கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும்முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும்.

கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா?” என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பபை கனவுகள்.

குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். காதல் கீதம் பாடுவான். கனவுக் காட்சியில் மரங்களைச் சுற்றி வருவான். பிறகு, நெடிய போராட்டத்திற்குப் பின் அவளைக் கரம் பிடிப்பான். கனவு கண்டால் காதலி கிடைப்பாள் என்பது திரைப்படம். கனவு காணத் தெரிந்தால் காதலிக்கும் இலட்சியங்கள் கைக்குக் கிட்டும் என்பதுதான் நம்பிக்கையின் வார்ப்படம்.

“கனவு காணுங்கள்” என்று கலாம் சொல்வது அதனால்தான். கனவுகள்தான் அவரை அங்குலம் அங்குலமாய் உயர்த்தின.

இராமேஸ்வரம் அருகில், ஒரு கடலோர கிராமத்தின் குடிமகன், கடல் சூழ்ந்த பாரதத்தின் தலைமகனாய்க் கோலோச்சக் கனவுகள்தான் கை கொடுத்தன.

இத்தனை சிகரங்களை எட்டிய பிறகு, ‘இந்தியா 2020’ என்கிற புதிய கனவை வகுத்துக் கொண்டும் அதை நோக்கி உழைத்துக் கொண்டும் இருந்தார்.

இதுதான், கனவு காண்பதற்கும் கனவிலேயே வாழ்வதற்கும் இடையிலான வேறுபாடு. உள்மனக் கனவுகள் ஒவ்வொன்றும் உலக வாழ்வுக்கான உந்துசக்தியாய், இயங்குவதற்கான எரிசக்தியாய், மாறும்போதுதான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.

கனவுகள் தரும் சுகத்திலேயே நனவுலகத்தில் இருந்து நகர்ந்து விடுபவர்கள், காலத்தின் கணக்கெடுப்பில் விடுபட்டுப்போகிறார்கள்.

கனவுகள், வெற்றிக்கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள்.

பயனில்லாத கனவுகளைப் “பகல் கனவு” என்கிறார்களே, ஏன் தெரியுமா?

“பகல்” என்பது, செயல்படும் நேரத்திற்கான சிறந்த குறியீடு. செயல்படும் நேரத்தில் கனவுகளிலேயே காலம் கடத்துபவர்களை எச்சரிக்கும் விதமாகவே “பகல் கனவு” என்கிற பதம் பிறந்தது.

“அதிகாலைக் கனவு பலிக்கும்” என்பதும், மக்கள் மனதிலிருக்கும் ஒருவித நம்பிக்கை.

ஆனால், “அதிகாலை” என்பது, வாழ்வின் ஆரம்பப் பருவமாகிய இளமைப் பருவத்தின் உருவகம் என்று கொள்ள வேண்டும்.

சிறிய வயதில் மலரும் கனவுகள், மனதில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை நோக்கி அயராமல் உழைத்தால் நிச்சயம் பலிக்கும்.

“பகல் கனவு” , “அதிகாலைக் கனவு” போன்ற சொற்கள், ஒரு நாளின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கருதாமல், வாழ்வின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கொள்வதே பொருத்தம்.

கண்ணனைக் கைப்பற்றும் கல்யாணக் கனவுகள், ஆண்டாளின் மனதில் உதித்தன. அந்தக் கனவுகளே ஆண்டாளின் தவமாய் ஆயின. அவை, கவிதைகளாய் மலர்ந்தன. மலர்மாலைகளை சூடிக்கொடுத்ததும், மகத்துவக் கவிதைகளைப் பாடிக் கொடுத்தும் ஆண்டவனாகிய அரங்கனைக் கைப்பிடித்தாள் ஆண்டாள் என்பது, ஆன்மீகவாதிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது. கனவாய் முளைவிட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.
அந்த இலட்சியங்களுக்கு, கனவின் பதிவுகளே உரமாகின்றன.

இலட்சியப் பயணத்தில் நிழல் கொடுக்கும் விருட்சமாய் அந்த இலட்சியமும் அது குறித்த கனவுகளுமே திகழ்கின்றன.

கனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள்; முத்தெடுங்கள்!

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *