கடல் தடங்கள்

சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான்

சிரத்தையில்லாமல் நடக்கின்றேன்

உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான்

ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன்

கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என்

கண்களில் பட்டிடப் போவதில்லை

பலமுறை வருடிய ஓடங்களை-நான்

பார்த்தினி ஏதும் ஆவதில்லை

மூச்சை யடக்கிநான் முத்தெடுத்தேன் -அது

மாலையென் றானபின் கையிலில்லை

வீச்சினை உணர்ந்து உப்பெடுத்தேன் -அது

விரல்களில் கரித்தது தங்கவில்லை

ஓடிப் பொறுக்கிய கிளிஞ்சல்களும்-நகம்

ஒட்டிய கடற்கரை மணல்துகளும்

வாடி யிருக்கிற நேரத்திலே-சில

வார்த்தைகள் என்னுடன் பேசிடட்டும்

காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது

காட்டி மறைப்பவை ஏராளம்

காலை வருடிய சிற்றலையை-தொட்டுக்

காட்ட முடியுமோ யாராலும்

உப்புக் கடலலை பக்கத்திலே -நான்

உள்ளவன் என்பதைக் காலம் சொல்லும்

எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை

இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்

கோடையெனும் பெருவெளியில்…

தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய்

பேரறியாத நிறங்களினுலகில்

என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்?

ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன்

மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில்

என்னுள் எழுந்த நிலவை என்செய?

வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி

தலைக்கு வைத்துத் தூங்கும் முயலின்

ஈரச் சிலுப்பல் என்னுளோர் வெள்ளமாய்…

கோடை நிலத்தின் கோரைப்புல்வெளி

மூடியும் மறையாக் கற்பக விருட்சம்

எனக்கான கனிகளைக் கனிவித்திருக்கையில்

தனக்கேயான தாளாப்பசியுடன்

தள்ளி நின்று தவித்திருக்கின்றேன்

ஆழியை வீணையாய் ஆக்கி மீட்டிடும்

வாணியின் உள்ளங்கையில் வியர்வையாய்

அடிமுடி தேடிய ஆதிநாள் தவிப்பில்

வெடிபடு நிலத்திடை வெளிவருந் துளியாய்

கசியும் பாறையாய் கமண்டலத் தளும்பலாய்

நிசியில் உருகும் நிசப்த ராகமாய்

எத்தனை வடிவுகள் எடுத்து வருகிறேன்

அசையும் புல்லின் ஆதிதாளத்தில்

இசைமை பிசகா இலைகளின் அசைவில்

மௌனக் கனலாய் மணக்கும் மலர்களில்

கவிழும் அமைதியின் கனத்த இரைச்சலில்

தவமொன்று புரிந்ததும் வரமொன்று கனிந்ததும்

விநாடிகளுக்குள் விரைந்து நிகழ்ந்தன

வாங்கிய வரத்தின் வாரிதிக்குள்ளே

வலம்புரிச் சங்காய் விளைந்ததென் பிரியம்

சங்கின் மடியில் சமுத்திர அலைகளாய்

வந்து போம் கடல்மகள் வருந்திசை எதுவோ

போறாளே பொன்னுத்தாயி…

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக
திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது
காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்துவிட்டுவாக்மெனில் ஒலித்த பாடலைக் கேட்டுக் கொண்டே காட்சியைப் பார்த்தேன்.ஒலித்த பாடல்,”போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு..தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ண விட்டு!பால்பீய்ச்சும் மாட்ட விட்டு,பஞ்சாரத்துக் கோழிய விட்டு-போறாளே பொட்டப் புள்ளஊர விட்டு”

டயானாவுக்காகவே பாடப்பட்டது போலிருந்தது.அந்தப் பாடலுக்காக
ஸ்வர்ணலதாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாமரணம் என்ற செய்தி இன்று மதியம் கிடைத்த போது
இந்தச் சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது.

இசை ஆல்பங்களுக்காக நான் எழுதிவரும் பல பாடல்களில் சிலவற்றை
ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார்.உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னைதெரசா பற்றிய ஒலிநாடாவில் நான் எழுதிய இரண்டு பாடல்களை அவர் பாடினார்.அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகம்.

யாரும் உன்பிள்ளைதான் -இந்த பூமிமீது
யாரும் உன் பிள்ளைதான்
என்ற பாடலில்,

தீயின் நாவு தீண்டினாலும்
தாயின் நாவில் ஏசு நாமம்

என்ற வரிகளைப் பாடும்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன.
ஸ்வர்ணலதாவின் தாய்மொழி மலையாளம் எனினும்,பாடல்களை கன்னடத்தில்எழுதிவைத்துக் கொண்டுதான் பாடுவார்.

பாடலை எழுதத்தொடங்கும் முன் டைரியின் மேலிரண்டு ஓரங்களில்
இசையமைப்பாளர்பெயரையும்,பாடலாசிரியர் பெயரையும் எழுதி வைத்துக் கொள்வது பாடகர்கள்வழக்கம்.மரபின் மைந்தன் முத்தையா என்று கன்னடத்தில் எழுத மிகவும் சிரமப்படுவார் அவர்.

“பாரிஸ் கிளியே பாரிஸ் கிளியே சாரல்மழையில் என்ன சுகமோ”
என்ற என் பாடலில்,”வைரமுத்துவும் என்னைப்பற்றித்தான் காதல்
கவிதை பாடிக்குவிப்பார்!பாப்பையாவுமே எந்தன் அழகை பட்டிமன்றத்தில்
பேசி ரசிப்பார்”என்ற வரிகள் சரணத்தில் இடம் பெற்றிருந்தன.அந்த வரிகளைப்பாட மிகவும் தயங்கினார்.”எழுதியவர் வைரமுத்துவுக்கு வேண்டியவர்தான்”என்று யானிதேஷ் சொன்னபின் தயக்கத்துடன் பாடிக் கொடுத்தார்.

நான் பார்த்த வரையில் பின்னணிப் பாடகிகளில்,ஒலிப்பதிவுக்கு வந்த இடத்தில்அதிகம் பேசாதவர் அவர்.உயரம் உயரமாய் உடன்வரும் அவருடைய அண்ணன்கள்பாட்டுக்கானதொகை பேரங்களில் ஈடுபட்டு முடிக்கும் தறுவாயில் பாடலை எழுதிக்கொள்ளத் தொடங்குவார்.பாடும்போது தான் ஏதேனும் தவறுசெய்தால்,இசையமைப்பாளர் சுட்டிக் காட்டும் முன்பே நாக்கைக் கடித்துக்கொண்டு,”ஒன் மோர்” என்று தயாராகிவிடுவார்.
இசையமைப்பாளரின் தேவையறிந்து எதிர்பார்ப்புக்கும் மேலாக பாடிக் கொடுப்பதில் ஸ்வர்ணலதா கைதேர்ந்தவர்.புறப்படும் போது,பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு என்று இசையமைப்பாளரிடமும் பாடலாசிரியரிடமும் சொல்ல அவர் தவறியதேயில்லை.ஒருசில ஆண்டுகளாகவே அவர் லைம்லைட்டில் இல்லை.

என் பாடல்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் யானிதேஷ்,ஸ்வர்ணலதா
கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஏனோ அடிக்கடி
கவலைப்படுவார். நுரையீரல்பாதிப்பால் 37 வயதில் அவர் மறைந்தார்
என்கிற தகவல் அதிர்ச்சியாய் இருக்கிறது.அமைதியான முகமும்,சோர்வான புன்னகையும்,தொழிலில் காட்டிய கவனமும் மனதில் வந்து வந்து போகின்றன.

“பொதிமாட்டு வண்டிமேலே போட்டு வச்ச மூட்ட போல போறாளே பொன்னுத்தாயி”என்றஅவர் பாடிய பாடலே அவரை வழியனுப்பட்டும்.
ஸ்வர்ணலதாவுக்கு என் அஞ்சலிகள்.

குகைப்பெருமான் -6

பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்களுக்கு கவிஞர் தடாகம் இளமுருகுவை நன்கு தெரிந்திருக்கும்.

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய புகழ்பெற்ற பாடலொன்று அவர் எழுதியதுதான்.”சுட்டதிருநீறெடுத்துதொட்ட கையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!கட்டழகானதொரு கந்தவடிவேலவனைக்காட்டுவது ஆறெழுத்து மந்திரம்”என்ற பாடல் அது.

என்னுடைய நண்பர் வளர்கவி இராதாகிருஷ்ணனுக்கு இளமுருகு அசிரியர்.இந்தப் பாடலை வளர்கவிஅடிக்கடி சிலாகித்துச் சொல்வார்.குறிப்பாக,குன்றுதனில் நின்றுவளர் கன்றுவழங்கும் நமக்கு
என்றும்வளர் செல்வம் பதினாறுமே!என்ற வரியை அவருடைய வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.
முருகனைப்பற்றி ஏராளமான இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார் இளமுருகு.சூலமங்கலம் சகோதரிகள்பாடிய,”கோபுர வாசலிலே உன் கோலம் தெரியுதய்யா!கொஞ்சும் தமிழ்கேட்டு உன்முகம் குறுநகை
புரியுதய்யா!” என்ற பாடலும்,மாஸ்டர் மகராஜன் பாடிய “தென்பழனிக் குன்றத்திலே தென்றல்வரும் மன்றத்திலே அன்பழகன் வீற்றிருந்தான் அழகாக!அவன் அங்கிருந்து காட்சிதந்தான் அருளாக!” என்ற
பாடலும் தடாகம் இளமுருகு எழுதிய பாடல்களில் முக்கியமானவை.

தன் வாழ்வின் அந்திமக்காலத்தில் தன்னுடைய ஆசிரியர் இளமுருகு,கல்கி பகவானின் சீடராகமாறியிருந்த செய்தியை வளர்கவி என்னிடம் சொன்னார்.இறைவன் எல்லாம் நிறைந்தவன்.சர்வ வல்லமை பொருந்திய கடவுளர்கள்,ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும் இருக்கிறார்கள்.
அவனையே நம்பியிருக்கும் அடியார்களோ ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடி,இறைவனேகதியென்று இணைந்து பாடிப் பரவசம் பெறுகிறார்கள்.இறைவன்மேல் பிடிப்பும் உரிமை கலந்த
சலிப்பும் உருவாகும் விதமாக,துதிமலர்களில் இடம்பெற்ற பாடல் இது.

தனைவெற்றி கொள்ளவே தெய்வங்கள் இல்லாருன்

தாய்தந்தை யாகவுள்ளார்

தடைகளை நீக்கியே துணைசெயும் இறைவருன்

தமையனா ராகிநின்றார்

வினைவெற்றி வழங்கிடும் அரங்கரோ மாமனாய்

வளர்நகை பூத்து நின்றார்

வலம்நல்கும் திருமகள் நினக்கொரு மாமியாய்

வாஞ்சையே காட்டுகின்றார்

தினைமுற்றும் வனந்தனில் வளர்வள்ளி அம்மையொரு

துணையாக சேர்ந்துநின்றார்

தனித்தபேர் எழிலாளும் தெய்வானைத் தாயுமோர்

இணையாக வந்துநின்றார்

வினைமுற்றும் எளியனின் நினைவேநீ கொள்ளாமல்

விடுவதில் வியப்பில்லையே

சுனைபொங்கும் தென்சேரி அடிவாரம் வளர்பால

தண்டா யுதபாணியே

காருண்ய ரூபம் கணபதி

காரியம் தொடங்கிட கணபதி-இங்கு

காலத்தின் அதிபதி கணபதி
சூரிய உதயம் கணபதி-திரி
சூலியின் மடியில் கணபதி

ஓமெனும் வடிவம் கணபதி-நாம்
ஓதிடும் மந்திரம் கணபதி
பூமியில் எதுவும் கணபதி-நல்ல
பூசனைப் பிரியன் கணபதி

மூலைக்கு மூலை கணபதி-இங்கு
மூலத்தின் மூலம் கணபதி
நீலியின் காவல் கணபதி-நல்ல
நிதர்சன தெய்வம் கணபதி

எளிவந்த இறைவன் கணபதி-நம்
எதிர்வரும் தெய்வம் கணபதி
ஒளிகொண்டு வருவான் கணபதி-நம்
உளந்தனில் அமர்வான் கணபதி

தந்தம் ஒடித்தவன் கணபதி-இங்கு
தன்னைத் தருபவன் கணபதி
பந்தம் அறுப்பவன் கணபதி-நல்ல
பக்தியில் திளைப்பவன் கணபதி

மேருவில் எழுதிய கணபதி-நல்ல
மேதைமை தருபவன் கணபதி
காருண்ய ரூபம் கணபதி-நம்
கண்களில் தெரிபவன் கணபதி

குகைப்பெருமான் -5

கோவை வானொலியில் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்தில் திருப்பாவை-திருவெம்பாவை பாடல்களும்விளக்கவுரைகளும் இடம்பெறும்.அப்படியொரு முறைதிருவெம்பாவைக்கு சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின்விளக்கவுரைகள்இடம்பெற்றன.

அந்தக்கால சுகிசிவம்
“ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி”என்ற வரிக்கு,”அவன்
அருட்சோதி,சூரிய சந்திரர்களுக்கே ஒளிதருபவன் என்பதால் பெருஞ்சோதி,ஆகவே அருட்பெருஞ்சோதி” என்று அவர் தந்த
விளக்கம் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

மார்கழி மாதக் கிருத்திகைக்கூட்டத்திற்கு,முருகனைத் தவிர அனைவருமே மஃப்ளர்,சால்வைகள் அணிந்துவந்திருந்தோம்.பெரும்பாலான கிராமத்துப் பெரியவர்கள் போல் மணியகாரர்வெங்கிடாஜலக் கவுண்டர்,ஸ்வெட்டர் அணிந்து அதன்மீது வெள்ளைச்சட்டைஅணிந்திருந்தார்.அவருக்கு வானொலியில் ஒலிபரப்பாகும் திருப்பாவைதிருவெம்பாவை விளக்கங்கள் அதிசயமாயிருந்தன.கோயில் நோக்கி நடக்கஆரம்பித்தோம்.

“அதெப்படீங்க! சுகிசிவம் அய்யா தெனோம் எந்திரிச்சு விடிகாலையிலே ரேடியோஸ்டேஷன் போயிருவாருங்களா?” என்று கேட்டார் மணியகாரர். அருகிலிருந்தஇன்னொருவர் அந்த ஊரின் எல்லாம் தெரிந்தஏகாம்பரம்.”ஏனுங்கமாமா! நம்மூரிலே வெடிகார்த்தாலஎந்திரிச்சு மார்கழி பஜனைக்குபோயிட்டு வெனாயகங் கோயில்ல பூசைக்கு வாரதில்லீங்களா!அப்படித்தான்போவாங்களாயிருக்கும்.ஏனுங்க தம்பி!அப்படித்தானுங்களே?”என்றார்.

நான்,’இல்லீங்கய்யா! முன்னமே பேசவிட்டு பதிவு பண்ணீடுவாங்க.தினம்
ஒவ்வொண்ணாப் போடுவாங்க!”என்றதும் அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.” தம்பி!மணியகாரரு கேக்கறதுவேற!நீங்கசொல்றது வேற!ரேடியோவில என்னதாம் பதிவு செய்ஞ்சாலும் தெனோம் பேசினாத்தானே
வரும்!தானாஎப்படி வரும்?”என்ற அவரின் கேள்வியை மானசீகமாய் மார்க்கோனிக்கு அனுப்பிவைத்தேன்.

அதற்கு சில வாரங்கள் முன்புதான் சேலத்தில் “சாதனையில் சிறந்தவர்கள்
முதியவர்களா?இளைஞர்களா?”என்ற பட்டிமன்றம், நடந்திருந்தது.
பெரும்புலவர்.பா.நமசிவாயம்நடுவர்.இளைஞர்களே என்ற
அணியில் பேசிய ஒருவர்,”ரேடியோவை,மார்க்கோனிதானே கண்டுபுடிச்சாரு!அவங்கஅப்பாவா கண்டுபுடிச்சாரு”என்று கேட்டார்.
உடனே குறுக்கிட்ட நமசிவாயம் அய்யா,”அதுசரிய்யா! அவங்க
அப்பாதானே மார்க்கோனியையே கண்டுபுடிச்சாரு”என்று ஒரே போடாகப்
போட்டார்.மார்க்கோனிக்கு வந்த மறுவாழ்வைநினைத்துக் கொண்டே நடந்தேன் .கோயில் வந்துவிட்டது.குகைப்பெருமானுக்குஎழுதிய இன்னொரு
துதிமலர் இது:

மூண்டிடும் தீவினை நாற்புறம் சூழ்கையில்

முருகா என்றழைக்கின்ற திறமும்

மனந்தன்னில் அயர்வெனும் கனல்வந்து ஆள்கையில்

வடிவேலைத் துதிக்கின்ற நினைவும்

தூண்டிலில் புழுவெனத் தவிக்கையில் திருத்தணித்

திசையினைத் தொழுகின்ற கரமும்

துயரெதும் உறுகையில் மயில்மிசை உறுகிற

மலர்க்கழல் படிகின்ற சிரமும்

நீண்டிடும் பகை உடல் வதைக்கவே வருகையில்

கடம்புசேர் தோள்களின் துணையும்

நலியாத செல்வமும் அழியாத இன்பமும்

நலமாகக் கவிபேணும் மதியும்

காண்கிற திசையெலாம் புகழுமுன் திருக்குகை

கண்டாலே கைகூடுமே

கனிவான தென்சேரி அடிவாரம் வளர்பால

தண்டா யுதபாணியே

(தொடரும்)

குகைபெருமான் -4

செஞ்சேரிமலை குகைப்பெருமானுக்கு மற்ற முருகன் கோவில்கள் போலவே ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம்.காலையில் அபிஷேக ஆராதனைகள், இரண்டு மூன்று சொற்பொழிவுகள், மதியம் அன்னதானம் என்று  அமர்க்களப்படும்.

அப்படியொரு ஆடிக்கிருத்திகையின் போது தவத்திரு சிவப்பிரகாச  சுவாமிகள், தமிழ்ப்புலவர் ஒருவர், நான் ஆகியோர் உரைநிகழ்த்தினோம்.  சிவப்பிரகாச  சுவாமிகள்  கோவை  மாவட்டத்தில்  தோன்றியவர். வள்ளலாரின் சன்மார்க்க  நெறியில் ஈடுபட்டு, வடலூரில்  தொடர்ந்து அன்னதானங்கள்  நிகழ்த்தி  வருகிறார். நம்காலத்தில் வாழ்கிற பெரிய அறிஞர்.இப்போது, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட  விபத்து  காரணமாக வேன் பயணம், சக்கர  நாற்காலி என்று அவரின்  பயண  முறைகள்  மாறிவிட்டாலும் எளிவந்த  தன்மையும் இன்முகமும் இன்றும்  மாறவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ராமச்சந்திரன் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, “அதோ வருகிறாரே,அவர்தான் சிவப்பிரகாச சுவாமிகள்”என்று வெங்கிடாஜலக் கவுண்டரின் விரல் நீண்டதிசையில் பார்த்தேன்.

நல்ல உயரம். வெள்ளாடை. மழிக்கப்பட்ட தலை. திருநீறு ஒளிபொருந்திய கண்கள். இதழ்களில் நிலையாகவே தங்கிவிட்ட புன்னகை. எல்லோரிடமும் ஏனுங்க-சொல்லுங்க என்று  “இங்க”  போட்டுப் பேசும் கொங்குதமிழ். அன்று  அவர் தந்திருந்த தலைப்பு, “ஆடியில் தோன்றிய முருகன்”. முருகப்பெருமான் பிறப்பிறப்பு இல்லாத கடவுள். “பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்பார் அருனகிரிநாதர்.இவரோ ஆடியில் தோன்றிய முருகன் என்று தலைப்புக் கொடுத்திருக்கிறாரே என்றுசேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் உட்பட எங்கள் எல்லோருக்குமே குழப்பம். சுவாமிகளிடம் கேட்க முடியாது. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் என்னைப் பார்த்த பார்வையில் “நீங்கள்எவ்வளவோ தேவலை” என்ற குறிப்பு தோன்றியது.
நான் அன்று பாரதியாரின் பாஞ்சாலி சபதம் குறித்துப் பேசினேன். அதற்கும் ஆடிக்கிருத்திகைக்கும்  என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.  அப்போதுதான் பாஞ்சாலி சபதம் படித்து பல பாடல்களை மனனம் செய்திருந்தேன்.  இந்த சம்பந்தம் போதாதாக்கும்!!
ஒருவழியாக சுவாமிகள் பேசத்தொடங்கினார். வள்ளலாரின் வரலாற்றை ஆரம்பித்து,வள்ளலாருக்கு மானசீக குருவாக முருகன் இருந்ததை உருக்கமாக விளக்கி,நிலைக்கண்ணாடியில் வள்ளலாருக்கு முருகன்  காட்சி கொடுத்ததை, “ஆடியில் வந்த முருகன்”என்று கொண்டுவந்து நிறுத்திய போதுதான்சூட்சுமம் புரிந்தது.இயல்பான நகைச்சுவையும்,கூட்டத்தினர் தம்மை மறந்து சிரிக்கும்போது அவர்களுடன் சேர்ந்து கலகலவென்று சிரிக்கும் பாங்கும் சிவப்பிரகாச சுவாமிகளின் இயல்புகள்.

மிகச்சமீபத்தில் சுவாமிகளை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன்.அமைப்பாளர் அவருக்கு சால்வை அணிவித்தார். “நமக்கு அய்யா சாலவை அணிவிச்சாங்க. அதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தானுங்க போடோணும்.
அரசியல்வாதிகளுக்கு ஏன் சால்வை போடறாங்க தெரியுங்களா? இவங்களுக்கு ஏதாவது பிரச்சினை சால்வ்ஆகலையின்னா அவங்களுக்கு சால்வை போடறாங்க”என்று தன்னுடைய பாணியில் நக்கலடித்துவிட்டு
அடுத்த நிமிடமே அபாரமான இலக்கியச்செய்திகளையும பரிமாறிக்கொண்டிருந்தார் சுவாமிகள்.அவரை எனக்கு அறிமுகம்  செய்வித்த  குகைப்பெருமானுக்கு நான் எழுதிய இன்னொரு துதிமலர் இங்கே

நாவினில் இனிக்கின்ற திருப்புகழ் நெஞ்சத்தின்
    நலிவினைத் தீர்க்கின்றது
    ஞானவேற் கந்தனின் திருநீறு,மேனியின்
    நோயினைத் தணிக்கின்றது
வாழ்வினிற் துணையென வஜ்ரவேல் திகழ்ந்தொரு
    வலிமையைத் தருகின்றது
    வளங்களும் நலங்களும் கந்தனின் அடியவர்
     வாசலில் குவிகின்றது
காவியம் நெஞ்சினில் கருப்பெற,கவித்துவம்
     கனிவுடன் வளர்கின்றது
     கருத்தெலாம் முருகனின் கனிமுகம் நிறைந்துயர்
     அருளினைத் தருகின்றது
தாழ்விலா இகநிலை,தளர்விலா மனநிலை
      நின்பெயர் கூற வருமே
       தென்சேரி அடிவாரம் திகழ்கின்ற குகைபால
        தண்டா யுதபாணியே
(தொடரும்)

குகைப்பெருமான் – 3

முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். “சுப்ரமண்யோஹம்” என்று மூன்று முறை சொல்லிவிட்டு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு தள்ளி நிற்கின்றன. இன்றளவும், பள்ளி கல்லூரி மாணவிகள், சாஃப்ட்வேர் யுவதிகளின் கைப்பையில் லேமினேட் செய்யப்பட்ட படமாய் இருக்கிறான்.இன்னொரு புறம், எல்லா தெய்வங்களும் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் “தெய்வ-சிகா-மணி”ஆகவும் இருக்கிறான்.

தேவர்களின் தலைவன் இந்திரன் மகளுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம். வேடுவர்களின் தலைவன் நம்பிராஜன்மகளுடன் காதல் திருமணம். தந்தைக்கே பிரணவத்தை போதிக்கும் ஞானம் ஒருபுறம். ஞானப்பழம் கிடைக்காமல்கோபித்துக் கொள்ளும் குழந்தைத்தனம் மறுபுறம். முருகனை, கந்தபுராணம் போன்றவை மூலமாகவும், அருணகிரிநாதர்-சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற அருளாளர்கள் மூலமாகவும் அறிந்து கொண்டிருந்த எனக்கு, செஞ்சேரிமலை குகை பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் எளிய மனிதர்களின் அப்பழுக்கற்ற பக்தி பிரம்மிப்பாக இருந்தது.

வாழ்வை நடத்தவென்று உழவோ தொழிலோ அவர்களுக்குண்டு. ஒவ்வொரு நாள் விடியலையும் குகைப்பெருமான் வழிநடத்துகிறான் என்ற அப்பழுக்கற்ற நம்பிக்கை, அவர்களை வாழ்வெனும் பெருவெள்ளத்தைக் கடக்க வைக்கிறது.

அந்த குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதிமலர்களின் இரண்டாவது பாடல் இது:

ஆகமம் நான்மறை யாவுமே வேலவன்
அருமையைப் பேசி வாழும்
ஆலய மணிதரும் நாதமும் “ஓம்”என
அருளிசை பாடி யாடும்
தேகமும் எண்ணமும் தேவானை நாதனின்
தளிர்க்கழல் தேடி ஓடும்
திசையெட்டில் தென்றலும் வள்ளி மணாளனின்
திருப்புகழ் பாடல் பாடும்
போகமாம் இல்லறம் கந்தனின் அருளுக்குப்
பாதைகள் போடலாகும்
பார்மிசைப் பற்றுகள் பின்னாளில் சண்முகன்
பார்வையில் மாறலாகும்
ஏகன் அநேகனின் எழில்வளர் புதல்வனே
ஏற்றங்கள் தரும் தெய்வமே
தென்சேரி அடிவாரம் உறைகின்ற குகைபால
தண்டாயுத பாணியேகுகைப்பெருமான் – 2


அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக அங்கே அரங்கேறின. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் இருந்தால், அவர்தான் வரவேற்புரை நிகழ்த்துவார். அவர் கோவையிலுள்ள நன்னெறிக் கழகத்தில் உறுப்பினர். சமய இலக்கியங்கள் ஓரளவு தெரிந்தவர். வெளிப்படையான தலைப்பைத் தந்தால்,
வரவேற்புரையிலேயே பேசுபொருளின் முக்கிய சம்பவத்தைப் போட்டு உடைத்து விடுவார். கிராமப்புற மக்களுக்கு கதையும் பக்தியும் பிரதானம். பாடல்கள்அதன் நயங்கள் எல்லாம், பெரியவர் தேவசேனாபதி போன்ற சிலருக்கு மட்டும்தான்.

 
எனவே, வெங்கிடாஜலக் கவுண்டரிடமிருந்து தப்பிக்க ஓர் உபாயம் செய்தேன்.அதை எந்த நாளும் காத்தேன். யாருக்கும் புரியாத விதத்தில் தலைப்பைக் கொடுத்து விடுவேன். “எது குறித்துப் பேசப்போகிறீர்கள்?” என்று கவுண்டர் கேட்டால் சிரித்து மழுப்பி விடுவேன். தன் வரவேற்புரையிலேயே அதற்கான கண்டனங்களையும் கவுண்டர் பதிவு செய்வார். நான் அசந்தால் தானே!!

ஒருமுறை அவர் வரவேற்புரையில் சலிப்பாக சொன்னார். “சொற்பொழிவாளர் எது பத்தி பேசப்போறார்னு கேட்டேன். “அவனின் அன்னை அரனின் அன்னை” ன்னு தலைப்பு சொன்னாங்க. அது என்ன சமாச்சாரமுன்னு எனக்கே புரியலை. அவுரே பேசுவாரு. கேளுங்க . நன்றி வணக்கம். “காரைக்காலம்மையார் பற்றிய பேச்சுக்குத்தான் அப்படியொரு தலைப்பு தந்திருந்தேன். தன்னை மணந்த கணவன் உடன்வாழ அஞ்சி, மனைவியையே தாயாகக் கருதிவிடுகிறான். பேயுருக் கொண்டு கயிலாயம் போகும் காரைக்காலம்மையாரை யாரென்று உமையம்மை வினவ, “வருமிவள் நம்மைப்பேணும் அம்மைகாண் என்கிறார் ஈசன். இதுதான் விஷயம். இதுபோல் புதிது புதிதாக தலைப்புகள் தரத் தொடங்கியபின் ஒவ்வொரு மாசமும் ஒரு விடுகதை கேட்கத் தயாராவதுபோல் பிரியமுடன் காத்திருக்கத் தொடங்கினர் செஞ்சேரிமலை கிராமத்து மக்கள்.  


 முருகப்பெருமானின் ஆறுமுகங்களைச் சொல்லும் ஏறுமயில் ஏறிவிளையாடும்முகம் ஒன்றே என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதி மலர்களில் முதல் பாடல் இது:

பால்காட்டி மிளிர்கின்ற  புன்னகை மலர்முகம்
 பொலிவாடும் ஞானநிலையம்

பயம்நீக்கி ஜெயமெலாம் வழங்கிடும் ஒளிமுகம்

பகைவீழ்த்தும் பாலவுருவம்

வேல்காட்டி சமரிடை வந்திடும் திருமுகம்
வீரத்தின் மூலவடிவம்  
வள்ளிதெய்வானையர் வழிபடும் அருள்முகம்  
வினைதீர்க்க நின்ற சொரூபம்
கால்காட்டி ஆட்கொள்ளும கருணையின் மதிமுகம்
குன்றேறி நின்ற திலகம்
 

கனிவான முத்தமிழ் காத்திடும் கலைமுகம்  
புலமையின் ஞான உதயம்

சேல்காட்டும் சுனைவளர் தென்சேரி அடிவாரம்
உறைகின்ற அருட்தெய்வமே
சிந்தைதனில் குடியேற வந்தருள்க 
குகைபால
தண்டாயுதபாணியே  

(தொடரும்)