உங்கள் அடிமையின் அடிமையா நீங்கள்?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

உங்களிடம் இருக்கும் அபூர்வமான அசாத்தியமான திறமை ஒன்றிற்காக, ஒருவர் உங்களிடம் உணர்வுரீதியாய் அடிமையாகி இருப்பார். அவரிடம் இருக்கும் சிறப்பம்சம், ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொண்டிருப்பார்.

அது கோபமாக இருக்கலாம். புறம்பேசும் வழக்கமாக இருக்கலாம். புகை பிடிக்கும் பழக்கமாக இருக்கலாம். உங்களிடம் அந்த குணம் இருக்கும் பட்சத்தில், அவர் ஏமாற்றமே அதிர்ச்சியோ அடையலாம். “நாம் எண்ணிப்பாராத பெரிய விஷயம் இவருக்கு கை வந்திருக்கிறது. ஆனால் நாம் வேண்டாம் என ஒதுக்கியதை இவரால் விடமுடியவில்லையே” என அதிர்ந்து போகலாம்.

மற்றவர்கள் நம்மிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பது உண்மை. நம்மிடம் கற்றுக் கொள்பவர்களிடம் இருந்து நாமென்ன கற்றுக் கொள்கிறோம் என்று பார்ப்பதே நமக்கு நன்மை.

பலங்களை பலப்படுத்துவதில் முக்கியமான அம்சம், நம் பலவீனங்களை பலவீனப்படுத்துவது! இந்த உணர்வு நம் வாழ்வை செதுக்கித் தரும்… ஒவ்வொரு விநாடியும்.

வேலை நேரம் இல்லாத அலுவலகம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

செய்வதை விரும்பிச் செய்தால் வேலை செய்ய வேண்டியதில்லை என்பார்கள். உற்சாகமாய் இயங்குவதை “உயிரியற்கை” என்கிறான் மகாகவி பாரதி.

நாம் மேற்கொண்ட தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு, உள்ளே இருக்கிறஉந்துசக்தி, அதற்கென்று தனியான நேரமில்லை. நம் மற்றவிஷயங்களைச் செய்யும் நேரத்தில்கூட, நம் கனவுகளிலும் இலட்சியங்களிலும் மனம் லயித்துக் கிடக்கலாம்.

சிறந்த ஒரு மருத்துவரின் மனதுக்குள் நோய்களுக்கான தீர்வுகள் தேடும் வேட்கை, இதயத்துடிப்புடன் இணைந்து துடித்துக் கொண்டிருக்கும்.

சிறந்த நீதிமானின் நெஞ்சம், சத்தியத்தை நிலைநிறுத்த சட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று நினைத்துக் கொண்டே இருக்கும்.
உள்ளுக்குள் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த தீராத வேட்கையை வகைப்படுத்தும் இடமே அலுவலகம்.

உங்கள் அலுவலகம், கோப்புகளை அடுக்கி வைக்கும் இடம் அல்ல. உங்கள் கனவுகளை இயக்கிக்கொண்டே இருக்கிற களம்.

தூங்கும் முயல்கள் தூங்கட்டும்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

ஒரு முயலின் ஓட்டத்தில் எப்போதோ நேர்கிற தோல்வியை தொடர்ந்து பேச வேண்டுமா என்ன? ஆமையிடம்தான் தோற்றிருக்கட்டுமே… அதனால் என்ன?

“ஓடிக்கொண்டேயிரு” என்று உலகம் சொல்கிறது. ஓய்வு கொஞ்சம் தேவையென்று உள்ளம் சொல்கிறது. உலகம் சொல்வது, அதன் எதிர்பார்ப்பு. உள்ளம் சொல்வதோ உண்மையின் தீர்ப்பு.

சின்னச்சின்ன தோல்விகளால் உங்கள் வாழ்க்கை வீழ்ச்சியடையப் போவதில்லை. ஆமை ஜெயித்த செய்தி கேட்டு முயல் தன் வியப்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு வழக்கம்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுபோல், சிறிய தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொண்டு, அடுத்த வெற்றியை நோக்கி நீங்கள் விரைய வேண்டும்.

ஆமையிடம் ஒருமுறைதோற்றஅதே முயல்தான் கொல்லவரும் சிங்கத்திடம் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறது. விளையாட்டாய் தோற்பதில் தவறேஇல்லை. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.

எது விளையாட்டு? எது வாழ்க்கை? என்கிறதெளிவு வேண்டும். தான் ஆமையிடம் தோற்றுவிட்டோம் என்றகுற்றவுணர்ச்சியை சுமந்துகொண்டு முயல் ஓடினால்தான் கனமாயிருக்கும். தன் பலம் தெரிந்து, தூக்கம் வந்தால் தூங்கி, ஓடும் நேரத்தில் ஓடிக் கொண்டேயிருங்கள்… எல்லாம் நலமாயிருக்கும்.

20170113034711_00005

அப்பாவைப் பற்றி….

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக் கொள்ள. அறுபது அறுபத்தைந்து வயது வரை ஆஃபீசர்ஸ் கிளப்பில் மாலைநேரங்களில் டென்னிசும் பிரிட்ஜும் விளையாடி வந்தார்.

பின்னர் காஸ்மாபாலிடன் கிளப்பிற்கு மாறிக்கொண்டார். 73 வயதான பின்னர் டென்னிஸ் நின்றது. பிரிட்ஜ் மட்டும் விடவில்லை.முன்னிருக்கையில் அவரிருக்க சுகாவும் நானும் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தோம்.
குப்புசாமி மருத்துவமனை எதிரில் மணிமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பிரிட்ஜ் கிளப் வந்ததும் இறங்கிக் கொண்டவர், பின்னிருக்கையில் இருந்த என்னைப் பார்த்து சொன்ன சொல் கேட்டு சுகா அதிர்ந்து போனார்.

“தாங்க்யூ” என்று சொல்லிவிட்டு நிதானமாய் சாலை கடந்து போனவரை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த  சுகா அதிர்ச்சி மாறாமல் என்னிடம் கேட்டார்,” என்னண்ணேன் இது”?
” அவர் அப்படித்தான் சுகா” என்றேன்.

பொதுவிலோ என் பணி வெளிகளிலோ அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எப்போதாவது என்னை அலைபேசியில் அழைக்க நேர்ந்தால்,  ” நான் மருதவாணன் பேசறேம்ப்பா! கேன் ஐ டாக் டு யூ நவ்” என்றுதான் தொடங்குவார்.

இதைவிட சுவாரசியமாய் ஒரு சம்பவம். ராகவேந்திரா விளம்பர நிறுவனத்தில் நான் படைப்பாக்க ஆலோசகராக இருந்த வேளையில் நாளின் பெரும்பகுதியை  அந்த அலுவலகத்தில்தான் கழிப்பேன். ஒருநாள் நான் இல்லாத போது தொலைபேசி அழைப்பொன்று வந்திருந்தது.அங்கு பணியிலிருந்த கௌசல்யா என்ற பெண் எடுத்திருக்கிறார்.

“முத்தையா இருக்காரா?” என்றது எதிர்க்குரல்.
“இல்லை சார்.நீங்க ?”
” நான் மருதவாணன்னு பேசறேன்.அவர் வந்தாகூப்பிட சொல்றீங்களா?
“சொல்றேன் சார்,, உங்க நம்பர்?”
நிறுத்தி நிதானமாய் அவர் சொன்ன தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்ட கௌசல்யாவிற்கு சற்றே பொறிதட்டியிருக்கிறது.” இது  சாருடைய வீட்டு நம்பர்தானே” என்று யோசிப்பதற்குள் “தாங்க்யூ” என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிட்டார்.

அவர் பிறந்த ஊர் பூம்புகார் அருகிலிருந்த கீழப்பெரும்பள்ளம். ஆக்கூர் பண்ணை அதிபர் ஏ.ஆர்.முத்தையா பிள்ளைக்கும் அவருடைய மூன்றாவது மனைவியாகிய தனுஷ்கோடி அம்மாளுக்கும் 1933 ஜனவரி 9ல் மகனாகப் பிறந்தார். ஒரு மூத்த சகோதரர், ஓர் இளைய சகோதரர். ஒரு மூத்த சகோதரி,இரு இளைய சகோதரிகள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து ஒரு சில கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆறடி உயரம்,சிவந்த நிறம்,சுருள்கேசம்.விரல்களுக்கிடையே வெண்சுருட்டு.

அந்தப் பகுதியில் பெரும் தனவந்தராகவும் செல்வாக்கு மிக்க பிரமுகராகவும் விளங்கிய திருக்கடவூர்பிச்சைக்கட்டளை எஸ்டேட் அதிபர் கை.கனகசபைப்பிள்ளையின் கடைசி மகள் அலமேலுவை மணந்தார்.

சின்ன மாப்பிள்ளை வருகிறார் என்றாலே திருக்கடவூர் பண்ணை வீடு எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தும். “சுர்” என்று கோபப்படும் துர்வாசர் என்பதால் எச்சரிக்கையாயிருக்கும்.

தன் திருமணம் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களிடம்  தனி உரையாடலில் அப்பா சொன்னதை, அவர் மறைவுக்கு துக்கம் கேட்க வந்த போது சுகிசிவம் சொன்னார். ” நான் காலேஜ் போக பஸ்சுக்கு நிப்பேன் சார். கே.கே.பிள்ளையோட பெரிய கார் போகும்.இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகி இதே கார் ல போகணும் னு அப்போ நினைச்சுக்குவேன்.அதுமாதிரியே நடந்தது”என்றாராம்.
தன்னைப்பற்றி உயர்வாக சொல்ல நேரும் போதெல்லாம் “அது கடவுள் செயல்” என்று அழுத்திச் சொல்லி அது கடவுளின் காதில் விழுந்ததையும் உறுதி செய்து கொள்வார்.
உடற்கல்வி ஆசிரியராக கல்லூரிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் அவர் இலங்கைக்குப் போன அனுபவத்தை அடிக்கடி நினைவு கூர்வார்.” சிலோன்ல போய் இறங்கறோம்..பண்டாரநாயகா வாஸ் ஷாட் டெட்” என்ற முன்னுரையுடன் அவருடைய விவரிப்புகள் தொடங்கும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் மட்டுமே பயன்படக்கூடிய கடவுச்சீட்டு ஒன்று அவரிடம் இருந்தது.20170113034711_00001 20170113034711_00002 (1)
பின்னர் சென்னையில் சிம்சனில் பணிக்குச் சேர்ந்தார். அவரை   எங்கள் தாத்தா கோவையில் குடியேற்ற விரும்பினார். நெருங்கிய நண்பர்களிடம் அவர் சொன்னதும் கோத்தாரி நிறுவனம் கோவையில் புதிதாகத் திறக்கப்போகும் கிளைக்கு முதன்மை மேலாளராக அமர்த்திக் கொள்ள சம்மதித்தது.
20170113034711_00006

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம்கேசவபெருமாள் புரத்தில் வாங்கியிருந்த இரண்டு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு கோவையில் குடியேறினார். என் மூத்த சகோதரரும் நானும் கோவையில்தான் பிறந்தோம்.எதற்கும் கவலைப்படாத இயல்பு. வேலையில் வேறு வித வருமானங்களுக்கு வாய்ப்பிருந்தும் கைநீட்டாதநேர்மை. தலை தாழாத தோரணைக்கு நடுவிலும் சிரித்த முகம். மெல்லிய நகைச்சுவை உணர்வு. சொந்த வேலையை கிடப்பில் போட்டு விட்டு பிறருக்கு உதவும் குணம். இவையெல்லாம் அவர் தனக்கென வகுத்த வாழ்வியல் நெறிகள்.

யாராவது வீதியில் போகிற வழிப்போக்கர் அவரிடம் முகம் கொடுத்துப் பேசிவிட்டால் ஐந்தாவது நிமிடம் எங்கள் வீட்டு சாப்பாட்டு மேசையில் அமர்த்தப்பட்டிருப்பார்.கர்நாடக சங்கீதத்தில் அப்பாவுக்கு நல்ல ஞானம் உண்டு.திருமுறைகளில் ஆழமான ஈடுபாடு.தேவாரங்களை அவற்றுக்குரிய பண்ணோடு தான் பாடவேண்டும் என்பதில் அதீத கண்டிப்பாக இருந்தவர் அவர்.

நுனிநாக்கு ஆங்கிலமும் நாகரீக நடைஉடைகளுமாய் வலம் வந்தாலும் சில விஷயங்களில் பழமைவாதி.தஞ்சாவூர் பக்கத்துப் பிளைமார்களின் இயல்புப்படி காலையிலேயே முழுச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்புவார்.

திங்கட்கிழமை காலையில் மட்டும் அவர் குளித்துவிட்டு வரும்போது சாப்பாட்டு மேசையின் மேல் ஒரு வட்ட மேசை போடப்பட்டிருக்கும். ராகுகாலம் நடக்கும் போது இடையிலேயே கிளம்ப வேண்டும் என்பதால் நின்று கொண்டே சாப்பிடுவார். நின்று கொண்டிருந்தால் “பிரஸ்தானப்”பட்டு விட்டதாக அர்த்தமாம்.அதாவது ராகுகாலத்திற்கு முன்பே  புறப்பட்டு விட்டாராம்.

என் சகோதரரும் நானும் பள்ளி மாணவர்களாயிருந்த நாட்களில் ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தவர், இரவு உணவுக்குப் பிறகு புகைபிடித்துக் கொண்டே அம்மாவிடம் தான் கோத்தாரி வேலையை விட்டுவிட்ட செய்தியைச் சொன்னார்.
20170113034711_00004

அதன்பிறகு தாத்தாவின் நண்பர்களில் ஒருவரான நஞ்சுண்டராவ் பெங்களூருவில் இருந்த தன் கோதுமை ஆலையில் பொது மேலாளராக நியமித்து வீடும் கொடுத்து வேலைக்கமர்த்த முன்வந்தார். நாங்களும் பெங்களூர் வாசத்திற்கு மானசீகமாகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

ஆபீசர்ஸ் கிளப்பில் உடன் விளையாடும் தோழர்களான ஆலை அதிபர்கள்சிலர், ” இதுக்கு ஏன் மருதவாணன் பெங்களூர் போய்கிட்டு? பேசாம பஞ்சு பிசினஸ் பண்ணுங்க.நாங்க ஆர்டர் தரோம்” என்று சொன்னதுமே  நஞ்சுண்டராவை தொலைபேசியில் அழைத்து வரவில்லையென்று தெரிவித்ததோடு மறக்காமல் ‘தாங்க்யூ” சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

அதன்பிறகு கொஞ்ச காலம் பஞ்சுக்கும் நோகாமல் அவர் பஞ்சு வணிகம் செய்ய அதற்குள் தாத்தா இறந்திருக்க தாத்தாவின் நெருங்கிய நண்பரும் கோவையின் பெருந்தொழிலதிபருமான திரு .ஜி.கே.தேவராஜுலு  அவருடைய புதல்வரின் நிர்வாகத்தில் இருந்த டைட்டன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தினார்.
20170113034711_00009
பணிஓய்வுக்கு முன்னரே அவர் ஓய்வுக்கானஒத்திகைகள் பார்த்திருந்ததால், தினசரி பூஜை,சங்கீதம், தொலைக்காட்சி ஓரளவு வாசிப்பென்றுபொழுது கழிந்தது.பெயர்த்திகள் இருவர் பிறந்து வளர்ந்து ஆளாயினர்.
எப்போதும் யாரேனும் விருந்தினர்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் அவருக்கு. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ” பிரதர்” என்றுதான் அழைப்பார்.
நான் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பினும் சில புத்தகங்களைத்தான் பதிப்பித்திருக்கிறேன். அப்பாவும் ஒரு புத்தகம் பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை,புத்தகம் என்பது இலவச விநியோகத்திற்குரியது!! எனவே தன் கைக்கு வந்த ஆறுமுக நாவலரின் கந்தபுராண வசன நூலை தன் நெருங்கிய நண்பரும் தேர்ந்த தமிழறிஞருமான பேராசிரியர் இராம.இருசுப்பிள்ளை அவர்களின் துணை கொண்டு பலரின் உதவியுடன் இலவசப் பதிப்பாகக் கொண்டு வந்து அதற்காக  திருவாவடுதுறை ஆதீனம் மகாசந்நிதானத்தின் பாராட்டுப் பெற்றார்.
20170113034711_00008
75 வயதில் தனக்கு நீரிழிவு வந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம்,தனக்கு 75 வயது ஆகிவிட்டதையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை. பொதுவாழ்விலும் இலக்கிய வாழ்விலும் எனக்குப் பழக்கமானவர்கள் பலரும் அவருடன் மிக நெருங்கியிருந்தார்கள்.அதற்கு முக்கியக் காரணம் அவருடைய விருந்தோம்பல் பண்பும் பேதம் பாராமல் பழகும் இயல்பும்தான்.
 என்னைத்தேடி யார் வந்தாலும் அவர்களுடன் உற்சாகமாக உரையாடி ஓர் உறவையே உருவாக்கி விடுவார். ஒரேயொரு நிபந்தனை..நான் அப்போது வீட்டில் இருக்கக் கூடாது.
திருக்கடவூரில் அவருடைய சதாபிஷேகம் நிகழ்ந்தது. அதுவும் எங்கள் தாத்தாவின் வீட்டில். அதே வீட்டில்தான் அவருடைய திருமணமும் நடந்தது.
SRI MARUTHAVANAN_ALAMLU - SATHABISHEKAM - 070
 SRI MARUTHAVANAN_ALAMLU - SATHABISHEKAM - 115
16 வயது முதல் புகை பிடித்து வந்த அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது,2016 நவம்பர் இறுதியில்  கண்டறியப்பட்டது.அவரிடம் விஷயத்தை சொல்வதில்லையென்று குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்தோம்.அவர் உண்மையிலேயே நலமாக இருந்த போதும் சரி,கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்த போதும் சரி, ” எப்படி இருக்கிறீர்கள்” என யாராவது கேட்டால் ” கோயிங் ஸ்ட்ராங்” என்றுதான் பதிலளிப்பார்.
பெயர்த்திகள் ஒரு குவளை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாலும் “தாங்க்யூ” என்பார். யோசித்துப் பார்க்கையில் அவர் வாழ்வில் அதிகம் உச்சரித்த வாசகம் ” தாங்க்யூ வெரிமச்” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
அவருக்கு திருமுறைகள் பாராயணம், ஶ்ரீசக்ரபூஜை,தினசரி புஜைகள் இருந்தன. எனினும் சிலஆன்மீகப் பயிற்சிகள் இருந்தால் நல்லதென்று கருதி இருக்கையில் அமர்ந்தபடி செய்யக் கூடிய ஈஷாவின் சில ஆன்மீகப் பயிற்சிகளை அவருக்கு அறிமுகம் செய்திருந்தேன்.
ஆனால் அவர் அவற்றைத் தொடர்ந்து செய்து நான் பார்த்ததில்லை.அவர் இறுதியில் அடிக்கடி மூச்சுத் திணறலால் சிரமப்படும் போது ஓர் எளிய பயிற்சியை நினைவுபடுத்தி,”இதை நீங்கள் செய்யலாமே” என்று மெல்லப் பரிந்துரைத்தேன்.
சிரமத்துடன் மெல்லப் புன்னகைத்து,”I agree with You”  என்றார்.
புற்று நோய்க்குரிய கொடும் வலிகளை அவர் பெரும்பாலும் அனுபவிக்கவேயில்லை என்று சொல்லலாம்.இறையருளும் குருவருளும்
அதற்குரிய சூழலை உருவாக்கியிருந்தன. இதனை மேலும் விவரிப்பது பொருந்தாது.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்டவரை 2016 டிசம்பர் 23ம் நாள்  மருத்துவமனையில் சேர்த்தோம். அறையில் ஓயாமல் திருமுறைகள் ஒலித்தன. சத்குருவின் திருவுருவப் படமும் வைக்கப்பட்டது. 25ஆம் தேதி தன் இரு மருமகள்களையும் பெயர்த்தியரையும் அழைத்தவர், ” இது எனக்கு ஜோரான வேளை! இனி எனக்கு பிறவி கிடையாது. இந்த ஆன்மா வந்த வேலை முடிந்தது.எல்லோரும் நன்றாக இருங்கள்” என்றதுடன் எங்கள் தாயாரிடம் ” These are my last words” என்றும் சொல்லி இருக்கிறார். பெயர்த்திகளிடம் “நான் போயிட்டு வரேன்டா கண்ணு” என வாஞ்சையுடன் விடைகேட்டவர்  28 ஆம் நாள் அதிகாலை ஒன்றரை மணியளவில் உயிர் நீத்தார்.
அன்று மாலை கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்திருந்த ஈஷா காயந்த ஸ்தானத்தில் அவரின் பூதவுடலுக்கு இறுதிச் சுடரேற்ற என் சகோதரரும் நானும் குனிந்த போது அப்பா ஏதோ சொல்வது போல் இருந்தது. அநேகமாக ” தாங்க்யூ” என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

உங்களுடையது அபிப்பிராயம்தான்! உச்சநீதி மன்றத் தீர்ப்பல்ல!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

எல்லோருக்கும் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க உரிமையிருக்கிறது. ஆனால் அபிப்பிராயங்களை மற்றவர்கள் மேல் திணிக்கிறபோது பிரச்சனைகள் உருவாகின்றன.

நாம் சொல்வது அபிப்பிராயம்தானே தவிர, அதனை அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எந்தச் சட்டமும் கிடையாது.

தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வந்து விட்டால் தாங்கிக் கொள்ளவே முடியாதவர்களால் ஒருவரது விவாதத்தில் பங்கெடுக்க முடியாது.

தாங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் விமர்சனத்திற்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வேதமொழிகள் என்னும் எண்ணம் வேண்டாத பகையை வளர்க்கும். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும்.

அதே நேரம், தான் சொல்வது அபிப்பிராயம் மட்டுமே என்ற தெளிவுடன் சொல்லப்படுகிற எதையும் உங்களால் உறுதியாக, திடமாக யாரையும் காயப்படுத்தாமல் முன்வைக்க முடியும்.

மற்றவர்களின் கோணத்திற்கும் மரியாதை தர ஒருவரால் முடிகிறதென்றால், அவரே தன்னையும் மற்றவர்களை நம்புகிற நேர் மறையான மனிதர்.

அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லையும் உலகம் கேட்கும்.

குரலிசையா? விரலிசையா?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

பாடகர்களுக்கு பின்னணிப் பாடகர் என்றும் இசைக்கு பின்னணி இசை என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடகர் புகழ் நிலையில் முன்னணியில் இருந்தால்கூட அவர் பின்னணிப் பாடகர்தான்!!

ஒரு காரியம் நடக்கும்போது நாம் முன்னணியில் இருந்து செயல்படுகிறோமோ பின்னணியில் இருந்து செயல்படுகிறோமா என்பது முக்கியமல்ல.

செய்கிற வேலையை சரியாய் செய்தால் நீங்கள் திரை மறைவில் செய்யப்பட்டாலும் உங்கள் வேலையே உங்களை முன்னணிக்குக் கொண்டு வரும்; முன்னேற்றம் தரும்.

எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று சொல்பவர்கள், டி.எம்.எஸ். பாட்டு, எஸ்.பி.பி. பாட்டு என்றும் சொல்கிறார்களல்லவா?

உங்கள் அலுவலகத்தில் அன்றாட அலுவல்களை ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் டெலிபோன் ஆபரேட்டரா? நீங்கள்தான் குரலிசைக் கலைஞர்!

நீங்கள் கம்ப்யூட்டர் ஆபரேட்டரா? கணக்குகளை கணினியில் பதிப்பவரா? நீங்கள்தான் விரலிசைக் கலைஞர். சுருதி பிசகாத உங்கள் செயல்திறன் உங்கள் அலுவலகத்துக்கு வெற்றியையும் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

உங்களுக்குத் தெரிந்ததை உற்சாகமாய் செய்வதே சாதனையின் சங்கீதம்!!

போர்க்களத்தில் பூப்பறிக்கப் போய்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….”

என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

பகையை சம்பாதிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ள இடத்தில் நட்பை உருவாக்கிக் கொள்வதுதான் தனித்தன்மை.

ஒரே துறையில் இயங்குகிற இரண்டு பேர்கள் பகையாளர்களோ போட்டியாளர்களோ அல்ல, சக பயணிகள் என்பதைத் தெரிந்து கொண்டாலே இந்த மனமாற்றம் சாத்தியமாகிவிடும்.

போர்க்களங்கள் மோதுவதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை புதிய உறவுகளை பதியனிட வேண்டிய இடங்கள். “இன்று போய் நாளை வா” என்று இராவணனிடம் சொல்லும்போது இராமன் அப்படியரு மலர்ச் செடியைத் தான் நட முயல்கிறான்.

எதிர்ப்பை ஜெயிப்பது என்பது ஒருநிலை. எதிரியை ஜெயிப்பது என்பது வேறொரு நிலை. எதிர்ப்பை ஜெயிக்க வேண்டுமென்றால், கச்சை கட்டிக் களமிறங்குங்கள். எதிர்ப்பை ஜெயிக்க வேண்டுமென்றால் அவனுக்காக உளம் இரங்குங்கள்.

உறவும் பகையும் உங்கள் விருப்பம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

பகையை உறவாக்குவது பற்றிப் பேசுகிறபோதே உறவைப் பகையாக்கிக் கொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதையும் பார்க்க வேண்டும். வாழ்வின் மிகச் கசப்பான தருணங்கள், நமக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் மூலமாகத்தான் உருவாயின என்பது, நாம் உணர்ந்து பார்த்த உண்மை.

அறிமுகமாகும் எந்தத் தொடர்பையும் உறவாக வளர்ப்பதும் பகையாக நினைப்பதும் நம் விருப்பத்தில் மட்டுமல்ல. விழிப்புணர்விலும் இருக்கிறது.

விழிப்புணர்வோடு பேசப்படுகிற வார்த்தைகளும் செய்யப்படுகிற செயல்களும் உறவுகளை சேதாரமில்லாமல் காப்பாற்றி விடுகின்றன.

அதே நேரம், உறவாயிருந்த ஒன்று பகையாக மாறும்போது, நம் கண்முன்பே நம் உதடுகளிலிருந்து வார்த்தைகள் கை நழுவி விழுந்து களேபரம் செய்யும்.

கசப்புகளைத்தாண்டி உறவுகளை நிலை நிறுத்துவதும். கசப்புகளை காரணம் காட்டி உறவுகளை பகையாக்கிக் கொள்வதும்… உங்கள் விருப்பம்!!

உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா? நீங்கள் தான்!!

உங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப் பாதிக்காது.

நம்மிடம் குறையே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களைதான் விமர்சனங்கள் பாதிக்கும்.

உங்கள் குறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதல் நன்மை, உங்கள் குறைகளைச் சீர்செய்து, அவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

இரண்டாவது நன்மை, வேறு யாராவது உங்களைப் பற்றி குறைசொன்னால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளப் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று ஆர்வமுடன் தேடுவீர்கள்.

அப்புறம்தான் ஓர் உண்மை தெரியும். சுய விமர்சனம் சரியாயிருந்தால், அதற்குப் பெயர்தான் சுயதரிசனம்!!