மார்கழி 5-காட்டுவித்தால் யாரொருவர்…

வெளிப்படையாய் இந்தப் பாடலுக்குத் தென்படும் உரை,ஒரு பெண்ணைப் பழிப்பதுபோல் உள்ளது. திருமாலும் நான்முகனும் அறியா சிவனை நாம் அறிவோம் என்று இனிய சொற்களால் பொய்யுரைத்த பெண்ணே !கதவைத்திற!அண்ணும் விண்ணும் அறியவொண்ணா மகாதேவன் நம்மை ஆட்கொண்டு சீராட்ட வருகிற சீலத்தைப் பாடி சிவனே சிவனே என ஓலமிட்டு நாங்கள் வீதிவழி வருவதை நீ அறியமாட்டாயா” என்பது வெளிப்படையான பொருள்.

இதிலுள்ள முரண்பாட்டை நம்மால் உணரமுடிகிறது.ஒருபக்கம் மாலும் அயனும் அறியவொண்ணா இறைவனை அறிவோம் என்பதை பொய் என்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண்களே விண்ணும் மண்ணும் அறியவொண்ணா சிவன் நமக்காக எளி வந்த கோலத்தில் வந்து சீராட்டுவான் என்கிறார்கள்.

“காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே” என்றார் திருநாவுக்கரசர்.சிவனை நாம்நன்கறிவோம் என்று சொன்னவளின் சொல் பாலொடு தேன் கலந்தாற்போல் இருந்ததாம். இதில் பாலாக இனிப்பது எது? தேனாக இனிப்பது எது? பால்,பிறருக்குக் காட்டுவேன் என்னும் உறுதிமொழி உள்ளனுபவத்தில் ஊறிவருகிற சிவானந்தத் தேன்.

குருவின் நிலையில் இருக்கக்கூடிய பெண் பிற பெண்களை பக்தி கனியட்டும் என்று காத்திருக்கச் செய்கிறாள்.அவர்களுக்கு சிவனின் எளிவந்த தன்மையும் புரிகிறது. வழிகாட்டியின் சொற்களில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வ்வருகிறது. தங்கள் தவிப்பை உணர்ந்து குருவானவர்(ள்) சிவத்தை காட்டுவிக்கக்கூடாதா என்னும் ஏக்கம் இப்பாடலில் வெளிப்படுகிறது

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

மார்கழி 4-ஒன்றாய் ஒன்றும் பலர்

திருவெம்பாவையின் நான்காம் பாடல் இன்னொரு பெண் வீட்டு வாசலில் தொடங்குகிறது. அவளும் முத்தனைய சிரிப்பழகிதான். ஒளிவீசும் நித்திலமோ ,உறங்குவதால்,ஒளிந்திருக்கும் நித்திலமோ–ஒண் நித்தில நகையாய் இன்னும் உனக்கு விடியவில்லையா என அழைக்கிறார்கள்.

உடனே அவள் “வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ” என்கிறாள்.கிளிபோல் அழகிய மொழியுடைய தோழியர் என்பது வெளிப்படையாகத் தோன்றும் பொருள். எல்லாப் பெண்களும் ஒன்று போல் சிவநாமங்களை உரக்கச் சொன்ன வண்ணம் வருவதால் அவர்களைக் கிளிமொழியார் என்கிறாள்.

எல்லோரும் வந்துள்ளனரா என எண்ணிச் சொல்லுகிறோம் என்றவர்கள், “அதுவரை உறக்கத்தில் காலத்தைப் போக்காதே.நாங்கள் விண்ணுக்கொரு மருந்தாகவும், வேதத்தின் நிலையான பொருளாகவும் கண்ணுக்கு இனியவனாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் கசிந்துருகி நிற்கிறோம். எனவே நாங்கள் எண்ணப் போவதில்லை. நீ வேண்டுமானால் எண்ணிப் பார். ஆள் குறைந்தால் எல்லோரும் வரும் வரை உறங்கு” என்கிறார்கள்.

இதனை வேறு விதமாக யோசித்தால், சிவனை சிந்திப்பது போலவே சிவனடியார் உறவும் முக்கியமல்லவா,மற்ற பெண்களை எண்ணிக் கொண்டிருக்க மாட்டோம் என்று சொல்லலாமா என்றொரு கேள்வி எழலாம்.

சிவபக்தி கொண்டபெண்கள் வெறுமனே நின்று கொண்டிருந்தால் தலையை எண்ணி விடலாம். எல்லோரும் சிவநாமத்தைப் பாடிக் கொண்டல்லவா இருக்கிறார்கள்! அப்போது ஏற்படும் அதிர்வில் உள்ளம் நெக்குருகும் போது தலைகளை எண்ணத் தோன்றாது.

இரண்டாவது இந்தப் பெண்கள் பலராக இருந்தாலும் உள்ள உருக்கத்தாலும் உணர்வாலும் சிவ சிந்தனையில் ஒருமித்து நிற்பதால் இவர்களை தனித்தனியே பிரித்தறிய முடியாது என்றும் தோன்றியிருக்கக்கூடும் அல்லவா! எனவே “யாம் மாட்டோம்” என்கின்றனர்.

உள்ளே இருப்பவள் வெளியே வந்தால் அவளும் இந்த இறையுணர்வில் கலந்து கசிந்திடுவாள். அவளாலும் எண்ண முடியாது என்பதை உணர்த்தவே “முடிந்தால் நீயே வந்து எண்ணிக்கொள்” என்கின்றனர்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

மார்கழி 3 அடியார்க்கு அடியார்; இப்பூங்கொடியார்

திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண
முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை
ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள்
கேட்க,அவர்களை பழ அடியார் என்றும் தன்னை புத்தடியோம் என்றும் அந்தப் பெண் வர்ணித்து ஆட்கொள்ள
வேண்டுவதாக பொதுவாக உரை சொல்வார்கள்.

“பத்துடையீர்-ஈசன் பழ அடியீர்-பாங்குடையீர்” என்னும் வரி,உள்ளே இருக்கும் பெண் வெளியே நிற்பவர்களை
விளிப்பது போலவும்,”புத்தடியோம்” என்று அவள் தன்னையே சொல்லிக் கொள்வது போலவும் பலர் பொருள்
சொல்வதுண்டு.

ஆனால் இந்தப் பெண்ணின் பக்குவம்தான் பிறரால் புரிந்து கொள்ளப்படவில்லையே தவிர,இவள் எல்லா நேரமும்
சிவ சிந்தையிலேயே ஊறித் திளைப்பவள் என்பதை பிறர் கண்டுகொள்வதாக முந்தைய பாடல்கள் அமைந்துள்ளன.
எனவே இந்தப் பாடலின் முதல் ஐந்து அடிகள் உள்ளே இருப்பவளின் பெருமையை உணர்ந்து வெளியே நிற்பவர்கள்
பாடுவது போலவும்,அடுத்த இரண்டு அடிகளை உள்ளே இருப்பவள் வெளியில் நிற்பவர்களை நோக்கிப் பாடுவது
போலவும் நிறைவு வரியினை எல்லோரும் சேர்ந்து பாடுவது போலவும் பொருள் கொள்வது மேலும் பொருத்தமாய்
இருக்கிறது.

“முத்தன்ன வெண்நகையாய்” என்னும் தொடக்கம் தனிச்சிறப்புடையது. நல்லூர்ப் பெருமணத்தின் போது
திருஞானசம்பந்தர் முழுவதும் முத்திலேயே அலங்கரிக்கப்படுவார். இதற்கு உரையெழுதிய சிவக்கவிமணி
சி.கே.எஸ்.,அனைவருக்கும் முத்தி அருள வந்தவருக்கு முத்தலங்காரம் என்பார். அதுபோல் இப்பெண்ணின்
நகையானது முத்தியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

முதல் மூன்று வரிகளில் உரிமை பற்றி ஒருமையில் அழைக்கும் பெண்கள், அந்தப் பெண்ணின் பக்குவத்தை
நினைந்து நான்காம் வரியில் ‘அர்’ விகுதியிட்டு அழைக்கத் தொடங்குகின்றனர்.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

வெளியே நிற்கும் தோழியர் அனைவரும் தங்களை “புத்தடியோம்” என்று ஒருங்கே குறிக்கின்றனர்.
சித்தம் அழகிய பெண்ணாகிய் நீ சிவனைப் பாடுவதையும் நாங்கள் கேட்க வேண்டும்” என்று விண்ணப்பிக்கின்றனர்.
புத்தடியாராலும் பழ அடியாராலும் தீவிரமாக விரும்பப்படுபவன் என்பதனால் ‘நம் சிவன்” என்னும் பாங்கும்
நினையத்தக்கது.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

மார்கழி 2- இது சுகபோகமல்ல..சிவயோகம்

ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி விட்டார் போலும். கண் திறப்பதற்குள் அவரைக் காணவில்லை.

பக்தர்கள் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொள்வது பலகாலமாய் உள்ளதுதான். இங்கே ஒரு பெண் உறங்குவதாய் நினைத்து இன்னொருபெண் தோழியருடன் வாயிலில் நின்று எள்ளி நகையாடுகிறாள்.

” சோதிமயமான பரம்பொருளாகிய சிவபெருமான்மேல் உனக்குப் பாசமென்று சொல்வாயே!ஆனால் மலர் தூவிய இந்த மஞ்சத்தின் மீது நேசம் வைத்தாயோ பெண்ணே!” இதுவரை அந்தப் பெண் பேசிய பேச்சு.இனி அந்த வீட்டுப்பெண் பேசுகிறாள்.

“இது கேலி பேசுகிற இடமா? தேவர்கள் தேடித் தொழ கூசும் திருவடிகளை நமக்குத் தந்தருள சிவபெருமான் வந்தருள்வதால் இந்த இடமே சிவலோகமல்லவா!சிற்றம்பலப் பெருமான் மீதான அன்பின் வடிவமே நாமல்லவா” என்க்கிறாள்.திருவெம்பாவையின் இரண்டாம் பாடல் இது.

முந்தைய பாடலிலும் இந்தப் பாடலிலும் அந்தப் பெண் உறங்கும் மஞ்சம், மலர் தூவிய மஞ்சம் என்று வர்ணிக்கப்படுகிறது.தூவப்பட்ட மலர்கள்,போகம் கருதியதல்ல,தனக்கு திருவருள் செய்ய வந்தருளும் சிவபெருமான் திருவடிகளுக்கு தூவுவதற்காக வைக்கப்பட்ட வழிபாட்டு மலர்கள் என்று நமக்குப் புரிகிறது.நெஞ்சத்தில் பக்தி பெருக்கெடுத்தால் மஞ்சத்திலும் சிவவழிபாடு சாத்தியம் என்றல்லவா இந்தத் திருப்பாடல் சொல்கிறது1!
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

மார்கழி-1-ஏன் மயங்குகிறாள் இந்த மாது?

மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள்.

பாவை பாடல் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலைகளில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவரவரின் பக்குவத்திற்கேற்றது.

திருவெம்பாவையின் முதல் பாடல் அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கத்தக்கது.”எல்லையிலாததும் அரியதுமான” பெருஞ்சோதிப் பிழம்பாகிய சிவபெருமானின் பெருமையை நான் பேசி வருகிறேன்.கூரியதும் பெரியதுமான கண்கள் கொண்ட பெண்ணே! கண் திறந்து பார்க்கவில்லையா?உன் செவிகள் கேட்காதா?”

இது பாடலின் முதல் பகுதி.

” சிவபெருமான் திருவடிப்பெருமைகளை வீதியில் படுவது கேட்டதுமே தன்னிலை மறந்தவளாய் மலர் தூவிய படுக்கையில்கிடந்து புரண்டவள் நினைவிழந்தாள்.விழுந்தாள்”.

இது பாடலின் இரண்டாம் பகுதி.

“அடடா! என் தோழி இத்தகைய பெருநிலை உற்றாளா?பாவை போன்றவளே! இதைக்கேளாய்!”

இது பாடலின் மூன்றாம் பகுதி.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தால் இருவர் பேசிக்கொள்வது தெரியும். ஒருத்தி தன் தோழியை எழுப்ப வந்தவள். பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே நின்றுபேசுகிறாள். சிவனின் சீர்மைகள் பாடும் குரல் கேட்டும் தன் தோழி எழவில்லையே என்னும் ஆதங்கம் அவளுக்கு.
இன்னொரு குரல் உள்ளிருந்து வருகிறது.சிவநாமங்கள் கேட்டதுமே தன்னிலை மறந்தவளாய் படுக்கையில் புரண்டவள் மூர்ச்சையானாள் என்கிறது. இந்தக் குரலுக்கு உரியவள் அந்தப் பெண்ணின் தாயாகவோ செவிலித்தாயாகவோ இருக்கலாம். உடனே கேள்வி கேட்ட பெண் தன் தோழியின் பத்திமையை உடன் வந்த தோழியிடம் வியந்த வண்ணம் நகர்கிறாள்.

இதில் ,படுத்திருந்த பெண் ஏன் மூர்சையானாள் என்பதில்தான் எத்தனையோ கோணங்கள் உள்ளன.

“மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே”

இவள் ஏன் மூர்ச்சையானாள்?மார்கழியில் மாதேவன் வார்கழல்களை வாழ்த்தி வீதிவலம் வரும் வழக்கம்,இவளளறியாததா என்ன?

இவள் படுக்கையில் கிடந்தாளே தவிர,உறங்கினாளில்லை.சிவனீன் நாமங்களைச் சொல்லி வாழ்த்திய வண்ணம் கிடந்தவளுக்கு இரவுப் பொழுது, வைகறை என்னும் பேதங்கள் தெரியவில்லை. சற்றும் எதிர்பாராத விதமாய் தான் ஓதிக்கிடந்த சிவநாமங்கள் வீதியிலும் கேட்ட பரவசத்தில், அவள் மயங்கி விழுந்தாள்.

வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே”

என்னும் வரி இதைத்தான் உணர்த்துகிறது.இப்படியோர் இடம் திருப்பாவையிலும் உண்டு.இராமானுஜர் திருப்பாவை பாடல்களை ஓதிய வண்ணம் வீதிவலம் வரும்போது,தன் ஆசார்யர் திருமாளிகைக் கதவைத் தட்டினார்.ஆசார்யரின் புதல்வி அத்துழாய் வந்து கதவைத் திறந்ததுமே இராமானுஜர் மூர்ச்சையானார். அச்செய்தி ஆசார்யருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் “உந்து மதகளிற்றன் பாசுரம் ஓதப்பட்டிருக்க வேண்டும்”என்றாராம்.

திருமாலின் திருப்பெயர் பாட திருமகளை வாயிற்கதவு திறந்தருளுமாறு விண்ணப்பிக்கும் பாசுரம் அது.”கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்” என்ற வரி பாடப்படும் பொழுது அத்துழாய் கதவைத் திறக்க, தான் ஓதிய வரியே உருக்கொண்டு வந்தாற்போலுணர்ந்த உடையவர் மூர்ச்சித்தார்.அதுபோல் தான் ஓதிக்கிடந்த சிவநாமங்கள் வீதியில் ஒலிக்க,அந்தப் பரவசத்தில் இந்தப்பெண் மூர்ச்சையானாள்.

இதில் இன்னொரு கோணமும் உண்டு.யோகமரபில் ஒன்றை உணர்த்துவார்கள்.ஒரு செயலை பருவுடல் நிகழ்த்தும் போது,சூட்சும உடலும் அதனை இன்னும் ஆழமாகச் செய்யும். ஹடயோகத்தில் ஒருவர் குனிய முயல்கிறார்,ஆனால் விரும்பும் அளவு குனிய முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.பருவுடல்தான் திணறும்.ஆனால் சூட்சும உடல் நன்றாக வளைந்து அந்தக் கிரியையை செய்யும்.அதுபோல ஒரே பெண்ணின் பருவுடல் படுக்கையில் கிடக்க அவளுடைய சூட்சும உடல் சிவநாமங்களைப் பாடி வீதிவலம் வருகிறது என்று கருதவும் இடமுண்டு.

உன்னைப் புரியுமா உனக்கு?

இன்னொரு மனிதன் எழுதிய சீலையில்
உன் தூரிகையை ஓட்டலாகாது;
மௌனம் பரப்பிய மேடையில் ஏறி
யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ;
புராதனசிலைகளின் பக்கவாட்டில்
கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு?
நீவிழிக் கும் வரை நிதானித் ததன்பின்
சூரியன் உதிப்பதாய் சொல்லித் திரிகிறாய்
விழுமுன் நிழலில் வண்ணங்கள் நூறு
அழகாய்த் தெரிவதாய் அளந்து விடுகிறாய்
விக்ரமாதித்தர்கள் முதுகினில் எல்லாம்
வலியத் தொற்றும் வேதாளம் நீ
வையமே உன்னை விரும்பிச் சுமப்பதாய்
பொய்யும் புரட்டும் பரப்பி நடக்கிறாய்
ஆறாம் வேதமும் எட்டாவது சுரமும்
நானே என்கிறாய்; நம்புகி றார்சிலர்
உன்னை உனக்கே நன்கு புரியும்
நன்னாள் எதுவோ?யாருக்குத் தெரியும்?

ஸ்ரீராம் மெஸ்ஸின் மூன்றாம் மேசை

Vannadhasanமதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது மேல்தளம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு விரிவாக்கம் கண்டிருக்கிறது.

வாசலில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் பள்ளிக்கூடங்களில் ஒட்டப்படும் அறிவுறுத்தல் போல் கறாரான வாசகங்கள் இருக்கும்.தலைமையாசிரியரின் கையெழுத்து ஒன்றுதான் பாக்கி. உணவுக்கு கூப்பன் வாங்கிய கையோடு, “மினரல் வாட்டருக்கு இங்கே பணம் செலுத்தவும்” என்னும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து,தண்ணீர் வாங்கிக்கொண்டு மாடிக்குச் சென்றேன்.

குளிர்சாதன அறையில் இரண்டாம் மேசையில் அமர்ந்தேன். சற்று முன் மதுரை நியூ செஞ்சுரி விற்பனை நிலையத்தில் வாங்கிய புத்தகங்களில் இருந்து உயிரெழுத்து இதழைப் பிரித்தேன்.

மூன்றாம் மேசையில் இருவரின் பேச்சு காதில் விழுந்தது. கொடுமுடி கோகிலம் கே.பி.எஸ்.சைப் பற்றியது அது. கே.பி..எஸ் சின் பாடல்களைப் பற்றியோ முருக பக்தியைப் பற்றியோ அல்ல அந்த உரையாடல்.”பவுன் 13 ரூபாய் வித்த போது நடிக்க ஒரு இலட்சம் ரூபாய் வாங்கினாங்க” என்பதைச் சுற்றியே பேச்சு இருந்தது.

அந்த இருவரும் எழுந்து போன பிறகும் கூட கேபி.எஸ்.அந்த மேசையிலேயே அமர்ந்திருந்தார்.கவுந்தியடிகளாக வந்த கே.பி.எஸ். அவ்வையாக வந்த கே.பி.எஸ்.காரைக்காலம்மையாக வந்த கே.பி.எஸ், பூம்புகார் படத்தில் “அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது” என்ற வரியைப் பார்த்துவிட்டு “தெய்வமெங்கே சென்று விட்டது”என்று பாடமாட்டேன்” என்ற கே.பி.எஸ்.,அந்தப் பாடலை எழுதிய கலைஞர்.மு.கருணாநிதி ” நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என்று மாற்றிக் கொடுத்தபின் பாடிய கே.பி.எஸ்,.என நினைவுகள் நிழலாடின.

KPSநடிகர் திரு.எஸ்.எஸ். ஆருடனான சந்திப்பின் போது அவர் ஒரு சம்பவம் சொன்னார்.”நாங்கள் சின்னஞ் சிறுவர்களாக இருந்தபோது,கொடுமுடியில் நாடகம் நடிக்கப் போவோம். கே.பி.எஸ் எங்களை ஐத்து தன் கைகளாலேயே எண்ணெய் தேய்த்து விடுவார். நல்ல உணவு தருவார்”>

அந்த கே.பி.எஸ் அமர்ந்திருந்த மேசையை காலி மேசையென்று கருதி ஒரு குடும்பம் அங்கே வந்தமர்ந்தது. அதில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன், “நாம எதுக்கு இப்போ சாப்பிடணும்” என்ற ஆதாரமான கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் தலையில் கே.பி.எஸ். ஒரு கைஎண்ணெய் வைத்தபோது உயிரெழுத்து இதழில் ஒரு கதையைக் கண்டடைந்திருந்தேன். வண்ணதாசன் எழுதிய மகமாயிக் கிழவி பற்றிய கதை அது.

கிராமத்திலேயே நெடுநாள் கிடந்த கிழவி-சின்னவயதிலேயே கணவனைப் பறிகொடுத்து,அவ்வப்போது தன்மேல் ஆவேசிக்க வடக்குவாய் செல்விக்கு இடம் கொடுக்கும் கிழவி,தன் அண்ணன் மகனுடன் நகரம் வந்து சேர்கிறாள். மருமகனின் மகளையும் மகனையும் கொஞ்சுகிற கிழவியின் வருகை வேற்றுசாதிப் பையனை மணக்க அடம்பிடித்திருக்கும் அந்த வீட்டுப் பெண்ணின் இறுக்கம் தளர்த்தும் தென்றலாகிறது

வண்ணதாசனுக்கே உரிய அடவுகளில் கதை அபிநயம் பிடிக்க வாசித்த வண்ணமே சாப்பிட்டு முடித்திருந்தேன். மெஸ்காரர்கள் வாழைப்பழம் கொண்டுவந்து வைத்தார்கள்.

நிமிர்ந்து பார்த்தபோது மூன்றாம் மேசையில் அந்தக் குடும்பத்துக்கு இடம் விட்டு கே.பி.எஸ்சும் மகமாயிக் கிழவியும் ஒருவரையொருவர் உரசிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். நான் கைகழுவிவிட்டு வந்து பார்க்கும் போது மகமாயிக் கிழவி தன் பெயர்த்திக்குத் தந்தது போக மீதியிருந்த கறிவேப்பிலைப் பழங்களை கே.பி.எஸ் கைகளில் தந்து கொண்டிருந்தார். படியிறங்கி வந்தபிறகுதான் தோன்றியது..அவை சுட்ட பழங்களா சுடாத பழங்களா என்று கேட்டிருக்கலாமோ என்று

சார்லி சாப்ளின் மௌனத்தின் நாயகன்

அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின் அங்க
சேஷ்டைகளை அரும்புப் புன்னகையுடன் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்தான் வெள்ளித் திரையின் சேஷ்டை நாயகனாய் வலம் வந்த சார்லி சாப்ளின்.

அந்த அன்னைதான் வறுமையின் கொடுமையால் தன் மகனுக்கிருந்த ஒரே மாற்றுடையை அடகு வைத்து அடுத்தவேளை உணவுக்கு வழிதேடினாள்.அதே அன்னைதான் அடிக்கடி மனநிலை பிறந்து
மனநோயாளிகள் விடுதிகளில் இடம்தேடினாள்.

சாப்ளினின் பெற்றோர்கள் சார்லஸ் மற்றும் ஹன்னா ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் எளிய
இசைக்கலைஞர்கள்.1889ல் பிறந்த சார்லி சாப்ளினுடைய பிஞ்சு முதுகில பாரங்கள் ஏறின.வேலை
வாய்ப்பு தேடி தந்தை நியூயார்க் செல்ல,மனச்சிதைவுக்கு ஆளான தாய் அடிக்கடி மருத்துவமனைகளிலும்
மனநோய் காப்பகங்களிலும் தங்கிவிட,அனாதை இல்லங்களிலும் வேலைபார்க்கும் இடங்களிலும்
தங்கி வளர்ந்தார் சார்லி சாப்ளின். நடிகராய் வாழ்வைத் தொடங்கும்போது சாப்ளினுக்கு வயது
எட்டு.

சின்ன வயதில் எத்தனையோ வேலைகள் பார்த்தார் சார்லி சாப்ளின்.இங்கிலாந்தில் பார்த்த
பட்லர் வேலையும் அவற்றில் ஒன்று. ஆனால் உணவக உரிமையாளரின் வாத்தியக் கருவியை
எடுத்து வாசித்துப் பார்த்த குற்றத்திற்காக வேலையை விட்டுத் துரத்தப்பட்டார்.ஆனால் தன்
இசைத் திறமையையும் ஆர்வத்தையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் வளர்த்துக்
கொண்டார் சார்லி சாப்ளின்.

தோற்றத்தில் அடால்ஃப் ஹிட்லரை ஒத்திருந்த சார்லி சாப்ளின் ஹிட்லரை விட நான்கு நாட்கள்
மூத்தவர்.தொடக்கத்தில் சார்லி சாப்ளின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும்
கூடிக் கொண்டிருந்தன.அமெரிக்காவுக்கே அவர் விசுவாசமாய் இருப்பதாய் இங்கிலாந்து அரசாங்கம்
எண்ணியது.தன் திரைப்படங்கள் வழியே அவர் கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புகிறார் என்றும்
அரசாங்கம் நினைத்தது.சாப்ளினுடன் சேர்ந்து வாழ்ந்த 22 வயதுப்பெண்ணான ஜோன் பேரியின்
கொடுமையான நடவடிக்கைகளால் அவரைப் பிரிந்தார் சாப்ளின்.ஆனால் தான் கர்ப்பமாக
இருப்பதாகவும் அதற்கு சாப்ளின்தான் காரணமென்றும் வழக்குத் தொடுத்தார் அந்தப் பெண்.
இரத்தப் பரிசோதனைகளோதாந்தக் கருவுக்கு சாப்ளின் தந்தை இல்லை என்று தெரிவித்தது.

ஆனால் அந்தக் காலங்களில் இரத்தப் பரிசோதனை போதுமான ஆதாரமாகக் கருதப்படவில்லை.
எனவே அந்தக் குழந்தைக்கு 21 வயதாகும் வரை வாரம் 75 டாலர்கள் தரச்சொல்லி சாப்ளினுக்கு
நீதிமன்றம் உத்தரவிட்டது.

“அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ” என்று புலம்ப நேர்ந்தது சார்லி சாப்ளினுக்கு.

இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவுக்கு உதவியாக நிதி தந்ததால் அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டார் சார்லி சாப்ளின்.ஆனால் அவருக்கெதிரான
ஆதாரங்கள் ஏதும் அரசின் வசம் இல்லை.

திருமணங்களும் விவாகரத்துகளும் தொடர்கதைகள் ஆயின. நான்குமுறை திருமணம்
செய்து கொண்டார் சார்லி சாப்ளின்.மொத்தம் 11 குழந்தைகள்.அரசுகள் அலைக்கழித்ததால் சுவிட்சர்லாந்தில் சென்று தங்கினார் சார்லி சாப்ளின். கலைகளின் தலைநகரான
பிரெஞ்சு தேசம் அவருக்கு உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் தந்தது.ஒரு காலத்தில் அவரை சந்தேகக் கண்களுடன் பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம்,மகாராணியின்
மகத்தான அங்கீகாரமாகிய க்னைட் பேச்சலர் விருது வழங்கியது.

சார்லி சாப்ளின் வசித்த மாளிகையான பிரேக் அவே ஹவுஸ் விருந்தோம்பலும் கேளிக்கைகளும்
தொடர்ந்து நடைபெறும் இடமாய் ஆனது. பெயருக்கேற்ப கட்டிடத்தின் சில பகுதிகள் அவ்வப்போது
உதிர்ந்து விழும் விதமாக வடிவமைத்திருந்தார் சார்லி சாப்ளின்.அங்கிருந்த பைப் ஆர்கன் ஒன்றை
விருந்தினர்களுக்கு வாசித்துக் காட்டியும்,தன் பிரத்யேகத் திரையரங்கில் தன்னுடைய படங்களை
திரையிட்டும் விருந்தினர்களை குஷிப்படுத்துவதில் சார்லி சாப்ளினுக்கு அலாதி பிரியம். டென்னிஸ்
விளையாட்டிலும் அளவில்லாத ஆர்வம் அவருக்கு.

பேசாப்படங்களிலும் பேசாப் பொருள்களைப் பேசத்துணிந்தவர் சார்லி சாப்ளின்.தன் அரசியல் கருத்துக்களை அங்கதச் சுவையுடன் சொன்ன சார்லி சாப்ளின் தன்னை கட்சி அரசியல் சாராத
கலைஞராகவே காட்டிக் கொள்ள விரும்பினார்.

தன்னுடைய படங்களைத் தொடங்கும் முன்னால் முழு திரைக்கதையையும் எழுதும் வழக்கம்
சார்லி சாப்ளினுக்கு இல்லை.மனதில் தோன்றும் மையக்கருவுக்கு அவ்வப்போது படப்பிடிப்புத்
தளத்திலேயே வடிவம் கொடுப்பது சாப்ளினின் பாணி.

அந்தக் கால உலகநாயகனான மார்லின் பிராண்டோவுக்கு சார்லி சாப்ளின் மேல் அபாரமான
மரியாதை இருந்தது.திரையுலகம் உருவாக்கிய நடிகர்களிலேயே நிகரில்லாத திறமைசாலி
என்று சாப்ளினை அவர் புகழ்ந்தார்.அப்படியே இருந்திருந்தால் சிக்கலில்லை.சார்லி சாப்ளினின்
கடைசிப் படமான”எ கவுண்ட்டஸ் ஃப்ரம் ஹாங்காங் “என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததில்
வந்தது வினை.”இவ்வளவு குரூரமான மனசு படைச்ச ஆளை நான் பார்த்ததேயில்லை”என்றார் மார்லின்
பிராண்டோ.”இந்த ஆளுகூட மனுஷன் நடிப்பானா”என்று அலுத்துக் கொண்டார் சார்லி சாப்ளின்.
ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருப்பது எப்போதும் சாத்தியமில்லை.

ஆனாலும் சார்லி சாப்ளினின் அபாரத் திறமையை உலகத் திரைக்கலைஞர்கள் உச்சிமேல்
வைத்துக் கொண்டாடுகிறார்கள்.வாழும் காலத்திலேயும் மிக உயர்ந்த விருதுகள் சார்லி
சாப்ளினைத் தேடி வந்தன.ஆஸ்கார் விருதும் அதிலே அடங்கும்.

பொதுவாக மூக்குக்குக் கீழே செவ்வகமாய் சின்னதாய் இருக்கும் மீசைக்கு ஹிட்லர்மீசை என்று
பெயர் சொல்கிறோம்.ஆனால் சார்லி சாப்ளின் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் விதம் பார்த்து
வியந்த ஹிட்லர்,சார்லி சாப்ளின் போல் தானும் மீசை வைத்துக் கொண்டாராம்.இத்தனைக்கும்
ஹிட்லர் சார்லி சாப்ளினின் ரசிகர் அல்ல. அவருக்கு சார்லி சாப்ளின் மேல் தவறான அபிப்பிராயங்களே
அதிகமிருந்தன.

நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு, தன்னுடைய பழைய மௌனப் படங்களுக்கு தானே இசையமைத்து
மீண்டும் வெளியிடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார் சார்லி சாப்ளின்.

“நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்க எனக்கு வேறொன்றும் வேண்டாம்.ஒரு பூங்கா,ஒரு போலீஸ்காரர்,
அழகான ஒரு பெண் இருந்தால் போதும் “என்பார் சாப்ளின்.”காலம் முழுவதும் ஒரு கோமாளியாகவே
நான் இருந்திருக்கிறேன்.அதுவே என்னை பல அரசியல் தலைவர்களை விடவும் புகழின் உச்சத்தில்
அமர்த்தியது”என்றும் ஒருமுறை குறிப்பிட்டார்.

அவர் பெரிதும் நேசித்த அமெரிக்கா அவரை நடத்திய விதம் அவரை சோர்வடையச் செய்தது.”இனி
அமெரிக்கா எனக்குப் பயன்படாது.ஒருவேளை ஏசுநாதர் அமெரிக்க அதிபரானால் அங்கே நான் மீண்டும்
போகக் கூடும்” என்றார் அவர்.

வாழ்க்கை என்றால் என்னவென்று சினிமா பாஷையில் சாப்ளின் சொன்னது அவருடைய மகாவாக்கியம்
என்று சொல்லத்தக்கது. “குளோஸ் அப்பில் பார்த்தால் வாழ்க்கை ஒரு சோகக் காட்சி.லாங் ஷாட்டில்
பார்த்தால் அதுவே செமை காமெடி!!”

ஒரு சிறிய மீனுக்குக் கூட அதன் வாழ்க்கை மகத்தானது என்று உறுதியாக நம்பிய சார்லி சாப்ளின்,
1977 டிசம்பர் 25ல் மறைந்தார்.ஆனால் அவருடைய ரகளை அத்துடன் முடியவில்லை.1978ல்
கல்லறையிலிருந்து அவருடைய பிணம் திருடப்பட்டது.மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
கட்டுறுதி மிக்க சிமெண்ட் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தன் கல்லறையில்
மறுபடி படுத்துக் கொண்டார் சார்லி சாப்ளின்.

ஆனாலும் அவர் பேசிய மௌன மொழி உலகின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டே
இருக்கிறது …எப்போதும்!!

வாழ்வின் பொருளென்ன…நீ வந்த கதையென்ன…

கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது

சாத்தூர் தாண்டியதும் அழைக்கச் சொல்லியிருந்தார் டென்சிங்.மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.நமது நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருபவர்.

அவருடைய நெடுநாள் நண்பரும், நமது நம்பிக்கை இதழின் தொடக்கநாள் தொட்டு துணையிருக்கும் நல்ல வாசகரும் நலம் விரும்பியுமான கோவில்பட்டி காளிதாஸ் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.

அவருடைய தாயார் மறைவையொட்டி துக்கம் கேட்பதற்கான பயணம் அது.பரிந்து விருந்தோம்பும் பண்பு கொண்ட அந்த அம்மையார் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைமை மனோநிலை அடைந்திருந்தார். எதையும் புரிந்து கொள்ளும் பக்குவமின்றி அடம் பிடிக்கும் தீவிரம் வளர்ந்திருந்தது.

ஊரெல்லையிலேயே டென்சிங் இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தார். சிலநிமிடங்களில் காளிதாசின் இல்லம் சென்று சேர்ந்தோம்.

அன்னையின் நினைவுகளை பதட்டத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் ஒரே மகனான காளிதாஸ் எதன் பொருட்டும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். குழந்தைகளை ஏமாற்றுவது போல வீட்டு வாசலில் செருப்புகளை விட்டுவிட்டோ அல்லது வாகனத்தை நிறுத்திவிட்டோ செல்வதை காளிதாஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சொல்வேந்தர் திரு. சுகிசிவம் மீது காளிதாசின் தாயாருக்கு மிகுந்த அன்பும் உரிமையும் உண்டு. திரு.சுகிசிவம்,கோவில்பட்டி வருகையில் அவர் வீட்டில் ஒருவேளையாவது உணவுக்கு அழைக்கப்படுவார்.காளிதாசின் பொறுமையைப் பார்த்து பலமுறை திரு.சுகிசிவம் என்னிடம் வியந்து சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் திரு.சுகி சிவத்திடம் காளிதாசின் தாயார் வெகுவாக சண்டை போட்டிருக்கிறார். “ஏம்பா!அன்னைக்கு எப்போ வந்தே சாமீ,சௌக்கியமா இருக்கியான்னு கேட்டுகிட்டேயிருக்கேன்.நீ பதிலே சொல்லாம நீ சொல்லாம நீ சொல்ல வந்ததையே சொல்லிக்கிட்டிருக்கே’ என கோபப்பட்டிருக்கிறார்.

சன் டி.வி.யில் ” இந்த நாள் இனிய நாள் ” ஒளிபரப்பாகிற போது திரையில் தோன்றிய பிம்பத்துடன் பேச்சுக் கொடுத்திருக்கிறார் அவர்.

இந்தத் தகவல்களினுடாக இன்னொரு செய்தியையும் சொன்னார் காளிதாஸ். திரு.டென்சிங் வீட்டுக்குப் பக்கத்தில் தெருவோரமாய் ஒரு மூதாட்டி கிடந்திருக்கிறார். டென்சிங் இட்டிலி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.உடல்நலமின்மை கண்டு சில மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ரொம்பவே முடியாமல் போகவும் காளிதாசுடன் கலந்து பேசி
முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப் போயிருக்கிறார்கள். இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் வந்து சொன்னால்தான் சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படவும்,டென்சிங் அலைந்து திரிந்து அந்த மூதாட்டியின் சில உறவினர்களைக் கண்டு பிடித்திருக்கிறார்.

அவர்கள் வந்து கையொப்பமிடவும் காளிதாஸ் பரிந்துரையின் பேரில் முதியோர் இல்லத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்கள் கழித்து,நோய்வாய்ப்பட்டிருந்த அந்த மூதாட்டி முதியோர் இல்லத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி வர,டென்சிங்கும் காளிதாசும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகு உடன்வர ஒப்புக் கொண்டனர். அவர்களை அழைத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் முதியோர் இல்லம் சென்றனர்.

அங்கே இறந்த உடலை நீராட்டி புத்தாடை உடுத்தி மலர்மாலைகள் சூட்டி மதிப்புமிக்க வழியனுப்புதலுக்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். எதிர்பாராத இந்தக் காட்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள் இறுதிச் சடங்குகளை நிகழ்த்திய பின்னர் அந்த மூதாட்டியின் பிரிக்கப்படாத பை ஒன்று தரப்பட்டது.பிரித்துப் பார்த்தால் சுருள் சுருளாகப் பணம்.மொத்தம் முப்பத்து நான்காயிரம் ரூபாய்கள்!!

பையில் பணமிருப்பது தெரியாமலேயே வீதியோரத்தில் வாழ்ந்த அந்த மூதாட்டியின் வாழ்வை என்னென்று சொல்வது!! உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை என்ன செய்வதென்று கலந்தாலோசித்தார்கள்.அவர்களில் ஒருவர் சொன்னாராம்,
“உயிரோடிருக்கும் நேரத்தில் இவர்களை நாம் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனால் யாரென்றே தெரியாமல் கடைசி நாட்களில் பார்த்துக் கொண்டதோடு இறுதிச் சடங்குக்கும் மரியாதை மணக்க தயார் செய்த இந்த முதியோர் இல்லத்திற்கே இந்தப் பணத்தைத் தந்துவிடலாம்”. உறவினர்களின் உளமுவந்த ஒப்புதலுடன் அந்தத் தொகை முதியோர் இல்லத்திற்கே வழங்கப்பட்டது.

தன் இறுதி நாட்களில் தனக்கு இடம் கொடுத்தவர்கள் பயன்பெறும் விதமாய் அமைந்தது அந்த மூதாட்டியின் வாழ்க்கை. அடையாளம் கண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காளிதாசுக்கும் டென்சிங்கிற்கும் சொல்லொணா மனநிறைவு.

” எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது”

என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு விளக்கமாய் இருந்தாலும் ,அதே கவிஞர் சொன்னது போல வாழ்வின் பொருள் விளங்கும் வாழ்ந்த அந்த மூதாட்டிகள் இருவருமே நம் வணக்கத்திற்குரியவர்கள்