மார்கழி-15-ஆண்டவனைப் பாடுவதா? அடியவரைப் பாடுவதா?

இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.
சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை
திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர்
தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும்,
அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில் ‘நம்பெருமான்’என்பதும்
இயற்கை.

முதல்நிலை உரிமை பற்றிய நிலை.இரண்டாம் நிலை,உறவு பற்றிய நிலை.
தனிமையிலும் தொண்டர் குழாத்திலும் மாறி மாறி இறைவன் பெருமையையே
வாய் ஓயாமல் பேசுகிற இயல்பு கொண்ட இப்பெண்,ஒவ்வொரு முறை இறைவன்
திருநாமத்தை சொல்லும் போதும்,அவள் கண்களில் நீர் பெருகிய வண்ணம் இருக்கும்.

இதில் என்ன அழகென்றால்,ஒருமுறை நாமம் சொன்னதும் கண்கள் பெருக்கெடுக்க,
அடுத்த நாமத்தை உச்சரிக்கும் முன்னமே அந்த நாமத்தின் சிறப்பினை நினைந்து கண்கள்
பனிக்கின்றன.இந்த பூமியில் இருக்கும் நினைவே இருப்பதில்லை. மூலப் பரம்பொருள்
மீதே பக்தி மூண்டு விட்டதால்,விண்ணவரை,சிறு தெய்வங்களை,பணிவதில்லை.

இதில் யாரைப் புகழ்வதென்று ஒரு கணம் தோழியர் மலைக்கிறார்கள்.இப்படி
எல்லையில்லா பத்திமை பூண்டபெண்ணைப் புகழ்வதா? அல்லது, இவ்வாறு
தன்மேல் ஈடுபடும் விதமாய் கருணை கனிந்த கடவுளாகிய கண்ணுதற் பெருமான்
கழலிணைகளைப் புகழ்வதா?

இப்பெருமைகளை வாயாரப்பாடி அழகிய பூக்கள் நிறைந்த புனலில் நீராடுவோம் என்கின்றனர்.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

மார்கழி 14-அவள் அருளாலே அவன் தாள் வணங்கி

மாணிக்கவாசகர் சொல்லும் இறையனுபவத்தின் அடையாளங்களில் ஒன்று,”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்தல்”.மார்கழியில் குளிர்ந்த நீர்நிலையில் இறங்கினாலே மெய் நடுங்குகிறது.சிவசக்தியின் கருணையாகிய பொய்கையில் இறங்கினால் !!
இன்றளவும் இறையனுபவத்திற்கு ஆட்படுபவர்கள் உடலில் அத்தகைய விதிர்விதிர்ப்புகளை நாம் காணலாம்.

இறையனுபவத்தில் ஊறித் திளைக்கும் பரவசப் பெருக்கத்தில், சிவனருளுக்கு இவ்வுயிரை அருகதை உடையதாய் ஆக்கும் பொருட்டு அதன் மலங்களை நீக்கி தகவுடைய உயிராக்கிய அம்பிகையின் திருவடிகளையும் அப்பனின் திருவடிகளையும் வணங்கி இப்பெண்கள் மகிழ்கின்றனர்.

ஒருபாத்திரம் சேற்றில் விழுந்தால் பெண்கள் பணியாளர்களை விட்டு எடுக்கச் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய குழந்தை தான் செய்த அசுத்தத்திலேயே புரண்டு கொண்டிருந்தால் தானே அள்ளியெடுத்து தூய்மை செய்து துடைத்து, முத்த்மிட்டு மகிழ்வார்கள்,

மனித உயிர், தன் குற்றங்களை, குற்றங்கள் என உணராமல் அதிலேயே உழலும் போது,அந்த உயிரை அக்குற்றங்களிலிருந்து அகற்றி,தன் வளைக்கரங்களால் வாழ்விப்பவள் பராசக்தி என்பதால்,
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி
என்கிறார்.
சீதப்புனலாடி சிற்றம்பலம் பாடி சிவப்பரம்பொருளின் பல்வேறு பெருமைகளைப் பாடி இன்புறும் போது,” இத்தகுதி எனக்கு வந்தது எவ்வாறு” எனும் கேள்வி எழ, அதற்கு அம்பிகை நம்மைத் தகுதி செய்ததே காரணம் என்னும் நன்றியுணர்வும் புரிதலும் மலர்வதை பாடலின் இறுதியில் உணரமுடிகிறது
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மார்கழி13- வினை நீக்கும் வழிபாடு

எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும்
புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த
இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும்
அம்மையப்பனையே காண்கிறார்கள்.

குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது.
செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும்
உடல் குறுகி பணிவு காட்டும் அடியார்கள் மந்திரங்கள் உச்சரித்த
வண்ணம் வலம் வருவது போல்,வண்டுகள் பொய்கையை
சூழ்கின்றன.

சிவசக்தியின் பெருங்கருணையே பொய்கையாய் பெருகி நிற்க,
அந்தக் கருணையின் பெருக்கில் திளைத்தாடி,அணிகலன்கள் தாண்டி,
உடலையும் தாண்டி உள்நிலையில் ஊடுருவும் திருவருளில்
திளைப்போம் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும்.

வண்டுகளின் ஒலி பீஜ மந்திரத்தை ஒத்ததாய் இருக்கும்.மந்திர
உபதேசம் பெற்றவர்கள் மந்திரங்களை உச்சரித்த வண்ணம் வழிபாடு
நிகழ்த்தி,அதன் வழி வினை நீக்கம் பெறுகின்றனர் என்பது உணர்த்தப்
படுகிறது.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

மார்கழி 12- பொய்கையா? சுனையா?

முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும்
அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும்
இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து
விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை.

தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன்
சிற்றம்பலத்தில் அனலேந்தி ஆடுகிற கூத்தனாய் திகழ்கிறான்.
பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல்
அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான்.

அவன் புகழ்பாடும் வார்த்தைகள் பாடி கைவளை குலுங்க
ஆடை அணிகள் ஆர்த்து ஒலியெழுப்ப,கூந்தலின் மேலே வண்டுகள்
ஆர்க்க,பூக்கள் கொண்டபொய்கையில் குடைந்தாடி,உடையவனாம்
சிவனுடைய திருவடிகளைப் போற்றி இருஞ்சுனையில்
நீராடுவோம்” என்கின்றனர்.

தாமரை சூழந்த பொய்கை,சிவபெருமானின் திருவடித் தாமரையைக் குறிக்கும்
அதில்ஆர்க்கிற வண்டுகள் இப்போதுஇப்பெண்களின் கூந்தலின் மேல்
ஆர்க்கின்றன.என்ன காரணமென்றால் அவர்கள் சென்னிமிசைசிவபெருமான் பாதமலர்கள் சூட்டினான்
என்பதேயாகும்.அதேபோல பூத்திகழும் பொய்கை என்றவர் அடுத்த
வரியிலேயே இருஞ்சுனை என்கிறார். மலைபோன்ற சுனை என்று
நேரடிப் பொருள் இருந்தாலும்,நல்வினை தீவினை ஆகிய இரண்டும்
கலந்த வாழ்வென்னும் சுனையில் நீராடி சிவனருளால் அதனைக்
கடக்கும் பத்திமையும் வலியுறுத்தப்படுகிறது

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

மார்கழி 11- சிவப்பொய்கை! தவக்குளியல்!

சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத் தேடி கைகளால் குடைகின்றன.

வழிவழியாய் சிவனை வழிபடும் தவம் செய்த இவ்வுயிர்கள் ,தழல்போல் சிவந்து திருநீறு பூசிய சிவனை, சிற்றிடையும்
தடங்கண்களும் கொண்ட உமையம்மையின் மணவாளனை உருகிப் பாடி உபாசிக்கிறார்கள்.

இறையருளுக்குப் பாத்திரமானவர்கள் வாழ்க்கை அற்புதங்களும் அதிசயங்களும் நிரம்பிய வாழ்க்கை.அவற்றுக்கு நீங்கள் காரணங்கள் காண இயலாது. ஆனால் அந்த அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டே ‘ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இவர்கள்’ என்பதை அனைவரும் உணர முடியும்.

அப்படி என்னென்ன உயர்உகள் ஒரு மனிதனுக்கு சாத்தியமோ அனைத்தையும் அடைந்து அந்த சிறப்புகளின் வியப்பையும் கடந்து விட்டோம் என்னும் விதமாக
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

என்று பாடுகின்றனர்.

அப்படி ஆட்கொள்ளப்பட்டவர்கள் பிற நாட்டங்களால் சபலங்களால் தளராத வண்ணம் காப்பதுவும் இறைவன் செயலேயாகும் என்று இப்பாடலில் விண்ணப்பிக்கின்றனர்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்

மார்கழி 10- “எல்லையின்மை எனும் பொருள் அதனை”

பன்முகப் பண்புகள் என்னும் ஈடிலாத தன்மையின் பிரம்மாண்டமாகவும் எல்லைகளைக் கடந்த வியாபகமாகவும் சிவன் விளங்குவதை சிந்தித்து வியக்கும் விதமாய் திருவெம்பாவையின் பத்தாம் பாடல் அமைந்துள்ளது.

எல்லோருக்கும் எல்லாமாக நிற்கும் சிவனை எவ்வாறு வரையறுப்பது என்னும் இன்பத் தவிப்பே இப்பாடலின் உயிர்நாடி.சொல்லால் எட்டப்படாத தொலைவில் பாதாளங்களுக்கும் அப்பால்,அவன் பாதமலர்கள் உள்ளன. அவன் திருமுடியும் தேடிக் கண்டடையும் இடத்திலில்லை. அவன் திருமேனியின் ஒரு பாகம் பெண்பாகம் என்னும் வரையறையும் அவனை உணர்ந்ததாய் ஆகாது.

ஏனெனில் அவன் ஒரே திருமேனி கொண்டவனல்லன்.
உருவாய்,அருவாய் அருவுருவாய் பற்பல தன்மைகள் கொண்டவன்.
வேதமறிந்த விண்ணோரும் மண்ணோரும் அவனை விதம் விதமாய்த் துதித்தாலும் அத்தனை பெருங்குணங்களையும் கடந்த எளிமையுடையவனாய் தோழனாய் விளங்குபவன்.

தொண்டர்களின் உள்ளங்களெல்லாம் நிற்பவன். இவனை வணங்கும் தன்மை கொண்ட குற்றமற்ற குணப் பண்புகள் கொண்ட பெண்களே!
உங்களால் முடிந்தால், இவனுடைய ஊர் இதென்றும் இவனுடைய பேர் இதென்றும்,இவனுக்கு வேண்டியவர்கள் இவர்களென்றும் வேண்டாதவர்கள் இவர்களென்றும் வரையறுத்துச் சொல்லுங்கள்.இப்படிப்பட்டவனை எப்படிப் பாடுவது?” என்னும் செல்லச் சலிப்பை இப்பாடலின் பெருஞ்சிறப்பாகும்.

வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் திருக்குறளும் “ஓருநாமம் ஓருருவம் இல்லார்க்கு திருநாமம் பலபாடி”என்னும் திருத்தெள்ளேணமும் இங்கு நம் நினைவுக்கு வருகிறது.

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

மார்கழி-9-துணையாய் திகழ்பவன் சிவனே! துணையைத் தருபவன் அவனே!

எது பழையது எது புதியது என்கிற கேள்வியை உன்னிப்பாகப்
பார்த்தால் ஒன்று நமக்குத் தோன்றும்.காலம் எத்தனை பழையது!
ஆனால் எப்போதும் புதியது. காலமே அப்படியென்றால், காலகாலன்.
இன்னும் பழையவன்.என்றும் புதியவன்.

பலரிடம், “எது உங்கள் இஷ்ட தெய்வம் “என்று கேட்கிறார்கள்.
அதை விட வேடிக்கை,அதற்கு அவர்கள் பதிலும் சொல்கிறார்கள்.
இறைவனை உபாக்சிக்கக் கூட அவனுடைய அருள் வேண்டும் என்பதை

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் என்னும் வரி
உணர்த்துகிறது.
இந்த மண்ணில் மனிதப்பிறவி எடுப்பதன் முக்கிய நோக்கமே முக்தி
அடைவதுதான். இல்லறம் என்பதே இருவர் இணைந்து இறைநாட்டத்தில்
முழுமையாக ஈடுபடுவதே ஆகும்.எனவே சிவனடியாராக உள்ள பெண்கள்
ஒத்த சிந்தனை உள்ளவர்களைவாழ்க்கைத் துணையாகக் கொண்டு
சிவத்தொண்டில் ஈடுபட விழைகிறார்கள்.
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

தேச விடுதலைப் போராட்ட காலங்களிலும்,அரசியல் இயக்கங்களிலும்
இத்தகைய தன்மைகலை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். சைவம்
இல்லறத்தை ஒறுக்கும் நெறியல்ல. ஒத்த சிந்தனை உள்ளவர்கள்
இல்லறத்தில் இணைவதை ஊக்குவிக்கும் நெறி. திருமணத்தைப்
புறந்தள்ளாத பல ஆன்மீக இயக்கங்களின் தொண்டர்கள் இல்லறத்தில்
இணைந்து இறைத்தேடலை முன்னெடுத்துச் செல்வதை இன்றும்
பார்க்கிறோம்.இத்தகைய கணவர் வாய்க்கப் பெற்றால் எக்குறையும்
இல்லை என்கின்றனர் இப்பெண்கள்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்

மார்கழி 8-ஒலியும் ஒளியும்

திருவெம்பாவையில் சூட்சுமத் தன்மை மிக்க பாடல்களில் இதுவும்
ஒன்று.பறவைகள் சிலம்பும் சங்கம் இயம்பும் என்கிற நயங்களைத்
தாண்டி வருகையில் பறவைகள் சிலம்பும் ஒலியும் சங்கம் இயம்பும்
ஒலியும் கடந்துபரஞ்சோதியின் ஒளி எழுகிறது.

ஒளிக்கும் ஒலிக்குமான சூட்சுமத் தொடர்பும் அதன் விளைவாய்
எழும் கருணையுமாய் பாடல் துலக்கம் கொள்கிறது. மந்திர
செபத்தால் உள்ளே எழும் சிவசோதியானது பெருங்கருணை பாலிக்க
அந்தக் கருணையே நிலையான செல்வமாய் அமைகிறது.இதனை
குருவாகிய தோழி தியானத்தால் எட்டினாள் என்பதை அடியார்கள்
உணர்ந்து, அதுவே சிவத்தியானம் மேற்கொண்ட திருமாலின்
அறிதுயிலுக்கு நிகரானதென்பதை உனர்ந்து போற்றுகிறார்கள்.

தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது எக்காலம் என்றார் தாயுமானவர்.
அந்நிலையை அன்பவமாய்ப் பெற்ற குரு தன் சிவானந்தத்தை
சொற்களால் விவரிக்க வேண்டுமென விண்ணப்பிக்கும் விதமாக
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

என அடியார்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

மார்கழி 6 திசையெல்லாம் சிவனே

தோழிகளிடையே ஆன உரையாடல் என்னும் எல்லை கடந்து சிந்திக்கும் போத,திருவெம்பாவையின் சூட்சுமப் பரிமாணங்கள் பலவும் புரிபடுகின்றன.
“நாளை எங்களை எழுப்புவேன் என நேற்று சொல்லிச் சென்ற தோழியசின்னும் விடியவில்லையா?நாணமேயின்றி அச்சொல் எந்தத் திசையில் தொலைந்ததுவோ?

வானம் நிலம் மற்றும் உளவெல்லாம் அறிவதற்கு அரியவனாகிய சிவன் தாமாக வந்தெம்மை ஆட்கொள்ளும் சீர்கழல்களைப் போற்றி வரும் எங்களுக்குன் வாசல் திறக்க மாட்டாயா?ஊனுருக மாட்டாயா?
உனக்குரிய எமக்கும் பிறர்க்குமாகிய தலைவனை பாடுவாயாக” என்பது திரண்ட பொருள்.

இதில் “உன் வாக்கு நாணமின்றித் தொலைந்த திசை எது”வென்று கேட்டவர்கள், சிவனை வானகமோ வையகமோ பிற திசைகளோ அறியாத நிலையைச் சுட்டுகிறார்கள். ஆனால் இந்தத் தோழியாகிய குருவின் சொல் போன திசையே சிவன்வரும்திசை. சிவனின் அருள் இருந்தால் மட்டுமே குருவானவர் வந்திருந்து சிவதீட்சை வழங்குவார்.

அவருடைய சொல் போன திசையே சிவன் தாமாக வரும் திசை.அதற்கான வழியைத் திறக்க தோழியர்களாகிய அடியார்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

“ஊனே உருகாய்-உனக்கே உறும்” என்ற வரியை “ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனை” என சேர்த்துப் படித்தால்கூனக்குரிய சீடர்களாகிய எங்களுக்கும் பிறருக்கும் தலைவரான சிவன் எனும் பொருள் பெறப்படுகிறது.

குருவின் அருள் பெற்றால் சிவனருள் தாமே வெளிப்படும் என்பது இதன் பொருள் என்னும் கோணத்திலும் இப்பாடலை அணுகலாம்.
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்