வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 12

“நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப்போய்விட்டேன்” – இது வாலிபர்கள் பலர் வழங்கும் வாக்குமூலம். பொதுவாகப் பார்த்தால் வாழ்வில் நன்மையோ, தீமையோ நம் மூலமாக மட்டும்தான் வரும். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணித்துச் சொல்கிறார் கணியன் பூங்குன்றன்.

வெற்றிகளெல்லாம் நம் மூலமாக வந்ததாகவும், தோல்விகளெல்லாம் பிறர் தந்ததாகவும் கருதிக் கொள்கிறோம். நாம் இத்தகைய மனப்பான்மையில் நம் சுட்டுவிரல் முதல் முதலில் நீள்வதென்னவோ நண்பர்களை நோக்கித்தான்!

நண்பர்களால் கெட்டவர்கள் இரண்டு வகை. சில தீய பழக்கங்களைப் பழகிக்கொண்டு, பழக்கிவிட்டவர் மீண்டாலும் தான் மீண்டுவராமல், தொலைதூரம் போய் நின்று பிறகு புலம்புகிறவர்கள் முதல் வகை. நண்பர்களுக்கு அளவுக்கதிகமாக இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் பயனை அனுபவித்துப் பிரிந்தபின்னே துரோகிகள் என்று தூற்றுபவர்கள் இரண்டாம் வகை.

பொதுவாகவே, நமது பலவீனங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதென்பது இயல்பு. அதனை அங்கீகரித்து, ஆதரித்து, அந்தப் பலவீனங்கள் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர யாராவது துணை போவார்கள் என்றால், அவர்கள் நண்பர்களல்லர். நமது பலவீனங்களைக் கொழுந்து விட்டெரியச் செய்து அதில் குளிர்காய நினைப்பவர்கள்.

மாறாக, அந்தப் பலவீனங்களிலிருந்து நம்மை விடுவிக்க நினைப்பவர்கள், நம்மை வாழ்விக்க நினைப்பவர்கள், இவர்கள்தான் நண்பர்கள். எனவே, யாரையோ நண்பர்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டு அவர்களால் கெட்டுப் போய்விட்டதாக அறிக்கை விடுவது நமது தவறே தவிர, நண்பர்கள் தவறல்ல. இவர்களை நண்பர்கள் என்று சொல்வதன்மூலம், நமக்கிருக்கும் உண்மையான நண்பர்களையும் சேர்த்து அவமானப் படுத்துகிறோம்.

எல்லாருக்குமே “தான்” என்கிற பாதுகாப்புணர்வு அதிகம். உற்ற நண்பர்களுக்கும் இது பொருந்தும். நமது நிர்வாகத்தில், வணிகத்தில் அல்லது வாழ்க்கையில் நண்பர்களுககு அளவுக்கதிகமான இடம் கொடுத்தோம் என்றால், ஏதாவதொரு கட்டத்தில் யாராவது ஒருவர் தவறு செய்ய முற்படலாம். அது அவராகச் செய்த தவறல்ல. நாமாகத் தருகிற வாய்ப்பு. என்னை ஏமாற்று என்று நாம் விடுக்கும் மறைமுக அழைப்பு.

சரியான எல்லைக்குள் நட்பு, சரியான அளவு உறவுகள், உரிமைகள், சரியானவர்களை நட்புக்கு தேர்ந்தெடுதுதல், அவர்கள் சரியாக இல்லையென்று தெரிந்தால் அங்கேயே அவர்களை அகற்றிவிட்டு, நம் வழியில் சோர்வில்லாமல் பயணம் தொடருதல் – இவையெல்லாம் நட்பை பசுமையானதாக, பரிவு நிறைந்ததாக, வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடியதாக வைத்திருக்கும்.

நட்பு என்பது நம் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கத்தி. வாழ்க்கையில் நமக்குத் துணை புரிய வேண்டிய கருவி. தவறாகக் கையாண்டால் நம்மைக் காயப்படுத்தும். மீண்டும் சொல்கிறேன். அது கத்தியின் குறையல்ல; கையாள்பவர்கள் குறை.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 11

கல்விக்காலம், பதவிக்காலம், எல்லாவற்றிலுமே இளைஞர்கள் வாழ்வில் பெரும்பகுதி வகிப்பது நட்பு. 25 வயதை எட்டிவிட்ட இளைஞரைக் கேளுங்கள், “என்னதான் சொல்லுங்க! எத்தனை நண்பர்கள் வந்தாலும் பள்ளிக்கூட நண்பர்கள் அளவுக்கு மனசுக்கு நெருக்கமா வர்றதில்லீங்க!” என்பார்.

மனிதனை உயர்த்துவதும், கொஞ்சம் அசந்தால் வீழ்த்துவதும் நட்புதான். அதனால்தான் திருவள்ளுவர்கூட நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று அதிகாரம் அதிகாரமாய் அடுக்கிக் கொண்டே போகிறார். நமது வாழ்வில் நண்பர்களுக்கு என்ன இடம் என்பதை ஆராய்ந்தாலே போதும்; வாழ்க்கையின் பலமான அம்சமாக நட்பு ஆகிவிடும்.

முதலில், பள்ளிக்கூட நட்பு பல்லாண்டுகளுக்குப் பிறகும் மனதில் அழிக்கமுடியாத அத்தியாயமாகிவிடுவது ஏனென்று பார்ப்போம்.

பள்ளிப்பருவத்தில் சக மாணவனை நண்பனாக மட்டுமே பார்க்கிறோம். அவனிடமிருந்து என்னென்ன கிடைக்கும். எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற எண்ணங்கள் துளியும் ஏற்படுவதில்லை. பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறபோதும், அந்தப் பழைய பதிவுதான் மனதில் நிழலாடுகிறதே தவிர வேறு நினைவுகள் வருவதில்லை. எனவேதான் பள்ளி நண்பர்களை எப்போது பார்த்தாலும் பழைய சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

இது சுகம்தான். ஆனால் கூடவே இன்னொரு சிரமும் இருக்கிறது. நட்பு என்றாலே அது பயன் கருதாதது என்பதாக ஓர் எண்ணம் நமக்குள் பதிந்துவிடுகிறது. காலப் போக்கில் கல்லூரி கடந்து வேலைக்குப் போகும் வேளையில், சக அலுவலர்கள் – சமூகத் தொடர்புகள் என்று வரும் நட்பு அத்தனையும், நம்மிடம் எதையாவது எதிர்பார்த்தே ஏற்படுகிறது. அல்லது அத்தகைய எதிர்பார்ப்புகள் இருப்பதாய் நமக்குத் தோன்றுகிறது. இதனால், சக மனிதர்களை நம்பாமை, யாருமே அன்பாக இல்லை என்கிற விரக்தி, சந்தேக மனோபாவம், எல்லாமே ஏற்படுகிறது.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்பதில் நட்புக்கு ஏதும் நிகரில்லை. என்றாலும், பயன்கருதிப் பழகுகிற பாங்கு 10% ஆவது இருக்கத்தான் செய்யும்.

உடன் பிறந்தவர்களே சொத்தில் உரசிக் கொள்கிறபோது, எங்கிருந்தோ வந்த நட்பில் ஏகமாய் எதிர்பார்த்து ஏமாறுவது கூடாது. குறிப்பாக, நெருங்கிய நண்பனுக்குத் திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பனின் வாழ்வில் தனக்கிருக்கும் முக்கியத்துவம் குறித்து, அந்தப் புதிய பெண்ணின் முன்னே நிரூபிக்க நினைத்து, அளவுக்கு அதிகமான உரிமையை சிலர் எடுத்துக்கொள்வார்கள்.

புதிதாக வந்த பெண் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் குணத்தோடிருப்பது இயல்புதான். எனவே இத்தகைய வெளியுறவுகள் ஒரு மிரட்சியைக் கொடுக்கும்.

அவர் பார்வையே சரியில்லை என்கிற விதமாய்ப் பேசத் தொடங்கினால், ஆண்டாண்டு கால நட்பின் அடித்தளமே ஆட்டம் காணத் தொடங்கும்.

இத்தகைய அணுகுமுறையால் எந்தப் பயனும் கிடையாது. இழப்புதான் மிச்சம். நண்பர்களுக்குள் எல்லைக்கோடு போட்டுக்கொண்டு – உறவின் தன்மையை நிர்ணயித்துக்கொண்டு – பழகத் தொடங்கினால் பிரச்சினைகள் தோன்றுவதில்லை.

நட்பு… பொன் முட்டையிடும் வாத்து. அறுத்துப் பார்ப்பது ஆபத்து.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 10

“எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக் கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு இவர் இன்றியமையாதவர் என்கிற எண்ணம் ஏற்படும்வரை வேலை தருபவரிடம அதிகம் எதிர்பார்க்க முடியாது.

பெரும்பாலும், நிர்வாகிகளுக்கு திறமையாளர்மீது தனிக்காதலே உண்டு. பணியில் சேர்க்கப்பட்டு, பயிற்சிக்காலம் (Probation) முடியும்முன்னர், தன் தகுதியை நிரூபிக்கிறவர் நிலை நிறுத்தப்படுகிறார். அவர் கேட்பது கிடைக்கிறது.

சில இளைஞர்கள் என்னிடம் நேர்காணலுககு வருவார்கள். கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை மெல்லப் புரட்டிவிட்டு, ஓரிரு கேள்விகள் முடிந்ததும், “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்பேன். “6000” “7000” என்று பதில் வரும். “அப்படியானால் இவ்வளவு லட்சங்கள் உங்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாமே” என்றால், “இப்போது மார்க்கெட் எப்படி என்று தெரியாது. எனவே, இலக்கு வேண்டாம் சார்” என்பார்கள். சன்மானம் குறித்துக் கவலைப்படுகுற அளவு, சவாலை எதிர்கொள்வதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை.

ஏன் இவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள் என்றால், தன் திறமைகள் பற்றிக கதாகாலட்சேபமே செய்யும் இளைஞர்கள், பலர் “இலக்கு நிர்ணயித்தல்” என்று வந்ததும் “சடக்”கென்று பின்வாங்குவார்கள்.

ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், உங்களைப் பணியிலமர்த்த நிர்வாகி துணிய மாட்டார். எனவே உங்களால் என்ன முடியுமோ, அதற்கேற்ற விலையை உங்களுக்கு நீங்களே நிர்ணயுங்கள். சம்பளம் பேசுவது என்பது லாட்டரி டிக்கெட்ட வாங்குவதுபோலக் குத்துமதிப்பாகக் கேட்டுப்பார்ப்போம். அடித்தால் லாபம்தானே இது சிலரின் வாதம். ஆனால், அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் ஒரு நம்பரில் போய்விடுகிறது என்பதுதான் உண்மை.

தகுதிக்குத் தகுந்த சம்பளம் தர நிர்வாகிகள் தயாராக இருப்பார்கள். தகுதிக்குமேல் எதிர்பார்ப்பவர்களிடம் உஷாராக இருப்பார்கள்.

முதல் அறிமுகத்திலேயே நிர்வாகம் பணியாளரையும், பணியாளர் நிர்வாகத்தையும் முற்றாக எடைபோடுவது முடியாத காரியம். “வேலை செய்யட்டும் பார்க்கலாம்” என்பது நிர்வாகியின் மனோபாவம். “பணம் தரட்டும் வேலை செய்யலாம்” என்பது பணிக்கு வருபவர் மனோபாவம். திறமையை வெளிப்படுத்த முதல் வாய்ப்பு கிடைக்குமென்றால், விட்டுக் கொடுக்க வேண்டியவர், பணிக்கு வருபவர்தான்.

நேர்காணலுக்குப் போயமர்ந்த அடுத்த நிமிடமே அந்த நிறுவனத்தின் அங்கமாகத் தன்னை வரித்துக்கொள்கிற அக்கறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

ஓர் உணவகத்துக்குப் போகிறோம். “ஒரு பிளேட் இட்லி வடை” என்றதுமே, “12 ரூபாய் ஆகும் பரவாயில்லையா?” என்று சர்வர் கேட்டால் சரியாயிருக்குமா?

அதுபோல், நேர்காணல் தொடங்கியதுமே நம் தேவைகளைப் பற்றிப் பேசுவது அவர்களை எரிச்சலூட்டும்.

நம்மால் செய்ய முடிந்ததை நாம் சொல்வோம். அவர்களால் தரமுடிந்ததை அவர்கள் சொல்லட்டும்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 9

நேர்முகத்தேர்வு பற்றி கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறையவே பேசினோம். நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வதென்பது, நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள யாரோ தருகிற வாய்ப்பு. அயல்நாட்டு இசைக் கலைஞர்கள் மத்தியில் பரவலாக ஒரு வாசகம் உண்டு. “பயிற்சியை ஒரு நாள் நிறுத்துகிறாயா? உனக்கு மட்டும் வித்தியாசம் தெரியும். பயிற்சியை இருநாள் நிறுத்துகிறாயா? விமர்சகர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.” ஆம்! பயிற்சியின்மையின் அறிகுறிகள் வெளிப்படையானவை. பலவீனத்தின் ஆரம்பக்கட்டம் அது.

தொடர்ந்து தகுதிப்படுத்திக் கொண்டே இருப்பதன் தலையாய அவசியம், நேர்காணலில் வெளிப்படும். ஒரு மனிதன் தன்மீது நம்பிக்கை கொள்ள ஒரே வழி தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வதும் தன்னை நம்புவதும்தான். “நேர்காணல்” மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நிறையப் பேர் நிறைவேற்றிவிட்டு, பிறகு நேர்காணலில் கலந்துகொள்கிறார்கள். அதனால்தான் கலைத்துவிடுகிறார்கள்.

எனவே முதலில் நீங்கள் நம்புங்கள். நீங்கள் பங்குபெறும் நேர்காணல் நேர்மையானதுதான் என்று நம்புங்கள். பிறகு அந்த நேர்காணலில் உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள். “எத்தனை இண்டர்வியூடா போவே” என்று அப்பா அலுத்துக்கொண்டாலும், நண்பர்கள், “ஆல் தி பெஸ்ட்” என்று கை குலுக்கி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் உங்களால் முடியும் என்கிற நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்துங்கள்.

அதைவிட முக்கியம், உங்கள் பலவீனத்தைத் தெரிந்துகொள்வது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு உங்களுக்குப்பிடிக்காமல் போகலாம். எனவே, அதைத் தவிர்த்துவிடலாம் என்று உள்மனம் சொல்லும். தெரியாத துறையைத் தெரிந்துகொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில்தான் வெற்றி முழுமை பெறுகிறது.

“இதெல்லாம் உனக்கு சரிப்படாது! இந்த அளவுக்கெல்லாம் உன்னால் முடியாது” என்று, உங்கள் தகுதியை வெளியிலிருக்கும் யாரோ நிர்ணயம் செய்ய அனுமதிக்காதீர்கள்.

தனது வலிமை பற்றிய மதிப்பீடு யாரிடம் உள்ளதோ அவர், அடுத்தவர்கள் மதிப்பீட்டில் தாழ்ந்துவிடுவதில்லை. குறிப்பாக, பணிநிலைத் திறன் குறித்து நாமே முடிவெடுப்பதே நல்லது.

“எந்த வேலை கிடைச்சாலும் சரி” என்று தழைந்து கொடுக்கும் மனப்பான்மை திறமையாளர்களுக்குத் தேவையில்லை. ஒருவேளை சந்தர்ப்ப சூழலால் ஏதோ ஒரு வேலையை ஏற்க நினைத்தாலும் பார்க்க விரும்பும் வேலையை என்றைக்காவது பார்த்தே தீருங்கள்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 8

விற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. “மாதம் ஒன்றுக்கு எந்த இலக்கு வரை உங்களால் எட்ட இயலும்?” என்கிற கேள்விக்கு, சாத்தியமாகக்கூடிய பதில்களையே சொல்லவேண்டும்.

கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு நான்கு கம்ப்யூட்டர்கள்தான் விற்கமுடியும் என்று நீங்கள் கருதினால், அதையே சொல்லலாம். வேலையைப் பெற்றுவிடும் அவசரத்தில், “எட்டு” என்று எட்டாத கனிக்குக் கொட்டாவி விடவேண்டிய அவசியமில்லை. அதற்கு அதிகமாக விற்றால் எப்படியும் ஊக்கத் தொகை பெறத்தான் போகிறீர்கள். எனவே இலக்கை நிர்ணயிக்கக்கூடிய நேரத்தில் நிதானம் அவசியம்.

அது குறித்து விண்ணப்பிக்கும் துறை, உங்களுக்கு வாழ்க்கை தரப்போகும் துறை. எனவே, அதிகமாகவே தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்வதில் தவறில்லை. பாடப் புத்தகங்களைக் கல்லூரி முடிந்தபின் மூடி வைத்துவிட்டால்கூட, துறைசார்ந்த இதழ்கள் – நூல்களைத் தொடர்ந்து படிப்பது அவசியம். “Update” செய்துகொள்வது என்று இதற்குப் பெயர்.

இண்டர்வியூக்களில் இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு கேள்வியை சரியாகப் புரிந்துகொள்வது. பலர் கோட்டைவிடுவது இதிலேதான். தகவல்களைத் தகவல்களாக மட்டுமே தெரிந்து வைத்துக்கொள்வதும், அதனை அறிவாக மாற்றி மனதில் பதிவு செய்து கொள்வதும் அடிப்படையில் வேறுவேறு.

மனித மூளை, பழக்கத்திற்கு அடிமை. ஒரே மாதிரியான முறையில் விஷயங்களை உள்வாங்கிப் பழகிவிட்டால் மாற்றுவது சிரமம். ஒரு கருத்தை நயம் கலந்து சொன்னால் கவிதையாகிறது. விளையாட்டாகச் சொன்னால் நகைச்சுவையாகிறது. இறுக்கத்தோடு சொன்னால் தத்துவமாகிறது. எந்த முறையில் சொன்னாலும் உள்வாங்கிக் கொள்ள திறந்த மனது தேவையாயிருக்கிறது.

உதாரணமாக, “இந்தியாவின் பிரதமர் யார்? – வாஜ்பாய்” என்று கடம் தட்டிப் பழகிவிட்டால், “வாஜ்பாய் எந்த நாட்டின் பிரதமர்” என்கிற கேள்வி கேட்கப்படும்போது கவனம் தடுமாறும். இண்டர்வியூவில் அறிவுள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று கேட்கும்போது ஒருவர் பதில் சொன்னார், “இல்லை அறிவாளிகள்தான் வெற்றி பெறுவார்கள்” என்று.

அறிவுள்ளவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? “அறிவாளி” என்கிற சொல்லின் அர்த்தம், “அறிவை ஆளத் தெரிந்தவர்” என்பதுதான். ஒரு விஷயம் குறித்து, எங்கே, எப்போது, எப்படிக் கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியும்.

அறிவுள்ளவர் அதனை வெறும் தகவலாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பழகிய பாணியில் விட்டுவிட்டு வேறுபாணியில் கேள்வி கேட்டால், சரியான பதிலைத் தன் ஞாபக அடுக்குகளில் தேடி எடுத்துக் கொண்டு வந்து தருவார்.

தகவலை அறிவாக மாற்றிக் கொண்டுள்ளவர்கள் மின்சார பல்பின் சுவிட்ச் மாதிரி. தட்டினால் எரியும். தாமதமாய் எரிந்தால், அதன் பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே… ஆமாம்! டியூப் லைட்தான்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 7

எதிர்காலம் பற்றிய உத்திரவாதம் நிகழ்காலத்திலேயே கிடைப்பதற்குப் பெயர்தான் கேம்பஸ் இண்டர்வியூ. அதில் எல்லோர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கே இடமில்லை. “பூமி பொதுச்சொத்து; உன் பங்கு தேடி உடனே எடு” என்றார் கவிஞர் வைரமுத்து. எதிர்காலத்தை எதிர்கொள் உற்சாகமாகக் கிளம்ப வேண்டியதுதான்.

நேர்முகத் தேர்வுகள் என்றாலே, அவை இளைஞர்களுக்கு எதிரானவை என்பதுபோல ஒரு தவறான அபிப்பிராயம், தமிழ் சினிமாக்களின் தயவால் உருவாகிவிட்டது. சம்பந்தம் இல்லாத அசட்டுக் கேள்விகள் – பரிந்துரை அடிப்படையில் பணி நிரப்புதல் இவையெல்லாம், நல்ல திறமையைத் தேடும் எந்த நிறுவனத்திலும் இடம்பெற வாய்ப்பில்லை.

தகுதிமீது வைக்கும் நம்பிக்கையும், நேர்கொண்ட பார்வையும், தெளிந்த சிந்தனை, கூர்மையான பேச்சு ஆகியவற்றின் அசைக்க முடியாத கூட்டணியும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தர வல்லவை.

தயக்கமில்லாமல் பேசுவதும், தவறில்லாமல் பேசுவதும் இண்டர்வியூவில் உங்களை மிளிர வைக்கும், ஆளை அசத்தும்படியாய் ஆடை மட்டும் அணிந்துகொண்டு, தட்டுத் தடுமாறிப் பேசுவது உங்கள் மீது நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. ஆடையில் கம்பீரம் அவசியம்தான். அது “அவுட்டர் வியூ” (Outer View) ஆனால் நடப்பதோ இண்டர்வியூ. உங்கள் உள்நிலையின் தகுதிகளைப் பார்க்க நிறுவனத்தினர் எடுத்துக்கொள்ளும் முயற்சியே இது.

எதிரில் இருக்கும் மனிதரை, கண்ணோடு கண் சந்தித்துப் பேசுகிற துணிவு, அதே நேரம் போதிய அளவு பணிவு இரண்டும் தேவை இண்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கு.

பணியில் சேர்வதென்பது தரப்பட்ட வேலையை இயந்திரம் மாதிரி செய்து மட்டுமில்லை. அந்த நிறுவனத்தின் இன்னொரு பகுதியாகவே மாறுவது. அதற்கென்று தனியாகத் துறுதுறுப்பு தேவை. கல்வித் தகுதி, மொழி நடை போன்ற பொதுத் தகுதிகள் தாண்டி, சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கண்களில் மின்னலாய்த் தெறிக்குமென்றால் அதுவே இண்டர்வியூ செய்யும் நிறுவனத்தாரைப் பெரிதும் கவரும்.

சிலரை பணிக்குத் தேர்ந்தெடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, நிறுவன மேலாளர், அருகிலிருக்கும் அலுவலரிடம் அலுத்துக்கொள்வார். “பையன் படிச்சிருக்கான். சர்டிபிகேட் எல்லாம் சரியாயிருக்கு. ஆனால் ஸ்மார்ட்டா இல்லையே” என்பார். அவர் தேடுவது, சாதிக்க வேண்டம் என்கிற நெருப்பு உங்களிடம் இருக்கிறதா என்பதைத்தான். நிறையப் பேர், இண்டர்வியூவைத் தங்கள் நேரத்தை செலவிடுவதற்கான கட்டணத்திற்கு பேரம் பேசுகிற வாய்ப்பாகவே கருதுகிறார்கள். அது ஒரு சவால். சவாலை எதிர்கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ஒரு தடையல்ல என்பதை, வேலை வாய்ப்பு விளம்பரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றன. அதனைப் புரிந்து நடக்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

சில இளைஞர்கள், வேலை கிடைக்க வேண்டுமே என்கிற ஆர்வக் கோளாறு காரணமாய், அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவு வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் உண்டு. அதன் விளைவாகப் பதவி ஏற்காமலேயே வாய்ப்பு இழக்கும் அபாயம் நேரலாம். ஏன் அப்படி…?

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 6

புகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேடிவந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்திற்காகத் தேர்வு செய்வதன் பெயரே கல்வி வளாக நேர்காணல் என்னும் “கேம்பஸ் இண்டர்வியூ.”

நிர்வாகவியல் (எம்.பி.ஏ.), பொறியியல் போன்ற துறைகளில் இந்த முறை மிகவும் பிரபலம். செய்தித் தொடர்பியல் (மாஸ் கம்யூனிகேஷன்ஸ்) பிரிவிலும் சில கல்லூரிகளில் இத்தகைய தேர்வுகள் நடைபெறுகின்றன.

இறுதியாண்டில் இருக்கிற எல்லா மாணவர்களுமே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் மூன்றுவிதமான படிநிலைகளில், நேர்காணலுக்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் தகுதி மதிப்பெண். உதாரணமாக, அரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அழைக்கப்படுவதுண்டு. அடுத்தது எழுத்துத்தேர்வு. மூன்றாவது படிநிலை குழு கலந்துரையாடல்.

அரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத் தேர்ச்சி என்பது, மேற்கொண்ட கல்வித் துறைகளில் மாணவனின் ஆளுமை குறித்த நம்பிக்கையை, வேலை வாய்ப்பு வழங்க வந்திருக்கும் நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது.

எழுத்துத் தேர்வு, ஏட்டளவில் கற்றதை நடைமுறைக்கு கொண்டுவரும் ஆற்றலை உறுதி செய்து கொள்ளத் துணைபுரிகிறது. மூன்றாவதாகக் குழு கலந்துரையாடல், மாணவரின் தனிமனிதப் பண்புகள், பேசுகிற – பழகுகிற முறை, முடிவெடுக்கும் ஆற்றல், ஒரு குழுவின் அங்கமாகப் பணிபுரியும் தன்மை போன்றவற்றை நிர்ணயிக்க உறுதுணை புரிகிறது.

இத்தனைக்கும் பிறகு, தொடக்கச் சம்பளத்தை நிர்வாகம் நிர்ணயிக்கிறது. மாணவனின் திறமைகள் பெருமளவில் நிர்வாகத்தை ஈர்த்துவிட்டால், மாணவன் கேட்கும் தொகை அதிகமாக இருந்தாலும் பரிசீலிக்கப்படுகிறது.

இன்று மென்பொருள் நிறுவனர்கள் (சாஃப்ட்வேர்)தான் அதிகமாக இத்தகைய கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்துகின்றன. முன்பைவிடவும் இந்தத் தேர்வு முறையில் இப்போது போட்டிகள் அதிகம். ஏனெனில் தனியார் நிறுவனங்களில் பதவி விலகுவோர் எண்ணிக்கை மிகுதியாக குறைத்திருக்கிறது. எனவே, தங்கள் திறமையை முழுவதும் வெளிப்படுத்தும் மாணவர்களுக்குத்தான் பெரிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை வழங்குகிறார்கள்.

எனவே, தான் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு பற்றி சிலபஸில் இருப்பதை மட்டும் பயிலாமல், நூலகங்களின் துணையோடு துறைசார்ந்த அறிவைப் பெருக்கிக் கொள்வது அவசியம்.

கேம்பஸ் இண்டர்வியூ இறுதியாண்டில்தானே என்று அலட்சியமாக இருக்கவும் வாய்ப்பில்லை. அரியர் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதம் என்கிற முதல் நிபந்தனையைப் பார்த்தால், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளே கேம்பஸ் இண்டர்வியூவிற்குத் தயாராக வேண்டிய அவசியம் புரியும்.

சரி… ஒருவேளை கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படவில்லை என்றால், அத்தகைய மாணவர்கள் என்ன செய்யலாம்?

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 5

பட்டப்படிப்பு முடிந்தவுடனே வேலை தேடும் படலம். இது கடந்த காலம். குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே, “கை நிறையச் சம்பளம்” என்கிற கனவை நனவாக்கும், “கேம்பஸ் இண்டர்வியூ”க்களின் காலம் இந்தக் காலம். உள்ளம் நிறைய உறுதி, முனை மழுங்காத முனைப்பு, இலக்கை எட்டுவதில் தீவிரம் போன்ற குணங்களுடன், கல்வி வாழ்க்கையை ஒரு சவாலாக மேற்கொள்ளும் யாரும் தோற்றுப்போக முடியாது. தனியார் நிறுவனங்களின்மூலம் இந்த தேசத்திற்கு ஏற்பட்டிருக்கிற நன்மை, பணி வாய்ப்பு என்பது பரிந்துரைகளின் அடிப்படையில் இல்லாமல் தகுதிகளின் அடிப்படையில் தரப்படுவதுதான்.

இன்றைய உலகத்தில், தகுதிகள் மட்டுமே தலையெடுக்கும் என்பதால், “கற்றதில் தெளிவு” என்பது கட்டாயப் பாடம் ஆகிவிட்டது.

இந்தத் தீவிரமான சூழலுக்கு ஈடுகொடுக்கும் இளைஞர்கள் எழுந்து நிற்கிறார்கள். மற்றவர்கள் துவண்டு விழுகிறார்கள். தன்னைத் தானே கூர்மை செய்துகொள்வது தன்னுடைய கையில்தான் என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் புத்திசாலிகள். ஏனெனில் அது மிகவும் எளிய வழி.

போர்வீரன், தன் கைவசமிருக்கும் ஆயுதங்களைக் கையாள்வதில் கவனமாயிருப்பது மாதிரி, மாணவர்கள் தங்கள் தகுதியைத் தாங்களே எடை போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற துறையில் சேர்ந்து அறிவை ஆழப்படுத்தி, வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில கேம்பஸ் இண்டர்வியூக்களில், இரண்டு, மூன்று நல்ல நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு, எதில் சேர்வது என்கிற சந்தோஷக் குழப்பத்தில் இருக்கும் இளைஞர்களே ஏராளம். அப்படிப் பல நிறுவனங்களால் விரும்பப்படுவது ஜாதகத்தின் பலனல்ல. சாதகமான விஷயங்களைப் பலமாக்கிக் கொண்டதன் பலன்.

எனவே, கல்வியின் மைல்கல்லைக் கடக்கும் பருவத்தில், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்தக் காலத்திலே வேலை உடனே கிடைக்குமா?” என்று யாராவது கேட்டால், “அதெல்லாம் உங்க காலத்திலே” என்று அடித்துச் சொல்கிற அழுத்தமான நம்பிக்கையின் வார்ப்புகளாய் உருவாகுங்கள்.

“எங்கேங்க… நமக்காவது வேலை கிடைக்கறதாவது” என்கிற எதிர்மறை மனோபாவத்தை எரிக்கும் சக்தி அறிவின் சுடருக்கே உண்டு. இளைஞனுக்கு தன்னைக் குறித்த கம்பீரம் துளிர்விட வேண்டும். தன்னைக் குறித்த கம்பீரம் என்பது, தகுதியால் மட்டுமே வருவது. கல்வியைப் பொறுத்தவரை ஒருவன் தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வது சுலபமா? கடினமா? என்கிற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

கடின உழைப்பு இருந்தால் அது மிகவும் சுலபம் என்பதுதான் உண்மை. தளராத முயற்சியின் உயரம்தான் தகுதிக்கான உயரம். அது பிறர் கொடுத்து வருவதுமில்லை. பறிர் தடுத்துக் கெடுவதுமில்லை.

உல்லாசங்கள், கேளிக்கைகள் போன்றவை இளைஞனின் இயல்பாயிருந்தாலும், அதற்கான நேரம் – பகுதி நேரத்தின் ஒரு பகுதிதான். மற்ற நேரங்கள் தகுதிக்கான… தகுதியை மிகுதிப்படுத்துவதற்கான நேரங்கள்.

அதுசரி, “கேம்பஸ் இண்டர்வியூ” எனப்படும் கல்வி வளாக நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 4

ஒரு காலத்தில் “கல்லூரிப் பருவம் என்றால் கலாட்டா பருவம்” என்கிற எண்ணம் இருந்து வந்தது. இன்று நிலைமை வேறு. விபரமுள்ள இளைஞர்களிடம் விசாரித்துப் பாருங்கள். கல்லூரிக்குப் பள்ளிக்கூடமே தேவலாம் என்பார்கள். ஆமாம், கையில் ஒரே ஒரு நோட்டுப்புத்தகத்துடன் ஜாலியாகப் போய் அட்டெண்ட்ஸ் கொடுத்துவிட்டு சினிமா தியேட்டரில் ஆஜராகும் வாழ்க்கைதான் கல்லூரி வாழ்க்கை என்கிற கனவு கலைந்து விட்டது.

பன்னிரண்டாம் வகுப்பின் பரபரப்புக்குச் சற்றும் குறையாமல் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதுதான் இன்று யதார்த்தமான சூழ்நிலை.

நிறைய மாணவர்களைப் பொறுத்தவரை, மறக்கப்பட்ட வாய்ப்புக்கான மற்றொரு வழியே கல்லூரியின் முதலாமாண்டு. உதாரணமாக, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராக கணேஷ§க்கு விருப்பம். கிடைக்கவில்லை. பி.எஸ்.சி. பயாலஜியில் சேர்ந்து எம்.எஸ்.சி. படித்து, எம்ஃபில் முடித்து, பி.எச்.டி. ஆய்வு செய்து, “டாக்டர்” ஆகலாமே என்கிற எண்ணம் பிறக்கிறது. உற்சாகமாகத் தனது கல்விப் பயணத்தைக் கணேஷ் தொடங்குகிறார்.

“விரும்பியதை அடைய விரும்பு. முடியாவிட்டால் அடைந்ததை விரும்பத்தக்க வெற்றியாக்கிக்கொள்” என்கிற புதிய கொள்கை இன்று பரவலாக மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

அசைன்மெண்ட், இண்டேர்னல், செமஸ்டர் என்று கண்ணும் கருத்துமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை கல்லூரிகளில் இப்போது! நிகழ்காலத்தின் இளமைத் துள்ளலை அனுபவித்துக்கொண்டே, எதிர்காலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் கல்லூரி இளைஞர்கள். பள்ளியில், ஒவ்வொரு வகுப்பும் அரைமணி நேரம்தான். கல்லூரியில் அது ஒரு மணி நேரமாகும்.

படித்து முடித்த பிறகு அலுவலகத்தில் தொடர்ந்து எட்டுமணி நேரம் உட்கார ஒவ்வோர் இளைஞனும் கல்லூரியில் தயாராகிறான்.

“பள்ளிக்கூடமே பரவாயில்லை” என்று கல்லூரியைச் சொல்லக் காரணமுண்டு. பள்ளிக்குத் தொடர்ந்து சில நாட்கள் வராவிட்டால் ஆசிரியர் கேட்பார். கடிதம் கொடுக்க வேண்டும். அவசியப்பட்டால் அப்பாவை அழைத்துவர வேண்டும். கல்லூரியில் அதெல்லாம் கிடையாது. ஆனால் விடுமுறை எடுக்கிற நாட்களின் எண்ணிக்கை எல்லை மீறிவிட்டால், Lack of attendence என்று சொல்லித் தேர்வு எழுதுவதைத் தடுத்து விடுவார்கள். எனவே, தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுக்க முழுக்க மாணவன் கையில்.

உயர்வோ, தாழ்வோ அடுத்தவர்களால் வருவதில்லை என்பதை உணர்ந்துகொள்ள அருமையான வாய்ப்பு கல்லூரிப் பருவம். கேளிக்கைகளில் கலந்துகொள்ளலாம். கரைந்துவிட முடியாது. காதலின் சுகம் உணர முடியும். சுயம் இழக்க முடியாது. ஒரு கையில் ஆயுதமும் ஒரு கையில் மலர்ச்செண்டுமாய் வாழப்படுகிற வாழ்க்கை கல்லூரி வாழ்க்கை. தனக்கேற்ற துறையில் சரியாக நுழைந்து, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வாழ்க்கை தருகிற வசந்த வாய்ப்பே கல்லூரிப் பருவம். காதல் பற்றிக் கலர்க் கனவுகளோடு கல்லூரிக்குள் நுழையும் இனிய நண்பர்களே! கல்லூரியில், உங்கள் எதிர்காலத் துணையை மட்டும் தீர்மானிக்காதீர்கள். எதிர்காலத் தொழிலையும் தீர்மானியுங்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)