இறைவனோடு பொருந்துதல் யோகம்

யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை.

இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை உருவாக்குகிறது. யோக மரபில் ஒரு கதை சொல்வார்கள். குறுகலான அறை ஒன்றில் முதலில் ஒருவர் மழைக்கு ஒதுங்கினார். அவர், ஞானயோகி. சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார், அவர் பக்தியோகி. அந்த அறை இருவரை மட்டுமே கொள்ளும்.

இந்நிலையில் மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர் கர்மயோகி. மூவரும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க நான்காவதாய் க்ரியா யோகி ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டாராம். உடனே அந்த அறையில் பேரொளி சூழ, சிவன் தோன்றினாராம். “இந்த நால்வகை யோகங்களும் சேரும் இடத்தில் நான் இருக்கிறேன்” என்றாராம்.

இந்த நால்வகை யோகங்களையும் எது சேர்க்கிறது என்று பார்க்க வேண்டும். மற்ற மூன்று யோக முறைகளையும் ஒன்றாக்கும் வித்தை பக்தி யோகத்தில் இருக்கிறது. அதுவே சாந்தி ரூபமாகவும், பரமானந்த ரூபமாகவும் இருக்கிறது.

“சாந்தி ரூபாத் பரமானந்த ரூபாச்ச” என்பது நாரத பக்தி சூத்திரம். இதற்கு உரையெழுதப் போந்த சுவாமி ஹர்ஷானந்தர் “மற்ற சாதனை மார்க்கங்களில் இலக்கை அடைந்தபின் சாந்தியும் ஆனந்தமும் இருக்குமே ஒழிய முயற்சியில் ஆனந்தம் இருக்காது.

ஆனால் பக்தி சாதனை அவ்வாறல்ல, “இதயத்தில் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கையான அன்பை தெய்வத்திடமே திருப்புவது பக்தி. ஆதலால் அது எப்பொழுதும் ஆனந்தத்தையும் சாந்தியையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது” என்றார்.

இதனை இன்னும் விரிவாக விளக்குகிறார் திருமூலர்.

பற்பல யோக நெறிகளில் நிற்கக் கூடியவர்கள், அவர் காலத்தில் சாரணர் – சித்தர் – சமாதியர் & தத்துவச் சாத்தியர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், இறைவன் மீது பக்தி பெருகி அதனால் ஆனந்தத்தில் லயித்திருந்தவர்கள் என்கிறார்.

“சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாந்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள் தன்மையோரே”

என்பது திருமந்திரம்.

இவர்களைத் தனித்தனியே சீலத்தர் -நோன்பினர் – செறிவினர் – அறிவினர் என்றும், ஒருங்கே பூரண ஆனந்த அருளாளர் என்றும் குறிப்பது உரை மரபு.

இலக்குவனிடத்தில் பக்தி யோகமும் கர்ம யோகமும் வெளிப்படுகின்றன. அவன் பர்ண சாலை அமைத்த நேர்த்தியைப் பார்த்து, “இதனை நீ எப்போது கற்றனை” என்று இராமன் வியக்கிறான். தேவை ஏற்பட்ட போது தெப்பம் செய்யும் திறனும் பெற்றிருந்தான்.

“மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாஇல் எம்பிகை சாலை அமைத்தன
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே

என்று சிந்தித்து, இளையவர் பார்த்து இரு
குன்று போலக் குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இதுபோல் என்றான்
துன்று தாமரைக் கண்பனி சோர்கிறான்.”

இராமனின் நீங்காத பொன் வண்ண நிழலாய் பக்தி யோகத்தில் கனிந்தான். பொன்மானைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு வந்த ஐயமும், சீதை கடத்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு ஒரே மாதிரியான குண்டலங்கள் சிதறிக் கிடப்பதால் பல தலைகள் கொண்ட ஒருவனே இச்செயலைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதும் இதனை உறுதி செய்கின்றன. ஆனால், நுண்மான் நுழைபுலன் வாய்க்கப் பெற்றிருந்தும் எளிதில் உணர்ச்சி வயப்படுபவனாகவும் எளிதில் புண்படுபவனாகவும் இருந்தான்.

நால்வகை யோகங்களும் கனிந்த நிலையில் இருந்தவனாய் இலக்குவனைக் கொள்ள இயலாது. ஆனால் கர்ம யோகமும் பக்தி யோகமும் கனிந்திருந்தது.

குகன் பக்தி யோகத்தின் சாரம். வீடணன், நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறி பற்றியே இராமனை முதலில் சார்கிறான். இராமனின் பெருங்குணங்களும் பேரருளும், வீடணனை பக்தனாய் பரிணமிக்கச் செய்கின்றன.

நீதிக்குப்பின் பாசமா, பாசத்துக்குப்பின் நீதியா என்னும் போராட்டத்தில் நீதிக்கு முதலிடம் கொடுத்தாலேயே வீடணனை இறுக்கமான குணத்தினன் என எண்ணிவிடலாகாது.

இதயத்தை இளகச் செய்யும் பக்தி வீடணனைக் குழைத்தது என்பதாலேயே “அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்” என்கிறான் இராமன்.

அச்சத்தாலும் அவ நம்பிக்கையாலும் பீடிக்கப்பட்டே தன் வாழ்வின் முக்கிய தருணங்களைக் கடந்த சுக்ரீவன் இதில் எந்தப் பகுப்பிலும் வரமாட்டான். தன் சகோதரன் என்று குறிக்கும் போது கூட “குன்று சூழ்வான் மகன்” என்றே இராமன் குறிப்பிடுவது, பொருள் பொதிந்த சொற்றொடர் ஆகும்.

குகனையும் வீடணனையும் தன் சகோதரன் என அறிவித்தான் இராமன். சுக்ரீவனை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, தன் இறுதி நிமிடங்களில் வாலி இராமனிடம் பரிந்துரை செய்கிறான்.

“அனுமன் என்பவனை – ஆழி
ஐய – நின் செய்ய செங்கைத்
தனுஎன நினைதி மற்றென்
தம்பிநின் தம்பி ஆக
நினைதி”

என்கிறான்.

தம்பியர் பட்டியலில் சுக்ரீவனை இடம் பெறச் செய்தது, இராமனின் பெருந்தன்மையும் வாலியின் பரிந்துரையும் ஆகும்.

பக்தியின் உச்சத்தில் இருந்தவன் பரதன், தன்னகங்காரம் துளிக் கூடத் தலைகாட்டாத தன்மை அவனுடையது.

பொதுவாக, ஒருவரது சிறப்பினைக் குறிப்பதென்றால், சிகரம், இமயம் என்றெல்லாம்தான் உவமை சொல்வார்கள். ஆனால் பரதனை,

“தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும்
பள்ளமெனும் தகையானை பரதன் எனும் பெயரானை”

என்கிறார் கம்பர்.

ஒருவருக்கு “பள்ளம்” என்பது புகழ்ச்சொல் ஆனது வியப்புகுரியது. வைணவ மரபில் பரதாழ்வாரின் பக்தியைப் போலவே இன்னோர் ஆழ்வாரின் பக்தியும் பள்ளமடை என்று பாராட்டப்படுகிறது. அவர், ஆண்டாள் நாச்சியார்.

ஏனைய ஆழ்வார்கள் திருமாலை நாயகி பாவத்தில் பாடியிருப்பினும் ஆண்டாளின் நாயகி பாவம் இயல்பாகவே பொருந்துவதால் பள்ளத்தை நோக்கிப் பாய்கிற வெள்ளம் போன்றது என்று சொல்லப்படுவதுண்டு-.

எனவேதான் பரதன் மூன்று இராமர்களுக்கு சமமென்று வசிட்டனாலும், ஆயிரம் இராமர்களுக்கு சமமென்று குகனாலும், எண்ணில் கோடி இராமர்களுக்கு சமமென்று கோசலையாலும் பாராட்டப்படுகிறான்.

இம்மூன்று நிலைகளில் மட்டுமின்றி, குகனின் உள்ளத்தில், இயல்பாக எழுந்தவொரு பாராட்டு, பரதனின் சீர்மைக்கு பவித்திரமான சான்றிதழாகத் திகழ்கிறது.

பரதன் படையெடுத்து வந்ததாக எண்ணி போர்க்கோலம் பூண்டு வருகிற குகன் நெருங்கி வந்து பார்க்கும் போது தான் எண்ணியது தவறோ என்று சிந்திக்கிறான். “பரதனைப் பார்த்தால் இராமனைப் போல் தோன்றுகிறான். அருகே நிற்பவன் இலக்குவனைப் போல் தோன்றுகிறான். துன்பமே வடிவாக, இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுதபடி நிற்கின்றனர்” என்று எண்ணும் குகனின் கள்ளமில்லாத உள்ளத்தில் “பளிச்” ஓரெண்ணம் எழுகிறது.

“நம்பியும் என் நாயகளை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியை ஒக்கின்றான் தவவேடம் தலை நின்றான்
துன்பமொரு முடிவில்லை திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு”

இதில், “தவவேடம் தலைநின்றான்” என்னும் சொற்றொடர் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

இதற்கு முன்னர் குகன் உள்ளத்தில் ஆழப் பதிந்தது இராமனின் தவவேடம் ஆகும். அந்தத் தவவேடம், தந்தையிடம் சிற்றன்னை கேட்ட வரத்தினால் இராமன் பூண்டதன்றி, தானாக முன்வந்து பூண்ட வேடமன்று.

ஆனால், இராமன் கானகம் ஏகினான் என்று கேள்வியுற்ற மாத்திரத்தில் தவக்கோலத்தைத் தானாக விரும்பி ஏற்றவன் பரதன்.

இலக்குவனுக்காவது, ஆணை பிறப்பிக்க சுமித்திரை இருந்தாள். ஆனால், யார் தடுத்தும் கேளாமல் தானாக முன்வந்து பரதன் தவக்கோலம் மேற்கொண்டதால், இராமனை விடவும் பரதனுக்கே அந்தக் கோலம் மிகவும் பொருந்தியது என்பது இதன் பொருளாகும்.

பரிபூரண பக்தியில், தன் வழிபாட்டுக்குரிய நாயகனையும் விஞ்ச முடியும் என்பதற்கு பரதன் சான்றாகத் திகழ்கிறான்.

இன்றைய உலக வழக்கில், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களை “கர்ம யோகி” என அழைக்கிறார்கள். செயல்களில் ஒன்றிச் செயல்படுவதன் மூலம் விடுதலைக்கான வழியைத் தேடுபவர்கள் கர்ம யோகிகள். “செயல்களை ஈடுபட்டுச் செய்வது மட்டும் கர்ம யோகத்திற்கான இலக்கணம் ஆகாது. அந்தச் செயலின் இலட்சியம் முக்தி பெறுவதாக இருக்க வேண்டும்” என்பார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தியானத் தன்மை இடம்பெறும்போது அந்த நாடு இயல்பாகவே வளமுடன் திகழ்வதுடன், அத்தகைய மனிதர்கள் செய்யும் செயல்களில் ஓர் ஒழுங்கும் நிதானமும் உருவாகிறது.

“தவம்செய்வார் தம்கருமம் செய்வார், மற்றெல்லாம்
அவர்செய்வார் ஆசையும் பட்டு”

என்ற குறளை ஆராய்வோம்.

இன்று பற்பல அலுவலகங்களில் செயல்திறன் பெருக அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் தியானப் பயிற்சியைக் கட்டாயமாக்குகிறார்கள். நல்ல பலனும் கிடைக்கிறது.

இதன் காரணம், தங்கள் நிறுவன மேம்பாட்டுக்காக அவர்களைப் பயிற்சி மேற்கொள்ளச் செய்தாலும் தவப் பண்புகள் அந்த மனிதர்களின் இயல்பிலேயே ஒரு நிதானத்தையும் பக்குவத்தையும் தருகிறது. அவர்கள் செய்யும் அன்றாடப் பணிகளே கர்மயோகம் ஆகிறது.

“பண்புடையார் பட்டுண்டுலகம்” என்பது தவப் பண்பைத்தான் குறிக்கிறது போதும்!

யோகத்தின் நால்வகை நன்னெறிகளும் ஒருவரிடத்திலேயே முழுமைப்பெற்று ஒளிர்ந்தமைக்கு இராமாயணத்தில் அனுமனே சான்று.

முதல் முதலில் அந்தணக் கோலத்தில் இராம இலக்குவரை எதிர்கொண்ட அனுமனைப் பார்த்து “நீ யார்” என்று வினவுகிறான் இராமன்.

விடை கூறும் முகத்தான், நான்கு வரிகளைப் பேசுகிறான் அனுமன். அதில் முதல் இரண்டரை வரிகள், இராமன் யாரென்று இராமனுக்கு சொல்கின்றன. மீதமுள்ள ஒன்றரை வரிகள், தன்னைப் பற்றியதாய் இருக்கின்றன.

“மஞ்செனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கெல்லாம்
நஞ்செனத் தகையதாகி, நளிரிடும் பணிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்து அலர்ந்த செய்கண்ண & யான் கற்றின் வேந்தர்க்கு
அஞ்சனை வயிற்றின் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்.”

இது சொல் வினயம் மட்டுமல்ல, கனிந்த ஞானத்தின் பக்குவம் என்பதைக் கண்டு கொள்கிற இராமன்.

“நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும்
கோட்படாய் பாதமே ஐய! குரக்குரு கொண்டது”

என்று இலக்குவனிடம் வியந்து பேசுகிறான்.

அனுமன் பேசத் தொடங்கும் முன்னர், “நீ யார்” என்று இராமன் கேட்டது வினவுதலின் பாற்பட்டது. அவன் பேசிய பிறகு “யார் சொல் இச்சொல்லின் செல்வன்” என்று கேட்டது வியப்பின்பாற்பட்டது. “விரிஞ்சனோ விடைல்லானோ” என்னும் வியப்பு.

இராமனுக்கு, முதன் முதலில் ஒரு ஞானயோகியாக அறிமுகமாகிறான் அனுமன். இராம நாமத்தையே பற்றுக்கோடாக கொண்டு கடல் கடக்கும்போது கனிந்து கரையும் போதும் பக்தி யோகியாகப் பரிமளிக்கிறான். ஏவிய பணிகளை இடை நிறுத்தமின்றி செல்வனே செய்து முடிக்கையில் கர்ம யோகியாகிறான்.

காற்றின் மைந்தன் என்பதற்குக் காற்றை வசப்படுத்தியவன் என்று பொருள். பிராணாயாமம் முதலிய க்ரியா யோகங்களில் கரை கண்டவனாக அனுமன் விளங்குகிறான்.

இந்த நால்வகை யோகங்களும், முழுமை பெற்றுத் துலங்கிய பாத்திரமாக அனுமன் திகழ்வது பற்பல கோணங்களிலும் பார்த்து அனுபவிக்கத் தக்கது.

யோகியர் அருளிய கருவிகள்

இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல. மந்திர உபதேசங்களும் கருவிகள்தாம்; வரங்களும் கருவிகள்தாம்.

யோகத் திருக்கோயிலாகிய தியானலிங்கத்தில் அனைத்து சமயத்தினரும் வருகை தருவதுண்டு. அங்கே திருநீறு வைக்கப்பட்டிருக்கும். பிற நாட்டிலிருந்து அங்கே வரும் மற்ற சமயத்தினருக்கு அது குறித்துக் கேள்விகள் எழுவதில்லை.

ஆனால் இந்து சமயத்தினர் சிலர், “எல்லோருக்குமான இடம் என்றால் திருநீறு எதற்காக” என்று கேட்பதுண்டு. அதற்கு சத்குரு சொல்லும் பதில், “திருநீறு என்பதை ஒரு மதத்தின் அடையாளமாகப் பார்க்கிறீர்கள். ஆனால் நம் மரபில் எல்லாமே முக்திக்கான கருவிகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன.

“ஏழு சக்கரங்கள் கூடும் இடங்களில், தொப்புள், மார்பின் நடுப்பகுதி, தொண்டைப்பகுதி, புருவமத்தி போன்ற இடங்களில் திருநீறு அணிந்து கொண்டு சக்திமிக்க தலம் ஒன்றில் நுழைகிறீர்கள் என்றால், அங்கிருக்கும் அதிர்வுகளை ஏற்பதற்கு திருநீறு துணை செய்கிறது.

“இந்த மரபில் எல்லாமே காரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களை நீங்கள் உணர கடவுளும் ஒரு கருவியே” என்பார் சத்குரு.

தாடகை வதம் முடிவடைந்த பின் விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலங்கள் வழங்குகிறார். அந்தப் படைக்கலம் எத்தகையது என்று சொல்ல வருகிற கம்பர்,

“மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்தன சடையன், வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன,
படைக்கலம் அருளினானே”

என்கிறார்.

பசித்திருப்பவர்களைக் கண்டு “உணவுண்ண வாருங்கள்” என்று பரிவு ததும்ப சடையப்ப வள்ளல் சொல்லும் சொல்லே போன்ற “படைக்கலங்கள்” என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும். இது குறித்துப் பின்னர் விரிவாகக் காண்போம்.

விசுவாமித்திரர் இராமனுக்கு அருளிய 50படைக்கலங்களின் பட்டியல் வான்மீகத்தில் உள்ளதாகக் குறிக்கிறார் முனைவர் தெ.ஞான சுந்தரம் அவர்கள்
.
தான் வழங்கிய படைக்கலங்களுக்கு உரிய மந்திரங்களை விசுவாமித்திரர் ஓத, அந்த மந்திரங்கள் வந்து இராமனைப் பணிந்தன. தெளிந்த மனமுள்ளவன் செய்த நல்வினைப் பயன்கள், மறு பிறவியில் அவனைத் தேடி வருவது போல அவை வந்தன என்கிறார் கம்பர்.

“ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல் தன்பால்
ஊறிய உவகையோடு உம்பர்தம் படைகள் எல்லாம்
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல் வந்த அன்றே,”

பாலைவனப் பயணத்தில் சிரமங்கள் தெரியாமல் இருக்க, இராம இலக்குவருக்கு பலா&அதிபலா மந்திரங்களை விசுவாமித்திரர் உபதேசித்ததாக பாலகாண்டம் சொல்கிறது. வெப்பம் தெரியாமல், தாகம் தோன்றாமல் காக்கும் மந்திரங்கள் அவை.

உபதேசம் என்பது பற்றி சுவாமி சச்சிதானந்தர் அழகானதொரு விளக்கத்தை வழங்குகிறார்.

“உப & தேசு – அம்”

“துணை வரும் அழகிய அம்சம் என்பதே உபதேசம். ஒருவருக்கு வாழ்க்கைப் பாதையிலும் ஆன்மிகப் பாதையிலும் துணை வரும் அதிசய அம்சங்கள், மந்திரங்கள்.”

அதே போல, ஆரண்ய காண்டத்தில் அகத்தியர் இராமனுக்குப் படைக்கலங்கள் வழங்குகிற செய்தியும் இடம் பெறுகிறது.

திருமால் வைத்திருந்த வில், அம்புகள், அம்புப் புட்டில் ஆகியவற்றை வழங்கிய அகத்தியர், இந்த உலகம் முழுவதையும் தராசின் ஒரு தட்டில் வைத்து, மறு தட்டில் வைத்தால் உலகம் முழுவதும் ஒப்பென்று சொல்லிவிட முடியாத பெருமையும் கொண்ட வாளையும், திரிபுரங்களை எரிக்கையில் சிவபெருமான் கைவசம் இருந்த அம்பையும் வழங்கினார்.

“இவ்வில் இது இவண்மேல்நாள்
முழு முதல்வன் வைத்துள்ளதும். மூவுலகும் யானும்
வழிபட இருப்பது; இது தன்னை வடிவாளிக்
குழு வழு இல புட்டிலொடு கோடி என் நல்கி

இப்புவனம் முற்றுமொரு தட்டிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்புருவு பெற்ற அரன் மேருவரை வில்லாய்
முப்புரம் எரித்த தன மொய்க்கணையும் நல்கோ”

இங்கே விசுவாமித்திரன் அருளிய படைக்கலங்கள், அகத்தியர் அருளிய படைக்கலங்கள் அகத்தியர் அருளிய படைக்கலங்கள் அனைத்திற்கும் இருக்கும் தனித்தன்மையே அவை மந்திரப் பிரதிட்டை செய்யப்பட்டவை என்பதாகும்.

ஓர் உதாரணத்தைக் கொண்டு, இதனை விளக்கலாம். ஒருவர் தன் அலுவலகத்தில், தனக்கு வந்த கடிதத்தில் இருந்த ஊசியை அகற்றும்போது அந்த ஊசி முனையில் விரல் அழுந்தி விடுகிறது. பதற்றத்தில் இழுக்கும் போது காயமாகிவிடுகிறது.

அந்தக் காயம் ஆறவேயில்லை என்று மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர், ஓர் ஊசியைக் கொண்டு வருகிறார்.

இந்த மனிதருக்கோ கலக்கம். ஏற்கெனவே ஊசி கிழித்த காயம். ஆறாமல்தான் மருத்துவரிடம் வந்திருக்கிறோம். மருத்துவரோ அதை விடப் பெரிய ஊசியுடன் வருகிறார் என்று பதறுகிறார்.

குத்திய ஊசி குறையுடைய ஊசி, மருத்துவர் கொண்டு வருவதோ மருந்து. மனிதர்கள், பிறர் உயிரை எடுக்கப் பயன்படுத்தும் சராசரி ஆயுதங்கள் உயிரை மட்டுமே எடுக்கும்.

மந்திரம் பிரதிட்டை செய்யப்பட்ட ஆயுதங்களோ, பிரயோகிப்பவனுக்கு மட்டுமின்றி, யார்மேல் அந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகிறதோ அவர்களுக்கு நன்மை செய்ய வல்லன.

இந்த ஆயுதங்களை யார் பிரயோகிக்கிறார்களோ அவர்களுடைய வெற்றிக்கும், யார்மேல் இந்த ஆயுதங்கள் எய்யப்படுகின்றனவோ அவர்களின் முக்திக்கும் வழிசெய்யக் கூடிய சக்தி கொண்டவை.

அதனால்தான், படைக்கலங்களின் தன்மையை, பசிபோக்கும் கருணைச் சொல்லுக்கு நிகராக கம்பர் குறிப்பிடுகிறார்.

“மண்ணவர் வறுமை நோய்க்கு
மருந்தன, சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன
படைக்கலம்”

என்பதை இந்தக் கண்ணோட்டத்தில் உணர்வதே பொருத்தம்.

திருமாலின் திருக்கரத்தில் இருக்கும் சக்கரத்திற்கு சுதர்சனம் என்று பெயர். சு&தர்சனம் என்றால் கண்களுக்கு இனியது என்று பொருள். அழிக்கும் கருவியாக மட்டும் இருந்தால், அது அழகியதென்று வர்ணிக்கப்படாது. மாறாக, தீயவருக்கும் முக்தி அருளும் சாதனமாகத் திகழ்வதால் சுதர்சனம் எனப்படுகிறது.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பரம்பொருளின் அம்சமாகிய இராமனுக்கு பிரதிட்டை செய்யப்பட்ட கருவிகள், மந்திரங்கள், தேவையா என்று தோன்றலாம்.

அதுவும், இராமனைப் பொறுத்தவரை மந்திரப் பிரதிட்டை செய்யப்பட்ட ஆயுதங்களோ, அவனுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களோ, அவனுக்குப் பெரிதாகப் பயன்படுவதை விட எதிராளிக்கே பயன்பட்டன. இராமனுக்கு அவை தேவையில்லை என்பதைக் காட்டச் சான்றாக ஒன்று. பாலைவழியின் சிரமங்கள் தாக்காதிருக்கும் பொருட்டு, பலா&அதிபலா மந்திரங்களை விசுவாமித்திரர் உபதேசிக்க மிகவும் பணிவுடன் இராம இலக்குவர் கேட்டுக் கொண்டனர்.

எரிந்தெழு கொடுஞ்சுரம் இனையது எய்தலும்
அருந்தவன் இவர் பெரிது அளவில் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்
வருந்துனர் சிறிது என மனத்தின் நோக்கினான்.

நோக்கினன் அவன்முகம், நோக்க, நோக்குடைக்
கோக்குமரரும் அடிகுறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ்வழி
ஊக்கினன் அவை, அவர் உள்ளத்து உள்ளினார்.

இதில் நுட்பமானதொரு சித்திரிப்பும் உள்ளது. ஒரு குருவின் நோக்கிலேயே அவர் ஓர் உபதேசத்தை அருள முற்படுகிறார் என்பதைக் கூர்மையாகச் சீடர்கள் உணர்கிறார்கள். பாதம் பணிகிறார்கள். உபதேசமும் அருளப்படுகிறது.

ஆனால், வனம் புகுந்த பின்னர், யமுனை ஆற்றில் நீராடிவிட்டு சித்திர கூடத்தை நோக்கிச் செல்லும் பாதையில், பாலை நிலமொன்று எதிர்படுகிறது. இங்கே பலா&அதிபலா மந்திரங்களை இராமனோ, இலக்குவனோ உச்சரிக்கவில்லை.

சீதைக்கு இந்தப் பாலை வழி சிரமமாய் இருக்குமே என்று இராமனின் திருவுள்ளம் ஒரு விநாடி எண்ணிற்று.

அவ்வளவுதான்.

கதிரவன், நிலவுபோலக் குளிர் கிரணங்களைக் கொட்டத் தொடங்கினான். காய்ந்த மரங்கள் தழைத்தன. கனல் வீசிய காடெங்கும் தாமரைக் காடுகள் பூத்தன. மேகங்கள் பொழிந்தன. பசியும் பகைமையும் அகன்றன. புலிகளின் மடியில் மான்குட்டிகள் பாலருந்தின. நஞ்சு கக்கும் நாகத்தின் பற்கள் அமுதம் சிந்தின.

நீங்கல் ஆற்றலள் சானகி என்று அண்ணலும் நினைத்தான்
ஓங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான்
தாங்குவெங்கடத்து உறுவைகள் தழைகொண்டு தழைத்த
பாங்கு வெங்கனல் பங்கய வனங்களாய் பரந்த

குழுமி மேகங்கள் குமுறின, குளிர்துளரி கொணர்ந்த
முழுவில் வேடரும் முனிவரின் முனகிலர், உயிரைக்
கழுவி நின்றன பாஇல பகைஇல, தனிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்டாம்.

இராமன் திருவுள்ளத்தில் எழுகிற ஓர் எண்ணமே பாலைநிலத்தைச் சோலை நிலமாக்கும் என்றால், விசுவாமித்திரர் உபதேசித்த மந்திரங்களை ஒரு மரியாதை கருதி இராமன் கேட்டுக்கொண்டான் என்றும், நான்முகன் உருவாக்கிய பலா, அதிபலா மந்திரங்களை விசுவா மித்திரர் சொல்ல, வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக இருந்தான் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

விசுவாமித்திரருக்கு முன்னரே இராமனுக்குப் பல மந்திரங்களை உபதேசித்தவர் வசிட்டர். குலகுரு என்னும் முறைமையில், அவர் உபதேசித்தவற்றை இராமன் கேட்டுக் கொண்டான்.
ஆனால் எப்போதும் நிதானமிழக்காத வசிட்டர் எதிர்பாராத விதமாக ஓரிடத்தில் சற்றே எல்லைமீறப் போய், இராமன் தன் சுயத்தை உணர்த்த வேண்டி வந்தது.

அயோத்தியா காண்டத்தில், திருவடி சூட்டி படலம். இராமனை அயோத்திக்குத் திரும்பச் சொல்லி பரதன் வாதிடுகிறான்.

அதில், ஒரு கட்டத்தில் வசிட்டர் விவாதத்தின் உள்ளே நுழைந்து இராமனை நாடு திரும்புமாறு வற்புறுத்தத் தொடங்குகிறார். இத்தனைக்கும் அயோத்தியிலிருந்து புறப்படுகிற போதே, இதே சர்ச்சையில் வசிட்டருக்குத் தக்க பதில் தந்துவிட்டுத்தான் இராமன் புறப்பட்டான்.
இப்போது, ஆர்வம் மீதூற வசிட்டர் திருமாலின் அவதாரமாகிய இராமனுக்கே வராக அவதாரத்தைப் பற்றியும், திருமால் உலகைப் படைத்ததையும் சொல்லத் தொடங்கினார்.

இராமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். தாய் ஏவ தந்தை சொல்லை மதித்து, கானகம் ஏகிய இராமனிடம் “தாய் தந்தை இருவரையும் விட பல மந்திரங்களை உபதேசித்த குருவே உயர்ந்தவர். எனவே உனக்கு உபதேசித்த நானே உயர்ந்தவன். நான் சொல்வதைக் கேள்” என்று வசிட்டர் பேசத் தொடங்கிவிட்டார்.

“இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறுஇல் இவ்விஞ்சைகள்
பதலிய இருமையும் பாக்க, பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்”

இங்கே, இராமன் இறைவன் என்று தன் உள்ளுணர்வில் அறிந்திருந்தாலும், வெறும் சிந்தனை அடிப்படையில் வசிட்டர் பேசுவதைச் சுட்டிக் காட்டுவது போல “ஆறிய சிந்தனை அறிஞ” என்று வசிட்டரை அழைத்து இராமன் பேசத் தொடங்குகிறான்.

ஒரு ஞானியை அறிஞரே என்று அழைப்பது அவருக்குப் பெருமை சேர்க்காது. ஒரு தேசத்தின் பிரதமரை, பாராளுமன்ற உறுப்பினரே என அழைப்பது போல்தான் இது. இராமன் இறைவன் என்பதை உணர்ந்தும் கூட வெறும் அறிவு கொண்டு வசிட்டர் பேசுவதை இது குத்திக் காட்டுகிறது.

அடுத்த பாடலில், தன் சுயம் வெளிப்படும் விதமாய் இராமன் அழுத்தமாகப் பேசுகிறான்.
“சான்றோர் சொன்னார்கள், ஆசிரியர் சொன்னார்கள், தாய் சொன்னார்கள், புதல்வர்கள் சொன்னார்கள் என்று காரணம் காட்டி செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியுமா” என்று கேட்கிற இடத்தில் வசிட்டரை “தேன் தரு மலருளோன் சிறுவ” என்று விளிக்கிறான்.
“பிரம்மனின் மகனே” என வசிட்டரை அழைப்பதன் மூலம் பிரம்மா தன் மகன் என்பதை இராமன் வசிட்டருக்கு நினைவூட்டுகிறான்.
என் பெற்றோர் சொல்லை ஏற்பதாக நான் ஒப்புக் கொண்டபின் நீ வந்து கட்டளை போடுகிறாய். இனி நான் என்ன செய்யட்டும் என்று நீயே சொல்” என்று வசிட்டரைக் கேட்க வசிட்டர் வாயடைத்துப் போகிறார்.

“முன்உறப் பணிந்தவர் மொழியை யான்என்
சென்னியில் கொண்டு, அதுசொல்லென் என்றதன்
பின்னுறப் பணித்தனை பெருமையோய் எனக்கு
என்இனிச் செய்வது? உரைசெய் ஈங்கு”
என்றான்.

மந்திரங்கள் அனைத்தும் தீண்டிட ஏங்கும் திருவடிகள் கொண்ட இராமனுக்கு, தான் மந்திரங்கள் உபதேசித்தாய் சற்று மேவிப் பேசிய வசிட்டருக்கு உண்மை நினைவுக்கு வரும் விதமாய் இராமன் கடிதோச்சி மெல்ல எறிந்த இடம் இது.

மந்திரங்கள் படைக்கலங்கள் என்பதையும், இராமனிடம் முனிவர்கள் தந்தவை எல்லாம் எய்கிறவன் வெற்றிக்கு மட்டுமின்றி எய்யப்படுபவன் முக்திக்கு உதவுபவை என்பதை மேற்கண்ட சான்றுகள் வழியே நாம் உணரலாம்.

அரக்கரின் செயல்கள் அழியவேண்டும் என்பதில் அந்த யோகியருக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் அமரர்கள் மீது விருப்போ, அரசர்கள் மீது வெறுப்போ கொள்ளாமல் நடுநிலையில் நிலைத்த திருவுள்ளம் கொண்டவர்கள் இவர்கள்.

இந்தியாவின் ஹாக்கி விளையாட்டு அணியின் தேசிய வீரர்கள், பல்லாண்டுகளுக்கு முன்னர் சத்குரு அவர்களிடம் யோகப் பயிற்சிகள் பெற வந்தனர்.

பின்னர் பாகிஸ்தானுடன் அவர்கள் மோதிய முக்கியமான போட்டி ஒன்றில் சத்குரு பார்வையாளராகப் பங்கேற்க வேண்டுமென்று விரும்பினர். சத்குருவும் சென்றிருந்தார்.

இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் பதற்றமாக உணர்ந்த ஒருவர், “சத்குரு! நீங்கள் ஏதாவது செய்து நாங்கள் வெல்லும்படி செய்து விடக்கூடாதா?” என்று கேட்டார்.

சத்குரு சொன்னார், “நீங்கள் என்னிடம் யோகப் பயிற்சிகள் பெறவந்தீர்கள். பாகிஸ்தானிய வீரர்கள் என்னிடம் வரவில்லை. அதற்காக உங்களை நேசிப்பதைவிட அவர்களைக் குறைவாக நேசிக்கிறேன் என்று பொருளல்ல” என்றார்.

வேண்டுதல்-வேண்டாமை இல்லாத யோகியரும் ஞானியரும் நடமாடி இராம காதைக்குப் பொலிவு சேர்க்கிறார்கள்.

ஆயுதங்களுக்கும் யோகியருக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிப் பேசும்போது பரசுராமரை மறந்துவிட முடியாது.

‘உனக்கு வலிமை இருந்தால், என் வில்லைக் கையில் வாங்கு’ என்று இராமனிடம் சொன்னவர், தன் தவம் முழுவதையும் இராமனின் கணைக்கு இலக்காக்கி நின்றார்.

தவத்தின் பயனை ஒரு யோகி தான் அனுபவிக்க முடியும். அவ்வாறே இறைவனுக்கு அர்ப்பணிக்க முடியும். சிறுவன் என்று கருதி வந்த இராமனே இறைவன் என்பதை உணர்ந்து அவன் புகழைப் பரசுகிற இராமன் ஆனார் பரசுராமர். அந்த சம்பவம் விளைவித்த தாக்கத்தை இந்த நூலின் நிறைவில் காண்போம்.

இதன்பிறகு மீண்டும் தவம் செய்யப் போகிறார். பரசுராமரின் இழந்த தவவலிமையை மீட்க தவம் செய்வதே வழி.

விசுவாமித்ரர் கூட தன் சினத்தால் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கிவிட்டு, அதில் இழந்த வலிமையை மீட்க தவவாழ்வைத் தொடர்ந்தார்.

இவ்வளவு ஏன்? இராமனுக்கே ஒரு கட்டத்தில் இப்படி ஒருநிலை ஏற்படுகிறது.

யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் சில வினைக்கட்டுகளிலிருந்தும், நாம் செய்த சில செயல்களின் பாதிப்புகளில் இருந்தும் நம்மை விடுவிக்க வல்லவை.

இதற்கு கம்பனில் ஓர் இடம். வாலி வதம் வழி, இராமன் வாலிக்கு முக்திதான் கொடுத்தான். ஆனால், தான் வந்ததோ, மானுட வடிவில் என்பதை அவன் மறக்கவில்லை.

எனவே, ஒரு மனிதனாக, வில்லுக்குரிய அறத்தைக் கடந்துதான் கடவுளாக, தன் கடமையை இராமன் நிறைவேற்ற முடிந்தது.

அதன்மூலம் சில பாதிப்புகள் தனக்கு ஏற்படுவதாக இராமன் எண்ணுகிறான் போலும்!
இராமனை சுக்ரீவன், தான் அரசுப் பொறுப்பு ஏற்கும் வேளையில் கிட்கிந்தை வர இறைஞ்சுகிறான். ஆனால் இராமனோ, “இல்லறத்துக்குரிய நெறியை இழந்தும், வில்லறத்துக்குரிய நெறியைத் துறந்தும் இருக்கும் இந்த நிலையில், குற்றங்கள் நீங்குமாறு நான் தவம் செய்யப் போகிறேன்” என்கிறான்.

“இல்லறம் துறந்தி லாதோர்
இயற்கையை இழந்தும், போரின்
வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு
இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; புரிந்து நின்ற
தீமைகள் தீருமாறு
நல்லறம் தொடர்ந்த நோன்பின்
நவையற நோற்பல் நாளும்”

என்று சொல்கிறான் இராமன்,

எளிய யோகப் பயிற்சிகளை செய்து முடிக்கும் போது கூட, உள்ளே ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் இன்றும் உணர முடியும். அவை நம் செயல்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் நீக்கமே.

இது யோக ரகசியங்களில் ஒன்று.

யார் யோகி? – 2

இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை

“ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்”

என்கிறார் கம்பர்.
வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம் என்று பெயர். பேரின்பத்தில் பொருந்துதலாகிய இறையின்பத்திற்கும் போகம் என்று பெயர் “சிவபோகம்” என்பது ஓர் உதாரணம். சிவ போகத்துக்கான பாதை சிவயோகம் ஆகும்.

உலகியல் ஆனாலும், அருளியல் ஆனாலும், எய்த விரும்பிய இன்பத்தை அடைவதற்கான வழியில் செயல்பட்டு, அந்த இன்பத்தை அடைதல் என்பது ஒரு பயணம்.

எனவே யோக நெறியின் உச்சநிலை, இறைவனுடன் இணைவது, அதற்கான பாதையில் முயலுமொரு சாதகன், தன்னுடைய பருவுடல், சூட்சும உடல், சக்தியுடல் போன்றவற்றில் ஓர் ஒருமையைக் காண்கிறான்.அந்த ஒருமையை எய்திய ஞானியை குருவாகக் கொள்கிறான்.

தீவிர சாதனைகள் வழி அந்த இலட்சியத்தை எட்டுகிறான் என்பதை இராமன் – சீதை திருமணக் கோலத்திலும் கம்பர் நமக்கு நினைவுபடுத்துகிறார்.

இங்கே அடைய வேண்டிய போகமாக இராமனும், அடைவதற்கான வழியாக – யோகமாக -சீதையும் விளங்குவதைக் கம்பர் சுட்டுகிறார்.

தத்துவ மரபில் பெருமானை எட்டுவதற்கான பெருநெறியை அருள்பவளாக பிராட்டியே இருக்கிறாள். சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலை உண்டு.

இறைவனுடன் உயிரைக் கலக்கச் செய்து அந்தப் பேரின்ப யோகத்தை அருள்பவளாக சக்தி திகழ்வதை திருமூலர் சுட்டுகிறார்.

“போகஞ்செய் சத்தி, புரிகுழலாளடும்
பாகஞ்செய்து அங்கே பராசக்தியாய் நிற்கும்
ஆகஞ் செய்து ஆங்கே அடியவர் நாடொனும்
பாகஞ்செய் நடனம் படர்கிற கொம்பே

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்

ஆகிய திருமந்திரச் செய்யுட்களை இங்கே ஒப்பு நோக்கலாம்.
குறிப்பாக 1057ஆம் பாடலில், போகசக்தி பராசக்தியின் அம்சம் என்பதை திருமூலர் சுட்டுகிறார், சீதையும் வியூக நிலையில் திருமால் உடனுறை திருமகளின் அம்சம் என்பதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

திருநாவுக்கரசர் உலக வாழ்வின் இன்பங்களைக் குறிக்கையில்,

“துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ” என்பார். துய்ப்பன என்பவை, அனுபவிக்க வேண்டிய செல்வங்கள் மற்றும் உலக இன்பங்கள். உய்ப்பன என்பது, அதற்கான பாதை.

சிலருக்கு எல்லா வசதிகளும் கூடி குடும்பமும் நன்றாக அமைந்தால் “யோகக்காரர்” என்பார்கள். ஆனால் உலக வாழ்வின் இன்பங்களை உருவாக்கி, அவற்றை அடைவதற்கான பாதைகளை உருவாக்குவதோடு சிவபெருமான் நிற்பதில்லை.

உரிய பக்குவத்தில் அந்த இன்பங்களைத் துறக்கவும் துணை செய்கிறார்.

“துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ”
என்கிறார் திருநாவுக்கரசர்.

உலக இன்பங்களில் திளைத்தலும். இறை நாட்டம் முதிர்கிறபோது உலக இன்பங்களை விடுதலுமே வீடுபேறு என்கிறார் அவ்வையார்.

“ஈதலறம் தீங்கின்றி ஈட்டல் பொருள்
காதலிருவர் கருத்தொருமித் & தாதரவு
பட்டமே இன்பம்! பரனைநினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்பவீடு”
என்கிறார்.

இராம நாமத்திற்கும் இதுவே இலக்கணம் ஆகும். உலக வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளையும் செல்வங்களையும் தருவது, பாவங்களைச் சிதைப்பது, பிறவியும் மரணமும் இன்றி வினைத்தொகுதி தீர்ப்பது ஆகியன இராம நாமத்தால் நிகழ்பவை.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவ-மும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே “ராம” என்றிரண்டு எழுத்தினால்”

ராமநாமத்தின் மேன்மையினைச் சொல்வதுடன் அந்த நாமத்தை செபிக்கிறவர்கள் பெறும் சிறப்பும் இங்கு சுட்டப்படுகிறது.

போகமும் யோகமும் ஒத்தார் என்கிற உவமையோக நெறி சார்ந்தும், வாழ்வுநெறி சார்ந்தும் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

இது யோகத்தின் மையப் படிநிலை. யோகத்தின் உச்சப்படிநிலை என்றொன்று உண்டு. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஓர் அங்கமாக உணர்வது. உணர்வதென்றால், அனுமானமாக உணர்வதல்ல. அனுபவபூர்வமாக உணர்வது.

ஒவ்வோர் உயிருமே அப்படி உணர்வதற்கான சாத்தியக் கூறுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்!” என்று சொல்லப்படுவது பிரபஞ்ச ஒத்திசைவுக்கான கருவி கரணங்களுடன் படைக்கப்பட்டிருப்பதை உணர்த்துவதற்குத்தான்.

யோக மரபில், இது குறித்து தரப்படும் விளக்கங்களைப் பார்த்துவிட்டு, கம்பனில் அதற்கான சான்றையும் காண்போம்.

மைசூர் சாமுண்டி மலையின் குறிப்பிட்ட ஒரு பாறையில் என் குருநாதர் சத்குரு ஞானோதயமடைந்தார். அதே பாறையில் அவருடன் ஒரு நேர்காணல் நிகழ்த்துகிற பெரும்பேறு வாய்த்தது. அங்கே நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

“சத்குரு! இலட்சக்கணக்காகவர்கள் தங்கள் யோக வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்கள். ஒரே வகுப்பில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் பேர் கூட பங்கேற்பதுண்டு. அவர்கௌல்லாம் நீங்கள் தான் தங்கள் குருநாதர் என்பதை நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் ஒரே நேரத்தில் அத்தனை பேருடன் உங்கள் தொடர்பு எவ்விதம் அவர்களுடன் நீங்கள் எப்படித் தொடர்பில் இருக்கிறீர்கள்?” என்றேன்.

சிறுபுன்னைகைக்குப்பின் சத்குரு சொன்னார்; “உங்களுக்கு தான் இவ்வளவு பேர் இருக்காங்க, அவர் தனி, இவர் தனின்னு தெரியுது. அதனால அவர்வேற இவர் வேறனு தோணுது. நான் எல்லோரையும் என்னில் ஒரு பாகமா உணர்கிறேன். அதனாலே என்னை எப்படி நான் உணர்றேனோ அப்படியே எல்லோரையும் உணர்றேன்” என்றார்.
இதனை சத்குரு பிறிதோர் இடத்திலும் விரிவாக விளக்குகிறார்கள்:

“யோகா என்பது உடற்பயிற்சி அல்ல. யோகப் பயிற்சிகள் யோகாவின் ஒரு அம்சம் மட்டும் தான். இந்தப் பயிற்சிகள் நீங்கள் யோகநிலையை எட்டுவதற்கு உங்களுக்கு உதவும் ஒரு கருவி. அவ்வளவுதான். யோகா என்றால் “சங்கமம்” எது எதோடு சங்கமிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். நவீன விஞ்ஞானம், முழுப்பிரபஞ்சமும் ஒரேசக்தியின் அதிர்வு என்கிறது. அப்படியெனில் இங்கு எல்லாம் ஏற்கெனவே ஒன்றுபட்டுத்தான் இருக்கிறது. எதுவும் தனியாக இல்லை. மனிதனின் புரிதலில் மட்டும்தான் நீ, நான், அது, இது என பலவாறாகப் பிரிவினை இருக்கிறது. இப்படிப் பிரித்தறியும் நிலையில் இருந்து உங்கள் புரிதலை சற்றே உயர்த்தினால், இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்கும் நிலைக்கு வருவீர்கள். அந்நிலையில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்பதை நீங்கள் உணரத் துவங்குவீர்கள் இதுதான் யோகநிலை.

“ஒரு யோகி என்பவர். இந்த பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர். நவீன விஞ்ஞானம் எல்லாம் ஒரே சக்தி என்று சொல்கிறது. ஒரு விஞ்ஞானி அறிவின் அளவில், தான் செய்த ஆராய்ச்சி வாயிலாக இதைப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அதைப் பற்றிய அனுபவம் கிடையாது. மதம் சார்ந்த மனிதருக்கும் அதைப்பற்றிய எந்த அனுபவமும் இல்லை. அவர் அதை நம்புகிறார். அவ்வளவு தான். ஒரு யோகி என்பவர் ஆராய்ச்சி முடிவுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ ஏற்பதில்லை. அவர் அறிந்துகொள்ள விரும்புபவர், எல்லாவற்றையும் அவரது அனுபவத்தின் மூலமாக அறிந்து கொள்ள விரும்புபவர் அப்படி அவர் அறிந்துகொண்டு விட்டால், அவரை “யோகி” என்கிறோம்.

“இப்போது உங்கள் அனுபவத்தில் உங்களை சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஜடப்பொருள்கள் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒரு பாகமாக, உங்கள் கைகளில் உள்ள ஐந்து விரல்களை எப்படி உணர்கிறீர்களோ அதேபோல் எல்லாவற்றையும் உங்களுக்குள் ஒரு பாகமாக, நீங்கள் உணர்ந்தால், நீங்களும் யோகி. அந்நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு நீதிபோதனைகள் தேவைப்படாது. நீங்கள் இந்த மனிதரிடம் அன்பாக இருங்கள். அவரைத் துன்புறுத்தாதீர்கள். அவரைக் கொல்லாதீர்கள். அவரிடம் திருடாதீர்கள் என்றெல்லாம் உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. இதுதான் யோகா. ஆக, யோகா என்பது தத்துவமோ, கருத்தோ, நம்பிக்கையோ அல்ல.”
இந்தத் தன்மைக்கு அயோத்தியா காண்டத்தில் வனம்புகு படலத்தில் ஒருவரை உதாரணமாகக் காட்டுகிறார் கம்பர்.
இலக்குவனோடும் சீதையோடும் இராமன் வனம்புகும் போது அவர்களை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருகிறார். அவரை கம்பர் இப்படி அறிமுகம் செய்கிறார்.

வேள்வி வல்லார், பிரம்மனால் படைக்கப்பட்ட உயிர்களை எல்லாம் தன் உயிராகவே பாதுகாக்கிறவர். எழுலகங்களையும் திருமாலின் துணையின்றி, தன் சங்கல்பத்தாலேயே படைக்க வல்லவர்.

“செந்தழல் புரிசெல்வன் திசைமுக முனிசெவ்வே
தந்தன உயிரெல்லாம் தன்னுயிர் எனநல்கும்
அந்தணன், உலகேழும் அமைஎனின். அமரேசன்
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் செல்வான்”

இதில், “திசைமுக முனி செல்வே தந்தன உயிரெல்லாம் தன்னுயிர் என நல்கும் அந்தணன்” என்பது. பரத்துவாசர் யோகநிலை என்னும் ஒருமைநிலை உற்றதை உணர்த்துகிறது.

“எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை தாராய் பராபரமே” என்கிறார் தாயுமானவர்.

தன்னில் இயங்கும் அதே உயிர்ச்சக்தி, ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான அத்தனை உயிர்களிலும் இயங்குவதை உணர்வதே ஒருமை நிலை ஆகும்.

அதனால்தான், பரதனின் பெரும்படைக்கு உணவு படைக்க பரத்துவாசர் எண்ணியதுமே சுவர்க்கத்திலிருந்து பல்வகை உணவுகளையும் அமுதத்தையும் கொண்டு வந்து அரம்பையரே பரிமாறினார் என்று பாடுகிறார் கம்பர்.

“பிற உயிர்களின் பசியை பரத்துவாசர் தன் பசியாய்
உணர்ந்ததாலேயே சுவர்க்கத்தின் வாயில் திறந்தது.”

பிறரைப் பார்த்து கைகுவித்து வணக்கம் சொல்வதன் அடிப்படையும் இதுவே. எதிரில் உள்ள மனிதர் பற்றிய நம் முன்முடிவுகளைக் கடந்து, அவருக்குள் தெய்விகம் உயிர்ச்சக்தியாய் தொழிற்படுகிறது என்கிற உணர்வுடன் வணக்கம் சொல்லும்போது, மனதில் இதுவரை உணராத அமைதியையும் பணிவையும் உணர இயலும்.

ஒருமை நிலை நோக்கிய உயிரின் பயணத்தில் இதுவே முதல்படி ஆகும்.

எது யோகம்?

யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர்.

நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும் பொருந்தி நிகழ்கணத்தின் சாரம் பருகி வாழும் எவரும் யோகியரே! பாம்பணைப் படுக்கையில் முழுதுணர் அறிதுயிலில், நிகழ்கணத்தின் நிலைபேறாய் விளங்கும் இறைவனின் அவதாரம் நிகழுங்காலை, யோகியர் அவரவர் நெறிநின்று, அவதார நோக்கம் நிறைவேறத் துணை புரிந்தார் என்பதை இராமகாதை காட்டுகிறது.

இன்னொரு புறம், தன்னிடம் முரண்பட்டிருந்தும், தகுதியுள்ள உயிர்களுக்கு, நேர்ந்த பிறப்பின் நிறைவுக் கணத்திலேனும், அந்த ஒருமையை அருளிய பரமதயாளனின் பெருங்கருணைத் தன்மையையும் இராமகாதை காட்டுகிறது.

சம்பவங்களின் சாகசப் பின்னலே, இதிகாசத்தின் இன்றியமையாத அம்சம். புறத்தே உரையாடல்கள், உறவாடல்கள், களவாடல்கள், யுத்தங்கள் என எத்தனையோ நிகழ்ந்தாலும் இறைவன் திருமுன்னர், அடியவனாகவோ  கொடியவனாகவோ சென்று சேரும் உயிர்களுக்கு முக்தி அருளப்படுகிறது. அந்த உயிர் விழிப்புணர்வின் உச்சத்தில் விகசித்துக் கரைகிறது.

பரமாத்மாவுடன் சிற்றுயிர் ஒருமையை உணரும் உன்னத சம்பவங்களை கம்பன் காட்டுகிற போது, காவியத்தில் புறவயமாய் நிகழ்ந்தவற்றைவிட சூக்கும நிலையில் நிகழ்ந்தவை எத்தகைய அற்புதங்கள் என்னும் வியப்பு மேலிடுகிறது.

கம்பனில் யோகியர் செயல்படும் தன்மைகளையும், யோகநிலை அருளப்படும் தன்மைகளையும் அறிய முற்படுவதே இந்த நூலின் நோக்கம்.

யோகா என்றாலே விதம்விதமான ஆசனங்களைத்தான் மனம் முதலில் கற்பனை செய்து பார்க்கும். அவை, யோக நிலையை அடைவதற்கான முயற்சியில் ஒரு படிநிலை மட்டுமே ஆத்ம சாதகன் ஒருவன், தன் அவயவங்களைப் பயிற்சி. யோக நிலையை எட்டுவதற்கான முனைப்புக்குத் தடையாகும் பொறி புலன்கள் யோகப் பயிற்சியால் ஆன்மிகப் பயணத்திற்குத் துணையாக மாறுகின்றன.

இந்தப் பக்குவத்தை அருள்பவன் இறைவன் என்கிறார் திருவள்ளுவர்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்”

பொறி புலன்களைப் பக்குவப்படுத்தும் யோகக் கலை நீடுவாழும் நிலையையும் தருவது. உடம்பினை ஓம்புவதன் அவசியத்தைத் திருமூலர் உணர்த்தும் போது உடம்புளே உத்தமன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடமபினை யானிருந்து ஓம்புகின்றேனே

உடம்பை இழுக்கென எண்ணாமல், அதனை இறைவன் உறையும் ஆலயமாகக் கருதிப் பேணும்போது, ஆன்மிகப் பாதைக்குத் தடைசெய்த ஐந்து புலன்களே, அந்தப் பாதையில் விளக்காக மாறுகின்றன என்பதும் திருமூலர் வாக்கு.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே”.

பொறி புலன்கள், புறக்காட்சிகளிலும் புற நிகழ்வுகளிலும் தோய்ந்து, அதன் வழி மனதை சலனப்படுத்தக் கூடியவை. இந்தப் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் போது, மனமானது சமநிலை அடைகிறது. மனப்போராட்டம் அடங்குகிறது.

கம்பர், ஆற்றுப் படலத்தின் முதல் பாடலிலேயே இதனை விளக்குகிறார். நதிக்கரை நாகரிகம் என்பது நம்முடைய மரபு. சரயு நதிக்கரையின் நாகரிகம் யோக நாகரிகம் போலும்! மனப்போராட்டத்தை ஏற்படுத்தும் ஐம்புலன்களாகிய அம்புகள் நெறிமாறிச் செல்லாத வாழ்வுடையது கோசல நாட்டின் நாகரிகம் என்கிறார் கம்பர்.

“ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண்எனும்
பூசல் அம்பும்,நெறியின் புறம் செலாக்
கோசலம்”

என்கிறார்.

“பொறிகளின் மீது தனியரசாணை” என்பார் மகாகவி பாரதி. ஆன்ம விடுதலையே உயிர்க் கொள்கை என்று வந்து விட்டால், பொறிகளின் மீது அந்த இலட்சியம் மட்டுமே தனியாக ஆட்சி செலுத்த வேண்டும்.

சலனம், சபலம், என்று கலவை உணர்வுகள் கூட்டாகச் செயல்படவிடாமல், கோசல நாட்டில் வாழ்பவர்கள், தங்கள் ஐந்து பொறிகளையும் நெறியின் புறம் செல்லாத வண்ணம் தனியரசு செலுத்தினர் என்பது ஆற்றுப் படலத்தின் முதல் பாடலிலேயே புலனாகிறது.

யோகம் என்னும் சொல் பொருந்துதல், ஒருமை, -ஐக்கியம் ஆகிய பொருள் தருவது எனினும் யோகத்திற்கான பாதைகள் பல. அவற்றுள் க்ரியா யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்த நால்வகை யோகங்களின் வழிநின்று, தங்கள் ஆத்ம சொரூபத்தை உணர்ந்தவர்கள் அனைவருமே ஞானியர் தாம். தங்கள் ஆத்ம சொரூபத்தில் தாங்களே லயித்திருக்கும் ஞானியர் ஒரு தேசத்தில் திருவடிகள் பதித்தாலே அங்கே வளங்கள் பெருகும். அப்படியரு ஞானியை கம்பர் காட்டுகிறார். தன் மெல்லிய இயல்புகளால் மான் போன்ற வடிவம் கொண்ட வராகிய கலைக்கோட்டு முனிவரே அவர். கலைக்கோட்டு முனிவரைப் பற்றிச் சொல்லும் போது, “சக மனிதர்களை விலங்குகள் என்று கருதும் தன்மையர்” என்பதை கம்பர் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

“பாந்தளின் மகுட கோடி பரித்தபார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கென்று உன்னும் மனத்தன்”

“ஓத நெடுங்கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கெனவே உன்னும்
கோதில் குணத்து அருந்தவன்”

இத்தகைய முனிவர் வருகையால், மழை வளம் குன்றிய தன் தேசத்தில் மழை பொழியும் என்பதால் உரோமபதன் என்னும் அரசன் தன்னுடைய மண்ணில் கலைக்கோட்டு -முனிவரை எழுந்தருளச் செய்வது எப்படியென்று சிந்திக்கிறான்.
அவனுடைய தேசத்தில் உள்ள பெண்கள் சிலர், தங்களால் இயலுமென்று சொல்லி அந்த -முனிவரைத் தேடிச் செல்கின்றனர். மனிதர்களை விலங்குகள் என்று கருதக்கூடிய கலைக்கோட்டு முனிவர், அந்தப் பெண்களைத் தன்போல் முனிவர்கள் என்று கருதி மரியாதையுடன் நடத்துகிறார். அவர்கள் அழைப்புக்குக் கட்டுப்பட்டு உரோமபதனின் நாட்டுக்கு வருகிறார். உடனே மழை பொழிகிறது.

ஒரு ஞானி இருக்கும் தேசத்தில் பகை இருக்காது. மழை பொழியும். அந்த தேசத்தில் இருப்பவர்களுக்கு மனக்குறையும் நேராது என்கிறார் திருமூலர்.

“திகைக்குரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்குரியானொரு வழி இருக்கில்
பகைக்குரியார் இல்லை. பார்மழை பொழியும்
அகக்குறை கேடில்லை அவ்வுலகுக்கே”
என்பது திருமந்திரம்.

கலைக்கோட்டு முனிவரின் இயல்பு நுணுகி ஆராயத்தக்கது.

“சேய் போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞானம் தெளிந்தவரே”

என்பார் பட்டினத்தார்.

மனிதர்களை விலங்கு போல் கருதுபவர் என்னும் போது, நமக்கு வள்ளலார் காலத்தில் வாழ்ந்த ஞானி ஒருவரின் தன்மை நினைவுக்கு வருகிறது. அவர், தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு போகிற மனிதர்களையெல்லாம் கண்டு, “நாய் போகிறது” “நரி போகிறது” “புலி போகிறது” என அவரவர் இயல்புகளுக்கேற்பச் சொல்வாராம். வள்ளலார் சென்ற போது “இதோ மனிதன் போகிறான்” என்றாராம்.

இந்த இரண்டு சம்பவங்களையும் எண்ணிப் பார்க்கையில், தவத்தன்மை இல்லாதவர்களை மனிதர்கள் என்றே கணக்கிலெடுக்காத ஞானியரின் இயல்பு புலப்படுகிறது. கலைக்கோட்டு முனிவரைக் காணச் சென்ற பெண்கள் தவத்தன்மை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.

யோகம் தியானம் போன்றவற்றை நவீனயுக மனிதர்களில் பெரும்பாலோர் மேலோட்டமாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். யோகா செய்வது உடல் நலனுக்காக; தியானம் செய்வது மனநலனுக்காக என்பதுதான் அந்த மேலோட்டமான புரிதல்.

என் குருநாதர், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களிடம் யோகா மூலமாக உடல் நலம் பெறுவது, மன அமைதி பெறுவது எல்லாம் நடக்குமா என்றொருவர் கேட்டார். அதற்கு சத்குரு சொன்ன பதில், “உடல் நலம் சிறப்பது, மனநலம் சிறப்பது என்பவையெல்லாம் யோகாவின் பலன்கள் அல்ல. அவையெல்லாம் யோகாவின் பக்க விளைவுகள்” என்பதாகும். அப்படியானால், யோகம், தியானம் ஆகியவற்றின் நேரடி பலன் என்ன? இதை கம்பர் ஒன்றரை வரிகளில் விளக்குகிறார்.

ஒரு குரு செய்யும் பெருங்கருணையானது, ஓர் உயிரின் வினை நீக்கத்திற்கு வழிகாட்டுவது. நாம் முன்னரே கண்டது போல ஐம்புலன்கள், நம் வாழ்வில் நல்வினையும், தீவினையும் நுழைவதற்கான வாயில்களாய் நிற்கின்றன.

குருவின் அருளும், ஆன்மீக நெறியில் அவர் காட்டும் வழிகளான யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் முயற்சிகளும், ஆத்ம சாதகனின் தீவிரத்திற்கேற்ப வினைச்சுமை குறையவோ வினைகள் அற்றுப் போகவோ செய்கின்றன.

திருவருளும் குருவருளும் நிகழ்த்துவது வினை நீக்கமே. ஆன்மிக நெறியில் ஒருவர் நடையிடத் தொடங்கும் போது திடீரென்று குடும்பத்தில் எல்லாமே எளிதாய் நடக்கிறதென்றால், அதுவரை அவற்றுக்குத் தடையாய் இருந்த வினைகள் நீங்கத் தொடங்குகின்றன, என்று பொருள்.

கலைக்கோட்டு முனிவரும் வசிட்டரும் இணைந்து தசரதன் அவையில் தேன்றுகிற காட்சியைப் பாடுகிறற கம்பர், “குற்றங்களை விளைவிக்கும் வினைகளை வளர்ப்பதே தன் கள்ள குணமாய் கொண்டு உழலும் ஐம்புலன்களாகிய அசடர்களின் செயலை அற்றுப் போகச் செய்யும் வசிட்டரும், மறைகளின் வடிவமாகவே விளங்கும் கலைக்கோட்டு முனிவரும் அரசவை பொலியும்படி தோன்றினர்” என்கிறார்.

“கசட்டுறு வினைத்தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும் அருமறை வடிவு போன்ற
விசிட்டனும் வேந்தவை பொலிய மேவினார்”
என்கிறார்.

ஞானியர் வருகை வான் மழையைத் தருகிறது. அவர்தம் அருளும், வழிகாட்டுதலும், வினைகளை அற்றுப் போகச் செய்வதோடு, குறிப்பிட்ட சங்கல்பத்துடன் அவர்கள் நிகழ்த்தும் வேள்விகளோ, நிறுவும் எந்திரங்களோ, உபதேசிக்கும் மந்திரங்களோ, அந்த சங்கல்பங்கள் நிறைவேறத்துணை செய்கின்றன என்பதை, தசரதனுக்குப் புதல்வர்கள் தோன்ற கலைக்கோட்டு -முனிவர் நிகழ்த்திய வேள்வியும், வேள்வியின் பயனும் உணர்த்துகின்றன.

ஐம்புலன்களை “ஐவர்” என்று சொல்லும் முறை வழியே, அவர்கள் ஐந்து மனிதர்களுக்கு சில சமயம், ஐந்து அரக்கர்களுக்கு சமம் என்பதை அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

ஆன்மத் தேடல் உள்ள உயிரை அலைக்கழிப்பதில் இந்த ஐவரும் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்கள், அவர்களே கூடுதல் வலிமை யோடும் திகழ்கிறார்கள், என்கிறார் திருநாவுக்கரசர்.

“மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டளவு உயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி உகக்கிறேன், உகவா வண்ணம்
ஐவரே அகத்தே வைத்தீர், அவர்களே வலியர், சால
செய்வது ஒன்றறிய மாட்டேன், திருப்புகல் ஊரனீரே”

என்கிறார்.

இந்த முனிவர்கள் இருவரும், ஐவரை அறுவர் ஆக்குவர் என்னும் கம்பரின் சொல்நயம் நினைந்து மகிழத்தக்கது. பல்லாண்டுகளுக்கு முன்னர் கோவையில் கம்பன் கழகக் கவியரங்கம். தலைமைக் கவிஞர், அருட்கவி அரங்க சீனிவாசன். நாங்கள் ஐந்து கவிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பாட வந்திருந்தோம். தலைமைக் கவிதையில் அருட்கவி, “அரங்கிலே கவிஞர் ஐவர் என்னுடன் சேர்த்து அறுவர். உங்களை எழுவர் ஆக்காமல் இருப்பர் ஆக்குவர்” என்றார். கம்ப நாடனால் ஆட்கொள்ளப்பட்டவர் ஆயிற்றே அவர்!

திருவருளும் குருவருளும் நிகழ்த்தும் அரும்பணி, வினைநீக்கம் என்பதை கம்பர் மிகத் தெளிவாக உணர்த்தும் இன்னோர் இடம். ஆரண்ய காண்டத்தில் விராதன் வதைப் படலம்.

குபேரனின் சாபத்தால் அரக்கவுரு கொண்ட கந்தர்வனாகிய தும்புருவே, விராதனாய் உலகில் உழல்கிறான். இராமனின் திருவடித் தொடர்பால் அவனுக்கு விமோசனம் என்று குபேரன் உணர்த்தியிருந்தான். அதே போல் நிகழ்கிறது. அந்த அனுபவத்தை விராதன் சொல்வதாய் கம்பர் எழுதிக் காட்டும் மூன்று வரிகள் மிகவும் முக்கியமானவை,

“கள்ள மாய வாழ்வெலாம்
விள்ள ஞானம் வீசுதாள்
வள்ளல்”

மனம்போன போக்கில் அரக்க வாழ்வு வாழ்ந்த விராதனுக்கு இராமனின் அருள் தாமே வந்து வெளிப்பட்டது எங்ஙனம்? இதற்கு கம்பர், கவிக்கூற்றாகவே அரியதொரு விளக்கத்தை வழங்குகிறார்.

பொறிபுலன்களில் ஈடுபட்டு, திசைமாறிப் போன புத்தி உடையவன் தான் விராதன். ஆனால் அந்தப் புத்தியால் கூட உணரமுடியாத விதமாக, உள்ளுணர்வில் இறையுணர்வு தூண்டப்பெற்றது. கந்தருவனாய் இருந்த காலத்தில் திருமால் மீது கொண்டிருந்த பக்தியும் துணை செய்ய, இவையெல்லாம், தான் வினைநீக்கம் பெறுவதற்குரிய தருணம் இது என்னும் அறிவு வரும்படி உதவினவாம்.

“பொறியின் ஒன்றி, அயல்சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலைநின்ற நினைவு உண்டதனினும்
பிறவில் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்
அறிவு வந்துதவ நம்பனை அறிந்து பகர்வான்.

பெரும்பாலான மனிதர்களுக்கு முன்னரே இறையணுக்கமோ, குருஅணுக்கமோ வாய்க்கப் பெற்றிருப்பின், இந்தப் பிறவியிலும் அந்த அருட் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அதிலிருந்து சட்டென்று மீளும் விதமாய் அருள் அவர்கள் வாழ்வில் இறங்குகிறது.

விராதன் சொல்லும் இரண்டு வாக்கு மூலங்கள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. “சாபம் வந்துற்ற காலத்திலிருந்து இதுவரை அடியவனாகிய நான், நல்வழியை நாடவேயில்லை. தீமையையே தேடினேன். ஆயினும் என் பழைய நல்வினை என்னைத் தூண்டியதால் வேதங்களைச் சூடியவன் பாதங்கள் தீண்டி இன்று தேறினேன்” என்கிறான்.

“தூண்ட நின்ற தொன்மைதாய்
வேண்ட நின்ற வேதநூல்
பூண்ட நின்ற பொலம்கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்”

இதற்குச் சில பாடல்கள் முன்னதாக, விராதன் தன் துதியில் இன்னொரு செய்தியைச் சொல்கிறான்.

“யாரையயும் ஒப்புரைக்க முடியாத ஒருவனே! என்னுடைய முந்தைய தவப்பேற்றால் நீ பாற்கடலை விட்டு, என்னை அணுகியதால் இந்தப் பிறவியைக் கடந்தேன். இனி பிறவாத நிலையையும் பெற்றேன். என் நல்வினை – வினை இரண்டையுமே உன் தருவடிகளால் துடைத்தாய்” என்கிறான்.

ஒப்பு இறையும் பெறவரிய ஒருவா! முன் உவந்துறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால்
இப்பிறவிக் கடல் கடந்தேன். இனிப் பிறவேன், இருவினையும்
துப்புறழும் தீர்ந்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ”

எனவே விராதன் வதைப் படலத்தில் இராமனுக்கு இரண்டு வேலைகள். ஒன்று, தன் திருவடித் தொடர்பால் சாபம் நீக்கி அவனை மீண்டும் கந்தர்வனாக்குவது; இன்னொன்று அரக்க வடிவில் விராதன் சேர்த்த தீவினைகளையும், கந்தர்வனாய் இருந்த போது சேர்த்த நல்வினைகளையும் தீர்த்து முக்தி கொடுப்பது. அதிலும், தன் வினைகளை அறுக்க வந்த இராமனுடன் போரிடுவதால் ஒரு தீவினை ஏற்படுமே அதையும் சேர்த்தே அறுத்தது!
முக்தி வாயிலில் நிற்கிற போதும் அந்த கந்தர்வனுக்குள் நன்றியுணர்வின் தீவிரம் மெல்லிய நகைச்சுவையாய் வெளிப்படுகிறது.
விராதன் என்னும் அரக்க வடிவில், தேடிக் கொண்ட தீமைகள் தனது சொந்தத் திறமையால் தேடிக்கொண்டவையாம். “அந்தத் தீமையை எல்லாம் அறுக்க வந்த இராமனே! உன்னிடம் முட்டாள்தனமாக மோதியதை பொறுத்தருள் வாய்” என்பதை இறுதிச் சொல்லாய்ச் சொல்லி முக்தியில் கரைகிறான்.

“திறத்தின் வந்த தீதெலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை, ஊழியாய்
பொறுத்தி என்று போயினான்”

உடல் பிணியும் மனப்பிணியும் அகல்வதற்காக யோக வகுப்புகளில் சேர்பவர்கள், அறிந்து அறியாமலும் தங்கள் பிறவிப் பிணி அகலும் நெறியில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பணம் எனும் அருவம்

currency-notes_647_110816100549கறுப்புப் பணம் பதுக்கலுக்கும், கள்ளப் பணம் புழக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கை, தற்காலிக சிரமத்தையும் நீண்ட கால நன்மையையும் தரவல்லது!

இத்தகைகைய தொடர் நடவடிக்கைகள் விலைவாசியையும் பெருமளவு குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் “பணம்” என்றால் என்ன என்பதை இந்தியர்கள் அனுபவ ரீதியாய் உணர்ந்து கொண்டார்கள்.

1. எதிர்பாராத சூழலில் கையில் பணமில்லையே ஓரிரு நாட்கள் சமாளிக்க முடியும்.
2. உண்மையில், அன்றாட செலவுக்கான பணத்தேவை மிகவும் குறைவு.
3. பணம் என்பது உருவமுள்ளதல்ல.. அருவமானது.

பழைய பாடல் ஒன்றுண்டு.

“ஓரிடந்தனிலே நில்லாது உலகினிலே
உருண்டடோடிடும் பணம் காசெனும்
உருவமான பொருளே”

ஆனால் பணத்திற்கு உருவமில்லை. இன்றைய பொருளாதார சூழலில், வங்கியின் பண அட்டைகளும், கடன் அட்டைகளுமே பல்வேறு வணிக நடவடிக்கைகளை இயக்கவல்லது.

ஒரு நிறுவனம், தன் பணியாளர்களின் சம்பளத்தை நேராக அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துகிறது.

அவர் வீட்டு வாடகை & வீட்டுக்கான பொருட்கள் வாங்கிய தவணைக் கட்டணம் & அலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை வங்கிக்கு நேரடியாக மாற்றம் செய்துவிடுகிறார்.

வீட்டுக்கு வேண்டிய மளிகைகள், குடும்பத்தின் பயணம், உணவகம், பிள்ளைகள் கல்விக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் அவரால் அட்டையை பயன்படுத்த முடிகிறது.

எனவே உங்கள் பணத்தைப் பாராமலேயே பணத்தைக் கையாள்வதற்கான வாய்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது உங்களை நீங்களே இன்னொரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். யாராவது பணத்தைப் பார்த்ததுண்டா?

உங்கள் பையிலுள்ள, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டைப் பாருங்கள் அதில் என்ன எழுதியிருக்கிறது?

“இதை வைத்திருப்பவருக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் தர சம்மதிக்கிறேன்” என எழுது ரிசர்வ் வங்கி கவர்னர் கையெப்பமிட்டுள்ளார்.

அதாவது இது இரண்டாயிரம் ரூபாயல்ல.. இரண்டாயிரம் ரூபாய்க்கான உறுதிப் பத்திரம்!!

இதை எடுத்துக் கொண்டு போய் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் தந்து, “எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டால் அவர் எதைத் தருவார்?

பணம் ஒருவகை அருவம். ஒருவகை நம்பிக்கை. ஒருவகை மாயை. ஒருவகையில் பேருண்மை. பணத்தின் மதிப்பு மாறுவது. மதிப்போடு வாழ்வதே மாறாதது.

கம்பனை அறிதல்

(தமிழுக்குப் புனைபெயர் கம்பன் & கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரையை முன்வைத்து)

hqdefaultபெருங்காவியங்கள் உருவாகும் வேளையில் அதற்கான நோக்கத்தையும் காவிய ஆசிரியர்கள் அறிவிப்பார்கள்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதலும்”
என, இளங்கோவடிகள், தான் பாட்டுடைச் செய்யுள் நாட்டிட விழைந்தமையின் நோக்கத்தை விளம்புவார்.

தன் படைப்பின் நோக்கம் கண்ணன் மீதுள்ள பக்தியே என்பது வில்லிப்புத்தூரார் வாக்கு.

“மன்னு மாதவன் சரிதம் இடையிடை மன்னுதலால்” என்பார் அவர்.

இராமன் என்னும் நாயகப் பாத்திரம் வழியாய் வெளிப்படும் விழுமியங்களைச் சுட்டவும், செயல் வழியே ஒருவனின் மாண்பினை உலகம் உணரும் விதமாய் வாழும் முறையைப் போற்றவும் கம்பன் முற்படுகிறான்.

தன் காவியத்தை “நடையில் நின்றுயர் நாயகன்” சீர்மையை பாடுவதாகப் பேசுகிறான்.

“காசில் கொற்றத்து இராமன் கதையை
ஆசை பற்றி அறையலுற்றேன்”
என்கிறான்.

அறத்தின் நிலைபேற்றுத் தன்மையை நிறுவவே கம்பன் காவியம் பாடினான் என்பதை கவிப்பேரரசு வைரமுத்து தன் கட்டுரையில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

பல்லாண்டுகளுக்கு முன்னர்; கம்பனைப் பற்றிப் பாடிய கவிதை ஒன்றில்,

“நெறிகேட்ட தேவதாசி நிலைவந்து சேர்ந்த நாளில்
சரியென்று சொல்லச் சோழன் சட்டங்கள் செய்த நாளில்
ஒருவனுக்கொருத்தி என்ற உயர்வேதம் தந்த உன்னைக்
கருவிருந் தீன்ற தாயின் கால்களை வணங்க வேண்டும்”
என்று அவர் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தனிமனித அறம் & உறவியல் அறம் & சமூக அறம் & அரசியல் அறம் & போர்நெறி அறம் என்று பல்வேறு நிலைகளிலும் அறன் வலியுறுத்தும் களஞ்சியமாய் பரந்து கிடக்கிறது கம்பன் செந்தமிழ்.

காளிதாசனை விதந்தோதிய பண்டித ஜவஹர்லால்நேரு, கம்பனை அறிந்திராமையை, “விதியின் பிழையன்று & அவரிடம் கம்பனைக் கொண்டு சேர்க்காத நம் மதியின் பிழை” என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால் அதற்கு நேருவின் மனத்தடை கூடக் காரணமாக இருந்திருக்கக் கூடுமென்று கருதத் தோன்றுகிறது. கம்பனை அறிந்திருந்த ராஜாஜி நேருவுக்கு நெருக்கமாய் இருந்திருக்கிறார். கம்பனில் ஆழ்ந்த ரசிகமணி டி.கே.சி நேரு மனையில் விருந்துண்டிருக்கிறார்.

காந்தியடிகளுக்கே கம்பராமாயணம் சொன்ன டி.கே.சி நேருவிடம் கண்டிப்பாக கம்பன் குறித்துப் பேசியிருக்க வேண்டும். நேருவின் பண்டித மனோபாவம் பிறர் வழியே ஒன்றை அறிந்து கொள்வதா என்னும் மனத்தடையை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

சாகித்ய அகாதெமி கண்காட்சியன்றில், குறிப்பிடத்தக்க தமிழறிஞர் ஒருவரின் சிறந்த தமிழ் நூலை புரட்டிப் பார்த்துவிட்டு “இது நல்ல நூலாக இருக்க வாய்ப்பில்லை” என்று மட்டையடி அடித்தவர் அவர் என்றொரு செய்தியும் உண்டு.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி மீண்ட பிறகு அவரைத் தொடர்ந்து கொண்ட பேரறிஞர் ஜே.எம். நல்லுசாமிபிள்ளை, இராமானுஜரைப் பற்றி நீங்கள் உங்கள் உரைகளில் குறிப்பிட்டீர்கள். சைவ சிந்தாந்தம் பற்றிப் பேசவில்லையே” என்று கேட்ட போது “தான் அது பற்றி அறிந்திருக்கவில்லை” என ஒப்புக் கொண்டாராம் விவேகானந்தர்.

நேரு, கம்பனை அறிய முயற்சியும் செய்யவில்லை அறியக் கூடிய சூழல் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று தோன்றுகிறது.

“வரங்களெல்லாம் தவமிருந்த காரணத்தால் வந்துதித்த தேவமகன்” என்று நேருவைக் கொண்டாடிய கவிஞர் இதனை ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

காளிதாசன் & வான்மீகி & ஷேக்ஸ்பியர் ஆகியோருடன் ஒப்பிட்டு கம்பனின் மேன்மைகளை உணர்த்தும் இடங்கள் இந்தக் கட்டுரையின் மும்மணிகள்.
“தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை” என்று, வாலி எள்ளல் மொழியில் சொன்னதாய் கருதப்படும் இடத்தை, வாலி புரிதலின் பாற்பட்டுச் சொன்னதாய் கவிஞர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

வாலி & இராமன் வாக்குவாதம் இருவேறு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று காவிய நுட்பம் வெளிப்படும் புறவயமான வாதம். மற்றொன்று ஆன்மீக அடிப்படையிலான அகலாயப் பரிணாமம். (இதில், இரண்டாம் நிலைகுறித்து “கம்பன் காட்டும் யோகியர்” & நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்).

வான்மீக வாலியை விடவும் கம்பன் வாலி பண்பட்டவன் என்பதையும் கவிஞர் தன் கட்டுரையில் சுட்டுகிறார்.

மேக்பெத் சீமாட்டியையும் மந்தரை மூதாட்டியையும் ஒப்பிடடு கவிஞர் வைரமுத்து தீட்டும் ஒப்பாய்வுச் சித்திரம் புதியது.

பெயர்ச் சொற்களை பிறமொழிகள் சிதைக்கவியலும் வினைச் சொற்கள் சிதைக்கவியலாது என்பதும் புதிய கண்டறிதலே

தசரதன் என்று பாடுவதா தயரதன் என்று பாடுவதா என்று கம்பன் கூடக் குழம்பியதுண்டு.

“தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே”
என்ற கம்பனின் நான்கடிப் பாடலில் எட்டு வினைச்சொற்கள் பெய்யப்பட்டிருப்பதை கவிஞர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இராமன் அரசாளப் போகிறான் என்றதும்
“சுடர்க்கெலாம் நாயகம் அனையதோர் மாலை”யை கையேயி
கூனிக்கு நல்க, அந்த மாலையைப் பெற்றதும் கூனி
ஆடிய நாடகத்தின் வர்ணனையே அந்த நான்கடிப் பாடல்.

இந்தப் பாடலுக்குள் கம்பன் நிகழ்த்தும் மற்றொரு பெருமாயமும் ஒளிந்திருக்கிறது.

பாத்திரங்கள் உணர்ச்சி வாயப்பட்ட நிலையில் செயல்படுவதை சித்தரிக்கும் போது உயர் திணைக்குரிய “அன்”/ “அள்” விகுதிகளைக் கம்பன் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

இலக்குவன் மயங்கிக் கிடப்பதை இராமன் காண நேர்கையில் அவனுக்கு நேரும் சமன்பாட்டுக் குலைவினை

“உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும் ; உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் “இலக்குவா இலக்குவா” என்று அழைக்கும்” என்பான் கம்பன்.

அதிகாயன் இறந்த செய்தி கேட்டு இராவணன் பதைப்புறுவதை
“திசையினை நோக்கும் ; நின்ற தேவரை நோக்கும் ; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை மீசை கறுக்கொள உயிர்க்கும் பேதை
நசையிடைக் கண்டான்என்ன, நகும் அழும் முனியும், நாணும்”
என்று பாடுகிறான்.

ஆனால் மந்தரையோ உண்மையில் உணர்ச்சி வயப்பட்டு நடக்கவில்லை. சமன் குலைந்தாற்போல நாடகமாடுகிறாள்.

இராமனுக்கு அரசாட்சி என்றதும் கையேயி மகிழ்வாள் என்று நன்கறிந்தே அவளை மனம் திரியச் செய்ய மந்தரை சுயநினைவோடு நடத்தும் நாடகம் என்பதாலேயே “அள்” விகுதியிட்டு

“தெழித்தனள் ; உரப்பினள்; சிறுகண் தீ உக
விழத்தனள்; வைதனள் ; வெய்து உயிர்த்தனள் ;
அழித்தனள்; அழுதனள்”.

என்று கம்பன் அடுக்குகிறான். இதுவரை உளவியல் பாற்பட்டு சிந்தித்த இந்தப் பாடலை இலக்கணப் பார்வையில் கவிஞர் வைரமுத்து காட்டுகிறார்.

கம்பனை புதிய நோக்கில் அணுகவும் அறியவும் “தமிழுக்கு புனைபெயர் கம்பன்” எனும் கட்டுரை கைவிளக்காகத் திகழுமென்பதில் ஐயமில்லை.

இணைப்பு : தினமணி கட்டுரைக்கான சுட்டி.

www.epaper.dinamani.com/995325/Dinamani-Chennai/09112016#page/8/2

இப்படித்தான்

அர்த்தமில்லாத சோகம் உன்னை
அடிக்கடி சுற்றிக் கொள்கிறதா?
தொட்டதற்கெல்லாம் கோபம் வந்து
திடுமென்று சுடுசொல் விழுகிறதா?

உற்றவர் மத்தியில் இருக்கும் போதும்
உன்னிடம் மௌனம் படிகிறதா?
நெற்றி பாரமாய் நெஞ்சில் குழப்பமாய்
நித்தம் பொழுது விடிகிறதா?

கற்பனை பயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொள்முதல் செய்தால் இப்படித்தான்!
அற்ப விஷயங்கள் எதற்கும் நீயாய்
அலட்டிக் கொண்டால் இப்படித்தான்!

தீர்க்க இயலாச் சிக்கல்கள் எதுவும்
இந்த உலகத்தில் என்றுமில்லை!
பார்க்கப் பெரிதாய் தெரியும் விஷயம்
பக்கத்தில் போனால் ஒன்றுமில்லை!

சுருங்கிய முகத்தில் சிரிப்பை மலர்த்து
சுறுசுறுப்பாக எழுந்துவிடு
விரிந்தது உலகம்! விரிந்தது வாழ்க்கை
வருவது வரட்டும் துணிந்து விடு!

வாட்ஸப் பாட்டும் வாழைப் பழமும் (இணையதளம் திரைப்படம் & பாடல் உருவாக்கம்)

ராஜஸ்தானில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முத்தியார் அலி. புகழ்பெற்ற சூஃபி பாடகர். 2016 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியில் அவருடைய இசைநிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது.

அந்த விழாவுக்கு வந்திருந்த “இணையதளம்” திரைப்பட இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் முத்தியார் அலியை பாடவைக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்திருந்தனர்.

அதேபோல, இசையமைப்பாளர் அரோல் கரோலியிடமும் கேட்டுக்கொண்டதையட்டி, அவரும் முத்தியார் அலியுடன் தொடர்பு கொண்டு இசைவு பெற்றுவிட்டார்.

முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் அதீதமான ஈடுபாடு கொண்டவர்களின் போக்கை அவர்கள் குரலிலேயே விமர்சனம் செய்யும் ஒருபாடல். அவருடைய குரலில் ஒலித்தால் நன்றாக இருக்குமென இயக்குநர்கள் நினைத்தார்கள்.

அந்தப் பாடலுக்கான டிராக்கை இசையமைப்பாளர் அரோல் கரோலி முன்னதாகவே பாடி, முத்தியார் அலிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

வந்தபின் அவருக்கு வரிகளை சொல்லித் தரலாம் என்று முடிவு செய்தோம்.

தன் கிராமத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரங்கள் பயணம் செய்து, ஜெய்ப்பூர் வந்து விமானம் பிடித்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார் முத்தியார் அலி.

கிரீன்பார்க் விடுதியிலிருந்து ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அவர் வந்ததும் எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. பாடல் டிராக்கை பலமுறை கேட்டு முழுவதுமாக மனப்பாடம் செய்து வந்திருந்தார்.

“வாழ்க்கை” என்ற சொல் மட்டும் அவருக்கு வரவில்லை. காரணம், அவர்கள் மொழியில் “ழ” எனும் எழுத்தே இல்லை. நீண்ட நேரம் அந்த ஒற்றை எழுத்தை உச்சரிக்க முயன்றவர், “இந்த எழுத்தை பயிற்சி செய்ய எனக்கு நேரம் வேண்டும். நாளை ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார்.

இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், பயிற்சிக்காக அவருக்கு நான் சொல்லிக் கொடுத்த சொற்களில் ஒருசொல் அவருக்கு எளிதாக வந்துவிட்டது. அந்தச்சொல், “வாழைப்பழம்”.

“வாழ்க்கையில் வரும் “ழ”, வாழைப்பழத்தில் வரும் “ழ” இரண்டும் ஒன்றுதான் என்பதை அவர் புரிந்து கொள்ள மட்டுமே நேரம் ஆனது.

எனவே “ழ” கரத்தில் அவருக்கு குழப்பம் வரும் போதெல்லாம் “வாழைப்பழம்” எனும் சொல்லை அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன்.

பாடலின் முதல் சரணத்தில் வரும் அந்தப் பகுதியை அவர் பயிற்சி செய்வதையும் அவர் பாடுவதை இயக்குநர்கள் சங்கர், சுரேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் ரசிப்பதையும் காணொளிச் சுட்டிகளில் நீங்கள் காணலாம்.

தான் அறிந்திராத ஒரு மொழியில் பாடும்போது அதன் உச்சரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதையும் ஒற்றை எழுத்தைக் கற்றுக்கொள்ள ஒரு நாளையே ஒதுக்குகிறார் என்பதையும் கண்டபோது முத்தியார் அலி மேலிருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

கனவுகள் எல்லாம் கனிந்துவரும்

வாழ்க்கை என்பது திரைச்சீலை -நீ
வரைய நினைப்பதை வரைந்துவிடு!
தூரிகை உனது முயற்சிகள்தான் -ஒரு
தீண்டலில் கனவுகள் மலரவிடு!

கோடுகள் வளைவுகள் எல்லாமே – நீ
கொண்ட கனவின் வெளிப்பாடு!
மேடுகள் பள்ளங்கள் எல்லாமே – உன்
முழுமைக்கான ஏற்பாடு!

ஆகாயம் ஒரு திரைச்சீலை – அதில்
அக்கினிச் சூரியன் வரைகிறதே!
மாலை நேரத்து வெண்ணிலவு – அதில்
மாற்றங்கள் கொஞ்சம் செய்கிறதே!

நீயாய் வரையும் ஓவியத்தில் – உள்ள
நிறங்களைச் சொல்லும் நிகழ்காலம்!
ஆனாலும் சில மாற்றங்களை – அதில்
அவசியம் செய்யும் எதிர்காலம்!

சித்திரம் முழுமை அடையும்வரை – உன்
தூரிகை ஈரம் காயாது!
இலட்சியம் எட்டும் நாள்வரையில் – உன்
முயற்சிகள் தீரக் கூடாது!

வண்ணங்கள் சரியாய்க் கலந்தால்தான் – நீ
விரும்பும் வண்ணம் பிறந்துவிடும்!
எண்ணங்கள் தெளிவாய் இருந்தால்தான் – உன்
கனவுகள் எல்லாம் கனிந்துவரும்!