எனது கவிதைகள்!

 

 

அகமனதுக்குள் ஆழப்புதைந்த
விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய்
நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில்
புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய்
திரைகள் விலகிய தரிசனத் தெளிவில்
தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய்
பிரபஞ்ச ரகசியம் தேடிக் கிளம்பிய
பாதையில் ஒலிக்கும் புதிய குரல்களாய்…

 

எனது கவிதைகள்!

 

எனது கவிதைகள்!

கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில்
நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய்
குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள்
அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய்,
அலைகள் தினமும் அறைந்து போனதில்
கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய்
கல்லடிபட்ட குளத்திடமிருந்து
கிளம்பிவருகிற கண்ணீர் வளையமாய்…

 

எனது கவிதைகள்

 

எனது கவிதைகள்

நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை
ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய்
வேற்றுமுகமின்றி… எதிர்ப்படும் எவரையும்
பற்றிக் கொள்கிற பிஞ்சுவிரல்களாய்
உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம்
உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய்
பரிவு வறண்ட பாலைவனத்திடைப்
பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்…

 

தரிசனம்

 

இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன்.
படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும்
துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன.
நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன்.
மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன்,
புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும்,
மலர்வதும் உதிர்வதும் மலர்களென்பதும்
வாய்ப்பாடுகள் போல் வழக்கில் வந்தன.
மோதல்கள், காதல்கள், மகிழ்ச்சி, வருத்தம்
யாவையும் சுழற்சியின் ஒழுங்கில் இயங்கின.
நியதிகளுக்குள்ளே நின்ற உலகத்தில்
மெதுமெதுவாய் என்னை மறக்கலாயினர்.
கோவிலில் என்னைக் கொண்டு போய் வைத்தனர்.
மீட்க வந்தவரைத் தீயி லெரித்தனர்.
சடங்குகள் நிறைந்த சப்த இரைச்சலில்
சூழ்நிலைக் கைதியாய் வாழ்வது கொடுமை.
இறைவனாய் ஆனபின் இனியென்ன ஆவது?
அவஸ்தையும் ஒருவித அச்சமும் படர்ந்தது.
கூப்பிய கைகளைக் காண்கிற போதெல்லாம்
ஏகமாய் எரிச்சல் என்னுள் எழுந்தது.
நைவேத்தியங்களும் நித்ய அர்ச்சனையும் & என்
கையாலாகாத் தனமென்று கருதினேன்.
கருணை மலர்ந்து கனிந்த கண்களில்
கனல்விட்டெரிந்தது கோப நெருப்பு.
அபயக் கரமோ ஆயுதமெடுத்தது.
காக்கும் கடமை காற்றில் பறக்கத்
தாக்கித் தகர்க்கும் வன்மம் பிறந்தது.
பூவிதழ் ஓரத்துப் புன்னகை மறைந்து
பக்கவாட்டில் பற்கள் முளைத்தன.
இஷ்ட தெய்வமாய் என்னைத் துதித்தவர்
“துஷ்ட தேவதை” எனத் துரத்தத் தொடங்கினர்.
ஆசிர்வாதத்தை அலட்சியம் செய்தவர்
சாபத்துக் கஞ்சி சாந்திகள் செய்தனர்.
இருந்த கோவிலை இழுத்து மூடி & நான்
மரங்களில் குளங்களில் வசிப்பதாய்க் கூறினர்.
கடவுளாயிருந்ததைக் காட்டிலுமெனக்கு
இந்த ஏற்பாட்டில் எத்தனை வசதி,
பின்னர்தான் நானொரு பைசாசமானேன்.
பகல் வெப்பத்தில் பதுங்கி உறங்கி
இரவு நேரத்தில் எழுந்து நடந்தேன்.
காற்றாய்க் கிளர்ந்து கதவுகள் இடித்தேன்.
கற்களை எறிந்து ஓடுகள் உடைத்தேன்.
போகிற மனிதரைப் “பளீரென” அறைந்ததும்
சாகிற காட்சி சுவாரஸ்யம் தந்தது,
மந்திர ஒலிகள் மறந்து போனபின்
கண்டத்திலிருந்து கிளர்ந்தது ஊளை,
அந்தி,சந்தி, அர்த்த ஜாமங்களில்
ஒவ்வொரு வீட்டிலும் உயிர்ப்பயம் வந்தது.
நீதி காக்கின்ற கடவுள் தொழிலினும்
ஆதிக்கப் பேயாய் அலைவதே எளிது;
ஒருநாள் ஊருக்குள் ஒரே பரபரப்பு & என்
பழைய கோவிலில் புனருத்தாரணம்.
“மற்றொரு தெய்வம் மண்ணில் வந்தென்னை
வெற்றி கொள்ளும்” என வெகுவாய் நம்பினர்.
என்னை முன்னர் ஏற்றித் தொழுதவர்
பின்னிந்த தெய்வத்தின் பூஜையில் மூழ்கினர்.
கேட்கக் கேட்கச் சிரிப்பு வந்தது.
கோவில் திசையினைப் பார்த்துக் கூவினேன்
“நாளைய பேயே! நல்வரவாகுக!”

 

 

பின்வழிப் பயணம்

 

எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன?
எனது கனவுகள் கலைவதாயில்லை.
இடைவெளியின்றி இந்த நீளத்தில்
எவருக்கும் கனவுகள் வந்திருக்காது.
பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக்
கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு
யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய்
இன்னும் இன்னும் தொடருகின்றது.
புத்தர் காலத்தில் தாவரமாக
ஏசு காலத்தில் பசுங்கிளியாக
எண்ணரும் பிறவிகள் இங்கே இருந்ததாய்
மனத்திரைக்குள்ளே சத்திய சாட்சிகள்.
இரக்கமில்லாத மரணங்கள் முடிந்தும்
இறக்க மறுக்கும் என்னுயிருக்கு
கைப்பிள்ளைக்குக் காட்டும் பொம்மைபோல்
கனவுத் தொடரைக் காட்டி வருகிறேன்.
இப்போதெழும்பும் எந்தக் குரலையும்
என் குரலென்று நான் எண்ணுவதில்லை.
பிறந்த குழந்தையின் வீறிடலாக,
பருவ வயதின் பிதற்றல்களாக,
நடுத்தர வயதின் திமிர்க்குரலாக,
தளர்ந்த முதுமையின் புலம்புகளாக
எத்தனை குரல்களில் எழுப்பியதென்னுயிர்,
இத்தனை குரல்களில் எதுதான் என் குரல்?
இத்தனை உடல்களில் எதுதான் என்னுடல்?
கனவுக் குவியலின் நடுவிலெதுவும்
பதில்கள் கிடைக்குமா… பார்த்து வருகிறேன்
பிடித்த பாடல்களுக் காகப்
படத்தை முழுவதும் பார்க்கிற ரசிகனாய்
உயிரின் மூலம் உணர்வதற்காகக்
கனவின் தொடரைப் பொறுமையாய்ப் பார்க்கிறேன்
தொடர்வின் முடிவில் எதுவும் நேரலாம்.
படச்சுருள் தீர்ந்தும் பதில் கிடைக்காமல்
ஏமாற்றத்துடன் எழுந்து நான் போகலாம்.
பொருத்தமான பதிலொன்று கிடைத்தால்
அந்த அதிர்ச்சியில்… என் ஆன்மா சாகலாம்.

 

 

மழைக்கணக்கு

 

புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய
பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை.
கரிய முகிலின் கனவுகள் கலைந்து
தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள்.
உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட
தாவரங்கள் தலைக்குக் குளித்தன.
பறவைக் கூட்டில் பரவச முனகல்.
தெப்போற்சவத்தில் தெருநாய்க் கூட்டம் &
குளிர்ந்த புல்வெளியைக் கற்பனை செய்த
கறவைகளுடைய கண்களில் வெளிச்சம் &
விரிந்து கிடக்கின்ற மணற்பரப்பிற்கோ
விழுகிற மழைத்துளி வாசனைத் திரவியம்.
பூமி சிலிர்த்த பண்டிகைப் பொழுதில்
போர்வைக் கல்லைறையில் புதைந்த மனிதர்கள்.
மழைக்கணக்கெழுதிய கடவுளின் கைகள்
விரயக் கணக்கில் பதிவு செய்தன…
கடல்மேல் விழுந்த துளிகளோடு
கட்டிடம் மீது விழுந்தவற்றையும்.

 

 

அவதாரம்

 

போர்க் களத்திற்குப் போகும்போது
கத்தியைப் போலவே கவசமும் முக்கியம்.
ஒருதுளி கூட இரக்கமில்லாமல்
உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும்,
காயம் செய்யும் கொள்கையில்லாமல்
குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம்.
மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும்
யுத்தம் எவனின் புத்தியில் வந்தது?
போர்க்களம் நடுவில் போதித் தாவது
மூர்க்கக் கனலை மூட்டிட வேண்டுமா?
கூரிய கத்தியாய் இருப்பதைக் காட்டிலும்
இறுகிய கவசமாய் இருக்குமென் கவிதை.
கொண்டுவந்திருக்கும் வெள்ளைக் கொடியைக்
காற்றில் அசைத்துக் காட்டி நிற்கலாம்
குருதித் துளிகள் பட்டுப்பட்டு…
கொடியின் வண்ணம் சிகப்பாகும் வரை!
முழுவதும் சிவந்து மண்ணில் விழும்முன்
வேறொரு வெண்கொடி வந்தே தீரும்!

 

 

வடு

 

 

இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள்
இதயத்துக்குள் இல்லாமலில்லை.
எதிர்பாராத நொடிகளில் திடீரென
எழுகிற வலியை எழுதுவதெப்படி?
வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று
வந்து கொண்டே இருக்கிற போதும்
வீசிப்போன தென்றலின் நினைவு
வரும்போதெல்லாம் வருத்தத்தின் புழுக்கம்.
நேற்றைய உறவின் ஞாபகச் சுவட்டை
அலைகள் எதுவும் அழிக்கவேயில்லை.
கடற்கரைப் பரப்பாய் விரிந்த மனசில்
கடந்த காலத்தின் கிளிஞ்சல் குவியல்கள்.
காலியாகக் கிடப்பது தெரிந்தும்
கைகளில் எடுத்துத் திறக்கும்போது
முகத்தில் அறையப்போகும் வெறுமையைத்
தாங்கிக் கொள்ளத் தயாராகின்றேன்.
ஆறுதல் அடைய வேண்டியுள்ளது…
கிளிஞ்சல்களேனும் கிடப்பதைக் கண்டு.

 

 

மறுபக்கம்

 

ஆகாயத்தின் அடுத்த பக்கம்
என்ன நிறமாய் இருக்கக் கூடும்?
வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம்
பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி.
சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக்
காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா?
வெள்ளை நிலவு பட்டுப்பட்டுப்
வெள்ளித் தகடாய்ப் பளபளத்திருக்குமா?
ஏவு கணைகள் ஏதும் வராததால்
தூய வெண்மையில் துலங்கியிருக்குமா?
மேகச் சிராய்ப்புகள் மேலே படாததால்
பூவின் தளிர்போல் புதிதாயிருக்குமா?
வானவில் இங்கே வந்திராமையால்
பாலைவனம் போல் வெறுமையாயிருக்குமா?
எண்ணிலாக் கேள்விகள் என்னுள் கொதிக்கையில்
பறவை ஒன்று பதில் சொல்லிப் போனது.
அனைத்து மனிதரும் அந்தரங்கத்தில்
உறைய விட்டிருக்கும் உண்மையின் நிறமாய்
பதறச் செய்யும் பயங்கர நிறம்தான்
ஆகாயத்தின் அடுத்த பக்கத்திலும்…

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)