21. சவால்கள் சுகமானவை

சின்ன வயதில் தேர்வுக்குத் தயாரான நினைவு இருக்கிறதா? ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் விழுந்து விழுந்து படிக்கும்போதோ எழுதிப் பார்க்கும் போதோ மானசீகமாக தேர்வைத்தான் எழுதிக் கொண்டிருப்போம். எது தயாரிப்பு? எது தேர்வு என்று தெரியாத அளவு தீவிரம் மனதில் குடி கொண்டிருக்கும்.

தேர்வுக்கு முன்பே தேர்வெழுதும் நிமிஷங்களை மானசீகமாக வாழ்கிற மாணவன் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது போல, ஒரு தயாரிப்பின் உருவாக்க நிலையிலேயே அதன் மார்க்கெட்டிங் அம்சங்கள் பற்றியும் எந்த நிறுவனம் சிந்திக்கிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெறுகிறது.

எதைத் தருகிறோம்? எதற்காகத் தருகிறோம்? யாருக்கு தருகிறோம்? எப்படித் தருகிறோம் என்ற நான்கு கேள்விகளுக்குள் மார்க்கெட்டிங் வெற்றி மறைந்து கிடக்கிறது.

இதில் முதல் இரண்டு படிநிலைகள் ஒரு கரு உருவாகும் ஆரம்ப நிலைபோல் அடிப்படையானது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுப் பார்வையில் சாதாரணமாகத் தென்படும் ஒரு விஷயம், கூர்மையான ஒருவரின் பார்வையில் ஒரு தங்கச்சுரங்கமாகத் தெரியும்.

யார் வீட்டுக்குப் போனாலும் அவரவர் குழந்தைகளின் திறமைகளை விருந்தினர்களுக்கு வெளிப்படுத்தச் சொல்லி சந்தோஷப்படுவது, பெற்றோர்களின் இயல்பு. இதை பெற்றோர்கள் செய்யாமல் ஒரு சேனல் செய்தால் எப்படி இருக்கும்? இந்த ‘பளிச்’ யோசனையின் ‘பலே’ வெற்றிதான் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்.

ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் சின்னக் குழந்தைகளின் பாடல், ஸ்டார் விஜய் டீவியின் இந்த நிகழ்ச்சி பெற்ற வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள்.

இதை எதற்காகத் தருகிறோம் என்கிற தெளிவும் இதன் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. நிகழ்ச்சியில் பாடும் குழந்தைகள் மட்டுமின்றி, பாட்டில் நாட்டம் மிக்க பிள்ளைகளும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி எதற்காக? பிள்ளைகளின் திறமைகள் வெளிவர வேண்டும். அதற்காக!!

யாருக்கு, எப்படி என்பதெல்லாம் நிகழ்ச்சியின் தரம் சார்ந்த அம்சங்கள். அபாரமான நிபுணர்கள் நடுவர்களாகவும் நிபுணர்களாகவும் பங்கேற்கத் தொடங்கியதும் மேலும் மெருகேறி இந்த நிகழ்ச்சி இமாலய வெற்றியை எட்டி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் அம்சமும் உள்ளீடுமே அதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துவிட்டன. இந்த நிகழ்ச்சியின் இயல்பான சமூக அக்கறையே அதை மக்களிடம் சென்று சேர்த்துவிட்டன.

இதேபோல் அச்சு ஊடகத்தில், தினமலர் செய்த புதுமை, குழந்தைகளின் பிறந்த நாளில் அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது. தங்கள் குழந்தைகளின் வண்ணப்படங்களை பெற்றவர்கள் மட்டுமின்றி உற்றவர்களும் பார்த்துப் பரவசம் அடையும் வாய்ப்பை இந்த நாளிதழ் வழங்கியது. ஒரு சிறு புகைப்படத்திற்காக பல குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் இந்த இதழை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு ஊடகங்களிலுமே மார்க்கெட்டிங் என்கிற அம்சம் வெளிப்படையாக இல்லை. அதேநேரம் இவர்களின் இலக்கும் தப்பவில்லை. “நல்லதுக்கு காலமில்லை” என்னும் தவறான கருத்து தவறாகிப் போனதுதான் இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி. வித்தியாசமான கண்ணோட்டங்கள் வென்றே தீரும் என்னும் உண்மை சமூகத்திலும் வணிகத்திலும் தொடர்ந்து வென்றுகொண்டே வருகிறது. ஒரு புதிய அனுபவத்தைப் பெறும்போது நுகர்வோர்கள் அதனை மறப்பதேயில்லை. அந்த அனுபவத்தைத் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அத்தனை பேரோடும் பகிர்ந்து கொள்ள அவர்களே முன்வருவதால் தங்களையும் அறியாமல் நல்லெண்ணத் தூதுவர்களாக வடிவெடுக்கிறார்கள்.

நல்ல விஷயங்களை வல்லமையுடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும், கொடுத்த உத்திரவாதத்தைக் காப்பதும் இந்த வெற்றியின் வேர்கள். ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்கிறபோது மனதில் மலரும் உற்சாகமே மேன்மேலும் வெற்றிகளை எட்டத் தூண்டுகிறது. உலகெங்கும் மார்க்கெட்டிங் வெற்றிகளின் மூலங்களை ஆராய்ந்தால் இதுவே பொதுவான உண்மை என்பது புலப்படும்.

நல்ல விஷயங்கள் நம்பகத்தன்மையுடன் வருகிறபோது சமூகம் வரவேற்கவே செய்கிறது. தன்னுடைய தயாரிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் அந்த நம்பிக்கையே உந்திச் செல்கிறது. உயர்வுகளைத் தருகிறது. மார்க்கெட்டிங் என்பது விற்பனை மட்டுமல்ல. வாழ்வை வசதியாக்கிக் கொள்ள சமூகத்துக்குத் தருகிற வாய்ப்பு. அந்த வசதி ஒரு தயாரிப்பாகவோ ஒரு சேவையாகவோ இருக்கலாம். ஆனால் அதிலிருக்கும் புதுமையும் உண்மையும்தான் அந்த தயாரிப்பையோ சேவையோ தவிர்க்க முடியாததாய் ஆக்குகிறது.

தவிர்க்க முடியாத சக்தியாகத் தங்களை தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்துவிட்டால் சவால்கள் சுகமானவை. சாதனைகள் சகஜமானவை. எந்தத் துறையிலும் வெற்றிகள் சாத்தியம். எந்த நிலையிலும் புதுமைகள் சாத்தியம். எந்த வகையிலும் வாழ்வது சாத்தியம். எந்த கனவையும் தொடுவது சாத்தியம். இவைதானே மார்க்கெட்டிங் மந்திரங்கள்!!!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *