நற்றுணையாவது நமச்சிவாயவே!-4

நான்காம் திருமுறை உரை

ஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது என்று நினைத்து பாம்பு பயந்துவிட்டது. அப்போது உமையம்மை பார்த்து பயந்து இப்படி விலக, பாம்பு பயந்து இப்படி விலக, பாம்பு இங்கே வந்ததும் பெருமான் சடாபாரத்தில் இருக்கிற நிலவுக்குப் பயம் வந்துவிட்டது. தன்னை விழுங்க பாம்பு வந்துவிட்டது என்று. கடவுள் பக்கத்திலேயே இருந்தாலும் மனிதனுக்குப் பயம் வரும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம். மனநல மருத்துவர் வந்திருக்கிறார். மனதில் பயம் வந்தால், அவ்வளவு சீக்கிரம் போய்விடாது.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே

இவை மூன்றும் பயந்ததாம். இதைப் பார்த்து சிவபெருமான் என்ன செய்தார். என் பக்கத்தில் இருக்கும் போதே மூன்று பேரும் இப்படி பயப்படுகிறீர்களே என்று விழுந்து விழுந்து சிரித்தார். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்று கவிதையில் எப்படி எழுதுவார்கள்-? அந்த சவாலை திருநாவுகரசர் எடுத்துக்கொள்கிறார்.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.
என்கிறார்.

இதை கதையை திருவாரூரில் சொல்கிறார். இதில் இன்னொன்று என்னவென்றால் பாம்பை பார்த்து தன்னைக் கடிக்க வருகிறது என்று நிலா பயந்தது. அதை விரிவுபடுத்தி திருவாரூரில் இதே கதைக்குச் சொல்கிறார். நிலா பயந்து சிவபெருமானுடைய யானை தும்பிக்கைக்கு பக்கத்தில் போய் மறைந்து கொண்டது. ஒரு துளி நிலா வெளியில் தெரிய மின்னல் என்று நினைத்து பாம்பு பயந்தது. நிலாவைப் பார்த்து பாம்பு பயப்பட, பாம்பைப் பார்த்து நிலா பயப்பட, பாம்பைப் பார்த்து உமா பயப்பட, உமாவைப் பார்த்து பாம்பு பயப்பட தன்னைச் சுற்றி மனம் என்கின்ற ஒன்றை கட்டுப்படுத்தாவிட்டால் கைக்குள்ளே கடவுள் இருந்தாலும் மனிதன் பயந்து சாவான் என்று இது நமக்கு உணர்த்துகிறது. இந்த அச்சம் வரக்கூடாது.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

மேலைநாட்டு பயிற்சியாளர் வந்தால் 2000ரூபாய் கொடுத்து நாம் வகுப்புக்கு போய் உட்காருகிறோம். பயிற்சியாளர் Passtive attitude என்று சொல்வார். இதை அவர் அன்றே சொல்லிவிட்டார், இன்பமே என்நாளும் துன்பமில்லை. எனவே நாவுக்கரசர் பெருமான் உளவியல் சார்ந்தும் பல புதுமைகளை செய்து இருக்கிறார்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

நற்றுணையாவது நமச்சிவாயவே!-3

நான்காம் திருமுறை உரை

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

என்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய சடா பாரம் மின்னல் போல் இருக்கிறது.

அவர் ஏறுகிற அந்த வெள்ளை ஏறு இருக்கிறதே அதனுடைய நிறமும், அவர் மார்பில் பூசுகிற திருநீற்றின் நிறமும் ஒன்றாக இருக்கிறது. பெருமானுடைய திருமேனி பாற்கடல் போல் இருக்கிறது. உதிக்கின்ற கதிரவனுடைய திருவடி போல் சிவபெருமானுடைய திருவடி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சூரிய நிறத்தில் திருவடி இருக்கிறது.

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.
என்று திருவாரூர் பக்கத்தில் திருவாதரைநதி இறைவன் பாடுகிறார்.

அப்படியென்றால், சேரமான் பெருமான் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அநேகமாக இந்த நான்காம் திருமுறையாக இருக்ககூடும் என்று நமக்குத் தோன்றுகிறது. திருத்தொண்ட தொகைக்கு அவர் எப்படி முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம். சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதிக்கு முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம்.

இந்த மனதினுடைய உருக்கத்தைச் சொல்கிறபோது இந்த இறைவன் வாழ்க்கையினுடைய துன்பங்களில் இந்த உயிர் எப்படி தடுமாறுகிறது என்று சொல்ல வந்தவர்கள், அதற்கு உவமையாக தயிர் எப்படித் தடுமாறுகிறது என்று சொன்னார்கள். மத்து இட்டு தயிரைக் கடைந்தால் தயிர் எப்படித் தடுமாறுமோ அப்படி உயிர் தடுமாறுகிறது. ஏனெனில், முதலில் திருவாசகத்தில் பார்க்கிறோம், “மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” மாணிக்கவாசக பெருமான் சொல்கிறார்.

இந்த உவமையை பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாளுகிறார். எங்கே கையாளுகிறார் என்றால் அனுமன் போய் சொல்லுகிறான். சீதா பிராட்டி இடத்தில், “உன்னைப் பிரிந்து இருக்கிற இராமனுடைய மனது எப்படி இருக்கிறது தெரியுமா? மத்தில் சிக்கிய தயிர் போல அப்படி இப்படி போய்வருகிறது” என்கிறான் அனுமன்.

“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற
பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை”

திருக்கடவூரில் அபிராமிபட்டர் இந்த உவமையை எடுக்கிறார்.

“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய்” என்கிறார்.

மாணிக்கவாசகர் இடத்திலேயும், கம்பர் இடத்திலேயும், அபிராமிபட்டர் இடத்திலேயும் நாம் பார்க்கிற இந்த உவமையை முதலில் பாடியவர் நாவுக்கரசர் பெருமான் என்பது நமக்கு தெரிய வருகிறது.

இதே திருவாரூரில் மூலட்டான நாதரை பாடுகிறபோது

பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.

என்று கேட்கிறபோது ஒரு பெரிய இலக்கிய முன்னோடியாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரிய வருகிறது. நாம் இதுபோன்ற பார்வையில் பார்க்கிறபோதுதான் நமக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரிய வருகிறது. எல்லாவற்றையும்விட நாவுக்கரசர் பெருமானிடத்தில் நான் மிக வியந்து பார்க்கிற விஷயம் ஒன்று உண்டு.

கோவையில் ஒரு பெரிய தமிழறிஞர் 94வயது வரை வாழ்ந்தார். சகோதரி சாரதா அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் முனைவர்.ம.ரா.போ.குருசாமி அவர்கள் நம்முடைய சாமி ஐயா அவர்களுடைய தலைமாணாக்கன். அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். திருக்குறளில் நகைச்சுவை எப்படி இருக்கும் ஐயா என்று கேட்டேன். அவர், “திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது; இல்லாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் ஓர் உவமை சொன்னார், “போலீஸ்காரர் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என்று. அது மிகவும் பொருத்தமான ஒரு உவமையாக இருந்தது. நாம் சிரித்தபிறகு பார்த்தால் அவருக்கு போலீஸ்காரர் ஞாபகம் வந்துவிடும். அதுமாறி நாவுக்கரசர் பெருமானை ஒரு தன்னிகரக்கம் மிக்கவராக எப்படிப் பார்த்தாலும் தான், சமணத்துக்கு போய் வந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடியவராக.

பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.

அந்த தன்னிரக்கத்தோடு பாடுகிறவராக நாம் பார்க்கிறோம்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

நற்றுணையாவது நமச்சிவாயவே!-2

நான்காம் திருமுறை உரை

இங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும்.

திருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு இதே தேவாசிரியர் மண்டபத்திற்கு திருநாவுக்கரசர் பெருமான் எழுந்தருளுகிறார். அவருக்கு தோன்றுகிறது, அங்கே அடியார் பெருமக்கள் எல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். சுந்தரருக்கு முன்னாலே இப்படியரு சூழ்நிலை நாவுக்கரசர் பெருமானுக்கு ஏற்படுகிறது. அவர், அவர்கள் அருகே போய் வணங்குவதற்கு அஞ்சுகிறார்கள்-. நாவுக்கரசர் அவர் என்ன சொல்கிறார். கொஞ்ச காலம் சமணர்களோடு ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை முறையில் இருந்த எனக்கு இவர்களை வழிபடுகிற புண்ணியம் எனக்குக் கிடைக்குமா என்று திருவாரூரில் நின்று கேட்கிறார்.

இடமே இல்லாமல் குகையில் வாழக்கூடிய சமணர்கள்,

மற்றிட மின்றி மனைதுற தல்லுணா வல்லமணர்

இரவு நேரத்தில் சாப்பிடாத அமணர்கள், அவர்கள் சொல்வதைப் பெரிதாக நினைத்து நான் போனேன்.

சொற்றிட மென்று துரிசுப டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனா
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியமே.

அப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கக்கூடிய புற்றிடங்கொண்டீசருக்கு தொண்டருக்கு தொண்டராக வேண்டிய புண்ணியம் எனக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசர் விண்ணபித்தார். தொண்டருக்கு தொண்டர் என்று அவர் அருளிய அந்த சொல்தான் சுந்தரமூர்த்தி சாமிகள் அவர்கள் வாயில் அடியாருக்கு அடியேன் என்று வந்ததாக நாம் பார்க்கிறோம். இதிலிருந்து திருத்தொண்டத் தொகைக்கு வித்திட்டவர் நம்முடைய திருநாவுக்கரசர் பெருமான் என்பது இந்தப் பதிகத்தின் வாயிலாக நமக்கு விளங்குகிறது.

பொதுவாக உணவு உண்ணுவதிலேயே ஒரு முறை வேண்டும். வாழ்க்கையில் முதலில் உணவு உண்ணுகிற முறை. இன்றைக்கு நாம் பார்க்கிறோம் கல்யாண வீட்டிற்குப் போனால் தட்டை எடுத்துக்கொண்டு அவன் தெருத்தெருவாக அலைகிறான். அப்புறம் அங்கும் இங்கும் நின்றுகொண்டே சாப்பிடுகிறான். நின்றுகொண்டே சாப்பிடுகிற பழக்கம் சைவர்களுடைய பழக்கம் அல்ல என்பதை நாவுக்கரசர் இந்தப் பதிகத்தில் கண்டிக்கிறார்.

கையில் இடும் சோறு நின்று உண்ணும் காதல் அமணர் என்று சொல்கிறார். அது அமணர்களுடைய பழக்கமாம். அருந்தும் போது உரையாடாத அமணர். அவர்கள் சாப்பிடும் போது பேசமாட்டார்கள். நின்று கொண்டே சாப்பிடுகிறபோது நாம் நெற்றியில் நீறுபூசி இருந்தால் கல்யாண வீட்டில் தட்டை எடுத்து நின்று கொண்டே சாப்பிடுகிற நேரம் நாமும் சமணர்களாக மாறிவிடுவோம். நான் சொல்வதைத்தான் நாவுகரசர் பெருமானும் சொல்கிறார்.

ஆக அந்த அடியாருக்கு அடியேன் என்பதற்கு தொண்டருக்கு தொண்டர் என்கிற சொற்றொடரை நான்காம் திருமுறையில் பெருமான் பெய்து இருக்கிறார் என்பதை நான் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போ அம்மா சொன்ன மாதிரி போன வாரம் கிருஷ்ணஞான சபாவில் பன்னிரு திருமுறை விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதி பற்றி பேசினேன். இந்த பொன் வண்ணத்தந்தாதி உங்களுக்கு எல்லாம் தெரியும். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலே ஆகாய கைலாயத்திற்கு எழுந்தருள்கிறார். இவர் பஞ்ச கல்யாணி குதிரையிலே ஏறி புரவியின் செவியில் திருவைந்தெழுத்தைச் சொல்ல அதுவும் ஆகாயத்தில் பறக்கிறது.

முதலில் அவருக்குத்தான் முறைப்படி சுந்தரருக்குத்தான் அனுமதி. இவர் அப்பாயின்மென்ட் வாங்கவில்லை. அதனால் வெளியே நிறுத்திவிட்டார்கள். நமது ஆளுனராக இருந்தால் அவர்களை 5 மணிக்கு வரச் சொல்லுங்கள். 7மணிக்கு வரச்சொல்லுங்கள் என்று சொல்வார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த தகவல் போகவில்லை. பிறகு இவர் போய் நண்பரை கூப்பிட்டுக் கொண்டுபோகிறார். உள்ளே போய்விட்டு வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். யாரை-? சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்-? எப்படி இருந்தது?

அப்போ அவர் சொல்கிறார், “அவர் மேனி பொன் வண்ணமாக இருந்தது. மின்னல் வண்ணமாக அவர் சடை இருந்தது. வெள்ளி குன்றமாகிய இந்த கைலாயத்தினுடைய வண்ணம் எதுவோ அதுதான் நந்தியினுடைய வண்ணமாக இருந்தது.”

“சரி. உங்களைப் பார்த்ததில் அவர்க்கு மகிழ்ச்சியா” என்று கேட்கிற போது அப்போதுதான் ஒரு பெரிய உண்மையை சேரமான் நாயனார் சொல்கிறார். “அப்பா, சிவபெருமானை தரிசிக்கிற போது அவனை தரிசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சிவனை தரிசித்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ இவனைப் பார்த்ததில் சிவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார். இந்த நம்பிக்கையோடு நாம் வழிபாடு செய்தால் அந்த வழிபாடு நம்மை அதில் இன்னும் ஈடுபடுத்தும்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

நற்றுணையாவது நமச்சிவாயவே!-1

 நான்காம் திருமுறை உரை

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே!

திருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை உங்களுடன் சிந்திக்க திருவருள் கூட்டுவித்து இருக்கின்ற இந்நிலையில் விழா தலைமை கொண்டு இருக்கிற மருத்துவர் சிவாஜி அவர்களுக்கும், எனக்கு முன்னால் திருமுறைகள் பற்றி பறந்து பறந்து ஒரு பருந்து பார்வை பார்த்து இருக்கிற தமக்கையார் டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுக்கும் அரனருள் என்கிற இந்த அமைப்பை அரனருளாலேயே தோற்றுவிக்கிற நம்முடைய சாமி தண்டபாணி வித்துவான் உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெருமக்களுக்கும் திரண்டு இருக்கிற சிவனருள் செல்வராகிய உங்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் உரித்தென ஆகுக.

திருமுறை விழாவில் மனித பிறப்பு எவ்வளவு முறை என்பதைத்தான் இன்றைக்கு இரண்டு பேரும் பேசி இருக்கிறார்கள். ஒரு முறையா, இரு முறையா, பல முறையா என்ற கேள்வியை முறைப்படுத்துவதுதான் திருமுறை. ஏனென்றால் ஓர் உயிரினுடைய பக்குவத்திற்கு ஏற்ப பிறவி வேண்டும் என்றும் தோன்றுகிறது; பின்னால் வேண்டாம் என்றும் தோன்றுகிறது. சிதம்பரத்தில் பிள்ளை பெருமானுடைய திருகூற்றுகளை தரிசித்தபோது நாவுக்கரசர் பெருமானுக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று தோன்றுகிறது.

அவருக்கே திருப்புகழ். புண்ணியா புண்ணடிக்கே போதுகின்றேன் பூம்புகழ் மேவிய புண்ணியனே என்கிற போது பிறவாமையை நோக்கி அவர்கள் சொல்கிறார்கள். எனவே வாழ்கிறபோது வாழ்க்கையில் ஈடுபாடும் விடுபட்டு போகிற போது சிவன் திருவடிகள் சேர்கிற அந்த உணர்வும் இயல்பாக கூற்றுவிப்பதைத்தான் நாம் இறையருள் என்று சொல்கிறோம். எனவே இதுகுறித்து நம்முடைய அருளாளர்கள் நீளப் பேசி இருக்கிறார்கள்.

நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் சார்ந்து இருக்கக்கூடிய பதிகத்திலேயே ஒரு பாட்டு இதற்குப் பதில் சொல்கிறது. நம்முடைய விழா தலைவர் பேசுகிற போது மூவகை கருமங்களைப் பற்றி சொன்னார். பிரார்த்தம், சஞ்சிதம், மகாமியம் பற்றி சொன்னார். நாம் பார்த்தால் மலையைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த கரும தொகுப்புகள். ஆனால் இந்த கரும தொகுப்புகள் ஒரு விநாடியில் எரிந்து போவதற்கு ஒரே ஒரு கனல் இடவேண்டி இருக்கிறது. அது நமச்சிவாய என்கிற திருநாமம் என்கிறார் திருநாவுக்கரசர்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல்
உண்ணிய புகல் அவை ஒன்றும் இல்லையாம்

ஒரு துளி நெருப்பு சிவக்கனல் உள்ளே பட்டுவிட்டால் அவ்வளவு பெரிய கருமங்களின் தொகுப்பு ஒன்றும் இல்லாமல் போகிறது.

பண்ணிய உலகினில் பயின்ற பாவம். இது மிக அருமையான சொற்றொடர். பயின்ற பாவம் என்கிறார். நாம் பாவம் செய்தற்கு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பயிற்சி.

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி அறுப்பது நமச்சிவாயவே

அப்படியானால் எந்தக் காலகட்டத்தில் பிறவியில் ஈடுபாடு வேண்டும்-, எந்தக் காலத்தில் பிறவியற்றுப் போய் பிறவாபெருநதியில் உயிர் சேர வேண்டும் என்பதையும் சிவன் முடிவு செய்கிறார் என்பதால் அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது.

நாம் வாழ்கின்றபோது என்ன செய்ய வேண்டும், வாழ்கிற நெறி என்பதைத்தான் நம்முடைய ஐயா சாமி தண்டபாணி அவர்கள் கேட்டார்கள். நமக்குரிய நியமங்களை இருக்கிறபோது சரியாகச் செய்வது.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு

எல்லாவற்றையும்விட மிக முக்கியம், என்ன செய்தாலும் ஈடுபட்டு செய்ய வேண்டும் அங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து. நீங்கள் செய்கிற வேலை சிறப்பதற்கும், வழிபாடு சிறப்பதற்கும், பண்ணுகிற சேவை சிறப்பதற்கும் அடிப்படையான ஒரு தகுதி,

ஆங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து.

ஒவ்வொரு நாளும் சிவபெருமான் திரு முன்னிலையில் தீபம் ஏற்றுகிறோம் என்றால் அந்த தீபம் ஏற்றுகிற அந்த ஒரு விநாடி அந்த திரியோடும், அந்த அகலோடும், அந்த கனலோடும் நாம் இருக்க வேண்டும். விளக்கு இடுங்கள், தூபம்போடுங்கள் என்று அப்பர் சொல்லவில்லை.

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்கு.

எதை நாம் ஈடுபட்டுச் செய்கிறோமோ அதில் நாம் முழுமையாக நம்மைக் கரைத்துக் கொள்கிற போது நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் ஒரு தவமாக மாறுகிறது என்பதைத் தான் அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

சொல்

சொல்லோ என்றும் புதியது
சொல்லொணாத பழையது
கல்லில் எழுத்தாய்ப் பதிவது
கனலில் புடமாய் ஒளிர்வது
நெல்மேல் சிறுவிரல் வரைவது
நெருநலும் நாளையும் நிகழ்வது
எல்லாம் சொல்லி நிறைவது
இன்னும் சொல்ல முயல்வது

குரு சந்நிதி

ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா
ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா
வெளியேறி நாம்காண வானமுண்டு
வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு

கருவங்கள் கண்டாலும் காணாமலே
கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே
பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா
பகையின்றி நடையேகல் நலமல்லவா

காற்றோடு நான்சொன்ன கதையெத்தனை
கண்ணார நான்பார்த்த வகையெத்தனை
நேற்றோடு கிரணங்கள் நீங்கட்டுமே
நிலவிங்கு தன்பாதை நடக்கட்டுமே

சுயமாக அகல்கொண்டு சுடரேற்றலாம்
சுகமான நினைவோடு வழிபோகலாம்
தயவென்ன பயமென்ன இனிநிம்மதி
தயக்கங்கள் தீரத்தான் குருசந்நிதி

மரபின் மைந்தன் முத்தையா

ஆனந்த அலை

நிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை
நிஜம்தேடி வந்தபின்னும் நிழல்சூழ்ந்தது
மழைதேடி வந்தபின்னும் செடிகாயுமோ-என்
மாதேவனடிசேர்ந்தால் இருள்சேருமோ

பகட்டான பந்தல்கள் நிழலல்லவே-அதில்
பலநூறு ஓட்டைகள் சுகமல்லவே
திகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன்
திசைசேர்ந்த பின்னால்தான் நான்தூங்கினேன்

ஒளிவீசும் இருள்நின்ற ஒய்யாரமும் -அது
ஒன்றேதான் கிழக்கென்னும் வியாபாரமும்
வெளிவந்த பின்னாலே வலியெத்தனை-நான்
விழிமூடமுடியாத இரவெத்தனை

குருவென்னும் அருள்ரூபம் கைதந்தது- அதன்
கனிவான கழலின்கீழ் நிழல்தந்தது
உருவான மௌனத்தில் உயிர்வாழ்ந்தது- பலர்
உணராத ஆனந்த அலைபாய்ந்தது

மரபின் மைந்தன் முத்தையா

நிலவெழவே செய்த நிலவு

கையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க
மெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே
நன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில்
நின்றருளும் கோலத்தி னாள்

நாளிற் கதிராய் நிசியில் நிலவாகி
கோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில்
மலர்கொண்ட நாயகி மங்கையபி ராமி
நிலவெழவே செய்த நிலவு.

நிலவும் இரவினிலே நீலச் சுடராய்
உலவுகிற உத்தமியாள் உண்டே- கலக்கம்
துடைக்கின்ற பார்வை துணையானால் வாழ்வில்
கிடைக்காத ஒன்றுண்டோ கூறு.

கூறானாள் கூத்தனுக்கு கூற்றுதைத்தாள் மார்க்கங்கள்
ஆறானாள் யாவுமே ஆனாளே -வேறாய்
வருத்தும் வினைவிழவே வைப்பாள் கடைக்கண்;
கருத்திருக்கும் எங்கள்நங் கை.

மரபின் மைந்தன் முத்தையா

அன்புள்ள ஆசிரியர்களே – 8

கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.” முதல் மூன்று வெற்றியாளர்களை கண்டறிகிறீர்கள். அடுத்ததாகவும் ஒரு பரிசை அளிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. மேலும் முயன்றால், அதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று உணர்கிறீர்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் ஒரு பரிசு தருகிறீர்கள். மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதை ஏன் ஆறுதல் பரிசு என்கிறீர்கள்?

நான் பங்கேற்கும் விழாக்களில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்துவது, அதனை, “ஊக்கப் பரிசு” என்று சொல்லுங்கள் என்பதுதான்.

ஏனெனில், ஒரு மாணவனுக்கோ மாணவிக்கே, வெற்றி என்பது அவர்கள் அளவிலான மேம்பாடு. தன்னைத்தானே மேம்படுத்துவதால் வளர்ச்சி வருகிறது.

சரியாகப் பார்த்தால், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்கூட நிகரற்ற வெற்றியை எட்டிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. வெண்கலப் பதக்கம் வெல்பவர், வெள்ளிப் பதக்கமும் தங்கப் பதக்கமும் வென்றவரிடம் தோற்கிறார். வெள்ளிப்பதக்கம் வென்றவர், தங்கப் பதக்கம் வென்றவரிடம் தோற்கிறார். தங்கப் பதக்கம் வென்றவரோ, அந்தத் துறையில், இன்னும் முறியடிக்கப்படாத சாதனையை செய்தவரிடம் தோற்கிறார்.

அந்த சாதனையைச் செய்தவரோ, எதிர்காலத்தில் அதனை முறியடிக்கப் போகிறவரிடம் தோற்கப் போகிறார். எனவே ஒப்பீட்டளவில் எல்லோரும் தோற்பவர்கள். தனித்தனியாய்ப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றியிலும் மனிதர்கள் மேம்படுகிறார்கள். எனவே, பதக்கங்கள் வெல்லத் தூண்டுவதைப் போலவே, பங்கேற்பின்மூலம் திறமைகள் படிப்படியாய் முன்னேறி வருவதையும் மாணவ மாணவியரின் கவனத்திற்குள் கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை.

தோட்டக்காரர், ஒவ்வொரு செடியையும் சீர்திருத்துகிறார். உதிர்ந்த இலைகளை அப்புறப்படுத்துகிறார். உரிய உரங்கள் இடுகிறார். நீர் வார்க்கிறார். பூக்கிற பூவை, காய்க்கிற காயை, கனிகிற கனியை உலகம் பயன்படுத்துகிறது. தோட்டக்காரர், தொடர்ந்து செடிகளைப் பராமரிக்கிறார்.

ஓர் ஆசிரியரின் பணிப்பயணம், இந்தத் தோட்டக்காரரைப் போன்றதுதான். வெய்யிலில் காய்ந்தாலும் பனியிலும் மழையிலும் குளிர்ந்தாலும் தாக்குப்பிடிக்கிற தாவரங்கள் மாதிரி, உறுதிமிக்க உள்ளம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அற்புதமானது.
கை நிறைய இருக்கும் விதைகளுடன் செழிப்பான வனத்தை உருவாக்கும் சிறப்பான பணியில் இருக்கும் ஆசிரியர்கள், செடிகளை தனித்தனியே கண்காணிக்கும் தோட்டக்காரனைப் போல குழந்தைகள் மேல் தனித்தனியே கவனம் செலுத்துகையில் அருமையானதொரு பிணைப்பு உருவாகிறது.

கல்வி கற்கும் நிலையைக் கடந்து, வளர்ந்து பெரிதானபிறகும்கூட தங்கள் வழிகாட்டிகளாய் ஆசிரியர்களையே வகுத்துக் கொள்கிறார்கள். சின்னஞ்சிறு வயதிலிருந்து யார் ஒருவரை கவனித்தும் கண்காணித்தும் வருகிறார்களோ, அவர்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் வழிகாட்ட முடியும்.

உதாரணமாக, ஒரு மாணவர் தன் தொடக்கப்பள்ளி ஆசியருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். மாணவர் வளர்ந்து தொழிலதிபர் ஆகிறார். அவர் ஈடுபடும் தொழில் பற்றி அவருடைய ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், அந்த மாணவர் தன்னைத்தானே எப்படி நடத்திக் கொள்ள வேண்டும், தொழிலில் மனித உறவுகளை எப்படிக் கையாள வேண்டும். பணியாளர்களின் குறைகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டுகிற வல்லமை அந்த ஆசிரியருக்கு நிச்சயமாக இருக்கும்.

ஏனெனில், அவருக்க தன் மாணவனின் மன இயல்பு தெரியும். தனிமையில் ஒருவரின் மன இயல்புகள் செயல்படும் விதமானது சமூகச் சூழலில் செயல்படும் நேரங்களில் எப்படி பிரதிபலிக்கும் என்கிற நுட்பமான அவதானிப்பு, ஆழமான கண்காணிப்பில் விளைகிறது.

பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் இதில் தேர்ந்தவர்கள். சாணக்கியரின் வழிகாட்டுதலை சந்திரகுப்தன் பெரிதும் போற்றியதும் இதனால்தான்.

ஒரு மாணவன், தன்னில் இருக்கும் தடைகளைத் தாண்டி வருவதுதான் மிகப்பெரிய சவால். வாழ்வில் சாதனை என்பது பெரிய விஷயமென்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அது உண்மையும்கூட.

ஆனால் சாதனைக்கான தகுதிகள், இயல்புகள் ஆகியவை சின்னச் சின்ன நல்ல பண்புகளால் உருவாகிவருபவை.

ஒரு மாணவனிடம், நல்ல பண்புகளை, சீர்மைகளை உருவாக்கி வளர்ப்பதாகட்டும், ஏற்கனவே இருக்கும் பண்பை அடையாளம் கண்டு ஊக்கப்படுவதாகட்டும், இவைதான் ஓர் ஆசிரியர் செய்யக்கூடிய அதிகபட்ச நன்மை.

“இந்தக் குணங்களை வளர்த்துக் கொள்ளும் இயல்புதான் வாழ்நாள் முழுவதும் உன்னைக் காப்பாற்றப் போகிறது” என்று ஆசிரியர் சொல்கையில், மாணவனுக்கு அதுவே வேத வாக்காகிறது.

காரணம், தன்னால் சில விஷயங்கள் முடியும் என்பதை உலகம் கவனித்துச் சொல்லும்முன் ஆசிரியர் கவனித்துச் சொல்கிறார். அந்த கணத்தில் ஆசிரியரே அந்த மாணவனின் உலகமாக இருக்கிறார்.

தாவரங்களிடம் தோட்டக்காரர் காட்டும் தாய்மையும் தோழமையும் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கும் கிடைத்தால் அந்த மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                       (தொடர்வோம்)