சத்குரு சந்நிதி…

சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்…

பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப்
பார்த்ததும் கண்கள் பனித்துவிடும்
கேட்க நினைத்த கேள்விகளை -மனம்
கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும்
மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு
மழலையைப் போலெனைக் குழைத்துவிடும்
தீர்க்க முடியாப் புதிர்களையோ- உன்
தீட்சண்யப் பார்வை எரித்துவிடும்

அத்தன் அன்னை உடன்பிறந்தோர்-என
அத்தனை உறவுகள் இருந்துமென்ன
எத்தனை காதல் உன்னிடத்தில்-இது
எப்படி மலர்ந்தது என்னிடத்தில்
சித்தன் யோகி என்றெல்லாம் -உனை
சிமிழுக்குள் அடைக்க முடியாதே
பித்து மனதின் புலம்பலைப்போல்-நல்ல
பிரார்த்தனை பிரபஞ்சத்தில் கிடையாதே

சாமானியன் போல் தோன்றுவதும்-பல
சாகச விந்தைகள் பேசுவதும்
நாமம் தன்னைச் சொன்னாலே-அடி
நாபியில் புயலைக் கிளப்புவதும்
பூமி அண்டம் தனக்குள்ளே-எனும்
புனித அனுபவம் பெருக்குவதும்
ஆமாம் உனக்கே சாத்தியமாம்-நீ
ஆச்சரியங்களின் களஞ்சியமாம்

குவிந்த உன்னிரு கைகளிலே-இந்தக்
குவலயம் அடைக்கலம் ஆகிவிடும்
சிவம்தான் கனிந்த சுடர்விழியில்-ஒரு
சின்னப் புன்னகை கோலமிடும்
தவம்தான் எழுந்து நடந்தாற்போல்-மெல்லத்
திருவடி பதிக்கும் சத்குருவை
இவன்தான் பாடிட இயன்றிடுமோ-அந்த
இமயம் கைகளில் அடங்கிடுமோ

உன்னை குருவாய் அடைந்தவர்கள்-இந்த
உண்மைக்கு சாட்சியம் ஆகிடுவார்
உன்னை நன்றாய் உணர்ந்தவர்கள்-நீ
உலவும் உன்னதம் என்றறிவார்
ஜன்னல் பார்வை பார்ப்பவர்கள்-இந்த
ஜன்மத்தில் வானை உணர்வதில்லை
தன்னில் கதவுகள் திறக்காமல்-குளிர்
தென்றலை உணர்ந்தவர் எவருமில்லை

தீபாவளி வாழ்த்துகள்

சத்குரு அவர்களை வரவேற்று….

(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது…)

பல்லவி
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
சரணம்-1
திருவடி பாராமல் திருமுகம் காணாமல்
தினமொரு யுகமாய் கழிந்தது
குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல்
திசைகளும் இருளாய் இருந்தது
மாதங்கள் பறந்தன மாதவமே
மனமெங்கும் நிறைந்தது உன்முகமே
வான்வழி வந்தது எம்தவமே-எங்கள்
வாசலில் நின்றது வானகமே
சரணம்-2
ஒளிதரும் கிழக்காக கலங்கரை விளக்காக
பகலிலும் இரவிலும்  துணைநீ
துளிவினை படியாமல் தொடர்கதை தொடராமல்
தூயவனே எங்கள் கதிநீ
நீவரும் திசையினில் கண்ணிருக்க-உன்
நினைவினில் எப்போதும் நெஞ்சிருக்க
தாய்முகம் தேடிடும் சேய்களைப்போல்-எங்கள்
தவிப்பிலும் உந்தன் சிரிப்பிருக்க….
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே

சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?

சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:

 யாரும் போடாத பாதை- இது
எங்கோ போகின்ற சாலை
வேர்கள் இல்லாத மரமா-இந்த
வாழ்க்கை வலியா வரமாமுடிவே இல்லாத பயணம்-அட
முனிவன் நெஞ்சிலும் சலனம்
விடிந்த பின்னாலும் இருளா-இந்த
வாழ்க்கை புதிரா பதிலாதர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு
தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும்
மர்மம் நிறைகிற கதையா- இந்த
வாழ்க்கை கனவா நனவாமண்ணால் எழுந்தது யுத்தம்-இங்கு
பெண்ணால் வளர்ந்தது யுத்தம்
கண்ணா நாடகம் எதற்கு-இது
கழித்தல் கூட்டல் கணக்குகாலம் உருட்டிடும் பகடை -இதில்
காய்களுக் கேனோ கவலை
மூலம் அறிந்தவன் ஒருவன் -இதை
முடிக்கத் தெரிந்த தலைவன்நம்பிய எதுவும் மாறும்-இதில்
நிஜமும் பொய்யாய் ஆகும்
தம்பியைக் கொல்பவன் அண்ணன் -இதில்
தர்மத்தின் குரலாய் கண்ணன்

சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி…அரங்கேறாத பாடல்

(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப்  ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது )

வீணைகள் உறங்கிய இரவினிலே
ராகங்கள் உறங்கவில்லை
சேனைகள் தூங்கிய வேளையிலும்
கோபங்கள்  தூங்கவில்லை

போர்க்களம் சிவந்தது போதாதோ
பாண்டவர் கௌரவரே
வாள்களின் பசியென்ன தீராதோ
வீரர்கள் மாண்டனரே

குருதியின் நதியில் குளிக்கிறதே
இதற்கா குருஷேத்ரம்
அருகினில் இறைவன் இருக்கின்றான்
சாட்சி நிலைமாத்ரம்

உங்களின் வன்மம் தீர்வதற்கே
உயிர்கள் மாளுவதோ
எங்கும் ரணகளம் ஏற்படுத்தி
எவர்தான் ஆளுவதோ

மண்ணில் விழுந்த மனிதர்களோ
ஆயிரம் ஆயிரமே
கண்ண்முன் இன்றும் நடப்பதென்ன
பாரதக் காவியமே

போதிதர்மர்- அகலாத மர்மங்கள்

அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின்
பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது.
போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள்
கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து
சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான்.

ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில தகவல்கள்
போதிதர்மன் குறித்து கிடைக்கின்றன. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் பவுத்தம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த
நிலையில்,பல்லவ மன்னன் கந்த வர்மனின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் போதிதர்மர். குடும்பத்தில் கடைசிப்பிள்ளையை பௌத்த சமயத்துக்கு அர்ப்பணிப்பதென்ற மரபுப்படி பௌத்த வர்மனை கந்தவர்மன் குருகுலத்திற்கு அனுப்ப, பிரஜ்னதார குரு என்பவரிடம் அனுப்பப்பட்டு அவர் போதிதர்மன் ஆகிறார். போதிதர்மனின் இயல்பான அறிவும் களரி
குங்ஃபூ போன்ற வீர வெளிப்பாடுகளும் பிரஜ்னதார குருவை பெரிதும் கவர தன்னுடைய மடாலயத்தின் குருவாக போதிதர்மனை நியமித்தார் என்றொரு கருத்து நிலவுகிறது.

கந்தவர்மன் மரணப்படுக்கையில் இருந்தபோது, மூன்றாவது மகனையே பட்டத்திற்கு நியமித்ததாகவும் அதனால் சகோதரர்கள் போதிதர்மனை கொல்ல முயன்றதாகவும் இன்னொரு கதை நிலவுகிறது.
ஆனால் போதிதர்மர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டு சீனா செல்ல
முயன்றதாகவும், அப்போது பல்லவ மன்னனாக இருந்த போதிதர்மனின் அண்ணன் மகன் தன் சித்தப்பாவை சீன அரசன் ராஜ மரியாதையுடன் வரவேற்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பௌத்தத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்ற போதிதர்மரை சீன அரசர் மரியாதையுடன் வரவேற்க பரிந்துரை கூட தேவைப்பட்டிருக்காது. அப்போது நடந்தவொரு விசித்திரமான சம்பவம் பற்றி ஓஷோ ஓரிடத்தில் சொல்கிறார்.அரச மரியாதை போன்ற சடங்குகளிலும்
சம்பிரதாயங்களிலும் போதிதர்மனுக்கு பெரிய விருப்பம் ஏதுமில்லை.எனவே
அரசரும் மக்களும் பெருந்திரளாக வரவேற்கக் காத்திருக்கும் வந்தடைந்த போது,தன்னுடைய காலணிகளைத் தலையில்
தூக்கி வைத்திருந்தாராம்.அரசர் காரணம் கேட்டபோது,”இவை என்னை எவ்வளவு தூரம் சுமந்திருக்கின்றன!! இவற்றை சிறிது நேரம் சுமப்பதில் என்ன தவறு?” என்றாராம். தலையில் மகுடத்தை சுமப்பது பெரிய விஷயமும் இல்லை, காலணிகளை சுமப்பது கேவலமும் இல்லை
என்ற புரிதலை அரசனுக்கு ஏற்படுத்தவே இது நடந்தது போலும்!

போதிதர்மர் சீனாவை சென்றடைந்தது ஐந்தாம் நூற்றாண்டென்று
கருதப்படுகிறது.அநேகமாக அவர் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவராய் இருக்க வேண்டும். கி.பி547 ல் யாங் சூவான் சி என்பவர் எழுதிய
புத்தகத்தில் யாங் நிங் ஆலயத்தில் அவர் போதிதர்மரை சந்தித்ததாகவும்
அப்போது போதிதர்மருக்கு வயது நூற்றைம்பது என்றும் குறிப்பிடுகிறார்.அவர் சென்னையிலிருந்து கடல்வழியாக கங்ஸாவூ என்னும் இடத்திற்கு வந்து அங்கிருந்து தரை மார்க்கமாக நன்ஜிங் வந்ததாக சிலர் கருதுகிறார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள்,அவர் நிலம் கடந்து பாலைவனங்கள் கடந்து கால்நடையாகவே மஞ்சள் நதிக்கரை வந்தடைந்தார் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அது ஆபத்துகளைத் தாண்டிவரும்
அதிதீரப் பயணம்தான்.

கி.பி.465 முதல் 550 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த வூ டாய் என்ற அரசரின்
அரசவையில் சிறிது காலம் போதிதர்மர் இருந்தார் என்று கருதப்படுகிறது.பின்னர் சீனாவின் வடபகுதிக்கு நகர்ந்த
போதிதர்மருக்கு பௌத்தர்களிடமிருந்தும் சில எதிர்ப்புகள்
கிளம்பியிருக்கின்றன.பௌத்த நூல்களுக்கு புத்த விகாரங்கள் அதிக
முக்கியத்துவம் தருவதை அறிந்த போதிதர்மர்,” ஞானமடைவதற்கான கருவிகளே புத்தகங்கள். புத்தகங்களே உங்களுக்கு ஞானம் தந்துவிடாது”என்று சொல்லவும் சிலர் கடுப்பானார்கள்.
போதிதர்மருக்கு எதிர்ப்பானார்கள். “ஞானம் அடையும் வழியில் புத்தர்
எதிர்ப்பட்டால் அவரையும் கொல்” என்பது போன்ற சூட்சுமமான ஜென்,அவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டிருந்தது ஆச்சரியமில்லை.

அதன்பின்னர் போதிதர்மர் வந்து சேர்ந்த இடம்,ஹெனன் பகுதியில் உள்ள ஷாவொலின் ஆலயம். 495ல் இங்கே வந்து சேர்ந்த போதிதர்மர் ஒன்பது வருடங்கள் மௌனத்தில் இருந்தாராம்.இந்தியாவில்
போர்வீரர்களுக்கு தரப்பட்ட மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தற்காப்புப்
பயிற்சிகளைத்தான் அவர் சீனநாட்டில் போதித்தார்.இதற்கொரு சுவாரசியமான காரணமும் சொல்லப்படுகிறது.தன்னுடைய தியான மார்க்கத்தின் தீவிரத்தன்மையைத் தாங்க முடியாத அளவு சீனத் துறவிகள் பலரும் பலவீனமாக இருப்பதைப் பார்த்து இந்த தற்காப்புப் பயிற்சிகளை துணைப்பாடங்களாகத்தான் தந்திருக்கிறார் போதிதர்மன்.

எந்தப் பயிற்சி இருப்பதிலேயே  சிரமமோ அதை முயலுங்கள்” என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வோர் உடம்பையும் புடம் போடுவது போல்
பக்குவம் செய்து தந்தார் போதிதர்மன்.”சஞ்சின் கதா” என்ற பெயரில்
போதிதர்மர் போதித்த கலையிலிருந்து பிறந்ததே கராத்தே.என்கிறார்கள். அதேபோல கிபா தாச்சி என்ற முறையும் போதி தர்மரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.குனிந்திருக்கும் குதிரை போன்ற

இந்த ஆசனம் உடற்பயிற்சியாகவும் தியானமாகவும் இருக்கிறது.

ஓர் ஊதுபத்தி எரிந்து முடிகிற நேரம்-அதாவது ஒருமணிநேரம் வரை அந்த
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கடும் பயிற்சியை போதிதர்மர் தந்த
பொக்கிஷங்களில் ஒன்று என்கிறார்கள்.
தன்னுடைய போதனைகள் எழுதப்படக்கூடாதென்றும் நேரடி போதனையாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தரப்பட வேண்டுமென்றும் போதிதர்மர் மிகவும் உறுதியாகக்
கூறிவிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் தசைமாற்றம் மஜ்ஜை மாற்றம் போன்றவை குறித்த போதிதர்மரின் போதனைகள் புத்தக வடிவம் பெற்றன.இரத்ததையும் மஜ்ஜையையும் தூய்மை செய்து,அதன்மூலம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதையே ஞானமடையும் பாதையாகப்
பயன்படுத்தும் யுக்திகள் போதிதர்மரின் கொடைகளாகத் தொகுக்கப்பட்டன.

அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றார்கள் என்பது போன்றவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை.அதேநேரம் அவர் எந்த வயதில் எப்படி இறந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. முற்றாகவும் முழுதாகவும் பொழிந்துவிட்டுக் கரைந்து போகும் முகில்களுக்கு முகவரிகள்இல்லாதது
போல்;போதிதர்மரின் வாழ்வு பற்றிய  செய்திகள் கைவசமில்லை.ஆனால் அந்த ஆளுமையிடமிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி இதுதான். கலைகள் எத்தனை அரிதானவை என்றாலும் அவை
ஞானம் அடைவதற்கான கருவிகளே! த்ற்காப்புக் கலையிலும் இருக்கிறது
தியானத்தின் அம்சம்!!

படுவதே பாடம்

வாழ்க்கையின் அபத்தம் புரிந்துவிட்டால் அது
வாழ்வின் அற்புதம் ஆகும்
கூக்குரல் அழுகைகள் அடங்கிவிட்டால்-வரும்
மௌனம் நிரந்தரம் ஆகும்
கேட்கிற கதைகள் புரிவதில்லை-யாரும்
கேளாதிருப்பதும் இல்லை
வேட்கையும் பசியும் வளர்த்ததன்றி-ஒன்றும்
வெட்டி முறிக்கவும் இல்லை

மமதையில் ஆடிடும் வேளைகளில்-விதி
முகமூடிக்குள் சிரிக்கும்
நமதெனும் மிதப்பில் இருக்கையிலே-அதன்
நிழலும் பதுங்கிக் கிடக்கும்
திமிறிய மனிதன் நிமிருமுன்னே -அடி
தலைமேல் விழுந்து தொலைக்கும்
குமுறல்கள் கதறல்கள் பயனுமில்லை-அதன்
கணக்குகள்   மட்டும் நிலைக்கும்

உற்றவர் பாதையில் தென்படலாம்-அவர்
உடன்வரப் போவதும் இல்லை
பெற்றதும் சுமப்பதும் வினைவழியே-பிறர்
பாரங்கள் பெறவழி யில்லை
கற்றதும் மறந்ததும் வேடிக்கைதான் -அவை
கடைவழிக் கொருதுணை யில்லை
பற்றுகள் எல்லாம் விலங்குகள்தான் -இது
புத்தியில் புலப்பட வில்லை

கட்டிய கற்பனைக் கோட்டைகளை-வந்து
காலால் மிதிக்குது காலம்
எட்டிய வரைக்கும் எனது பலம் -எனும்
எண்ணத்தைப் புழுதியும் மூடும்
கிட்டிய தெல்லாம் கடவுள்செயல் -எனக்
கருதி யிருப்பதே லாபம்
ஒட்டியும் ஒட்டா திருப்பதுதான் -இந்த
உயிர்பெறும் அனுபவ ஞானம்

அவனது கணக்கு

 குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு
கணத்திலே நரியாக மாறும்
புதிரைப் போட்டவன் சிவனே -இதன்
பதிலும் தெரிந்தவன் அவனே

வித்துகள் நடுவோம் வயலில் -அவை
வளர்வதும் சிதைவதும் மழையில்
எத்தனை எத்தனை பார்த்தோம்-அட
இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம்

மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த
மயான வேள்வியும் புகைதான்
குணமும் பணமும் பொய்யே-அட
கண்கள் கசக்குதல் மெய்யே

எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன்
எத்தனை ஓலைகள் கிழிப்பான்
பித்தன் என்றதும் சரிதான் -அவன்
பிழைகள் எல்லாமே சரிதான்

கூட்டல்தெரியும் நமக்கு-அதில்
கழித்தல் அவனது கணக்கு
ஏட்டில் எழுதி மறைத்தான்- அதை
மறைத்ததில் தானவன் ஜெயித்தான்

வருவதும் போவதும் கனவு-இதில்
விதம்விதமாய் பல நினைவு
தருவதும் பறிப்பதும் அவனே-இந்த
தர்க்கத்தின் பதிலும் சிவனே

பகவான் ரமணர்

நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை

வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே

கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில்

உள்ளுரித்துக் கண்டான் உவந்து.

ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய

ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை

அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம

மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து.

உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ

தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம்

புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும்

அகம்வந்து சேர்ந்தான் அறி.

பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான்
ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம்
மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி

ஞானமென ஏற்கும் நயந்து

இந்நாளில் அவன்தூங்கப் போனான்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில்
களிகொண்டு விளைகின்ற பாவும்
எண்ணாத விந்தையென யாரும்-தினம்
எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

குழந்தைக்கு நிகரான உள்ளம் -அதில்
குமுறிவரும் தமிழ்க்கவிதை வெள்ளம்
எழுந்தாலும் இருந்தாலும் அழகன்-என
எல்லோரும் கொண்டாடும் இணையில்லாக் கவிஞன்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

திரையோடு தீராத அலைகள்-அவன்
மழைபோல பொழிகின்ற வரிகள்
முறையோடு தமிழ்கற்றதில்லை-ஒரு
முறைகூட அவன்தந்த தமிழ்தோற்றதில்லை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

பிட்டுக்கு மண்சுமந்த சிவனும்-மழைக்

கொட்டுக்கு மலைசுமந்த ஹரியும்
மெட்டுக்கு இவன்தந்த வரியில்-மிக
மயக்கங்கள் உருவாகி வருவார்கள் புவியில்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

ஐம்பத்து நான்கேதான் அகவை-அவன்
அழியாத புகழ்கொண்ட கவிதை
உம்பர்க்கும் கிட்டாத அமுதை-தன்
உயர்வான தமிழாக்கி பறந்திட்ட பறவை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்