நிலவும் நானும்…

நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே
நீண்டது ஆயிரம் தூரம்-என்
நினைவில் ஆயிரம் பாரம்
ஒளி
காட்டிய பரிவும் கூட்டிய குளிரும்
காலம் முழுதும் வாழும்-அந்த
போதையில் இதயம் ஆழும்
எங்கே எப்படி நான்போனாலும்
நிலவின் பார்வையில் இருப்பேன் -அதன்
நிழலாய் பூமியில் நடப்பேன்
பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின்
பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் -அது
பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன்
நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள்
நெஞ்சில் பதிவதும் இல்லை-அதை
நேர்படப் பார்ப்பதும் இல்லை
ஒரு
முட்புதர் பாதையில் முல்லைக்காடு
முளைத்தபின் வலிகளும் இல்லை-என்
மூர்க்க குணங்களும் இல்லை
தேய்பிறை இல்லா தேவதை நிலவே
தினமென் கனவில் நீதான் -என்
திசைகள் எல்லாம் நீதான்
பாய்கிற நதியில் பொன்னொளி பரப்பிப்
பரவசம் கொடுப்பதும் நீதான் -என்னைப்
பரிவில் நனைப்பதும் நீதான்
மூடும் முகில்களைக் கோபமில் லாமல்
மெல்ல ஒதுக்கி விடுவாய்-அந்த
மென்மையில் உயிரைத் தொடுவாய்
நான்
பாடும் கவிதை வரிகளினூடே
மிதந்து மிதந்து வருவாய்-என்
மனதில் அமுதம் பொழிவாய்
வீணையின் தந்திகள் “விண்”ணென அதிர்கையில்
விம்மி வழிகிற ஸ்வரமே-என்
வழியில் கிடைத்த வரமே
காணவும் முடியாக் காருண்ய வனத்தில்
கண்கள் திறந்த இதமே-என்
கவிதையில் மலர்ந்த நிஜமே

எழிலே என் அபிராமியே

கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால்
கவிபாடிச் சபையேறினேன்
கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும்
காணாமல் ஆளாகினேன்
நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல்
நிகழாமல் கடந்தேகினேன்
நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே
நன்மைகள் நிதங்காண்கிறேன்
அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால்
அள்ளினாள் உயிர்வாழ்கிறேன்
அன்னையள் யாருக்கும் முன்னையள் அருளினால்
அச்சத்தின் பிடிநீங்கினேன்
சொல்லொன்று விதைத்ததால் சூட்சுமம் கொடுத்ததால்
சுழன்றாலும் நிமிர்கிறேனே
சுடர்வீசும் விளக்கோடு கதைபேசும் ஜோதியே
சுபவாமி அபிராமியே
எத்தனை வலைகளோ  எத்தனை தடைகளோ
எப்படித் தாண்டினேனோ
எத்தர்கள் பிடிவிட்டு சித்தர்கள் அடிதொட்டு
எவ்விதம் ஓங்கினேனோ
எத்தனை சபைகளோ எத்தனை களங்களோ
எப்படி ஏறினேனோ
எதிர்ப்பிலா வார்த்தையும் விதிர்ப்பிலா விதந்தனில்
யார்சொல்லிச் சொல்கிறேனோ
அத்தனை இடத்திலும் அற்புத விழுத்துணை
அம்பிகை நீயல்லவோ
அத்தனை-அமுதீச முத்தனை மயக்கிடும்
அழகாளும் மயிலல்லவோ
எத்தனை சொன்னாலும் இன்னமும் இன்னமும்
இனிப்பதுன் பெயரல்லவோ
எத்திசை போயினும் என்னுடன் வருகின்ற
எழிலேஎன் அபிராமியே
மண்வந்த நாள்தொட்டு மடியினில் ஏந்தினாய்
மலர்த்தாளின் இதங்காட்டினாய்
மறந்திட்ட போதிலும் மனதுக்குள் நின்றெந்தன்
மயக்கத்தில் முகங்காட்டினாய்
கண்வந்த பயனுந்தன் கோயிலைக் கண்டதென
காதுக்குள் நீகூறினாய்
கடவூரில் நிற்பதாய் கோயிலில் நடப்பதாய்
கனவிலும் உணர்வூட்டினாய்
பண்வந்த செந்தமிழ் பயிலாமல் பயிலவும்
பைரவி அருள்கூட்டினாய்
பரம்பரைப் பெயர்தந்து பங்கய நிழல்தந்து
போகுமொரு வழிகாட்டினாய்
விண்வந்த இருளிலும் வெண்ணிலவு மின்னவே
விளையாடும் ஒளிவெள்ளமே
வினைப்புழுதி துடைக்கின்ற வண்ணப்பட்டழகியே
வித்தகி அபிராமியே

மேஸ்குலின் கிங்

இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து பெரியவர் ஒருவர் எழுந்து “பிடி பிடி”என்று பிடிக்கத் தொடங்கிவிட்டார். உள்ளூர்க்காரர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.பேசிய பெண்மணி வெளியூர்க்காரர்.வெலவெலத்துப் போய்விட்டார்.

அந்தப் பெரியவரின் பெயர் அம்மையப்பா.அவருக்குத் தரப்பட்டிருந்த பட்டம், “ஆண்மையரசு”. ஆண்மையரசு என்றால் ஏதோ சித்த வைத்திய சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. எதையும் ஆண்மையுடன் தட்டிக் கேட்பதும்,உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால்,மிகு முதுமையிலும் ஆரோக்கியமாக கோவை வீதிகளில் சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்ததும் அந்தப் பட்டப்பெயருக்கான காரணங்கள்.

முதல் நான்கு வரிசைகளுக்குள் இருந்தவர்களுக்கு  மட்டும் அவருடைய  குரல் நன்கு  கேட்டது. நான்காவது வரிசையில் வெளிநாட்டவர் ஒருவர் ஏதோவொரு  நிர்ப்பந்தத்தால் அமர்ந்திருந்தார். மேடையில் யார் பேசியதும் அவருக்குப் புரியவில்லை. “வணக்கம்”என்ற சொல் பரிமாறப்பட்ட போதெல்லாம்  உற்சாகமாகக்கை தட்டினார். தன்னை  விசித்திரமாகப்  பார்த்தவர்களுக்கு  பூனைக்கண்  சிமிட்டலையும் புன்னகையையும்  பரிசளித்துக்  கொண்டிருந்தவருக்கு அம்மையப்பா எழுந்ததும் ஆர்வமாகிவிட்டது. ஏதோ சண்டை என்று புரிந்து  கொண்டவர், “ஹூ இஸ் தட் ஜெண்டில்மேன்”என்று வினவினார்.

பக்கத்து இருக்கையில் ஒரு தமிழாசிரியர். வாழ்வில் முதன்முதலாய் வெள்ளைக்காரர்  ஒருவரிடம் உரையாடக் கிடைத்த அரிய வாய்ப்பினுக்கு நன்றி  தெரிவிக்கும் முகத்தான் பெருமை பொங்கப் புன்னகைத்துவிட்டு கனத்த குரலில் சொன்னார், “ஹிஸ் நேம்…அம்மையப்பா! ஹிஸ் டிகிரி… ஆண்மையரசு! ” பட்டம் என்றால் டிகிரி என்று பொருள் சொல்ல அகராதிகள் அவசியமா என்ன? “டிகிரி?வாட் டிகிரி?” இம்முறை வெள்ளைக்காரரின் உச்சரிப்பு  ஆசிரியருக்குப் புரியவில்லை. அவரினும் அரையே அரைக்கால் வீசம் ஆங்கிலம் நன்கறிந்த பின்னிருக்கைக்காரர் ஒருவர் “ஆண்மையரசு”வுக்கு  வெள்ளைக்காரர் அர்த்தம் கேட்பதாய் நினைத்துக் கொண்டு முன்னால் சாய்ந்து சத்தமாகவே சொன்னார், “ஆண்மையரசு மீன்ஸ்… மேஸ்குலின் கிங்!!”

கோவையில் பேச்சாளர் வட்டத்தில் அப்போது நாங்கள் நான்கைந்து பேர் கல்லூரி மாணவர்கள். ஆண்மையரசு அம்மையப்பா என்ற பெயரை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டோம். பெரியவர் வந்தால், “மேஸ்குலின் கிங் மதர் ஃபாதர்” என்று எங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வோம். (இப்படி முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது.கல்மண்டபம் நாவல் வெளியீட்டு விழாவில் என் பெயரைப் பார்த்துவிட்டு சோ ராமசாமி, “சன் ஆஃப் டிரடிஷன்”என்று கிண்டலடித்ததாக  வழக்கறிஞர் சுமதி என்னைக் கலாய்ப்பது வழக்கம்).

நல்ல உயரம். சிவந்த நிறம் சொற்ப சிகை கொண்ட வழுக்கைத்தலை. திருநீறு பூசிய நெற்றி. சிரித்தறியா செவ்விதழ்கள்.முகத்தில் எப்போதும் ஒரு கடுமை. கதர்ஜிப்பா, கதர் வேஷ்டி.கூட்டங்களுக்கு அழைப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் முன்வரிசையில் வந்து முதல்ஆளாக அமர்ந்து விடுவார் அம்மையப்பா. மேடையிலிருந்து அவரைப்பார்த்தால் பேசுபவர் மீது அவர் கண்கள் நிலைகுத்தியிருப்பதைக் காணலாம்.ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் “சட்”டென்று எழுந்து விடுவார் அவர்.

எப்போதும் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருப்பார். மிக அபூர்வமாக நகரப் பேருந்துகளிலும்  தட்டுப்படுவார். ஒருமுறை அப்படித்தான். பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுத்த கையோடு, முன்பின் தெரியாத பக்கத்து இருக்கைக் காரரிடம் ஒரு கோப்பைக் காட்டினார். அதில் பல செய்தித்தாள்களின் பக்கங்கள். மனுக்களின் நகல்கள்.அதில் அம்மையப்பாவைப் பற்றி முதல்நாள் வந்த செய்திகள். விஷயம் இதுதான். அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோயாளியிடம் லஞ்சம் கேட்டபோது அம்மையப்பா கையும் களவுமாகப் பிடித்திருந்தார். அந்த சம்பவத்தை விவரித்ததோடு, செய்தி போட்ட பத்திரிகையையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்.

“பொறுப்பில்லாம செய்தி போட்டிருக்காங்க! நான் சிகிச்சைக்குப் போனதாவும் எங்கிட்டே லஞ்சம் கேட்டதாவும் போட்டிருக்காங்க. இத்தனை வயசில நான் ஒரு ஊசி கூட போட்டுகிட்டது கிடையாது. “அதற்குள் பக்கத்து இருக்கைக்காரர் அந்த செய்தித்தாளை ஆர்வமாக வாங்கி,அதிலிருந்த அந்த  வார  ராசிபலனில்  தன் ராசியை தேடிப் படிக்கஅதை கவனிக்காமல் பொருமிக் கொண்டிருந்தார் அம்மையப்பா. “ஒரு சளி காச்சலுன்னு படுத்தது கிடையாது. நோயாளியாம். கேசு போடப் போறேன் இவனுங்க மேல!”

அந்த வயதிலும் அசாத்தியமான ஆரோக்கியம் கொண்டவர் அம்மையப்பா. யோகா ஆசிரியராக இருந்தார்.கடும் உழைப்பாளி. எளிய உணவுப்பழக்கங்கள். எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். எதிர்ப்படுபவர்களுக்குத்தர, அவரிடம் எப்போதும் சில துண்டுப் பிரசுரங்கள் இருக்கும். இரத்தினகிரி முருகன் கோயிலில் காந்தி ஜெயந்தி அன்று அன்னதானம், வள்ளலார் சங்கக் கூட்டம் ,ஜப்பானிய தண்ணீர் வைத்திய என்று ஏதேனும் ஒன்று . சில  நாட்களுக்குப்  பிறகு கையில் ஒரு சிறிய கம்புடன் வரத் தொடங்கினார்.. அதற்கு  அவர் சொன்ன காரணம் விசித்திரமானது. ஜீவகாருண்யக் கொள்கை  மீதுள்ள பற்றால் கையில் கம்பை எடுத்திருந்தார்.

“தெருநாய்ங்க மேல கல்லை வீசுறாங்க.கம்ப ஓங்கினாலே அது ஓடீடும். அடுத்தவங்க அடிக்கிறதுக்குள்ள நாமளே விரட்டி விட்டுடலாம் பாருங்க” என்பார்.  எனக்கென்னவோ, கல்வீசுபவர்களை விரட்டத்தான் கம்பு வைத்திருக்கிறார் என்று தோன்றும். நான் முதுகலை மாணவனாயிருந்த போது, கவிஞர். சே.சேவற்கொடியோன் தலைமையில் வ.உ.சி. பற்றிய ஒரு பட்டிமண்டபம். வ.உ.சிக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது தேசத் தொண்டா, தமிழ்த்தொண்டா என்று தலைப்பு. நான் தமிழ்த்தொண்டு என்ற அணியில் வாதிட்டுக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்கள் திருவள்ளுவரால் எழுதப்பட்டதல்ல என்ற வ.உ.சி.யின் ஆய்வை ஒரு தகவலாகச் சொன்னதும் சரேலென எழுந்தார் அம்மையப்பா. “அதுக்கு என்ன காரணம் சொல்றாருங்க?” என்று மடக்கினார். நல்லவேளையாக அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்திருந்தேன். வ.உ.சி.யின் கட்சியை விளக்கியதும் சமாதானமாகி அமர்ந்துவிட்டார்.

நாஞ்சில்நாடனாலும், என்னாலும், இன்னும் பலராலும் மாணிக்கண்ணன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் கோவை ஏஜென்சீஸ் திரு.மு.மாணிக்கம். சாலமன் பாப்பையா அவர்களை நடுவராக்கி கோவை பகுதிகளில் முதன்முதலாக பட்டிமண்டபங்கள் நடத்தியவர். மிகவும் சுவாரசியமான பிரியமான மனிதர். அவர் மகன் திருமண வரவேற்பில் வந்த பெருங்கூட்டம் உணவுக்கூடம் நோக்கி நகர்ந்திருந்த பொழுதில் வேகவேகமாய் மணமக்களை நோக்கி வந்தார் அம்மையப்பா. தன் மடியிலிருந்து திருநீற்றுப்பையை எடுத்து இருவருக்கும் பூசினார். இயல்பாக நின்றிருந்த இளம் தம்பதிகளுக்கு என்ன நடக்கிறதென்று புரியும் முன்னே,தன் பாதங்களைக் காட்டி விழுந்து வணங்குமாறு சைகை செய்தார். அவர்கள் விழுந்து எழும்முன்னே விலகி வந்துவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, ராம்நகர் பகுதிகளில் ஒட்டியிருந்த கறுப்புச் சுவரொட்டிகளில் அதே நிலைகுத்திய பார்வையுடன் இருந்த ஆண்மையரசு அம்மையப்பாவிற்கு அஞ்சலி வாசகங்கள் காணப்பட்டன. விபத்தொன்றில் இடுப்பெலும்பு முறிந்து அதே அரசு மருத்துவமனையில் கிடந்து மறைந்தார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். முன்வரிசை பற்றிய அச்சங்கள் பல பேச்சாளர்களுக்கு எழுவதில்லை இப்போதெல்லாம்!!

மரங்கள் – சில குறிப்புகள்

 

எழுதப் படாத என் கவிதையை ரசித்து
தூரத்து மரங்கள் தலையசைத்தன.
தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக்
கட்டுப்படுகிற குழந்தைகள் போல
ஒரே சீராகக் கிளைகள அசைந்தன.
பசிய மரங்களின் பேச்சுக் குரலாய்
சலசலத்தன தளிர்களும் இலைகளும்.
நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும்
அடிமண்ணுக்குள்ஆழப்பதிவதும்
செடியாய் இருக்கும் வரைக்கும்மட்டுமே.
வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே
வேலைகள் பெரிதாய் எதுவுமில்லை.
நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது
அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை.
போதி மரங்களை, புளிய மரங்களை,
வேப்ப மரங்களை, அரச மரங்களை,
மனிதர்களெல்லாம் வணங்க வந்தாலும்
வரந்தரும் கர்வம் மரங்களுக்கில்லை.
கோபமும் காமமும் மரங்களுக்குண்டு.
வெய்யிற் சூட்டின் வேதனைத் தகிப்பைப்
பிடிவாதத்துடன் பொறுத்து நிற்கும்.
முகில்கள் பதறி மழையாய் வருகையில்
மரங்களின் அழுகை மெளனமாய் நிகழும்.
கையறு நிலையின் கவிதையைப் போல
இலையுதிர் காலத்தில் இருக்கிற மரங்கள்
வயசுப்பெண்ணின் வசீகரக் கனவாய்
தளதளவென்று தளும்பி நிற்கும்.
மரங்களின் மெளனம் மகத்துவம் வாய்ந்தது.
கெளதம புத்தரும், நம்மாழ்வாரும்
மெளனம் வாங்கவே மரத்தடி வந்தனர்.
மரநிழலில் அமர்ந்து ஊர்க்கதை பேசும்
மனிதர்கள் பெறுவது, பறவையின் எச்சம்.
அடர்ந்த மரங்கள் பறவைக் கூட்டத்தின்
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்.
பறவைகள் வசிக்கக் கிளை தரும் மரங்கள்
வாடகை யாகப் பாடல்கள் வாங்கும்.
தூங்கு மூஞ்சி மரங்களை எழுப்பினால் – அதன்
கனவுகள் பற்றியும் கவிதைகள் கிடைக்கலாம்.

எதிர்ப்பார்ப்பு

 

கப்பல் வருகிற திசையைப் பார்த்துக்
கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம்.
வெளிச்சக் கூக்குரல் வீசி வீசித்
திரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும்.
தொலைந்துபோன பிள்ளையைத் தேடும்
தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.
நிதான கதியில் நகர்ந்து வருகிற
கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும்.
“இதோ பார்! இதோ பார்” என்கிற தவிப்பு
கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ?
நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும்
நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும்.
கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும்.
தனது சுமைகளைத் தரையில் இறக்கத்
துறைமுகம் இருக்கும் திசையில் விரையும்.
பாதையில் வெளிச்சம் போட்டுக் கிடந்த
விளக்கில் அடடா வருத்தம் வழியும்.
இன்னொரு கப்பல் எதிர்ப்படும்மென்று
கலங்கரை விளக்கம் காத்துக் கிடக்கும்.
கடற்கரைப் பக்கம் போகும்போது
கலங்கரை விளக்கைப் பார்க்க நேர்ந்தால்
பேச்சுத் துணையாய்ப் பக்கத்திலிருங்களேன்.

மழை மனசு

அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும்
மலையின் மீது தழும்புகள் போல.

கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள்
இராணுவ வீரனின் கண்ணீர் போல.

மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல்
நேற்றைய கனவின் நிழலைப்போல.

மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில்
கனல்கிற அமைதி கடவுளைப் போல.

வெளிப்படாத செளந்தர்யம் இன்னும்
கருவிலிருக்கும் குழந்தையைப் போல்.

துளையிடப்பாடாத புல்லாங்குழலில்
தூங்குகின்ற இசையைப் போல.

இத்தனை அழகிலும் இழையுதென் இதயம்
மலைமேல் பெய்கிற மழையைப்போல

எனது கவிதைகள்!

 

நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை
ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய்
வேற்று முகமின்றி… எதிர்ப்படும் எவரையும்
பற்றிக்க கொள்கிற பிஞ்சுவிரல்களாய்
உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம்
உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய்
பரிவு வறண்ட பாலைவனத்திடைப்
பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்…

                                                                           எனது கவிதைகள்!
கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில்
நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய்
குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள்
அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய்,
அலைகள் தினமும் அறைந்து போனதில்
கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய்
கல்லடிபட்ட குளத்திடமிருந்து
கிளம்பிவருகிற கண்ணீர் வளையமாய்…
                                                                        எனது கவிதைகள்!
அகமனதுக்குள் ஆழப்புதைந்த
விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய்
நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில்
புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய்
திரைகள் விலகிய தரிசனத் தெளிவில்
தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய்
பிரஞ்ச ரகசியம் தேடிக் கிளம்பிய
பாதையில் ஒலிக்கும் புதிய குரல்களாய்…
                                                                              எனது கவிதைகள்!
பசியா? தூக்கமா? சரியாயெதுவும்
புரியாதிருக்கிற குழந்தையின் அழுகையாய்
மற்ற குயில்கலிள் மயங்கித் துயில்கையில்
ஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய்
சூரியக் கதிர்கள் சுட்டதில் கரைந்து
புல்லின் வேர்வரை போகிற பனியாய்
மழையின் தீண்டலில் மணக்கிற பூமியாய்
தன்னை பிழிகிற பன்னீர் மலர்களாய்
                                                                  எனது கவிதைகள்!

ஈகை

உன்… தோள்பை நிறையத் தங்கக்காசுகள்.
ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல்
விரல்களை இழுத்து வலியப் பிரித்து
எல்லார் கையிலும் திணித்துப் போகிறாய்.
கொடுப்பது உனக்குக் கடமை போலவும்
வாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும்
பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத்
தங்கக் காசுகள் தந்துகொண்டிருக்கிறாய்.
திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து
தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே
பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய்.
கைகள் வழியக் காசு கொடுக்கையில்
ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால்
பதறி எடுத்துக் தூசு துடைத்து
வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுத்து வருந்தி நிற்கிறாய்.
போகும் அவர்கள் பின்னால் ஓடி
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.
தன்னையே கொடுக்கத் தவிக்கும் கொடையுளம்
வெளிப்படும் விதமாய் வழங்கிச் செல்கிறாய்.
உனது பார்வையில் படும்படியாக
விரிந்து நீண்டு தவிக்குமென் விரல்களில் – ஒரு
செப்புக் காசாவது போட்டிருக்கலாம் நீ!!!

சிரிக்கத்தெரிந்த சிவன்

சிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு! ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு!’ என்றார்.
நகைச்சுவை என்பது சூழல்களால் தீர்மானிக்கப்படும் விஷயம்தான்.பல தலைமையாசிரியர்கள் சிரிப்பதில்லை என்பது, பொதுவான நம்பிக்கை. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களையும் நிர்வாகம் செய்ய வேண்டியிருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் தலைமைப்பீடங்களில் இருப்பவர்கள் பலரும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்கள். அதில் துளிக்கூட நகைச்சுவை அம்சமே இருப்பதில்லை.ஆனால் உடனிருப்போர் சிரித்து உருளுவார்கள். அதற்கும் சேர்த்துத்தான் சம்பளம், சலுகை எல்லாம்.

எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் என்னிடம் சில நகைச்சுவைத் துணுக்குகளைச் சொன்னார். நான் அரைப்புன்னகை செய்ததில் என்ன புரிந்து கொண்டாரோ, “அதாவதுங்க..நாங்கல்லாம் பிசினஸ்லே இருக்கோமுங்க! எப்பவும் வேலையிருக்கும், அதனாலெ சிரிக்கறதெல்லாம் முடியாது. அதெல்லாம் உங்களைப் போல உள்ளவங்களுக்குத்தான்” என்றார். இதன்மூலம் என்னை எந்தப் பட்டியலில் வைத்திருந்தார் என்று புரிந்தது.

தமிழ்த் திரையுலகில் நடிப்பால் சரிதம்படைத்தபிரபல நடிகை ஒருவர், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரைக் காண வரும் பிரமுகர் பற்றி, “எங்க டைரக்டர் தும்மினா கூட அவரு சிரிப்பாரு’ என்றாராம். அந்த இயக்குநர் தும்மினால் இந்த நடிகைக்கு மனசெல்லாம் வலிக்கும்.அந்தநேரம் பார்த்து சிரித்தால்
இவருக்குக் கோபம்தானே வரும்!!

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் அயல்நாடு சென்று திரும்பிய அனுபவங்களை சுஜாதா ஒருமுறை எழுதினார்.”அயல்நாட்டு இந்தியர்களில் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிரதமர் பாரபட்சமின்றி எந்தப் படத்திற்கும் சிரிக்காமல் இருந்தார்”என்று குறிப்பிட்டிருப்பார்.

சிரிப்பை , சிரிப்பதற்காகத்தானே  பயன்படுத்துவார்கள். சிவபெருமான் எரிப்பதற்காகப் பயன்படுத்தினார். அவருக்கு “நகை ஏவிய ஈசர்” என்ற பட்டத்தை அருணகிரிநாதர் வழங்குகிறார். ஏவுதல் என்பது ஆயுதங்கள் ஏவுவதையும் படைக்கலங்கள் ஏவுவதையும் பெரும்பாலும் குறிக்கும். ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில்,திருக்கடையூருக்கு, “படை ஏவிய திருக்கடையூர்’என்ற பெயர் காணப்படுகிறது.

சிரிப்பு அவருக்குப் படைக்கலம் ஆகிறது.எதிரிகளுக்குப் படைக்கலம் ஆகிற அதே சிரிப்பு, அடியவர்களுக்கோ அடைக்கலம் ஆகிறது. தில்லைக்குள் வருகிறார் திருநாவுக்கரசர். அலைந்து திரிந்து ஆலயம் சேர்கிறார். தூரத்திலிருந்து பதிகம் பாடியபடி அம்பலத்தை நெருங்குகிறார் திருநாவுக்கரசர். யார் அங்கே வருவது என்று புருவத்தைக் குனித்துப் பார்க்கிறார் சிவபெருமான். திருநாவுக்கரசர் தானா என்று குனித்துப் பார்க்கிறார். நம்முடைய காலமென்றால் வருகை அட்டையை உள்ளே தந்து அனுப்பலாம். திருநாவுக்கரசருக்கு வருகை அட்டையே அவரது வளமான தமிழ்தான். “குனித்த புருவமும்” என்று குரல் கொடுக்கிறார். “ஆஹா! திருநாவுக்கரசர்  வந்துவிட்டார்” என்று சிவபெருமானுக்கு ஆனந்தச்சிரிப்பு  குமிழியிட்டு வருகிறது.

குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
என்று பாடுகிறார். அம்பலத்தை நெருங்க நெருங்க, அம்பலவாணனின்
அழகொளிர் மேனி நன்றாகத் தெரிகிறது.வெய்யிலில் வந்தவர்கள்
நிழலுக்குள் நுழைகிற போது முதலில் கண்களுக்குத் தெரிவது எது?
ஒளிவீசுகிற பொருட்கள்தான்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
முதலில் நன்குதெரிகின்றன.இப்போது அம்பலத்திற்கு அருகேயே
வந்துவிட்டார் திருநாவுக்கரசர்.

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணக்கிடைக்கிறது திருநாவுக்கரசருக்கு. இறைவன் மீதான அன்பு பெருக,வீடுபேறு கூட வேண்டாம்.இதே தமிழ்நாட்டில் பிறந்து இந்தத் திருவுருவை தரிசிக்கக்  கிடைத்தால் போதும் என்கிறார் திருநாவுக்கரசர். அடியவர்களின் அன்புக்கு இலக்கணம் சொல்கிற சேக்கிழார்,

கூடும் அன்பால் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்கிறார்.அந்த இலக்கணத்தின்
இலக்கியமே திருநாவுக்கரசர்தான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
இந்தப்பாடல் தளபதி படத்தில் இடம்பெற்றபோது “வாலி பின்னீட்டாரு”
என்று சிலர் பேசிக் கொண்டதாகக் கேள்வி .

வெளிப்படும் சிரிப்பை ஒழுங்குபடுத்தி குமிழ்சிரிப்பாக சிரித்த சிவபெருமான், விழுந்து  விழுந்து  சிரித்ததையும்  விவரித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

சிவபெருமானுக்கு இடப்பாகத்தில் உமையம்மை வீற்றிருக்கிறாள். ஏதோ
பேசியபடி எதேச்சையாகத் திரும்பியவள் சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு அந்த நேரம் பார்த்து அசைய, சற்றே திடுக்கிட்டாள்.

உமையம்மை திரும்பித் திடுக்கிட்ட வேகம் பார்த்து மயில்தான் தன்னைக் கொத்த வருகிறதோ என்று அஞ்சி பாம்பும் பயந்து சற்றே விலகியதாம்.

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுற
இதற்கிடையில்,மயில் சற்று வேகமாக விலகியது கண்டு சிவபெருமான்
தலையில் இருக்கும் நிலவும் பதறிவிட்டதாம்.

தன்னை பாம்பு விழுங்க வருவதாய் எண்ணிக் கலங்கிவிட்டது.விண்வெளியில்

இருந்தாலும் ஓடித் தப்பித்துக் கொள்ளலாம்.சிவபெருமானிடம் அடைக்கலம்
புகுந்து கால்களில் விழுந்தோம்.தூக்கித் தலையில் வைத்துக் கொண்டார்.
கழுத்திலேயே பாம்பு கிடப்பதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற
கலக்கம், நிலவுக்கு.

கிடந்த நீர்சடைமிசை பிறையும் ஏங்கவே
தன்னுடனேயே இருந்தும்கூட இவர்களெல்லாம் எப்படி பயந்து தவிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிவபெருமானுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.இந்த மனிதர்கள் போலத்தானே இவர்களும் எல்லாவற்றுக்கும் அஞ்சுகிறார்கள் என்று நினைக்க நினைக்க சிவபெருமான் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.திருவதிகை என்ற தலத்தில்  கெடில நதிக்கரையில் சிவபெருமான் இப்படிச் சிரிக்கிற சத்தம் கேட்டு ஓடிவந்து பார்க்கிறார் திருநாவுக்கரசர். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்பதையே தன் பாடலில் பதிவும் செய்கிறார்.
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே.
நகுதல் என்ற சொல் கேலிச்சிரிப்பையே குறிக்கும்.இதற்கு சான்றுகள் உண்டு.
அத்தனை காலம் பிரிந்திருந்த கண்ணகியிடம் திரும்பும் கோவலன், அவளைப்
பிரிந்த வருத்தம் பற்றியே பேசவில்லை .மலைபோன்ற செல்வத்தைத் தொலைத்தது எனக்கு வெட்கம் தருகிறது என்கிறான்.
“குலம்படு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுட் தரும் எனக்கு” என்று சொல்கிறான்.

கண்ணகி கேலியாகச்சிரித்துவிட்டு,”என் கால் சிலம்புகள் உள்ளன.கொண்டு
செல்லுங்கள்”என்கிறாள்.
“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி
சிலம்புள கொண்மின்” என்கிறாள்.சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்றும்பொருள் உண்டு.நீதொலைத்த மலைபோன்ற செல்வம்,என் தந்தை போட்டகால்சிலம்புகளுக்குக் காணாது என்று சொல்கிறாள் போலும்.
தன்னுடனேயே இருக்கும் உமையும்,அரவும், நிலவும் அஞ்சுதல் கண்டு
சிவபெருமானுக்கும் கேலிச்ச்சிரிப்புதான் வருகிறது.இது குமிழ் சிரிப்பாக
இல்லை.பொங்கிப் பொங்கி வருகிறது.பொத்துக் கொண்டு வருகிறது.

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற
கிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே 

சிரிக்கத் தெரிந்தவராக்கும் சிவபெருமான்!!