இப்படித்தான் ஆரம்பம்-32

கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார்.
இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை
இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார்.

ஆனாலும் தொடக்க காலந்தொட்டே சில குறுங்காவிய முயற்சிகளைக் கவிஞர் மேற்கொண்டுள்ளார்.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, மாங்கனி மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி.

இவற்றில் முன்னே பழுத்தது மாங்கனி. கல்லக்குடி வழக்கில் தண்டிக்கப்பட்டு 1954 ல் சிறையிலிருந்த போது ஆறு நாட்களில் இதை எழுதினாராம் கவிஞர். சிறையிலிருக்கும் போது கடிதம் கட்டுரை காவியம் என்று பலவும் எழுதும் பழக்கம் தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்டதுதானே. மோரிய  மன்னனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த போரில் மோரிய மன்னனுக்கு ஆதரவாய் சேரன் செங்குட்டுவன் படையெடுத்ததை மட்டுமே அடிப்படையாக்கி, மாங்கனி என்ற ஆடல்பெண்ணையும் அடலேறு என்ற நாயகனையும், மோகூர் மன்னனின் மகள்களாக தென்னரசி-பொன்னரசி ஆகிய கற்பனைப் பாத்திரங்களையும் படைத்து கவிஞர் உருவாக்கிய குறுங்காவியமே மாங்கனி.

காவியத்தின் தொடக்கத்தில், கனக விசயர் முடித்தலை நெரித்த நாளை சேரன் செங்குட்டுவன் கொண்டாட அங்கே மாங்கனி நடனமாடுகிறாள். மிக  மெல்லியளான மாங்கனி நடனமாடிய காட்சியை, காற்றுக்கு முருங்கைமரம் ஆடுவதை உவமையாக்குகிறார்.

 காற்றுக்கு முருங்கைமரம் ஆடல்போலும்
கடலுக்குள் இயற்கைமடி அசைதல் போலும்
நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்
நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்

அவளைப் பார்த்து மயங்கி நின்றான் அடலேறு. பொதுவாக ஆடல்பெண்களில் தவறான மனப்பான்மை கொண்டவர்கள் மயங்கி நின்றவர்களை இனங்கண்டு மயக்க முற்படுவார்கள்.ஆனால் மாங்கனி அப்படியில்லையாம்.

மூட்டைமுடிச் சத்தனையும் கட்டிக் கொண்டு
முதிர்தாயின் பின்னந்த மில்லை சென்றாள்
வேட்டையிலோர் புலிவீழந்தது அறியாள் அன்னாள்
வேடர்குணங் கொண்டங்கு வராததாலே
போனவளையே பார்த்துக் கொண்டிருந்த அடலேறு, அவளுடைய கால்சுவட்டைத் தேடினானாம்.

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்
தென்றலது போனதற்கு சுவடா உண்டு
கைத்திறத்தால் தரைதடவிப் பார்த்து அன்னாள்
கால்பட்ட இடத்திலிளஞ் சூடு கண்டான் என்பார் கவிஞர்.

மோகூர் மன்னனுக்குத் துணையாக சேரனின்  படையை  அடலேறு  தலைமையேற்று  நடத்திச் செல்கிறான். போர்வீரர்களை நடனமாடி மகிழ்விக்க ஆடல்மகளிரை அழைத்துச் செல்லும் அந்நாளைய வழக்கப்படி மாங்கனியை அழைத்துச் செல்கிறான் அடலேறு. அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. போர்க்களத்தில் வில்லன்கள் முளைக்கிறார்கள். திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதுபோல் போர்க்களத்தில் மாங்கனியைத் தொலைத்து விடுகிறான் அடலேறு. போரில் வெற்றி பெற்றதும் படைத்தலைவனுக்கு தன் மாளிகையில் விருந்து வைக்கிறான் பழையன். இளவரசியர் தென்னரசி-பொன்னரசி இருவரும் உணவையும், கனிகளையும்,காதலையும் பரிமாறுகிறார்கள். முக்கனிகளில்வாழையும் பலாவும் உண்டபின் மாங்கனியை எடுக்கிறான். உடனே காதலி நினைவு வருகிரது. தொட்ட கனி தூக்காமல் விட்டகனி தேடி ஓடுகிறான்.

கதை இருக்கட்டும். இந்தக் காட்சியில் விருந்துக்கு  வந்தவன்  சொல்லாமல்  கொள்ளாமல்  வெளியே ஓடினால் வீட்டிலிருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?   தென்னரசி-பொன்னரசி-பழையன் ஆகிய மூவரின் வருத்தத்தை ஒரு விருத்தத்தில் அழகாகக் காட்டுகிறார் கவிஞர்.

 தென்னரசிக் கேதொன்றும் புரியவில்லை
 தேன்குறையோ பால்குறையோ என்று எண்ணிப்
 பொன்னரசி தனைப் பார்த்தாள்-அவளோ அங்கு
 பூத்திருந்த மலர்போன வழியைப் பார்த்தாள்
 கன்னலினை மறந்தோமென் றெண்ணித் தந்தை
 கவலையுடன் கோபித்தே மகவைப் பார்த்தான்
 பொன்னை ஒளி மறந்திருந்து தேடி ஓடும்
புதுக்கதையை அவரெங்கே அறிவார் பாவம்!

தென்னரசி அடலேறு திருமண ஏற்பாடுகளை சேரன் முன்னின்று செய்கிறான். மாங்கனி என்ன ஆனாள் எப்போது வருகிறாள் என்பதெல்லாம் கதைப்போக்கில்  கண்டுகொள்ள வேண்டியவை. ஆனால்,கல்யாணக்
கச்சேரியை வர்ணிக்கிறார் கவிஞர்.

“பிப்பீ”என்றார் நாதஸ்வரத்துக் காரர்
பெருந்தட்டுத் தட்டிவிட்டார் மேளகாரர்
எப்போதும் போலிருந்தார் ஒத்துக்காரர்.

கல்யாண வீடுகளில் எல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வரும். கவிஞருக்கு மாங்கனி பெரும்புகழ் பெற்றுத்தந்ததே தவிர அவரின் படைப்பாளுமைகளில் விளைந்த மற்ற கனிகளுடன் ஒப்பிடும் போது புகை போட்டுப் பழுக்க வைத்தது போலத்தான் இருக்கிறது மாங்கனி.

ஏறக்குறைய இதே கதைக்களம் கொண்டது ஆட்டனத்தி ஆதிமந்தி. வரலாற்றுப் பின்புலம் கொண்ட கதை. சேர மன்னன் ஆட்டனத்தி,மருதி-சோழ இளவரசி ஆதிமந்தி ஆகியோர் இடையிலான முக்கோணக் காதல் இது. மருதியைக் காதலித்தாலும் சூழ்நிலை காரணமாய் ஆதிமந்தியின் காதலை ஏற்க வேண்டிய சூழல் ஆட்டனத்திக்கு. தன் போருக்கு ஆதிமந்தியின் தந்தை சோழன் உதவியது மட்டுமே காரணமா? காவியத்தில் இந்த இடத்தைக் கவிஞர் கையாளும் விதம் சுவையானது.போர் முடிந்த ஓர் அந்திப் பொழுதில் ஆதிமந்தி ஆட்டனத்தியைச்  சந்திக்கிறாள்.

மாலை மறைந்தது அந்தி எழுந்தது 
மக்களும் இல்லுறச் சென்றுவிட்டாள்
சோலையிலே ஆதிமந்தி மலர் 
சூடுற சேரனைத் தேடுகிறாள்
வாலைக் குமரியர் எண்ணிவிட்டால் உயர்
வானமும் கைப்படத் தாழுமன்றோ
சேலை நெருக்கிய சிற்றிடையில் கரம்
சேர்க்கப் பிறந்தவன் வந்துவிட்டான்

மருதியும் ஆட்டனத்தியும் ஒருவரை ஒருவர் விரும்புவது ஆதிமந்தி அறிந்த ஒன்றுதான். ஆனாலும் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளக் கிடைத்த  வாய்ப்பை மிகச்சரியாய் பயன்படுத்துகிறாள். அதுசரி, மருதியை விரும்பும் ஆட்டனத்தி இதற்கு உடன்பட்டது எப்படி? மிகச் சுலபமாக இதற்கு
பதில் சொல்கிறார் கவிஞர்.

நெஞ்சில் இருப்பது கைக்குக் கிடைத்தபின்

நேரங் கழிப்பதை யார்விழைவார்
கஞ்ச மலரடி தூக்கிவைத்தாள் அவள்
காதலன் மார்பினில் பாய்விரித்தாள்
வஞ்சமகன் -அட-வஞ்சிமகன் மலர்
வஞ்சியில் உள்ளதை எண்ணவில்லை
கொஞ்சக் கிடைத்தது நெஞ்சம் துடித்தது
கொட்டி எடுத்துயிர் கொண்டுவிட்டான்
கவிஞர் பொதுவாக சொல்ஜாலங்களை நம்புபவர் அல்லர். ஆனாலும் ஆட்டனத்தி ஆதிமந்தியில் சாதி என்ற சொல்லை வைத்து ஒரு விருத்தத்தை வலியப் புனைந்தார்.

“நாற்சாதிப் பெண்வகையில் அவளே அந்த
 நற்சாதிப் பதுமினியாள்-மெல்லத் தூக்கும்
காற்சாதி மலர்ச்சாதி-கண்ணின் சாதி
கருங்குவளைப் பூச்சாதி-கன்னச் சாதி
பாற்சாதி கை காந்தள் படைப்பின் சாதி
மேற்சாதி கீழ்ச்சாதி எதிலும் சேரா
வேற்சாதி இவள்சாதி என்றான் வேந்து”.

இருபொருள் தரும் சொல்ஜாலங்களையே கவிஞரிடம் நிறையக் கேட்டிருக்கிறோம். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் சிரித்தேன்,  என்று
பல பாடல்கள். இந்த சாதிச் சிலம்பம் அவருடைய மற்ற ஜாலங்களுக்கு முன்னே சோபிக்கவில்லை. ஆனால் மன்னாதி மன்னன் என்ற பெயரில்
இதுவே திரைப்படமாக வந்தது. வசனமும் பாடல்களும் கவிஞர்தான்.
கண்கள் இரண்டும் இங்கே உன்னைக் கண்டு பேசுமோ போன்ற
அற்புதமான பாடல்கள் அந்தப் படத்தில்தான்.

மாங்கனி, ஆட்டனத்தி-ஆதிமந்தி, இரண்டுமே ஏறக்குறைய ஒரேமாதிரிதான்

முடிகின்றன. காவிரியில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்படுகிறான்.அவனைத்தேடி  ஆதிமந்தியும் ஆற்றோடு செல்கிறாள். மாங்கனியிலும் மாங்கனி ஆற்றில் விழ அடலேறு பின்னால் வந்து விழுகிறான்.
மாங்கனியுடன் ஒப்பிடும்போது கதைக்களம் கவிவளம் இரண்டிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி மேலோங்கியே இருக்கிறது. இரண்டும் குறுங்காவியங்கள் என்ற அளவில் அமைந்தன.ஆனாலும்,ஆற அமர
காவியம் படைக்க விரும்பினார் கவிஞர்.அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது…ஏசு காவியம்!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம் – 31

கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய களங்களில் கவியரங்கமும் ஒன்று. கவியரங்கம் என்னும் வடிவத்தை மக்கள் மத்தியில் கொண்டு  சென்றவர்களில் கவிஞரும்  கலைஞரும்  குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்ற பிறகு அங்கும் இந்த  வடிவத்தை  பிரபலப்படுத்தினார்.  கவியரங்குகளில் கவிஞரால் பாடப்பெற்று பல ஊர்கள்  பாடல் பெற்ற தலங்கள் ஆயின. தொன்மையான  சிறப்புகள்  கொண்ட  மதுரையைப்  பாடுகிற போதெல்லாம் கவிஞருக்குள் உற்சாகம்  பொங்கிப்  பிரவாகமெடுத்தது. அது  புதிய  கற்பனைகளைக்  கொண்டு  சேர்த்தது. நக்கீரனை மதுரையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தது  பற்றி  திருவிளையாடல்  புராணம் பேசுகிறது. ஏன் சிவபெருமான் எரித்தார் என்பதற்கு கவிஞர், பரஞ்சோதி முனிவரும் சொல்லாத காரணமொன்றைச் சொல்கிறார்.

‘மங்கையர்தம் கூந்தலுக்கு வாசமுண்டோ

மணமென்பது இயற்கையிலே வருவதுண்டோ
 தங்கமலர்க் கண்ணாரைத் தழுவும்போது
 தாய்ப்பாலின் வாசந்தான் வருமல்லாது
 பொங்கிவரும் பூமணத்தை நுகர்ந்ததுண்டோ
 பொய்யென்று நக்கீரப் புலவன் கூற
 தங்கட்சி தோற்றதெனத் தலைகுனிந்த
தமிழ்ச்சொக்கன் திருக்கோயில் தழைத்த நாடு’
தோல்வி வருத்தத்தால் சிவபெருமான் தலைகுனிந்த போது நெற்றிக்கண்ணின் நெருப்பு நக்கீரர் மேல் பட்டு விட்டதால் அது ஒரு விபத்து மட்டுமே என்பதுகவிஞரின் சுவையான கற்பனை. மதுரையில் நடைபெற்ற கவியரங்கில் அவையடக்கம் பாடுகிறபோது கூட மதுரைக்காரர்கள் காதலின் மகத்துவத்தைப் பாடுகிறார். காதலியை முத்தமிடும் போது காதலர்கள் மறக்காமல், முன்னே விழும் கூந்தல்மலர்களைப் பின்னுக்கு ஒதுக்கி விடுவார்களாம்.

பூ-வாடுமென்று புறமொதுக்கி முத்தமிடும்
மூவாத முல்லை முறுவலினார் காதலிலே
பாவாட விடுகின்ற பாண்டியனார் பொன்னாட்டில்
நாவாடத் துணிகின்ற நாயேனை மன்னிப்பீர்  என்கிறார் கவிஞர்.

அவையடக்கம் கூட ஒரு மரபு கருதித்தான்.
அவையடக்கம் சொன்னேன் -ஆனால் எனக்கிந்த அவை அடக்கம் என்று உடனே ஒரே போடாகப் போட்டு விடுவார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்குநாட்டுக்கு வந்தபோது யாரோ அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.
ஊர்களோ பட்டி தொட்டி,உண்பதோ கம்பஞ்சோறு,
பேர்களோ பொம்மன் திம்மன் பெண்களோ பொம்மி திம்மி
காருலாம் கொங்கு நாட்டைக் கனவிலும் நினைக்கொணாதே
என்று ஏசிவிட்டுப் போய்விட்டார்.அந்தப் பழியைக் கவிஞர்தான் துடைத்தார்.

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வலையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளையாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவராக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ்மூதாட்டி
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம் பணிவெல்லாம் கோவையில்தான்

ஏனுங்க!என்னவுங்க!ஆமாமுங்க!
இருக்குங்க !சரியிங்க!பாக்க வாங்க!
மானுங்க!வேணுங்களா!வாங்கிக்கோங்க!
மலைப்பழமும் இருக்குங்க !எடுத்துக்கோங்க!
தேனுங்க!கையெடுங்க!சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்தமுங்க!
ஏனுங்க எழுந்தீங்க உக்காருங்க
ஏபையா பாயசம் எடுத்துப் போடு

அப்பப்பா கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும் வயிறும் வேண்டும்
தப்பப்பா கோவைக்கு வரக்கூடாது
சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்

பழங்குடியினர் தலைவன் கோவன் பெயரால் கோவை கோவன்புத்தூர் என்று பெயர் பெற்று கோயம்புத்தூரானது.ஆனால்சேரநாட்டு இளங்கோ துறவு பூண்டுநாட்டின் எல்லையில் ஊரமைத்த புதியஊரே கோவை என்றும் இளங்கோவன் புத்தூரே கோவன்புத்தூர் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் கவிஞர்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம்புத்தூ ராயிற்று
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று

இதற்கு ஆதாரமே கிடையாதே,தவறாயிற்றே என்று யாராவது சொன்னாலும்
கவிஞர் கவலைப்படுவதாயில்லை .
என்கருத்தை யான்சொல்வேன்;தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக என்று தாண்டிப் போய்விட்டார்.
கவிஞரால் பாடப்பெற்ற ஊர்களில் புதுச்சேரியும் ஒன்று.

கம்பன் கழகம் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது.
மதுச்சேரி என்றே மாகவிகள் நினைத்திருந்த
புதுச்சேரி வாசல் புலவர்களின் தலைவாசல்
மதித்தேறி வந்த மாகவிகள் தம்மையெலாம்
அணைத்தோர்கள் வாழும் அழகுநகர் புதுச்சேரி!
பாரதியும் இங்கேதான் பாடித் திரிந்தானாம்
பாரதிதாசன் இங்கே பாண்டியனாய் வாழ்ந்தானாம்

 என்றெல்லாம் பாண்டியின் பெருமைகளைக் கவிஞர் பதிவு செய்தார்.

 இந்தியா விடுதலை பெற்று 25 ஆண்டுகள் ஆனபோது கலைஞர் தலைமையில் வெள்ளிவிழா கவியரங்கம் நடந்தது.ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு  தியாகியைப்  பற்றி கவிதை வாசித்தார்கள்.கவிஞருக்குத் தரப்பட்ட
தலைப்பு,”பெயர் தெரியாத தியாகிகள்”.அவருடைய மிக முக்கியமான கவிதைகளில் இதுவும் ஒன்று.

“ஊரறியோம்!பேரறியோம்!உறங்கிவிட்ட கதையறிவோம்
 சீரறிவோம்!திறமறிவோம்!தியாகத்தின் சிறப்பறிவோம்!
ஆங்காங்கே மாண்டவர்கள் ஆயிரம்பேர் என்பதனால்
 அத்தனைபேர் வரலாறும் அறிவதற்கு வசதியில்லை!
 தூங்காமல் தூங்கிவிட்ட சுதந்திரப் பூங்கன்றுகளைத்
 தாங்காமல் தாங்கிவிட்ட தாயகத்து மண்ணறியும்!
என்று தொடங்கும் கவிதையில்,சுதந்திர இந்தியாவை ஒரு மாளிகையாக
உருவகிக்கிறார் கவிஞர்.பெயர் தெரிந்த தலைவர்களும்,தியாகிகளும் அதன்
மாடமாய்,நிலைவாசலாய் தூணாய் ஒளிவீசுகிறார்கள்.ஆனால் பெயர்
தெரியாத தியாகிகள்?

“இன்றிங்கே வானுயர எழுந்திருக்கும் மாளிகைக்கு
 தன்னெலும்பைத் தந்தவர்கள் சதைரத்தம் கொடுத்தவர்கள்
அஸ்திவாரங்கள் என அடியினிலே தூங்குகிறார்!

மாளிகைக்கு மையிடுவோம்;மாணிக்கக் கதவிடுவோம்;
ஆங்காங்கே ஓவியங்கள் அழகழகாய்த் தீட்டிவைப்போம்;
கண்ணாடி பதித்திருப்போம்;கலைவிளக்கும் ஏற்றிவைப்போம்
முன்னாலே முகப்பெடுத்து முத்துப்போல் பந்தலிட்டுக்
கண்ணாலே பார்த்தாலே கவி பிறக்குமாறு செய்வோம்
அத்தனையும் மாளிகைக்கே;அலங்காரம் மாளிகைக்கே;
அஸ்திவாரங்களுக்கு அலங்காரம் யார்புரிவார்?

தாங்குகின்ற பூமியிது தாங்கியதே நம்மையென்று
தங்கப் பாவாடை கட்டித் தளதளக்கப் பார்த்தோமா?
மண்தானே மண்ணென்று மாறி மிதித்திருப்போம்.
அப்படித்தான் அரசியலின் அடிப்படையாய் நின்றவரும்
செப்பரிய பேர்கூடத் தெரியாமல் தூங்குகிறார்;
தாயார் அழுதிருப்பார்;தம்பியர் துடித்திருப்பார்
வாயார முத்தமிட்ட மனையாளும் மாய்ந்திருப்பாள்;
நாடே அழவேண்டும் நல்லவர்கள் செத்ததற்கு
யாரே அழுதார்கள் அஸ்திவாரங்களுக்கு !

உணர்ச்சிமயமான இந்தக் கவிதையில் விடுதலை வீரர்களின் வரலாற்றைப்
பாடமாக வைக்காமல் வெள்ளையர் பற்றியே வரலாறுகள் இருப்பதைக் கவிஞர் இடித்துரைக்கிறார்.

“மண்ணாண்ட க்ளைவ்முதல் மவுண்ட்பாட்டன் பிரபுவரை
 படிக்கத்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்றவர் ,
“ஊரெங்கும் தேடுங்கள்;உழைத்த கதை கேளுங்கள்
 யாரென்று பாருங்கள்;அவர்பெயரைக் கூறுங்கள்
நானவரைப் பற்றி நாலுவரி எழுதுகிறேன்
வானவரை வந்து வாழ்த்துரைக்கச் சொல்லுகிறேன் என்றோர் உறுதிமொழியும் வழங்கினார்.

நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவில்,கவி.கா.மு.ஷெரீஃப் தலைமையில்
நவரசக் கவியரங்கம் நடந்தது.கவிஞருக்குத் தரப்பட்ட தலைப்பு,’அழுகை’.

பிறப்பிலும் அழுதேன் ;வந்து பிறந்தபின் அழுதேன்;வாழ்க்கைச்
சிறப்பிலும் அழுதேன்;ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்று
மறைப்பிலும் அழுதேன்;உள்ளே மனத்திலும் அழுதேன்;ஊரார்
இறப்பிலே அழுவதெல்லாம் இன்றுவரை அழுதுவிட்டேன்
என்று தொடங்கும் அமர கவிதையை அந்த அரங்கில் கவிஞர் படைத்தார்.
சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள்-அன்று
நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள்-காம
ராசரைப் பெற்ற தாயும் நாட்டிற்கே பெற்றாள்-என்னை
ஆசையாய்ப் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள் 

கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல

மண்வழி வரலாம் பெற்ற மகன்வழி வரலாம் சேர்ந்த
பெண்வழி வரலாம் செய்த பிழைவழி வரலாம் ஆனால்
நண்பர்கள் வழியிலேதான் நான்கண்ட கண்ணீர் உப்பு

தொட்டபின் பாம்பு என்றும் சுட்டபின் நெருப்பு என்றும்

பட்டபின் உணர்வதே என் பழக்கமென்றான பின்பு
கெட்டவன் அழுகைதானே கெடுவதை நிறுத்த வேண்டும்
பட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு

கண்ணீரைத் தொட்டுக் கவிஞர் எழுதியஇந்த வரிகள் காலத்தின் வெய்யிலிலும்
உலராத உன்னதம் கொண்டவை .

இன்னொரு நண்பரின் பிறந்தநாள் கவியரங்குகளிலும் கவிஞர் பாடினார். கலைஞர் என் காதலி என்று பாடிய கவிதை, கலைஞர் பிறந்தநாள் கவியரங்கக் கவிதைகள் பலவற்றிலும் சிறந்தது.

கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள்
பன்னிநான் கேட்டபோது பராசக்தி வடிவம் என்றாள்
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரமென்றாள்
தந்திரம் அறிவாள் மெல்ல சாகசம் புரிவாள் மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் நானும்
பந்தயம் போட்டுப் பார்த்து பலமுறை தோற்றேன் என்ன
மந்திரம் போட்டாளோஎன் மனதையே சிறையாய்க் கொண்டாள்

என்று பாடினார்காலம் மாறியது.தமிழக அரசியல் காட்சிகளை அரங்கமும் அந்தரங்கமும் என்று எழுதிய சில நாட்களிலேயே எம்.ஜி.அர்.ஆட்சியில்
அரசவைக் கவிஞரானார் கவிஞர்.

மன்னர் இவரொருநாள் மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான் அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசென்று கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான் உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகிற வீதிகளும்
எண்ணும் பொருளும் ஏற்றதோர் தொழில்நலமும்
செந்தமிழால் வந்த திருவென்றே பெற்றவன்நன்
அந்த மொழியின்றி அடுத்தமொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார்;இவர்பெருமை யார்க்கு வரும்!
பொன்மனத்துச் செல்வர் புரட்சித் தலைவரிவர்
தமிழரில்லை என்றால் தமிழுக்கே களங்கம் வரும்  
 என்று எம்.ஜி.ஆரை,கவிஞர் பாடிய கவியரங்கக் கவிதையின் தலைப்பு
“தமிழோடிருப்பவர்கள்”.

மக்கள் தருகின்றார் மகத்தான ஆதரவு
தக்கதொரு ஆதரவால் தமிழ்நாட்டில் நல்லாட்சி
ஆயிரமாய்ப் பகைவரெல்லாம் ஆட்டிவைக்கப் பார்த்தாலும்
 ஆயுட்காலம் முழுதும் அமைச்சரவை மாறாது
என்று எம்.ஜி.ஆருக்கு கவிஞர் மொழிந்த வாழ்த்து,அப்படியே பலித்தது.

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-30

விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு  தருணங்களிலும், சந்நதம்  கொண்டு  சங்கெடுத்து  முழங்கினார்  கவிஞர். தன்னுடைய கவிதைகளின்  மூன்றாம் தொகுதியை  மங்கலமானதொரு வாழ்த்து கவிதையுடன் தொடங்குவார்.

பெற்றவர் வாழ்க!பெரியவர் வாழ்க!
உற்றவர் வாழ்க !உறவினர் வாழ்க!
கொற்றவன் கோட்டைக் கொடிமரம் வாழ்க!
கொல்புலித் தானை கூட்டங்கள் வாழ்க !
தானைத்தலைவர் தனித்திறம் வாழ்க!
தலைவர் அமைச்சர் சால்புற வாழ்க!

என்று வாழ்த்து மலர்கள் வரிசையாய் பூத்துக் குலுங்கும் அந்தக் கவிதையில்,
எங்கள் பகைவர் எமையணுகாமல்
தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க என்று பாடியிருப்பார் கவிஞர்.
ஆனால் சீனா படையெடுத்து வந்துவிட்டது. அதே தொகுதியில் கவிஞர் எழுதுகிறார்..

எங்கே பகைவன்?எங்கே பகைவன்?ஏறிவிட்டானா மலைமேலே?
அங்கே பறந்து அவன்தலை கொய்து பங்குவைப்போம் வா பதறாதே!
திங்களும் வானில் திரிகிற வரையில் எங்களுக்குரிமை இந்நாடே-இதில்
தங்கள் உரிமைச் சாத்திரம் சொல்வோர் எங்கு வந்தாலும் மண்ணோடே!
யாரது வீட்டில் யாரது பாட்டு?சோரர்கள் வலையில் விழமாட்டோம்-இனி
வேறதிகாரம் பாரதநாட்டில் வேர்பிடிக்காது! விடமாட்டோம்!

 மக்கள் மத்தியில் சீன எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் கவிஞரின்
கவிதைகள் பெரும்பங்கு வகித்தன. புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் பாடலின்
மெட்டில் சீன எதிர்ப்புக் கவிதை எழுதினார் கவிஞர்

சூ சூ சூ
சூ என் லாய்
தூ தூ தூ
மா சே தூ

சூடுபட்ட மாடுபோன்று
நாடுவிட்டு நாடுவந்து
கேடுகெட்ட வேலைசெய்யும் சூ சூ சூ

கோடுவிட்டு மேலும்வந்து
கோழைபோல ஓய்வு கொண்டு
கோட்டைவிட்டு ஓடப்போகும் சூ சூ சூ

தங்கள் சோறு தீர்ந்ததென்று
தரமிழந்து நெறியிழந்து
எங்கள்சோறு தின்னவந்த சூ சூ சூ

அப்பனுக்குப் பிள்ளையென்று
தப்பிவந்து பிறந்து இன்று
அடுத்த வீட்டில் சாகவந்த 

சூ சூ சூ சூஎன் லாய்

தூ தூ தூ மா சே தூ.

அத்தோடு நிற்கவில்லை கவிஞர்.ஊரடங்கு உத்தரவு போல,பாரடங்கு உத்தரவே போட்டார்.

ஏ வெண்ணிலவே! சீனத்து வானில்நீ விளங்காதே
காற்றே நீ சீனத்துக் கன்னியரைத் தழுவாதே!
மேகமே !சீனத்தில் வெள்ளிமழை பொழியாதே!
பொன்மலரே!சீனத்தில் பூத்துக் குலுங்காதே!என்று நீளும் அந்தக்கவிதை.

கேட்டிலும் உண்டோர் உறுதி என்றார் திருவள்ளுவர். அதேபோல் இந்த யுத்தத்தாலும் ஒரு நன்மை விளைந்தது என்கிறார் கவிஞர். இந்தியாவில்  ஆங்காங்கே கேட்ட பிரிவினைக் குரல்கள் ஓய்ந்து எல்லோரும்
ஒன்று சேர்ந்தனராம். நேருவை விமர்சித்தவர்களும் அவரது வலிமையினை உணர்ந்தனராம். ஒற்றுமைக்காக குழுவமைத்து பாரதம் தடுமாறிய போது படையெடுத்ததன் மூலம் ஒற்றுமையை உருவாக்கிய சீனத்துக்கு நன்றி சொல்கிறார் கவிஞர்.

தம்மிடையே சண்டையிட்டுத்
தலைகுனிந்த இந்தியரை
இம்மெனும் முன் சேர்த்துவைத்தசீனமே-நீ
ஈந்ததுதான் இன்றுவந்த ஞானமே

குழுவமைத்து ஒருமைதேடிக்

கொண்டிருந்த பாரதத்தில்
படையெடுத்து ஒருமை கண்ட சீனமே-இது
பாவத்திலே தர்மம்கண்ட ஞானமே

நேருவென்ன நேருவென்று

நீட்டி ஆட்டிப் பேசுவோரும்
நேருவை வணங்கவைத்த சீனமே-இது
நேரம்பார்த்து நீகொடுத்த ஞானமே

என்று சீனாவைப் புகழ்வதுபோல் ஒற்றுமையில்லா உள்ளங்களை இடித்தும் காட்டினார் கவிஞர். கவிஞரின் தேசப்பற்று, கவிதையோடு நிற்கவில்லை. “இரத்தத் திலகம்”என்று திரைப்படம் ஒன்றையும் எடுத்தார்.காமராஜரிடம் போட்டுக் காட்டிய போது, “படம் ரொம்ப நீளமா இருக்கு. இதை இரண்டு படமா எடுக்க முடியாதா?”என்று கேட்டாராம்.

பண்டைய காலத்தில் போர்க்களத்திற்கே நேரில் சென்று கவிஞர்கள் யுத்தத்தை விவரித்து பரணி எழுதுவது வழக்கம்.அப்படி எழுதப்பட்டதுதான் கலிங்கத்துப் பரணி. 1965ல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது கவிஞர் அப்படியொரு பரணி எழுதினார்.இந்திய நாட்டின் ராணுவம் உணர்ச்சி பொங்கதேசிய  கீதம்  பாடி  புறப்பட்டதில்  தொடங்கி யுத்தம் நடந்த விதம் நம் மனக்கண்ணில் தோன்றும் விதமாக கவிஞர் விவரித்திருப்பார்.

தாகூர் வடித்துவைத்த தாய்வணக்கப் பாப் பாடி
லாகூரை நோக்கி நமதுபடை முன்னேற்றம்!
சிந்துவிலோர் சேனை !சியால்கோட்டில் மறுசேனை
சந்துவழிப் பகைவந்த ஜம்முவிலோர் பெரும்சேனை
வந்துவிளையாட வந்த வஞ்சகரை நாள்முழுதும்
 பந்து விளையாடுதல்போல் பாய்ந்து விளையாடுதம்மா என்று இந்தியப் படையின் நிலையையும்

தொட்டான்;தொடப்பட்டான்;துப்பாக்கி தூக்கிவந்து
 சுட்டான்;சுடப்பட்டான்;தொலையாப் பெரும்படையை
விட்டான்;விடப்பட்டான்;வேற்றகத்தே தன்கொடியை
நட்டான்;நடப்பட்டான்;நாளாக நாளாகக்
கெட்டானேயன்றிக் கிஞ்சித்தும் வாழவில்லை என்று பாகிஸ்தான் படையின் நிலையையும் பாடுகிறார் கவிஞர்.

எல்லை கடந்துவந்து எங்கள் தலைமீது

வெள்ளைப் புறாக்களைப்போல் வீதிவெளி வானத்தே
பறந்தவரை எங்கள் பாரதத்தின் தளபதிகள்
காக்கை சுடுவதுபோல் காடுவெட்டிப் போடுதல்போல்
சுட்ட கதைசொல்லி சுவைக்காத மக்களில்லை என்ற அவரின் வரிகள்
அந்தக் கவியரங்கில் பெரும் ஆரவாரத்துடன் எதிர்கொள்ளப்பட்டன.

இந்துஸ்தான் அன்று இட்டுவைத்த பிச்சையினால்
வந்தஸ்தான் தானே மதியிழந்த பாகிஸ்தான்
தந்த ஸ்தான்தன்னை சரிபார்க்க இப்பொழுது
அந்த ஸ்தான்நோக்கி அனுப்பிவிட்டோம் சேனைகளை
என்று கவிஞர் எழுதிய வரிகளை நினைத்துப் பார்க்கிற போது
கிரிக்கெட் பகைவர்களாக மட்டுமே பாகிஸ்தானைப் பார்க்கிற புதிய
தலைமுறைக்கு பழைய வரலாற்றின் சுவடுகள் சற்றே தெரிய வரும்.

காளையர் வருக!கன்னியர் வருக!
கைவாள் மறவர் களம்புக வருக!
வேளை இதுவே !வேறொன்றுமில்லை!
வீரம் புலப்பட விரைந்து புறப்படு!
கோடி அகதிகள் கொட்டிய கண்ணீர்
நீதி கேட்கிற நேரம் இதுதான்!
பதினேழாண்டு பட்ட பாட்டுக்கு
பதிலடி கொடுக்க பாரதம் எழுந்தது!
பஞ்சாய்ப் பறக்கவே படைகொண்ட மூடன்
பஞ்சாப் எல்லையில் படைகொண்டு வந்தான் என்பதும் பாகிஸ்தான் போரின்போது கவிஞர் எழுதிய பாடல்களில் ஒன்று.

வங்காளப் பிரிவினையின்போது நடந்த அட்டூழியங்களைக் கண்டபோதும் கவிஞரின் போர்க்குணம் பொங்கியெழுந்தது.சமூகச்சிறுமைகள் கண்டு மனம் பொறாமல் தான் வழிபடும் கடவுளையே சினந்து கொள்வது தமிழ் படைப்புலகில் உயர்ந்த நிலைகளில் வெளீப்பட்டிருக்கின்றன. “கெடுக உலகியற்றியான்” என்று திருவள்ளுவர் கூடத் திட்டியிருக்கிறார். கோவை மாவட்டம் அவிநாசியருகே உள்ள பண்டைய திருத்தலம், திருமுருகன்பூண்டி. அதனருகே சுந்தரமூர்த்தி  நாயனார்  நிறைய  பொன்பொருளோடு   வந்த சமயம் சிவபெருமான் பூதகணங்களையே  வேடுவர்  ரூபத்தில் அனுப்பி  கவர்ந்து  வந்ததாக பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரருக்கு  வந்ததே  கோபம். நேராக கோவிலுக்குச் சென்று சிவபெருமானை  வாங்கு  வாங்கென்று  வாங்கிவிட்டார். “உன் எல்லையில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது . நீ  எல்லை காக்கப் போகாமல் கொஞ்சம்  கூட  கவலையின்றி  முல்லைப்பூக்களின்  மணத்தை நுகர்ந்து கொண்டு சுகமாயிருக்கிறாயா?”
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லால் எறிந்திட்டும் மோதியும் கூறையம் கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பதொன்று இல்லையாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரேஇது சுந்தரர் தேவாரம்.

சுந்தரருக்கு சிவபெருமான் மீது வந்த கோபம்,வங்காளப் பிரிவினையின்போது கண்ணதாசனுக்கு கண்ணன் மேல் வருகிறது.

பாஞ்சாலி பூந்துகிலைப் பற்றி இழுக்கையிலே

ஆண்சாதி நாமென்றே அங்குவந்த கோபாலன்
மான்சாதி வங்காள மங்கையர்கள் கண்ணீரை
ஏன்காணவில்லை?எனக்குமது புரியவில்லை
அர்ச்சுனர்க்குப் போதித்த அண்ணல் பரந்தாமன்
நிக்சனுக்குப் போதிக்க நேரம் கிடைக்கவில்லை
சுந்தரரின் திருமுருகன் பூண்டி தேவாரத்தில் ரிஷப வாகனத்தில் ஏறியாவது
எல்லை காக்கப் போக வேண்டாமா என்றொரு கேள்வி வரும்.

முடவர் அல்லீர்!இடரிலீர்!முருகன்பூண்டி மாநகர்வாய்
இடபம் ஏறியும் போவதில்லாகில் நீர் எத்துக்கிருந்தீர் எம்பிரானீரே
என்பார் சுந்தரர்.

 அதே தீவிரத்துடன் கவிஞர் எழுதுவார்,
துரியோதனர் பாலும் தூது சென்ற பரந்தாமன்
கொரியாவில் தூது செல்லக் குதிரை கிடைக்கவில்லை என்று.
எல்லையிலாத் துயர்தீர இறைவன்வரவில்லையெனில்
இல்லையவன் என்பாரை இறைவனென நாம்துதிப்போம் என்று இக்கவிதை முடிகிறது. தான் நாத்திகனாகிவிடப் போவதாக பராசக்தியை  பாரதி மிரட்டியதைப் போலத்தான் இதுவும்!! பின்னால் ஒரு திரைப்படப் பாடலில் இறைவன் இருக்கின்றானா அவன் எங்கே இருக்கிறான் என்று தொடங்கிய  கவிஞர் எழுதினார்..

நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-29

தமிழிலக்கியத்தில் கையறு நிலைக் கவிதைகள் காலங்காலமாகவே உள்ளன. புரவலன் மறைந்த நாட்டில் நின்று கொண்டு புலவர்கள், முல்லையும் பூத்தியோ என்று கேள்வி எழுப்பினார்கள். தசரதன் மறைவு குறித்து கம்பன் எழுதிய கவிதை, எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தம் என்று கவிஞர் தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார்.

  “நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
   தந்தாய்!தனியறத்தின் தாயே! தயாநிதியே!
   எந்தாய் !இகல்வேந்தே ! இறந்தனையே!
   அந்தோ!மற்றினி வாய்மைக்கு யாருளரே!”

இது காந்திக்கும் பொருந்தும்,காமராஜருக்கும் பொருந்தும் என்பார் கவிஞர்.

கையறு நிலைக்கவிதைகளின் நெடும்பரப்பில் பாரதியும் பங்கேற்றான்.ஓவியர் ரவிவர்மா மறைந்த போது,

   ” கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் யாரும்
      சீலவாழ்வகற்றி ஓர்நாள் செத்திடல் உறுதியாயின்
      ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியதன்றோ”என்று வருந்தினான்.

கண்ணதாசனின் கையறுநிலைக் கவிதைகள் பெருமளவில் பேசப்பட்டது, நேருவின் மறைவுக்காக அவர் எழுதியபோதுதான் என்றாலும், பலருடைய மரணத்தையும் தன் பாடல்களால் வென்றிருக்கிறார் கவிஞர். அவரது தொகுதிகளிலேயே முதல் இரங்கல் கவிதை , கலைவாணருக்காக எழுதப்பட்ட கலையாவாணன்..
“சாவதாம்!முடிவாம்! சோற்றுத்  தடியர்தாம் சாவார்;செத்துப்
 போவதால் மறைவார்-இந்தப்புவியுளார் வருத்தங் கொள்ளார்;
ஆவதே நினைந்த மன்னன்அனைத்தையுங் கொடுத்த வள்ளல்
சாவனோ?இல்லை;ஆங்கேசாவெனல் வாழ்வின் தேக்கம்

 
என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னாலும், கலைவாணரை இழந்த கனமான வருத்தம் அடுத்த கவிதையில் வெளிப்படுகிறது. அநேகமாக கலைவாணரின் உடல் எரியூட்டப்பட்ட பிறகு அந்த நெருப்பு சுட்ட வடுவாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
“இப்பொழு திருந்தான் அண்ணன்இன்றுநான் பார்த்தேன்!காலை 
துப்புற வெளுக்கும் போழ்தும்தூங்கினான்;கண்டேன்! கொஞ்சம்
அப்புறம் நகர்ந்தேன்;மீண்டும் அருகினில் வந்தேன்!ஐயோ
எப்படிச் சொல்வேன்!அண்ணன்இல்லையே!இல்லை!இல்லை!

கருணையும் மறையுமென்றால் காலமோர் உண்மையாமோ
பொறுமையும் அழியுமாயின் பூதலம் உறுதியாமோ
வருவதை வாரி வாரி வழங்கிடும் அண்ணன் மேனி
எரிதழல் படுவ காண்போர் இப்புவி நிலையென்பாரோ
என்றெல்லாம் ஏங்கியழுது.

இறந்தனன் எனநி னைக்க இரும்பினால் நெஞ்சம் வேண்டும்!
வருந்துவார் வருத்தம் நீக்க மறைந்தவன் வரத்தான் வேண்டும்!
 என்ற நிறைவேறா நிராசையுடன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.
நாதசுர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்த போது கவிஞர் இசைத்த முகாரி,காலத்தை வெல்ல வல்லது.

“என்னிவன் வளர்த்த பேறு!எப்படிப் பயின்றான் இந்தச்
சின்னதோர் குழலுக்குள்ளே செகத்தையே உருட்டும் பாடம்”
என்று தொடங்கும் கவிதையில் டி.என்.ஆரின் இசையை மட்டுமின்றி அவரையும் கவிஞர் எப்படி ரசித்திருக்கிறார் என்பது புலனாகிறது

“கையிலே இசையா,பொங்கும் காற்றிலே இசையா,துள்ளும்
 மெய்யிலே இசையா,மின்னும் விழியிலே இசையா என்றே
 ஐயனின் இசையைக் கேட்போர் அனைவரும் திகைப்பர்!இன்று
கையறு நிலையிற் பாடக் கருப்பொருள் ஆனாய் ஓய்ந்தாய்!
இந்த அளவு ராஜரத்தினத்தை கவிஞர் ரசிக்க என்ன காரணம்?வாரியார்
சுவாமிகள் ஒருமுறை கொஞ்சம் அதீதமாகப்  பாராட்டினார் “ராஜரத்தினம்  வாசிப்பதுதான் நாயினம்; பலர் வாசிப்பது நாயினம்” என்று.  இதில் பலர் புண்பட்டிருக்கக் கூடும்.ஆனால் கவிஞர் சொல்லும் காரணத்தைப் பாருங்கள்:
“இதற்கிவன் ஒருவன்,வேறிங்கு எவனுமே இல்லை என்றே
 எதற்குமே வரம்பு போட இப்புவி சிறியதல்ல
 அதற்குநீ விலக்கே !இந்த அகிலமெல்லாமும் நாதம்
  மிதக்கும்நல் குழலுக்கெங்கள் வேந்தன் நீ ஒருவனேதான்

டி.என்.ஆரை கவிஞர் எவ்வளவு நுட்பமாக கவனித்திருக்கிறார் என்பதற்கு
பின்வரும் வரிகளே உதாரணம். டி,என்.ஆரின் நாதஸ்வரத்தில் அவர் வாங்கிய மெடல்கள் தொங்கும். நன்கு வாசித்து வாசித்து வசப்படுத்டிய சீவாளி பொருத்தி சுகமாக வாசிப்பார் அவர்.

பரிசுகள் ஆட நின்பால் பழகிய குழலைத் தூக்கி
வருகிறாய் நீயென்றாலே மனதிலே கீதம் பொங்கும்
சரிகம பதநி யோடு “ச’வென முடிந்து போகும்
குறுகிய சுரத்துக்குள்ளே குவலயம் படைத்துப் போனாய்

செவியினில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி இந்தப்

புவியெலாம் ஒடி நிபால் பொங்கிய தோடி வேறிங்கு
எவரிடம் போகும்?ஐய!இனியதைக் காப்பார் யாவர்?
அவிந்த நின் சடலத்தோடே அவிந்தது தோடி தானும்!

தவுலுக்குக் கொஞ்ச நேரம் தனி ஆவர்த் தனம் கொடுத்து

கவுளி வெற்றிலையில் நான்கைக் கையிலே எடுத்து வாயில்
அவலெனக் குதப்பும் போதே ஆவர்த்தனம் முடிந்தால்
தவுல்போலக் குழலை வாசித்தவன் பாரில் ஒருவன் நீதான் 

மேடைக்கு நீதான்!உந்தன் மேனிதான்!இடுப்பைச் சுற்றும்

 ஆடைதான்!காதில் தொங்கும் அழகிய கடுக்கன்தான்!நல்
வாடைக்கு வாரிப்பூசும் மார்புச்சந்தனம்தான் !யாவும்
பாடைக்குள் ஒடுங்கிற்றெங்கள் பார்வைக்கு மறையக் காணோம்
இசைத்துறையில் குறிப்பிட்ட இனத்தினரின் ஆதிக்கத்தை முறியடித்தவர் டி.என்.ஆர் என்கிற குறிப்பும் இந்தக் கவிதையில் உண்டு.

இசையெலாம் எங்கள் சொந்தம் என்றிருந்தவர்கள் நின்றன்
 அசைவெலாம் இசையாய் மாற அயர்ந்தனர்!எதிலும் அன்னார்
 வசை,குறை காண்பார் !உந்தன் வாய்ப்புறம் பொங்கி வந்த
 இசையினிற் பணிந்தார்! உன்னால் எம்மையும் வணங்குகின்றார்
என்பதுஅதிலொரு சிறுசான்று.

இத்தனைக்கும் டி.என்.ஆரை விட கவிஞருக்கு மிக நெருக்கமமனவர்கள் பலருண்டு.ஆனாலும் இந்த மரணத்தில் தனக்கு நேர்ந்த துயரை நேரில் வந்து பார்க்கும்போது டி.என்.ஆரே விளங்கிக் கொள்வார் என்கிறார் கவிஞர்,
  வேண்டிய பலபேர் எம்மை மிகச்சிறு வயதில் விட்டு
  மாண்டனர்;அப்போதெல்லாம் மனத்துயர் அதிகமில்லை
  ஈண்டுநின் மரணச்சேதி இழைத்ததோர் துயரந் தன்னை
 மீண்டொரு முறைநீ வந்தால் விளங்குவாய் வேந்தர் வேந்தே
 ஒரு கவிஞர் மிகச்சிறந்த ரசிகராய் இருப்பதால் கிடைத்த கொடை இது.

அதே தொகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவுக்குக் கவிஞர் எழுதிய வரிகளும் சாகாவரம் பெற்றவை.

“சின்ன வயது மகன் சிரித்த முகம் பெற்ற மகன்
  அன்னைக் குணம்படைத்த அழகுமகன் சென்றதெங்கே” என்று தொடங்கி
“முதிர்ந்த கிழமிலையே!மூச்சடங்கும் வயதிலையே
 உதிர்ந்த மரமிலையே !உலர்ந்துவிட்ட கொடியிலையே!
 வறண்ட குளமிலையே! வற்றிவிட்ட நதியிலையே!
 இருண்ட பொழுதிலையே !ஏய்க்கின்ற நாளிலையே! என்று பதறுகிறார்.

தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா

என்னுயிரைத் தருகின்றேன் எங்கேயென் மாகவிஞன்
என்னும் வரிகளில் இருவரிடையே இருந்த நேசம் தெளிவாகத்
தெரிகிறது .கவிஞரின் கையறுநிலைக் கவிதைகளில், நேருவுக்கு எழுதியவை நிகரிலா இடம் பெற்றன. அதிலிருந்த உணர்ச்சிப் பெருக்கின் ஆழம் அபாரமானது.

சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே குறுநகை போனதெங்கே
நேரிய பார்வை எங்கே நிமிர்ந்தநன் நடைதானெங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்ததிங்கே
என்று கதறினார் கவிஞர்.

அப்போது அவர் எழுதிய வரிகள் இன்றும் பலரின் மரணங்களின்போது பிறரால் மேற்கோள் காட்டப்படுகின்றன.
சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதோ
சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ
தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ
தெய்வமே உனையும்நாம் தேம்பியழ வையோமோ

என்பது போன்ற வரிகள் அவை.உணர்ச்சி வேகத்தின் வெற்றுப் புலம்பலாய் மாத்திரமில்லாமல் நேருவின் இயல்புகளைச் சித்தரிக்கும் நுட்பமான படப்பிடிப்புகளும் அந்த அஞ்சலிக் கவிதைகளில் உண்டு.

நேருவுக்கு கவிஞர் எழுதிய கண்ணீர்க் கடிதம் ஒன்றின் தலைப்பு,கமலப்பூவே. சுறுசுறுப்பும் உற்சாகமும் ததும்பும் நேருவின் வாழ்க்கை முறையை அந்தக் கவிதையில் சித்தரித்திருப்பார் கவிஞர்.

பண்டித ஜவகர் என்னும் பண்புசால் வெண்புறாவே

மண்டலம் காவல்கொண்ட மன்னனே!உன்னையோர் நாள்
கண்டது முதலே நின்பாற் கலந்தவன் எழுதுகின்றேன்
உன்னிடம் உயிரை வைத்தே உனக்கிதை எழுதுகின்றேன்

விருந்துகள் விழாக்கள் என்றும் விடுதலைத் திருநாள் என்றும்

பறந்துநீ பார்த்த கூட்டம் பலப்பல ஆனால் ஐயா
இறந்துநீ கிடந்த போது எழில்முகம் காண வந்து
கரைந்ததோர் கூட்டம் தன்னைக் காண நின் கண்கள் இல்லை

நேரு காரில் போகும்போது யாரேனும் சற்றே தலையசைத்தால் அவர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைப்பாராம் நேரு.தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.அப்படித்தான்.கவிஞர் இக்கடிதத்தில் கேட்கிறார்,

தலைநகர் தெருவில் எங்கள் தலைவன் நீ செல்லும்போது
தலையசைப்பாரைக் கண்டு கையசைப்பாயே !இன்று
அலையெனத் திரண்ட கூட்டம் அசைத்ததே கையை!ஐயா!
தலையைஏன் மறைத்துக்கொண்டாய் தவறென்னசெய்தோம் நாங்கள்
நேருவின் நினைவாக எண்ணற்ற கவிதைகள் எழுதினார் கவிஞர்.அதே போல காமராஜர் மறைவும் சின்னப்பா தேவரின் மறைவும் அவரை வெகுவாக பாதித்தது

“சேதியொன்று கேடேண்டி தேவர் மரணமென்று நாதியற்றேன் அப்போதே!நாளையெனைக் காப்பவர்யார் என்று கலங்கினார். அண்ணாவின்  மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது. “அண்ணனுக்குப் பின்னால் அழுதுவந்த  கூட்டமெல்லாம் கண்ணனுக்குப்  பின்னால்  கதறிவர  மாட்டாதோ”என்று தன் இறுதிப்பயணம் குறித்து அவர் கற்பனை செய்தார். அவரது சகோதரி இறந்தபோது அவர் எழுதிய “என்னை அழவிடு!என்னை அழவிடு! அன்னை என்னை அழவே படைத்தாள்” என்ற கவிதையும், சகோதரர் ஏ எல் எஸ் மறைவுக்காக எழுதிய 30 வரிகள் 54 வருஷங்கள் என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கவை.பேரன் முறையுள்ள குழந்தையைப் பார்க்கச்  சென்றார் அவர். தூங்கும் குழந்தையை எழுப்பித் தூக்கிவர எத்தனித்த போது “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” என்று எழுதி, அதன் பிறகுசில நாட்களிலேயே அந்தக் குழந்தை இறந்ததும், “அறம்பாடி விட்டேனோ யானறியேன்!பிள்ளைச் சிறுகுருவி
திறம்பாட மாட்டாமல் செத்தகதை பாடுகிறேன் என்று  குற்றவுணர்வில்  குமைந்தும், பிள்ளைப் பருவத்தில் பிணமாய்க் கிடப்பதெங்கள் 
இல்லத்தில் இல்லை இதுவரையில் நடந்ததில்லை என்று கலங்கியும் எழுதினார் கவிஞர்.  சஞ்சலமேன் அந்தத் தனிக்கருணைக் கண்ணனிடம் 
நாமும் பறப்பவர்தாம் நாளையோ மறுதினமோ என்று தன்னையே ஒருவாறு தேற்றிக் கொண்டார்.
இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது,ராஜாஜியின் மறைவுக்காக அவரெழுதிய தேசத்தை ஈர்த்த தமிழன் என்ற கவிதை மிகவும் சம்பிரதாய ரீதியாகத் தெரிகிறது.

வாழ்வாங்கு வாழ்வாரைத் தெய்வத்துள் வைக்குமொரு
வையத்து வாழும் மனிதா
வையத்துள் ராஜாஜி வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா

என்று தள்ளி நின்றே துக்கம் கேட்கிறார் கவிஞர். தலைவர்கள்,கவிஞர்கள் என்று பலரின் மரணத்தையும் தன் தனிப்பட்ட இழப்பாகக் கருதி துயர் மீதூற எழுதப்பட்ட கவிஞரின் கையறுநிலைக் கவிதைகளின் வரிசையில்
ராஜாஜி பற்றிய கவிதை அஞ்சலியாய் அனுதாபப் பதிவாய் மட்டுமே நிற்கிறது.

மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் என்று கவிஞர் பாடிய வரிகளுக்கு
மிகப்பொருத்தம்,ராஜாஜிக்கு அவர் எழுதிய இரங்கல் கவிதை

(தொடரும்)

வீரன் சிரிக்கிற கோலம்

கற்பகச் சோலையின் வண்ணத்துப்பூச்சிமேல்

கல்லை எறிகிற வேடன்-இவன்
சொப்புச் சமையலில் உப்புக் குறைவென
சீறி விழுகிற மூடன்
அற்பத் தனங்களின் பெட்டகம் ஒன்றினை
ஆக்கிச் சுமக்கிற பாலன் -இவன்
செப்பும்மொழியினில் செப்பம் கொடுத்தவன்
செந்தூர் நகர்வடி வேலன்
கானலின் ஓட்டத்தை கங்கையின் ஊட்டமாய்
கண்டு உளறிய பேதை-இதில்
வானப் பரப்பிடை வாழ்ந்திடும் மேகத்தை
வாங்கியதாய் ஒரு  போதை
ஊனின் சுகங்களில் ஊறிய நெஞ்சமும்
ஊரைப் பகைத்திட்ட வேளை-நல்ல
ஞான விடியலை நெஞ்சில் கொடுத்தது
நாயகன் கந்தனின் லீலை

ஓலமிடும் நெஞ்சில் ஓமெனும் நாதத்தை
ஓங்கிடச் செய்தவன் யாரோ-அந்த
நீலமயில்மிசை சூரியனாய் வந்து
நேரில் சிரிப்பவன் யாரோ
காலமெனும் துகள் கண்ணை உறுத்திடக்
காட்சி கொடுத்தவன் யாரோ-ஒரு
பாலகன் போலவும் வாலிபன் ஆகவும்
பாலில் குளிப்பவன் யாரோ

வண்ணக் கரத்தினில் சேவல் கொடியுடன்
வீரன் சிரிக்கிற கோலம்-தமிழ்ப்
பண்ணில் குளிக்கிற வேலைப் பிடித்தவன்
பண்ணுவ தெத்தனை ஜாலம்
பெண்க ளிருவரைப் பக்கம் இருத்தியும்
பக்தரைப் பார்க்கிற பாசம் -அவன்
கண்கள் தொடுகிற காரணத்தால் இந்த
காகிதப் பூவிலும் வாசம்

இப்படித்தான் ஆரம்பம் -28

ஜனநாயக சோஷலிசத்தின் தளகர்த்தராக காமராஜரைக் கண்ட கவிஞரின் கண்கள், அந்தக் கோட்பாட்டின் முதல் எதிரியாக ராஜாஜியை வரித்துக் கொண்டது. எனவே ஜனநாயக சோஷலிசத்தை வற்புறுத்திப் பாடுகிற இடங்களிலெல்லாம், கவிஞர் ராஜஜியைத் தாக்கவும் தவறவில்லை. 1965ல்  கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இரண்டு பெண்களை ஒப்பிட்டு ஜனநாயக சோஷலிசத்தை விளக்க கவிஞர் முற்படுகிறார். ஒருநாள் வீட்டில் கவிஞர் ஓய்வாகப் படுத்திருந்தாராம். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான  பள்ளத்தை  மாற்றுவது  பற்றிய  பெருங்கனவில்  கவிஞர் இருந்தாராம். அப்போது இருகைகள்  தன்  முகத்தைத்  தழுவக் கண்டு கண்கள் திறந்தாராம். இனி கவிஞரே தொடர்கிறார்

‘கழுத்து முதலாகக் கால்வரைக்கும் ஒருசீராய்ப்

பருத்திருக்கும் என்மனைவி பக்கத்தில் நின்றிருந்தாள்
முதலாளித் தத்துவத்தை முழுவடிவில் பார்த்ததுபோல்
அதிசயித்துப் பார்த்தேன்”என்றவர், அடுத்த வீட்டுப் பெண்ணை ஒப்பிட்டு தன் கொள்கை விளக்கத்தின் கொடிநாட்டத்தொடங்குகிறார். இங்கே இருப்பது , அடுத்தாத்துஅம்புஜமல்ல. அடுத்த வீட்டு அன்னம்!!
‘ அங்கே பார் அங்கே அடுத்தகத்து அன்னத்தை
 காய்ந்த அவரைக் காய்போன்ற மேனியைப் பார்!
 இங்கே உனக்கு இடையே தெரியவில்லை !
 அங்கே அவளுக்கு இடையென்றே அங்கமில்லை!’
இப்படிச் சொன்னால் எந்தப் பெண்ணுக்கும் அழுகைவருமல்லவா.
“இதுதானா பெண்ணை இறைவன் படைத்தவிதம்
என்றேன்! அழுதுவிட்டாள் ! என்கண்ணே அழாதேடி!
உன்னைநான் சொல்லவில்லை!உள்ளோர்க்கும் இல்லோர்க்கும்
தலைவன் பிரித்துரைத்த தத்துவத்தை நானுரைத்தேன்!
வீங்குகின்ற செல்வம் வீங்குவதும் ஆபத்து!
ஏங்குகின்ற நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து!
இதுவரை உருவகமாகவே பாடிவருகிற கவிஞர், நேரடித் தாக்குதலில் ராஜாஜியைக் குறிவைக்கிறார். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் இருந்த தொழிலதிபர்களும் இதற்குத் தப்பவில்லை. கோவையில் சுதந்திரா கட்சியை வளர்த்தெடுத்தவர்களில் ஆலை அதிபர் அமரர் ஜி.கே.சுந்தரம் குறிப்பிடத்தக்கவர். மிக நல்ல பண்பாளர். கோவையில் கம்பன் கழகம் கண்டவர். தொண்ணூற்று நான்கு வயதுவரை காந்தீயப் பார்வையுடன் கண்ணியமாய் வாழ்ந்தவர். ஆனால் ராஜாஜியின் நண்பர் என்பதாலேயே கவிஞரின் கவிதையில் கண்டனத்திற்கு ஆளாகிறார்.

மந்திரங்கள் போட்டாலும்,மறைத்துப் பதுக்கிவைத்துத்
தந்திரங்கள் செய்தாலும்,சாணக்யர் தலைமையிலே
சுந்தரங்கள் எல்லாம் தோள்தட்டி நின்றாலும்   
சமதர்மப் போருக்குத் தப்பிவிட முடியாது
இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
என்று கவியரங்கில் கர்ஜித்தார் கவிஞர். இது ஜி.கே.சுந்தரம் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்  கம்பன்விழா கவியரங்குகளுக்கு கவிஞரைத்தான் அழைக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தவர் அவர். இந்தப் பெருந்தன்மை குறித்து கவிஞரே கம்பன் அன்பர்களிடம் சிலாகித்துப் பேசியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ராஜாஜியின் நண்பரே இப்படி பாடப்பட்டார் என்றால் கவிஞரின் கவிதைகளில் ராஜாஜியின் நிலை என்னவென்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

பட்டப் படிப்பும் பாரதமும் கீதைகளும்
சட்டத் திமிரும் தவக்கோல முத்திரையும்
ஞானக் கிறுக்கும் நானென்னும் ஆணவமும்
கயவர் மனம்போன்ற கறுப்புக் கண்ணாடிகளும்
“தாங்கள் உயர்வென்று” தலைதூக்கி நின்றாலும்
தானைத் தலைவன் தாளுக்கும் சிறியவரே என்றெழுதிய கவிஞர்

ராஜாஜியின் முதுமைக்கால வாழ்க்கைக்கோர் ஆலோசனை சொல்கிறார். காமராஜர், ராஜாஜியை பெரியவர் என்றே குறிப்பாராம். அதேச் சொல்லையே கவிஞர் பயன்படுத்துகிறார்.
 வயதான பெரியவர்காள்!வம்புமொழி பேசாதீர்!
வழிமேல் வழிமாறி வந்தவழி மறவாதீர்!
சாய்வு நாற்காலியில் சடலந் தனைக்கிடத்தி
ஓய்வெடுத்துக் கொண்டு உள்ள யஜுர் வேதமெல்லாம்
பாராயணம் செய்தால் பரகதிக்கு நல்லவழி!

இதுதான் அந்த ஆலோசனை. காமராஜரை,திராவிட இயக்கத் தொனியில் பாராட்டிப் பாடுகிற வழக்கமும் கவிஞர் தொடங்கி வைத்ததுதான். ஜனநாயக சோஷலிசம் என்னும் முழக்கத்தை முன்னெடுக்க இந்தியத் தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைவர்களுக்கும் நடுவே ஒற்றுமை தேடி கவிதைபாடி அகமகிழ்ந்தார் அவர். இந்தோ சோவியத் பண்பாட்டுக் கழகத்தின் முதல் மாநாட்டுக் கவியரங்கில் அவர் பாடிய கவிதையின் நிறைவு வரிகள் இவை.

வால்காவில் லெனின் கங்கை வளத்திலே காந்திமகான்
வால்காவில் ஸ்டாலின்கங்கையிலே வல்லபாய்படேல்
வால்காவில் குருசேவ் கங்கையிலே நேரு வந்தான்
கோசிஜினை வால்கா கொண்டுவந்த வேளையிலே
கங்கை நதிக்கரையில் காமராஜ் எழுந்துநின்றான்
ஒருநோக்கம்!ஓருள்ளம் ஒன்றேபோல் சிந்தனைகள்
பண்பாடு யாவும் பாரதமும் ரஷ்யாவும்
கொள்ளும் உறவின் குறிப்பாகும் இவ்வுறவு
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது
கள்ளக் கறுப்புக் கண்ணாடிக் கண்களுக்குள்
சாயாது,சாயாது!சரித்திரமே!தாயகமே!” என்கிறார்.

காமராஜரை வந்தனை செய்யும் போதெல்லாம் ராஜாஜியை நிந்தனை செய்ய கவிஞர்
மறந்ததேயில்லை. காமராஜரின் பிறந்த நாட்களில், குறிப்பாக 60,61,62 வயதுகளை காமராஜர் கடக்கும் போதெல்லாம், கவிஞரின் கவிதை வரிகள் அவருக்குக் கவரி வீசின. கவரியின் முன்முனை, காமராஜர் மீது குளிர்ந்த காற்றைப் பொழிகிற போதே அதன் கைப்பிடி ராஜாஜியின் முகத்தில் உரசவே செய்கிறது

கல்லாமைதனைக் கருவறுக்கின்றவன்
இல்லாமைதனை இல்லாதாக்குவோன்
நல்லோர் இதயம் நாடும் நாயகன்
நாவசைக் காமலே நாடமைக்கின்றவன்  என்கிற போதே
“படித்தவனல்லன்;பல்கலைக் கல்வி
முடித்தவனல்லன்;நால்வகை வேதம்
குடித்தவனல்லன்;கொள்கை நிலத்தில்
வெடித்து வந்தவன் ;வெள்ளை நெஞ்சினன்!
என்று இடித்துவிட்டுப் போகிறார் கவிஞர்.

காமராஜரின் நிழலிலிருந்து நீங்கி இந்திரா காங்கிரஸில் கவிஞர் இணைந்தபோது, இந்திரா ஆதரவுக் கவிதைகளை எழுதினார்.காமராஜரே
நேரில் சொல்லியும் இந்திரா காங்கிரஸில் இணையும் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
“இந்திய மலைகள் தோறும்
 இந்திரா பேர்கேட்டாயா
இந்திய நதிகள் எங்கும்
 எதிரொலி கேட்கின்றாயா
இந்தியக் கடல்கள் முற்றும்
இயங்கிடும் இசைகேட்டாயா
இந்தியா இந்திராவே
இந்திரா இந்தியாவே    என்றெழுதினார் கவிஞர்.

ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் அவருக்கு சற்றுமில்லை என்பதற்கு அடையாளம், இந்தக் கவிதைகள் எதுவும் காமராஜரை நேராகவோ மறைமுகமாகவோ இடிக்கவில்லை என்பதுதான்.மாறாக இந்திரா காங்கிரஸ்,காமராஜரை மதித்து அவரை  முன்னிலைப்படுத்தி  தன்னை  வளர்த்துக்  கொள்ள வேண்டும் என்று கவிஞர் விரும்பினார். குணம்நாடி,குற்றமும்நாடினால் காமராஜரிடம்

குணமே அதிகம் என்று கவிஞர் வாதிட்டார்.

அந்த மனிதனை அழையுங்கள்;உங்கள் 
அன்னை கோவிலுக்கு அவனோர் கோபுரம்
 முன்னம் உலகின் முடியுடை மன்னன்
தன்னந் தனியே தவம்புரிகின்றான்
………………………………………………….
அவனால் இன்னும் ஆவன கோடி
அவனை நம்புவோர் ஆயிரம் அயிரம்
வண்டினம் முரல மயங்கும் பொய்கையின்
வெண்டாமரையை வேரறுக்காதீர்
குற்றம் நாடிக் குணமும் நாடிடின்
குற்றம் பத்து !குணமோர் ஆயிரம்!
செல்லும் தேரில் சிறு தவறுண்டு
உள்ளம் தவறில்லை;உலகம் அறியும்;
நல்லோர்,மேலோர்,நன்றியை மறவார்
வல்லான் வீட்டு வாசல் தட்டுக
தந்தை ஒருநாள் தடியால் அடிப்பினும்
தந்தை தந்தையே;தழுவுவான் மறுநாள்;
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அடுத்த கட்டத்தை அழகுற நடத்த
என்ற கவிஞரின் குரல் தேசிய நீரோட்டத்தின் சலசலப்பில் கலந்து போனது.
முன்னர் ஓரிடத்தில் பெரியாரை அரசியல் நரிக்குறவன் என்று கிண்டல் செய்தவர் கவிஞர்.ஆனால் காலப்போக்கில் பெரியாரின் பெருமைகளை அவர் உணர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.தொடக்க காலத்திலேயே பெரியார் அதரவு நிலையைக் கவிஞர் எடுத்திருக்க வாய்ப்பில்லை.காரணம்,திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலத்தில்தான் அவர் அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்கிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் பெருமளவில் எழுந்த காலமது.பக்தி நெறியில் படுதீவிரமாக கவிஞர் எழுதத் தொடங்கிய வேளையிலும் பெரியார் மீதான
லேசான கிண்டல்வரிகள் அவரிடமிருந்து ஆங்காங்கே எழுந்ததுண்டு. அவற்றில் கூட நாத்திக எதிர்ப்புதான் தலைதூக்கி நிற்கிறது .
ஆனால் பெரியாரின் பெற்றிமைகளை அவர் பாடிய பாங்கு அபாரமானது.

“ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும்
 உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை
தோன்றிவரும் வடிவினிலே நடுக்கந் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை
வான்தவழும் வெண்மேகத் தாடி அடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்
ஐயாவுக் கிணைஅவரே மற்றோர் இல்லை

நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார்
சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்
சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்
நற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறப்பினிலேபெரியாராய்த் தான்பிறந்தார்”

 என்றெழுதிய கண்ணதாசன், ராஜஜியைப் பாராட்டி எழுதியது இரங்கல் கவிதையில்தான். அது உள்ளத்திலிருந்து எழுந்த உண்மைக் கவிதை என்கிறார் திரு.பழ.கருப்பையா.ஆனால் அத் உபசாரத்திற்காக எழுதப்பட்டதுதான் என்பது என்னுடைய முடிவு. மற்றவர்கள் மறைவுக்காக கவிஞர்  எழுதிய இரங்கல் கவிதைகளைப் பார்த்துவிட்டு ராஜாஜியின் மறைவுக்கு அவர் எழுதிய வரிகளையும் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். பார்ப்போமே…

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம் – 27

காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர்.
“முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
  பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
 அரசியலைக் காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே
 காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்”
என்ற வரிகளும்,
 “ஆண்டி கையில்ஓடிருக்கும் அதுவும் உனக்கிலையே”
என்ற வரியும் காமராஜ் நேசர்களால் காதலுடன் உச்சரிக்கப்படுபவை. காமராஜரின் தலைமைப் பண்பு பற்றிய கவிஞரின் பிரமிப்பு, லால்பகதூர் சாஸ்திரியை காமராஜர் பிரதமராக்கிய சாதுர்யத்தை விவரிக்கிறபோது விகசிக்கிறது.
நேரு மறைந்தபோது, அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பமேற்பட்டது.
மாளவியா, ஜெகஜீவன், மொரார்ஜி தேசாய் போன்றோர் எல்லாம் போட்டியிடுவார்களென்றும், கடும் மோதல் நிகழுமென்றும் கருத்துக்கள்
பரவிய காலமது
“மாளவியா முழங்குகிறார்;மௌனம் கிழித்தெழுந்து
 ஜகஜீவன் பாடுகிறார்;தங்கத்தின் விலைகுறைத்த
தேசாய் தனக்கில்லா மீசையினை முறுக்குகிறார்
மேனன் கிளம்புகிறார் மேல்நாடும் கீழ்நாடும்
வேடிக்கை பார்க்க விளையாடப் போகின்றார்
என்றெல்லாம் வதந்திக்குத் தந்தி கொடுப்பவர்கள்
ஏட்டுச் சுதந்திரத்தில் நீட்டிப் படுப்பவர்கள்
பேசினார்;அந்தப் பேச்சுக்கே நாட்டுமக்கள்
கூசினார்;கூனிக் குறுகினார்” என்கிறார் கவிஞர்.
தர்மசங்கடமான சூழலில் காமராஜர் சூழலைக் கையிலெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்கு டெல்லி தலைவணங்கியது.பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவர் நுழைந்தபோது அங்கிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றதை வரலாறு வாஞ்சையுடன் பதிவு செய்துள்ளது.அந்தச் சூழலை காமராஜர் கையாண்ட விதத்தைக் கவிதையாக்குகிறார் கவிஞர்.
வெட்டவெளி வானத்தோர் விடிவெள்ளி வந்ததம்மா
வெள்ளெருக்கங் காட்டினிலோர் முல்லைமலர் பூத்ததம்மா
பட்டுப்போகாமல் பசுமரத்தைக் காப்பதற்கு
பாலே மழையாக பாரதத்தில் வீழ்ந்ததம்மா என்று சிலாகிக்கிறார்.
பாராளுமன்றமே பக்கத்தில் வந்ததம்மா!
லால்பகதூர் தான்நமது நாட்டின் தலைவரென்றான்
ஐந்நூற்ற்றுபதுபேர் ஆமென்றார்’காத்திருந்த
தோல்பகதூர் எல்லாம் சுருண்டு படுத்துவிட்டார்;
நந்தா விளக்கொன்று நாட்டுக்கோர் சஞ்சீவி
தந்தான்!என் தாயகத்தைத் தலைநிமிர்த்தி வைத்துவிட்டான்!
கறுத்த நிறங்கொண்ட காமராஜர்,கண்ணாதாசனின் கண்களுக்குக் கண்ணனாகவே தெரிகிறார். அதில் வியப்பில்லை.பாரத மாதா குந்திதேவியாகத் தெரிகிறாள்.கண்ணனைத் தேடிவந்த பஞ்ச பாண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள்.
தருமனைப் போலொரு ஜனாதிபதியைத்
தந்து வளர்த்த தாயவள் இல்லையோ
அர்ஜுன சாஸ்திரி அளித்தவளில்லையோ
பீமன் சவானைப் பெற்றவளில்லையோ
நகுலனைப் போலொரு நந்தா இல்லையோ
சகாதேவன் நிகர் சாக்ளா இல்லையோ
இத்தனை படையையும் இயக்கும் சக்தியாம்
கண்ணனைப் போலொரு காமராஜ் இல்லையோ
என்று உருவகப்படுத்தினார் கவிஞர்.
காமராஜர் மீது கவிஞர் கொண்ட பற்று சாஸ்திரி மீதும் பெரிய பிரியமாய் வளர்ந்தது. சாச்திரியின் சென்னை வருகையின்போது வரவேற்புக் கவிதை
வாசித்தளித்தார் கவிஞர்.
அறிவே வருக! அனலே வருக!
அமைதிப் புனலே தெளிவே வருக!
உருவில் சிறிதாய் உரத்தில் பெரிதாய்
உடைவாள் எடுத்த உயிரே வருக!
என்று பாடிய கவிஞர்,பாகிஸ்தான் போரின் வெற்றியைக் குறிக்க,
மூவடி மண்ணில் முன்னடி தொடங்கி
ஓரடியாலே உலகையளந்து
மாவலி தலையின் மமதை யளந்த
வாமனா வருக! மன்னவா வருக!
நாலடி உருவென நகைத்த சூரனை
வேலடி அடித்த வேலவா வருக என்கிறார்.
காமராசரின் பிறந்தநாள் கவியரங்கில் பாடிய கவிஞர்,ஜனநாயக சோஷலிசத்தின் முக்கியத்துவத்தை விளக்க முற்பட்டார்.
கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால்
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள்
சிங்கந்தான் மான்குலத்தை சீராட்டி வளர்க்குமென்றால்
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள்
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
தலையிலே ஏதோ தகராறு என்று பொருள்  என்று தனக்கேயுரிய பாணியில் விவரிக்கிறார் கவிஞர்.
இன்று அப்துல்கலாம் புண்ணியத்தில் வாயில்லா ஜீவன்கள் கூட வல்லரசு என்று சொல்லிப் பழகிவிட்டன.ஜனநாயக சமதர்மம்தான் வல்லரசுக்கு வழி
என்று காமராஜர் பிறந்த நாளில் கவிதை பாடினார் கவிஞர். அதற்கு அவர் சொல்லும் காரணம் சுவையானது
…………………………………………………….சிலநாட்டில்
ஜனநாயகம் உண்டு ; சமதர்மப் பேச்சில்லை
சமதர்மம் உளநாட்டில் ஜனநாயகம் இல்லை
……………………………………………………….
இங்கேதான் அந்த இரட்டைக் குழந்தைதனைப்
பெற்றெடுத்தார் நேரு;பிழைக்குமென நம்பிவந்தார்
இந்தக் குழந்தைமட்டும் எழிலாய் வளர்ந்துவிட்டால்
இன்னும் சிலநாளில் இந்தியா வல்லரசு!
என்கிறார் கவிஞர்.
 காமராஜர் மீதான கவிஞரின் வருத்தம் உரைநடையில் தென்படுகிறது. கவிதையில் கரைகாணாத காதலின் பிரவாகம். அந்தக் காதலின் இன்னொரு முகம் இன்னொரு தலைவரின் மீதான வெறுப்பாகவும் வெடித்தது..அந்த வெறுப்புக்கு ஆளானவர்…ராஜாஜி!!

இப்படித்தான் ஆரம்பம் – 26

“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம்.

தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ஆவேசமும், மிகக் கூர்மையான உள்ளுணர்வுகளுமே அவரை அத்தகைய அதிரடி முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தின என்று தோன்றுகிறது.

இயக்கங்களின் கோட்பாடுகளுடன் அவர்கொண்ட மோதல் தத்துவ அடிப்படையில் மட்டுமின்றி தனிமனித அடிப்படையிலும் நிகழ்ந்தவை. தாங்கள் பேசிய தத்துவங்களுக்கு, தலைவர்களே உண்மையாக இல்லாதபோது அவர் அவர்களை நேர்படச் சாடினார்.  கவிஞரின் அரசியல் வாழ்க்கை  பற்றிய  வெள்ளைப்பதிவுகள் அவரது  கட்டுரைகளில்  பெருமளவு காணக்கிடைக்கின்றன. மனவாசம், வனவாசம், நான்கண்ட அரசியல்  தலைவர்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை ஓரளவு சமநிலையோடும் தர்க்கரீதியான பார்வையோடும் உருவானவை. ஆனால் அலைவீசும் உணர்ச்சி வேகத்தில் அவரது பொதுவாழ்க்கைப்பயணம் சுடச்சுடப் பதிவானதென்னவோ அவருடைய தனிக்கவிதைகளில்தான். அவரது கவிதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு, தத்துவங்களுக்கும் தலைவர்களுக்கும் நடுவே இருந்த முரண்பாடுகளே  கவிஞர்  கால்மாறி ஆடக்காரணம் என்பது தெரியும்.ஆம்.. அரசியல் அம்பலத்தில் கவிஞர் கால்மாறியவரே தவிர பால்மாறியவர் அல்லர்.

கவிஞரின் வாயில் விழுந்து புறப்பட்ட தலைவர்களை நாம் இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். கவிஞரால் முதலில் இகழப்பட்டு, பிறகு புகழப்பட்டவர்கள் ஒருவகை. புகழப்பட்டு பின்னால் இகழப்பட்டவர்கள் இன்னொருவகை. வாழுங்காலம் முழுதும் இகழப்பட்டு மரணத்தின்போதுமட்டும் புகழப்பட்டவர் ஒருவர். கவிதைகளில் புகழ்மொழிகளுக்கு மட்டுமே ஆளானவர் ஒருவர். இதுதவிர  மாறிமாறி சிலரைச் சாடியும் பாராட்டியும் இருக்கிறார். அவர்கள் கவிஞருக்குத் தலைவர்களில்லை. சமகாலத் தோழர்கள்.

முதலில் இகழப்பட்டு பின்னால் புகழப்பட்டவர்,நேரு. தொடக்கத்தில் புகழப்பட்டு பிற்காலத்தில் இகழப்பட்டவர் அண்ணா.வாழும்போது மிகக் கடுமையாய் சாடப்பட்டு, அஞ்சலிக்  கவிதையில்  மட்டுமே  பாராட்டப்பட்டவர்   ராஜாஜி.  கவிதைகளைப் பொறுத்தவரை காமராஜர் பற்றிய புகழ்மொழிகளே பொங்கிப் பிரவகிக்கின்றன. ஆனால்பிற்காலத்தில் சில கட்டுரைகளில் கமராஜரை கவிஞர் விமர்சித்திருக்கிறார். அப்படி  விமர்சித்த இடங்களில் அண்ணாவுடன் ஒப்பிட்டு அண்ணாவின் உயர்குணங்களை  விவரித்திருக்கிறார்.தோழராக விளங்கிய ஈ.வெ.கி.சம்பத் சில கவியரங்கக கவிதைகளில் பாராட்டப்பட்டிருக்கிறார்.ஆனால் எந்த சம்பத்துக்காக அண்ணாவை விட்டு விலகினாரோ,அதே சம்பத்தின் பிற்கால நடவடிக்கைகளை மனவாசத்தில் குறிப்பிட்டு,” ஒருவகையில் சம்பத்தை விட அண்ணா உயர்ந்தவர்” என்று எழுதினார் கவிஞர்.

கலைஞர் அவரது சமகாலத்தோழர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பாராட்டும் விமர்சனமும் கதம்பம் போலக் கலந்தே வருகின்றன. எம்.ஜி.ஆர்.பற்றிய விமர்சனங்கள் கட்டுரைகளிலும்,புனைகதைகளிலும் காணப்பட்டாலும் வாழ்வின் இறுதிக்காலங்களில் எம்.ஜி.ஆரைத் தனது கவிதைகளில் பலவாறு புகழ்கிறார். அதற்கான காரணத்தைத் தமிழகம் அறியும் இந்தப் பின்னணியில் கவிஞரின் கவிதைகளையும்,அவற்றில் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகிற தலைவர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

தன்னுடைய அரசியல் வாழ்வை திராவிட இயக்கச்சார்போடு தொடங்கிய கவிஞர்,இந்தி எதிர்ப்புக்கவிதைகளில் சன்னதம் கொண்டு சுழன்றாடுகிறார்.  அப்போது அவர் சுழற்றுகிற சாட்டையில் நேருவும் தப்பவில்லை.
“லம்பாடி லம்பாடி லம்பாடிப்பேய்
 தொங்குமொழி ஓசையிலே பிறந்த பாடை(பாஷை)” என்று இந்தியைச் சொல்கிறார் கவிஞர். மேலே போடப்பட்ட கோட்டில் எழுதுகிற எழுத்துக்கள் காரணமாய் இந்தியைத் தொங்குமொழி என்றார் கவிஞர். கோட்டைப்பிடித்துத் தொங்குவதால் இந்தி அவர்   கண்களில்  குரங்காகவும்  தெரிகிறது
“பொன்வீட்டில் குரங்குமொழி-பிறந்த காலம்
புரியாத தமிழ்மொழியோ கொல்லைமேட்டில்
 கண்மூடு தமிழ்மகனே உறங்கு நன்றாய்
கழுத்தறுந்து சாகும்வரை திறக்க வேண்டாம்” என்று  எழுதிய கவிஞர்
பிற்காலத்தில் இந்தப் பார்வையை மாற்றிக் கொள்கிறார். நேரு  இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறார் என்றதும்“பாதக்குறடெடுத்து பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்” என்று பாடினார் கவிஞர்.

அப்போது சென்னை வந்த நேருவுக்கு திராவிட இயக்கத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அந்த நேரத்தில் நேருவின் முகம் எப்படியிருந்தது என்று கவிஞர் எழுதுகிறார்.

“கருங்குதிரை முகமென்பேனா -சுட்ட
கத்திரிக்காய் முகமென்பேனா” என்று கேலி செய்கிறார்.நேரு என்னதான் ஆணழகனென்றாலும் வந்த இடத்தில் வராதே என்று சொலும்போது முகம் வாடும். கறுத்தும் போகும்.இதைத்தான் சொல்கிறார் கவிஞர்.

ஆனால் 1963 ல் நேரு சென்னை வரும்போது கவிஞர் தேசீய நிரோட்டத்தில் கலக்கிறார்.நேருவை வரவேற்று கவிதை எழுதி அதன்ஆங்கில மொழிபெயர்ப்பை நேருவின் கைகளிலேயே தரும்விதமாய் காட்சிகளை மாற்றுகிறது காலம்.
“எங்கள் தலைவனே!இதயமே வருக!
 இனிய புன்னகைக் கலைஞனே வருக!
 சங்கத் தமிழின் சாரமே வருக!
  தர்ம தேவனின் தூதனே வருக!
கங்கை வெள்ளமே கருணையே வருக!
காந்தி நாயகன் செல்வமே வருக!
சுட்ட போதிலும் மாற்று விடாததோர்
தூய தங்கமே!தாய்மையே வருக!
பூமி முற்றிலும் போர் மறுத்திடும்
புத்த தேவனின் தத்துவம் வருக!
கண்ணில் மணியெனக் காத்த கொள்கையை
மண்ணில் ஊன்றிய மன்னனே வருக!
நாக்கு நீண்டவர் தாக்கும் வேளையும்
போக்கு மாறிடாப் பொறுமையே வருக!”

என்ரெல்லாம் அந்தக் கவிதை நேருவின் பெருமையை நீட்டி முழக்கும் .அதன் மொழிபெயர்ப்பை நேருவிடம் தந்த போது நேரு அதைத்தன்  ஷெர்வானியில்  பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் கவிஞர்.நேரு மறைந்தபின் அந்த அனுபவத்தை ஒரு கவியரங்கில் கவிஞர் குறிப்பிட்டார்:

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் பாட்டுப்
 பாடிக் கொடுத்தேன்; பண்டிதனின் கால்தொட்டேன்-கன்னியரின்
தோள்தொட்ட போதும் தோன்றாத சுகம்,அன்னான்
கால்தொட்ட போது கண்டேன் களிகூர்ந்தேன்” என்று பரவசப்படுகிறார் இந்த ஆண் ஆண்டாள். நேருவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கவிதைகள், அமரத்துவம் வாய்ந்தவை.அவறைப் பின்னால் காண இருக்கிறோம்.

அண்ணா அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர் கவிஞர். இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போல
“அண்ணா நாற்பது”பாடியவர் கவிஞர்.

 (அண்ணா, காமராஜர், கண்ணாதாசன்)

“முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்

  முதலாளி கண்டஞ்சும் நிறங்கண்ட இதழ்கள்
 செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்
 தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனுந்தோன்றவில்லை
யுகந்தேய்ந்து போனாலும் பெயர்நிற்குமென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்பதென்ப” என்று பாடினார்.இராமனின் அழகைப்பாட வார்த்தை கிடைக்காத கம்பன் “அய்யோ” என்றான்.கவிஞர் “அய்யய்யோ’என்கிறார்.
 “செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பலதரலாம்
 தம்பிப்படை யாவும்பல தங்கத் திரள்தரலாம்
 நம்பித்தமிழ் முறைபாடிடும் நலமேநிறை அண்ணன்
 தெம்புக்கது குறைவே அவர் திறனுக்கது சிறிதே” என்றும் பாடினார் கவிஞர்.
அண்ணாவின் சொல்வன்மை,மாற்றுக் கருத்துடையவரையும் பிணிக்க வல்லது. இதைச் சொல்ல ஓர் அருமையான உத்தியைக் கைக்கொள்கிறார் கவிஞர்.பகுத்தரிவு இயக்கத்தால் கடும் சாடலுக்குள்ளான இரண்டு
பிராமணர்கள் அண்ணாவின் பேச்சு பற்றிப் பேசிக்கொள்கிறார்களாம்:

“சாஸ்திரிவாள்!தெரியுமோ?சூத்திரன்தான்
  தமிழினிலே அழகாகப் பேசுகிறான் ஓய்
 நாஸ்திகந்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்
 நன்னாவே பேசுகிறான்!என்னங்காணும்..
 ஆஸ்திகத்தை அவன்தாக்கும்முறையைப்பார்த்தால்
ஆபத்து தான்காணும் எதிர்காலத்தில்
  வாஸ்தவத்தில் அவன்நல்ல மூளைக்காரன்
  மகதேவன் அவதாரம் என்பார் ஐயர்!”

 (கண்ணதாசன் ஈ.வெ.கி.சம்பத்துடன்)

இப்படி ஆராதிக்கப்பட்ட அண்ணாவை, கடுமையாக  சாடி  பின்னாளில்  கவிதை  படைக்கிறார் கவிஞர்.ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து  தி.மு.க.விலிருந்து  வெளியேறுகிறார் கவிஞர்.திராவிட நாடு கொள்கையை அண்ணா  கைவிட்டதும் அதைக் கிண்டல் செய்து ஊரூராய்  கவியரங்கம்  நடத்தினார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம் என்று ஏகடியம் பேசினார்.”திண்ணையிலே படுத்தாவது திராவிடம் காண்பேனே தாவிர கண்ணதாசன்,சம்பத்தைப்போல் விலகிச்செல்ல மாட்டேன் என்று அண்ணா முன்பு சொன்னார்.அதை நினைவுபடுத்தி..

“சொன்னோம் ஒருநாள்!தூயவரே;அண்ணாவே:
எந்நாள் பிறந்தாலும் இன்பத் திராவிடத்தின்
பொன்னாள் பிறக்காது!பொழுதென்றும் விடியாது!
செத்த பிணத்தைச் சிரந்தூக்கி வலம்வருதல்
 புத்தியுள்ளார் செய்கையல்ல;புதைத்துக் குடமுடைப்போம்
சக்தியுளமட்டும் ஜனநாயக வழியில்
பக்தியுடன் செல்வோம் பாராளும் நிலைபெறுவோம்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
செந்தமிழும் சேர்ந்து திராவிட நாடாவதென்றால்
பட்டப் பகலில் படுத்துறங்குவோன் காணும்
வெட்டிக் கனவு!விட்டுவிட்டு வாருமென்றோம்
முக்கண்ணன் போல முகத்திலொரு கண்திறந்து
அக்கண்ணன் தம்பியரின் அறிவுக்கோர் அண்ணனவன்
திக்கெட்டும் நடுநடுங்க தீயோய் சிறுமதியோய்
திண்ணையிலே காண்பேன் திராவிடநாடென்றானே!
திண்ணையிலே காண்பதற்கு திராவிட நாடென்பதென்ன
தொன்னையிலே நெய்யா?சோற்றுப்புளிக்குழம்பா?
போட்டுப் புரட்டிப் பொழுதை செலவழிக்கும் 
சீட்டு விளையாட்டா சிறுபிள்ளைத் தனமில்லையா.. “

இது, பானை பானையாய் கவிஞர் வடித்த பகடிச்சோற்றின் சில பருக்கைகள் மட்டுமே!! ஆனால் அண்ணா மீது அவருக்கு அந்தரங்கத்தில் தனியான பாசமும், அவரது மேடைத்தமிழில் ஒரு மயக்கமும் கடைசிவரை இருந்தது. காங்கிரஸில் சேர்ந்த பிறகு, 1964ல் அழகப்பா கல்லூரியில் “மறுமலர்ச்சி’ என்றொரு கவியரங்கில் தலைமையேற்றுப் பாடினார் கவிஞர். எவையெல்லாம் மறுமலர்ச்சி என்று பட்டியலிட்டுவிட்டு

“தண்ணார்ந்த பூந்தமிழை மேடைக்கே தந்தவர்யார்?
 அண்ணாதுரை என்றால் அணுவளவும் குற்றமில்லை!
 தட்டுகிறான் தம்பி,அவர் தலைவரென நான்நம்பி
வளர்ந்திருந்த காலத்தை மறக்கவில்லை பாடிவிட்டேன்”  என்று குறிப்பிட்டார்

தமிழ்த்தேசியக்கட்சியை ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து உருவாக்கியவர்களில்  கவிஞரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப்
பார்த்து, “தடை எங்கே படை இங்கே இன்று கேட்ட
               தானையிளந் தலைவர்களே நானுரைப்பேன்
                தடை இங்கே படை எங்கே தலைவரெங்கே
                தமிழ்ச்சேனை வெள்ளத்தின் தன்மை எங்கே?
                தொடையின்று நடுங்குவதேன்”        

என்றெல்லாம் எக்காளமிட்டார்.தமிழ்த்தேசியக் கட்சி செம்மையும் நீலமும் கலந்த கொடியொன்றினைக் கொண்டிருந்தது. நிலம் சிவப்பு, கடல்நீலம் என்று அதற்கும் ஒரு விளக்கக் கவிதை எழுதினார் கவிஞர்.தமிழன் மண்ணை செம்மையாக்கினான்.நாவாயேறிக் கடலில் நான்கு திசைகளும் போனான் என்பது கவிஞர் தந்த விளக்கம்.கட்சியின் விளக்கமும் அதுதானா என்று தெரியவில்லை. காலப்போக்கில் கட்சி தடுமாறியது.காங்கிரஸில் இணைந்தது.அங்கே போய்ச் சேர்ந்தபோது கவிஞரின் கவிதைகளுக்குக் கிடைத்த காவிய நாயகனே…காமராஜர்!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-25

ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் என்று வரையறை செய்ய இயலும். அதேபோல மனிதனின் செயல்களே அவனைஅளப்பதற்கான கருவிகள். உணர்ச்சியின் கைப்பொம்மையாய் உலவுவதும், அறிவின் துணைகொண்டு ஆளுவதுமான இரண்டு வழிமுறைகளில் மனிதன் எதைத் தேர்வு செய்கிறான் என்பதை அவன் ஆய்வு செய்ய மறக்கும்போதுதான் அவனைப் பற்றி அடுத்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன், தன்னை ஆய்வு  செய்து  கொள்வதில்  தயவு  தாட்சண்யமில்லாதவர். அப்படி ஆய்வு செய்து அவர் வெளியிட்ட அறிக்கைகளில் முக்கியமானவை என்று நான் கருதுபவை  இரண்டு..

நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்

நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்

“இடறி விழும் இடங்களில் எல்லாம் முட்கள் தைக்கின்றன.அவை ஒரு காலத்தில் நானே போட்டவை”.இந்தத் தெளிவு வருகிறபோது யாரையும் குறைசொல்லத் தோன்றாது. அதேபோல,தான் கடைவிரித்துக் கூவி விற்றவற்றில் நல்லபொருட்கள் அதிகமில்லை என்று கவிஞர் சொல்கிறார்.அதற்கான காரணங்களை,இந்தக் கவிதையின் தொடக்கத்தில் சொல்கிறார்.

மானிடரைப் பாடிஅவர்  மாறியபின் ஏசுவதென்   வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கிஉடன்   வலிக்கும்வரை  தாக்குவதில் மனிதரில்   நான் தெய்வ மிருகம்

இக்கவிதைக்கு சுவையானதொரு பின்னணி உண்டு. முரண்படக்கூடிய மனிதர்களைப் பாடுவதலேயே கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் முரண்பாடுகள் தோன்றுவதாகவும், எனவே மனிதர்களைப் பாடுவதைக் குறைத்துக் கொண்டால் கவிதைகளில் முரண்பாடு குறையுமென்றும், கவிஞரை மேடையில் வைத்துக் கொண்டு ஒரு மேடையில் சிலம்புச் செல்வர்.ம.பொ.சி.சொன்னாராம்.அந்த வாரமே இந்தக்கவிதையை எழுதினாராம் கவிஞர்.திரு.தமிழருவி மணியன் அவர்கள் இதை மேடைகளில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அடையாளமாக,இந்தக் கவிதையில்

செப்பரிய தமிழ்ஞானச்    சிவஞானம் சொன்னமொழி   சிந்தையிடை வைத்துவிட்டேன்

 தேன்வாழும் மலர்கொண்டு   திருமாலை கட்டியதைத்  தெருக்கல்லில் சார்த்த மாட்டேன்
 வைப்பதொரு பூவேனும் பொன்னேனும் மனங்கொண்டு மறைசக்தி அடியில் வைப்பேன்
 வானளவு வாழ்ந்தாலும்  மலையளவு கொடுத்தாலும்  மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார் கவிஞர்.

சொன்னாரே தவிர, அவரால் அப்படி நீண்ட நாட்கள் இருக்க  முடியவில்லை. மனிதர்களைப்  பாடினார். மனசாட்சி  கேள்விகேட்ட  போது ,”மனிதரைத் தான்பாட  மாட்டேனேயல்லாமல்  புனிதரைப்  பாடுவேன்” என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்   .

ஆனாலும், தான் செய்தது தவறு என்கிற எண்ணம் அவரை உறுத்திக்  கொண்டேயிருந்தது .
  

ஊர்நெடுக என்பாட்டை உளமுருகப் பாடுகையில் ஓர்துயரம் என்னுள்வருமே

 உதவாத பாடல்பல உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும்மனமே
என்னுந் தன்னிரக்கத்தை அவரால் தவிர்க்கவே முடியவில்லை.

ஆனால் இதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட பக்குவம் அளவில்லாதது. வாழ்வில் ஒன்று தேவைப்படும்போது வேறொன்று வரும், அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடவேண்டுமே தவிர மலைத்துப்போய் உட்கார்ந்தால் மனச்சோர்வுதான் மிஞ்சும் என்பது அவர் கண்ட அனுபவம்.
  

பசித்த வேளையில் பாழும் கஞ்சியும்

  பசியிலாப் போழ்தில் பாலும் தேனும்
  கொடுத்த தேவனைக் கோபிக்கலாமா?
   குறைந்த என்பசியைக் குறைசொல்லலாமா?

என்பது அவர் முன்வைத்த சமாதானம். அதேநேரம் வாழ்க்கை என்னும் மாபெரும் விடுகதைக்கு இந்தப் பக்குவத்தால்   பதில் கண்டுவிட்டதாகவும் அவர் கருதவில்லை.

 குறையென் மீதோ குற்றம் யாதோ
  குலைத்து நிமிர்த்தும் கொற்றவன் யாரோ என்று உருட்டப்பட்ட பகடையின் உள்ளப்பாங்கோடுதான் உலகவாழ்க்கையை அவர் எதிர்கொண்டார்.

பலன்கள் பற்றிய பதைப்பைப் பெரிதும் வெளிப்படுத்தாமல்,பணிகளைத் தொடர்வது என்கிற கர்மயோக மனநிலை அவருக்குக் கைகூடியது.வாழ்க்கை என்றல் என்னவென்ற கேள்வியை, தன்னிடமிருந்தே தொடங்கியதால் அவருக்கு இந்தநிலை பிடிபட்டது. பலரும் நடக்கிற சம்பவங்களை மட்டுமே வைத்து வாழ்வை எதிர்கொள்ளும்போது பதட்டம் மிஞ்சுகிறது.அனால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்கிற என்பதை உணரும்போது மனம் சமநிலை கொள்கிறது. அந்தச் சமநிலையே, நடப்பது நடக்கட்டும் என்கிற சரணாகதி நிலையையும் ஏற்படுத்துகிறது.

நீரோ நெருப்போ நிகழ்வன யாவையும்
ஈசன் பொறுப்பென இயக்கிய நடையை 
இன்னும் தொடரக் கால்வலுவுண்டு
எங்கே எப்படி என்ன நிகழுமோ என்கிறார் கவிஞர்.

அதற்காக வாழ்வாசை அற்றுப்போன நிலையில் அவரில்லை. பிரியங்களும் பந்தங்களும் ஒருபுறம், பட்டுணர்ந்த ஞானம் ஒருபுறம் என்று இரண்டுக்கும் நடுவே தானாடிய ஊஞ்சலை உள்ளூர ரசித்திருக்கிறார்.

முக்காற் பயணம் முடித்த கிழவனும்

முதலடி வைக்கும் முதிரா இளைஞனும்
நடுவழி நிற்கும் நானும்போவது
ஆசை என்னும் அழகிய ரதத்தில் என்னும்போது, வாழ்க்கைப் பயணத்திற்கான வாகனம் ஆசையே என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

இந்த ஊஞ்சலின் இருமுனைகளுக்கும் மாறிமாறி உந்தித்தள்ளி ஊஞ்சலாடியதில்தான் அவரது படைப்பியக்கம் விசைகொண்டது.

இந்தப் புரிதல் தந்த தெளிவு, ஒரு காலகட்டத்தில் எதையுமே பதட்டமின்றி ஏற்கும் பக்குவமாய் மலர்ந்தது. இது காலகாலங்களுக்கும் அவருக்குள்ளே நிலைத்திருந்ததா என்றால்..தெரியாது. ஆனால் கவிதை வரிகளாய் அவை நிலைபெற்றன.

மனிதனின் கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் அனைத்தையுமே
சமநோக்கோடு பார்த்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய அபூர்வமான வரிகள்
இவை.

காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்
கோடைநாளில் மேற்கொண்ட சாலைவழிப்பயணத்தில் வழியில் தென்பட்ட
காற்றோட்டமான கோயில் மண்டப நிழல்போல் இதமான வரிகள் இவை.

(தொடரும்…)