துளித்துளியாய்…

 

தென்றலில்லாத
இன்றைய புழுக்கத்தை
மௌனமாய் ஏற்பதன்றி
வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள்.

சூரியனுக்குத்தான் தெரியும்…
நிலாக்கால வெளிச்சத்தையும்
நட்சத்திரக் கண் சிமிட்டலையும்
பார்க்கக் கிடைக்காத வருத்தம்.

இன்னும் கொஞ்சநேரம்
பாடிக் கொண்டிருக்குமாறு
சொல்லியனுப்ப முடியுமா?
அந்த அக்காக் குருவியிடம்!

மிகுந்த பக்குவம்
வேண்டியிருக்கிறது.
சோகத்தை எதிர்கொள்வதற்கல்ல
ஆறுதல் சொல்வதற்கு.

பூக்களின் ராஜ்ஜியத்தில்
எப்படி முளைக்கலாம்?
பார்த்தீனியங்கள்!

பந்தயக் குதிரைக்குத்
தீவனம் சுமந்து,
வண்டியிழுக்கும்
நொண்டிக் குதிரை.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

எதிர்பார்ப்பு

 

கப்பல் வருகிற திசையைப் பார்த்துக்
கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம்.
வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித்
திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும்.
தொலைந்துபோன பிள்ளையைத் தேடும்
தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.
நிதான கதியில் நகர்ந்து வருகிற
கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும்.
“இதோ பார்! இதோ பார்!” என்கிற தவிப்பு
கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ-?
நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும்
நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும்.
கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும்.
தனது சுமைகளைத் தரையில் இறக்கத்
துறைமுகம் இருக்கும் திசையில் விரையும்.
பாதையில் வெளிச்சம் போட்டுக் கிடந்த
விளக்கில் அடடா வருத்தம் வழியும்.
இன்னொரு கப்பல் எதிர்ப்படுமென்று
கலங்கரை விளக்கம் காத்துக் கிடக்கும்.
கடற்கரைப் பக்கம் போகும்போது
கலங்கரை விளக்கைப் பார்க்க நேர்ந்தால்
பேச்சுத் துணையாய்ப் பக்கத்திலிருங்களேன்.

 

ஈகை

 

உன்… தோள்பை நிறையத் தங்கக் காசுகள்.
ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல்
விரல்களை இழுத்து வலியப் பிரித்து
எல்லோர் கையிலும் திணித்துப் போகிறாய்.
கொடுப்பது உனக்குக் கடமை போலவும்
வாங்கிக் கொள்பவர் வள்ளல்கள் போலவும்
பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத்
தங்கக் காசுகள் தந்து கொண்டிருக்கிறாய்.
திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து
தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே
பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய்.
கைகள் வழியக் காசு கொடுக்கையில்
ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால்
பதறி எடுத்துத் தூசு துடைத்து
வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுக்கத் தவிக்கும் கொடையுளம்
வெளிப்படும் விதமாய் வழங்கிச் செல்கிறாய்.
உனது பார்வையில் படும்படியாக
விரிந்து நீண்டு தவிக்குமென் விரல்களில் & ஒரு
செப்புக் காசாவது போட்டிருக்கலாம் நீ!

 

வெப்பம்

 

குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில்
உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன்
விறைக்கும் அளவு ஆனபின்னால்தான்
வெப்பம் தேடி வெளியே நடந்தேன்.
குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில்
அலட்சியத் தணலே அதிகமிருந்தது.
நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க
வழிதெரியாமல் வீதிக்கு வந்தேன்.
தெரிந்த மனிதர்கள், புதிய உறவுகள்
வரிசையாய் எதிரே வந்து கொண்டிருந்தனர்.
பழைய பகைவர்கள் சிலருமிருந்தனர்.
ஒவ்வொருவராய் வந்து கைகள் குலுக்கினர்.
எங்கெங்கோ நான் தேடிய வெப்பம்…
இங்கே, இவர்கள் உள்ளங் கைகளில்!

 

 

விளையாட்டு

 

பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில்
திருப்பிப் போடத் தெரியவில்லை.
வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல்
தேர்வுகள் எழுதும் விபரமில்லை.
கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர
வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை.
பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும்
மூல சூத்திரம் மறக்கவேயில்லை.
சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தும்
சாமர்த்தியமே போதவில்லை.
முட்செடிகளுக்கு முகமூடிகளாகப்
பூக்கள் இருப்பது புலப்படவில்லை.
ஒவ்வொரு தடவையும் விளையாட்டுகளில்
ஒப்புக்காக சேர்க்கப்பட்டும்
ஒருமுறைகூட வேண்டா வெறுப்பாய்
விளையாடியதாக ஞாபகமில்லை.
இத்தனை இருந்தும் இந்த வாழ்க்கை
பிடித்திருப்பதுதான் புரியவேயில்லை.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

 

இருந்தபோதிலும்

சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய்

குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன்.
மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய்
தோழமையோடு தழுவிக் கொள்கிறேன்.
இறுக்கமான என் இயல்புகள் விட்டு
நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன்.
கணக்குகள் நிறைந்த வணிக உலகிலும்
வருத்தமில்லாமல் விட்டுக் கொடுக்கிறேன்.
பகையோ பொறாமையோ தலையெடுக்காத
போட்டிகளில் மட்டும் பங்கு பெறுகிறேன்.
நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு நாளும்
நெகிழ்ச்சிக்கு நிறைய நேரம் தருகிறேன்.
இருந்தபோதிலும் எப்படி யாவது
எதிரிகள் ஒருசிலர் ஏற்படுகிறார்கள்…
பழகி வருபவர் பட்டியிலிருந்தே…

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

தேசியத் தமிழர் சின்ன அண்ணாமலை

chinna-annamalai1bமுன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது.

50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய இயக்கங்களில் இருந்து மிகச்சிலரே இலக்கியவாதிகளாகவும், மக்கள் ரசனையை ஈர்க்கக் கூடிய பேச்சாளர்களும் உருவாயினர்.

இன்றும் தேசிய இயக்கங்களின் நிலை இதுதான்.
காங்கிரஸ் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் அந்நாட்களில் விளங்கியவர் திரு.சின்ன அண்ணாமலை,ராஜாஜிக்கு நெருக்கமனவர் என்றாலும் காமராஜரின் அன்பைப் பெற்றவர்.சிவாஜி கணேசனின் சமூக வாழ்வை வடிவமைப்பதில் பெருந்துணை புரிந்தவர். காரைக்குடி அருகிலுள்ள உ.சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த இவர், அசாத்தியம் என நாம் இன்று நினைக்கும் பல காரியங்களை அநாயசமாக செய்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களை தங்கள் அங்கமாக ஆக்கிக் கொள்ள பல அரசியல் இயக்கங்கள் திட்டமிடக் காண்கிறோம். முன்னொரு காலத்திலதரசியல் பின்புலத்துடன் வந்த திரைக்கலைஞர்களின் ரசிகர்கள் அவர்தம் இயக்கங்களின் தொண்டர்கள் ஆயினர். ஆனால் திராவிட இயக்கத்திலிருந்த திரு சிவாஜி கணேசன் தேசிய இயக்கத்திற்கு மாறிய பிறகு அவருடைய இரசிகர்களை அரசியல் தளத்தில் ஒருங்கிணைக்க திறமைமிக்க நெறியாளர் ஒருவர் தேவைப்பட்டார். அந்தப் பொறுப்பை திறம்பட நிறைவேற்றியவர் திரு.சின்ன அண்ணாமலை ஆவார்.
1967ல் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியடைந்த பிறகு 1969ல் அக்டோபர் 1ஆம் நாள் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்து ஏழாண்டுகள் அதன் தலைவராகவும் விளங்கினார்.
திரு.சின்ன அண்ணாமலையின் எழுத்தாற்றலும் வலிமையானது. ” சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்னும் தலைப்பில் அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகள் வெகு சுவாரசியமானவை.சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார்.
தமிழ்ப்பண்ணை என்னும் பதிப்பகத்தைத் தோற்றுவித்து நாமக்கல் கவிஞர், இராஜாஜி போன்றோர் நூல்களைப் பதிப்பித்தவர். சின்ன அண்ணாமலை என்னும் பெயர்கூட இராஜாஜியால் சூட்டப்பட்டதே ஆகும்.
கலைஞர் முதல்வராக இருந்த போது கலைஞர்,கவியரசு கண்ணதாசன்,சிவாஜி கணேசன் ஆகியோர் மத்தியில் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் தன்னை திடீர் தலைமையேற்க தம்மை அழைத்த அனுபவத்தை பெரும் சிரிப்பலைகள் மத்தியில் அவர் விவரித்த பாங்கு ஒலிப்பேழை வடிவில் இன்றளவும் அவருடைய அபாரமான நகைச்சுவைஉணர்வுக்கு சான்றாகத் திகழ்கிறது
1920 ஜூன் 18ல் பிறந்த இவர் 1980 ஜூன் 18 ல் தன் மணிவிழா மேடையில் மூச்சுத்திணறலால் மறைந்தார். மற்றவர்களை மகிழ்விப்பதில் மகத்தான மனிதராகத் திகழ்ந்த இவர், மனதுக்கினியவர்கள் சூழ்ந்திருக்க மாப்பிள்ளைக் கோலத்தில் மறைந்தார்.
தேசியத் தமிழராய் வாழ்ந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்களின் 97ஆவது பிறந்த தினமும் 37ஆவது நினைவு தினமும் இன்று…அந்த மாமனிதரை நினைவு கூர்வோம்.

நாளையின் அனுபவம்

 

நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன்
வந்து சேராத நேற்றுகளுக்காக
அங்கேதான் நான் காத்திருந்தேன்.
நாளையின் நந்தவனம் மிக அழகானது
நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது.
நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத்
தணிக்கிற ஊற்று அங்குதான் உள்ளது.
“கணகண”வென்ற கனவின் சூட்டுடன்
நாளையின் உணவு மேஜையின் விருந்துகள்
ஆறிப்போகாத உணவுகளின் வரிசை
வந்து சேராத நேற்றுகளுக்காக.
நாளையின் நந்தவனம் மர்மங்கள் நிறைந்தது.
இன்றென் முகத்தில் துப்பிய காலம்
என்னை முத்தமிடப் போவதும் அங்குதான்.
அடடா! சொல்ல மறந்து விட்டேன்.
நாளையின் நந்தவனம் சுதந்திரமானது.
நேற்றுகளின் விலங்குகளை உடைப்பதற்கான
சுத்தியல்கள் அங்கே சிதறிக் கிடக்கும்.
நந்தவனத்தின் வெளியே கூட
நடந்து பார்க்கலாம் நீங்களும் நானும்.
தோட்டக்காரன் கொலை செய்ய வந்தால்
நந்தவனம் அதற்குப் பொறுப்பேற்காது.
வந்துசேராத நேற்றுகளையெல்லாம்
வழியில் அவன்தான் வன்கொலை செய்தான்.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

சகவாகம்

 

பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை
மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள்.
வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற
குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும்.
தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப்
பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும்.
வாள்முனையிருந்து வருகிற நெடியோ
தேனீக்களுக்குத் திகைப்பைக் கொடுக்கும்.
கூரிய முனையில் வண்டுகள் அமர்ந்தால்
கழுவேற்றங்கள் கண்முன் நடக்கும்.
மலர்க்கூடைக்குள் போர்வாள் போன
மர்மமெனக்கு விளங்கவேயில்லை.
பூக்களுக்குப் பாதுகாப்பாகவா?
களைத்த போர்வாள் கண்ணுறங்கவா?
கொடிகளிடம் போய்க் கேட்டுப் பார்த்தேன்
வருபவர், செல்பவர், விரலால் தீண்ட…
வதங்குகின்றவாம் வாச மலர்கள்.
பூக்களுக்கெல்லாம் போர்க்குணம் கிடைக்கப்
போர்வாள் நடத்தும் பயிற்சி வகுப்பாம்.
“பலே பேஷ்” என்று பாராட்டிவிட்டு
வேலையைப் பார்க்க வெளியே போனேன்.
வெண் பூக்களுக்கு வன்முறை தெரிந்தால்
வேலிகள் எதுவும் வேண்டியிராது.
விபரமில்லாமல் வண்டுகள் வந்தால்
வண்டின் குருதியைப் பூக்கள் உறிஞ்சலாம்.
கோவில் வாயிலில் கிடைக்கிற பூக்கள்
கசாப்புக் கடைகளில் விற்பனையாகலாம்.
கணவன் வாங்கிக் கொடுக்க பூக்கள்
விவாக ரத்துக்கு வழிவகுக்கலாம்.
மாலைகளோடு தொண்டர்கள் வந்தால்
மாபெரும் தலைவர்கள் மிரண்டு நடுங்கலாம்
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டே
திரும்பும்போது ஞாபகமாக
மலர்க்கூடையைத் திறந்து பார்த்தேன்…
போர்வாள் முனையோ பூத்துக்கிடந்தது.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)