வளைக்கைகள் அகலேந்தி வருக

திரிமீது ஒளிமேவும் தருணம்
திசையெட்டும் அழகாக ஒளிரும்
விரிகின்ற இதழ்போல சுடரும்
விரிவானின் விண்மீனாய் மிளிரும்

விழியோடு சுடரேந்தி வருக
வளைக்கைகள் அகலேந்தி வருக
எழிலான கோலங்கள் இடுக
எங்கெங்கும் ஆனந்தம் நிறைக

கதிர்வேலன் மயில்வந்து ஆட
கலைவாணி யாழ்மீட்டிப் பாட
மதிசூடும் திருவண்ணா மலையான்
முற்றத்தில் மூவுலகும் கூட

ஜகஜோதி யாய் மின்னும் இரவு
ஜகங்காக்கும் மஹாசக்தி வரவு
அகஜோதி அவளேற்றித் தருவாள்
அவளேநம் உயிரெங்கும் நிறைவாள்

2018 நவராத்திரி – 10

 

 

 

 

 

சீறிய சிங்கத்தில் ஏறிய சக்திக்கு
சந்ததம் வெற்றியடா-அவள்
சங்கல்பம் வெற்றியடா

கூறிய போற்றிகள் கூவிடும் வேதங்கள்
கும்பிட்டு வாழ்த்துமடா-அவள்
கொற்றங்கள் வெல்லுமடா

பண்டோர் அசுரனைப் போரில் வதைத்தவள்
புன்னகை ராணியடா-அவள்
பல்கலை வாணியடா

கண்டவர் நெஞ்சினைக் கோயிலாய்க் கொள்பவள்
காருண்ய ரூபியடா – அவள்
காலத்தின் சாவியடா

எண்ணிய நன்மைகள்யாவும் நிகழ்வுற
எங்கும் நலம்பெருக- சக்தி
இன்றே அருள்தருக

புண்ணியம் ஓங்கவும் பாவங்கள்நீங்கவும்
பொன்மனம் இரங்கிடுக -எங்கள்
புஜங்களில் இறங்கிடுக

மண்மிசை விண்ணக மாண்புகள் வாழ்ந்திட
மாசக்தி கனிந்திடுக-எங்கும்
மாண்புகள் மலர்ந்திடுக

2018 நவராத்திரி – 9

 

 

 

 

 

 

 

 

குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி

குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி
நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும்
நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள்
குறும்புக்குக் குறையில்லை; ஆன போதும்
குறித்தபடி குறித்ததெல்லாம் செய்வாள்- இங்கே
மறுபடியும் வராவண்ணம் மறலி பாதை
மறிக்கின்ற மஹாமாயே அருள்வாய் நீயே
வெஞ்சமரே வாழ்க்கையென ஆகும் போதும்
வடிவழகி திருமுன்னே நின்றால் போதும்
விஞ்சிவரும்புகழ்நலனும் பெருமை யாவும்
விருப்பங்கள் கண்முன்னே வந்து மேவும்
நெஞ்சிலொரு முள்தைத்து நலியும் போது
நயனத்தின் ஓரவிழிப் பார்வை தீண்டும்
அஞ்சவரும் முள்முனையோ மலராய்ப் போகும்
அவளருளே வழியெங்கும் கவசம் ஆகும்
அங்குசமும் பாசமுடன் கரும்பும் பூவும்
அபயமெனும் அருள்விழியும் அழகே மேவும்
பங்கயமாம் திருமுகமும் பரிவும் வேதப்
பரிமளமாய் வழிகாட்டும் பதமும் ஞான
வெங்கயமாம் வாரணத்தை ஈன்ற வாலை
விகசிக்கும் பேரெழிலும் வடிவும் நெஞ்சில்
மங்கலத்தின் பூரணமாய் நிறையும்- இந்த
மகத்துவத்தின் வர்ணனையே மௌனம் ஆகும்

2018 நவராத்திரி – 8

சந்தனக் காப்பினில் குங்கும வார்ப்பென
சக்தி திகழுகின்றாள் – எங்கள்
சக்தி திகழுகின்றாள்
வந்தனை செய்பவர் வாழ்வினில் பைரவி
வெற்றி அருளுகின்றாள் – புது
வெற்றி அருளுகின்றாள்

அன்புக் கனலினைக் கண்ணில் சுமந்தவள்
ஆற்றல் பெருக்குகின்றாள் – எங்கள்
ஆற்றல் பெருக்குகின்றாள்
துன்பச் சுவடுகள் தீர்த்து முடிப்பவள்
தொட்டு மலர்த்துகிறாள் – உயிர்
தொட்டு மலர்த்துகிறாள்

பல்வகைப் பூக்களின் புன்னகைக் கோலத்தில்
பைரவி மின்னுகிறாள் – லிங்க
பைரவி மின்னுகிறாள்
வெல்லும் வழிவகை சொல்லும் மவுனத்தில்
வித்தகம் காட்டுகின்றாள் – அன்னை
வித்தகம் காட்டுகின்றாள்

தூரத்தில் நின்றாலும் பாரத்தைப் போக்கியே
துர்க்கை துணை வருவாள் – எங்கள்
துர்க்கை துணை வருவாள்
ஆரத்தி நேரத்தில் ஆடிவரும் அன்னை
பொன்னடி போற்றிடுவோம் – நம்
அல்லல் அகற்றிடுவோம்!

2018 நவராத்திரி -7

 

 

 

 

 

 

 

 

வாழ்வினில் ஆசை வைப்பவர்க்கெல்லாம்
வரமாய் வருபவள் நீ
தாழ்வுகள் மாற்றி தவிசினில் ஏற்றி
தாங்கும் கருணையும் நீ
ஊழ்வினை எழுத்தை உடனே மாற்றும்
உன்னத சக்தியும் நீ
சூழ்ந்திடும் செல்வம் சுடர்விடும் வாழ்வை
அருளுக திருமகளே

பாற்கடல் நிலவே பகலெனும் ஒளியே
பாதங்கள் தொழுகின்றோம்
மாற்றங்கள் தருக மேன்மைகள் தருக
மலரடி வணங்குகிறோம்
ஆற்றல்கள் பெருக்கு ஆயுளைப் புதுக்கு
அருளை நாடுகிறோம்
நேற்றையும் இன்றையும் நாளையும் நடத்தும்
நாயகீ போற்றுகிறோம்

பாம்பணை துயில்வோன் பாதங்கள் வருடும்
பணிவுள்ள குலமகளே
தாம்பினில் பிணித்த தாமோதரனின்
துணையாம் திருமகளே
ஆம்பொழு தெல்லாம் அரைவிழி நோக்கில்
அருள்புரி மலர்மகளே
கூம்பல் இல்லாத கமலத்தில் மலர்ந்த
கனிவே திருவருளே!

2018 நவராத்திரி – 6

கண்கள் நிலவின் தாய்மடியாம்
கரங்களில் சுரங்கள் கனிந்திடுமாம்
பண்கள் பெருகும் யாழ்மீட்டி
பாரதி சந்நிதி துலங்கிடுமாம்
எண்கள் எழுத்தின் வர்க்கங்கள்
எல்லாம் எல்லாம் அவளேயாம்
புண்ணியள் எங்கள் கலைமகளின்
பூம்பதம் போற்றிப் பாடிடுவோம்!

ஏடுகள் எழுதுகோலுடனே
இயங்கும் கைகளில் ருத்ராக்ஷம்
ஆடல் பாடல் சிற்பமெனும்
ஆய கலைகள் அவள்ரூபம்
தேடித் தொழுவார் நாவினிலே
தேனாய் கவிகள் தருபவளைப்
பாடிப்பாடி வினைதீர்வோம்
பங்கய ஆசனி வாழியவே!

கூர்த்த மதியில் அவளிருப்பாள்
கோலங்கள் வரைகையில் அவளிருப்பாள்
பார்த்த அழகுகள் அனைத்தையுமே
பாரதி சரஸ்வதி ஆண்டிருப்பாள்
கோர்த்த மணிகளின் கலகலப்பாய்
கோவில் தீபத்தின் சுடரொளியாய்
ஆர்த்தெழும் தேவியை சரண்புகுவோம்
அபயம் தருவாள்; அருள்புரிவாள்!

2018 நவராத்திரி 5

மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த
மயிலுக்கு சாயல்தந்த அன்னை
கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த
ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை
புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப்
பொன்வண்ணன் விழிபடரும் மோகம்
முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் – அவள்
முன்புவர மாட்டாமல் ஒளிவாள்

பிறையொன்று சிரங்கொண்ட பிச்சி -கதிர்
பொன்திலக மாகவொளிர் உச்சி
முறையெல்லாம் அவள்தானே படைத்தாள்-அதை
முந்திவரும் பக்தருக்காய் உடைத்தாள்
கறைக்கண்டன் செய்தவத்தின் வரமாய்-அந்தக்
காங்கேயன் கைவேலின் உரமாய்
தந்திமுகன் தாய்தானே திகழ்வாள் – இங்கு
தினந்தோறும் விடியலென நிகழ்வாள்

ஒன்பதுநாள் கொலுப்பொம்மை கண்டு-அந்த
ஓங்காரி நகைசெய்வ துண்டு
தன்மயமாய் ஆனமுனிவோரின் – நுதல்
தோன்றும்விழிதிறந்திடுவாள் வந்து
பொன்மயமாய் அபயகரம்நீட்டி – அருள்
பாலமுதம் கருணையுடன் ஊட்டி
மின்மயமாய் சக்திவந்து மறைவாள் -பின்
மூடுகின்ற கண்களுக்குள் நிறைவாள்

2018 நவராத்திரி 4

குளிரக் குளிர குங்குமம் கொட்டி
மலர மலர மாலைகள் கட்டி
ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்-

தளரத் தளர பொங்கலும் வைத்து
தழையத் தழையப் பட்டையும் கட்டி
தகிட தகிட தாளம் தட்டினோம்

குழையக்குழைய சந்தனம் இட்டு
கனியக் கனிய கனிகளும் வைத்து
உருக உருக கைகள் கூப்பினோம்

வருக வருக வாலை நீயே
தருக தருக ஞானம் தாயே
சுடர சுடர சூடம் ஏற்றினோம்

கருகும் கருகும் வினைகள் எல்லாம்
பெருகும் பெருகும் நலன்கள் எல்லாம்
பரிந்து பரிந்து பாதம் போற்றினோம்

மலரும் மலரும் உனது கண்கள்
நிலவும் நிலவும் உனது வதனம்
கனவின் கனவில் கண்டு பாடினோம்

நனையும் நனையும் விழிகளோடு
நினையும் நினையும் மனதினோடு
தேவ தேவி உன்னைத் தேடினோம்

இருளில் இருளில் ஒன்பதுநாள்
அருளில் அருளில் நனைய வந்தே
அன்னை அன்னை உன்னை நாடினோம்

2018 நவராத்திரி-3

சிறகுலர்த்தும் ஒருபறவை அலகு – அதன்
சிற்றலகின் நெல்லில் அதன் உலகு
திறந்திருக்கும் வான்வழியே பயணம்- பின்
தருவொன்றில் தன்கூட்டில் சயனம்
மறப்பதில்லை தன்னுடைய பாதை-அது
மொழிபேசத் தெரியாத மேதை
அறிவுக்கும் அறியாத யுக்தி-அதை
அறிந்தாலோ அதன்பெயரே சக்தி

பாறைக்கு நடுவினிலே முளைக்கும்- அந்த
பறவைதின்ற கனியிருந்த விதையும்
சூறைக்கு நடுவினிலும் துளிர்க்கும்-அது
செடியாகி மெல்லமெல்ல நிமிரும்
வேறொருநாள் வருமந்தப் பறவை-புது
விருட்சத்தின் கிளைதேடி அமரும்
மாறுமிந்த காட்சிகளின் யுக்தி-அதன்
மூலம்தான் அன்னைபரா சக்தி

அண்டத்தில் சிறுதுகளின் அசைவும்- அவள்
ஆணையினைப் பெற்றதனால் நிகழும்
விண்டதொரு பாறையின்நீர்க் கசிவும்-அந்த
வித்தகியாள் விழிபட்டு வழியும்
பிண்டத்துள் நின்றவுயிர் ஒளியும்- அவள்
பேரருளால் ஒருநாள்போய் ஒளியும்
கொண்டிடுக அவள்பதத்தில் பக்தி- மழை
கொண்டலென அருள்பொழிவாள் சக்தி