பலரும் பணிசெய்யும் இடத்தில், அபாரமான தனித்தன்மை யாரிடம் வெளிப்படுகிறதோ, அவர்கள் வெகுவேகமாக முன்னேறுகிறார்கள். இந்த தனித்தன்மைக்கு அளவுகோல்தான் என்ன?
இந்த சுவாரசியமான கதை, அதை விளக்குகிறது. கவனமாகப் படியுங்கள். இந்தக் கதையின் கதாநாயகரே நீங்கள்தான்!!

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சோமு, தனக்கு என்ன வேலை என்று மேலாளரிடம் கேட்டார். ஆற்றங்கரைக்கு அழைத்துப் போன மேலாளர், “இந்தக் கரையை நீந்திக் கடந்து எதிர்க்கரையில் ஏற வேண்டும்” என்றார். “அப்படியே ஆகட்டும்” என்று ஆற்றில் குதித்து நீந்திப்போய் கரையேறினார். மேலாளர் புன்னகையை பாராட்டகத் தந்தார்.

அடுத்துவந்த ராமுவுக்கும் அதே வேலை. ராமு ஆற்றில் குதித்தபோது, அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் ராஜேஷ், அதே வேலை தரப்பட்டு ஆற்றைக் கடக்க முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்தார். ராஜேஷை இழுத்துக் கரை சேர்த்தார். ‘பலே’ என்று பாராட்டினார் மேலாளர்.

மறுநாள் வேலைக்கு வந்த ரவியோ, சோமு, ராமு, ராஜேஷ் ஆகியோரை சந்தித்து இந்த வேலை குறித்து கேட்டறிந்து “தவறில்லாமல் நீந்துவது எப்படி” என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். தயாராக வந்தவரைப் பார்த்து, “பலே! பலே!” என்று சொன்னதோடு இலவச இணைப்பாகப் புன்னகையையும் தந்தார் மேலாளர். அனைவரும் அதே அலுவலகத்தில் அதே ஆற்றைக் கடக்கும் வேலையைச் செய்கிறார்கள். அனைவருக்கும் பயிற்சி தரப்படுகிறது.

அப்போதுதான், அந்த அலுவலகத்தில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்தீர்கள். மேலாளர் உங்களை நீச்சல் பயிற்சிக்குப் போகச் சொன்னார். நீங்கள் போகவில்லை. “சரி, நன்றாக நீந்துவீர்கள் போல” என்று கருதி, பயிற்சியில்லாமலேயே நீந்தச் சொன்னார். நீங்கள் நீந்தவில்லை.

நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றி ஒரு புகார் போனது. உங்களை விசாரித்த நிர்வாகம், உங்களை நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமித்துவிட்டது. உங்களுக்கு போட்டுக்கொடுத்த மேலாளர், உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவராகிவிட்டார். அப்படி என்னதான் செய்தீர்கள்?

அந்த ஆற்றைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த நீங்கள், ஆற்றைக் கடக்க பயிற்சி தருவதற்கு நிறுவனம் தினமும் நிறைய செலவு செய்வதை உணர்ந்தீர்கள். அதற்குப் பதிலாக ஆற்றுக்குக் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ஆகும் செலவு மதிப்பீட்டை நிறுனத்திற்கு சமர்ப்பித்தீர்கள். அது பெரும் சேமிப்பாக ஆவதோடு ஒரு சமூகப்பணியாகவும் இருந்து நிறுவனத்திற்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என்று சுட்டிக் காட்டினீர்கள்.

சொல்லப்பட்ட வேலையை செய்த சோமு, ராமு, ரவி, ராஜேஷ் ஆகியோர் நிறுவனத்திற்கு உண்மையாக வேலை செய்தார்கள். தங்கள் திறமையையும் வெளிப்படுத்தினார்கள். நீங்கள்தான் உங்கள் தனித்தன்மையையும் வெளிப்படுத்தினீர்கள். வெற்றி பெற்றீர்கள். உங்களைப் போல் எல்லோரும் இருந்தால் உலகம் வெகு வேகமாக முன்னேறும் இல்லையா?

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *