மார்கழி-19 இல்லறம் வழியே இறையறம்

தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது.

இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார். மகளை மணமகன் வசம் ஒப்படைக்கும் போது  பெருமிதமும் உவகையும் அழுகையுமாய் கலவை உணர்ச்சிகளில் அவர் சொன்ன சொல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”.

அந்தக் குடும்பமே அந்நொடியில் ஆடிப் போனது. பின்னாளில் இளைய மகள் மனதில் கம்பீரமான  தன் தந்தை கசிந்து சொன்ன அச்சொற்கள் சித்திரமாக நின்றுவிட்டன.

இப்போது தன் தந்தை தனக்குப் பெண்பார்க்கத் தொடங்கி விட்டார். சிவபக்தியில் திளைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு,தன் தந்தை சிவனடியார் அல்லாத ஒருவர் கையில் தன்னைப் பிடித்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வதென்ற கவலை வந்து விட்டது.

“மாப்பிள்ளை கறுப்போ,சிவப்போ, குள்ளமோ,உயரமோ அவர் சிவனடியாராக இருக்க வேண்டும்.திருமணத்திற்குப் பிறகும் நான் சிவத்தொண்டில் ஈடுபட வேண்டும்.இரவுபகலாய் சிவதரிசனம் செய்யும் பேறு வேண்டும். இவை கிடைத்தால் போதும் . மற்றபடி சூரியன் எந்தத் திசையில் உதித்தால் எனக்கென்ன.”

இந்தத் தொனியில் பேசத்தூண்டியது எது? ஒருவர் தன் வாழ்வில் 
எதற்கு முதலிடம் தருகிறார்,முக்கியத்துவம் தருகிறார் என்பதில்தான் 
எல்லாம் இருக்கிறது. ஆங்கிலத்தில் Priority ன்பார்கள். இந்தப் பெண் 
தன் வாழ்வில் முக்கியத்துவம் தருவது சிவ வழிபாட்டுக்கே என்பதால் 
வாழ்வின் எல்லா ஏற்பாடுகளும் அதற்கு சாதகமாக அமைந்தாலே போதும் 
எனக் கருதுகிறாள்.
இல்லறக் கடமைகளில் இருந்த வண்ணமே ஓர் உயிர் தன் ஆத்ம 
சாதனைகளைத் தொடர முடியும் என்பது,குருமரபு புத்துயிர் பெற்றிருக்கும் 
இந்த நூற்றாண்டில் நன்கு தெரிகிறது.அதற்கு ஓர் எளிய பெண்ணின் 
மனதில் மலரும் உறுதியான சங்கல்பத்தின் ஊற்றம் எத்தகையது 
என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. ஒருபெண் மட்டுமல்ல, 
இக்கூட்டத்தில் எல்லாப் பெண்களுமே இதே உறுதி உள்ளவர்கள் 
என்னும் உண்மையை எங்கள் பெருமான் உனக்கொன்று 
உரைப்போம் கேள் என்னும் வரி உணர்த்துகிறது.

 

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று 
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் 
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க 
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க 
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் 
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

 

மார்கழி18 ஒளி பெருக உயிர் பெருகும்

மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது. தானெனும் தன்மையை அனைத்திலும் ஊடாட விட்டு அவற்றை தன்னிலிருந்து தனியாகவும் காட்டுகிறான் இறைவன்.

அதுமட்டுமா?அனைத்திலும் தன் இருப்பை காட்டவும் செய்கிறான்.கண்ணாரக் காணும்படி காட்டுகிறான். ஒளிபொருந்திய மகுடங்களை சூடிய தேவர்கள் சிவபெருமானின் திருவடிகளைப் பணிய நெருங்கும் போது, அவன் திருவடிகளின் பேரொளியில் இவர்களின் மகுடங்கள் ஒளியிழப்பது போல,கதிர் வந்து இருளை மறைக்கையில் நட்சத்திரங்கள் ஒளியிழக்கின்றன.

இதேநேரம் பிரபஞ்சமெங்கும் ஒளியாய் இருளாய் பெண்ணாய் ஆணாய் அலியாய் பிறவாய் விளங்குபவனும் சிவனே, அவற்றிலிருந்து தனியே துலங்குபவனும் சிவனே என்பது புலனாகிறது.


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

தருவாயா….

IMG-20160102-WA0015
ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம்

வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா?

களியின் மயக்கம்  கவிதரும் நேரம்

குயிலே குயிலே குரல்தருவாயா

வெளிச்சம் இசையாய் வருகிற நேரம்

வந்துன் அழகால் நிறம் தருவாயா

கிளிகள் கொத்தும் கனியின் சுவையாய்

கனிந்த அன்பின் வரம்தருவாயா

தூரத்து நிலவைத் துரத்தும் முகில்நான்

தங்கித் தவழ மலை தருவாயா

தீபத்தின் ஒளியை மலர்த்தும் அகல்நான்

தீராக் காதலின் திரி தருவாயா

மாதவி சிலம்பின் மௌனப் பரல்நான்

மகர யாழே மொழிதருவாயா

நேசக் குளிரில் நடுங்கும் கனல்நான்

நீளும் பனியே துகில்தருவாயா

மார்கழி 17 வந்தவர் நடுவே வந்தவன் சிவன்

இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat
is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை
வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில்
படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப் போவதும்
ஏன்நிகழ்கிறது?சிவநாமம் ஏற்படுத்தும் அதிர்வுகளைப்போலவே இன்னொரு சக்தி
மிக்க அனுபவமும் இப்பெண்களுக்கு நேர்ந்துள்ளது. பிரம்ம முகூர்த்தப் பொழுதில்,
சிவநாம சங்கமத்தில் சிவனுடைய இருப்பை சூட்சுமமாக உணர்ந்திருக்கின்றனர்.
அந்த தன்மையின் வீச்சைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுதலும் சமாதிநிலை
அடைதலும்நிகழ்ந்திருக்கின்றன.
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

என்னும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன. சிவனைக் காண வேண்டும் என்னும்
தவிப்பில் ஏங்கும் அடியார்கள் பால் ஏதோ இன்பமிருக்கிறதென்று சிவன்தேடி வருகிறான்.
அது , “சிவனை நான் காண்பேன் என்னும் அகங்காரமல்ல.’சிவனை நான் காண மாட்டேனா”
என்னும் ஏக்கம்.பக்தியின் உருக்கம். சிவனின் அடிமுடி தேடிய திருமால் பிரம்மா ஆகியோரிடம்
இத்தன்மை காணப்படவில்லை.அந்த இருவரையும் விட மனிதர்களிடம் குற்றம் குறை மிகுதியாய்
இருப்பது இயல்பு.ஆனால் அவர்களின் கள்ளமில் பக்திக்காகவும் ஏக்கத்திற்காகவும் இறைவனே வந்து
குறைகள் களைந்து அவர்களுக்குத் தன் திருவடிகளைத் தந்து அருளாகிய அமுதையும் தருகிறான்.

அவனைப் பாடி நீராடுங்கள் என்பது இப்பாடலின் திரண்ட கருத்து.

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்

முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப்
பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா
என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும்,
முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக மாணிக்கவாசகர்
பாடுவதும் ஒரே உத்திதானா என்றால், இல்லையென்றே
தோன்றுகிறது.

ஏனெனில் இங்கே நிறத்தால் மட்டும் முகிலானது அம்பிகையை
ஒத்ததாக இல்லை.அது உருக்கொள்ளும் போதே அம்பிகையின்
அருட்செயலுடன் ஒப்புநோக்கத்தக்க செயலொன்றை செய்கிறது.

“முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து” முகிலானது கடல் நீரை
முகந்து மேலேறுவதை, தனக்குள் கடலை சுருக்கிக் கொண்டெழுவதாய்
மாணிக்கவாசகர் பாடுகிறார்.அம்பிகையும் அது போலத்தான்.கருணைக்
கடலாகிய சிவபெருமானின் அருட்திறத்தை உயிர்களுக்கெல்லாம்
பெற்றுத் தரும் அருளுள்ளம்,அம்பிகையின் திருவுள்ளம்.

அவளே உடையவள்.காரியத்தில் மட்டுமின்றி காட்சியிலும் உடையவள்
உருவெனப் பொலிந்து,அவளுடைய மின்னிடை போல் மின்னி,அவள்
திருவடிகளில் முழங்கும் சிலம்பென முழங்கி அவளுடைய திருப்புருவம்
போல் வானவில் விளைய சிவனடியார்களுக்கு அம்பிகை அருள்மழை
பெய்வது போல் மழையே நீ பொழிக எனவேண்டுகின்றனர்.

மழையும் வெய்யிலும்கைகோர்த்து வானவில் விளைவிப்பதுபோல் அம்பிகை
அடியவர்க்கு அருளும் அல்லாதாருக்கு சீற்றமும் ஒருங்கே காட்டுவதால் அவள்
திருப்புருவங்களுக்கு வானவில்லை உவமை சொல்வதில் கூடுதல் பொருத்தம்
ஒளிர்கிறது.

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.