2018 நவராத்திரி 1

பூடகப் புன்னகை என்னமொழி- அவள்
பூரண அருளுக்கு என்ன வழி?
ஆடகத் தாமரைப் பதங்களிலே- சுகம்
ஆயிரம் உண்டென்று சொல்லும் கிளி
வேடங்கள் தரிப்பதில் என்னபயன் – இனி
வேட்கைகள் வளர்ப்பதில் நீளும்பழி
நாடகம் யாவையும் நடத்துகிறாள் -ஒளி
நகைதரும் அம்பிகை நுதலின்விழி

எத்தனை பீடங்கள் ஆளுகிறாள்-அவள்
என்னென்ன ரூபங்கள் காட்டுகிறாள்
புத்தம் புதிய விடியலிலே -அவள்
புல்லிடைப் பனியென மின்னுகிறாள்
வித்தகி இவளெனத் தொடக்குனிந்தால் – அவள்
வெய்யில் வெளிச்சமாய் ஓங்குகிறாள்
நித்தம் கவிகிற காரிருளில்-அவள்
நட்சத் திரச்சுடர் ஏற்றுகிறாள்

பிச்சி மலர்கிற காவினிலே -எழில்
பொன்னிற சண்பகச் சோலையிலே
பச்சை நிறங்கொண்ட வாலையவள்-நல்ல
பட்டுத் துகில் கொண்டு சுற்றுகிறாள்
அச்சம் தருகிற பைரவியாய் – உயர்
அன்பைப் பொழிகிற மாதங்கியாய்
உச்சித் திலகம் ஒளிவீச -இங்கே
உள்ளவை யாவையும் ஆளுகிறாள்

நின்று நிமிர்கிற சிவகாமி- இவள்
நேசக் கனல்தரும் அபிராமி
கன்றின் குரல்கொண்டு பாரதியும் -அன்று
கண்டு உருகிய கல்யாணி
சின்னஞ் சிறுமி சீமாட்டி -இவள்
சங்கரன் வணங்கும் காமாட்சி
கொன்றையந் தார்தரும் வாசத்திலே- தினம்
கண்கள் கிறங்கும் விசாலாட்சி

சாரதை சியாமளை கமலாம்பா-இவள்
சகல கலாமயில் கற்பகத்தாள்
நாரணி நாயகி வடிவாம்பா-இவள்
நெல்லையை ஆளும் காந்திமதி
பூரணி புவனா லலிதாம்பா- நகை
பூத்திடும் உண்ணா முலையம்மை
காரணி காருண்யை கொப்புடையாள்-வினை
களைந்திடும் தையல் நாயகியாள்

மந்திரக் கலசத்தின் தீர்த்தத்தில்- அருள்
மூலக் கருவறை மூர்த்தத்தில்
எந்திர வடிவில் எழுந்தருள்க – சுடர்
ஏற்றிய விளக்கினில் எழுந்தருள்க
வந்தனை செய்தோம் மகமாயி- மிக
வாஞ்சை தருகிற திரிசூலி
சந்தங்கள் கொஞ்ச சதிராடு-எங்கள்
சிந்தையில் நிறைந்து நடைபோடு

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *