அபிராமி அந்தாதி – 6

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை!

திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராம வல்லியின் திருமுலைகள் செப்புக் கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன.

சைவ சித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம் அவளுடையது. மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளே அதிபதி. கடலின் அலைகள் சலசலக்கின்றன; நடுக்கடல் சலனமில்லாமல் இருக்கிறது. சலனம் கடந்த மனவுறுதியை தியானத்தினாலோ ஞானத்தினாலோ அருள்பவள், மனோன்மணி. அவள் ஆற்றிய காரியம் ஒன்று இருக்கிறது.

தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் எழுந்தது. அதனை சிவபெருமான் அருந்தினார். அம்பிகை தன் திருக்கரத்தை பெருமானின் கண்டத்தில் வைக்க நஞ்சு அங்கேயே தங்கியது. அது நீல கண்டமானது. இப்படித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் அபிராமிபட்டர் சொல்வது கொஞ்சம் புதுமையாய் இருக்கிறது. சிவபெருமான் அருந்திய நஞ்சு, அம்பிகை கைபட்டு அமுதமாகிவிட்டதாம். இத்தனைக்கும் அந்த நஞ்சைக்கூட அவள் நேரடியாய்த் தொடவில்லை. பெருமான் நஞ்சை அருந்தியபின் வெளியே கழுத்தில்தான் அவள் கைபட்டது. அதற்கே நஞ்சு அமுதமாகிவிட்டது. அதாவது அமுதம் வேண்டுமென்று தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை என்கிறார் அபிராமிபட்டர். ஒரு குடம் நஞ்சைக் கொண்டுவந்து அம்பிகையின் திருமுன்னர் வைத்திருந்தால் அவள் அதனைத் தொட்டு அடுத்த விநாடியே அமுதமாக்கித் தந்திருப்பாள்.

தாமரை மலர்மேல் அழகுற வீற்றிருக்கும் அம்பிகை என்னும் பொருளில் “அம்புயமேல் திருந்திய சுந்தரி” என்கிறார். தாமரையில் வீற்றிருப்பவர்கள் கலைமகளும் அலைமகளும்தான். ஆயிரம் இதழ்கள் கொண்ட சஹஸ்ர ஹாரத்தின் உச்சியில் வீற்றிருக்கும் பராசக்தி என்பது இங்கே கொள்ள வேண்டிய பொருள். அவர் சுந்தரி மட்டுமல்ல; அந்தரியும்கூட! ஆன்மாவின் அந்தரங்கமாய் நிற்கக்கூடியவள். ஆகாயமாகிய அந்தரமெங்கும் நிறைந்திருக்கக்கூடியவள். அவளுடைய திருப்பாதங்கள் தன் சென்னியின் மேல் பதிந்திருப்பதை பிரத்யட்சமாக உணர்கிறார் அபிராமி பட்டர்.

“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.”

அபிராமி அந்தாதி – 5

அபிராமியின் அடிதொழும் அன்பர்களின் பட்டியலை வெளியிடுகிறார் அபிராமிபட்டர். இது முழுப்பட்டியல் அல்ல. முதல் பட்டியல். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும்.

“மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக்கே கோமளமே”

அம்பிகையை வழிபடுவதில் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் மாயா முனிவர்களுக்கும் போட்டா போட்டிதான். இதில் மாயா முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக் குறிக்கும் அதே நேரம் திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்ற மார்க்கண்டேயரையும் குறிக்கும்.

அம்பிகையை அன்றாடம் வணங்குபவர்கள் பட்டியலில் மார்க்கண்டேயர் இடம் பிடித்திருப்பதில் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. எமதர்மனை காலசம்ஹாரமூர்த்தியாகிய சிவபெருமான் இடது திருவடியால் உதைத்தார். இடது பக்கம் அம்பிகைக்குரியது ஒரு தரப்பினருக்கு சார்பாக அரசாணை வருகிறதென்றால் அந்த அரசாணையை நிறைவேற்றுபவர் அரசாங்க உயர் அலுவலராக இருப்பார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பார்கள். முதலமைச்சர் சொல்லி அலுவலர் செய்தார் என்பதுதான் காரணம். அதுபோல் கூற்றுதைத்தவர் சிவபெருமான் என்றாலும் வாம்பாகம் அம்பிகைக்குரியது. எனவே மார்க்கண்டேயர் நன்றி தெரிவித்து வணங்குவதில் வியப்பென்ன?

அம்பிகையின் திருவடித் தாமரைகளை எத்தனையோ வணங்கினாலும் அது வாடுவதில்லை. “சேவடிக் கோமளமே” என்பதற்கு திருவடித்தாமரை என்றும் பொருள். அனைவராலும் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்ட தாமரையே என்றும் பொருள்.

கொன்றைத்தார் சூடிய தன் சடாபாரத்தில் குளிர்ந்த நிலவையும், நாகத்தையும் கங்கையையும் சூடியவராகிய சிவபெருமானும் அம்பிகையும் தன்னுள்ளத்தில் வந்து பொருந்தி நிற்க வேண்டுமென்று கேட்கிறார் அபிராமி பட்டர்.

“மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புத்தி எந்நாளும் பொருந்துகவே”

அம்பிகையின் திருவடிகளை சிவபெருமானே வணங்குகிறார் என்னும் செய்தியைப் பின்னர் காணப் போகிறோம். எனினும் தம்பதி சமேதராக வருகிறபோது உன் கணவரும் நீயும் என்று சொல்வதுதானே மரபு. தன் மகள் கணவனுடன் வருகிற போது தந்தையின் நாவில் வரும் முதல் வார்த்தை “வாங்க மாப்பிள்ளை” என்பதாகத்தான் இருக்கும். அதுபோல் பெருமானின் மேன்மைகளை முதலில் சொல்லி அவரும் நீயுமாய் என் புந்தியில் வந்து பொருந்துங்கள் என்று வேண்டுகிறார்.

ஒரு பீடம் அமைக்கப்படுகிறதென்றால் அதில் எழுந்தருளப் பெறவுள்ள மூர்த்திக்கு மிகச்சரியாக அந்த பீடம் அமைக்கப்படும். மூர்த்தியைக் கொணர்ந்து பீடத்தில் அமர்த்துகையில் அது மிகச்சரியாகப் பொருந்தும். தன்னுடைய புத்தியானது, அம்மையும் அப்பனும் வந்தமரும் விதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாய் “புந்தியில் வந்து பொருந்துகவே”என்கிறார் அபிராமிபட்டர்.

அபிராமி அந்தாதி 4

அவளைப் புரிந்தால் அனைத்தும் புரியும்!

ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன். காணாதன காண்கிறார்கள். காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள்.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார். “ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையது என்று பிடிபடுகிறது. அந்த மனத்திலிருந்து என்ன வெளிவரும் என்று தெரியுமாதலால் அதை முழுவதும் படிக்காமலேயே அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்துவிடுகிறது” என்று.

எல்லோராலும் அறியப்படாத அளவு ரகசியமும் ஆழமும் கொண்டவை நான்மறைகள். நான்மறைகளாலும் அறியப்பட முடியாத அற்புதமாய் விளங்குபவள் அம்பிகை. ஆனால் அம்பிகையை துணையாய் தொழும் தெய்வமாய் பெற்ற தாயாயுணர்ந்துவிட்டால் வேறென்ன வேண்டும்? அம்பிகையையே நேரடியாக விளங்கிக் கொண்டபிறகு அம்பிகையை விளக்க முற்படும் வேதங்கள் விளங்காதா என்ன?

“அறிந்தேன் எவரும் அறியா மறையை” என்கிறார் அபிராமி பட்டர்.

யாராலும் அறியப்படாத மறையை அறிந்து கொண்டதன்மூலம் அபிராமிபட்டர் தெளிந்ததென்ன?

“அறிந்தேன் எவரும் அறியா மறையை – அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே.”

ஏற்கெனவே அனுபவ ரீதியாக அபிராமியின் திருவடிகளே அனைத்தும் என உணர்ந்திருந்ந உண்மையை நால்வேதங்களையும் கற்றதன் மூலம் உறுதி செய்து கொள்கிறார் அபிராமிபட்டர். அம்பிகையின் திருவடிகளே சதம் என்பது எல்லா வகைகளிலும் உறுதிப்பட்ட பிறகு அதுவரை நம் உறவு வட்டத்தில் தென்பட்ட மனிதர்களில் சிலர் தாமாகவே விலகிவிடுவது இன்றும் கண்கூடாய் பலரும் காண்கிற ஒன்று. எந்தப் பயனையும் தராத வெற்றுத் தொடர்புகள் விலகுவது தாமாகவும் நிகழும். நாமாகவும் முயன்று விலக்குவோம்.

அப்படி விலகிச் செல்பவர்கள் யாராக இருப்பார்கள் என்றால் அம்பிகையின் அடியார்களுடைய பெருமைகளை எண்ணும் நற்பேறு வாய்க்காத அளவு தீய வினைகளில் கட்டுண்டு, நரகத்தில் தலைகீழாய் விழக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அருள்நெறி சாராதவர்களாக, தங்கள் குறுகிய விருப்பங்களன்றி வேறொன்றும் பாராதவர்களாக இருப்பார்கள்.

அம்பிகையை உணர்ந்தவர்களுக்கு வேதங்கள் கல்லாமலே கூடப் புலப்படும். ஆனால் அதுபோதாது. சராசரிக்கும் கீழான எண்ண ஓட்டங்கள் கொண்ட மனிதர்களைவிட்டு விலகுவதும் நிகழ வேண்டும். அதுதான் அருள்நெறிவிட்டு வழுவாத வாழ்க்கைப் பயணத்தை உறுதி செய்யும்.

“அறிந்தேன் எவரும் அறியா மறையை ; அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே! திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தேவிழும் நரகுக்கு உறவாய மனிதரையே.”

அபிராமி அந்தாதி 3

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்….

அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி…
“விரலருகாய் வெகுதொலைவாய்
இருக்கின்றாய்.. உன்னை
வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து
விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.”

சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது. வழித்துணை, இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை, இவற்றில் பல வழியிலேயே போகும். சில வந்தவுடன் போகும். சிலவோ போகவென்றே வரும்.

ஆனால் அம்பிகை நிலையான துணையாய் நிரந்தரப் பற்றுக்கோடாய் பக்கத்திலேயே இருக்கிறாள். “துணையும்” என்கிறார் அபிராமிபட்டர். பெரும்பாலும் பக்கத்திலேயே இருக்கும் ஒன்றின் அருமை அநேகருக்குத் தெரியாது. அளப்பருங்கருணையால்தான் அம்பிகை அருகில் இருக்கிறாளே யன்றி அவள் பென்னம் பெரியவள் என்ற பிரக்ஞையும் நமக்கு வேண்டும். எனவே , “தொழும் தெய்வமும்” என்கிறார் பட்டர்.

தொழும் தெய்வமாக இருக்கும் அபிராமி பெற்ற தாயாகவும் பரிவு காட்டுகிறாள். ஒன்றின் பிரம்மாண்டம் நமக்குப் புரிந்தவுடனே அந்தப் பெருஞ் சக்திக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டா என்கிற கேள்வியும் கூட வரும்.

உலக வாழ்வில்கூட ஒருவரை எவ்வளவுதான் நெருக்கமாய் உணர்ந்தாலும் அவரது பெருமை புரியப் புரிய மனதுக்குள்ளொரு சிறு நெருடல், ஏக்கம், விலகல் ஏற்படும்.

மனிதர்களிடையிலேயே இப்படியென்றால் தெய்வத்துடனான உறவில் கேட்கவே வேண்டாம். ஆனால் அபிராமி துணையாகவும் தொழும் தெய்வமாகவும் மட்டுமின்றி பெற்ற தாயாகவும் இருக்கிறாள். மூவுலகங்களையும் ஆளும்போதே பிள்ளையின் அழுகுரல் கேட்டால் ஓடோடி வரும் பேரன்பு வடிவம் அவள்.

“பிரபஞ்சங்கள் கருப்பையில் பெற்றெடுத்து வளர்ப்பாள்
பிரியத்தில் ஒருமகனைப் பெற்றவள் போல் இருப்பாள்
நகரத்தில் நான்வீழத் தாங்காதவள் – இங்கு
நான்பிறந்த காரணத்தால் தூங்காதவள்”
என அம்பிகை பற்றி முன்னர் ஒருமுறை எழுதியிருந்தேன்.

தனிமனித நிலையில் துணையாய் தொழும் தெய்வமாய் பெற்ற தாயாய் இருக்கும் அபிராமி, வேதம் என்கிற விருட்சத்தின் நடுவாகவும் உச்சியாகவும் வேராகவும் இருக்கிறாள். இதில் வேர் என்பது பிரணவம். பணை என்பது நால்வேதங்கள். கொழுந்து, வேதத்தின் உச்சியில் விரியும் மலர்க்கொத்தான உபநிடதங்கள் அத்தனையுமே அம்பிகைதான்.

உணர்வின் தேடலில் உறவுகளின் உச்சமான அன்னையாய், தெய்வமாய், நிலையான துணையாய் இருக்கும் அம்பிகை, அறிவினை தேடலிலோ பிரணவமாய் பிரணவத்தின் விரிவான வேதமாய், வேதத்தின் சாரமாய் விளங்குகிறாள்.

பொதுவாக தெய்வங்கள் கைகளில் சிலவற்றை வைத்திருக்கும். அபிராமியின் கைகளில் இருப்பவையோ அவளைத் தாமாகத் தேடிவந்தவைதான். பனி படர்ந்த மலர்க்கணைகள் கரும்புவில் பாசம் அங்குசம்.
“பனிமலர்பூங்
கணையும் கருப்புச் சிலையும் மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே”

மலர்க்கணையும் கரும்புவில்லும் மன்மதனின் ஆயுதங்கள். உயிர்கள் பிறக்கக் காரணமானவை. பாசமும் அங்குசமும் எமனின் ஆயுதங்கள். உயிர்கள் இறக்கக் காரணமானவை.

தங்கள் வாழ்வில் தெய்வ சாநித்யம் மலரும் வாய்ப்பை மறுப்பவர்கள்தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சுழற்சியில் சிக்குகிறார்கள். அம்பிகையின் கருணை வளையத்துக்குள் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களோ இந்த வட்டத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.
எனவே அம்பிகையின் பக்தர்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் வரமாட்டார்கள் என்பதை உணர்த்தும் விதமாக தங்கள் அதிகார அடையாளங்களாகிய ஆயுதங்களை மன்மதனும் எமதர்மனும் அபிராமியின் திருக்கரங்களில் ஒப்படைத்துவிட்டனர். அவையும் அம்பிகையின் மலர்க்கரங்களை அபயமென அணைந்தன.

அம்பிகைக்கு ஆட்பட்டவர்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சொல்வதன் தாத்பர்யம் அபிராமி அந்தாதியில் போகப்போக மிக நன்றாக புரியும். இப்போதைக்கு அம்பிகையின் கைகளை வந்தடைந்த ஆயுதங்களைப் பாருங்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட மலர்க்கணைகள் பழையவை அன்று. பனி படர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்கள். அவள் ஏற்படுத்தும் உறவுகள் பந்தங்களையோ நிர்ப்பந்தங்களையோ ஏற்படுத்தாமல் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து உய்கதிக்கு உதவுபவை.

எமனின் கரங்களில் கொடூரமான ஆயுதிமாகக் காணப்படும் பாசாங்குசமோ அபிராமவல்லியின் கரங்களில் மென்பாசாங்குசமாகக் திகழ்கின்றது. ஏனெனில் இங்கே அது மரணத்தின் ஆயுதமல்ல முக்தியின் ஆயுதம்.

பெரும்பேராற்றலால் எட்ட முடியாத தொலைவிலும் பெருங்கருணைப் பெருக்கால் உயிருக்கும் மிக அருகிலும் இருக்கும் அபிராமியை அறிந்து கொள்வதிலும் அறிவிப்பதிலும்தான் அபிராமிபட்டருக்கு எத்தனை ஆனந்தம்!!

துணையும் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

அபிராமி அந்தாதி 2

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை
பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி

2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன. தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் திட்டம். என் நினைவு சரியாக இருக்குமே யானால் தை அமாவாசையில் அநத விழா திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த மாவட்டங்களில் நிகழ்ந்த சிலவகை இனக்கலவரங்கள் காரணமாக விழா 15 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. நூலை வெளியிட்டவர் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம். அவருடைய அருளுரையில் மிக இயல்பாய் ஒரு சிந்தனை வந்து விழுந்தது.

“15 நாட்கள் முன்னர் தை அமாவாசையில் இந்நூல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விழா தள்ளிப்போனது. இன்று பவுர்ணமி. அபிராமிபட்டருக்காக தை அமாவாசையைப் பவுர்ணமியாக்கியவள் அல்லவா அபிராமி!அந்த வகையில் இந்நூல் இன்று வெளியாவதும் பொருத்தமே”என்றார் அவர். விழா ஏன் தள்ளிப்போனது என்று மனதில் ஏதேனும் கேள்விகள் இருந்திருப்பின் இந்த விளக்கமே பவுர்ணமி. அந்த நினைவுகளுடன் கிழக்கு வானைப் பார்த்தேன். இளங்காலைப் பொழுதின் செங்கதிர் அபிராமியின் அருள்ள்வடிவை நினைவுபடுத்தும் விதமாய் செந்நிலவு போல் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

“புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலைப்
பொழுதை நிலவாக்கினாள்
அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி
அகிலம் எனதாக்கினாள்”
என்றொரு கவிதை மனதில் எழுந்தது.

மனதில் எழுகிற ஆயிரம் கேள்விகளுக்கு விடைவருவதுபோல் இருண்ட வானத்தில் எழுகிறது செங்கதிர். அந்த வண்ணம் அம்பிகையின் திருவுருவை அபிராமி பட்டருக்கு நினைவூட்டுகிறது. உடனே அம்பிகையின் திருவுருவை நினைவு படுத்தும் பல விஷயங்கள் அவருக்கு நினைவு வருகின்றன.

“உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது”

அம்பிகையின் திருமேனி உதிக்கின்ற செங்கதிராய்த் தோன்றுகிறது. மாதர்கள் உச்சியில் தீட்டிக் கொள்கிற திலகம்போல் தகதகக்கிறாள் அவள். தம்முடைய சிரசின் மீது அம்பிகையின் பாதங்கள் பதிந்திருக்கும் பாவனை பெண்களுக்கிருந்தால் அவர்கள் தீட்டிக் கொள்ளும் உச்சித் திலகம், அவள் பாதங்களுக்குப் பூசும் செம்பஞ்சுக் குழம்பல்லவா!!

நல்லுணர்வு மிக்கவர்களால் மதிக்கப்படுகிற மாணிக்கமாகவும் அவளுடைய திருமேனி ஒளிர்கிறது. மாதுளம்போதுடன் ஒப்பிடத்தக்க கருஞ்செம்மை நிறம் அம்பிகையின் நிறம். மாதுளம் மலரை நேராக நிறுத்திப் பார்த்தால் நின்ற கோலத்தில் தவம் செய்யும் அம்பிகையின் திருத்தோற்றம் போலவே இருக்கும்.

அம்பிகையின் திருமேனி வண்ணத்தை நான்கு அம்சங்களுடன் அபிராமி பட்டர் ஒப்பிடுவதுபோல் இந்தப்பாடலின் ஒன்றரை அடிகள் தோன்றுகின்றன. இந்த வரிகளுக்கு விசேஷமாக வேறொரு நயமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குண்டலினி ஆற்றல் மேலெழும்ப,தங்களுக்குள் ஒளிவெள்ளம் நகர்ந்து சஹஸ்ரஹாரமாகிய உச்சிக்கு வரப்பெற்ற தவ உணர்வுடையோரால் மதிக்கப்படுகிற மாணிக்கம் போன்றவள் என்பதே அந்த விளக்கம்.

“உதிக்கின்ற செங்கதிர்,உச்சித்து இலகும் உணர்வுடையோர்” என்பார்கள். அத்தகைய தன்மையில் இருப்பவர்களால் மதிக்கப்படுகிற மாணிக்கம், அபிராமி. நாகம் குண்டலினி ஆற்றலின் குறியீடாக விளங்குகிறது. நாகத்தின் நஞ்சு பற்றிய நம்பிக்கை ஒன்றுண்டு. அந்த நஞ்சு கெட்டிப்பட்டு முதிர்ந்த நிலையே மாணிக்கம் என்பார்கள். இன்றைய அறிவியல் உலகம் இதற்கு ஆதாரம் இல்லையென்று கைவிரிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளலாம்.

தங்களுக்குள் இருக்கும் குண்டலினி ஆற்றல் முதிர்ந்த நிலையில் ஞானிகள்
மாணிக்கப் பேரொளியாய் அபிராமி தங்களுக்குள் உதிக்கக் காண்பார்கள்.

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது- மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி”

மலர்க்கமலை என்ற சொல் கலைமகளுக்கும் அலைமகளுக்கும் பொதுவெனிலும் இங்கு விசேஷமாக அலைமகளாம் மகாலட்சுமியைக் குறிக்கிறது. ஒரு மின்னல் வெட்டி மறையும் சிறுபொழுதில் அம்பிகையின் தரிசனம் வாய்க்கப்பெற்ற மகாலட்சுமி அந்தத் தரிசனத்தை மீண்டும் பெற வேண்டித் துதிக்கிறாளாம்.

யோகநெறியில் அம்பிகையைத் துதிப்பவர்களுக்கு ஒரு மின்னல்கொடிபோல் அவள் காட்சி தோன்றி மறையுமாம். மனித உடலிலுள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் தாமரை என்று உருவகப்படுத்துவது வழக்கம். சக்ர தேவதைகளாகிய மலர்க்கமலைகள் துதிக்கின்ற மின்னல்கொடி போன்றவள் என்று சொல்வதும் எத்தனை பொருத்தமாய் இருக்கிறது!!

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது- மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி”

அடுத்தவரி இன்னும் அழகு.

“மென்கடி குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”

அம்பிகை தன்னிருப்பை உணர்த்த எத்தனையோ சூட்சுமமான வழிகளைக் கொண்டிருக்கிறாள். தியானத்தில் இருக்கையில் சலங்கை ஒலி, சிரிப்பொலி என்று பலவற்றைக் கேட்டு “அம்மா! வந்துவிட்டாயா!” என்று மெய்சிலிர்க்கும் சாதகர்கள் ஏராளம்.

அவளுடைய இருப்பை உணர்த்தும் அடையாளங்களில் குங்கும நறுமணமும்
ஒன்று. மிக மெல்லிதாய் வீசும் குங்கும வாசம் அபிராமியின் பிரசன்னப் பிரசாதம்.

ஏனெனில் குங்குமத்தில் குளித்தெழுந்த திருக்கோலம் அவள்கோலம். உதிக்கும் செங்கதிராய் உச்சித் திலகமாய் மாணிக்கமாய் மாதுளம் மலராய் குங்கும நறுமணம் வீசும் மின்னல் கொடிபோன்ற அபிராமவல்லியே நிலையான துணை என்பதை உணர்த்துகிறார் அபிராமி பட்டர்.

அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி

அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை
பேசி முடியாப் பேரழகு
பொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ நெடுந் தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும்.
அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை. அவற்றில் ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்…
“சின்னஞ்சிறு பெண்போலே
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்”

முன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும் அமர வைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல்.வரிகளுக்கிடையிலான நிறுத்தங்களும் நிதானமும் ஓர் உரையாடலுக்கான தொனியை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

“பின்னல் ஜடை போட்டு…” என்று சில நொடிகள் நிறுத்தாமல் நிறுத்தி, “பிச்சிப் பூ சூடிடுவாள்..” என்கிறபோது அந்தப் பிச்சியின் கூந்தலில் இருந்து பிச்சிப்பூ மணம் சூழ்வதை உணரலாம்.
“பித்தனுக்கு இணையாக…” என்று நீட்டி, ஒரு விடுகதைபோல் நிறுத்தி “நர்த்தனம் ஆ..ஆ..ஆடிடுவாள்” என்கிறபோது தோன்றும் பரவசம் ஒவ்வொரு முறையும் புதியது.
எனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாட்டின் உச்ச வரிகள் இரண்டு.
“பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது…
பேரழகுக்கீடாக…வேறொன்றும் கிடையாது.”

இறைமையின் பேரழகையோ பேராற்றலையோ விளக்க முயலும் எந்தக் கலைகளும் தம் எல்லையைக் கண்டு கொள்ளும் இடம் இதுதான். கலைகளென்ன? வேதங்களுக்கே அந்தக் கதிதான். “வேதங்கள் ஐயா எனவோங்கி நிற்கும் அளவு ஆழ்ந்தகன்றதும் நுண்ணியதுமான இறைத் தன்மையை விளக்கும் முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் முயற்சி தோற்றாலும் அந்த அனுபவம் அவர்களுக்கு சித்தித்துவிடுகிறது. அந்த அனுபவம் சிந்தாமல் சிதறாமல் பகிரப்படும்போது கிடைக்கும் உன்னத உன்மத்தத்தை என்னென்பது? அத்தகைய உன்னதம்தான், அத்தகைய உன்மத்தம்தான் அபிராமி அந்தாதி.

“ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாட”
என்றார் மாணிக்கவாசகர். ஆதியந்தம் இல்லாத அம்பிகையை அந்தாதியிலேயே பாடினார் அபிராமி பட்டர். இஷ்ட தெய்வத்தை இதயத்தில் இருத்துவதும் துதியிலும் தியானத்திலும் அதனுடனேயேகலந்திருப்பதும் முடிவுறாத் தொடர்ச்சிதானே! அந்தத் தொடர்ச்சியின்ஆனந்தத்தைத் தருவது அபிராமி அந்தாதி.

வாழ்வின் அற்புத கணங்கள் எவையென்று கேட்டால் தன்னை மறக்கும் கணங்கள் தன்னை இழக்கும் கணங்கள் என்றெல்லாம் பலரும் சொல்வார்கள். தன்னை மறப்பதைவிட தன்னை இழப்பதைவிட தன்னைக் கடக்கிற கணம் தான் உண்மையிலேயே மிக அற்புதமான கணம்.

அலுவலகம் விட்டுவரும் அப்பா குழந்தையின் கையிடுக்குகளில் கைகள் கோர்த்து கரகரவென சுற்றுவார். கண்கள் செருக தலைசுற்ற அலறிச்சிரிக்கும் குழந்தை. இறக்கிவிட்ட மறுநொடியே “இன்னும் இன்னும்” என்று கைவிரித்து ஓடிவரும். இதில் குழந்தைக்கு ஒன்று தெரிகிறது.
கண்கள் செருகினாலும் தலை சுற்றினாலும் அப்பாவின் கைகளில் பத்திரமாக இருக்கிறோம் என்பதால் அது தன்னை மறக்கிற போதே தன்னைப் பற்றிய அச்சத்தைக் கடக்கவும் செய்கிறது.
அபிராமி பட்டர் என்னும் அப்பாவின் கவிதைக் கரங்களைப் பற்றி கரகரவென சுற்றும் உயிருக்கு ஏற்படும் அபிராமி அனுபவம், தன்னை மறக்கவும் செய்கிறது, தன்னை, தன் வினைகளை, பிறவித் தொடர்களை கடக்கவும் செய்கிறது.

அபிராமி என்ற சொல்லுக்கே பேரழகி என்றுதான் பொருள். பேச்சில் அடங்காப் பேரழகு. பேசி முடியாப் பேரழகு. “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி.” அது வெறும் திருமேனி அழகா?? இல்லை. கருணையின் அழகு. பேரறிவின் அழகு. மூவராலும் பணிந்து வணங்கப்படும் பேரருளின் பேரழகு. “அவள் இருக்கிறாள்” என்னும் பாதுகாப்புணர்வில் நம்மில் பெருகுகிற நிம்மதி என்ன அழகோ, அந்த அழகே அபிராமி.

தன்னில் அவளை ஒளியாக உணர்ந்து அவளின் அருளமுதத்தில் முற்றாய் நனைந்து அந்த மௌனத்திலேயே அமிழ்ந்து, சரியான தருணம் தாழ்திறக்க தனக்குள் தளும்பி வழியும் அந்த அனுபவம் தன்னையும் தாண்டி உடைப்பெடுப்பதையும் பெருக்கெடுப்பதையும் அபிராமிபட்டர் மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க உருவான பனுவல்களே அபிராமி அந்தாதி.
தை அமாவாசையில் சரபோஜி மன்னன் திருக்கடவூர் வந்ததும், அன்னையின் திருமுகவிலாசத்தை மனத்தே வைத்து தன்னந்தனியிருந்த அபிராமி பட்டரிடம் என்ன திதி என்று வினவியதும் அவர் பவுர்ணமி என்று சொன்னதும் அந்தத் தருணத்தின் தாழ்திறப்புக்கான ஏற்பாடுகள் மட்டுமே. திதிகேட்க வைத்தவளும் அவளே! தமிழ்பாட வைத்தவளும் அவளே!
எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை. ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு.

“தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே”

இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில் பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமி அந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை விட்டு விட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்?
இப்படி வேண்டுமானால் இருக்கலாம். திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்கு திருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக் குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ள வாரணப் பிள்ளையார் அவர். தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர்.

அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்றுகூட அதனைக் காக்கும் பொறுப்பை கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்.

எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே தொடங்கிவைக்கிறார் அபிராமிபட்டர். அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில் அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக் கோலத்திலேயே காட்டுவார் அபிராமிபட்டர். அந்தக் காட்சி காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது.

தார், ஆண்களுக்குரியது. மாலை பெண்களுக்குரியது. முனைகள் கட்டப் படாதது தார். முனைகள் கட்டப்பட்டது மாலை. அதிலும் கொன்றையந்தார் சிவ பெருமானுக்குரியது. சண்பகமாலை அம்பிகைக்குரியது இரண்டும் ஒருங்கே சார்த்தப்பட்ட உமையொரு பாகராம் தில்லை ஊரரின் புதல்வராகிய கார்மேனிக் கணபதியே! உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும் என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார்.

விநாயகப் பெருமானின் திருமேனி மேக நிறம். “நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும் கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி. அந்த விநாயகர் திருவருளால் முகிலில் இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார் பட்டர்.
ஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. “சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே.”

அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும் இந்தப் பாடல் அமைகிறது.
(தொடரும்)

thangappa1

ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு

மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய

கவிஞர் .இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி.

.இலெ.தங்கப்பா

மரபின் மகத்துவ உயிர்ப்பு

மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன.

யாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் உள்ள ஆவேசமும் அந்த ஆவேசத்தின் ஆழம் பொதிந்த சொற் சொட்டுகளும் வியப்பூட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் எந்திரமய வாழ்க்கையினூடே சங்க காலப் புலவரொருவர் பயணம் பாடுமோ அவற்றையெல்லாம் தங்கப்பா பாடுகிறார்.

பேருந்துப் பயணமொன்றில் அழுக்கும் வியர்வையுமாய் ஏறிய உழவர்க்கு அருகிலிருந்த ஒருவர் இடம்தரத் தயங்க, தன்னருகே அமர்த்திக் கொண்ட தங்கப்பா, ‘நெஞ்சோடு கூறியதாய்’ ஒரு கவிதை இதற்குச் சான்று.

பழங்குடி மகனே! பழங்குடி மகனே!

                                உழுதொழில் ஆற்றி இவ்வுலகு புரந்து ஓம்பினும்

                                இழிகுலம் ஆகிய பழங்குடி மகனே!

                                வாழிய! வந்தென் அருகில் அமர்க!

                                அழுக்குடல் கந்தல் அரைத்துணி கண்டாங்கு

                                இழுக்குற்றனர் போல் எரிமுகந் திருப்பிநிற்கு

                                இடந்தரத் தயங்குவார்க்கு உடைவது என்கொல்!

                                கிடந்தனர் சிறியர்! என் கிட்டி வந்தமர்க!”

 

உழவர் அருகில் வந்து அமரப்பொழுது தந்து, அவர் அமைதியடைந்த பின் தொடர்கிறது கவிதை.

வெள்ளை ஆடையும் விரைசெறி மேனியும்

                                எண்ணெய்ப் பூச்சும் இருப்பினும், பலரிங்கு

                                 உள்ளம் அழுகி உணர்வெலாம் நாறும்

                                கள்ளர், களியர், காமவெங் கயவர்!

                                நின்னினுங் கோடி நிலை கீழ் ஆவர்!

                                அன்னவர்த் தொடலும் அருவருக்கிறேன்!

                                நின்னை என் இருகை புல்லவும் விழைவேன்!”

இத்தனை சொல்லியும்கூட அந்த உழவருக்குக் கூச்சம் அகன்ற பாடில்லை போலும்! கவிதை தொடர்கிறது.

 

ஒட்டிவந்து அமர்க, உடல் உராய்ந்திடுக!

                                கட்டிய கந்தல், என் துணி கறை செய்க!

                                மேலுறும் வியர்வை என் மேனியை நனைக்க!

                                தோள் நனிதொடுக! தொடுக நம் உளமே!”

 

என்று, தயக்கத்துடன் தள்ளி அமர்ந்த உழவரை அருகில் இழுத்தபடி கவிதைப் பயணமும் பேருந்துப் பயணமும் தொடர்கிறது.

 

உழவருக்கு இடம்தர மறுத்தவர்களை, ‘அவர்கள் கிடக்கிறார்கள்! இங்கே வந்து உட்கார்!’ என்று சொல்வதைப்போல,

கிடந்தனர் சிறியர்! என் கிட்டி வந்தமர்க!” என்று எழுதும் இடம் வெகு அழகாக அமைந்திருக்கிறது.

மரபு வயப்பட்ட மனம், பழைய பதிவின் சாயலில் புதிய நிகழ்வுகளை எழுதிப் பார்க்கும் இயல்பு கொண்டதுதான். போருக்குச் சென்று மீளும் வீரர்கள், தங்கள் இல்லங்களின் வாயிலில் நின்று உள்ளே உறக்கத்திலிருக்கும் காட்சியை கலிங்கத்துப் பரணி காட்டுகிறது.

வருவார் கொழுநர் எனத்திறந்தும்

                                வாரார் கொழுநர் என அடைத்தும்

                                திருகும் குடுமி விடியளவும்

                                தேயும் கபாடம் திறமினோ!”

என்ற அந்தக் கடைத்திறப்பின் போக்கில், புயலுக்கஞ்சி வீட்டுக்குள் இருக்கும் பெண்களைக் கதவு திறக்கக் கேட்கும் பாடல்களை எழுதுகிறார் தங்கப்பா.

குருதிச் சிவப்பை விழிவாங்கக்

                                குளிர்க்கண் கருப்பை உடல்வாங்க

                                உருகி வெய்யிலில் உழைத்திடுவீர்

                                ஓட்டைக் கதவம் திறமினோ

 

                                “அரிசி வடித்த கொதிநீரும்

                                அகத்திக் கீரைப் புன்கூட்டும்

                                பெரிய உணவாய்க் கொள்மடவீர்

                                பிளந்த கதவம் திறமினோ

 

எழுந்த காற்றின் சீற்றத்தால்

                                இடையின் துகிலும் புனல்உய்க்கக்

                                கிழிந்த பாயை எடுத்துப்பீர்

                                கீறல் கதவம் திறமினோ

 

பொங்கும் மழைக்கே நடுநடுங்கிப்

                                புகுந்த குடிசை சுவர் இடிய

                                அங்கும் இருக்க வகைஅற்றீர்

                                அழிந்த கதவம் திறமினோ

என்றெல்லாம் எழுதிச் செல்லும் தங்கப்பா, சங்கப் பாவலர் தம் தோன்றல் என்ற முத்திரையோடு சிற்றிலக்கிய வகைமைகளையும் சிறப்புக் கையாள்கிறார்.

காரிருளின் கம்பளி விரிக்கும் பேரிரவு, இவர் கண்ணுக்குப் பேயணங்காய்த் தெரிகிறது. உலகை இருள் அணைக்கும்போது இரவெனும் பேய் உலகையும் ஏன் வானையும் கூடத் தின்பதுபோல உணர்கிறார் இவர்.

பகற்பொழுதில் எவ்விடத்தே

                                பதிவிருந்து நோக்கினளோ?

                                தகதகக்கும் வன்பசியால்

                                தன் அன்பு கெட்டனளோ?

                                முகத்திலிருள் கடுகடுக்க வந்தாள்அவள்

                                மூண்ட பசியால் உலகைத் தின்றாள்.

 

செக்கச் சிவந்த மலர்ச்

                                செவ்வானத் தோட்டத்திலே

                                மொக்குமல்லி பூத்ததுபோல்

                                முகில்கிடந்த பேரழகை

                                அத்தனையும் இரவுமகள் உண்டாள் & அவள்

                                அழற்பசிக்கு வானினையும் கொண்டாள்.

 

                                தண்பொருநைப் பூங்கரையில்

                                தாவிஅணில் பாட்டிசைக்க

                                வண்டொலிக்கும் சோலையினை,

                                வயிற்பயிரை, வானழகை,

                                உண்டழித்துக் கங்குல்மகள் நின்றாள்பின்

                                ஊர்க்குள்ளும் வாய்திறந்து சென்றாள்

இப்படி, இரவு பேயுருவாய்த் தென்பட்டாலும் விடியல் என்பது சேயுருவாய்த் தென்படுகிறது. விடியல் என்பது சின்னஞ் சிறுவனாகவும் பச்சிளஞ்சேயாகவும் இவர் பாடலில் துயில்கலையக் காண்கிறோம்.

 

கருக்கல் எனும்சிறு செல்லப்பயல்இளங்

                                காற்று விரலின் குளிர்ச்சிலிர்ப்பால்

                                உறக்கமாம் போர்வை முகம் விலக்கிஎன்

                                உணர்வை வருட, எழுந்திருந்தேன்

 

                                “பன்மணி ஆடும் கிலுகிலுப்பைதன்னைப்

                                பாட்டிதன் பேரன்முன் ஆட்டுதல்போல்

                                பொன்னொளிர் வைகறைச் சேயினுக்கோ இங்குப்

                                புட்கள் கிலுகிலு ஆட்டி நிற்கும்

என்று கேட்கிற இடத்தில் இயற்கையில் தோய்ந்த கவிஞரின் இதயம் நன்கு புலனாகிறது.

வைகறையையே ஒரு சேயாகக் காணும் கவிஞர், குழந்தைகள் உலகுக்கு எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா? சிறுவரும் சிறுமியரும் மணல்வீடு கட்டி விளையாடும் காட்சியை வேடிக்கை பார்க்கிறது இவரின் கவியுள்ளம்.

சின்னஞ்சிறு மணல்வீடு சேர்ந்து

செய்வதில்தான் என்ன பாடு!

                                பொன்னென வெண்மணல் கொள்வார்சிலர்

                                போய்ச்சிறு கற்கள் கொணர்வார்

                                முன்னறை பின்னறை வைப்பார் ஒரு

                                மூலையில் திண்ணையும் வைப்பார்

                                இன்னும், கதவுகள் என்றேதென்னை

                                ஈர்க்கினைப் பின்னி அடைப்பார்.”

வீடும் கடையும் கட்டி விளையாடும் குழந்தைகளைப் ரசித்துப் பார்க்கிறார் கவிஞர்.

மிக்க விருப்பத்தினோடே அவர்

                                வீட்டைக் கடையினை ஆள்வார்

                                தக்க பெரியவர் போலே அவர்

                                தாம் செய்யும் நாடகம் என்னே!

                                ஒக்கலில் கல் ஒரு பிள்ளைபால்

                                ஊட்டியிருப்பாள் ஓர் அன்னை

                                வெட்கப்படுவள் ஓர் பாவைபொய்

                                மீசை முறுக்குவான் ஓர் சேய்

பொய்ச் சமையல் செய்து விளையாடும் குழந்தைகள், கவிஞரைக் கண்டதும் தங்களுடன் விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்த ‘விருந்தில்’ கலந்து கொண்டபோது தான் குழந்தைகள் உலகம் மற்றவர்களின் உலகத்தைவிட உயர்ந்தது என்பதை உணர்கிறார் தங்கப்பா.

அப்பக்கம் சென்றிட்ட என்னைமிக

                                அன்பாய் விருந்துக்கழைத்தார்

                                சப்பணம் கூட்டிடச் சொன்னார்ஒரு

                                தட்டெனவே இலை போட்டார்

                                குப்புறச் சோற்றை வட்டித்தார்நல்ல

                                குழம்பென நீரினை வார்த்தார்

                                ஒப்புடன் உண்ணல்போல் உண்டேன்அவர்

                                உற்ற மகிழ்ச்சி என் சொல்வேன்!

                                வீட்டின் சுவர்களும் மண்ணே! அவர்

                                விரும்பும் சுவைப் பொருள் மண்ணே!

                                கூட்டுக் கறிகளும் மண்ணேநெய்க்

                                குப்பியும் காண்பது மண்ணே

                                ஏட்டினை ஆய்பவர்க்குண்டோமலை

                                ஏறும் திறத்தவர்க்குண்டோ

                                காட்சிப் புலவர்க்கும் உண்டோஇந்தக்

                                கற்பனை செய்திடும் ஆற்றல்!”

என்கிறார். நியாயமான கேள்விதானே!

இயற்கையோடும், ஏழை எளியவர்களோடும் குழந்தைகளோடும் கொஞ்சிக் குலாவுவதோடு நின்று விடுவதில்லை கவிஞர் தங்கப்பாவின் கவிதைகள். அவை கலக நிலைபாட்டையும் கைக்கொள்கின்றன. கவிஞர்கள் குயிலையும் கிள்ளையையும் போற்றும் தன்மையிலிருந்து விலகி ஆந்தையை ஆராதிக்கிறார்  இவர்.

பாரதியின் குயில் பாட்டு, இலக்கியத்தோடு ஒப்பு நோக்கத்தக்கதாய் அமைந்திருக்கிறது, தங்கப்பாவின் ‘ஆந்தைப்பாட்டு’. ஒருநாள் காலார நடந்து செல்கிற கவிஞர் சுடுகாட்டுப் பக்கமாய் வருகிறார். அங்கு குடிகொண்டிருக்கும் ‘சொல்லொணாப் பேரமைதி’ அவரை ஆட்கொள்கிறது. அந்தச் சூழலில் தன்னை மறந்து ஈடுபடுகிறார்.

சுற்றுமுற்றும் நோக்கினேன்; சுக்குக்கற் பாறைமேல்

                                பற்றியங்குச் சாம்பல் படர்ந்திருக்கும்;ஆங்காங்குப்

                                பட்டுத் தலைகருகிப் பச்சையெல்லாம் காய்ந்தொழிந்த

                                குட்டைப்புல், முட்செடிகள், குத்தாய் வளர்ந்திருக்கும்

                முள்ளெல்லாம்வெள்ளெலும்பாய்மூதெலும்புக்கூட்டைப்போல்

                                வெள்ளையாய்க் காய்ந்தவொரு வேலமரம் நின்றிருக்கும்.

                                கூனல் நரைக் கிழவன் கோலூன்றி நிற்பதுபோல்

                                சூன்விழுந்து மேனி சுருண்டோர் மரம் நிற்கும்

                                கள்ளி படர்ந்திருக்கும் கற்பாறை மூலையிலே

                                குள்ள முயலொன்று துள்ளிக் குதித்தோடும்.

                                நெல்லிமரம் சுள்ளிகளாய் நிற்கும்; நடக்கையிலே

                                புல்லின் நுனிகுத்தும். போதையிலே கால்தடுக்கி

                                வெள்ளெலும்பு மின்னும்; விறகெரிந்து வீழ்ந்திருக்கும்.

                                கொள்ளிக் குடஞ்சிதறி ஓடாய்க் குவிந்திருக்கும்.”

என்று சுடுகாட்டுக் காட்சியை நுட்பமாக விவரிக்கிறார் தங்கப்பா.

இங்குதான் ஆந்தை அவருக்கு அறிமுகமாகிறது. ஆந்தை பாடும் பாட்டு, மந்திரத்தாலே, நெஞ்சின் மயக்கத்தாலோ மாந்தர் பாட்டாக அவர் செவிகளில் சேர்கிறது. மாந்தரின் இழிநிலையை ஆற்றாது ஆந்தை அரற்றுவதாக அப்பாடல் அமைகிறது.

அழகற்ற பறவையென்று ஆந்தை கருதப்படுவதற்கு மாறாக, ஆந்தையின் ‘அழகு’ கவிஞரை ஈர்க்கிறது.

வட்டக் கருவிழியும் வன்மை அலகும் மிகக்

                                குட்டைக் கழுத்தும் குவிஉடம்பும் என் நெஞ்சில்

                                ஆழப்பதிந்தென் என் அகத்தில் இனித்தனவே என்கிறார்.

பாரதி, குயில் பாட்டில் குரங்கை வர்ணிக்கிறபோது,

மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்

                                கூனியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே

                                வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ

என்று பாடுவதை இந்த இடம் நினைவுபடுத்துகிறது.

ஆந்தையுடனான கவிஞரின் உரையாடல் தொடர்கிறது. மக்களைக் கண்காணிக்கும் பணியில் தான் இறங்கியுள்ளதாகச் சொல்லும் ஆந்தை, இருளில் நடக்கும் சமூகக் கொடுமைகளை விவரிக்கிறது.

மக்கள் நிலையறியும் வேட்கையால் மணடிருளில்

                                புக்கு நகர்நாடு போய்க்கண்டு மீள்வேன் நான்.

                                கூரையிலே வீற்றிருப்பேன்; சாளரத்தில் குந்திடுவேன்.

                                காரிருளின் தீமையெல்லாம் கண்டு புழுங்கிடுவேன்.”

என்கிற ஆந்தை நள்ளிருளில் மக்கள் நடத்தும் பொல்லாக் கூத்துகளைப் பட்டியலிடுகிறது.

வள்ளுவத்தின் மாண்புரைத்து வாய்கிழியும் ஓர்புலவன்

                                நள்ளிரவில் மாற்றான் மனைதோள் நயப்பதையும்

                                முன்னின்று கைக்கூலி பெற்று நடப்பதையும்

                                காதல் தவறுடையாள் கைமகவைக் கொல்வதையும்

                                பாதியிராகப் பூசையென்று பார்ப்பான் ஓர் கோயிலிலே

                                தங்கநகை கழற்றித் தன்மடிக்கு மாற்றிவிட்டு

                                மங்கலுற்ற பித்தளையைக் கற்சிலைக்குப் பூட்டுவதும்

                                அஞ்சாத கொள்ளையும், ஆர்வமிகு சூதாட்டம்

                                விஞ்சு கொலைத் தொழில் வெய்ய பழிதீர்ப்பும்

                                கண்ணேரில் கண்டுள்ளேன்; காணாத தெத்தனையோ?

                                எண்ணில் உளம்நடுங்கும் என்ன உலகமடா?

                                காட்சிக் கொடுமையிவை கண்டு பொறுக்காமல்

                                வீட்டருகே பன்முறை நான் வீறிட்டுக் கத்திடுவேன்

என்கிறது ஆந்தை.

பாரதியின் குயிலைப் போலவே மங்கை வடிவுற்று, மிகப்பலப் பேசி, மீண்டும் ஆந்தை வடிவெடுத்து, தாவிப் பறந்தோட கண்டதெல்லாம் கனவென்று கண்டுகொள்கிறார். இந்தக் கவிதையின் நயம் பாராட்டி நகர்ந்து விடாமல் விழிப்புணர்வு கொள்ளுமாறு வேண்டி நிறைவு செய்கிறார் தங்கப்பா.

விஞ்சு சுவையை வியக்காமல் இவ்வுலகம்

                                கொஞ்சமேனும் தன் குறையுணர்ந்தே இக்கதையால்

                                கூன்நிமிர்ந்தால் சற்றே குருட்டு விழிதிறந்தால்

                                நான்மறப்பேன் என்றன் துயர்

என்று முடிகிறது ஆந்தைப்பாட்டு. ஆனாலும் ஆந்தை மீதான கவிஞரின் காதல் முடிந்தபாடில்லை.

 

அடுத்த சில பக்கங்களிலேயே, ஆந்தையை கூவு என்று அறைகூவல் விடுக்கிறார். ஆந்தைக்கு “மாலைப் பெரும்புள்ளே” என்று இதில் புதிய பெயர் சூட்டுகிறார். ஆந்தைக்கு ஆதரவாய்ப் பாடும் போது, குயில்போல் வாழும் மனிதர்களையும் கண்டிக்கிறார்.

காக்கையின் கூட்டில்போய்க் கள்ளத் தனம் புரியும்

                                போக்கிலாப் புன்குயில்போல் பொய்ப்பதெல்லாம் தாக்குறவே

                                வன்மைக் குரலெடுக்கும் மாலைப் பெரும்புள்ளே

                                என்முன் நீ வாராய் இனிது.”

 

                                “மயல்அழிக, மென்மை மயக்கொழிக என்று

                                குயில் நடுங்கக் கூவுக நீ

 

                                “கூர்த்த விழிப்புள்ளே, குறையுலகின் தீங்கெல்லாம்

                                பார்த்துச் சினமுற்றுப் பாய்வாய் நீ

 

                                “நள்ளிரவில் கண்விழிக்கும் நாதப் பெரும்புள்ளே

                                கள்ளர் நடுங்கக் கரைவாய் நீ

என்றெல்லாம் ஆந்தையை அழைக்கிறார் கவிஞர்.

351 பக்கங்களுக்குத் தொகுக்கப்பட்டிருக்கும் ம.இலெ.தங்கப்பா பாடல்கள், “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தமிழினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மரபின் நேரடிப் பதிவாய், அரிய பாடுபொருட்களின் சூடான தொகுப்பாய் ஒளிர்கிறது, “உயிர்ப்பின் அதிர்வுகள்.”

வெளியீடு : தமிழினி

67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14

விலை ரூ.225.

 

  • மரபின்மைந்தன் முத்தையா

(ரசனை இலக்கிய இதழில் வெளியாகி, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’  நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை.)

 

 

 

 

 

 

 

காற்றினிலே கரைந்த துயர் – எம்.எஸ். பற்றி டி.எம்.கிருஷ்ணா

MS

ஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.”

சங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் தன்னிடம் “எம்.எஸ். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்று சொன்னதைப் பற்றிய குறிப்புடன் இந்நூல் தொடங்குகிறது.

இந்நூலின் “ஆதார சுருதி” கல்கி சதாசிவத்தின் வருகைக்குப் பின்னால் எம்.எஸ். இசையில் நேர்ந்த மாற்றங்களைக் குறிப்பதாகும். இதனை நூலாசிரியரின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், “சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த பட்டத்தின் நூலில் பெரிய கல்லொன்றைக் கட்டிவிட்டாது போல் ஆகிவிட்டது.” (ப.35)

எந்த ராகத்தை எவ்வளவு நேரம் பாட வேண்டும் என்பது வரையில் சதாசிவம் தீர்மானிக்க முற்பட தொடக்கத்தில் எழுப்பிய மெல்லிய ஆட்சேபணைகளும் அடங்கி துல்லியமாய் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எம்.எஸ். இசைக்கத் தொடங்கினார் என்பதை பலவிதங்களிலும் டி.எம்.கிருஷ்ணா நிறுவ முற்படுகிறார்.

“எம்.எஸ். போன்றதொரு கலைஞர், இசைக்கலைஞராக இல்லாத ஒருவர் நிர்ணயித்த விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது ஏற்றுக் கொள்ளவே முடியாதது-. அப்படிக் கட்டுப் படுத்தியது அவருடைய கணவராகவே இருந்தாலும்கூட.” (ப.43)

இசைத்துறையின் நுணுக்கங்களை நன்கறிந்த ஒருவர் இந்நூலை எழுதியிருப்பதாலேயே இது கூடுதல் கவனம் பெறுகிறது. தூயகலைகூட சந்தைப்படுத்தலுக்கு ஆளாகும் வேளையில் என்னென்ன விபத்துகள் ஏற்படும் என்பதை இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா விரிவாகப் பேசியிருக்கிறார்.

கட்டமைக்கப்படும் எந்த பிம்பமும் கட்டுடைக்கப்படும் என்பது பொது விதி. அதற்கு எம்.எஸ். இலக்கா, விதிவிலக்கா என்பதை விவாதங்கள் வழியே இசையுலகம் கண்டுணர வேண்டியது அவசியம்!

ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசமும் ஓஷோ ஆசிரமமும்

osho rajiv

 

 

 

 

 

 

 

 

 

ஓஷோ மீது நிகரில்லா பக்தி கொண்ட சேவகியாய் ஓஷோ ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாய் வாழ்ந்த லஷ்மியின் வாழ்வைச் சொல்லும் நூல் THE ONLY LIFE. பெரும் அவமானங்கள், கடும் நோய், கொடும் அடக்குமுறைகள் எனஎது நேர்ந்தாலும் “இது என் குருவின் கருணை” என ஏற்றுக் கொண்ட லஷ்மி,ஓஷோ ஆசிரமம் முதன்முதலுருவான காலங்களில் அதன் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டவர்.

பாரதத்தின் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் லஷ்மி. சஞ்சய் காந்தி இறந்த போது இந்திராவுக்கு ஆறுதல் சொல்லச் சென்று நீண்டநேரம் அங்கே இருந்திருக்கிறார். அப்போது இந்திரா காந்தி தன் இன்னொரு மகனைப் பற்றிச் சொல்லி, “விமானியாய் இருக்கும் அவனை பொதுவாழ்வுக்கு வருமாறு சொல்லி வருகிறேன். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். நீங்கள் பேசிப் பாருங்களேன்” என்று கேட்டிருக்கிறார்.லஷ்மியும் ராஜீவ் காந்தியை சந்தித்துப்பேசியிருக்கிறார்.

அப்போது மறுத்துரைத்தாலும் பின்னர் ராஜீவ் அரசியலில் நுழைந்தார்.

அதேபோல மொரார்ஜி பிரதமர் ஆவதற்கு முன்னால் அந்தப் பகுதியிலுள்ள சங்கராச்சாரியார் ஒருவர் அழைப்பின் பெயரில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.மொத்தம் பத்தொன்பது சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் ஓஷோவும் ஒருவர். அப்போது விழா மேடையில் சங்கராச்சாரியாருக்கு மட்டும் உயரமான ஆசனம் அமைக்கப்பட்டிருந்ததை மொரார்ஜி கண்டித்தாராம். உடனே ஓஷோ மொரார்ஜியிடம் “எங்கள் யாருக்கும் இதில் மறுப்பில்லை. உங்களுக்கு மட்டும் இது தவறாகத் தெரிய உங்கள் அகங்காரமே காரணம்” என்றாராம்.

மொரார்ஜி ஆட்சியில் ஓஷோ ஆசிரமம் பல சிரமங்களை சந்திக்க இந்த சம்பவமும் காரணமாக இருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் ரஷீத் மாக்ஸ்வெல்.

இந்நூலின் வழி நாமறியும் லஷ்மி குருபக்தியின் ஒளிவீசும் உயிராய்த் திகழ்கிறார், சைமன் &ஸ்க்யூஸ்டர் நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

http://www.simonandschuster.com/books/The-Only-Life/Rashid-Maxwell/9789386797056