் குட் டே பிஸ்கட் ஒரு விளம்பரத்தை செய்திருந்தது. சுவர்களிலும் பல மளிகைக் கடைகளுக்கு வைத்துக் கொடுத்திருந்த பலகைகளிலும் இந்த விளம்பரம் பொறிக்கப்பட்டிருந்தது. “ஆயிடுச்சு குட் டே”. மோசமான மொழிபெயர்ப்புக்கு இந்த வாசகம் ஓர் அடையாளம்.

இதன் மூல வாசகம் அநேகமாக “Now it is a good day’’ என்றிருக்க வேண்டும். அதை மொழிபெயர்த்த பிரகஸ்பதி “இன்று குட் டே ஆகிவிட்டது” என்று பொருள்படுவதாக நினைத்துக்கொண்டு, “ஆயிடுச்சு குட் டே” மொழி பெயர்த்துவிட்டார். கடைக்கு வருகிற வாடிக்கையாளர், குட் டே தீர்ந்துவிட்டதாக அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கான அபாயம் இந்த வாசகத்தில் இருக்கிறது.

இதை வாசிக்கிறபோதே இதற்கான எளிய தீர்வு உங்கள் மனதுக்கு வந்திருக்கும். கடையில் குட்டே பிஸ்கட் பாக்கெட்டுகள் கண்களை நிறைக்கும் விதமாய் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் தீரும். இதைதான் “பாய்ன்ட் ஆஃப் பர்சேஸ்” என்கிறார்கள். இவை தயாரிப்புகளாகவும் இருக்கலாம். விளம்பர வாசகங்களாகவும் இருக்கலாம்.

விற்பனையாகும் இடத்தில் நுகர்வோர் கவனத்தைக் கவரும் விதமாக உங்கள் தயாரிப்புகள் தனித்தன்மையுடன் காட்சிக்கு வைக்கப்படுமானால் அது வெல்வது நிச்சயம். சாமபேத தான தண்டம் செய்து ரீடெய்ல் விற்பனையாளரை உங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தரும்படி செய்வதும் ஒரு சவால்தான்.

சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறை கொண்டவர்களாக தங்களை நிறுவனங்கள் முன்னிறுத்தும்போது அவர்களைப் பற்றிய அபிப்பிராயம் உயர்கிறது. பெரும்பாலான தயாரிப்புகள் தங்களின் அத்தகைய அம்சங்கள் பற்றியே அதிகம் பேசுகின்றன.

இவையெல்லாவற்றையும்விட சந்தையின் தேவை என்பதில் ஏற்படும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. பத்தாண்டுகளாக குழந்தைகள் ஆரோக்கியம், குழந்தைகள் ஊட்டச்சத்து, குழந்தைகள் எதிர்காலத்துக்கான முதலீடு போன்றவை குறித்து மக்களின் உளவியல் வேகமாய் இயங்கியது. அதைக்குறியாகக் கொண்டே தயாரிப்புகள் தங்களை சந்தையில் நிலைநிறுத்திக் கொண்டன. இன்று அந்தச் சந்தையில் அள்ளி அடைக்கப்பட்டிருக்கும் தயாரிப்புகள் தங்களை தக்க வைத்துக்கொண்டாலே போதுமானது. ஊட்டச்சத்து பானங்கள், முதலீடுகளில் தொடங்கி குடிநீர் சுத்திகரிப்பு, சோப் ஷாம்பூ என்று பல்வகைத் தயாரிப்புகளும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக்கொண்டு தங்கள் எல்லைகளை விரிவாக்க மெல்ல மெல்ல முயலலாம்.

ஆனால் புதிய சந்தையாக புத்துணர்வூட்டப்பட்ட சந்தையாக இருப்பது, நடுத்தர வயதினருக்கான தயாரிப்புகள், உடற்பயிற்சிக் கருவிகள், முதலீடுகள், பிஸ்கட்டுகள் போன்றவை. உதாரணமாக நீரிழிவு உள்ளவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கான இடையுணவு முக்கியமான அம்சம்.

8 மணிக்கு காலை உணவு, 10.30க்கு சிற்றுணவு, 1.00மணிக்கு மதிய உணவு, 4.00 மணிக்கு சிற்றுணவு, 8 மணிக்கு இரவு உணவு என்கிற ஒழுங்கினை இலக்காக்கி சிற்றுணவுக்கு சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் சந்தையில் வெகு வேகமாக முன்னேறுகின்றன.

நடுத்தர வயதினரிடம் பொருளதார பலம் இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் இருக்கிறது. அவர்களின் தேவைகளை ஈடுசெய்யும் சவாலை மேற்கொள்பவர்கள் சாதிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கம்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *