பஞ்ச பூதங்களும் ஒரு பறவையும்-3 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து)

 
பதட்டமுறுகிற ஆண் தனக்குத் தானே புதிராய் தெரிவான்.அதுவும்,தெளிவான ஒரு பெண்ணுக்கு முன்னால் அவன்
சமனப்பட முடியாமல் தடுமாறுவது பரிதாபமானதுதான்.அந்த விநாடியில் பெண்மையை,காதலை,தாய்மையை மீறி பெண்மனதில் இருக்கும் பகடை உருளத் தொடங்கிவிட்டால் அங்கே உறவுகள் உருக்குலைகின்றன.
மாறாக அவனை சாந்தப்படுத்தி,சமநிலைக்குக் கொணர்ந்து,
இதம்செய்து.இதம் பெறும் காத்திருப்பின் கருணை அந்தப் பெண்ணை அற்புதமானவள் ஆக்குகிறது.
அந்தக் காத்திருப்பின் நிறைவில் அவளும் பெறுகிறாள் என்றாலும் அவள் தருகிற பங்கே அதிகம்.சொல்லப்போனால் அந்தக் கணத்தை அவளே நிகழ்த்துகிறாள்.
“ஆழக்கடல் நடுவே மௌனம் காத்து
 காலம் வருகையில் மேலெழுந்து
 மெல்ல இதழ்விரித்து மழைவாங்கி
 வெண்சிறு முத்தாகிறாள்.
காத்திருப்பின் சிப்பி அவள்.
உண்மையில் ஒவ்வொரு பெண்ணும்
அப்படித்தான் இருக்கிறாள்.
ஓர் ஆணுக்கு
ஒரு காதலுக்கு
ஓர் அன்பிற்கு எனக் காத்திருக்கிறாள்.
நிறைக அன்பே என்று
காலமெல்லாம் காத்திருக்கிறாள்
அதன்பொருட்டே எல்லாவற்றையும் தாங்குகிறாள்
எல்லாவற்றையும் ஏற்கிறாள்
மேலும்
எல்லாவற்றையும் நிறைக்கிறாள்”
(மீன் நிறத்திலொரு முத்தம்-ப-27)
தனக்கு எவ்விதத்திலும் பிடிமானம் இல்லாத சூழலை ஒருபெண் ஒருபோதும் விரும்புவதில்லை.ஒரு வீணையில் சுதிகூட்டுகிற லாவகத்துடன் சூழலை தனக்கு சாதகமாக ஒழுங்கு செய்பவள் அவள்.
விசைத்தெழும் இந்தப் பெண்ணின் சத்திய தரிசனத்தில் தயங்கியோ,தடைப்பட்டோ தேங்கியோ .ஓர் ஆண் அடிவாங்கிய அகங்காரத்துடனோ அச்சுறுத்தும் தாழ்வு மனப்பான்மையோடோ நின்றுவிடக்கூடும்.அங்கும் அவளே அவனை ஆற்றுப் படுத்துகிறாள்.
“பலா வெடித்து
தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவூட்டுகிறது
இந்தக் குளத்தில்
அல்லி மலர்கள்
இதழ்விரிந்து கிடக்கின்றன”
கள்ளுறை பலா,தேனீக்கள்,அல்லி மலர்கள் ஆகியன,உள்ளுறை உவமங்கள்.
பலா வெடித்து
தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவூட்டுகிறது
இந்தக் குளத்தில்
அல்லி மலர்கள்
இதழ்விரிந்து கிடக்கின்றன”
என,முந்தைய வரிகளுக்கு கவிதையின் அடுத்த வரிகள் உரையெழுதுகின்றன.
“மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள்
நம்மை ஏளனம் செய்வது
வனமெங்கும் ஒலிக்கிறது”
ஊரார் அலர் தூற்றுவதன் உருவகம் இது. சங்க இலக்கிய நேர்த்தி சக்தி ஜோதியின் நவீன கவிதைகளில் லாவகமாக கைகூடும் இடங்களில் இதுவும் ஒன்று.
அந்தத் தலைவியின் தவிப்பை, தேடலை, கரைமீறும் ஆசையை அழுத்தமாக ஒற்றை வரியில் சொல்கிறார்.
“குளம் தளும்பிக் கொண்டிருக்கிறது”
இந்த ஈற்று வரியில்  அக இலக்கியத்தின் அழகியலும் பெண்மனதின் உளவியலும் துலங்குகின்றன.
நிலவுக்கும் பெண்ணுக்குமான ஒப்பீடு,மேலோட்டமாகப் பார்த்தால் அழகு சார்ந்த வர்ணனையாகத் தெரியும்.ஆனால் ஒரு பெண்ணின் உடலியலோடும் உளவியலோடும் நிலவுக்கு ஆழமான தொடர்புண்டு.கீழைத்தேய ஜோதிட மரபில் நிலவை அடிப்படையாகக் கொண்ட கணித முறைக்கு இதுவே காரணம்.
நிலவின் சுழற்சியை மையமாகக் கொண்டே பெண்ணின் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.எனவே ஒரு பெண்ணுக்கு நிலவு மிகவும் நெருக்கமானது.
 “வலப்பக்கத்திலிருந்து எழுந்த நிலவு
கவிதைக்கு
காட்சிகளை வெளிச்சமிடுகிறது
என்பதாக  சக்திஜோதியின் கவிதை ஒன்று தொடங்குகிறது. யோக மரபில் மனித உடலின் இடது பாகம் ஈடா என்றும் வலது பாகம் பிங்கலா என்றும் அழைக்கப்படுகிறது. இடது பாகத்தில் பெண்தன்மை அதிகம். வலது பாகத்தில் ஆண்தன்மை அதிகம்.
இதுதான் அர்த்தநாரீசுவர தத்துவம்.(இதை சமீபகாலம் வரை தமிழில் மாதொரு பாகன் என்று சொல்லி வந்தனர்) இடதும் வலதும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டேயிருக்கும்.
வலம்சார்ந்த ஈர்ப்பின் மினுக்கு கவிதையின் முதல் வரியாகிறது.
   
“வலப்பக்கத்திலிருந்து எழுந்த நிலவு
கவிதைக்கு
காட்சிகளை வெளிச்சமிடுகிறது
அரும்புகிற கவிதை வரிகளை
மலரச் செய்கிறது
எழுதப்படாத சொற்களை
நிலவின்முன் வைத்துக் காத்திருக்கிறேன்”
என்கிறார் சக்திஜோதி.உண்மைதான்.நீங்கள் எழுதி முடித்த வரிகளை சூரியனுக்குக் கீழே வைத்துவிட்டுப் போய்விடலாம்.ஆனால் எழுதப் படாத சொற்களுடன் நிலவுக்காக காத்திருப்பதுதானே நியாயம்.
, துர்வாசரிடம் மந்திரோபதேசம் பெற்ற குந்தி சூரியனுக்கு பதிலாக சந்திரனை அழைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தனக்குக் கிடைத்த வரத்தின் குளுமையை முதல் அனுபவத்திலேயே குந்தி நன்கு உள்வாங்கியிருப்பாள்.
இப்படியோர் எண்ணத்தை இந்தக் கவிதையின் அடுத்த வரிகளே அளிக்கின்றன  
“நிலவு தன் ஒளிவரிகளால்
என்மீது
எழுதத் தொடங்குகிறது
பின்னிரவில்
வெப்பம் தணிந்த உடலின் கண்களில்
இரண்டு நிலவு மிதந்து கொண்டிருக்கிறது”
(எனக்கான ஆகாயம்31/32)
இந்தக் கவிதையை கடந்து செல்கையில் மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டில் வருகிற ஒரு வரி நினைவில் நிலவெரிக்கிறது.
“சந்திரன் ஜோதியுடையதாம்-அது
 சத்திய நித்திய வஸ்துவாம்- அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் -நின்னை
சேர்ந்து தழுவி அருள்செய்யும்”.
மந்திரத்தால் குந்தி சந்திரனை அழைத்திருந்தால் என்ற கேள்வி இந்தக் கவிதை வரிகளினூடே எங்கிருந்து முளைத்ததென எனக்கு சொல்லத் தெரியவில்லை.ஆனால் குந்திக்கு சூரியனுடனான தாம்பத்யம் எவ்வாறாய் இருந்திருக்கும் என்கிற கேள்விக்கான பதிலும் சக்திஜோதியின் கவிதைகளில் நமக்குக் கிடைக்கிறது என்பது வியப்புதானே!
“தன்னுள் சுடர்ந்து கொண்டிருக்கும் அன்பை
யாவரிடமும் பொழியுமவள்
அதனை
சூரியனிடமிருந்தே கற்றுக் கொண்டாள்
சுடர்தல்
வெம்மை தருதல்
பகிர்தல்
யாவும் சூரியனின் குணங்கள் எனவும்,
எக்கணமும் ஒளித்து வைக்காமல்
யார்மீதும் பரவிவிடும் அதன் எளிமை எனவும்
ஒவ்வொன்றையும் அவள் அறிந்திருந்தாள்
நிலவும் நீரும் வளியும் நெருப்பும் வெளியும்
அதுவாகவே இருக்கும் மந்திரம்
சூரியனின் குழைந்தநெருப்பில் துவங்குவது போல
அவளிடமிருந்தே
இந்த உலகம் இயங்குவதாக நம்புகிறாள்
அதனால்
புவியியலைக் கற்றுக் கொள்வது போலவே
அவளின் உடலியலைக் கற்றுக் கொண்டிருந்தாள்
(மீன் நிறத்திலொரு முத்தம் ப-28)
   
சூரியனோடும் சந்திரனோடும் பிணைந்திருந்த ஆதித் தாய்மனம் நெஞ்சொடு கிளத்தும் நன்மொழி இது
 (பறவை வரும்)

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-2 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)


 மெல்லிய வடிவழகும் அதனினும் மெல்லிய இயல்புகளும் கொண்டவளாய் காட்டப்படும் சங்க இலக்கியத் தலைவியரின் குரல், கனமானது. குழைவையும் கனிவையும் தாண்டிய கம்பீரம் ஒளிர்வது.
இறைஞ்சுதலாய்,ஏங்குதலாய் ஒலிக்கும் அதே குரல் நுண்ணுணர்வின் உச்சப் பொழுதுகளில் காட்டும் கணநேர விசுவரூபங்களை சங்கப் புலவர்களின் சூரியத் தூரிகைகள்
கனல் சித்திரங்களாய் தீட்டிச் செல்வதுண்டு.அவளே அறியாத அவளின் பெற்றிமைமீது ஒளிபாய்ச்சும் சங்கச் செவ்வியை சக்திஜோதியின் கவிதைகளில் காணலாம்.
இங்கு சக்திஜோதி காட்டும் பெண் தன் காதலுக்குத் தூது செல்ல பிரபஞ்சத்தையே இறைஞ்சுகிறாள்.
எவ்விதமாயும் வெளிப்படுத்தவியலாக் காதலோடு
நதியிடம் வேண்டினாள்,
தலைவனிடம்
தன் சொற்களைக் கொண்டு சேர்ப்பிக்கும்படி..
கடந்து சென்றது நதி
நதியோடு பேசாத பெண்ணுண்டோ? சீதை கடத்தப்படும் பொழுது கீழே தெரியும் நதியிடம் முறையிடுகிறாள்.உதவி கேட்கிறாள்.
கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
 மாதா அனையாய்; மனனே தெளிவாய்
 ஓதாது உணர்வார் உழை ஓடினைபோய்
 நீதான் வினையேன் நிலை சொல்லலையோ
என்கிறாள். இந்தக் கவிதைவரி கம்பனை நினைவுபடுத்தியது.
காற்றிடம் கேட்டாள்
தன் காதலை கொண்டு சேர்ப்பிக்கும்படி..
விலகிச் சென்றது காற்று
பறவைகள் வெகுதொலைவில்
பறந்தபடியிருந்தன
நதியின் கூழாங்கற்களாய்
காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
இங்கு காத்திருப்பின் அலைவீசும் காதல் நதி நீண்டு பெருகிய பெருக்கத்தில் காலம் கூழாங்கல்லாகி விடுகிறது. கணப்பொழுதில் ஒருபெண் தன் காதலின் பெயரால் விசுவரூபம் கொள்ளும் இடம் இது.
இந்தக் கவிதை முற்றுப் பெறும் விதம் இன்னுமொரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
வடிவமற்ற சொற்களில்
காதல் சிதறிக் கிடக்கிறது…
வனத்தில் தனித்தலையும்
பறவையைப் போல….
(எனக்கான ஆகாயம்-20/21)
நதியும் காற்றும் கொண்டு சேர்க்க மறுத்த, பறவைகளுக்கு வெகுதொலைவில் பூமியில் ஒரு புள்ளியாய் தவித்த ஓர் எளிய பெண்ணின் காதல் தானே ஒரு பறவையாய் வனமளாவி வானளாவிப் பறக்கிற இடம்,கம்பீரமான இடம். பிரிவுத் துயரில் தவித்த மனமே பிரபஞ்சம் அளக்கும் சிறகுகள் பெற்றெழுகிற இடம்.
 பிரபஞ்சப்பேராற்றலின் அங்கமாய் தன்னை உணர்தல், அல்லது பிரபஞ்சத் தோழமை பெண்மைக்கு காலங்காலமாய் போதிக்கப்பட்ட ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தை ஒரு பறவைபோல் துய்த்து,தன்னை அதன் அங்கமாகவே பெண் உணர்கிறாள். பூமியின் கருவில் பிறந்த சீதை,நெருப்பில் தோன்றிய பாஞ்சாலி,கடலில் தோன்றிய திருமகள்,காற்றை மணந்த அஞ்சனை, பிள்ளையின் வாயினுக்குள் பிரபஞ்சம் பார்த்த யசோதை எல்லாமே இதன் பிரதிநிதிகள்தாம்.    
காதலோ, பக்தியோ,எந்த உணர்வு தீவிரம் பெற்றாலும் அந்தத் தீவிரம் பெண்ணில் தொழிற்பட்டு அவளின் பேராற்றலை வெளிக் கொணர்கிறது. இது பெண் சுதந்திரத்தின் வேறொரு பரிமாணம்.
சக்திஜோதி கவிதைகளில் நாம் காணும் பெண் எப்போதும் இயற்கைக்கு பக்கத்திலிருப்பவள். இவள் பூக்கள் மலர்வதை வைத்தே பருவகால மாற்றங்களை உணர்ந்த சங்கப் பெண்மையின் நவீன வார்ப்பு.
  
 தன்னை விட்டுச் சென்றவனின்
வழித்தடம்
காட்டுப்பாதை என்றறிந்திருந்தாள்
நடு இரவில் மின்னல் ஒளியில்
அந்த வழித்தடம் தோன்றி மறைகிறது
அவளது நினைவுகளில்
காட்டு மரங்களின் ஊடே
காளான்கள் பூத்திருந்தன
(மேலது-50)
என்று பாடுகிற பெண். உருகி உருகிக் காதலித்தாலும் தனக்குப் பின்புலமாய் பக்க பலமாய் பேரியற்கையை பெற்ற பெண். இந்தப் பார்வையை இன்னும் சரியாய் உணர சக்திஜோதியின் இன்னொரு கவிதையே நமக்கு உதவுகிறது.
ஓர் எளிய சூரியகாந்தி.சூரியனையே சார்ந்திருக்கும் தாவரம். மாலையில் வாடிக்கிடக்கும் அதன் பெருஞ்சக்தியை எழுதிக்காட்டுகிறார் சக்திஜோதி
பகலில்
சூரியனை
துளித்துளியாக பருகிய அது
தனித்து விடப்பட்ட இரவில்
துவண்டு கிடக்கிறது
வான்வெளி
நட்சத்திரங்கள்
குளிர்நிலா என
எதனாலும் இயலவில்லை
அந்தப் பூவின் மடலை
விரியச் செய்ய..
இது உள்ளே ஒரு பெண் பொத்திக் காக்கும் தீவிரம் தந்த திடம்.
தன்னை ஒரு பெண் பிரபஞ்சமாய் உணர்கையில் ஓர் அதிசயம் நிகழ்கிறது. அவள் மனதுக்கு மிக அண்மையாய் இருக்கும் அந்தக் காதலனையும் அவள் ஒரு சராசரி ஆணாய் எளிய மானுடனாய் உணர்வதில்லை. தன்னை எப்படியெல்லாம் உணர்கிறாளோ அதற்குச் சமமான உயரத்தில் தன் மனவெளியில் அவனை தருவிக்கிறாள்.
விரைந்து செல்கையில்
முகத்தில் படும் குளிர்காற்றென
உன்னை உணர்கிறேன்
நீ
பனிப்பிரதேசம்
அப்பொழுது நான் கோடைநிலமாக இருந்தேன்
என்னைக் காண மேகமாய் மாறுகின்றாய்
பின்
ஆலங்கட்டி மழையாய் பொழிகின்றாய்
உன் அன்பு பெருகியோடிய நிலத்தில்
காய்கனிகள்
அடிபட்டு உதிர்கின்றன
நான்
உள்வாங்கி மலர்கிறேன்
பட்ட விதையிலிருந்த பூக்களாய்
———————
———————
தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில்
என்முகம் பார்க்கின்றேன்
நீ
தெரிகின்றாய்
(மேலது-64/65)
ஒரு பெண் தன் உதிரத்தையும் கண்ணீரையும் குழைத்து பாவை நோன்புக்கான பொம்மை செய்கிறாள். அதனிடம் மன்றாடுகிறாள். அதன் சந்நிதியில் நோன்பு நோற்கிறாள். பின்னர் தன் சுயமுணர்ந்து அதற்கு சக்தியூட்டுகிறாள். தன் விருப்பங்களை நிறைவேற்ற முத்தங்களாலான ஆணையைப் பிறப்பிக்கிறாள்.
வாசிப்பின் வழி நமக்குள் ஏற்படும் இந்தப் புரிதலை சக்திஜோதியின் வரிகளைக் கொண்டே உறுதி செய்து கொள்ளலாம்
இசையென்றாய்
பாடலென்றாய், நல்லமுது என்றாய்,
நிலவு என்றாய்
நீங்காத கனவு என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலைமுகட்டை உரசிச் செல்லும் மேகமென்றாய்
மேகம் குளிர்ந்து பெய்யும் மழைஎன்றாய்
மழை பெருகி ஓடும் நதி என்றாய்
கடல் என்றாய்
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கிச் சரிந்தேன்
பெண் என்பதை மறந்தேன்
நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்
(மேலது-46)
இதுதான் ஒரு பெண்ணின் பலம். ஆதிசக்தியின் அதிர்வுகளை தன்னகத்தே கொண்டு,ஆசை,அமைதி,ஆவேசம் ஆளுதல்,ஆளப்படுதல் என எத்தனையோ நிலைப்பாடுகளில் நின்று ஜொலிக்கிறாள் பெண்.
ஓர் ஆண் இந்த உண்மையை எதிர்கொள்ள அஞ்சி அகங்காரத்தை இழுத்துப் போர்த்திக் கொள்வதை ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்த வண்ணம் பணிந்தும் போகிறாள். 
எல்லாமே நீ என்னும் பணிவும் எல்லாமாய் ஆகும் பிரவாகமும் கூடி நிகழ்த்தும் மாயையின் மகத்துவமே பெண்மனம் என்பதை பஞ்சபூதங்களின் மடியிலமர்ந்து பேசுகின்றன சக்திஜோதியின் கவிதைகள்
(பறவை வரும்)    

கருப்பாயி என்றால்….

கருப்பாயி என்றால் கறுப்பென்றா அர்த்தம்?
கருப்பையிலே கொண்டாள் ககனம்- சிரிப்பாலே
மின்னல் உருவாக்கி மேக மெனப் பொழிவாள்
பின்னலிட்ட பிச்சியைப் பற்று
கோடை வருங்கால் குளிர்மழையும் ஆவாளே
மேடை வருங்கால் மனம்நிறைவாள் -ஜாடையில்
எந்தவொரு பெண்ணும் இவளோ எனும்படிக்கு
வந்துநிற்கும் பெண்ணை வழுத்து
கண்கள் விடுகதையாம் கால்களோ காவியமாம்
வண்ணச் சிறுகதையாம் வஞ்சியிடை-எண்ணிலொரு
நாவல் பழநிறத்து நாயகியாம் சாமளையாள்
காவலென்று வந்த கனிவு
தின்னும் கனிக்குள்ளே தேவி விதைவைத்தாள்
சின்ன மழலைக்குள் சொல்வைத்தாள்- கன்னியவள்
உன்னில் எதைவைத்தாள்? என்னில் எதைவைத்தாள்?

தன்னையே வைத்தளித் தாள்.

இவன் ஆதியோகி ..இவன் ஆதியோகி….

(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்…இதுதான்)

இருளோடு ஜோதி… ஒளிவீசும் நீதி
எழில்மங்கை பாதி… இவன் ஆதியோகி

நடமாட சுடலை.. பொடிபூசும் மேனி
உடனாட கணங்கள்… இவன் ஆதிஞானி

சடையோடு புனலாம்… கரமேந்தும் அனலாம்

சிரம்மீது நிலவாம்… விழிமூன்றும் வெய்யிலாம்

பொன்போல மேனி …திருநீல கண்டம்
பொன்கூரை வீடு …கையில்திரு ஓடு

விண்ணோரும் தேடி… அடையாத பாதம்
எண்தோள்கள் வீசி… நடமாடும் கோலம்

நெற்றிக்கண் திறப்பான்… காமனை எரிப்பான்
வெற்றிவடி  வேலன்… கண்வழியே பிறப்பான்

பருவங்கள் எல்லாம்… சிவன்பார்க்க மாறும்
துருவங்கள் எல்லாம்…. ஒன்றாக சேரும்

வேதங்கள் தேடி…. உணராத சித்தன்
ஓடோடி வந்து …அருள்செய்யும் பித்தன்

யானைத்தோல் போர்த்து…. புலித்தோலை உடுப்பான்
திகம்பரன்  ஆகி ….திசையெங்கும் நடப்பான்

சிலநேரம் அகோரன் ….அதிரூப சுந்த்ரன்
அதிகாரம் செய்யும்… இவன்கால காலன்

கைலாச வாசி… ப்ரபஞ்ச யாத்ரி

மஹாயோகி ஆளும்… மஹாஷிவ ராத்ரி

திருமாலும் பழஞ்சோறும்

அமெரிக்கா வாழ் அறிஞரும் ஆய்வாளருமான திரு.நா.கணேசன் திருமாலுக்கும் பழைய சோற்றுக்கும் உள்ள சிலேடைச்சிந்தனைகளை புதுப்பித்தார்.

சோறு என்றால் முக்தி என்றொரு பொருளும் உள்ளது நினைவுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இந்த வெண்பாக்களை எழுதினேன்

மாவடு ஊறவே மாவலி சென்னியில்

சேவடி வைத்தவன், சேர்த்துப்பு-மேவாத

பாற்கடலில் ஊறும் பழையனவன், முக்தியாம்

சோற்றுக் குதவுவனோ சொல்

சாதம் பழையதொக்கும் சாரங்கா-வல்வினையின்

சேதம் பழையதடா சீர்மிக்க -பாதம்

பலதோஷம் தீர்க்கும் பழையதே யன்றோ

ஜலதோஷம் இல்லாத ஶ்ரீ

கொண்டதோ குள்ளவுரு கேட்டதோ மூன்றடி
அண்டங்கள் எல்லாம் அபகரித்தோன் -விண்டதோ
பண்டோர் இரணியனை பின்னர் சிவதனுசை

உண்டதோ அண்டவுருண் டை.

மொத்தப் பிரபஞ்சங்கள் முக்கி விழுங்கியவன்

சத்தமின்றி வெண்ணெயும் சேர்த்துண்டான் -வித்தகன்

வஞ்சமுலைப் பாலுண்டான் வஞ்சியாம் ராதையைக்

கொஞ்சி இதழுண்ணுங் கோ.