6. உலகம் திறந்தது; உள்ளம் திறந்ததா?

        பணிவாய்ப்புக்கான பரிந்துரைகள் என்பதை இந்தத் தலைமுறை அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. தகுதி, முன்னுரை எழுத, ஆற்றல், அணிந்துரை எழுத, நேர்முகத்தேர்வு நிறைவுரை எழுதி, திறமையாளர்களின் காத்திருப்பை நிறைவு செய்கிறது.

தங்கள் நிறுவனத்திற்குத் திறமையாளர்களே தேவை என்பதை முழுமையாக நம்பும் நிறுவனங்கள், சர்வதேச எடைக்கற்களை சந்திக்க வைக்கிறார்கள். அதன்பிறகே தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனவே தகுதியின் உச்சத்தில் தலையெடுக்கும் இளைஞர்கள்தான் உயரிய இடங்களில் உட்கார முடிகிறது-. கல்வி, ஆற்றல், களப்பணி அனுபவம், முடிவெடுக்கும் திறமை, முத்திரை பதிக்கும் புத்திசாலித்தனம், இத்தனையும் வேண்டியிருக்கிறது இந்திய இளைஞனுக்கு. சராசரி அறிவும், செயல்படத் தூண்டும் மனதும் கூடிப்பழகுவதைத் தடுக்கும் கூச்சமும்தான் இளைஞனுக்குள்ளேயே  இருக்கிற எதிரிகள்.

தாழ்வு மனப்பான்மைதான் இத்தனை தடைகளுக்கும் மூலவேர். தாழ்வு மனப்பான்மையைத் தகர்க்கும் ஆயுதம் அறிவுதான். அறிவைத் தேடும் அனல் வேகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தால் வாழ்க்கை நெடுகத் தெளிவுதான்.

போருக்குப் படைக்கலன் சேகரிக்கும் வீரன் போன்ற விறுவிறுப்போடு அறிவை சேர்க்கும் ஆர்வம்தான் அடிப்படைத்தேவை.

இன்றைய பொழுதுபோக்கு சாதனங்களின் பலமும் பலவீனமும் அவற்றின் விரிந்த பரப்புதான். நன்மை தீமை இரண்டையுமே எல்லையில்லாத அளவுக்கு அள்ளிக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் திறமை மட்டும் இருந்தால் போதும். வாழ்வை வெல்ல வசதிகளும், தகவல்களும் கடையப்பட்ட வெண்ணெய் போலக் கைக்கு வந்து சேரும்.

உலகம் தன் கதவுகளை விரியத் திறந்திருக்கும் விஞ்ஞானப் பொழுதுகள்தான் விழிப்பாய் இருக்க வேண்டிய வேளை.பாற்கடலைக் கடைந்தபோது, நஞ்சும் அமுதும் அடுத்தடுத்த வந்த அதேநிலைதான் அறிவியலைக் கடையும்போதும் காணப்படுகிறது.

நஞ்சை மறுக்க வேண்டும் அல்லது செரிக்க வேண்டும். அதன்பின் கிடைக்கும் அமுதமெல்லாம் நமக்கு!இந்த வாழ்க்கைக் கோட்பாட்டை வகுத்துக் கொண்ட இளைஞர்கள், நாளைய சமூகத்தின் தொற்றுகளை மாற்றும் நோயெதிர்ப்பு சக்தியாய்த் தங்கள் அறிவையே கொள்வார்கள்.

அதன் மூலம் வாழ்க்கையை வெல்வார்கள். சிலருக்கு இன்று கனவுகளை மட்டுமே காண முடிகிறது. அதில் ஒரு சதவிகிதத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சொன்னாலும் நடுக்கம் ஏற்படுகிறது.

உண்மையில் கனவின் உக்கிரம் கூடக்கூட அறிவின் பசி அதிகரிக்கும். இருண்ட பாதையில் பாதம் பதிக்க கனவின் வெளிச்சமே ஒளிகொடுக்கும். கனவும் அறிவும் கையிலுள்ள ஆயுதங்கள். அணையாத தீபங்கள்!

பரிந்துரைகளை மறந்துவிடுங்கள், தகுதியுரைகளை எழுதிவிடுங்கள்!

உலகம் திறந்திருக்கிறது, உள்ளம் திறந்திடுங்கள். உயர்வுகளை வரவிடுங்கள்!

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *