எழும் நீயே காற்று!

துளை கொண்ட ஒருமூங்கில்
துயர்கொண்டா வாடும்?
துளிகூட வலியின்றித்
தேனாகப் பாடும்;
வலிகொண்டு வடுகொண்டு
வந்தோர்தான் யாரும்;
நலமுண்டு எனநம்பி
நன்னெஞ்சம் வாழும்!

பயம்கொண்டால் ஆகாயம்
பறவைக்கு பாரம்;
சுயம்கண்டால் அதுபாடும்
சுகமான ராகம்;
அயராதே; அலறாதே;
அச்சங்கள் போதும்;
உயரங்கள் தொடவேண்டும்
உன்பாதை நீளும்!

உடைகின்ற அச்சங்கள்
உன்வீரம் காக்கும்;
தடையென்ற எல்லாமே
தூளாக்கிக் காட்டும்;
படைகொண்டு வருகின்ற
பேராண்மைக் கூட்டம்
நடைகண்டு விசைகண்டு
நாடுன்னை வாழ்த்தும்!

ஊருக்கு முன்பாக
உன்திறமை காட்டு;
பேருக்கு முன்பாக
பட்டங்கள் கூட்டு;
வேருக்கு பலம்சேர்க்க
வேர்வைநீ ஊற்று;
யாருக்கும் அஞ்சாமல்
எழும் நீயே காற்று!

– மரபின்மைந்தன் முத்தையா

 

ஒருநாள் பூக்கும்!

பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது
புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை
தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது
தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை
வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது
விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை
ஆனாலும் நம் பயணம் நீளும் – அதில்
ஆனவரை காண வேண்டும் எல்லை!

காற்றின்கை காகிதமாய் திரிந்தால்- அதில்
குறிப்பிட்ட இலக்கேதும் உண்டோ
நேற்றினது பாதிப்பை சுமந்தால் – நம்
நெஞ்சிற்கு அமைதிவரல் உண்டோ
மாற்றாமல் வைத்த பணம் போலே – இங்கு
மனிதசக்தி செயல்மறந்து போனால்
ஏற்றங்கள் உருவாவதில்லை – இதனை
எண்ணாமல் புகழ் பிறப்பதில்லை!

சூழல்கள் எவ்வளவோ மாறும் – உன்
சூத்திரங்கள் அதற்கேற்ப மாற்று
வாழத்தான் உயிர்களெல்லாம் ஏங்கும் – உன்
வாழ்வுக்கோர் காரணத்தைக் காட்டு
தாழ்வுகளைத் தள்ளிஎழும் உத்தி – அது
தானாக வந்துன்னைக் காக்கும்
தாழ்திறந்து வாசலைப்பார் தம்பி – நீ
தேடிவைத்த கன்றொருநாள் பூக்கும்!

 – மரபின்மைந்தன் முத்தையா

 

வருடங்கள் மாறும்!

வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்;
பருவங்கள் நிறம் மாறலாம்
உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும்
உலகத்தின் நிலை மாறலாம்
கருவங்கள் தீரும் கருணை உண்டாகும்
கனிவோடு நாம் வாழலாம்
ஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று
உயர்வெல்லாம் நாம்காணலாம்!

பிழைசெய்வதுண்டு சரிசெய்வதுண்டு
பழியேதும் நிலையில்லையே
மழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும்
அதனாலே தவறில்லையே
இழைகூடப் பாவம் இல்லாத யாரும்
இங்கில்லை இங்கில்லையே
குழையாத சோறா குலுங்காத தேரா
குறையின்றி உலகில்லையே!

நீஉன்னை நம்பு நலம்சேரும் என்று
நிஜமாக நீவெல்லலாம்
யார் எய்த அம்பு? யார்தந்த தெம்பு?
யாருக்கும் நலம்சூழலாம்
வான் வந்த மேகம் தான் தந்து போகும்
வாழ்வெல்லாம் அதுபோலத்தான்
நாம்கொண்ட ஞானம் நாம் தந்து போனால்
நிலையாக நாம் வாழலாம்-!

– மரபின்மைந்தன் முத்தையா

 

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது?

-ஆ.ரேவதி, தாரமங்கலம்.
திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

கேளிக்கைத் தன்மை மிகுதியாக இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இதே சூழலில்தான், கருத்தியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களும் வருகின்றன.

கோடிக்கணக்கில் ரூபாய்கள் புழங்கும் துறை திரைத்துறை. எனவே மொத்தமும் சிதைந்து விட்டது என்று சொல்வதும் மிகை. முழுவதும் தலை நிமிர்ந்துவிட்டது என்பதும் பிழை.

வணிகரீதியான பாதுகாப்பில் செலுத்தும் அதே கவனத்தை சமூகப் பொறுப்புணர்விலும் இன்னும் அதிகமாகக் காட்டினால் நன்றாக இருக்கும்.

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?

அ.அருள், ராமநாதபுரம்.
முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள்.

அதற்குக் காரணம், அவர்களுக்கு வழிகாட்ட தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள்.
இன்று, இளைஞர்களை எவ்வித உள்நோக்கமும் இன்றி வழிகாட்டவோ, வளர்த்தெடுக்கவோ சரியான தலைவர்கள் இல்லை. எனவே இந்தச் சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை.

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்?

ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை.
வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல. நோய்களுக்கு தடுப்பூசி போட்டு வளர்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மனதில் தடுப்பூசி போடாமல் வளர்த்ததே காரணம்.

குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கையில், பண்பாட்டின் சிறந்த அம்சங்களை கதைகளாகவோ பழக்கங்களாகவோ அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டு இளைஞர்கள் ஆனபின் புலம்புவதில் பயனில்லை.

ஒழுக்கமான வாழ்வில் இருக்கும் வசதிகளை, வெற்றிகளைப் புகட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

மூன்று வேளையும் உணவை ஊட்டுவதுபோலவே நயமாகவும் பயமாகவும் ஒழுக்க உணர்வை ஊட்டினால் சமூகத்தீமைகளில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

பெற்றோருடைய அன்பின் ஆளுமையும், குடும்பத்தில் நிலவும் பண்பாட்டுச் சூழலுமே தலைசிறந்த பண்புகளும் தலைமைப் பண்புகளும் கொண்ட குழந்தைகளை உருவாக்கும்.

மரபின் மைந்தன் பதில்கள்

தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?
– மீ.மணியன், வெண்ணந்தூர்

தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்னும் விதமாய் நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

முதலை ஆள்பவன் முதலாளி. தொழிலை ஆள்பவன் தொழிலாளி. எனவே, நீங்கள் குறிப்பிடும் “தகுதி இல்லாதவர்” என்பவர் முதலாளியாகவும் இருக்கலாம். மேலதிகாரியாகவும் இருக்கலாம்.

ஒருவருடைய தகுதியின்மையை நிரூபிக்கும் வழி, தன்னுடைய தகுதியைத் தானே நிலைநாட்டுவதுதான்.
எனக்குத் தெரிந்த ஒருவரை அவருடைய முதலாளி தேவையின்றி சந்தேகப்பட்டார். இவர் ராஜினாமா செய்யும்போது, குறிப்பிட்ட காரணம், “எனக்கு முதலாளியாக இருக்கும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்” என்பதுதான்.

அப்படி வெளியே வந்து, தொழில் தொடங்கி, பெரிய தொழிலதிபராக விளங்குகிறார்.
எனவே, பணி செய்யும் சூழல், தவிர்க்க முடியாததென்றால், மனக்கசப்பின்றி பணிபுரிந்து உங்கள் தகுதியை நிரூபியுங்கள்.

இது நீங்களாகத் தேர்வு செய்த விஷயம். எனவே, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைச் சூழலையும் மனதில் வைத்து முடிவெடுங்கள்.

மரபின் மைந்தன் பதில்கள்

வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது?
-ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம்

வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் போகலாம்.

ஆனால் வேலை அனுபவங்கள் என்னும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறனை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். பல புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம்.

காலம் கனிகிறபோது, உங்களை முழுமையாய் மதிக்கும் இடத்தில் வேலை பெறுவராகவோ, அல்லது பத்துப்பேர்களுக்கு வேலை தருபவராகவோ நீங்கள் உயரலாம்.

சிலர், தங்கள் உண்மைத்தன்மையை நிரூபிக்க, நிர்வாகத்திடமோ சக பணியாளர்களிடமோ முரண்டுபிடிப்பார்கள். அதன்மூலம் இன்னும் பெயரைக் கெடுத்துக் கொள்வார்கள்.

மௌனமாகவே இருந்து, தம்மைத்தாமே மேம்படுத்திக்கொண்டு, தகுதிக்கேற்ற இடத்தை தேடிப் பிடித்து காலூன்றுபவர்கள் செயல்வீரர்களாகப் மிளிர்கிறார்கள்.

மரபின் மைந்தன் பதில்கள்

தமிழகமெங்கும் பல சுய முன்னேறப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன. நீங்கள்கூட சமீபத்தில் மதுரையில் நடந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். இதுபோன்ற பயிலரங்குகளின் பயனென்ன என்பதை விளக்க முடியுமா?
-பாண்டியன், மதுரை.

ஆழமான இந்தக் கேள்விக்கு நீளமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சுய முன்னேற்றப் பயிலரங்குகளால் என்ன பயனென்ற கேள்விகள் வெவ்வேறு தளங்களில் இருந்தும் எழுந்து கொண்டேயிருக்கின்றன.

சுய முன்னேற்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் முன்னேறிவிடுவார்களா என்று சிலரும் சுய முன்னேற்ற நூல்கள் வாசிப்பதால் வளர்ச்சி வருமா என்று சிலரும் அடிக்கடி கேள்விகள் எழுப்புவதுண்டு.

கர்நாடக சங்கீதத்தின் வாசனையே தெரியாதவர் வீம்புக்காக கச்சேரிகளில் போய் அமர்ந்தால் எப்படி ராக நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியாதோ, இலக்கிய சம்பந்தமே இல்லாதவர்கள் இலக்கிய ஆய்வரங்குகளில் அமர்ந்தால் அதை எப்படி உணரவோ ரசிக்கவோ முடியாதோ அதுபோல சுயமுன்னேற்றப் பயிலரங்குகளால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு மிக நிச்சயமாய் எந்த பயனும் இல்லை.

ஆனால் வாழ்வில் முன்னேற விருப்பமும் வழிகாட்டுதலுக்கான ஏக்கமும் கொண்டிருப்பவர்கள் மிக நிச்சயமாய் பயன் பெறுகிறார்கள். எந்தத் துறையில் ஈடுபடுபவர்களுக்கும் எப்படி வல்லுனர்களின் வழிகாட்டுதல் துணை செய்கிறதோ அது போல தொழிலில், வணிகத் தொடர்புகளில், நிர்வாகத்தில் பொருளாதாரத்தில் முன்னேற விரும்புகிறவர்கள் தங்களுக்கான வழிகாட்டுதலைத் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பே இத்தகைய பயிலரங்குகள்.

சொல்லப்போனால் சுய முன்னேற்றத் துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் பயிலரங்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மருத்துவர்கள் தங்கள் துறை வல்லுனர்களைக் கொண்டு வருடம் முழுவதும் பயிலரங்குகள் நிகழ்த்துகிறார்கள். அதிலும் கண் மருத்துவர்கள் தனியாகவும் பல் மருத்துவர்கள் தனியாகவும் இதய மருத்துவர்கள் தனியாகவும் இத்தகைய பயிலரங்குகளை தங்களுக்குள் நிகழ்த்துகிறார்கள்.

பொறியாளர்கள், வணிகர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் என எல்லோருக்குமே துறை சார் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. சுய முன்னேற்றத் துறையின் கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில் எல்லாத் துறைகளுக்கும் பொதுவான வழிகாட்டுதல்கள் இதில் கிடைக்கின்றன.
சேவைத் துறை, தொழில்துறை, நிர்வாகம் போன்றவற்றில் தேவைப்படுவதெல்லாம் சின்னச் சின்ன ஒழுங்குகளும் உத்திகளும்தான். இவற்றை தொடர்ந்து பயில வேண்டிய தேவை இருப்பவர்கள் அவற்றில் பங்கேற்றுப் பயன் பெறுகிறார்கள்.

உதாரணமாக நேர நிர்வாகம் என்றொரு துறை. இதில் ஜெயிக்க ஒரு சிறு நுட்பம் தேவைப்படுகிறது. விற்பனைப் பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க பத்து மணிக்கு வருவதாகச் சொல்கிறார். ஆனால் அவரால் பத்தேகால் மணிக்குத்தான் போக முடிகிறது. இது ஒரு முறையல்ல. அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு என்ன தீர்வு?

அவர் சந்திப்பு நேரத்தையே 10.15 என்று குறிக்க வேண்டும். மனிதர் சொன்னால் சொன்ன நேரத்திற்கு வருவார் என்ற பெயரையும் இதன்வழி பெறுவார்.

வாழ்வில் போராடி ஜெயித்தவர்கள் எல்லாம் பயிலரங்குகள் போயா ஜெயித்தார்கள் என சிலர் கேட்பதுண்டு. இல்லை. அதேநேரம் எல்லோருக்கும் போராடுவதில் முழு உறுதி இருப்பதில்லை. லேசான தயக்கம் சிலபேருக்கு இருக்கும். போராடி ஜெயித்தவர்கள் வாழ்க்கை இத்தகைய பயிலரங்குகளில் உதாரணமாய் சுட்டப்படுகிறது.

வழிகாட்டுதல் இல்லாமல் ஜெயித்தவர்கள் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆகாதென்பது பொதுமொழி. விதிவிலக்குகளை உதாரணங்களாக்கி வளரத் தூண்டுவதும் வெல்லத் தூண்டுவதும் பயிலரங்குகளின் புதுமொழி.