சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கின்ற கொடை. ஜாதகம் செய்கின்ற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப்போவதில்லை. காலமும் இடமும் கருதிச் செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால், காலம் வருமென்று வெறுமனே காத்திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை.

வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணரமுடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் கொண்டவர்கள்தான் அனைவரும்.

விரட்டும் வறுமை, மிரட்டும் வாழ்க்கைச் சூழல், அனைத்தையும் எதிர்கொண்டு போராடி வென்றவர்களே பெயர் சொல்லும் விதமாய் விளங்குகிறார்கள். சூழ்நிலை அமையட்டும் என்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் சும்மா இருந்திருந்தால், அடிமை இந்தியாவிலேயே நாம் அல்லல்பட்டுக் கொண்டிருப்போம். மின் விளக்கு வாகனங்கள், மருத்துவ சாதனங்கள், ஆலைகள் அனைத்துமே முதல் முதலில் உருவானபோது அதற்கான சூழ்நிலை அமைந்திருக்கவேயில்லை.

“தேவைதான் உருவாக்கத்தின் தாய்” என்றொரு முதுமொழி உண்டு. வாழ்க்கை இலக்கின்றிச் செல்கள் அனுமதிப்பவர்கள், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அவமதிக்கிறார்கள்.

விரும்பும் இலக்கில் பயணம் செய்யவும், விரும்புகின்ற வெற்றிகள் எட்டவும் வாகான வெளிச்சூழலை விஞ்ஞானம் சுதந்திரமாய் நிலைநிறுத்தியுள்ளது.

உயர்வுகளுக்கான உணர்வும் விருப்பமும் உள்ள உட்சூழல், நம் உள்ளத்தில் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

இணையதளத்தின் இன்றைய யுகம், எண்ணியவற்றை எண்ணியவாறே எட்டிப்பிடிக்க கை கொடுக்கிறது. ஆனால் பலர் ஆமை ஓட்டினால் ஆன மனத்தைக் கொண்டு அவதிப் படுகிறார்கள்.

ஆமை ஓட்டினால் ஆன மனதில் இரண்டு சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று வேகக் குறைவு. இன்னொன்று, உள்ளடுங்கும் இயல்பு.

உயர்வுக்கான பயணத்தைத் தடுத்து நிறுத்தும் தடைகள், இந்த இரண்டு குணங்கள்.
வேண்டிய வேகத்தை வெளிப்படுத்தாமையும் உள்ளடுங்கும் தாழ்வு மனப்பான்மையும் பல வீழ்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதிர்ஷ்ட தேவதை, ஒரு சிறுமியின் வடிவெடுத்து, கந்தல் துணியில் சுற்றிய பெரும் சுமையன்றைத் தூக்க முடியாமல் தூக்கிவந்தது. ஓடிச் சென்று பலரும் தாங்கிப் பிடித்தனர். ஒரேயரு மனிதன் மட்டும் முகம் திருப்பி அமர்ந்திருந்தான்.

அந்தச் சிறுமி அவன் முகவாய் தொட்டுத் திருப்பிக்கேட்டாள். “எல்லோரும் என்னைத் தேடி வந்து உதவினார்கள். நீ உதவவில்லையே?” அந்த மனிதன் அலட்சியமாய்ச் சொன்னான். “உன்னைப் பற்றி எனக்கென்ன கவலை?”

மௌனமாய் அகன்றாள் மலர்போன்ற சிறுமி. பத்தடி நகர்ந்தபின், தூக்கி வந்த கந்தலை அவிழ்க்கும்படி உதவி செய்தவரைக் கேட்டுக்கொண்டாள். உள்ளே “தகதக”வென்று தங்கக் கட்டிகள். கை கொடுக்க ஓடோடி வந்தவர்களுக்குக் கைநிறையத் தங்கம் தந்து விடை பெற்றது அதிர்ஷ்ட தேவதை.

சோம்பேறி மனிதன் ஓடி வந்து கேட்டான், “எனக்குத் தரவில்லையே!” அதிர்ஷ்ட தேவதை அலட்சியமாய் சொன்னது, “உன்னைப் பற்றி எனக்கென்ன கவலை?”
வாழ்க்கையில் சிறிய வாய்ப்புகள்கூடக் கந்தல் துணி மூட்டை போல் கண்ணுக்குத் தெரியும். அதையும் ஓடிச் சென்று தாங்கும் உள்ளம் இருந்தால், வாழ்வில் வெற்றிகள் மழையாய்ப் பொழியும்.

மனிதன் சந்திக்கும் ஒவ்வொன்றுமே மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள். நேரம் வந்தால் தானாக வரும் என்ற வறட்டு வார்த்தைகள் வாழ்க்கைக்குத் துணை செய்ய வாய்ப்பே இல்லை.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *