வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-12

மாற்றம் ஒன்றே முன்னேற்றம்!
அந்த முதல் குரங்கு மட்டும் மனிதனாய் மாற மறுத்திருந்தால், இத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என்ன?

பழைய அணுகுமுறைகளையும், நம்பிக்கைகளையும் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்புறம் அவர்களுக்குச் சொல்லுங்கள்…

மாற்றம் ஒன்றே முன்னேற்றம்!
புறாக்களில் கட்டி அனுப்பிய கடிதம் ஃபேக்ஸில் பறப்பது முதல், கல்லில் எழுதிய மனிதன் கணிப்பொறியில் எழுதுவது வரை, எல்லா முன்னேற்றங்களுமே முதல் மாற்றத்தை அனுமதித்ததால்தான் ஆரம்பமானது.

இன்று வந்திருக்கும் நவீன கருவிகள் எல்லாம் அதிசய மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாய்ச் சொல்கிறோமே, அப்படி அவற்றில் என்னதான் இருக்கிறது? சுருங்கச் சொல்லிவிடலாம்.

1. எளிமை 2. வேகம் 3. வசதி
உங்கள் வாழ்விலும் சரி, தொழிலிலும் சரி, இந்த மூன்று அம்சங்களைக் கொண்டு வரக் கூடிய எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றின் மூலமாக முன்னேற்றம் நிச்சயம்.

மாற்றங்களை யார் எதிர்ப்பார்கள்?
வாழ்வின் யதார்த்தங்களை எதிர்கொள்ள மறுப்பவர்களும், வெற்றிக்கான விலையைக் கொடுக்கத் தயங்குபவர்களும், தங்கள்மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் மாற்றங்களை எதிர்ப்பார்கள்.
பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலேயே இருந்து பழகியவர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயங்குவார். பஞ்சாயத்தைவிடவும் பாராளுமன்றம் பெரிது என்பது அவருக்குப் புரியாது. ஒன்றைப் புதிதாய் முயன்று பார்க்கப் பெரும்பாலானவர்களால் முடியாது.

கூட்டுப்புழுவாய் இருப்பதே குதூகலம் என்று நின்றுவிட்டால், வண்ணத்துப்பூச்சியாய் சிறகு விரிப்பது சாத்தியமில்லை. பரிணாமத்தின் அவஸ்தைகளுக்குப் பயந்தால் வானம் அளந்து பறந்துவர வாய்ப்பில்லை.

யாரெல்லாம் மாற்றங்களை ஏற்பார்கள்?
திறந்த மனம், காலத்தின் போக்கை ஏற்கிற பக்குவம், வளர வேண்டுமென்ற ஆர்வம் இவையெல்லாம் மாற்றங்களை ஏற்பவர்களின் மனப்பான்மைகள். பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஓர் உதாரணம்.

வணிகத்தில் போட்டி அதிகரிக்கும்போது எத்தனையோ மாற்றங்களை ஏற்க வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டுகளை ஏற்பது என்கிற சிறிய மாற்றத்திற்குக்கூடத் தயாரில்லாமல் சில நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கேற்ப மாறுதல்கள்!
வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப நிறுவனம் மாற வேண்டும். துவரம்பருப்பு இருக்கிறதா என்று கேட்டால், கடலைப்பருப்பு இருக்கிறது என்று சொல்வதெல்லாம் மறைந்துபோன மளிகைக் கலாச்சாரம்.

எல்லாமே இப்போது வாடிக்கையாளர்கள் வாசலில் இறங்குகிற காலத்தில் இருக்கிறோம். உங்கள் வாடிக்கையாளரைக் கொத்திக்கொண்டு போக சில வணிகர்கள் காத்திருக்கிறார்கள். எனவே நிர்வாகத்திலும், வணிக அணுகுமுறையிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

புகார்கள் வருகின்றனவா? சந்தோஷப்படுங்கள்!
பல ஆரோக்கியமான மாற்றங்களின் ஆரம்பப்புள்ளியே வாடிக்கையாளர்களின் புகார்கள்தான். உங்கள் மேல் அக்கறையுள்ள வாடிக்கையாளர்கள் மட்டும்தான் உங்களிடம் புகார்களைக் கொண்டுவருவார்கள். மற்றவர்கள், உங்களிடம் குறை கண்டால் உங்களிடம் வருவதை நிறுத்திவிடுவார்கள். எனவே புகார்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். புகாரின் அடிப்படையில் நீங்கள் செய்திருக்கும் மாற்றங்களைக் கடிதம் வழியாகவோ தொலைபேசி மூலமாகவோ தெரிவியுங்கள்.

அலுவலர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்
வாடிக்கையாளர் மனநிறைவே முக்கியம் என்பதை உங்கள் ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். புகார்களை மென்மையாகக் கையாண்டு, வாடிக்கையாளர் மன நிறைவுக்கேற்ற மாற்றங்களைச் செய்ய அலுவலர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்.

மாற்றங்களின் ஆரம்பமே முன்னேற்றத்தின் ஆரம்பம்
இதுதான் ஆதிகாலம் தொட்டே மனிதகுலத்தின் வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது. மாற்றங்களை ஓர் அந்நியமான வாழ்க்கை முறையின் அறிமுகம் என்று கருதுபவர்கள் ஜெயித்ததில்லை. தங்கள் வாழ்க்கை முறையின் அடுத்தகட்ட படிநிலை என்று அடையாளம் கண்டுகொண்டவர்களே வெல்கிறார்கள்.
எனவே உங்கள் இப்போதைய நிலையை மூன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

தனிமனித நிலை,
தொழில்,
சமூகத் தொடர்புகள்
மூன்றிலும் எந்த நிலையில் இருக்கிறீர்கள் – என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பட்டியலிடுங்கள். மாறத் தொடங்குங்கள். அதாவது முன்னேறத் தொடங்குங்கள்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-11

முதல் வெற்றிக்குப் பிறகு…

முதல் வெற்றி கொடுக்கும் மனத்துணிவு, அபாரமானது. பாராட்டு மழை, பணம், புகழ் என்று முப்படைகளும் அணிவகுத்து மரியாதை செய்யும்போது, குதூகலத்திற்குக் கேட்கவா வேண்டும்? நிற்க முடியாத அளவு வெற்றியின் கனம் அழுத்தும் நேரத்தில், இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டவர்களுக்கு முதல் வெற்றியே முன்னேற்றப் பாதை. அந்த உணர்வை இழந்தவர்களுக்கு முதல் வெற்றியே மூழ்க வைக்கும் போதை!

ஓங்கி ஒலிக்கும் பாராட்டுக் குரல்களுக்கு நடுவே, “இப்போதுதான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்ற குரல் முணுமுணுப்பாகத்தான் கேட்கும்.

அதற்குக் காது கொடுத்தவர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள். அந்த முணுமுணுப்பைக் கூர்ந்து கவனித்தால் அது என்ன சொல்கிறது தெரியுமா?

அடுத்தடுத்த வெற்றிக்கு ஐந்து கட்டளைகள்
ஆமாம்! ஐந்து விஷயங்களைச் சொல்கிறது. முதலாவது புதுமைக்கான தேடல். புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் எதையுமே செய்வதில்லை.

புதுமைக்கான தேடல் உங்களுக்குள் ஏற்பட்டு ஒரு தீப்பொறிக் கனலைத் தொடங்குமேயானால், அந்தப் பொறியை உங்கள் உள்மனமே ஊதி, ஊதி பெரிய நெருப்பாகச் சுடர்விடச் செய்யும். “என் வாழ்வில் பெரிய மாற்றம் வேண்டும்” என்ற இந்தத் தேடல் மிகவும் வலிமையான சக்தியையும் உத்திகளையும் கொடுக்கும்.

துல்லியமான கனவு

உங்கள் தொழிலில் எந்த உயரத்தை எட்ட விரும்புகிறீர்கள்? இந்தக் கனவைத் துல்லியமாக வரையறை செய்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, பெரிய ஆலை ஏற்படுத்துவது என்பது பொதுவான கனவு. இத்தனை டன்கள் உற்பத்தி என்று வரையறையை மனதில் ஏற்படுத்திக்கொண்டு, அதை நோக்கி உழைப்பதே துல்லியமான கனவு.

ஆயத்தம்
நீங்கள் செய்யும் புதுமைகள் ஆதாயம் தருவதாக அமையும்வரைக்கும், அதற்கான முக்கியத்துவம் கிடைக்கப்போவதில்லை. எனவே மனதில் உதித்த புதுமையான சிந்தனையைச் சரியான முறையில் செயல்படுத்த ஆயத்தமாக வேண்டும். அதற்கான படிநிலைகள் அங்குலம் அங்குலமாகத் திட்டமிடப்படவேண்டும்.

நம்பிக்கை
ஒன்று தெரியுமா? உங்கள் கனவுகளுக்கு உருவம் தந்து அதனை வெற்றிகரமாக்கும் விருப்பம் அடிமனதுக்குள் ஆழப்பதிந்திருக்கிறது. அந்த ஆழமான விருப்பமே நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நீங்கள் உறுதியாக்கிக்கொண்டே வரும்போது அந்த நம்பிக்கையே வளர்ச்சியையும் வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

செயல்படுத்துதல்
எத்தனை புதுமையான சிந்தனைகள் பிறந்தாலும், எவ்வளவு கற்பனைகள் இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்தத் தொடங்கும்போது கூடுதல் சக்தி பிறக்கிறது. அதன் விளைவாக வெற்றி கிடைக்கிறது. கனவுகளின் சுகத்திலேயே கரைந்துவிடாமல், சரியான நேரம் பார்த்துச் செயல்வடிவம் தருபவர்கள்தான் தங்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

முதல் வெற்றியின் விளைவாக, அடுத்தடுத்த வெற்றிகள் அணிவகுக்க வேண்டுமென்றால், இந்த ஐந்து அம்சங்களை உங்களுக்குள் அணிவகுக்கச் செய்யுங்கள். வெற்றிகள் நிச்சயம்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-10

 இலக்குகள் நிர்ணயிப்பது எதற்காக?

“எங்கே செல்லும் இந்தப் பாதை” என்று பாடிக்கொண்டே போகிறவர்கள் முன்னேற்றப் பாதையில் போகிறவர்கள் அல்ல. எங்கே – எதற்காக – எப்படி – எந்த நேரத்திற்குள் போய்ச் சேரப்போகிறோம் என்று தெரிந்திருந்தால், அதுதான் வெற்றிப் பயணம்.

இதைத்தான் “இலக்குகள் நிர்ணயித்தல்” (Goal setting) என்று சொல்கிறார்கள். ஒரு மனிதன் செயல்படுவது தனித்தீவாகவா? இல்லை! அவனுடைய செயல்பாடுகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. வணிகம், உறவுகள், சமூகத் தொடர்புகள் என்று வெவ்வேறு தளங்களில் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டால், அவற்றை நோக்கித் தெளிவாக நகர முடியும்.

ஒரே துறையில் ஒரே இலக்கு
வணிகத்தில், ஒரே நேரத்தில் ஒரேயரு இலக்குதான் நமக்கு வேண்டும். பத்துப் பதினைந்து இலக்குகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அவதிப்படக்கூடாது.

சிறிய இலக்குகளில் தொடங்குங்கள்
இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படும் பழக்கம் உங்களுக்குப் புதிதென்றால், சிறிய இலக்குகளில் தொடங்கலாம். உதாரணமாக, தினமும் அரைமணிநேரம் நடப்பது என்கிற இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்தை ஒழுங்குக்குக் கொண்டுவர இரண்டு வாரம் பிடிக்கலாம். இரண்டாவது, வார முடிவை இலக்குக்குரிய தேதியாக நிர்ணயம் செய்யுங்கள். எங்கே நடப்பது, எத்தனை மணிக்கு நடப்பது என்றெல்லாம் திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்துங்கள். இப்படி சிறிய இலக்குகளில் ஆரம்பித்து பெரிய இலக்குகளை நோக்கி நகருங்கள்.

எனக்கு இலக்கு இல்லையா?
இந்தக் கேள்வி எல்லோருக்கும் எழும். உங்களுக்கு இலக்கு தேவையா இல்லையா என்று தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

(அ) பணத்தால் கணக்கிட்டால், உங்கள் ஆண்டு மதிப்பு அதாவது ஒரு வருடத்தில் நீங்கள் ஈட்ட முடியும் என்று எண்ணுகிற வருமானம் எவ்வளவு?

(ஆ) கடந்த ஆண்டு நீங்கள் ஈட்டிய வருமானம் எவ்வளவு?
இதற்குப் பதில் காணும்போது, உங்களால் ஈட்டக்கூடிய வருமானம், நீங்கள் ஈட்டியிருக்கிற வருமானம், இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியைப் பாருங்கள். இலக்கு உங்களுக்குத் தேவை என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

வரையறுத்த இலக்குகளை எழுதுங்கள்
மனதில் எழுதி அழித்து மீண்டும் எழுதும் இலக்குகளுக்கு வலிமை இருப்பதில்லை. எனவே எட்ட விரும்பும் இலக்குகளை எட்டி, உங்கள் பார்வையில் படும்விதமாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சியில் ஓர் அங்குலம் அளவாவது நகருங்கள்.

எழுதிய இலக்குகளை எட்டுங்கள்
எழுதி வைத்த இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடுதல், சூழ்நிலைக்கேற்ப தேவைப் படும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்று எத்தனையோ அம்சங்கள் உண்டு. அப்படி ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து இலக்கை எட்டுங்கள். அந்த வெற்றியைக் கொண்டாடுங்கள். உடனே அடுத்த இலக்கை ஆராயவும், அதை நிர்ணயிக்கவும் ஆயத்தமாகிவிடுங்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

விளையாட்டுக்காரி

காலமெனும் சோழிகளை கைகளிலே குலுக்குகிற

காளியவள் விட்டெறியும் தாயம்

நீலநிறப் பேரழகி நீட்டோலைக் குறிப்பலவோ
நீயும்நானும் ஆடுகிற மாயம்
கோடுகளைப் போட்டுவிட்டு கபடியாட விட்டுவிட்டு
காலைவாரிக் கைகள்கொட்டு வாளே
ஓடவிட்டு வாடவிட்டு ஓலமிட்டு நாமழுதால்
ஓடிவந்து மண்ணைத்தட்டு வாளே
குழிநிரப்பி குழிவழித்து குதூகலமாய் கலகலத்து
காளிஆடும் பல்லாங்குழி ஆட்டம்
அழிப்பதுவும் ஆக்குவதும் அவள்புரியும் ஜாலமன்றோ
ஆதிமுதல் ஆடுபுலி ஆட்டம்
பாண்டியாட சொல்லித்தந்து பாய்ந்து போக எத்தனித்தால்
பாதமொன்று தூக்கச்சொல்லு வாளே
தாண்டிப்போக வழியில்லாமல் தட்டழியும் வேளையிலே
தாவிப்போக சொல்லித்தரு வாளே
காயங்களைக் காயவிட்டு காளிபோடும்  களிம்புதொட்டு
காலுதறி விளையாடு ராசா
மாயக்காரி ஆணைக்கிங்கே மறுவார்த்தை ஏதுமுண்டோ ?
மகமாயி பிள்ளையென்றால் லேசா?

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-9

“உள்ளுணர்வின் குரல்” . இந்தக் குரல் எந்த மூலையிலிருந்து எழும்? இந்தக் கேள்விக்குப் பதில், “மூளை”யிலிருந்து எழும் என்பதுதான். மனித மூளை இடது வலதாக தனித்தனியே செயல்படுகிறது. இடதுசாரி, வலதுசாரி இரண்டின் ஆதரவும் இருந்தால்தான் மனிதனின் “மேல் சபையில்” நிலையான ஆட்சி நடக்கும்.

இடதுமூளை தர்க்கரீதியான விஷயங்கள் தொடங்கி, பிசிறில்லாமல் ஒரு கடிதத்தை அழகான ஆங்கிலத்தில் “டிக்டேட்” செய்வதெல்லாம் இடதுபக்க மூளையின் இலாகா.

ஆனால் வலது மூளை வித்தியாசமானது. உள்ளுணர்வு “பளிச்”சிடும் சமயோசிதம். புதுமையான கண்ணோட்டங்கள், கவிதை, இசை, நாட்டியம் போன்ற திறமைகள், “கலகல”வெனச் சிரிக்கும் இயல்பு, முக்கிய முடிவுகள் எடுத்தல் இதற்கெல்லாம் வலதுபக்க மூளையே ஆதாரம்.

மூளையின் இந்த இடவல பாகங்கள் சமநிலையில் செயல்படும்போதுதான் எந்தச் செயலிலும் வெற்றி பிறக்கிறது.

முக்கியச் சிக்கல்கள் மத்தியில் ‘பளீ’ரென்று ஒரு தீர்வு உங்களுக்குள் தோன்றுகிறதா? அப்படியானால் உங்கள் மூளையின் வலப்பக்கம் நன்கு செயல்படுகிறது என்று அர்த்தம். மூளை தானாக ஒரு தீர்வை எடுத்துவைத்து உங்களுக்குத் தருவதில்லை. ஒரு விஷயம் பற்றி உங்கள் மூளையில் பதிந்திருக்கும் எல்லாத் தகவல்களையும் ஒன்றிணைத்து, ஆராய்ந்து, உருப்படியான தீர்வை உங்களுக்குத் தருகிறது.

உள்ளுணர்வின் குரலை நீங்கள் மதித்து, நம்பி, அதற்கு செவிமடுக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், அது இன்னும் துல்லியமாக உங்களுக்கு ஒலிக்கத் தொடங்கும். மிகச் சரியான தீர்வுகளைத் தரத் தொடங்கும்.

ஊருலகத்தில் யாரை நம்புகிறீர்களோ இல்லையோ உள்ளுணர்வின் குரலை முழுமையாக நம்புங்கள். அது உங்களுக்கு சரியாகவே வழிகாட்டும். அந்தக் குரலை அலட்சியம் செய்தால் பின்னர் வருந்த வேண்டி வரும்.

உள்ளுணர்வை சரியாகப் பயன்படுத்தி அதன் வழிகாட்டுதலைப் பெற்று வெற்றியடையவேண்டுமா? அதற்கு நான்கே நான்கு எளிய மனப்பயிற்சிகள் போதும்.

முதல் பயிற்சி: முழுமையான நம்பிக்கை. உங்கள் உள்மனத்தின் வழிகாட்டுதலை எந்த எதிர்ப்புமில்லாமல் முழுமையாகப் பின்தொடர்ந்தாலே போதும். இந்த நம்பிக்கையை நாளுக்குநாள் வலுப்படுத்திக்கொண்டே வரவேண்டும்.

இரண்டாவது மனப்பயிற்சி: நேர்மறையான எண்ணங்கள். மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றுக்கு விடுதலை கொடுத்து, உற்சாகமான உணர்வுகளையே உள்ளுக்குள் ஊக்குவித்துக் கொண்டிருங்கள். நேர்மறையான எண்ணங்களெல்லாம் உள்ளுணர்வுக்கு உறவினர்கள்போல.

மூன்றாவது மனப்பயிற்சி: நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள். உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் வரப்போகும் வெற்றிகளை முழுநம்பிக்கையுடன் எதிர்பாருங்கள். பிரச்சினைகள் வரும்போது பதற்றமில்லாமல், அதிலிருந்து என்ன பாடத்தை எடுத்துக்கொள்வது என்று பாருங்கள். உங்கள் சூழ்நிலையில் உங்களுக்குச் சாதகமான அம்சங்களிலேயே அதிகக் கவனம் செலுத்தும்போது இந்த மூன்றாவது மனப்பயிற்சி மிகவும் எளிதாகிவிடுகிறது.

நான்காவது மனப்பயிற்சி: உள்ளுணர்வின் குரலைக் கேட்பது. இதில் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக ஆற்றல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வாலியை விடவும் பல மடங்கு பலவீனமானவன் சுக்ரீவன். அவன் ஆவேசமாய் வாலியை சண்டைக்கழைத்தபோது, வாலி சீறியெழுந்தான். அவன் மனைவி தாரைதான் தடுத்தாள். அவள் உள்ளுணர்வின் குரலைக்கேட்டு நடக்காமல் அலட்சியப்படுத்திய வாலி மரணமடைந்தான்.

உங்கள் உள்ளுணர்விடமிருந்து சரியான பதில்கள் வரவேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. உங்கள் சிக்கல் என்ன? எதிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள்? எதை எட்ட விரும்புகிறீர்கள்? என்பதையெல்லாம் மிகத்தெளிவாக உங்கள் மனதுக்குச் சொல்லுங்கள்.

பழங்காலத்தில் இதைத்தான் “பிரார்த்தனை” என்ற பெயரில் நம் கோவில்களில் செய்தார்கள். “கேளுங்கள் கொடுக்கப்படும்” என்று இயேசுநாதர் இதைத்தான் சொன்னார். இப்படி ஆழமாகவும் உண்மையாகவும் கேட்கும் போது உங்கள் உள்மனம் உங்களை வழிநடத்தும். எதிர்பாராத இடங்களில் தீர்வுகள் தென்படும்.

சுவிட்சர்லாந்தில் இரண்டு விஞ்ஞானிகள் ஐபிஎம் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். ‘சூப்பர் கன்டக்டிவிடி’ பற்றி அந்த ஆய்வில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் முன்னேற முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது அவர்களில் ஒரு விஞ்ஞானி, உள்ளுணர்வின் உந்துதலால் நூலகம் சென்றார். செராமிக்ஸ் பற்றிய பிரெஞ்சு இதழ் ஒன்றை யதேச்சையாக எடுத்துப்புரட்டினார். அவர்கள் தேடிக்கொண்டிருந்த விஷயத்துக்கான விடை அந்தப் பக்கங்களில் இருந்தது. அந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தினர். இந்த விஞ்ஞானிகளுக்கு இயற்பிலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

8. தாண்டி வாருங்கள் தாழ்வு மனப்பான்மையை!

உங்களைப் பற்றிய அவநம்பிக்கை உங்களுக்குள்ளேயே தலைதூக்குமென்றால், அதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மை. வாழ்வின் ஆரம்பப் பொழுதுகளில் வரும் தாழ்வு மனப் பான்மையை, அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் சரி செய்துவிடும். ஆனால், வளர்ந்து கொண்டே வருகிறபோது, சில தோல்விகள் காரணமாக வரும் அவநம்பிக்கையும், அந்த அவநம்பிக்கை மெல்ல உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையையும் கவனமாகக் கையாள்வது அவசியம்.

இந்த இரண்டாவது வகை தாழ்வு மனப்பான்மைக்கு மருந்து, உங்களை நீங்களே மதிப்பது. சுய மதிப்பு தாழும்போதுதான் தாழ்வு மனப்பான்மை வருகிறது. உங்கள் நேற்றைய சாதனைகளையெல்லாம் அடித்துவிட்டு, தன் பெயரைத் தாழ்வு மனப்பான்மை கொட்டை எழுத்தில் எழுத முற்படுகிறது.

இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. தொழிலில் தோல்வி – ஒரு வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடிக்கொள்வதில் விழுந்த இடைவெளி – திருமண வாழ்வில் தோல்வி – என்று சில காரணங்களை அடித்தளமாக்கிக் கொண்டுதான் இந்தத் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளர் ராபர்ட் ஆன்ஜியர். அவருக்கு, ஒரு காலகட்டத்தில் இப்படியரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. “என் தனிப்பட்ட வாழ்விலும், நிதி நிலையிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்ட வேளை அது. நான் ஒரு செத்த எலி போல உணர்ந்தேன்” என்கிறார் ராபர்ட். பிறகு எப்படி மீண்டு வந்தார்?

இதோ, அவரே தரும் பட்டியல்:
1. எல்லா மாற்றமும் என்னிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். முதலில், பல அதிரடி மாற்றங்களுக்கு மனரீதியாக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.

2. என்னையும் என் வீழ்ச்சியையும் அளவுக்கதிகமாக விமர்சித்தவர்களிடம் இருந்து விலகிவந்தேன். அவர்கள் என்னைப் பற்றிப் பேசியது அக்கறையால் அல்ல. அக்கப் போருக்காக! என் தோல்வியை அளவுக்கு அதிகமாய்ப் பெரிதுபடுத்தியவர்களின் சகவாசத்தை விட்டொழித்தேன்.

3. என்மேல் எனக்கு நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. என்னை ஊக்கப்படுத்தும் நல்ல புத்தகங்களைத் தொடர்ந்துபடித்தேன். பிரார்த்தனையிலும், புத்துணர்ச்சி தரும் உடற் பயிற்சியிலும் ஈடுபட்டேன்.

4. ஒரு நல்ல சுய முன்னேற்றப் பயிற்சியாளரை அணுகினேன். என் பிரச்சினைகளை என்னிலிருந்து தள்ளிநின்று பார்த்ததால் அவருடைய ஆலோசனைகள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தன. அவற்றைக் கடைப்பிடித்தேன்.

5. என் சிறப்பம்சங்கள், என் அனுபவம், என் திறமைகள் ஆகியவற்றின் மீது அதிகக் கவனம் செலுத்தினேன். எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொண்டேன்.

6. தன்னிரக்கம், குற்றவுணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டேன்.

7. உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்பளித்தேன். எதைச் செய்வது அவசியமென்று தோன்றியதோ, அதைச் செய்தேன்.

8. கடவுள் என்னைக் குப்பையாக உற்பத்தி செய்யவில்லை. ஒரு காரணத்துடன்தான் படைத்தார் என்று உறுதியாக நம்பினேன். என்னால் இந்த உலகிற்குப் பயன்படமுடியும் என்கிற எண்ணமே எனக்குள் ஒரு கம்பீரத்தை ஏற்படுத்தியது.

9. என் உணர்ச்சிகள்தான் நான் என்கிற அடையாளத்தை அழித்தேன். என்னில் சில உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. தேவையான உணர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்கிறேன் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொண்டேன்.

10. இந்தக் குணங்களை நிதானமாக – ஆனால் உறுதியாக வளர்த்துக் கொண்டேன். படிப்படியாய் வெற்றிகளைக் கண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டும் சுயமுன்னேற்றச் சிந்தனையாளன் ஆனேன் என்கிறார் ராபர்ட் ஆன்ஜியர்.

நம்மில் எப்போதாவது தாழ்வு மனப்பான்மை தோன்றினால், இந்த நடைமுறைப் பயிற்சிகளைக் கொண்டு தாழ்வு மனப்பான்மையைத் தாண்டிவிட முடியும்தானே!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

7.நினைவாற்றலை நம்பாதீர்கள்!

நினைவாற்றல் நிறைய உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் நினைவாற்றலை நம்பாதீர்கள். படித்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், பழகிய முகங்கள், எப்போதோ போன இடங்கள், இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள நினைவாற்றல் அவசியம்தான். ஆனால், அவ்வவ்போது தோன்றும் யோசனைகள், அன்றாட வேலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை, நினைவில் வைத்திருந்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டால் எப்படியோ மறந்துவிடும்.

நினைவாற்றல் என்பது நிலைக்காத கூட்டணி மாதிரி. எதிர்பாராத நேரத்தில் காலை வாரிவிடும். எனவே முழுக்க முழுக்க நினைவாற்றலை மட்டும் நம்பியிருக்காதீர்கள்.

குறிப்பேடுகள்

பொதுவாக, நினைவுக் குறிப்புகளைத துண்டுச்சீட்டிலும் தனக்கு வந்த கடித உறைகளிலும் சிலர் எழுதி வைத்துக்கொள்வார்கள். இதுவும் தவணைமுறையில் எழுதி, மொத்தமாய்த் தொலைப்பதற்கான ஏற்பாடுதான். துண்டுச்சீட்டில் இருக்கும் இன்னொரு சங்கடம், இடப் பற்றாக்குறை. விரிவான விபரங்களை எழுதமுடியாது. ஒரு முக்கிய சந்திப்பில் பேச வேண்டிய விஷயங்கள் திடீரென்று மனதில் பளிச்சிடும். அதற்குப் பொருத்தமான வார்த்தைகள்கூட அப்போது தோன்றும். அவற்றைத் துண்டுச்சீட்டில் எழுத முடியாது. இதற்கு நல்ல தீர்வு, குறிப்பேடுகள்தான். பாக்கெட் நோட்டுகள் போதாது. உங்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு குறிப்பேட்டை வைத்திருப்பது நல்லது. அவ்வவ்போது குறித்துக்கொண்டே வரும்போது அவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் ஒரு விஷயம் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும்.

விசிட்டிங் கார்டுகள்
நம்மிடம் கத்தையாகப் பலரின் விசிட்டிங் கார்டுகள் இருக்கும். கொஞ்ச காலம் கழித்துப் பார்க்கையில் அவர் யார், எங்கே, எதற்காகச் சந்தித்தோம் என்பதெல்லாம் நினைவுக்கே வராது. இதற்கு நல்ல வழி, கார்டை வாங்கியதுமே பேசிக்கொண்டே அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அட்டைக்குப் பின்னால் குறித்துக்கொள்வதுதான். அதனை விசிட்டிங் கார்டு ஹோல்டரில் வைத்திருந்து, தேவை ஏற்படுகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நினைவூட்டும் கருவிகள்
நம்மில் பலரும் சில விஷயங்களை நினைவுபடுத்துமாறு உதவியாளரிடம சொல்வோம். அதற்கான நேரம் முடிந்தபிறகு, உதவியாளரை அழைத்து, நினைவுபடுத்தாததை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இன்று நம்மிடம் உள்ள அத்தியாவசியக் கருவிகள் பலவற்றில் நினைவூட்டும் அம்சங்கள் உள்ளன. நம்முடைய செல்ஃபோனில்கூட ரிமைண்டர் என்றொரு பகுதி உள்ளது. உடனடியாக எழுதிக்கொள்ள முடியாத நேரங்களில் ஒற்றை வாசகமாகப் பதிந்துவைத்தால், உரிய நேரத்தில் ‘ஓ’ போட்டு நமக்கு நினைவூட்டும். அத்துடன் விடுமா? 10 நிமிடம் கழித்து மறுபடி அலறும். பாக்கெட் கால்குலேட்டரில்கூட இந்த வசதி உண்டு. ஆனால் பலரும் பயன்படுத்துவதில்லை.

மறதி இயல்புதான்
ஆனால் மறதியில் வரும் விளைவுகள் இயல்பானது அல்ல. பணி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். இயல்பாக ஏற்படும் மறதியைக்கூட ஏதோ நோய் என்று கருதிக் கொண்டு, நம் செயல்திறன் மீது நமக்கே நம்பிக்கை குறையத் தொடங்கும். இது வீணான கலக்கம். நினைவு ஆற்றலை முக்கிய விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அன்றாடப் பணிகளுக்குக் குறிப்புகள் எழுதிப் பழகுங்கள். ஒரு விஷயம் எப்படி வளர்ந்தது, எப்படி சமாளித்தீர்கள் என்பதையெல்லாம் பதிவு செய்யும் அனுபவக் களஞ்சியமாகவும் உங்கள் குறிப்பேடுகள் பயன்படும்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

6. 24 மணி நேரம் போதவில்லையா?
இதோ… இன்னொரு மணிநேரம்!

“எத்தனை வேலைதான் பார்க்கிறது-? இருபத்துநாலு மணிநேரம் போதலை” என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்-? உங்களுக்குத் தேவைப்படும் இன்னொரு மணி நேரம், உங்கள் இருபத்துநாலு மணிநேரத்துக்குள்ளேயே ஒளிந்து இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த, இதோ… சில எளிய வழிகள்:

சற்றுமுன்னதாகக் கண்விழியுங்கள்:
நீங்கள் வழக்கமாக எழுவதைவிடவும் கொஞ்சம் முன்னதாகக் கண்விழியுங்கள். ஆறுமணிக்கு எழுபவர் என்றால் ஐந்தரை மணிக்கு எழுந்து பழகுங்கள்.

நேரம் விரயமாவதைத் தவிர்த்திடுங்கள்:
எப்படியெல்லாம் நேரம் வீணாகிறது என்று பாருங்கள். டிவி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம். வெறுமனே அரட்டைக்கு வரும் நண்பர்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும் பணியிடத்திலும் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம். வேலை நேரத்தில் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைத தவிர்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்:
புகைக்கும் பழக்கம் இருந்தால் அதைப் படிப்படியாக நிறுத்துங்கள். புகைபிடிப்பதற்காகச் செலவிடும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் வளரும். வாங்க சும்மா ஒரு தம்மடிச்சுட்டு வரலாம் என்று நண்பர்கள் அடிக்கடி அழைக்கத் தொடங்குவார்கள். இதில் நிறைய நேரம் வீணாகிறது.

அடுத்த நாளுக்கு ஆயத்தமாகுங்கள்:
உறங்கப்போகும் முன், அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளைத் தயார்செய்து வையுங்கள். அடுத்த நாளின் முக்கிய வேலைகளைப் பட்டியல் போடுங்கள். படுத்தவுடன் உறங்கும் விதமாக உடல், மனம் இரண்டையும் பக்குவப்படுத்துங்கள். ஆழ்ந்து தூங்குங்கள். சுறுசுறுப்பாக எழுந்திருங்கள்.

மதியம் தூங்குபவரா நீங்கள்?
பரவாயில்லை. 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை தூங்குங்கள். எழுந்தபின் உற்சாகமாக வேலைகளில் ஈடுபடுங்கள். கடின உழைப்பாளிக்கு மதிய வேலையின் சிறிய ஓய்வு மகத்தான சக்தியைக் கொடுக்கத்தான் செய்கிறது.

கூர்மையோடு செயல்படுங்கள்:
ஒருநாளின் பணிநேரத்தில் முடிந்தவரை கூர்மையாக இருங்கள். எந்த நேரத்திலெல்லாம் செயல்திறன் சிறப்பாக இருக்கிறதென்று பார்த்து, அந்த நேரங்களில் கடினமான வேலைகளை செய்து முடியுங்கள்.

யோசித்தபின் செயல்படுங்கள்:
எந்த வேலையைச் செய்வதற்குமுன்பும், நன்கு யோசித்துவிட்டுத் தொடங்குங்கள். தொடங்கியபிறகு யோசிப்பதால் நேரம் வீணாவதோடு, அந்தச் செயலையே செய்ய வேண்டியதில்லை என்றாகிவிட்டால் எரிச்சல்தான் ஏற்படும். ஒரு பணியையோ சந்திப்பையோ மேற்கொள்ளும் முன்பாக, அது தேவையா என்று சிந்தியுங்கள். தேவையில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள்.

பயன் தருகிறதா பயணங்கள்?
பயணங்கள் பயன் தருகிறதா என்று பாருங்கள். ஒரு சந்திப்பை உறுதிசெய்து கொள்ளாமல் பயணம் மேற்கொண்டு நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இல்லம், அலுவலகத்திற்கு அருகில் இருந்தால் இன்னும் நல்லது.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

5.தோல்வி சகஜம்… வெற்றி-?

தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன்.

உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம், தகுதியின்மை அல்ல. தோல்வி அடைவோமோ என்கிற அச்சம்தான்.

தோல்வி பற்றிய அச்சம் நமக்குக் கூடாதென்றால், முதலில் தோல்விக்கும் வெற்றிக்கும் இருக்கிற சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று சரியான வழி-. இன்னொன்று தவறான வழி. முதல் வழி தவறாகிவிட்டால் அதை தோல்வியென்று கருதுகிறோம். அதுதான் தவறு. ஒன்று தெரியுமா? யாரும் தெரிந்து தவறு செய்வதில்லை. ஆனால் தவறு செய்ததன் மூலம் தெரிந்துகொள்கிறோம். அடுத்தடுத்த முயற்சிகள் சரியாக அமைவதற்கு முதல் தோல்வி வழி செய்கிறது.

இந்தக் கண்ணோட்டம் இல்லாதவர்கள், முதல் தோல்வியே முயற்சிக்கு முற்றுப்புள்ளி என நினைத்து முடங்கிவிடுகிறார்கள். வெற்றி இப்போது கிடைக்கவில்லை என்பதாலேயே எப்போதும் கிடைக்காது என்று பொருளல்ல. மூத்த வெற்றியாளர்களின் அனுபவங்களைக் கேளுங்கள். அவர்கள் தற்காலிகத் தோல்விகள் பலவற்றையும் தாண்டிய பிறகுதான் நிரந்தர வெற்றியை நெருங்கியிருப்பார்கள்.

“ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு பின்னடைவும், அதற்கு இணையான, அல்லது அதைவிடவும் அதிகமான ஆதாயத்தின் விதையாகத்தான் விழுகிறது” என்கிறார் நெப்போலியன் ஹில். எனவே, தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடன் இருக்கும் சிலர் எளிதில் வெற்றி பெற்றிருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள். எளிதில் பெறும் வெற்றியைவிடவும் முயன்று பெறுகிற வெற்றிதான் இனிமையானது. தழும்புகளைத் தடவிப் பார்த்துக்கொள்ளும் போர்வீரன்போல, தோல்வியின் அனுபவங்கள்தான் அடையும் வெற்றியை ஆழமாக்கும். அதனால்தான் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள், ஊழியர்களின் தொடர் தோல்விகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். “எதையுமே செய்யாதவர்கள்தான் தவறு செய்யாதவர்கள்” என்பதை மறந்து விடக்கூடாது.

ஒரு தோல்வியிலிருந்து மீள்வதற்கு என்ன வழிதெரியுமா? அந்தத் தோல்வியின் விளைவை நிதானமாக எதிர்கொள்வதுதான். இரவு நீண்டநேரம் டி.வி.பார்த்துவிட்டு உறங்கப்போகும் ஒரு மார்க்கெட்டிங் அலுவலர் காலையில் எட்டு மணி வரை தூங்குவார். எட்டரை மணிக்கு அவருக்கொரு முக்கிய சந்திப்பு இருந்திருக்கும். மனைவி எழுப்பிவிட, அவசரம் அவசரமாய்ச் சென்று அந்த சந்திப்பையே சொதப்பியிருப்பார். வீட்டுக்கு வந்து என்ன சொல்வார் தெரியுமா?

“சனியனே! உன் முகத்திலே முழிச்சேன்! காரியம் உருப்படலை!” இவர் தோல்வியின் காரணத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கற்பனை செய்கிறார். பலரும் இப்படித்தான். தங்கள் தோல்வியின் காரணத்தைக் கண்டறிவது இல்லை. கற்பனை செய்கிறார்கள்.

தங்கள் தோல்வியின் காரணத்தைக் கண்டறிபவர்கள் திருத்திக் கொள்கிறார்கள். காரணத்தைக் கற்பனை செய்பவர்கள், தொடர் தோல்விகளுக்கு ஆளாகிறார்கள்.

எனவே, தோல்வி நேர்ந்தால் ஏன் நேர்ந்ததென்று பாருங்கள். இல்லாத காரணங்களைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

“இதுதான் எனக்கு வரும்” என்று உங்கள் எல்லைகளை நீங்கள் குறுக்கிக்கொள்ளாதீர்கள்.

“எங்கே தவறுகிறோம்” என்பதைப் பட்டியலிட்டு, அடுத்த முயற்சியில் உங்கள் தவறுகளைக் களைந்துவிடுங்கள்.

வெற்றி மிக இயல்பாக ஏற்படுவதை நீங்களே காண்பீர்கள்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)