வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 1

கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும் பேச்சும் இருந்தால் தினமும் தீபாவளிதான். மகிழ்ச்சிப் பொங்கல்தான்.

உங்கள் குடும்ப வாரிசு குருத்து விடுகிற சம்பவம் மட்டுமல்ல, குழந்தைப்பேறு. அது, இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டது. கருவிலிருக்கும் குழந்தையை பெற்றோர் அவரவர் வாழ்க்கைமுறைக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப பாதிக்கவோ, சோதிக்கவோ செய்யலாம் என்பது மருத்துவ உண்மை.

அலறல் வாத்தியங்கள், அழுமைச் சத்தம், அதிர்ச்சி தரும் ஓசைகள், ஆவேச உணர்வுகள் சுற்றுப்புறத்தில் அலைமோதும்போது, கருவிலிருக்கும் குழந்தையின் மனதில் அந்த அதிர்வுகளின் பதிவுகள் தவிர்க்க முடியாததாகின்றன. அதன் விளைவுகளும் மோசமாகின்றன. எனவே கருவுற்ற பெண் இருக்கிற வீட்டில் ஒலிக்கிற இசை இதமாகவும், மிதமாகவும் இருக்க வேண்டும். காற்று கறுப்பை நுழையாமல் பார்ப்பதுபோலவே, கண்ணீர் மல்கும் சீரியல்களையும் தவிர்க்க வேண்டும்.
கருவிலிருந்தபோதே அபிமன்யு, வியூக விபரங்களைக் கேட்டதாகவும், அதை முழுமையாக சொல்லாததால்தான் போர்க்களத்திலே சிக்கிக் கொண்டதாகவும் சொல்வதுண்டு.

கருவிலிருக்கும் காலம் தொட்டே குழந்தை பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதமான இசை, இனிமையான சொற்கள், நல்ல இலக்கியங்கள் போன்றவை ஒலிக்கும் சூழலில், கருவுற்றிருக்கிற பெண் வாழ்ந்து வந்தால் பிறக்கும் குழந்தையிடம் அந்தப் பண்புகள் படியும்.

அது நம் வீட்டில் இயல்பாகவும் மாறிவிடும். நம் வீட்டின் முகவரி, கதவிலக்க எண்களில் மட்டும் இல்லை. நாம் நம் வீட்டைச் சுற்றி உருவாக்கியுள்ள உணர்வுகளில் இருக்கிறது. நம் வீட்டிற்கு யாராவது வழிகேட்டால், நான்கு பேர் நல்லவிதமாக அடையாளம் சொல்ல வேண்டும் அல்லவா? வீட்டை உருவாக்கும்போதே அதற்கும் சேர்த்து அஸ்திவாரம் போட வேண்டும்.

வீடு என்பது கல்லாலும் மண்ணாலும் கட்டப்படுகிற கட்டடம் மாத்திரம் அல்ல. கனவுகளும் இலட்சியங்களும் உருவாகும் இடம். ஒரு குழந்தை பிறந்து வளர்வதற்கான அடிப்படைச் சூழ்நிலைகளில் ஒன்று பரம்பரை இயல்புகள். இன்னொன்று, சுற்றுச்சூழல் இயல்புகள்.

கருவுற்ற நாள் தொடங்கி, தொற்று நோய்களைத் தவிர்க்க, தாய்க்கு நிறைய தடுப்பூசிகள் போடுகிறார்கள். கலை –  இசை போன்றவையும் உணர்வு சார்ந்த தடுப்பூசிகள்.

உங்கள் குழந்தை, உங்கள் முகவரியாகவும், உங்கள் பரம்பரையின் முகவரியாகவும் பெயர் சொல்லப்போகிற பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்துக்குப் பொருத்தமான சூழல் வீட்டுக்குள் உருவாகிவிட்டதா என்று முதலில் கவனியுங்கள்.

“பியானோ வாங்கி வைத்திருப்பவர்களெல்லாம் இசைக்கலைஞர்கள் இல்லை. பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் பெற்றோர்கள் இல்லை” என்றொரு மேல்நாட்டுப் பழமொழி உண்டு.

அன்பும் அமைதியும் மிக்க வீட்டுச் சூழல் உருவாகும் என்றால், அங்கு பிறந்து வளர்கிற பிள்ளைகள்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

குழந்தை, கருவிலுள்ள காலம் தொடங்கி, பிறந்து வளர்கிற காலத்திலும் அதன் உள்ளத்தில் உன்னதமான உணர்வுகள் பதியும் விதமாய் உங்கள் குடும்பச் சூழலை உருவாக்குங்கள்.

ஏனெனில், பிறந்து வளர்வது பிள்ளையல்ல –  இந்தப் பிரபஞ்சத்தின் புதிய நம்பிக்கை!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

21. சவால்கள் சுகமானவை

சின்ன வயதில் தேர்வுக்குத் தயாரான நினைவு இருக்கிறதா? ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் விழுந்து விழுந்து படிக்கும்போதோ எழுதிப் பார்க்கும் போதோ மானசீகமாக தேர்வைத்தான் எழுதிக் கொண்டிருப்போம். எது தயாரிப்பு? எது தேர்வு என்று தெரியாத அளவு தீவிரம் மனதில் குடி கொண்டிருக்கும்.

தேர்வுக்கு முன்பே தேர்வெழுதும் நிமிஷங்களை மானசீகமாக வாழ்கிற மாணவன் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது போல, ஒரு தயாரிப்பின் உருவாக்க நிலையிலேயே அதன் மார்க்கெட்டிங் அம்சங்கள் பற்றியும் எந்த நிறுவனம் சிந்திக்கிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெறுகிறது.

எதைத் தருகிறோம்? எதற்காகத் தருகிறோம்? யாருக்கு தருகிறோம்? எப்படித் தருகிறோம் என்ற நான்கு கேள்விகளுக்குள் மார்க்கெட்டிங் வெற்றி மறைந்து கிடக்கிறது.

இதில் முதல் இரண்டு படிநிலைகள் ஒரு கரு உருவாகும் ஆரம்ப நிலைபோல் அடிப்படையானது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுப் பார்வையில் சாதாரணமாகத் தென்படும் ஒரு விஷயம், கூர்மையான ஒருவரின் பார்வையில் ஒரு தங்கச்சுரங்கமாகத் தெரியும்.

யார் வீட்டுக்குப் போனாலும் அவரவர் குழந்தைகளின் திறமைகளை விருந்தினர்களுக்கு வெளிப்படுத்தச் சொல்லி சந்தோஷப்படுவது, பெற்றோர்களின் இயல்பு. இதை பெற்றோர்கள் செய்யாமல் ஒரு சேனல் செய்தால் எப்படி இருக்கும்? இந்த ‘பளிச்’ யோசனையின் ‘பலே’ வெற்றிதான் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்.

ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் சின்னக் குழந்தைகளின் பாடல், ஸ்டார் விஜய் டீவியின் இந்த நிகழ்ச்சி பெற்ற வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள்.

இதை எதற்காகத் தருகிறோம் என்கிற தெளிவும் இதன் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. நிகழ்ச்சியில் பாடும் குழந்தைகள் மட்டுமின்றி, பாட்டில் நாட்டம் மிக்க பிள்ளைகளும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி எதற்காக? பிள்ளைகளின் திறமைகள் வெளிவர வேண்டும். அதற்காக!!

யாருக்கு, எப்படி என்பதெல்லாம் நிகழ்ச்சியின் தரம் சார்ந்த அம்சங்கள். அபாரமான நிபுணர்கள் நடுவர்களாகவும் நிபுணர்களாகவும் பங்கேற்கத் தொடங்கியதும் மேலும் மெருகேறி இந்த நிகழ்ச்சி இமாலய வெற்றியை எட்டி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் அம்சமும் உள்ளீடுமே அதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துவிட்டன. இந்த நிகழ்ச்சியின் இயல்பான சமூக அக்கறையே அதை மக்களிடம் சென்று சேர்த்துவிட்டன.

இதேபோல் அச்சு ஊடகத்தில், தினமலர் செய்த புதுமை, குழந்தைகளின் பிறந்த நாளில் அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது. தங்கள் குழந்தைகளின் வண்ணப்படங்களை பெற்றவர்கள் மட்டுமின்றி உற்றவர்களும் பார்த்துப் பரவசம் அடையும் வாய்ப்பை இந்த நாளிதழ் வழங்கியது. ஒரு சிறு புகைப்படத்திற்காக பல குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் இந்த இதழை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு ஊடகங்களிலுமே மார்க்கெட்டிங் என்கிற அம்சம் வெளிப்படையாக இல்லை. அதேநேரம் இவர்களின் இலக்கும் தப்பவில்லை. “நல்லதுக்கு காலமில்லை” என்னும் தவறான கருத்து தவறாகிப் போனதுதான் இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி. வித்தியாசமான கண்ணோட்டங்கள் வென்றே தீரும் என்னும் உண்மை சமூகத்திலும் வணிகத்திலும் தொடர்ந்து வென்றுகொண்டே வருகிறது. ஒரு புதிய அனுபவத்தைப் பெறும்போது நுகர்வோர்கள் அதனை மறப்பதேயில்லை. அந்த அனுபவத்தைத் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அத்தனை பேரோடும் பகிர்ந்து கொள்ள அவர்களே முன்வருவதால் தங்களையும் அறியாமல் நல்லெண்ணத் தூதுவர்களாக வடிவெடுக்கிறார்கள்.

நல்ல விஷயங்களை வல்லமையுடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும், கொடுத்த உத்திரவாதத்தைக் காப்பதும் இந்த வெற்றியின் வேர்கள். ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்கிறபோது மனதில் மலரும் உற்சாகமே மேன்மேலும் வெற்றிகளை எட்டத் தூண்டுகிறது. உலகெங்கும் மார்க்கெட்டிங் வெற்றிகளின் மூலங்களை ஆராய்ந்தால் இதுவே பொதுவான உண்மை என்பது புலப்படும்.

நல்ல விஷயங்கள் நம்பகத்தன்மையுடன் வருகிறபோது சமூகம் வரவேற்கவே செய்கிறது. தன்னுடைய தயாரிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் அந்த நம்பிக்கையே உந்திச் செல்கிறது. உயர்வுகளைத் தருகிறது. மார்க்கெட்டிங் என்பது விற்பனை மட்டுமல்ல. வாழ்வை வசதியாக்கிக் கொள்ள சமூகத்துக்குத் தருகிற வாய்ப்பு. அந்த வசதி ஒரு தயாரிப்பாகவோ ஒரு சேவையாகவோ இருக்கலாம். ஆனால் அதிலிருக்கும் புதுமையும் உண்மையும்தான் அந்த தயாரிப்பையோ சேவையோ தவிர்க்க முடியாததாய் ஆக்குகிறது.

தவிர்க்க முடியாத சக்தியாகத் தங்களை தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்துவிட்டால் சவால்கள் சுகமானவை. சாதனைகள் சகஜமானவை. எந்தத் துறையிலும் வெற்றிகள் சாத்தியம். எந்த நிலையிலும் புதுமைகள் சாத்தியம். எந்த வகையிலும் வாழ்வது சாத்தியம். எந்த கனவையும் தொடுவது சாத்தியம். இவைதானே மார்க்கெட்டிங் மந்திரங்கள்!!!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

20. முயற்சித்துப் பார்க்கலாமே!

மார்க்கெட்டிங் என்ற சொல்லின் உட்பொருளை விரிவுபடுத்திக்கொண்டே போனால் அதன் அடிநாதம், நம்பிக்கையைப் பெறுவதுதான். இந்த உலகம் யாரை நம்புகிறது ஏன்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இதில் அடுத்தடுத்த படிகளை வெகு சுலபமாகக் கடந்து விடலாம்.

தனித்தன்மை உள்ளவர்களை உலகம் நம்புகிறது. தனித்தன்மையை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களையெல்லாம் உலகம் நம்புகிறது.

இந்தியச் சூழலில் ஒரு மனிதருக்கு ஒவ்வொரு வாரமும் 56 மணிநேரங்கள் வேலையில் கழிகின்றன. மேலும் 10 மணி நேரங்கள் வேலை சார்ந்த பயணங்களில் கழிகின்றன. இது தவிர குடும்பம், உறவு, நட்பு என்று தயாரிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, நம்பி, இதை வாங்குவதென்று தீர்மானிப்பதற்கு காலதாமதம் ஆகும். வெளியிலிருந்து உந்துதல் இன்றி இந்த முடிவை தள்ளிப் போடவே செய்வார்கள். உயிர் காக்கும் மருந்தையோ உடனடி அத்தியாவசியப் பொருளையோ வாங்குகிற சூழல்கள் மட்டும் விதிவிலக்கு.

ஒரு தயாரிப்பின் தனித்தன்மையை நினைவுபடுத்துவதும் வலியுறுத்துவதும் வெளிப்படுத்துவதும் மார்க்கெட்டிங்கின் மிக முக்கியக் கடமைகள். ஒரு டியூப் லைட் வாங்க வேண்டுமே என்ற உண்ணம் ஏற்பட்ட அடுத்த விநாடி எந்த டியூப் லைட் வாங்குவது என்கிற கேள்வியே இல்லாமல், குறிப்பிட்ட தயாரிப்பின் பெயர் ஒருவருக்கு நினைவுக்கு வர வேண்டும். (இவரே ஒரு டியூப் லைட்டாக இருந்தாலும்கூட நினைவுக்கு வர வேண்டும்) இந்த அளவுக்கு சந்தை மதிப்பையும் தாண்டி வாடிக்கையாளர்களின் சிந்தை மதிப்பை ஓரு தயாரிப்பு பெறுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவூட்டல்கள் ஆவசியம்.

இரண்டாவதாக போட்டித் தயாரிப்பாளின் தயாரிப்பைக் காட்டிலும் தங்களின் தனித் தன்மை என்ன என்பதை வாடிக்கையாளர்கள் மத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்த வேண்டும். “இதுவும் டியூப் லைட். அதுவும் டியூப்லைட். என்ன பெரிய வித்தியாசம்” என்கிற கேள்வி எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல.

ஒரு தனிமனிதனில் தொடங்கி தயாரிப்பு வரை தனித்தன்மையால் மட்டுமே நினைவில் நிற்க முடியும். மற்றவர்கள் நம்பும் விதமாக தரத்தின் பெயராலும் சேவையின் பெயராலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் விபரங்கள் முதலில் பார்க்கப்படுகின்றன. பிறகு கவனிக்கப் படுகின்றன. பிறகு, “முயற்சித்துப் பார்க்கலாமே” என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

மூன்றாவது கட்டம், வெளிப்படுத்துவது. ஒரு தயாரிப்பின் தன்மை பயன்படுத்திப் பார்க்கும் போதுதான் வெளிப்படுகிறது. “மார்க்கெட்டிங் உத்திகள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு, பயன்படுத்திப்பார்க்கும் அனுபவத்துடன் ஒத்துப்போகும் வேளையில் வாடிக்கையாளருக்கு ஏற்படும் மனநிறைவு. உண்மையில் இது முதல்படி மட்டுமே!!

வாடிக்கையாளரை நம்ப வைப்பதுடன் நில்லாமல் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் இவருக்கிருக்கும் முழுமையான அனுபவம் இதிலே முக்கியம். மார்க்கெட்டிங் பிரிவின் வேலைகளில் நேரடிப் பங்குதாரர்கள் விளம்பர நிபுணர்கள். விளம்பர உலகின் மிக முக்கிய நிபுணரான டேவிட் ஒகில்வி, தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய தயாரிப்புகளைப் பயன்படுத்துவது என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தார். எந்தத் தயாரிப்பையும் நுகர்வோர் கண்ணோட்டத்திலிருந்து அணுகும்போதே இதன் குறை நிறைகள் புரியும்.

வாடிக்கையாளர்களின் புகார்கள் எல்லாமே குறை சொல்லும் கண்ணோட்டத்துடன் சொல்லப்படுபவை அல்ல. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் தங்கள் மீதான விமர்சனங்களை மறுத்து தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் அணுகுமுறை புரிந்து கொள்ளக்கூடியதே தவிர நியாயப்படுத்தக்கூடியது ஆல்ல.

ஓர் உதாரணம். பெரிய நிறுவனங்களுக்கு உள்நிலை தணிக்கையாளர்கள் உண்டு. Internal Auditors என்றழைக்கப்படும் இவர்கள், வெளியிலிருந்து வரும் தணிக்கையாளர்கள் போலவே கண்டிப்புடன் தணிக்கையில் ஈடுபடுவார்கள். இத்தகையை உள்நிலை தணிக்கையாளரின் அணுகுமுறையுடன் தரம், சேவை ஆகிய தன்மைகளை கண்காணிக்கும் பொறுப்பு மார்க்கெட்டிங் அலுவலருக்கு உண்டு. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். வரவேற்பு அலுவலர்கள் தொடங்கி ஒவ்வொரு பிரிவினரின் அணுகுமுறையிலும் மார்க்கெட்டிங் மனோபாவம் இருந்தால் இதுவே நிறுவனத்தின் வெற்றி. ஏனென்றால் மார்க்கெட்டிங் என்பது விற்பனை சம்பந்தப்பட்டதல்ல. உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் தங்கள் தயாரிப்புக்கும் மக்கள் மனங்களுக்கும் நடுவே உறவுப்பாலம் உருவாக்குவதே மார்க்கெட்டிங்.

தந்த உத்திரவாதத்தை தக்க வைத்துக் கொள்வதும், சேவை மதிப்பை அதிகரிப்பதும் போட்டியாளர்களைப் புறந்தள்ளிப் புதுமைகள் படைப்பதுமே மார்க்கெட்டிங் மந்திரங்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)