20.இது தகவல் யுகம்

தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய உலகம் உருள்கிறது. தொழிலுக்கு சில தகவல்கள் தேவைப்பட்ட காலம் போய், தகவல்கள் அடிப்படையிலேயே தொழில்கள் நடைபெறும் காலம் இது.

இன்று நிறுவனங்களுக்கு தலைமை தாங்குபவர்களும், தகவல்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறார்கள். எனவே, தகவல்களைக் கையாள்வது பற்றி தெளிந்த அறிவும், சூழ்நிலைக்கேற்ப தானும் மாறி தன் நிறுவனத்தின் செயல்களையும் மாற்றிக் கொள்கிற ஆற்றலும் 21ஆம் நூற்றாண்டின் நிர்வாகவியலில் நிகரற்ற சவால்களாக விளங்குகின்றன.

பழைய கோட்பாடுகளை மாற்றி அமைப்பதன் மூலமாகவும், புதிய கோட்பாடுகளை உருவாக்குவதன் மூலமாகவும், நாம் தகவல்களைக் கையாள்கிறோம். தங்கத்தையும், வைரத்தையும் கண்டெடுப்பது போல தகவல்களைக் கண்டெடுக்க முடியாது. ஆழ்ந்த கவனிப்பாலும், கண்காணிப்பாலும் உருவாகிறவைதான் தகவல்கள்.

உதாரணத்திற்கு, தங்கத்தின் விலையையே எடுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசச் சந்தையில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளும், மாற்றங்களும் தங்கத்தின் விலையில் உலகெங்கும் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தச் சூழலில் தங்கத்தின் விலை நிர்ணயம் பற்றிய தகவல் அறிவு அந்தத் தொழிலில் இருப்பவர் அனைவருக்குமே தேவைப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் நடக்கிறதென்றால் அது உங்கள் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. போக்குவரத்து செலவினங்கள் எப்படி குறைக்கப்படலாம்? அதனால், நிர்வாகத்திலும் வாடிக்கையாளர் சேவையிலும் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். சிக்கனமான எரிபொருள் திட்டமிடலாம் என்பது போன்ற ஏராளமான தகவல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.

எனவே, தகவல்கள் தொழில்நுட்பம் என்ற துறையில் மட்டுமின்றி எந்த நிறுவனத்திலும் சிறப்பான முடிவுகள் எடுக்கவேண்டுமேயானால், அதற்கு தகவல்கள் சேகரிப்பது மிகவும் முக்கியம்.

நிர்வாகவியல் அறிஞர்கள் ஒரு நிறுவனத்தில் தகவல்களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்.

1.தகவல்களை உருவாக்குவது
2.தகவல்களை சேகரிப்பது
3.தகவல்களை வெளிப்படுத்துவது
இந்த மூன்று அம்சங்களும் பொருந்திய செயல்முறையை தகவல் நிர்வாகம் என்கிறார்கள்.

இந்தத் தகவல்கள் வெறும் ஆவணங்களாகவோ, கோப்புகளை நிரப்பும் காகிதங்களாகவோ இருந்து பயன் கிடையாது. தகவல்களை உரிய கோணத்தில் ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்படும் நிர்வாகவியல் சூத்திரங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதுதான் மிகவும் முக்கியம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தகவல்களைச் சேகரிக்கும் கலை, முறைப்படுத்தப்பட்ட அறிவியலாக எல்லா இடங்களிலும் முன்னேறவில்லை. தகவல் சேகரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் கூட அந்தத் தகவல்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிற சூழ்நிலை உள்ளது.

தகவல் அறிவு என்பதை சிறகுகள் என்று வைத்துக் கொண்டால், அவற்றை வளர்ந்த பறவைகள் போல் பயன்படுத்துகிறோமோ? குஞ்சுப் பறவைகள் போல் பயன்படுத்துகிறோமா? என்று பார்க்க வேண்டும்.

குஞ்சுப் பறவைகள் தங்களுக்குப் புதிதாக முளைத்த சிறகுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தொடக்கத்தில் தடுமாறும். சிறகுகளை விரிக்கலாமா? வேண்டாமா? என்று மனப் போராட்டத்தைப் போல கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தலாமா? நம்பி இறங்கலாமா? என்பது போன்ற தடுமாற்றங்கள் ஏற்படுவது இயற்கை.

இதையும் கடந்து முடிவெடுக்கிற உறுதியும், சமயோசிதமான செயல்திறனும், தகவல்களை சரியாகப் பயன்படுத்த வழிகாட்டும்.
உதாரணத்திற்கு நம் நிறுவனங்களில் பராமரிக்கப்படும் கணக்கின் அம்சங்களேயே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தின் லாபம் மற்றும் பொறுப்புகளை கணக்கிடும் இந்த முறை 1494-ல் லூகா பாஸியோலி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பேலன்ஸ்ஷீட், காஸ்ட் அக்கவுண்டிங் போன்ற சில முன்னேற்றங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டாலும் கூட இந்த அடிப்படை முறை 500 ஆண்டுகளாக மாறவே இல்லை.

இதிலிருக்கிற குறைபாடு பற்றி முக்கியமான ஒன்றை நிர்வாகவியல் அறிஞர்கள் விவாதித்து வருகிறார்கள். அதாவது நிறுவனத்தின் சொத்து மதிப்பைத் தான் அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் என்கிற அளவில் இந்த முறையின் கீழ் கணக்கிட முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தின் விலைமதிப்பில்லாத சொத்து அதன் மனிதவளம், படைப்பாற்றல், சேவை போன்ற துறைகளில் அடங்கியிருக்கின்றன. எனவே, இன்றைய நிர்வாகக் கணக்குமுறை ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை உணர்த்தக் கூடியதல்ல என்பதே அவர்களுடைய வாதம்.

இந்தக் கணக்கீட்டு முறையால் நிறுவனங்கள் தங்களையும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களையும் குறைவாகவோ, கூடுதலாகவோ மதிப்பிட்டுக் கொள்ளக் கூடிய அபாயம் நேர்கிறது.
இதற்கு ஒரே தீர்வு நிர்வாகம் தன்னிடம் இருக்கும் மனிதவளத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்து கொண்டு அதன் வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தன் நிர்வாகப் போக்கை மாற்றியமைத்துக் கொள்வது தான்.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *