வழியனுப்புதல்

சாயங்கால வெய்யிலாய் உன் முகம்

தூங்கச் செல்லும் சூரியன்போல.
அஸ்தமன நேரத்து அலுப்பிலும்கூட
இதமான வெளிச்சம் இருக்கவே செய்யும்.
எனினும்… அடடா ஏதுனக்கு ஓய்வு?
இன்னொரு பயணம் தொடங்கி விட்டாய் நீ.
இன்னோ ருலகின் சூரியனாக.
மேற்கு நோக்கிப் போகிற உனக்கு
நின்று பேசவும் நேரமிராது.
என்கிறபோதும் ஒரேயரு வார்த்தை
உனது வானமும் உனது கிழக்கும்
வழிபார்த்திருக்கும்… நீ வருகிறவரைக்கும்.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

நான் கடிகாரமான போது…

ஒன்று தொடங்கிப் பன்னிரண்டு வரையென்

எண்ணங்களையே எண்களாக்கினேன்.
வட்டம் ஒன்றினுள் வரிசையாய்ப் பொருத்தினேன்.
ராகு காலங்களை ரத்து செய்து
நல்ல நேரங்களை நிலை நிறுத்தினேன்.
கூரிய முனையில் பூக்கள் மலர்த்திய
பார்வையின் கனிவை முட்களாக்கினேன்.
இதயத்துடிப்பின் எதிரொலி போல
“டிக் டிக் டிக்”கெனும் தாள லயத்துடன்
“எல்லாக் கணங்களும் இனியவை” என்கிற
பாடலை மட்டும் பாடிக் கொண்டு…
உன்னுடைய மணிக்கட்டில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

மரங்கள் – சில குறிப்புகள்

எழுதப் படாத என் கவிதையை ரசித்து

தூரத்து மரங்கள் தலையசைத்தன.
தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக்
கட்டுப்படுகிற குழந்தைகள் போல
ஒரே சீராகக் கிளைகள் அசைந்தன.
பசிய மரங்களின் பேச்சுக் குரலாய்
சலசலத்தன தளிர்களும் இலைகளும்.
நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும்
அடிமண்ணுக்குள் ஆழப்பதிவதும்
செடியாய் இருக்கும் வரைக்கும் மட்டுமே.
வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே
வேலைகள் பெரியதாய் எதுவுமில்லை.
நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது
அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை.
போதி மரங்களை, புளிய மரங்களை,
வேப்ப மரங்களை, அரச மரங்களை,
மனிதர்களெல்லாம் வணங்க வந்தாலும்
வரந்தரும் கர்வம் மரங்களுக்கில்லை.
கோபமும் காமமும் மரங்களுக்குண்டு.
வெய்யிற் சூட்டின் வேதனைத் தகிப்பைப்
பிடிவாதத்துடன் பொறுத்து நிற்கும்.
முகில்கள் பதறி மழையாய் வருகையில்
மரங்களின் அழுகை மௌனமாய் நிகழும்.
கையறு நிலையின் கவிதையைப் போல
இலையுதிர் காலத்தில் இருக்கிற மரங்கள்
வயசுப் பெண்ணின் வசீகரக் கனவாய்
தளதளவென்று தளும்பி நிற்கும்.
மரங்களின் மௌனம் மகத்துவம் வாய்ந்தது.
கௌதம புத்தரும், நம்மாழ்வாரும்
மௌனம் வாங்கவே மரத்தடி வந்தனர்.
மரநிழலில் அமர்ந்து ஊர்க்கதை பேசும்
மனிதர்கள் பெறுவது, பறவையின் எச்சம்.
அடர்ந்த மரங்கள் பறவைக் கூட்டத்தின்
அடுக்கு மாடிக் குடியிரு ப்புகள்.
பறவைகள் வசிக்கக் கிளை தரும் மரங்கள்
வாடகை யாகப் பாடல்கள் வாங்கும்.
தூங்கு மூஞ்சி மரங்களை எழுப்பினால் & அதன்
கனவுகள் பற்றியும் கவிதைகள் கிடைக்கலாம்.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

மழைமனசு

 

அருவிகள் நடந்த வழித்டமிருக்கும்
மலையின் மீது தழும்புகள் போல.
கரும்பாறைகளின் கசிவின் தடயங்கள்
இராணுவ வீரனின் கண்ணீர்போல.
மெல்லிய கீற்றாய்ப் பறவையின் பாடல்
நேற்றைய கனவின் நிழலைப் போல.
மௌனப் பூக்கள் மலர்கிற உச்சியில்
கனல்கிற அமைதி கடவுளைப் போல.
வெளிப்படாத சௌந்தர்யம் இன்னும்
கருவிலிருக்கும் குழந்தையைப் போல.
துளையிடப்படாத புல்லாங்குழலில்
தூங்குகின்ற இசையைப் போல.
இத்தனை அழகிலும் இழையுதென் இதயம்
மலைமேல் பெய்கிற மழையைப் போல.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

கடைசியில் இப்படித்தான்

 

பிரிவு நேர்வதை உறுதி செய்கிற
விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம்.

சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி
வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம்.
மௌனப் பாறைகள் மனதில் சுமந்து
கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம்.
மேசை தள்ளி மெள்ள எழுகையில்
பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்கையில்
அடர்ந்த பிரியம் கவிழ்ந்த கணங்களின்
உக்கிரம் நமது உயிரைப் பிழியலாம்.
நிபந்தனையில்லாத நட்பின் அடர்த்தியை
நினைவுகளாக்கி நாம் விடைபெற நேரலாம்.
அன்பைத் தொலைத்த அகதியாய், மறுபடி
தளர்ந்த நடையிலென் பயணம் தொடரலாம்.
இருந்தபோதும் என் இனிய ஸ்நேகிதி, உன்
பாதையில் நான் கொஞ்சம் பூக்கள் வளர்த்ததாய், உன்
பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்… போதும்!

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

சிலை கர்ப்பம்

கல்லைப் புரட்டி நிமிர்த்திய நொடியில்
கூரிய முனைகள் குத்தியிருக்கும்.
சில்லுகள் பட்டு விரல் கிழிந்திருக்கும்
சிற்றுளி அழுத்தியே கை சிவந்திருக்கும்;
கண்களில் கூடக் கல் தெறித்திருக்ம்
கால்களில் பொடித்துகள் நரநரத்திருக்கும்.
இரவுநேரக் கனவுகள் முழுவதும்
அசுரக் கற்கள் ஆக்ரமித்திருக்கும்.
உணர்விலும், புணர்விலும், ஒவ்வொரு நொடியிலும்
சிலையின் கருப்பையாய், மனமிருந்திருக்கும்.
சிற்பந்தொட்டு வருடிப் பார்த்ததில்…
சிற்பியின் அவஸ்தைகள் உறுத்தின எனக்கு.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

வலிமிகும்

கெண்டைக் கால்கள் குறக்களி இழுக்கையில்
எந்தக் கடவுளும் என்னுடன் இல்லை.
ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும்
பரவிய வேதனை… பெரிய கொடுமை.
பகல்நேரத்து ரயில் பயணத்தில்
காலிப் பலகையில் கால்கள் நீட்டிய
சயன எத்தனத்தில் & அது சட்டென நேர்ந்தது.
“கடவுளே கடவுளே” கதறிய படியே
நிலைகொள்ளாமல் நெளிந்து தவித்தேன்.
கால்களிரண்டையும் மெதுவாய் நீவி
சாய்ந்துகொள்ளச் செய்தார் ஒருவர்.
“செத்த நேரந்தான் சரியாய் போயிடும்;
பல்லைக் கடிச்சுப் பொறுத்துக் கிடுங்க”
ஆதரவாக ஒலித்தது ஒரு குரல்.
வேதனை உருகி விழிகளில் வழிந்தது.
திலகம் தரியா இளம்பெண்ணொருத்தி
சிலுவைக் குறியிட்டு ஸ்தோத்திரம் சொன்னாள்.
தண்ணீர்க் குடுவையைத் திறந்து ஊற்றிய
கைகள் எவரது? கவனத்திலில்லை.
ஜன்னல் வழியாய்த் தென்றல் வீசக்
கண்களில் மெதுவாய்க் கவிழந்தது உறக்கம்.
வலியுடன் கலந்த கனவுகள் சிலச்சில
அதிரும் ஓட்டத்தில் அடிக்கடிக் கலைந்தன.
முற்றிலும் விழிப்பு நேர்ந்த வேளையில்
சிற்றூரென்று கடந்துபோயிருந்தது.
தடவிக் கொடுத்தவர், தண்ணீர் கொடுத்தவர்
எவருமில்லை எதிர் இருக்கைகளில்.
இறுக்கம் தளர்ந்த என் கால்களில் மட்டும்
கடவுளின் சுவடு கொஞ்சமிருந்தது.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

நிர்மலம்

வெள்ளைக் காகிதம் வைத்திருக்கிறேன் நான்.
ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதியும்
இன்னும் வெள்ளையாய் இருக்குதக் காகிதம்.
உயில்கள், கவிதைகள், ரகசியக் குறிப்புகள்,
மிரட்டல் கடிதங்கள்கூட எழுதினேன்.
இறந்து போனவர்கள் எதிர்ப்பட்டபோது
எடுத்த பேட்டிகள் அதில்தானிருந்தன.
எத்தனை முறை நான் எழுதினாலும்
அத்தனை முறையும் அழிந்து போகிறது.
படித்துப் பார்த்த “பலான” விமர்சகர்
அமரத்துவம் மிக்க படைப்பென்று சொல்லிய
பாராட்டுச் சொல் தீரும் முன்பே
அமரத்தன்மை அடைந்தவ்வெழுத்து.
காலத்தால் அழியாத வரிகளைக்
காகிதம் அழிக்கும் கூத்தை என் சொல?
காகிதக் கொடுமை எல்லை மீறிட
குற்றப் பத்திரிகை ஒன்றை எழுதிக்
காவல்நிலையம் கொண்டு போயிருந்தேன்.
வெள்ளைக் காகிதம் தூக்கி வந்து
வேலையைக் கெடுப்பதாய்ச் சீறினார் காவலர்.
உங்களிடமாவது சொல்லலாமென்று
ஆதங்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கும்
இந்தக் கவிதை என்னவாகுமோ?

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

பசுக்கள்

என்றைக்கேனும் பசுக்களின் தாய்மை
கன்றுகளோடு நின்றதுண்டா?
கன்றுகளை வெறும் காரணமாக்கி
அன்பைப் பொதுவாய் அளிப்பவை பசுக்கள்;
வைக்கோல் கன்றின் வக்கிரம் பொறுத்து
மடி சுரக்கின்ற மகத்துவம் போதுமே!
உயிர்கள் எதனையும் உதறிவிடுகிற
பயங்கர மூர்க்கம் பசுக்களுக்கில்லை:
புழுதியில் மலத்தில் புரள்கிற ஈக்கள்
முதுகில் அமர்ந்தால் மறுப்பதேயில்லை!
அன்பின் மௌனமாய் அமைதியின் கவிதையாய்,
மண்ணின் முகில்களாய் மலர்ந்தவை பசுக்கள்;
மலர்களுக்கிருக்கும் முட்களைப் போலவே
பசுக்களின் கொம்புகள் பொருத்தமாயில்லை!
(பொருந்தா உறுப்புகள் படைத்த கடவுளை
மலர்களும் பசுக்களும் மன்னித்தருளின)

தெய்வம் தேடும் ஆன்மா, பசுவென
சைவ சிந்தாந்தம் சொல்வதுண்மை!
முனிவர்கள் தவம் செய்து முயல்கிற கருணை
பசுக்களின் கண்களில் பெருகி வழியும்.
நெற்றியில் நீறு நிறையப் பேசினால்
புத்தியில் பசுவின் பெருந்தன்மை படியும்.
பசுக்களின் பார்வையில், பூமி முழுவதும்
பாலுக்கழுகின்ற கன்றாய்த் தெரியும்.
பசுக்களின் பார்வை மனிதனுக்கிருந்தால்
பூமி முழுவதும் பாலாய்ச் சொரியும்.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)