12-நினைத்தது போலவே வெற்றி

எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி. இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும்.

விருப்பங்களை நீங்கள் பின் தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும்.

மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போக வேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். அது விருப்பமாக மட்டுமே இருந்தால் காலையும் மாலையும் கடந்து போகிறபோது அந்த எண்ணங்கள் தலைதூக்கும். பிறகு மறந்துவிடும்.

ஆனால் இந்த விருப்பம் எதிர்பார்ப்பாக மாறும்போது, நீங்களே வியப்படையும் விதத்தில் அந்த ஆசை நிறைவேறுவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் அமையத் தொடங்கும்.

விருப்பங்கள் எதிர்ப்பார்ப்புகளாக முதிர்கின்றனவா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு நண்பரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும். ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த எண்ணம் மேலோட்டமாக வந்து போனால் அது வெறும் விருப்பமாகத்தான் இருக்கிறது. உள்ளீடற்றதாக கலைந்து போகக்கூடியதாக பலவீனமான எண்ணமாக அது பதிவாகிறது. இயற்கையில் நிர்வாகத்தில் இதற்கு உரிய இடம் கிடைப்பதில்லை.

நாளன்றுக்குப் பல மணி நேரங்கள் கடுமையாக உழைத்த பிறகும்கூட, உழைப்பதற்கான பலன் கிடைக்காமல் வருந்துபவர்கள் உண்டு. சிறிது நேரம் உழைத்துவிட்டு, அதற்கு சிறந்த பலன்களை நிறைந்த மனதுடன் பெறுபவர்களும் உண்டு, எண்ணம் வலிமையாகி, எதிர்பார்ப்பதில் தீவிரம் கொள்ளும்போது, அவற்றை எளிதில் எட்ட முடிகிறது. எண்ணங்கள் எதிர்ப்பார்ப்பாக முதிர விடாமல் தடுப்பது, “இது நம்மால் ஆகிற காரியமா” என்கிற கேள்விதான்.

ஓர் எண்ணம் நமக்குத் தோன்றுகிறது என்றாலே, அதனை நிஜமாக்கிக் காட்டக்கூடிய நிகரற்ற வலிமை நமக்கு இருப்பதாகத்தான் பொருள். எனவே, எண்ணத்தில் வீரியம் இந்தக் கேள்வியையும் தாண்டி வேர்விடுகிறபோதுதான். பாறையில் விதை விதைத்தால் கூடப் பயிராவதற்கான சாத்தியங்கள் அரும்புகின்றன.

எல்லைக்கு மீறிய எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதால் துன்பமல்லவா வரும் என்று சிலர் கேட்கலாம். எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்கிறார்களோ அதே அளவு பொறுமையையும் வளர்த்துக் கொள்கிறபோது தான் வெற்றி பிறக்கிறது.

அரச மரத்தை சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்பது பழங்கால நம்பிக்கை (இதில் சில சதவிகிதங்கள் அறிவியல் பூர்வமான உண்மையும் உண்டு). அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பது என்கிற பழமொழி. இந்த அவசரக் காரர்களைப் பற்றி எழுதப்பட்டதுதான்!

எதிர்பார்ப்பும் பொறுமையும், சரியான கலவையில் சங்கமிக்கிற போதுதான் அது இலட்சியமாக உருவெ-டுக்கிறது. எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறாமல் போவதற்குக் காரணம் அவற்றைப் பாதியிலேயே நீங்கள் கை விடுவதுதான். கைவிடப்படாமல் கூடி வளர்க்கப்படுகிற இலட்சியங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடாது. எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை எட்டுவதற்கான செய்தி மட்டும் தாமாக உருவாவதைப் பாருங்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

11. வட்டங்கள் எழுப்புகிறீர்களா?அலைகள் எழுப்புகிறீர்களா?

குளத்தைப் பார்க்கும்போதெல்லாம், குளிக்க முடியாவிட்டாலும்கூட, ஒரு கல்லையாவது வீசியெறிய வேண்டுமென்று கைகள் பரபரக்கும். இந்த உந்துதல் ஏற்படுவதற்கு, உளவியல் அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. எங்காவது ஏதாவதொரு சலனத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்கிற உணர்வில் பிறக்கும் செயல் இது.

ஒரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பள்ளி மாணவராக இருந்தபோது, பாட்டுப்போட்டியில் அவருடன் எத்தனையோ மாணவர்கள் போட்டி போட்டிருப்பார்கள். ஒரு சில போட்டிகளில் ஒரு சிலர் ஜெயித்திருப்பார்கள். அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

தங்களுக்குப் பிரியமான இசைத்துறைக்குள் முழுநேரமாக நுழைவது வாழ்க்கைக்குப் பாதுகாப்பான விஷயமா என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கலாம், வேறொரு துறையில் வேலை பார்த்தோ, பிரியமான இசையிலேயே தன்னை முழுவதாகக் கரைத்துக் கொண்டு, அதன் மூலம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்ததுடன் மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ள எஸ்.பி.பி. இன்று பெற்றிருக்கும் இடத்துடன் அவர்களை ஒப்பிட முடியுமா?

இசை என்கிற நீர்நிலையில், கற்களை எறிந்து, அதன் மூலம் சில வட்டங்களைக் கிளப்பியதோடு தங்கள் விருப்பத்தை விட்டுவிட்டவர்கள் நடுவே, இசையுலகில் ஓர் அலையாக எழுந்து ஓடியாடிக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி. ஓர் உதாரணம்தான்.

இதையே விஸ்வநாதன் ஆனந்த்தின் சின்ன வயது சதுரங்க சகாக்கள், சானியா மிர்ஸாவின் சிறுவயது டென்னிஸ் தோழிகள் என்று பலரோடும் பொருந்திப் பார்த்துக் கொண்டே போகலாம்.
உங்களிடம் சில உயர்ந்த திறமைகள் இருக்கலாம். அந்தத் திறமைகளைக் கொண்டு வட்டங்களைக் கிளப்பப் போகிறீர்களா அல்லது அலைகளை எழுப்பப்போகிறீர்களா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

முழு ஈடுபாட்டை எதில் காட்டினாலும் அதில் தொடர்ச்சியாய் உச்சங்களைத் தொடுவதும் தவிர்க்க முடியாத சக்தியாய் வளர்வதும் சாத்தியம். அதற்கான தீவிரம்தான் அடிப்படைக் கேள்வி.

முழு ஈடுபாட்டை எதில் காட்டினாலும் அதில் தொடர்ச்சியாய் உச்சங்களைத் தொடுவதும் தவிர்க்க முடியாத சக்தியாய் வளர்வதும் சாத்தியம். அதற்கான தீவிரம்தான் சாதனைக்குப் பாதை வகுக்கிறது. ஒரு துறையில் போதிய ஆர்வம் இருந்தால் ஆழம் தானாக வரும்.

மனிதன் தனக்கிருக்கும் ஆற்றலை நிரந்தர வைப்பில் வைத்துவிட்டு, அதன் வட்டியான 10% மட்டும் வாழ்க்கைக்குப் போதும் என்று முடிவு கட்டிவிடுவதால் வருகிற சிக்கல் இது.

செல்வம் சேமிப்பதற்கு. ஆற்றல் செலவிடுவதற்கு. இந்த அடிப்படையைப் பலரும் மனதில் கொள்வதில்லை. நீங்கள் உங்களுக்குத் திறமை இருக்கும் துறையில் எத்தகை தீவிரத்துடன் ஈடுபடுகிறீர்கள் என்பதே முக்கியம். அதற்கான சக்தியும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பிலேயே தரப்படுகிறது.

மனித மனதுக்கு என்னவெல்லாம் சாத்தியம் என்கிற பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

கவனத்தைக் குவித்துக் கேட்கிறபோது, நூறு இலக்கங்கள் கொண்ட நீ…ண்ட எண்ணை ஒரு தடவை கேட்டுவிட்டுத் திரும்பச் சொல்ல மனிதனால் முடியும். இருபதே நிமிஷங்களில் நூறு பேர்களை சந்தித்துவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் பெயரையும் திருப்பிச் சொல்ல மனிதனால் முடியும்.
இப்படி எத்தனையோ “முடியும்” நம் பட்டியலில் இருக்கிறது. ஆங்கிலத்தில் “Professional” என்றொரு வார்த்தை உண்டு. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைத்தான் பொதுவாக புரொபஷனல் கல்வி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒரு துறையில் ஒருவர் விடாமல் பத்துவருடங்கள் முயல்கிறார் என்றால் அவர் புரொபஷனல் என்பதே முக்கியம்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி. வட்டங்களைக் கிளப்புவதோடு நின்றுவிடாதீர்கள். அலைகளை எழுப்புங்கள். தவிர்க்க முடியாத ஆளுமையாய் வளருங்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

10. சலிப்பாய் இருக்கிறதா?

செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப்போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளரவிடுவதில் இரண்டுவிதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப்போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் மன அழுத்தமும் எதிர்விளைவுகளாய் ஏற்படும்.

ஆரம்பநிலையிலேயே சலிப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு நீக்க வேண்டியது அவசியம். இதைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் ஓரிரு விஷயங்களை உங்கள் ஆழ்மனம் அடிக்கோடிட்டுக் கொள்ளும். சலிப்பு என்பது உணர்வு சார்ந்தது. நிறைய பேர், சலிப்பு தொடங்கியதுமே அதற்கு மாற்றாக உற்சாகம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, மனதை உற்சாகப்படுத்தி வேலைக்குத் திரும்ப முயல்வார்கள். நேரெதிர் திசையில் பயணம் நேர்கிறபோது, மனம் உலுக்கப்பட்டது போல் உதறிக்கொண்டு எழும் என்பது உண்மைதான். ஆனால் பொழுதுபோக்கில் உடனே நாட்டம் சென்று மீண்டும் வேலையை நோக்கி மனதைக் குவிப்பதால் கணிசமான நேரம் காணாமல் போய்விடும்.

மனம் சலிப்பு என்கிற உணர்வால் சீண்டப்படும்போது அதை அறிவின் துணைகொண்டு கையாள்வதே நல்லது. உதாரணமாக, உங்கள் அன்றாட வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படுகிறதா? உங்கள் மனதுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்துங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பதற்காக கொஞ்சம் மௌனமாகவே அந்தப் பேச்சு வார்த்தை நடத்துங்கள்.

முதலில், இந்த வேலையை எதற்காக செய்ய வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். 1) இந்த வேலையைச் செய்வதால் நமக்கு சம்பளம்/ வருமானம் கிடைக்கிறது. 2) இதை சரியாகச் செய்தால் நல்ல பெயர் கிடைக்கிறது. 3) இதை இப்போதைக்குத் தள்ளிப் போட்டால் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தோ, நாட்கள் கழித்தோ, நாம்தான் செய்ய வேண்டும். அப்போது செய்வதை இப்போதே செய்தால் என்ன? இதை மனதுடன் நிகழ்த்தும் மானசீகமான கலந்துரையாடலாக்கிக் கொண்டு, “இந்த வேலையை இப்போதே செய்ய வேண்டும்” என்பதை தீர்க்கமாகத் தீர்மானித்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். சலிப்பு எட்டிப் பார்க்கிற போதெல்லாம் இப்படி சொல்லிப் பார்த்துக் கொள்வதால் உணர்வு எழுப்பிய தடையை அறிவு அகற்றுகிறது. இதே நிலை பல சூழல்களிலேயும் தொடர்கிறபோது சலிப்புணர்வு தோன்றுவது மெல்ல மெல்லக் குறைந்து காலப்போக்கில் காணாமலேயே கூடப்போய்விடும்.

அலுவலகங்களில் சலிப்புணர்வைத் தடுக்க, அலுவலக சூழலுக்குள்ளேயே சின்னச் சின்ன மாற்றங்களை அவ்வப்போது செய்யுங்கள். இடங்களை – முடிந்தால் அறைகளை மாற்றுவது போன்ற சிறிய புதுமைகள் அவ்வப்போது தேவை.

படைப்பாளர்கள், தங்கள் பணிச்சூழலை அடிக்கடி மாற்றுவதன் அடிப்படை இதுதான். ஈடுபட்டுச் செய்யும் எந்த வேலையிலும் சலிப்பு வருவதற்கு சாத்தியமில்லை. சிலருக்கு சிறிது நேரத்துக்குப்பிறகு வரப்போகிற சந்தோஷத்தை நினைத்து, இப்போது செய்கிற வேலையில் சலிப்புத்தட்டும். மாலையில் குடும்பத்தோடு திரைப்படத்துக்குப் போவதென்று தீர்மானம் ஆனால் அதுவரை மனம் வேலையில் ஈடுபடாமல், “பர பர”வென்றிருக்கும். இது பக்குவக் குறையின் விளைவு. போகப்போகச் சரியாகிவிடும். கடமையை நன்றாகச் செய்வதே அதிகபட்ச ஆனந்தம் என்ற விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். சலிப்பு நீங்கி சந்தோஷம் உருவாகும்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

9. முழுதாய் மலரும் மொட்டுக்கள்!

“ஒரு மொட்டுக்கு மலர்கிற துணிச்சலில் ஏற்படும் வலியைவிட இறுக்கமாக மூடிக்கிடப்பது மிகவும் வலியைத் தருவது” – இது ஓர் அறிஞரின் வாசகம். “AS A MAN THANKETH”” என்ற நூலில் இடம் பெற்ற சிந்தனை இது. மூடிக்கிடக்கிற மொட்டின் இதழ்கள் உதிராது. காற்றிலோ மழையிலோ சேதமுறாது. ஆனால் ஒரு மொட்டின் முழுமையை மலர்ச்சில்தான் அடைகிறது. மலர்ந்தபிறகு ரோஜாவின் இதழ்கள் மீண்டும் மூடிக்கொள்ள முடியாதுதான்.

மனிதனின் இளமைப் பருவத்தை இது குறிக்கிறது. இளமைப் பருவம் எவ்வளவு இனியதாய் இருந்தாலும், காலம் அதனைக் கடந்துசெல்லும்படிதான் நம்மை நகர்த்திக்கொண்டிருக்கிறது. வளர வளர, உள்ளம் மலர மலர வாழ்க்கையின் ஆழமும் ஆனந்தமும் புரிகிறது.

மூடிக்கிடக்கிற மொட்டு, தனக்குத்தானே ஒரு புதிர்போல இருக்கிறது. விரிகிற வரையில் – தனக்குள் என்ன இருக்கிது என்று அதுவே அறிவதில்லை. ஆனால் மலர்ந்த பிறகோ அதன் இதழ்களின் மென்மை, நாசியை வருடும் வாசம், வண்டுகளுக்கு வைக்கிற விருந்து என்று அதன் உச்சகட்ட சாத்தியங்களை உணர்ந்துகொள்கிறது.

அச்சத்தாலோ, பாதுகாப்பு உணர்வாலோ மொட்டுகள் போல் மூடியே கிடக்கிற மனிதன் சராசரியாய் வாழ்ந்துவிட்டுப் போகிறான். அவன் மலர்கிறபோதுதான், அவனில் இருக்கிற அனைத்தையும் இந்த உலகம் பார்த்து வியக்கிறது. பொருளாதார எழுச்சியில் தொடங்கி – சமூக வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்று எதுவாக இருந்தாலும், பொதுவாகச் சொன்னால் இறுக்கம் தளர்த்திய இதயம் மலர்கிற பொழுதுதான் நிகழ்கிறது.

மூடிக்கிடப்பதன் வலி, திறந்து கொடுக்கும் இயல்பைவிடவும் வலிமிகுந்தது என்று சும்மாவா சொன்னார்கள்!!

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

எப்போது முயற்சிக்கலாம்?

“கொஞ்சம் முயற்சி செய்தால் முன்னேறி விடலாம் என்பது உண்மைதான். அடுத்த வாரம் புதன்கிழமை அந்த முயற்சியைத் தொடங்குவது பற்றி முயற்சிக்கப்போகிறேன்” இப்படி ஒருவர் சொல்வாரேயானால், அந்த புதன்கிழமை வருமே தவிர அவரிடம் முயற்சி வராது.

ஏனென்றால், முயற்சி என்பது விழிப்புணர்வு ஏற்பட்ட விநாடியிலிருந்தே தொடங்குவது. இது முதல் விஷயம். ஆனால் ஒன்றில் வெற்றிபெற முயற்சியைத் தொடங்குவது மட்டும் முக்கியமல்ல. தொடருவதும் முக்கியம். சமீபத்தில், ஈஷா யோகாவின் ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி சொல்லிக் கொடுத்த பிறகு, அவர்கள் சொல்லும் வழிகாட்டுதல், “இந்தப் பயிற்சியை அடுத்துவரும் நாற்பது நாட்களும், காலை மாலை இரண்டு வேளைகள் செய்யுங்கள். இடையில் ஏதாவது ஒருநாள் காலையோ மாலையோ செய்யமுடியாமல் போனால் மறுநாள் தொடங்கி நாற்பது நாட்கள் காலையும் மாலையும் தொடர்ந்து செய்யுங்கள்” என்பதுதான். முயற்சியை உடனடியாகத் தொடங்குவது, தொடங்கிய ஒன்றைத் தொடருவது இந்த இரண்டுமே வெற்றியாளர்களின் அடிப்படை குணங்கள்தாம்.

நீங்கள் ஓர் உணவகம் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உணவகத்தில் உள்ள சேவையின் சிறப்பையும் சுவையின் சிறப்பையும் ஒருவர் பாராட்டி தன் நண்பரிடம் சொல்கிறார். அவரும் ஆர்வமுடன் உங்கள் உணவகம் வருகிறார். அன்று பார்த்து உங்கள் சமையல் கலைஞருக்கு உடம்பு சரியில்லை. சரியாக அமைக்கவில்லை. உணவு பரிமாறுபவருக்கு மனது சரியில்லை. அவரது சேவை வழக்கமான தரத்தில் இல்லை. அப்படியானால் என்ன நடக்கும்?

சாப்பிட வந்தவருக்கு இந்த சங்கதிகள் தெரியாது. எதிர்பார்ப்போடு வந்ததால் ஏமாற்றம் இருமடங்காகும். அவர் உங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அன்றே தொடங்கிவிடுவார். அதற்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் உங்கள் சேவையும் உணவின் சுவையும் சிகரத்தைத் தொட்டால்கூட எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் உங்கள் தரமும் திறமும் நிலையான விஷயமாகப் பதிவாகவில்லை. தொடங்கிய முயற்சி – தொடரும் முயற்சி இரண்டுமே விழிப்புடன் இருப்பதால் விளைகிற தனித்தன்மை. ஒரு நிறுவன உரிமையாளர் சட்டதிட்டங்களை வகுத்து போதனை தருவதோடு நின்றுவிட்டால் அவர் முழுதாக முயலவில்லை என்று பொருள். வகுத்த கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதா என்று நின்று பார்ப்பதே வெற்றியை உறுதிசெய்கிறது.

தனியரு மனிதர் தனக்கென வகுத்தக்கொண்ட கொள்கைகள்கூட நடைமுறைப்படுத்தும்போதுதான் உறுதியாகிறது. “சரியான நேரத்திற்கு வருவது என் கொள்கை. என்ன செய்வது? கொஞ்சம் தாமதமாகிவிடுகிறது” என்றொருவர் சொல்வது எதைக் காட்டுகிறது?

நேர நிர்வாகத்தில் புலி என்று பெயர் வாங்கவும் ஆசை, சோம்பலையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டுக்கும் நடுவே தடுமாறுவதால் சாக்குப் போக்குகள் சொல்லத் தொடங்குகிறது மனம்.
முயற்சிக்கு இரண்டு இலக்கணங்களைச் சொல்கிறார் திருவள்ளுவர். சலிப்பில்லாமல் முயலுவது, காலம் தாழ்த்தாமல் முயலுவது. இரண்டுமே ஒன்றில் ஒன்று தொடர்புள்ளவை.

ஏதாவதொரு கடமை உங்களுக்கு சலிப்புத் தருவதாக இருந்தால், அதற்கு நீங்கள் தருகிற முக்கியத்துவம் குறைகிறது. அதன் காரணமாகக் கால தாமதம் நேர்கிறது.

முயற்சிகள் முனைமுறிவது இரண்டு காரணங்களால்தான். ஒன்று – சலிப்பு. இன்னொன்று – பொறுமையின்மை. ஒரு முயற்சியை இடைவிடாமல் செய்கிறபோதுதான் அது உரிய காலத்தில் உரியவர்களின் கவனத்தைத் தொடுகிறது. அந்த முயற்சிக்குரிய மேன்மையும் அங்கீகாரமும் மலர்கிறது.

விடாத முயற்சியின் வலிமையை உணர்ந்து கொள்ள நிறைய உற்சாகமும் அதைவிட அதிகமாய்ப் பொறுமையும் அவசியம். இந்த இரண்டு குணங்களுக்கான முயற்சியை எப்போது தொடங்கப்போகிறோம்? இப்போதே…. உடனடியாக….

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

7. பணியிடத்தில் தனித்தன்மை – ஒரு புதிய கண்ணோட்டம்

பலரும் பணிசெய்யும் இடத்தில், அபாரமான தனித்தன்மை யாரிடம் வெளிப்படுகிறதோ, அவர்கள் வெகுவேகமாக முன்னேறுகிறார்கள். இந்த தனித்தன்மைக்கு அளவுகோல்தான் என்ன?
இந்த சுவாரசியமான கதை, அதை விளக்குகிறது. கவனமாகப் படியுங்கள். இந்தக் கதையின் கதாநாயகரே நீங்கள்தான்!!

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சோமு, தனக்கு என்ன வேலை என்று மேலாளரிடம் கேட்டார். ஆற்றங்கரைக்கு அழைத்துப் போன மேலாளர், “இந்தக் கரையை நீந்திக் கடந்து எதிர்க்கரையில் ஏற வேண்டும்” என்றார். “அப்படியே ஆகட்டும்” என்று ஆற்றில் குதித்து நீந்திப்போய் கரையேறினார். மேலாளர் புன்னகையை பாராட்டகத் தந்தார்.

அடுத்துவந்த ராமுவுக்கும் அதே வேலை. ராமு ஆற்றில் குதித்தபோது, அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் ராஜேஷ், அதே வேலை தரப்பட்டு ஆற்றைக் கடக்க முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்தார். ராஜேஷை இழுத்துக் கரை சேர்த்தார். ‘பலே’ என்று பாராட்டினார் மேலாளர்.

மறுநாள் வேலைக்கு வந்த ரவியோ, சோமு, ராமு, ராஜேஷ் ஆகியோரை சந்தித்து இந்த வேலை குறித்து கேட்டறிந்து “தவறில்லாமல் நீந்துவது எப்படி” என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். தயாராக வந்தவரைப் பார்த்து, “பலே! பலே!” என்று சொன்னதோடு இலவச இணைப்பாகப் புன்னகையையும் தந்தார் மேலாளர். அனைவரும் அதே அலுவலகத்தில் அதே ஆற்றைக் கடக்கும் வேலையைச் செய்கிறார்கள். அனைவருக்கும் பயிற்சி தரப்படுகிறது.

அப்போதுதான், அந்த அலுவலகத்தில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்தீர்கள். மேலாளர் உங்களை நீச்சல் பயிற்சிக்குப் போகச் சொன்னார். நீங்கள் போகவில்லை. “சரி, நன்றாக நீந்துவீர்கள் போல” என்று கருதி, பயிற்சியில்லாமலேயே நீந்தச் சொன்னார். நீங்கள் நீந்தவில்லை.

நிர்வாகத்திற்கு உங்களைப் பற்றி ஒரு புகார் போனது. உங்களை விசாரித்த நிர்வாகம், உங்களை நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமித்துவிட்டது. உங்களுக்கு போட்டுக்கொடுத்த மேலாளர், உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவராகிவிட்டார். அப்படி என்னதான் செய்தீர்கள்?

அந்த ஆற்றைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த நீங்கள், ஆற்றைக் கடக்க பயிற்சி தருவதற்கு நிறுவனம் தினமும் நிறைய செலவு செய்வதை உணர்ந்தீர்கள். அதற்குப் பதிலாக ஆற்றுக்குக் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ஆகும் செலவு மதிப்பீட்டை நிறுனத்திற்கு சமர்ப்பித்தீர்கள். அது பெரும் சேமிப்பாக ஆவதோடு ஒரு சமூகப்பணியாகவும் இருந்து நிறுவனத்திற்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என்று சுட்டிக் காட்டினீர்கள்.

சொல்லப்பட்ட வேலையை செய்த சோமு, ராமு, ரவி, ராஜேஷ் ஆகியோர் நிறுவனத்திற்கு உண்மையாக வேலை செய்தார்கள். தங்கள் திறமையையும் வெளிப்படுத்தினார்கள். நீங்கள்தான் உங்கள் தனித்தன்மையையும் வெளிப்படுத்தினீர்கள். வெற்றி பெற்றீர்கள். உங்களைப் போல் எல்லோரும் இருந்தால் உலகம் வெகு வேகமாக முன்னேறும் இல்லையா?

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

6. தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?

சாப்பிட்டபின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியை கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறுபொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும் இலையை மூடுகிறார்கள்.

இலையில் மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாப்பிடுபவர்களுக்கு இலையை மூட மனதே வராது. தாங்கள் சாப்பிட்ட அழகை, இலை புதிதாகப் போடப்பட்டதுபோல் இருப்பதை, எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இலையில் மிச்சம் வைப்பவர்களோ அடுத்தவர்கள் பார்க்கக்கூடாதென்று அவசர அவசரமாய் மூடுவார்கள். உணவை வீண் செய்யக்கூடாதென்று உருவான பஃபே முறையில்கூட தட்டில் எல்லாவற்றையும் அள்ளி வைத்துக்கொண்டு, அப்புறம் அசடு வழிந்துகொண்டு, எங்காவது வைத்துவிட்டு நழுவி விடுபவர்கள் உண்டு.

இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு, செய்ய முடியாமல் தடுமாறி, சொன்ன சொல் தவறி, தங்கள் இஷ்டத்துக்கு வேலைகளைத் தள்ளிப்பபோடுபவர்கள் பஃபேயில் விழிபிதுங்கும் ஆசாமிகளைப் போன்றவர்கள்தான்.

இந்த உலகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டதுதான். உங்கள் வேலைகளை நீங்கள் எவ்வளவு குழப்பிக் கொண்டாலும் அதனால் இன்னொருவரோ, இன்னொரு நிறுவனமோ பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது.

நீங்கள் செய்வதாக ஒத்துக்கொண்டது வருமானம் தருவதாக இருந்தாலும் சரி, அல்லது உதவியாக இருந்தாலும் சரி, சொன்னதைச் சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் அளவு உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

கூடுதல் முக்கியம் கொண்டு வேலைகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் என்று தரம் பிரித்துக்கொள்ளலாமே தவிர, செய்ய வேண்டிய வேலையையோ, உதவியையோ தள்ளிப்போடுவதும் தவிர்ப்பதும், உங்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கும். உங்களால் செய்ய முடியாத அல்லது நீங்கள் செய்ய விரும்பாத ஒரு வேலையை ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் எதைச் சிறப்பாகச் செய்வீர்களோ அதில்கூட மற்றவர்கள் உங்களை நம்ப மறுப்பார்கள்.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் திறமையைவிட, ஒரு படி கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, நம்பகத்தன்மை. நீங்கள் சொன்ன நேரத்தில், ஒப்புக் கொண்ட தரத்தில் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பது மட்டுமே உங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

திட்டமிடாமை, அலட்சியம், பொறுப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தள்ளிப் போகிற வேலைகளை இந்த உலகம் பார்க்கிறது.

எனவே, தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

5. தோல்வி என்பது அபிப்பிராயம்தான்

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம் என்பது ஒருவகை அபிப்பிராயம். இது ஒருவகை முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக் கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும்வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத்தக்கதல்ல. சிலர் சின்னத் தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம்.
உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது. நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டிவருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்பிராயம்தான்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

4. வெற்றியின் அளவுகோல்கள் என்ன?

நீங்கள் எந்த வேலை பார்ப்பவராய் இருந்தால் என்ன? நீங்கள் எந்த வயதில் இருந்தால் என்ன? நீங்கள் எங்கு வசிப்பவராய் இருந்தாலும் என்ன? உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்கிறதா என்று முதலில் உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியம்! அதற்கு எமர்சன் தருகிற எளிய அளவுகோல்கள் இங்கே!

அடிக்கடி சிரித்து மகிழும் வாய்ப்பை நீங்கள் விரும்பி ஏற்றால், அறிவாளிகளின் மதிப்புக்கும் குழந்தைகளின் அன்புக்கும் நீங்கள் ஆளாகியிருந்தால், உங்களை விமர்சிப்பவர்களும் மதிக்கும் விதமாய் உங்கள் செயல்திறன் அமைந்தால், போலி நண்பர்களின் துரோகத்தைத் தாங்கும் வலிமை உங்களிடம் இருந்தால், அழகை ரசிக்கவும், அடுத்தவர்களின் சிறப்பம்சங்களை அறிந்து வெளிப்படுத்தத் தெரிந்தால், உங்கள் செயல்களால், இந்த உலகத்தை உங்களால் அழகாக்க முடிந்தால், உங்களால், ஒருவர் வாழ்விலாவது உயர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தால்… நீங்கள் வெற்றியாளர்.. என்கிறார் எமர்சன்.

ஒரு மனிதன், தன் துறையில் மட்டும் கவனம் செலுத்தி அதில் வருகிற ஆதாயங்களை மட்டும் அளவுகோலாக்குவது முழுமையான வெற்றி அல்ல. ஆனால் அது முழுமையான வெற்றி நோக்கிய முதலடி. எந்த மனிதனிடம் வெற்றியின் விளைவாக மனம் கனிகிறதோ, எந்த மனிதனிடம் வெற்றியின் விளைவாக பணிவு மலர்கிறதோ, எந்த மனிதனிடம், தன் வெற்றியின் ஒரு பகுதி கொண்டு, மற்றவர்களின் துயரம் துடைக்க எண்ணம் வளர்கிறதோ, அந்த மனிதனே பன்முக வெற்றியை நெருங்குவதோடு, இன்னும் பல மடங்கு வெற்றிகளை நோக்கிப் பயணம் செய்கிறான் என்று பொருள். வெற்றியின் அளவுகோல்களைப் பொறுத்து, வெற்றியின் அளவும் மாறுகிறது. ஆமாம்! எமர்சனின் பட்டியலில் உள்ள குணங்களை இயல்புகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றியின் விஸ்வரூபத்தை விரைவில் காண்பீர்கள்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…