20. வெற்றியாளர்களின் அசத்தல் கருவூலம்!

வெற்றியாளர்களிடம் இந்தச் சமூகம் அறிய விரும்புவது என்ன? அவர்கள் வரவேற்பறையில் அடுக்கப்பட்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கையா? இல்லை! அவர்களின் கையிருப்பில் உள்ள தொகை எவ்வளவு என்கிற கணக்கையா? இல்லை அவர்களை வெற்றியாளர்களாய் வளர்த்தெடுத்த உந்துசக்தியையும், சரிவுகளை சந்தித்தபோது அவர்களை நிமிரவைத்த நெஞ்சுரத்தின் அடித்தளத்தையும் சந்தித்த சவால்களையும்தான் இந்த சமூகம் அறிய விரும்புகிறது.

அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் பட்டம் பெற்ற 25 பட்டதாரிகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து விதம் விதமாய்த் தொழில் புரிந்து வெற்றி பெற்றவரலாற்றை விளக்குகிற புத்தகம்,“STAY HUNGRY STAY FOOLISH”

இதில் பதிவாகியிருப்பவை – வியர்வை, கண்ணீர், நெஞ்சுரம், நம்பிக்கை, சமயோசிதம், கடின உழைப்பு  இன்னும் எத்தனையோ வழி காட்டுதல்கள்.

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவைச் சுமந்துகொண்டிருந்த சஞ்சீவ் பிக்சந்தனி, அப்போது வேலையில்தான் இருந்தார். நொர்விக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளர் வேலை. அவரது சக பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் பிஸினஸ் இந்தியா இதழைப் படிப்பது வழக்கமான வேலையாகவே ஆகி விட்டதை சஞ்சீவ் கவனித்தார். வேலை வாய்ப்புப் பகுதிகளைத்தான் அவர்கள் விருப்பத்துடன் வாசித்துக் கொண்டிருந்தார்கள். வேலையில் இருப்பவர்கள் வேலை இல்லாதவர்கள் என்ற இருதரப்பினரையும் ஈர்ப்பவை புதிய வேலை வாய்ப்புகள் என்பதை சஞ்சீவ் புரிந்து கொண்டார். அப்போதுதான் வலை தளம் என்ற ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் அனைத்து சர்வர்களும் அமெரிக்காவில் தான் இருந்தன.

விதம்விதமாய் முயற்சிகள் செய்து, எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உண்டு என்ற தகவல்களைத் திரட்டி நிமிர்வதற்குள் சஞ்சீவின் முயற்சியால் சர்வர் ஒன்றும் கிடைத்தது.

அப்போது இந்தியா முழுவதும் பார்த்தால் மொத்தமாக இருந்தவை 14,000 மின்னஞ்சல் முகவரிகள் மட்டும்தான். ஆனாலும் வேலை வாய்ப்பு விளம்பரங்களையும் தகவல்களையும் வலை தளம் மூலம் வெளியிட நினைத்தார் சஞ்சீவ். அதன் விளைவாக உருவானதுதான் www. Naukri.com, இன்று மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ள இந்த வலைதளம், சவால்களையும் பின்னடைவுகளையும் சந்தித்து, சமாளித்து பெரிய வெற்றி களைப்பெற்றிருக்கிறது. “உங்கள் தொழிலை நீங்கள் நேசித்தால் – அது உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தருவதாகவும் இருந்தால் – சிரமமான சூழல்களையும் சிரித்துக் கொண்டே கடந்துவிடமுடியும்” என்று சொல்கிற சஞ்சீவ் பிக்சந்தனி ஓடாதவரை உங்களைத் தோல்வியாளர் என்று யாரும் சொல்ல இயலாது” என்கிறார்.

“உங்கள் கனவுத் தொழிலை விரைவில் தொடங்குங்கள். சிறிய அளவில் இருக்கும்போது செய்யும் தவறுகள் பெரிய அளவில் பாதிக்காது” என்பது இவர்தரும் ஆலோசனை.

சொந்தத் தொழில் தொடங்கும்போது எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கலாம் என்பது எல்லோருக்கும் வருகிற கேள்வி. “தொழில் முனைவோருக்கு ஆதரவாகத்தான் அந்த நிலை பெரும்பாலும் இருக்கும். எனவே துணிந்து ரிஸ்க் எடுங்கள்” என்கிறார் சந்தனு பிரகாஷ். ‘எட்யுகாம்ப்’ சொந்தமாக அலுவலகம் போட்ட போது அதில் ஒரு மின்விசிறிகூடக் கிடையாது. ஆனால் அது குறித்தெல்லாம் கவலைகொள்ளாமல் தன் கனவைக் கட்டமைக்கத் தொடங்கினார். 2007 – 2008 ல் அவருடைய நிறுவனத்தின் விற்றுவரவு 276 கோடிகள். ஆதாயம் 70 கோடிகள்.

எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் இரண்டு கேள்விகள் கேட்கச் சொல்கிறார் இவர்.

1. உங்கள் தொழில் அளவுகோல்களுக்கு உட்பட்டதா?

2. உங்கள் சந்தை வாய்ப்புகள் போதிய அளவு விரிவானதா?

இந்தத் தொழில் என்றில்லை. பிடித்தமான தொழிலைப் பிரியமாகச் செய்யத் தொடங்கினால் பெரும் வெற்றிகளை பெறலாம் என்று உற்சாக மூட்டுகிறார் சந்தணு பிரகாஷ்.

“உங்கள் தொழிலில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், பாதியிலேயே விட்டுவிடாதீர்கள். ஒருநாள் நிச்சயம் வெள்வீர்கள். பாதிப்பு வருகிற நேரத்தில் பொறுமையாய் இருங்கள். உடனிருப்ப வரையும் உற்சாகமூட்டுங்கள். உங்கள் தொழிலுக்குத் தேவைப்படுவதைவிட 50% கூடுதல் நிகர ஆதாரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்கிறார், டெகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மதன் மோஹன்கா.

ஏகலைவா என்ற பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கிய சுனில் ஹண்டாவின் பார்வை வித்தியாசமானது. “ஒருவர் நல்ல நிர்வாகியா என்று தெரிய வேண்டுமென்றால், 3-வருடங்கள் கழித்து அவருக்கு கீழே பணிபுரிந்தவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அந்த வளர்ச்சியில் அவர்களுடைய மேலாளருக்கும் பங்குண்டு” என்கிறார்.

அதிர்ஷ்டம் முக்கியம்தான். ஆனால் முயற்சி இல்லாதவர்களுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை என்கிறார் இவர். இணையம்வழி பயணச் சீட்டுகள் பதிவு செய்தல் என்னும் துறையில் வெற்றியோடு திகழும் தீப் கேல்ரா makemytrip.com நிறுவனத்தின் உரிமையாளர். “உங்களுக்கான துறை போதிய நிதிக்கு வாய்ப்புள்ளதா என்று பரிசீலனை செய்யுங்கள். உங்கள் முதலீட்டை சரியாகத் திட்டமிடுங்கள். உங்கள் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி கொடுங்கள். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இடம் கொடுங்கள். ஒவ்வொரு நாளிலும் தொழிலில் கவனமாக இருங்கள்” என்பது இவர் தரும் வழிகாட்டுதல்.

“எடுத்த முயற்சியில் எல்லாம் இருந்தாலும் அடுத்த தொழிலைத் தொடங்கவோ வேலையில் சேரவோ அஞ்சாத மனநிலை இருப்பவரே தொழில் தொடங்கத் தகுதியானவர்” என்கிறார் இண்டியா இன்ஃபோ லைன் உரிமையாளர் நிர்மல் ஜெயின். நேராகத் தொழில் தொடங்கும்முன் சில நிறுவனங்களில் வேலை பார்ப்பது நேரடி அனுபவத்தைத் தந்து உங்களைத் தலைசிறந்த நிர்வாகியாக்கும்” என்கிறார் இவர்.

வீடுகளின் உச்சியில் எல்லாம் தண்ணீர் தொட்டியாய் உட்கார்ந்திருக்கும் ‘சின்டெக்ஸ்’ நிறவனத்தின் வெற்றிக்குக் காரணம், தனஞ்செயன். அவர் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அல்ல. 34 ஆண்டுகளாய் அதனை நிர்வகித்துவரும் முதன்மை அலுவலர். ‘வளர்ப்புக் குழந்தையை வாஞ்சையுடன் அரவணைக்கும் தந்தை’ என்கிறார். இவர் 1974ல் சின்டெக்ஸ் நிறுவனத்தின் முழு நிர்வாகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. முழுமையான சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1975ல் 3 இலட்சங்கள் விற்றுவரவு செய்த நிறுவனம், அடுத்த ஆண்டே 20 இலட்சங்களும், 1977ல் 70 இலட்சங்களும் விற்று வரவுசெய்து வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.

ரிஸ்க் எடுப்பதும், தவறுகளுக்குப் பொறுப்பேற்பதும் வளர்ச்சிக்கு வழிகள் என்கிறார் இவர். பிடித்ததையே செய்யுங்கள்” என்பது இவர் சொல்லிக் கொடுக்கும் வெற்றிச் சூத்திரம்.

ஏட்டுப் படிப்பும் அனுபவமும் கைகோர்க்கும் போது ஏற்படும் வளர்ச்சிக்கு, எத்தனையோ மைல் கற்கள், அத்தனை மைல்கற்களையும் பட்டியல் போடும் இந்தப் புத்தகம் தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல துணை.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *