மரபின்மைந்தன் பதில்கள்

ஆன்மீகம் எல்லாவற்றையும் அதன் இயல்புப்படியே ஏற்கச் சொல்கிறது. உலகியல் வாழ்க்கையோ எல்லாப் போராட்டங்களிலும் வெல்லச் சொல்கிறது. இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா?
– உமா, கோவை.

ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களைப் பொறுத்தவரை உலகியலென்பதும் ஆன்மீகம் என்பதும் வெவ்வேறில்லை. உலகியலின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆன்மீகத் தன்மையுடன் செய்கையில் இந்த இடைவெளி அழிந்துவிடும்.
ஒரு போராட்டமான சூழல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போராட்டமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமே தவிர எதிர்ப்புணர்வு தேவையில்லை.
தனக்கு வந்துள்ளது போராட்டமான சூழல் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் அந்தப் போராட்டத்தை வெல்லும் சூழலை உருவாக்க முடியும். அதேநேரம் ஆன்மீகம் இன்னொன்றையும் செய்கிறது.
ஒரு போராட்டத்தில் வெல்வதற்கான முழு ஏற்பாடுகள் எவையோ அவற்றை முழுமையாகச் செய்யும் போதே அந்தச் செயலுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத பக்குவத்தை ஆன்மீகம் தருகிறது.
அவரவர் வயிற்றுப் பாட்டுக்கான ஆதாரச் செயல்களை செய்யும் போதும் அதிலிருந்து தள்ளிநின்று செய்யவும் முழுமையான திறமை வெளிப்படும் விதமாய் செயல்படவும் வேண்டிய வல்லமையை ஆன்மீகம் அளிக்கிறது.
உலகியல் முழுமைக்கான தேடல்.
ஆன்மீகம் முழுமைக்கான தீர்வு.

வாழ்க்கை மனதின் எல்லை!

ஒருவர் வரைந்தால் கோடு
ஒருவர் வரைந்தால் கோலம்;
ஒருவர் குரலோ பாடல்
ஒருவர் குரலோ புலம்பல்;
ஒருவர் தலைமை தாங்க
ஒருவர் உழைத்தே ஏங்க;
வரைவது விதியா? இல்லை
வாழ்க்கை மனதின் எல்லை!

எண்ணம் கூனிக் கிடந்தால்
எதற்கும் அச்சம் தோன்றும்;
மண்ணைப் பார்த்தே நடந்தால்
மனதில் சோர்வும் வாழும்;
கண்கள் மலர்த்தி உலகைக்
கண்டால் மாற்றம் தோன்றும்;
விண்ணைப் பார்க்கும் மலர்கள்
வெளிச்சம் குடித்தே ஒளிரும்!

தன்னை மதிப்பவர் தமக்கே
துணையாய் நிற்கும் உலகம்;
பொன்னை நிகர்த்த மனதில்
புதிதாய் சிந்தனை பொலியும்;
இன்னும் உயரும் எண்ணம்
இருந்தால் வெற்றிகள் தோன்றும்;
மின்னல் போன்றது வாழ்க்கை
மழையாய்ப் பொழியவும் வேண்டும்!