கமர்கட்டுக்கும், லாலி பாப்பிற்கும் ஆசைப்படும் குழந்தைகளே இப்பொழுது கம்ப்யூட்டருக்கும், ஒலிம்பிக்ஸிற்கும் ஆசைப்படுகிறார்கள்.

தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே அவர்களுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கிறது. தகுதிகளை, படிப்பு, அனுபவம், பொது அறிவு எனப் பல பிரிவுகளில் வளர்த்துக் கொண்டுள்ள நாம் இன்னும் எவ்வளவு பெரிய இலக்குகளுக்கு ஆசைப்பட வேண்டும்.

வாழ்வது ஒருமுறை. அதில் மன திருப்தியுடன் சாதித்தோம், சம்பாதித்தோம்.. ஏழை எளியவர் நான்கு பேருக்கு உதவினோம் என்ற சந்தோஷத்தை எல்லாம் ருசி பார்க்க வேண்டாமா?

எப்படிப்பட்ட லட்சியம்:
இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தாயிற்று. அடுத்து மேலும் படிப்பதா? கிடைத்த வேலையில் சேர்வதா?

நம் நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் நடுத்தர வர்க்கம் என்பதால் கிடைத்த வேலையில் சேர்வது என்று முடிவு செய்கின்றனர்.

இந்தத் தகுதிக்கு ரூ.4,000தான் ஊதியம் கிடைக்கும் என்றால், ஆறே மாதத்தில் ரூ.10,000 என்று ஊதியம் பெறுமளவுக்கு உயர வேண்டும் என்ற லட்சியம் வைத்துக்கொள்ளலாம். அதற்காக பன்னாட்டு நிறுவனத்தில் உள்ள வேலைக்குத் தாவலாம். அல்லது இருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அசாதரணமாக உழைத்து, புதிய நுட்பங்களை செயல்முறைப்படுத்தி மேலதிகாரி அல்லது நிறுவனரிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும்.

நன்மதிப்பு மட்டும் ஊதியத்தை உயர்த்திவிடாது. நிறுவனத்திற்கே உங்கள் திறமையால், முயற்சியால் லட்சக்கணக்கான லாபம் கிடைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆயிரக் கணக்கில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

எந்த லட்சியத்திலும் நேர்மையும் உண்மையும் இருப்பது அவசியம். நல்லெண்ணத்துடன் கூடிய லட்சியம் நல்ல பலன்களைத் தரும். எப்படி என்றால், நிறுவனத்திற்குக் கிட்டும் லாபம் அதிகரித்ததால் ஊதிய உயர்வு உங்களுக்கு மட்டும்தான் கிட்டும். ஆனால் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் போனஸ் என்ற விதியின்படி ஊழியர்கள் அனைவர்க்கும் அதிகப்படியான வருமானம் அந்த வருடம் கிடைக்கும். அதற்கு மூலகர்த்தா நீங்கள் என்ற உண்மையை நினைத்துப் பாருங்கள். எத்தனை ஆனந்தமாக இருக்கிறது?

நீங்கள் ஒரு நிறுவனராகி, 100 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி மகிழ்விப்பது ஒரு லட்சியமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் ஊழியர் நிலையிலிருந்தபடியே அனைவருக்கும் அதிக போனஸ் வழங்கியுள்ளீர்கள்.

இது எப்படி சாத்தியமாயிற்று-? வேலையை மட்டும் செக்குமாடு போல மாங்கு மாங்கு என்று செய்யாமல், இது எனது நிறுவனமாக இருந்தால் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விரும்புவேன், திட்டம் தீட்டுவேன், செயல்படுவேன், சிக்கனமாக இருப்பேன் என்று எண்ணிச் செயல்படவேண்டும்.

நீங்கள் ஊழியராக இருந்தால் அறிவு, உழைப்பு, விசுவாசம் மூன்றும் மிகமிக முக்கியம். நீங்களே நிறுவனராக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அறிவு, புதிய எண்ணங்கள், கண்டிப்பு, நேர நிர்வாகம், பேச்சுத் திறமை, ஊழியர் நலனில் அக்கறை இவை எல்லாம் அவசியம்.

புதுப்பித்துக்கொள்ளுங்கள்:
எண்ணம் நிறைவேறும்வரை அயராது செயல்படவேண்டும் என்று பலரும் எப்பொழுதும் படப்படப்பாக இயங்குகிறார்கள். திட்டமிட்டபடி சரியாகத்தான் செயல்படுகிறோமா என்று கவனிக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்வதாக இருந்தால் முக்கியமான இடத்தில் நிலம் வாங்க வேண்டும். அந்த முக்கியமான இடத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

புதிதாக ஓர் ஊருக்குப் போவதாக இருந்தால் அந்த ஊருக்கு எப்படிப் போக வேண்டும்? அந்த ஊரில் என்ன விசேஷம்? என்று நிதானமாகத் தெரிந்துகொள்வோம். பிறகு அங்கு சென்றால் எப்படி மகிழ்ச்சியாக நாட்களை செலவிடலாம்? என்ன பொருள் வாங்கலாம்? என்று நிதானமாக யோசித்து திட்டத்தில் அவ்வவ்பொழுது தேவையான மாறுதல்களை செய்கிறோம். அதே போலவே, லட்சியத்தை அடைவதிலும் ஆர்வம் குறையாமல், அவ்வவ்பொழுது நிதானமாக யோசித்து திட்டத்தை மெருகேற்ற வேண்டும்.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *