வழிகள் மறந்த வீதிகள்

 

 

ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த
மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது.
“ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும்
பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று.
வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு
வேறுதிசையில் விரையலாயிற்று.
மேஸ்திரி நாக்கு மேலண்ணத்தோடு.
சாஸ்திரி வீதி மட்டுமில் லாமல்
அத்தனை தெருக்களும் அசைந்து நடந்தன.
தத்தம் போகில் சிதறிக் கலைந்தன.
பஞ்சாயத்து போர்டுக்குக் கிளம்பினோர்
பைத்தியக்கார மருத்துவமனைக்குள்.
கொடியுடன் கிளம்பிய பேரணி ஒன்று
சுடுகாட்டுக்குள் சென்று சேர்ந்தது.
சூழ்ச்சியா? மாயமா? சூழலை ஆய்ந்திட
ஆட்சித் தலைவரின் அவசர அழைப்பால்
மேலதிகாரிகள் கிளம்பிய கார்களோ
நேராய்ப் போனது குப்பைக் கிடங்கிற்கு.
பகுத்தறிவில் கரை கண்டதோர் அறிஞர்
பகவதி கோவில் பிரகாரத்தி லிருந்தார்.
கொலைகாரன் குப்பமும், காந்தி வீதியும்
தலைகா லின்றித் தழுவிக் கிடந்தன.
பெரியார் வீதியில் பயணம் தொடங்கினால்
சந்நிதித் தெருவில் சென்று புகுந்தது.
வழியினைக் காட்டும் வீதிகள் இப்படி
குழம்பிடக் கண்டு குமுறினர் மக்கள்.
அரையடி வீதிக்கும் காலடிவீதிக்கும்
“பிரதான சாலை” பெயருக்குச் சண்டைகள்;
நான்தான் தெரு வென்றும் நீவெறும் சந்தென்றும்
மோதல்கள் வலுத்தன; வலியவை ஜெயித்தன;
முற்றும் வெறுத்த மனிதர்கள், வீடுபோய்
சற்றே தலையைச் சாய்த்திட நினைத்தனர்.
எந்த வீதியில், எப்படி நடந்தால்
சொந்த வீடுபோய்ச் சேரலாமென்பது
புரியாக் குழப்பமாய்ப் புதிராயிருந்தது.
பாதைகளை நம்பிப் பயணம் தொடங்கினோர்
நாதியில்லாமல் நடுத்தெரு நின்றனர்.
வீதிகள் நடுவில் விளங்கிய சிலைகள் முன்
நீதிகேட்டு நெடும்போர் புரிந்தனர்.
மக்கள் வெள்ளத்தில் நடுநின்ற சிலைகளோ
துக்கம் பொங்கத் தலை கவிழ்ந்திருந்தன.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

கோடு படுத்தும்பாடு

 

ஒரு
நேர்க்கோடு வரையத்தான்
நீண்ட காலமாய் முயல்கிறேன்.
வேண்டாத இடங்களில்
அது வளைந்து கொள்கிறது.

நான் சேமித்து வைத்திருக்கும்
பதில்களின் பின்னால்
நின்று கொண்டு
அவற்றைக்
கேள்விகளாக்கி விடுகிறது.

சாதாரண சம்பவங்களில்கூட
ஆச்சரியக் குறியாய்
விழுந்து
அசிங்கம் செய்கிறது.

சத்தியங்களை
அடிக்கோடிடும் போதெல்லாம்
அடித்தல் கோடாக மாறி
அதிர வைக்கிறது.

சூனியமே
சுகமென்றிருக்கையில்
வெற்றிடங்களைக் கோடிட்டு
நிரப்பச் சொல்லி நீட்டுகிறது.

ஒரு கோட்டில்
சிந்திக்க விடாமல்
உபத்திரவம் செய்கிறது.

கவிதையின் பயணம்
தன்போக்கில் நிகழ
அனுமதியாமல்
குறுக்குக் கோடாய்க் கிடக்கிறது.

நிமிர்த்தவே முடியாதென்று
அயர்ந்து விழும்போது மட்டும்
நேராகி
விழித்துப் பார்த்ததும்
வளைந்து கொள்கிறது.

லட்சுமணக் கோடாய்,
கைரேகைக் கோடாய்,
வெவ்வேறு முகம் காட்டி
நிலை குலையச் செய்கிறது.

கோடு உருவாவது
புள்ளிகளாலா
அல்லது புதிர்களாலா
என்பதுதான்…

இப்போது புதிராக
இருக்கிறது.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

ஏன் அப்படி?

 

எந்த வீட்டுக் குழந்தையென்றாலும்
கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன்
பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக்
குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன்.
அன்று மாலையும் அப்படியேதான்!
புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து
விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை
பேனா கொடுத்துப் பழக்கம் செய்ய
நேரம் அதிகம் ஆகவில்லை.
மிக மிக சீக்கிரம் நண்பர்களானோம்.
சொற்கள் தொடாத செப்புவாய் திறந்து
“கக்கக்கா”வெனக் கவிதைத் தெறிப்புகள்
குதலையின் சுகத்தில் காணாமல்போய்
மொழியைத் தொலைத்து மண்டியிட்டிருந்தேன்.
என்னையும் பொம்மையாய் எண்ணிய குழந்தை
தன்னிரு கைகளால் தொடவந்தபோது
புயலாய் வந்த நீ, பிள்ளை அப்படி
அள்ளிப்போனது அநாக ரீகம்தான்.
இன்னும் சிறிது நேரம் எங்களின்
அண்மை தொடர நீ அனுமதித்திருக்கலாம்.
மழலையும் வராத மலரிடம் போய்… நம்
பழைய காதலைப் பேசவா போகிறேன்?

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

 

துளித்துளியாய்…

 

தென்றலில்லாத
இன்றைய புழுக்கத்தை
மௌனமாய் ஏற்பதன்றி
வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள்.

சூரியனுக்குத்தான் தெரியும்…
நிலாக்கால வெளிச்சத்தையும்
நட்சத்திரக் கண் சிமிட்டலையும்
பார்க்கக் கிடைக்காத வருத்தம்.

இன்னும் கொஞ்சநேரம்
பாடிக் கொண்டிருக்குமாறு
சொல்லியனுப்ப முடியுமா?
அந்த அக்காக் குருவியிடம்!

மிகுந்த பக்குவம்
வேண்டியிருக்கிறது.
சோகத்தை எதிர்கொள்வதற்கல்ல
ஆறுதல் சொல்வதற்கு.

பூக்களின் ராஜ்ஜியத்தில்
எப்படி முளைக்கலாம்?
பார்த்தீனியங்கள்!

பந்தயக் குதிரைக்குத்
தீவனம் சுமந்து,
வண்டியிழுக்கும்
நொண்டிக் குதிரை.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

எதிர்பார்ப்பு

 

கப்பல் வருகிற திசையைப் பார்த்துக்
கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம்.
வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித்
திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும்.
தொலைந்துபோன பிள்ளையைத் தேடும்
தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.
நிதான கதியில் நகர்ந்து வருகிற
கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும்.
“இதோ பார்! இதோ பார்!” என்கிற தவிப்பு
கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ-?
நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும்
நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும்.
கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும்.
தனது சுமைகளைத் தரையில் இறக்கத்
துறைமுகம் இருக்கும் திசையில் விரையும்.
பாதையில் வெளிச்சம் போட்டுக் கிடந்த
விளக்கில் அடடா வருத்தம் வழியும்.
இன்னொரு கப்பல் எதிர்ப்படுமென்று
கலங்கரை விளக்கம் காத்துக் கிடக்கும்.
கடற்கரைப் பக்கம் போகும்போது
கலங்கரை விளக்கைப் பார்க்க நேர்ந்தால்
பேச்சுத் துணையாய்ப் பக்கத்திலிருங்களேன்.

 

ஈகை

 

உன்… தோள்பை நிறையத் தங்கக் காசுகள்.
ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல்
விரல்களை இழுத்து வலியப் பிரித்து
எல்லோர் கையிலும் திணித்துப் போகிறாய்.
கொடுப்பது உனக்குக் கடமை போலவும்
வாங்கிக் கொள்பவர் வள்ளல்கள் போலவும்
பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத்
தங்கக் காசுகள் தந்து கொண்டிருக்கிறாய்.
திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து
தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே
பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய்.
கைகள் வழியக் காசு கொடுக்கையில்
ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால்
பதறி எடுத்துத் தூசு துடைத்து
வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுக்கத் தவிக்கும் கொடையுளம்
வெளிப்படும் விதமாய் வழங்கிச் செல்கிறாய்.
உனது பார்வையில் படும்படியாக
விரிந்து நீண்டு தவிக்குமென் விரல்களில் & ஒரு
செப்புக் காசாவது போட்டிருக்கலாம் நீ!

 

வெப்பம்

 

குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில்
உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன்
விறைக்கும் அளவு ஆனபின்னால்தான்
வெப்பம் தேடி வெளியே நடந்தேன்.
குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில்
அலட்சியத் தணலே அதிகமிருந்தது.
நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க
வழிதெரியாமல் வீதிக்கு வந்தேன்.
தெரிந்த மனிதர்கள், புதிய உறவுகள்
வரிசையாய் எதிரே வந்து கொண்டிருந்தனர்.
பழைய பகைவர்கள் சிலருமிருந்தனர்.
ஒவ்வொருவராய் வந்து கைகள் குலுக்கினர்.
எங்கெங்கோ நான் தேடிய வெப்பம்…
இங்கே, இவர்கள் உள்ளங் கைகளில்!

 

 

விளையாட்டு

 

பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில்
திருப்பிப் போடத் தெரியவில்லை.
வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல்
தேர்வுகள் எழுதும் விபரமில்லை.
கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர
வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை.
பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும்
மூல சூத்திரம் மறக்கவேயில்லை.
சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தும்
சாமர்த்தியமே போதவில்லை.
முட்செடிகளுக்கு முகமூடிகளாகப்
பூக்கள் இருப்பது புலப்படவில்லை.
ஒவ்வொரு தடவையும் விளையாட்டுகளில்
ஒப்புக்காக சேர்க்கப்பட்டும்
ஒருமுறைகூட வேண்டா வெறுப்பாய்
விளையாடியதாக ஞாபகமில்லை.
இத்தனை இருந்தும் இந்த வாழ்க்கை
பிடித்திருப்பதுதான் புரியவேயில்லை.

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

 

இருந்தபோதிலும்

சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய்

குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன்.
மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய்
தோழமையோடு தழுவிக் கொள்கிறேன்.
இறுக்கமான என் இயல்புகள் விட்டு
நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன்.
கணக்குகள் நிறைந்த வணிக உலகிலும்
வருத்தமில்லாமல் விட்டுக் கொடுக்கிறேன்.
பகையோ பொறாமையோ தலையெடுக்காத
போட்டிகளில் மட்டும் பங்கு பெறுகிறேன்.
நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு நாளும்
நெகிழ்ச்சிக்கு நிறைய நேரம் தருகிறேன்.
இருந்தபோதிலும் எப்படி யாவது
எதிரிகள் ஒருசிலர் ஏற்படுகிறார்கள்…
பழகி வருபவர் பட்டியிலிருந்தே…

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)