நேற்றின் மிச்சம் நாளைக்கு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவை ஒரு நாள் வைத்திருந்தாலும், அது பழைய சோறாகி விடுகிறது.

நீங்கள் ரசித்து உருவாக்கிய கனவை நாளைக்காகவே வைத்திருந்தால், அதுவும் பழைய கனவாகி விடுகிறது.

உரிய வயதோ கல்வித் தகுதியோ இல்லாத காலத்தில் நோட்டுப்புத்தகத்தில் மயிலிறகு போல கனவுகளையும் நாம் பொத்திப் பொத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், வயதும் தகுதியும் வந்த பிறகு கனவுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவிலான நேரமும் தூரமும் நிச்சயம் குறையவேண்டும்.

நேற்றைய கனவின் மிச்சத்தை நாளை வரை வைத்திருக்காதீர்கள். இன்றே நடைமுறைப்படுத்தி வாருங்கள். நேற்றைய வேலையின் மிச்சத்தை இன்று வரைகூட வைத்திருக்காதீர்கள். உடனுக்குடன் முடித்து விடுங்கள்.

ஆறின கஞ்சி மட்டும் பழங்கஞ்சியல்ல. ஆறின கனவு, கடமைகள் எல்லாமே பழையவைதான்.

சின்னச் சின்ன செயல்களை சரியான நேரத்தில் சரியான விதத்தில் செய்வதைத்தான் சரித்திரம், சாதனை என்-று சொல்லிக் கொண்டாடுகிறது.

காட்டிக் கொடுத்தவரை காப்பாற்றுங்கள்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள்.

உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி வேலைதான் உங்கள் தகுதிக் குறைவை உங்களுக்கே உணர்த்தியிருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும்.

அவர் உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. சுயநலத்திற்காகவே செய்திருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் தகுதிக்குறைவை உங்களுக்கே காட்டிக் கொடுத்திருக்கிறார். நீங்கள் இன்னும் புதிய மனிதராய் புதுப்பிக்கப்பட்ட திறமைகளுடன் வடிவெடுக்க அவரே வழி வகுத்திருக்கிறார்.

உங்கள் பலவீனங்களை அறிந்து, பலங்களை உணர்ந்து இன்னும் வலிவடைய உதவியவரை வெறுத்து விடாதீர்கள். அதே நேரம் அவரை உங்கள் நண்பராகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

உலகமே உங்கள் பலங்களைப் பாராட்டும்போது உங்கள் பலவீனங்களை சுட்டிக்காட்ட அவர் அதே நிலையில் உங்கள் வாழ்க்கை முழுவதும் வேண்டும்.

அவரை குஷிப்படுத்தவும் வேண்டாம். கடுப்பேற்றவும் வேண்டாம். அதே நிலையில் அவருடைய தொடர்பை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தேவதைகளுக்கு தேதி கொடுங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது.

விபரம் புரிந்தவர்கள், வெற்றி தேவதையின் அசீர்வாதம் என்பார்கள். விபரம் புரியாதவர்கள் அதிர்ஷ்ட தேவையின் அசீர்வாதம் என்பார்கள். அதனாலென்ன? ஒன்றுக்கு இரண்டு தேவதையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே!

நீங்கள் உழைப்பால் ஜெயித்தீர்கள் என்று சிலர் சொல்லலாம். அதிர்ஷ்டத்தால் ஜெயித்தீர்கள் என்று பலர் சொல்லலாம். இதில் யாருக்கும் நீங்கள் தன்னிலை விளக்கம் தந்து கொண்டிருக்க அவசியமில்லை. அந்த நேரத்தில் அடுத்த உழைப்புக்கு அடிபோடுவீர்களென்றால், உங்கள் வியர்வையால் விளைந்த வெற்றி என்பதை உலகம் கண்டுணரும்.

அதே நேரம் அதிர்ஷ்டம் என்பது ஆகாத ஒன்றல்ல. வாழ்க்கை தரும் கூடுதல் போனஸ், அதிர்ஷ்டம். அதுவும் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் என்பதை உணருங்கள்.

தேடிவரும் வெற்றியும் அதிர்ஷ்டமும் தேவையான மேன்மைகள் கொடுக்கும். இந்த தேவைகளுக்கு தேதி கொடுங்கள். தேவதைகளைச் சந்திக்க சேதியும் கொடுங்கள்.

சிலந்திகளின் கவனத்திற்கு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன.

வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம் செய்துகொண்டு ஒரு நிலைலேயே நின்று போகின்றன.

தன்னுடைய வலையை பின்னிய பிறகு சிலந்தியால் எங்கும் நகர முடிவதில்லை. தான் பின்னிய வலையில் தானே சிறையாகும் சோகம் சிலந்திக்கு. ஆனால் அது சோகம் என்றுகூட அதற்குத் தெரிவதில்லை.

வாய்ப்புகளைத் தேடி வெளியே போகிறவர்களுக்கு வானம்கூட எல்லை இல்லை. பல்லாயிரம் அடிகள் உயரத்தில் பறக்கும் பறவையின் அலகுக்கு மொத்த உலகமும் இலக்கு. ஆனால் சிலந்திக்கு…?

உங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், உங்களைப் பற்றி நீங்களே உருவாக்கிய தாழ்வான அனுமானங்கள், அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை குணம் போன்றவற்றால் உங்களை நீங்களே குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் வேட்டையாட வசதியாய் உலகம் விரிந்து கிடக்கிறது. சொந்த வலைக்குள் சோம்பல் வலைக்குள் நீங்களே இரையாகாதீர்கள்!

துணையாய் வருகிற துரோகங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.

“யாரோ ஒருவரை நாம் சார்ந்திருக்கிறோம், அவர் தான் நமக்கு எல்லாம்” என்று எண்ணுவது வாழ்வின் மிகப்பெரிய புதிர். “யாரும் யாரை நம்பியும் இல்லை” என்பது வாழ்வின் மிகப்பெரிய தெளிவு.

அந்தப் புதிரைத் தவிர்த்துவிட்டு தெளிவை உணர்பவர்கள்தான் வாழ்க்கையில் உன்னதமான உயரங்களைத் தொடுகிறார்கள்.

துரோகங்கள் ஏற்படுத்திய வலிகளைத் தாங்கிக்கொண்டே பயணம் தொடர்பவர்கள், தங்களின் அந்த வலிமிகுந்த அனுபவங்களை பயணத்தின் துணைகள் என்பதை உணர்கிறார்கள்.

துரோகங்கள் என்பவை உங்களால் தனித்து முன்னேற முடியும் என்பதற்கான நினைவு மடல்கள்.

மற்றவர்களின் அனுபவங்களே நமக்கு படிப்பினைகள் ஆகுமென்றால், நம்முடைய சொந்த அனுபவங்கள் படிப்பினைகள் ஆகாதா என்ன??

தாயக் கட்டைகள் தயாரிக்கும் செலவு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான்.

எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச் சூழலிலும் வெற்றிக்கு உத்திரவாதம் இருக்கும்.

கார் வாங்கியவருக்கு ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. சின்னச் சின்னப் பழுதுகள் ஏற்பட்டால் சரி செய்யும் திறமையும் வேண்டும்.

எந்த ஒன்றையும் ஆழமாய் அறிந்து கொள்ளாமல் கால் வைத்துவிட்டு, பின்னர் இழப்பு நேர்ந்ததென்று சலித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

வாழ்க்கை எனும் விளையாட்டில் வெற்றிகளையே விரும்புவீர்களென்றால், உருட்ட வேண்டிய தாயங்களின் அளவு, அவற்றைத் தயாரிக்கும் செலவு என்று எல்லா அம்சங்களையும் அறிந்து வைத்திருங்கள்.

பிரணவத்தின் பிரயோகம்

மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தசரதன், இராமனுக்கு முடிசூட்ட விழைந்தமைக்குக் காதோரம் நரைத்த சிகை காரணமென்று சொல்லப்படுவதுண்டு. கம்பனில் அப்படியரு காட்சி இல்லை.

மாறாக, மந்திரக் கிழவரிடத்திலும் அமைச்சர்களிடத்திலும் தசரதன் பேசுகிற பேச்சு, ஞானத்தின் சாரல் தெறிக்கிற பேச்சாக இருக்கிறது. பேசுபவன் சக்கரவர்த்தி தசரதனா, சம்பந்தி ஜனகனா என்ற ஐயம் தோன்றும். அந்த அளவு தசரதன் ஞானமொழிகளைப் பேசுகிறான்.

இதுகாறும், காமவயப்பட்ட வாழ்வினை வாழ்ந்த நிலை மாறி, ஞானத்தைத் தேடும் தவவாழ்வை மேற்கொள்ள தசரதன் விரும்புகிறான்.

புறப்பகைவரை வென்ற தனக்கு, அகப்பகையாகிய காமகுரோதங்களை வெல்லாமல் வாழும் நிலை ஏன் வேண்டுமென்று ஆழச் சிந்தித்து, தன்னைத் தெளிகிறான் தசரதன்.

கைகேயி தேரை இயக்க, பகைவர்களை வென்ற தனக்கு, ஆசைவயப்பட்ட புலன்களாகிய கழுதை இழுக்கும் தேரை இயக்கி வெல்வது கடினமா என்று பேசுகிறான்.

புதல்வர்கள் திருமணம் முடிந்து வந்த கையோடு இப்படித் துறவு வாழ்வை நினைத்து தசரதன் பேசும்படி என்ன நடந்தது என்று பார்க்க வேண்டும். தசரதனின் எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவன் கூற்றாகவே கம்பர் எழுதிக் காட்டுகிறார்.

“வெள்ளநீர் உலகினில், விண்ணில், நாகரில்
தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான்
கள்ளரின் கரந்துறை காமம் ஆகி ஆம்
உள்ளுறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வேனோ?

பஞ்சுமென் தளிரடிப் பாவை கோல்கொள
நெஞ்சிதைத்து அவுணர் தோற்பதும் வென்றுளோற்கு
எஞ்சலில் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ?”

இத்தகைய உள்நிலை ஆய்வு தரசதனுக்கு ஏற்படுகிறது. அத்துடன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் தெப்பம் துறவுதான் என்னும் முடிவுக்கு வருகிறான்.

“துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ”
என்கிறான்.

இந்த அளவு தன்னுடைய எண்ண ஓட்டங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடும்படி தசரதன் சிந்திக்கிறான் என்றால், அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏதோ ஓர் அம்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இராமன் திருமணம் முடிந்து வருகையில் பரசுராமன் எதிர்கொள்வதும், அவனைக் கண்டதுமே தசரதன் பதறுவதும், கால்களில் விருந்து கெஞ்சுவதும் நடக்கிறது. ஆனால் இராமன் பரசுராமனை வெற்றி கொண்டதோடு, பரசுராமனின் தவத்தினை இலக்காக்கி அம்பெய்ததில் அதிர்ந்து போகிறான் தசரதன்.

இதுகாறும், தான் சிறுவனென்று நினைத்து, தன்னால் காக்கப்பட வேண்டும் என்று தான் கருதிய இராமன் இறைவனின் அம்சம் என்பதை உணர்கிறான்.

“மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும் ஈயும்”
என்று உணர்ந்து கொள்கிறான்.

இந்தப் புரிதல் அவனுக்குள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நினைவுடனேயே அவனுடைய இறுதிக் கணங்கள் கழிந்ததாலோ என்னவோ சீதை தீக்குளித்த பிறகு, சிவபெருமான் அழைக்கையில், தசரதன் எழுந்து வருகிறான்.

அதுவும் உடலோடு வந்து தனயனைத் தழுவிக் கொள்கிறான். தன் மகனின் தெய்வாம்சத்தைக் கண்டதால், இறுதிக் காலத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு தசரதனுக்கு ஆன்மத் தெளிவை அளித்திருக்க வேண்டும். இது, தசரதன் வாழ்வில் ஏற்பட்ட நிலைமாற்றத்தை உணர்த்துகிற பகுதியாகும்.

காவிய நிகழ்வுகளை ஒரு யோகியின் கண்கொண்டு காணும் போது எவ்விதமான புதிய வெளிச்சம் துலங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

தசரதனுக்கு 60,000 மனைவியர் என்றும், அதே போல பற்பல அரசர்களின் அந்தப்புரங்கள் பெண்களால் நிரம்பி இருந்தன என்றும் படிக்கிறோம். இது குறித்து கேள்வி & பதில் ஒன்றில் சத்குரு விளக்கினார்.

“பகைநாடுகளை வென்ற அரசர்கள், போரில் உயிரிழந்த அரசர்களின் மனைவியரை அங்கேயே விட்டு வரவில்லை. அவர்கள் வாழ்வு எந்த நிலையில் இருக்குமோ என்னும் ஐயத்தால். தங்களுடனேயே அந்தப்புரத்தில் தனியாகவும் சுதந்திரமாகவும் வாழ வகை செய்தார்கள்.

“பெண்களை மதிக்கும் பண்பாட்டின் வெளிப்பாடான இந்தச் செய்கை பிற்காலத்தில் மேலோட்டமாகக் காணப்பட்டது” என்பார் சத்குரு.

துறக்க நிலையிலிருந்த தசரதன் சிவபெருமான் பணித்ததும், பூமிக்கு வந்து இராமனை ஆறத் தழுவி, சீதையைத் தேற்றி, இலக்குவனை பாராட்டி, இராமனுக்கு வரங்கள் தந்து மீள்கிறான்.

துறக்கமாம் சுவர்க்கத்திலிருந்து வந்த தசரதன் சூட்சும உடலில் வந்ததாகத் தெரியவில்லை. தன் விரிந்த தேகத்தில் இராமனின் திருமேனி அழுந்தும் விதமாய் அரவணைத்தான் என்கிறார் கம்பர்.

“வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீராட்டி
வாழ்ந்த சிந்தையின மனங்களும் களிப்புற மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்றிவை புகன்றான்”

தசரதன் தன் உடலோடு சுவர்க்கம் புகுந்தான் என்பதை கம்பர் நேரடியாக விளக்கவில்லை. ஆனால், இராமன், தனக்குத் துணை செய்தவர்களை பட்டாபிஷேகத்திற்கு அயோத்திக்கு அழைக்கையில், ஓர் அற்புதமான உரையாடல் நிகழ்கிறது.

“புறப்படுவதென்றால் புறப்படுங்கள்” என்று விடை கொடுத்தவன். அவர்கள் எல்லோரும் பட்டாபிஷேகம் காண வருவதாய்ச் சொல்லக் கேட்டு, தானே அழைக்க விரும்புயதாகவும் அவர்கள் வசதி அறிந்து கொள்ளவே புறப்படச் சொன்னதாகவும் சொல்ல, துணைவர்கள் அதிசயித்தனர்.

அவர்கள் எவ்வாறு அதிசயித்தனர் என்று சொல்ல வந்த கம்பன், “உடலோடு சுவர்க்கம் புகுந்தவர்கள்போல் அதிசயித்தனர்” என்கிறார்.

“மெய்யினோடு அருந்துறக்கம் உற்றார் என வியந்தார்”

இது, சற்றுமுன் வந்து சென்ற தசரதனைக் குறிப்பது போலவும் தோன்றுகிறதல்லவா!

யோகம் என்னும் சொல்லை அதன் உண்மையான & முழுமையான & பொருளில் புரிந்து கொள்பவர்களுக்கு கம்பனில் யோகாம்சங்கள், யோக ரகசியங்கள், யோகவியலின் தன்மைகள் எங்கெல்லாம் தொழிற்படுகின்றன என்பதை இனம்காண இதுவரை சொன்ன பகுதிகள் உதவியிருக்கும்.

ஆனால் யோகக்கலையின் வித்தாக விளங்கும் ஒன்றினைப் பற்றி, முடிசூட்டுப் படலத்திற்குச் சற்று முன்னர் கம்பர் ஒரு பாடலில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் குறிப்பிடுகிறார்.

சீதை தீப்புகுந்து மீண்டதன் பின்னால், நான்முகன், இராமனிடம் அவனைப் பற்றி நினைவூட்டுகிறான். இராமனின் பரம்பொருள் தன்மையைப் பன்னிரண்டு பாடல்களில் விளக்கிவிட்டு, இராமனை யாரால் உணர முடியும் என்று சொல்லும்போது பிரணவத்தின் பெருமையை நான்முகன் பேசுகிறான்.

“ஓங்காரத்தின் பொருளைத் தேறுவோர் மட்டுமே இராமனை உணர்ந்து தியானிப்படுவர்கள் இருவினை உகுப்பார்கள். இதில் முரண்படுவோர் ஊழிக்காலம் வரை தடுமாறி, வீடுபேறு பெறாமல் நிற்பார்கள்” என்கிறான்.

“பலரும், பிரணவம் என்பதை ஒரு மந்திரம் என்று மட்டுமே கருதுகிறார்கள். சிலரோ, அகரம், உகரம், மகரம் ஆகியவற்றின் கூட்டு என்று ஒரு தகவலாகத் தெரிந்து கொண்டு, அதன் தத்துவ விளக்கத்தை மட்டுமே கேட்டறிந்து” பிரணவத்தை அறிந்து கொண்டதாகக் கருதிவிடுகிறார்கள்.

உண்மையில், பிரணவம், சம்பிரதாயத்துக்காக ஓதப்படுகிற மந்திரம் மட்டுமல்ல, அது தத்துவ விளக்கம் மட்டுமல்ல. பிரபஞ்ச உருவாக்கத்தின் விதையாய் இருப்பது பிரணவம்.

பொதுவாக, நாம் “ஓம்” என்றே உச்சரிக்கிறோம். யோக மரபில் ஓங்கார தீட்சை பெற்றவர்கள் அ- உ – ம் என்று தனித்தனியாக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட தொனியில் உச்சரிப்பார்கள்.

முறைப்படி இந்தத் தொனியில் உபதேசம் பெற்று, தனித்தனியாக மூன்று ஒலிகளையும் உச்சரிப்பவர்கள் இதுவரை ஓம் என்று உச்சரித்ததற்கும் அதற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டை உணரமுடியும்.

ஈஷாவில் ஓங்கார தீட்சை ஒவ்வொரு நாளும் தரப்படுகிறது.

ஈஷாவில், ஓங்காரம் மூவெழுத்தொரு மொழியாய் பயிற்றுவிக்கப்படுவதன் பலன்களை ஆய்வு செய்ய புதுடில்லியில் உள்ள லேடி இர்வின் கல்லூரி ஆய்வாளர்கள் முன்வந்தனர்.

விளையாட்டு வீரர்கள் உடல்கூற்று அம்சங்களிலும், மனைவியல் அம்சங்களிலும் இந்தப் பயிற்சியில் மகத்தான மாற்றங்களைக் கண்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இருபத்தோரு நாட்களுக்கு, தினம் இருபத்தோரு நிமிடங்கள் ஓங்காரப் பயிற்சியை அவர்கள் தொடர்ந்து செய்ததன் பிறகு மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனை பயிற்சிக்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் இருந்து மகத்தான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

பதஞ்சலி, “தன்ய வாசக ப்ரணவ” என்கிறார்.

பிரணவத்தை, “நடாவு சிவசங்கின் நாதம்” என்கிறார் திருமூலர். மனம், உடலின் இயல்பை விடாமல் இருக்கிறது. அதனை பிராணாயாமம் வழி, பிராணவத்தில் இணைத்து, தன் ஐம்புலன்களையும் அதன்வழி கொண்டு செலுத்தாதவர்கள், இறையனுபவமாகிய அமுதத்தை நுகரமாட்டார்கள் என்கிறார் திருமூலர்.

“விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே”

பிரணவமாகிய ஓரெழுத்துள் இறைவன் உருவமாய், அருவமாய், பல பேதங்களாய், முக்தியாய், சித்தியாய் உள்ளான் என்றும், ஓங்காரத்திலேயே ஐம்பூதங்கள், சராசரங்கள் எல்லாம் தோன்றின என்றும் திருமூலர் சொல்கிறார். பிரபஞ்ச உருவாக்கமே அண்டப் பேரொலி ஒன்றில் தோன்றியது என்று அறிவியல் உலகம் இன்று சொல்வதை இதனுடன் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது.

“ஓமெனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓமெனும் ஓங்காரத்து உள்ளே உரு அரு
ஓமெனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உள்ளன
ஓங்காரா சிவ பரசிவ ரூபமே”
என்கிறார்.

யோக சாதனையில் மூழ்கித் திளைப்பவர்களுக்கு தாமே ஓங்காரம் கேட்கும் என்பதால், அவர், “பிரணவம் ஆகும் பெருநெறி” என்றே பேசுகிறார். யாரும் எழுப்பாமல் தானே எழுவதால் இதற்கு அநாஹத த்வனி என்று பெயர்.

யோக சாதனையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஓங்காரமும் இன்னபிற இன்னொலிகளும் கேட்கும் என்று சிவன் உமையம்மையிடம் சொன்னதாகவும், அதனைப் பல அருளாளர்கள் ஆராய்ந்து கண்டதாகவும் “நிஷ்டானுபூதி” என்னும் யோக நெறி நூல் சொல்கிறது.

“இத்திறம் ஆன யோக சாதனையில்
இருந்து சாதிப்பவர் தமக்கு, இச்
சுத்தமா நாதத் தொனிகளும் பலவாத்
தோன்றிடு மனிகடல், மேகம்,
மத்தவும், பேரீ, யாழ்ஒலி, சிலம்பு
வளையளித் தாளம் என்று உமையாட்கு
அத்தனும் மொழிந்தான் & அன்றியும் உரவோர்
ஆய்ந்தெடுத்து உரைத்தனர் அன்றே”

இந்த ஓங்காரமே முதலில் எழுந்தது, அதிலிருந்தே அனைத்தும் பிறந்தது என்கிறது மாண்டூக்ய உபநிஷதம்.

(ஓமித்யேததக்ஷரதமிதம் ஸர்வம் தஸ்யோபவ் யாக்யானம் பூதம் பவத்பவிஷ்யதிதி ஸர்வமோ கங்கார ஏவ யச்சான்யத் த்திகாலாதீதம் ததப்போயங்கார ஏவ)

இதம் – இந்த; ஸர்வம் – அனைத்தும்; ஏதத் – இந்த ஓம் -ஓங்காரம்; அக்ஷரம் – மந்திரம்; தஸ்ய – அதன்; உபவ்யாக்யானம் – விளக்கம்; பூதம் – சென்றவை; பவத் – இருப்பவை; பவிஷ்யத் – வருபவை; ஸர்வம் – எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரமே; அன்யத் ச – மற்றவை; யத் – எவை; த்ரிகால அதீதம் – மூன்று காலங்களையும் கடந்தது; தத் அபி- அதுவும் ஓங்கார ஏவ – ஓங்காரமே.

“இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே.

சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதைக் குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே. அதிலிருந்தே உலகமும் அண்ட சராசரங்களும் தோன்றியதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் “உலகம் அனைத்தும் ஓங்காரம்” என்று இங்கே கூறப்பட்டது.

பிரணவம் பற்றி சுவாமி சச்சிதானந்தா, “கடவுள் தம் முழுத்தன்மையயும் காட்டி, நம் உள் எழுந்து நாம் அனுபவிக்கும்படிச் செய்யக் கூடிய கடவுளின பெயர்தான் பிரணவம்” என்கிறார்.

இது குறித்து அவர் இன்னும் விளக்கும்போது, “ஓம் என்பது பிரணவம் என்று ஏன் சொல்கிறோம்? அது பிராணத் தொடர்புடையதால் அப்படிச் சொல்கிறோம். பிராணன் எப்போதும் உடலை உயிருடன் வைத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் உடையதாகும்.”

“இதற்கு பூகோள வரம்பும் கிடையாது. அரசியல் வரம்பும் கிடையாது. சமய, மத, ஆன்மிக வரம்பும் கிடையாது.

இந்த ஓங்கார பிரணவத்தின் வடிவத்தையே அதன் ஓசையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்து பல சமயங்கள் உபயோகிக்கின்றன.

“ஓம்” என்ற பிரணவம் கிறித்துவத்தில் “ஆமென்” என்று வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தியே “அமீன்” என்று உபயோகிக்கிறார்கள்.

இதிலிருந்து “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் ஓசையை யாரோ வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள் என்று எண்ணிவிடவும் கூடாது.

சத்தியம் என்பது ஒன்றுதான்.

இதை ஒரு நிகழ்ச்சியின் மூலமாக விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளுடன் நின்று கொண்டு இருக்கிறாள்.

அந்தச் சமயத்தில் தூரத்தில் ஒரு வெடிச் சத்தம் கேட்கிறது.

ஒரு குழந்தை, “அம்மா! “டொபீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.

இன்னொரு குழந்தை, “அம்மா! “படீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.

மூன்றாவது குழந்தை, “அம்மா! “டூமீர்” என்ற சத்தம் கேட்டதே அது என்ன?” என்கிறது.

வெடிச் சத்தம் என்னவோ ஒன்றுதான். ஆனால் குழந்தைகள் அந்த ஒரே சத்தத்தை தங்களுக்குத் தெரிந்த வார்த்தையில் சொல்லுகின்றன.

தியானத்தில் அமரும் சாதகர்கள் அதன் வெற்றியை அடையும்போது பிரபஞ்சத்தின் வித்து ஒலியாகிய “ஓம்” என்ற பிரணவத்தின் ஒலியைத்தான் தமக்குள் கேட்கிறார்கள் என்கிறார் சுவாமி சச்சிதானந்தா.

இதனால்தான் உபநிஷதம், “ஏகம் சத்விப்ராஹ பகுதா வதந்தி” என்று சொல்கிறது.

அதாவது, “சத்தியம் ஒன்றுதான். சான்றோர்கள் அதைப் பல வடிவங்களில் வெளியிடுகிறார்கள்” என்கிறது.

இதனால் பிரபஞ்சத்தின் அடிப்படையான பிரணவத்தின் ஒலியை & வித்தாகிய ஒலியான “ஒம்” என்ற சொல்லைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறர் சுவாமி சச்சிதானந்தா.

இனி, ஓங்காரம் பற்றி இராமனுக்கு நான்முகன் சொல்வதாக வரும் கம்பராமாயணப் பாடலைப் பார்க்கலாம்.

“ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உன்னை உணர்வோர்
ஓங்காரப் பொருள் என்றுணர்ந்து இருவினை உகுப்போர்
ஓங்காரப் பொருள் “ஆம்” “அன்று” என்று ஊழி சென்றாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர்”

பிரணவத்தைத் தேர்தல், உணர்தல் என்றால் பிரணவத்தை வெறும் எழுத்தாகவோ, தந்திரமாகவோ பாராமல், பிரணவத்தின் பிரயோக முறையை அறிந்து, அதனை அன்றாடப் பயிற்சிக்குள் கொண்டு வருகிற சாதகர்களே இராமனை உணர்வார்கள் என்று நான்முகன் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

இராம காதையைக் கற்பவர்கள், உலக வாழ்வில் இருந்த வண்ணமே இறைநெறியில் பொருந்தி நின்று, வினைகள் கழியப்பெற்று குருவின் அருளும் இறையருளும் வாய்க்கப் பெறும் நல்வாழ்வை வாழ ஊக்கங் கொள்ளுதல் வேண்டும்.

இராமகாதையின் வழி, உலகியல் அறம், இல்லற நெறி ஆகியவற்றை உணர்வதோடு நில்லாமல், பரம்பொருளுடன் பொருந்துகிற நன்னிலைமையிலும் நாட்டம் கொண்டு, அந்த ஒருமை நிலையை எய்த, வாராதே வந்த வள்ளலாம் காகுத்தனின் கருணை முன்னிற்பதாக!

சபரி என்றொரு யோகினி

சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள்.

வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின், இறைமையின் நேரடி அனுபவம் என்பதே பதிலாக இருக்கும்.

எந்தவொரு யோகமும் இறை அனுபவத்தில் சென்று நிறைகிறது. அந்த அடிப்படையில் எல்லா மகத்துவங்களும் நிறைந்த யோகினியாக கம்பனில் காட்டப்படும் பாத்திரம் & சபரி.

சபரி பற்றிய செவிவழிச் செய்திகளும், இன்னபிற அனுபவங்களும், அவளை பக்தி மட்டுமே நிறைந்த பாமரக் கிழவியாய் சித்திரிக்கக் காண்கிறோம்.

ஆனால் சபரிக்கு கம்பர் கொடுக்கும் அடைமொழிகளைப் பார்க்கிறோம்.

“தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி”

“தன்னையே (இராமனையே) நினைத்து நோற்கும் சவரி”

“அருந்தவத்து அரசி”

“வினைஅறு நோன்பினார்”

ஆகியவை அவை.

மாணிக்கவாசகர், சிவபெருமானை “தாயினும் சாலப்பரிந்து” என்கிறார். கம்பர் “தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி” என்கிறார்.

இன்னொரு சிறப்பு என்னவெனில், சிவன், நான்முகன், திருமால், தேவர்கள் அனைவரும் சபரியின் குடிலைத் தேடிவந்து, “குற்றமில்லாத உன் தவத்தின் நிறைவுக்காலம் நெருங்குகிறது. இராமனுக்கு பூசைகள் நிகழ்த்தி எங்களிடம் வந்துசேர்” என்று சொல்லிச் சென்றார்களாம்.

மூவரும் தேவரும் வருந்தியழைத்தும் அவர்கள் பால் செல்லாமல், இராமனுக்காக தான் காத்திருந்ததை சபரி சொல்ல, இராம இலக்குவரோ, “தாயே! எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்த துயரைத் தீர்த்தாய். நீ வாழ்க” என்றனர்.

“ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும், எந்தை
வாசவன் தானும், ஈண்டு வந்தனர், மகிழ்ந்து நோக்கி
ஆசறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய
பூசனை விரும்பி எம்பால் போதுதி” என்று போனார்.

“இருந்தனன் எந்தை நீ ஈண்டு என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி, “எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய், அம்மனைவாழி” என்றார்.

இராம இலக்குவரின் துயரம் தீரும் விதமாக சபரி சொன்னது, சுக்ரீவன் ஒளிந்திருக்கும் ரிஷபுங்க பர்வதத்தைச் சென்றடையும் நெறி என்று சொல்லப்படுகிறது.

ஆனால், சபரி சொன்னதும், இராமன் கேட்டதும் எப்படி இருந்ததென்றால் “வீடுபேறு அடைவதற்கான வழியைக் காட்டும் ஓர் அறிஞர் போல, சபரி சொல்ல, கேள்விச் செல்வத்தால் செவிகள் தோட்கப்பட்டவர் உணர்கிற சுவையின் வடிவாக இராமன் நின்றான்” என்கிறார் கம்பர்.

“வீட்டினுக்கு அடைவதான மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிந்து எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உன்னும் அமுதத்தின் சுவையாய் நின்றான்”.

ரிஷிபுங்க பர்வதம் எவ்வளவு மகிமை வாய்ந்த குன்றாக இருந்தாலும் இராம இலக்குவரால் அடைய முடியாத தன்மையதாக இருக்க வாய்ப்பில்லை.

சுக்ரீவனுக்கே எட்டக் கூடிய இடத்தை இவர்கள் எட்ட இயலாது என்பதும் ஏற்கு மாறில்லை. எவரும் எளிதில் சென்றடைய முடியாத இடமெனில், தன்னை யாரும் கொல்ல வருவார்களோ என்னும் அச்சத்தில் சுக்ரீவன் காலத்தைக் கழிக்க அவசியமில்லை.

பக்தியிலும் யோகப் பண்பிலும் முதிர்ந்து கனிந்த மூதாட்டியாகிய சபரி, தன் உயிர் அனுபவமாகிய கனியை இராம இலக்குவருக்குப் படைத்திருக்க வேண்டும்.

பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அந்தப் பெருமாட்டி, பேசியது என்னவென்பதற்கு நமக்குக் குறிப்புகளில்லை.

எது எப்படியோ, சபரிக்கும் இராமனுக்கும் நிகழ்ந்த உரையாடல் சூட்சுமமான அம்சங்கள் கொண்டது என்பதும், அந்தக் கால கட்டத்தில் இராம இலக்குவருக்கு மிகவும் தேவைப்பட்ட வழிகாட்டுதல் என்பதும் நன்கு புலனாகிறது.

இராமனின் வருகையானது சபரிக்கு முக்தி தருவது மட்டுமே என்றால், அங்கே தாயென உயிர்க்கு நல்குபவன் இராமனாக இருந்திருப்பான். ஆனால், சபரி உயிர்க்கு நல்கும் தாயாகக் குறிக்கப்படுவது சிந்திக்கத்தக்கது.

தன்னைத் தேடி மூவரும் வந்த போது கூட இராமனுக்குச் செய்ய வேண்டிய பூசனை விரும்பி, அவர்கள் தரவல்ல வீடு பேறுகளையும் விலக்கி நின்றாள் என்பது வியப்புக்குரிய செய்தி.

“கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”

என்று சேக்கிழார் சுட்டிக் காட்டிய நிலையை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

இராம இலக்குவர்கள் சபரியிடம் கேட்டறிந்தவை யாரும் அறிதற்கு அரிய நுண்ணிய சூட்சுமங்கள் என்று கருத வேண்டியுள்ளது.

சபரியின் பெருமையை நாம் நன்கு உணரும் விதமாய் இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. எல்லோருக்கும் இராமன் முக்தி நிலையை அருளுவான். ஆனால் சபரியின் நிலை வேறு.

“அவள் பன்னெடுங்காலம் முயன்ற பெருமை காரணமாய், தன் உடலைத் தானே துறந்து தனித்த ஒரு நிலையை எட்டுகிறாள். அதனைக் கண்ட இராம இலக்குவர், எல்லையில்லாத வியப்பெய்தி, அவள் சொன்ன வழியிலே சென்றனர்” என்கிறார் கம்பர்.

“பின் அவள் உழந்து பெற்ற
யோகத்தின் பெற்றியாலே
தன்உடல் துறந்து தான் அத்
தன்மையின் இனிது சார்ந்தாள்
அன்னது கண்ட வீரர்
அதிசயம் அளவின்று எய்தி
பொன்னடிக் கழல்கள் ஆர்ப்ப
புகன்றமா நெறியில் போனார்”

இதில் மூன்று அம்சங்களை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

1. யோகநிலை கைவரப் பெற்றமையால் தானே உடலைத் துறக்கிறாள் சபரி.

2. உடலைவிட்டு உயிர் நீங்குங் காலை, அந்த உயிர் முக்தி பெற குருவருள் முன்னின்று உதவும். ஆனால் இங்கு இராமன் சாட்சிப் பிரமாணமாகவே நிற்கிறான்.

3. சபரி உடலைத் துறந்த பிறகு, அந்தக் காட்சியைக் கண்டு எல்லையில்லாத அதிசயம் கொண்ட இராம இலக்குவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகல்கின்றனரே தவிர, அந்த உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாகவோ, எரியூட்டல் & புதைத்தல் போன்றவற்றை மேற்கொண்டதாகவோ சுட்டவில்லை.

சடாயுவுக்கு இராம இலக்குவர்கள் நீர்க்கடன் செய்ததை கம்பர் குறிப்பிடுகிறார்.

ஏந்தினன் இருகை தன்னால்; ஏற்றினன் நாமம் தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தன்; தலையின் சாரல்
காந்தெரி கஞல மூட்டி, கடன்முறை கடவா வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல் மந்திர நெறியின் வல்லான்

இறுதிக் கணத்தில் எல்லையில்லாத யோக ஆற்றல் காரணமாய், அதிசயித்துப் பார்க்கக் கூடிய இரண்டு அம்சங்கள் சபரிக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். ஒன்று, சபரியின் உயிருக்கு நிகழ்ந்த அதிசயம். இன்னொன்று சபரியின் உடலுக்கு நிகழ்ந்த அதிசயம்.

யோகமரபில், ஓர் உயிருக்கு நிகழக்கூடிய உச்சகட்டக் கரைதல் மஹா சமாதி எனப்படும். இது முழு விழிப்புணர்வுடன் உடலை விட்டு உயிர் நீங்குதலில் தொடங்கும். அந்த உயிரானது முக்தி நிலைக்கோ, வீடு பேற்றுக்கோ செல்வதல்ல. மாறாக முற்றிலும் கரைந்து போவது.

தெரிந்தோ, தெரியாமலோ ஆங்கிலத்தில், மரணத்தைக் குறிக்க ஒன்று சொல்வர். ழிளி விளிஸிணி என்பார்கள். இந்தச் சொல், முழுமையான பொருளில் பொருந்துவது, மஹாசமாதி நிலைக்குத்தான்.

இதுகுறித்து என் குருநாதர் சத்குரு பல இடங்களில் விரிவாகப் பேசியுள்ளார்.

“எல்லாவற்றிலும் ஒருமை காண்பதே மகாசமாதி,”

“இதை ஓர் உவமை கொண்டு விளக்கலாம். நீங்கள் ஒரு காற்றுக் குமிழாக இங்கே இருக்கிறீர்கள். அந்தக் குமிழை உடைத்தால் அது எங்கே போகிறது? முழுமையாகக் கரைந்து விடுகிறது. முக்தி என்பது விடுதலை. ஆனால் மகாசமாதி என்பது ஒருவர் தாமாக முன்வந்து உடலைத் துறக்கிறார். முழுமையாகக் கரைந்து போகிறார்.

“உண்மையில் மரணம் என்ற ஒன்று இல்லை. வாழ்வு பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களுகே மரணம். ஆனால் மஹா சமாதி என்பது முற்றாகக் கரைந்து போதல்” என்பார் சத்குரு.

இரண்டாவது, சபரியின் உடலுக்கு நிகழ்ந்த அதிசயம். அதுவே பூதசித்தி ஆகும். சமீப காலத்தில் வள்ளல் பெருமான் அந்நிலையை எய்தினார் என்றறிகிறோம்.

இதுகுறித்து சத்குரு அவர்களிடம் நான் கேட்டறிந்தவை “மரணமிலாப் பெருவாழ்வு” எனும் காணொளியாக வந்துள்ளது.

பூதசுத்தி எனும் பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்போது அது மேலும் மேலும் நுண்ணிய நிலைகளை எட்டி பூத சித்தி எனும் தன்மையை அடைகிறது.

தியானலிங்கக் கோயிலில் ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் நிகழும் பஞ்சபூத ஆராதனை, பூத சுத்திக்கான சாதனையாகும்.

ஓர் அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்ட வள்ளலார், அங்கேயே மறைந்தார் என்பது பற்றி சத்குரு சொல்கையில் “பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பிரித்து, உடலில் உள்ள ஒவ்வோர் அம்சத்தையும் அந்த பூதத்தில் சேர்த்துக் கரைவதே பூத சித்தியாகும்.

இதில், அந்த நிகழ்வின் ஒரே அடையாளமாக தண்ணீர் மட்டும் தேங்கியிருக்கும். நீராகிய பூதத்தை மட்டும் முழுவதும் கரைத்துவிட முடியாது. “இப்போது யோக நிலையில் மிகவும் தேர்ந்தவர்கள் பூத சித்தி அடைகிறபோது கூட சிறிதளவு நீராவது அங்கே மீதமிருக்கும்” என்பார் சத்குரு.

இதைக் கேட்கும்போது இன்னொன்றையும் நினைவுபடுத்திக் கொண்டேன். ஊழிக் காலத்தில் யுகப் பிரளயத்தில் பிரபஞ்சமே அழிந்து போகும்போது கூட தண்ணீர் மட்டுமே மிஞ்சும் என்று புராணங்கள் சொல்வது கற்பனையல்ல என்று புரிந்தது.

இந்நூலின் கருப்பொருளை அறக்கட்டளை சொற்பொழிவாக நிகழ்த்தியதைக் கேட்ட திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், “வேறொரு இராமாயணத்தில் சபரி நதியாக மாறினாள்” என்றொரு குறிப்பும் இருப்பதை என்னிடம் சொன்னார்.

“மது கைடவர்களை அழிக்க நிலமே தென்படாத போது திருமால் தன் தொடைகளிலேயே சம்ஹரித்து, பின்னர் சிருஷ்டியைத் தொடங்கினார்” என்று புராணங்கள் சொல்கின்றன.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்கிறபோது மற்றைய பூதங்கள் இறைவனுக்குள் ஒடுங்கினாலும் தண்ணீர் ஒடுங்குவதில்லை.

அண்டத்தில் நிகழும் இதே நிலைதான் பிண்டத்திலும் நிகழ்கிறது. பூத சித்தியிலும் தண்ணீர் எஞ்சுகிறது என்று புரிந்தது. சபரியின் உயிர் மஹாசமாதியிலும், சபரியின் உடல் பூத சித்தியிலும் கரைந்த அடுத்த விநாடி, எல்லையில்லாத அதிசயமாய் இந்தக் காட்சிகளைக் கண்ட இராம இலக்குவர் அங்கிருந்து அகன்றனர் என்பதாகக் கம்பர் காட்டுவதில், யோக நெறியின் நுட்பங்கள் மிக சூட்சுமமாக விளக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்கிறோம்.

கம்பனில் சமாதி நிலை பற்றிய குறிப்புகள்

ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம்.

இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார்.

“ஆசையற்றவனும், தூயவனும், திறமைசாலியும், பற்றற்றவனும், பயனற்றவனும், தன்முனைப்புடன் செயல்படுவதை எல்லா விதங்களிலும் விட்டவனுமான எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்.”

“அனபேக்ஷ : சுசி -தக்ஷ & உதாசீனோ- கதவ்யத:
ஸர்வாரம்ப பரித்யாகீ யோமத் பக்த: ஸமே ப்ரிய:”

இந்த இலக்கணத்திற்கு அனுமனே இலக்கியம்.

பக்தியுள்ள ஆன்மா எந்த வடிவில் இருந்தாலும் இறைவனை அடைய அந்தத் தேகம் ஒரு தடையில்லை என்று பாகவதம் கூறும்.

யோகநெறியில், பற்பல சமாதி நிலைகள் பேசப்பட்டுள்ளன. அவற்றில் ரிதம்பர சமாதி என்பது குறித்து பதஞ்சலி விரிவாகப் பேசுகிறார். ஆத்ம சாதகன் ஒருவனுக்கு தியானத்தில் தன்னைப்பற்றிய சொந்த உணர்வும் எழும். இறை உணர்வும் எழும். தொடக்கத்தில் இந்த இரண்டையும் தன் பிரக்ஞையில் அவன் உணர்வான்.

சாதனை தீவிரப்பட, தன்னைக் குறித்த உணர்வு முற்றிலும் அடங்கி, முழுமையாக இறையுணர்வே மேலெழும். இந்நிலை ரிதம்பர சமாதி. இப்போது இந்த சாதகனின் எண்ணங்கள் என்று தனியாய் இராது. இறைவனின் எண்ணங்களே அவன் வழி வெளிப்படும்.

“தனதுரை எனதுரையாகக் கொண்டு” என்று திருஞானசம்பந்தர் சொல்வதும், “நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்தன் வார்த்தை” என்று வள்ளலார் சொல்வதும், இந்த அனுபவங்களையே ஆகும்.

இராம காதையில், இந்நிலையை அடைந்தவர்கள் அனுமன், சீதை ஆகியவர்கள்.

இறைவனை வேறாய் இருந்து அனுபவித்தல், உடனிருந்து அனுபவித்தல், ஒன்றியிருந்து அனுபவித்தல் என்று மூன்று நிலைகளையும் இவர்கள் அடைந்தனர்.

சீதை மாடத்திலிருந்து கண்ணுற்ற வேளையில் இராமனை வேறாக இருந்து அனுபவித்தாள். வனவாசத்தில் உடனிருந்து அனுபவித்தாள். மணமேடையில் “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என ஒன்றியிருந்து அனுபவித்தாள்.

அனுமன், ரிஷிபுங்க பர்வதத்தில் இராமனைக் கண்ணுற்ற போது தனித்திருந்து அனுபவித்தான். வாலி வதம், படையெடுப்பு உள்ளிட்ட சம்பவங்களில் உடனிருந்து அனுபவித்தான். பட்டாபிஷேகம் நிறைவு பெற்ற பிறகு, இராமன் முன்வந்து தன்னை “பொருந்துறப் புல்லுக” என்று பணித்த போது ஒருமை எய்தும் அந்தத் தழுவலில் ஒன்றியிருந்து அனுபவித்தான்.

தன் தலைவன் சுக்ரீவனுக்கு இராமன் உதவுவான் என்று நட்புகோட் படலத்தில் எண்ணிய போது, சாதகனின் சொந்த உணர்வுகள் தலைதூக்கி இருந்தன.

போகப்போக இராமனின் திருவுளக் குறிப்பை நிகழ்த்தும் ஒரே முனைப்பு மட்டும் மீதமானது. அது இராமனைப் பொருந்துறப் புல்லும் ஒருமையை விளைவித்தது.

ரிதம்பர சமாதி என்ற இந்த உன்னத நிலை, “தான்” எனும் முனைப்பு அறுபடும் நிலையைக் குறிக்கும்.

“தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்”

என்னும் குறள் இதனையே சுட்டுகிறது. இந்தக் குறளில் “மன்னுயிர்” என்பதற்கு மற்ற உயிர்கள் என்று மட்டும் பொருள் கொள்ளலாகாது,

மன் உயிர் என்றால், நிலைபெற்ற உயிர்கள் என்று பொருள். உயிர்களுக்கு அழிவில்லை என்னும் கோட்பாட்டின்படி உயிர்களின் பிரக்ஞை பூர்வமான உணர்தலில், இந்தத் தன்மையை அடைந்த உயிரானது தொழத்தக்கதாகி விடும்.

ஏனெனில், எந்த உயிரின் நோக்கமும், இறைவனுடன் ஒன்றுவது என்பதால், அந்நிலையை எட்டிய உயிரை, பிறவுயிர்கள் தொழுகின்றன.

இரண்டாவதாக, இந்தக் குறளை அனுமனுடன் பொருத்திப் பார்த்தால், “மன்னுயிர்” என்பதற்கு சிரஞ்சீவத்துவம் பெற்ற உயிர் என்றும் பொருள்கொள்ள முடியும்.

“இன்றென இருத்தி” என சீதையால் சிரஞ்சீவத்தும் நல்கப் பெற்ற அனுமனை, அதே தன்மையை அடைந்த பிறவுயிர்களும் தொழும் என்று பொருள் கொள்ள இயலும்.

தானற்றுப் போதல் என்னும் நிலையை உணர்த்த ரிதம்பர சமாதிக்கு உன்னத உதாரணமாய் அனுமன் விளங்குகிறான்.

இந்நிலையை, திரைப்படப் பாடல் ஒன்றில் கவியரசு கண்ணதாசன் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.

“பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா,
மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா,
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா,
ஆலயமணியின் ஓசை நெஞ்சில் நிறைந்து விட்டதா”
என்பார்.

ஓர் உயிர், இறைவனை நோக்கி எவ்வளவு நெருங்குகிறதோ, அதே அளவுக்கு இறைவனும் அந்த உயிரை நெருங்குகிறார் என்பர்.

அந்த உயிர் இறைவன்பால் ஈர்க்கப்படுவது போலவே இறைவனும் அந்த உயிரை நோக்கி ஈர்க்கப்படுகிறான்.

“ஒருவரை ஒருவர் உள்ளம் ஈர்த்தலால்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”

என்று கம்பர் சுட்டுவது இந்த ஒருமை நிலையை உணர்த்துகிறது.

சிவபெருமானை கயிலாயத்தில் பூத உடலுடன் சென்று தரிசித்த சேரமான் பெருமாள் நாயனார், “சிவனைக் கண்டதில் எனுக்கு என்ன மகிழ்வோ, என்னைக் கண்டத்தில் சிவனுக்கும் அதே மகிழ்வு” என்கிறார்.

“தன்னைக் கண்ட என் வண்ணம், எவ்வண்ணம், அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே”

என்று பொன்வண்ணத்தந்தாதியில் பாடுகிறார். அனுமனை, தன்னை இறுக அணைக்குமாறு இராமன் “பொருந்துறப் புல்லுக” எனப் பணித்தது வெறும் புறவயமான நிகழ்வல்ல.

உயிர்கள் இறைவனிடம் பெறத்தக்க மிக உயரிய ஒருமை நிலை.

“நீ வேறெனாது, நான்வேறெனாது
இறுகும் வகை, பரமசுகம், அதனையருள்
– ஏக நாயகா! லோக நாயகா”

என்று அருணகிரிநாதர் திருப்புகழிலும்

“யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே”
என்று கந்தரனுபூதியிலும் பாடுகிறார்.

யோக நிலையானது மூன்று அம்சங்களின் ஒருமையை அடிப்படையாகக் கொண்டது. தியானிப்பவர் – தியானிக்கப்படும் பொருள் – தியானம். இவை மூன்றும் தனித்தனி அம்சங்களாகத் தொடக்க நிலையில் இருக்கும்.

ஒருமை நிலை என்பது, இம்மூன்றுமே ஒன்றான நிலை. தியானிக்கும் ஆத்ம சாதகரானவர், தியானத் தன்மையின் வடிவமாகி, தியானிக்கப்படும் பரம்பொருளின் இயல்பிலும் ஒன்றுவதாகும்.

“அறிவாற் சிவமேயாகிய மாணிக்கவாசகர்” என்று மணிவாசகரை இதனாலேயே சொல்வார்கள்.

திருமூலர் இந்நிலையை அழகியதோர் உவமை கொண்டு விளக்குகிறார். கடலில் கலந்திருக்கும் உப்பு, கதிரொளியால் காய்ச்சப்பட்டு, தனி வடிவம் கொண்டு வருகிறது. பின்னர் அதே உப்பு அந்தக் கடலில் இரண்டறக் கலக்கிறது இதுபோல், சிவத்தன்மை கொண்ட சீவன், சிவத்திலேயே அடங்குகிறது.

“அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையில்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடியது ஒன்றாகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே”

யோக மரபில் பதஞ்சலி சூத்திரம், திருமந்திரம் ஆகிய இரண்டுமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

ரிதம்பர சமாதியின் படிநிலைகளை திருமூலரும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

“தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
நானென்று அவனென்று இரண்டும் தனில் கண்டு
தானென்ற பூவை அவனடி சார்த்தினால்
நானென்று அவனென்று நல்லதொன்று அன்றே”

என்பது திருமந்திரம்.

அருளாளர்களின் மேற்கண்ட அனுபவ மொழிகள், சீதை அனுமன் ஆகியோரது வாழ்வியல் சம்பவங்களில் உள்ள ஆன்மிக சூட்சுமங்களை நன்குணரத் துணை செய்கின்றன.