இப்படித்தான் ஆரம்பம்-16

“எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர்
விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர் விருத்தத்தில் மன்னன். சினிமாவிலும் இலக்கண அதிசயங்களை வலிக்காமல் புகுத்தியவர் அவர். அதற்கோர் உதாரணம், அந்தாதி….ஒரு வாசகத்தின் கடைசிச்சொல் அடுத்த வாசகத்தின் ஆரம்பமாக இருப்பதே அந்தாதி…. இலக்கியத்தில் பொன்வண்ணத்தந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, அபிராமி அந்தாதி என்று பலவகைகள் உண்டு
மூன்று முடிச்சு படத்தில் முக்கோணக் காதலில் மூன்று பேரும் பாடும் விதமாக அவர் எழுதிய அந்தாதிப் பாடல் வெகு பிரபலம்.
“வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற பாடல் நம்மில் பலரும் நன்கறிந்ததுதான்.இருவருக்கு வசந்தகால நதியாகத் தோன்றுவது ஒருவருக்கு வெந்நீர் நதியாகத் தோன்றுகிறது.நாயகன் நீரில் விழுந்ததும் வில்லனுக்கு அது வசந்தகால நதியாகத் தோன்றுகிறது.நீர்வழிப்படூஉம் புணை என்பது வாழ்வின் நிலையாமை குறித்த சங்க காலச்சிந்தனையின் வெளிப்பாடு.

அதே நதியின் மடியில் காதலும் மரணமும் மாறி மாறிப் பாய்விரிக்கும் அற்புதத்தைக் கவிஞர் நிகழ்த்துகிறார்.நாயகனின் நண்பனே வில்லன்.வில்லன் படகோட்ட நாயகனும் நாயகியும் காதல் கீதமிசைக்கிறார்கள்நாயகன் தண்ணீரில் தவறிவிழ கதாநாயகி மன்றாடியும் காக்கவில்லை வில்லன்.அவனுடைய மனநிலையை
இரண்டே வரிகளில் கவிஞர் படம்பிடிக்க, அந்தாதி முற்றுப்பெறுகிறது.

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

இதுவரை நாயகனும் நாயகியும் பாடுகிறார்கள்.நாயகன் தண்ணீரில் விழ நண்பனாய் நடித்த வில்லன் சுய ரூபத்தைக் காட்டுகிறான்.

மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்…

காதலனைக் கைப்பிடிக்கும் கனவோடு படகில் ஏறினாள் பாவை. காதலன் நதியில் விழுந்ததும் தானே மணவாளன் என்று தப்புக் கணக்கு போட்டான் வில்லன். இருவர் கணக்கும் பொய்யாகிற போது அந்த வைரமணி நதியலைதான் விதிவகையை முடிவு செய்கிறது என்பதை ரசிகன் புரிந்து கொள்ளும் விதமாகப் பாடல் போகிறது.  கதைச்சூழலைத் தாண்டிய தத்துவ வரிகள் காட்சிக்கும் கதைக்கும் கனம் சேர்க்கின்றன. இதுபோன்ற பங்களிப்புகள்தான் கண்ணதாசனை தமிழ்சினிமா கையெடுத்துக் கும்பிடக் காரணம். இதே படத்தில் அந்தாதி நடையில் இன்னொரு பாடல்உண்டு. உண்மையில் அது அந்தாதியல்ல. காதலைக் கடந்து காமம் முகிழ்க்கும்  நுட்பமான மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் அது.

ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம்
கோடியின்பம் தேடிவந்தேன் காவிரியின் ஓரம்
(எண்சீர் விருத்தத்தில் இது ஒரு வரி. அடுத்த வரி..)

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
ஓசையின்றிக் கேட்குமது ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு மேடைகண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தைபல நாடும்

“பொய்யும் வழுவும் தோன்றிய காலை, ஐயர் யாத்தனர் கரணம்” என்பது இலக்கணச்சூத்திரம். காமத்தையும் வேதம்என்று சொல்லி, அது   திருமணத்தின் மூலம் முறைப்படுத்தப்படுகிறது  என்பதைக் காட்டவும் “வேதம்” என்ற சொல்லை வெகு நுட்பமாகக் கையாள்கிறார் கவிஞர். மனதில் காமம் மலர்ந்தாலும் அந்தப்பெண் அதை வெளிப்படப் பேசவில்லை. மௌனம் காக்கிறாள். ராகங்களைத் தனக்குள்ளேயே
மூடிவைத்திருக்கும் வீணை போல் இருக்கிறாளாம் அவள்.

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும்மொழிமௌனம்

ராகந்தன்னை மூடிவைத்த வீணையவள் சின்னம்
இந்த வீணையின் மௌனம் எப்போது கலையும் என்கிற தவிப்பு அவனுக்கு.வாய்விட்டுக் கேட்கிறான்.அவளும் பதில் சொல்கிறாள்.

சின்னம்மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலைக்கோலம்
என்னையவள் பின்னிக்கொள்ள என்றுவரும் காலம்
காலமிது காலமிது காதல்தெய்வம் பாடும்
கங்கைநதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

“ஆடிவெள்ளி” என்று தொடங்கிய பாடல் “கூடும்” என்று முடிவதாலேயே இது அந்தாதியில்லை என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் இதை அந்தாதி என்று ஒப்புக்கொள்ளவும் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. அந்தாதி முறையை நமக்கு அறிமுகம் செய்யும் மிகப்பழைய இலக்கியம்,பதிற்றுப்பத்து. இதில் நான்காம் பத்து மட்டும் அந்தாதி முறையின்படி முடியவில்லை. எனினும் அந்தாதி என்கிற இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பதிற்றுப்பத்து பேசப்படுகிறது. அந்த விதிவிலக்கைக் கொண்டு பார்த்தால் இதுவும் அந்தாதிதான்!!எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கிறது கவிஞரின் பாடல்.

கதைச்சூழலோடு பின்னிப் பிணைந்து வரும் கவிஞரின் பாடல்கள் ஒருவிதம் என்றால், கதை என்னவென்ற கேள்வியே எழாமல், அந்தரத்தில் நாட்டியமிடும் மின்னல்கள்போல் வெடிக்கும் பொதுவான வாசகங்கள் சிலவும் கவிஞரின் பாடல்களில் பொங்கிப் பிரகாசிக்கும்.

ஏதோவொன்றை எண்ணிக் கலங்கி, தயங்கி நிற்கும் போது யாரோ எங்கோ  பேசிச்செல்லும்  வார்த்தை நமக்கு வாசல் திறந்துவிட்டுப் போகும். எதிர்பாராத நிலையில் எவரோ ஒருவரின் வருகை நம் குழப்பத்திற்கான தீர்வாகிப் போகும்.இத்தகைய நேரங்களில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிற பாடல் ஒன்றுண்டு.
“எங்கிருந்தோ ஒரு குரல்வந்தது-அது
எந்த தேவதையின் குரலோ
 எங்கள் தீபங்களில் ஒளிவந்தது-அது
எந்தக் கைகள் தந்த ஒளியோ”
இது அந்தப்பாடலின் பல்லவி.இடையிடையே இதேபோல இன்னும் சில வரிகள்.

“மாளிகையில் ஒரு மதிவந்தது-அது
எந்த வானத்து மதியோ
 மாயமாக ஒரு ஒலி வந்தது-அது
எந்த ஆலயத்து மணியோ”

இரண்டாம் சரணம், நாயகியின் காதலுள்ளத்தைக் காட்டும் புதிய பரிமாணத்தை எடுக்கிறது. அதில்கூட ,ஆண்டாளின் வாரணமாயிரம்
பாசுரங்களின் சாரத்தையும் அதற்கடுத்த படிநிலையையும் இரண்டே வரிகளில் முடிக்கிறார் கவிஞர்.

“கதிரிள தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்
கண்கள் தூங்காத இரவு”
கோபுரம்போல் உயர்ந்து நிற்கும் இந்தப் பாடலுக்குக் கலசம் வைக்க வேண்டாமா! முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள் கவிஞர்….
“கங்கையிலே புதுப்புனல் வந்தது-அது
எந்த மேகம்தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது-அது
எந்த மன்னன் தந்த அனலோ”
இப்படி ஆகாயத்தின் அடுக்குகளில் அவர் விட்டுச்சென்ற அபூர்வ ராகங்கள்……ஆயிரம் ஆயிரமாய் !!!
(தொடரும்..)

இப்படித்தான் ஆரம்பம்-15

கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே போனால் அது நம்மை வைரச்சுரங்கங்களிலே கொண்டுபோய் சேர்த்து விடுகிறது.

நீண்ட நாட்களுக்குப்பின் “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக காதல் பாடல்களில் வரும் வர்ணனைகள் பெண்ணை ஆதர்சப் பெண்மையாகவும், தாய்மையின் தழலாகவும் சித்தரிப்பது ரொம்ப அபூர்வம். சீதைக்கு, வனவாசத்தில் தன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நல்ல பெண்துணை கிடையாது. அசோகவனத்தில் இருந்த பத்துமாதங்களில் கொஞ்சம் ஆதுரமாய்ப்பேச திரிசடை கிடைத்தாள். அவளும் அருகே அரக்கியர் இல்லாத போதுதான் ஆறுதலாய்ப்பேச முடியும்.

நாட்டுக்கு வந்த பிறகு காட்டுக்கு மீண்டும் போய் பிள்ளைகளைப் பெறுகிறாளே அப்போதாவது பெண்குழந்தை பிறந்ததா?ஆண்கள். அதுவும் இரட்டையர்கள். சீதையால் மாமியார்களிடம் பேச முடியாது. சகோதரிகளாகவே இருந்தாலும் அயோத்தி மருமகள்களாகிய மற்றமூவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள். சீதைக்கொரு மகள் இருந்திருந்தால் மனம்விட்டுப் பேசி அழுதிருப்பாள். தன்னுடைய நாயகி சீதைக்கு மகளாகப் பிறந்திருந்தால் அவள் பூமியைப் பிளந்து கொண்டு போயிருக்க மாட்டாள் என்று கவிஞருக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே, “கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா” என்கிறார்.

நாயகியிடம் தாய்மைப்பண்பு இருக்கிறதென்றால், அவள் சீதைக்குத் தாயாகத்தானே ஆகியிருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சீதை,  மண்மகளுக்கு மகள். அவளுக்குத் தேவைப்பட்ட உறவெல்லாம் தாய்மையின் கனிவுமிக்க ஒரு மகள்தான் கவிஞர் பாடும் நாயகியின் தாய்மைப்பண்பு அடுத்த வரியிலேயே வெளிப்படுகிறது. விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் மகளாகப் பிறந்தவள் சகுந்தலை. பெற்றோர் இருவரும் பிள்ளையைக் காட்டில் விட்டுப் போக, மயில்கள் தங்கள் தோகைகளால் மூடி குழந்தையைப் பாதுகாக்க, கண்வ முனிவர் கண்டெடுத்து வளர்த்ததாய் கதை போகிறது. தாயின் அரவணைப்பில்லாமல் வளர்ந்தவள் சகுந்தலை.

அவளுக்கு தாய்மையின் பரிவை உணர்த்தத் தன் நாயகியால்தான் முடியும் என்று கவிஞர் கருதுகிறார்.”காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா” என்கிறார்.சீதைக்கு கனிவு மிக்க மகளாகவும்,சகுந்தலைக்கு பரிவுமிக்க தாயாகவும் ஆகும் தகுதியோடு பிரபஞ்சத்தின் பேரன்பையெல்லாம் இழைத்துச் செய்த வடிவாக எழுந்து நிற்கிறது கவிஞர் ஆராதிக்கும் பெண்மை.

இவ்வளவு கனிவுமிக்க பெண் பேசுகிற சொல் எப்படியிருக்கும்? திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இதை உள்வாங்கி வைத்துக் கொண்டு உரிய இடத்தில் பயன்படுத்துகிறார் கவிஞர்.

“கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்குமுந்தன் ஒருவாசகம்”.

திருவாசகத்தின் இயல்பு கல்மனதைப்பிசைந்து கனியாக்குவது. இது, தன் நாயகியின் ஒரு வாசகத்திற்கே உண்டு என்றால் அவள் அன்பின் பிழம்பாய் அல்லவா இருக்க வேண்டும் . போதாக்குறைக்கு பேரழகியாகவும் இருக்கிறாள். அமராவதியின் இடத்தை ஈடு செய்யக்கூடியவளாக இருக்கிறாள். கலைசிந்தும் கண்கள், உண்டென்று சொல்லும் வண்ணக் கண்கள். இல்லையென்று சொல்லும் இடை. பிறருக்கே வாழ்கிற இந்தப்பெண்ணுக்கு கண்ணுறக்கம் இரண்டு முறை. பிறப்பில் ஒருதூக்கம். இறப்பில் மறுதூக்கம்.அவளுடைய இயல்பு, பாலிலும் வெண்மை. பனியிலும் மென்மை. கண்ணதாசன் வெவ்வேறு பாடல்களில் குழைத்து வைத்திருக்கும் வண்ணங்களைத் தொட்டுத் தொட்டுத் தீட்டினால் ஒப்பற்ற பெண்மையின் உயிர்ச்சித்திரம் அல்லவா உருவாகிறது!!

பிரபஞ்சத் தாய்மை போன்ற பெரிய வார்த்தைகளைக் கூட அறியாத எளிய அன்பில் கண்ணதாசனின் பெண்கள் உருவெடுக்கின்றனர். கம்பனில், இராமன் திருமணத்தின்போது, வயது மூத்த பெண்கள் எல்லாம் கோசலையின் மனநிலையில் இருந்து, இராமனைத் தங்கள் மகனாகவே வரித்து மணக்கோலத்தை ரசித்திருந்தார்களாம். “மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனதை ஒத்தார்’என்றெழுதினான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

இதை மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்ட கவிஞர், “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’பாடலில், “மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க’ என்று பாடுவார். பெண்ணுக்கான முகங்கள் ஏராளம். கடவுளைப்போல.கடவுளுடைய சிறப்பே எல்லா முகங்களும் அழகாயிருப்பதுதான். புகுந்த வீட்டில் காட்டுகிற முகம் ஓரழகென்றால் பெண் பிறந்த வீட்டில் காட்டுகிற பாசம் பேரழகு.ஆணுக்கு அத்தகைய  பெருந்தன்மை கிடையாது. பெண்ணெடுத்த வீட்டில் இறுதி வரை தலைமை விருந்தினனாய் இருக்கவே ஆண் ஆசைப்படுகிறான்.
கணவன் அழகற்றவனாய்,ஊனமுற்றவனாய் இருந்தாலும் அவனை உச்சிமேல்  வைத்துக் கொண்டாடுகிறாள் பெண். ‘கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல்மனம் விளங்க வந்தாள் அன்னையடா! காதலுக்கும் பெருமையில்லை கண்களுக்கும் இனிமையில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா” என்று கணவன்தான் தாழ்வு  மனப்பான்மை தொனிக்க  பிள்ளைக்குத் தாலாட்டுப் பாடுகிறான். கண்ணதாசன்  காட்டும் காதல் தலைவி கணவனின் குறையை ஒப்புக்  கொள்வதேயில்லை.
“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ -உங்கள்
 அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ'” என்று அரவணைத்துக் கொள்கிறாள்.

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா-அது
கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா” என்று ஆறுதல் சொல்கிறாள்.”

அதே நேரம், மணவாழ்வின் பூரிப்பில் மனம் மயங்கிக் கிடந்தாலும் பிறந்த வீட்டின் வாசலிலும் பருவமழையாய்ப் பொழிய அவள் தவறுவதில்லை.

“பூமணம் கொண்டவள் பால்மணம் கொண்டாள்

  பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள்ரெண்டில் மாமன் தெய்வம் கண்டான்”

என்று சகோதரனைக் குளிர்விக்கும் தங்கையாக மிளிர்கிறாள்.

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா- நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா’ என்று தலையை வருடித் தூங்க வைக்கும் தமக்கையாகப் பொலிகிறாள்.
“அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்”  என்று தந்தை மெச்சும் மகளாக மலர்கிறாள்.

“நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே”என்று பெருமையடித்துக் கொள்ளும் கணவனிடம், “அந்தக் கருணைக்குநான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” என்று பரிசளிக்கும் அரசியாகவும்  பரிவுமிக்க  மனைவியாகவும் ஒளிர்கிறாள்.

“வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது-அதில்தான்சரித்திரம் நிகழ்கின்றது!

யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அதுவரை பொறுப்பாயடா-மகனே -என் அருகினில் இருப்பாயடா”

என்று தத்துவம் கூரும் தெய்வீகத் தாயாய் தோற்றமளிக்கிறாள்
“ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ!
 மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ'”

என்று முருகனைக்கூட   உரிமையுடன் கடிந்து கொள்ளும் தமிழ்ப்பாட்டியாய் தடியூன்றி  வருகிறாள். தாய் என்ற நிலையில் மட்டுமின்றி எல்லா நிலைகலிலும் தாய்மையின் தண்ணிழல் பரப்பி நிற்கிறார்கள் கண்ணதாசனின் கவிதை நாயகிகள்!!

(தொடரும்…)

இப்படித்தான் ஆரம்பம்-14

கண்ணதாசனின் தைப்பாவை பல விதங்களிலும் வித்தியாசமான முயற்சி. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பேசப்படும் பாவை நோன்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தைமாதத்தையே ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி “தையாகிய பாவையே” என்று ஒவ்வொரு பாடலிலும் அழைக்கும் விதமாகத்தான்  தைப்பாவை அமைந்திருக்கிறது.

 

திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் கவிஞர் இருந்தபோது எழுதப்பட்டது தைப்பாவை.
‘எந்தமிழர் கோட்டத்திருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடு வெங்களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ்செழிக்க’

தைமகளை வரவேற்றுத் தொடங்குகிறது தைப்பாவை.

அனாயசமான ஓசையழகுடன் அவர் எழுதியுள்ள இப்பாடல்களில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர்.

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

(மேழியர்-உழவர்)

வெவ்வேறு ஓசைகளின் பட்டியல் மட்டுமில்லை இது. காட்சி ஒழுங்கும் இதில் இருக்கிறது. மார்கழித்திங்களின் கடைசிநாளில் இரவு நேரமாகியும் கதிரறுப்பு முடிந்தபாடில்லை. அவ்வளவு அருமையான மகசூல். தைமுதல்நாள் புலர்வதற்கு சில மணிநேரங்கள் முன்பு வரை கூட,  நெல் ஏற்றப்பட்ட வண்டிகளைக் காளைமாடுகள் இழுத்துவர,களத்தில் நெல்மணிகள் கொட்டப்படுகின்றன.

காளை மணியோசை-களத்துமணி நெல்லோசை

 ஆண்கள் இந்த வேலையில் பரபரப்பாக இருக்க,பெண்களோ பொங்கல் வைக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்குகிறார்கள்.பொங்கல் பானைமுன் வாழை இலையை விரிக்கும் பெண்களின் கைவளையோசை
கேட்கிறது..

   வாழை இலையோசை-வஞ்சியர்கை வளையோசை

வீட்டிலுள்ள மற்ற பெண்கள்,குழந்தைகலின் தலையில் தாழம்பூக்களை வைத்துப் பின்னுகிறார்கள்.மூத்த தாய்மார்களோ,கதிரவன் உதித்துவிட்டால் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்க முடியாதென்ரு வேகவேகமாய் தயிர் கடைகிறார்கள்.

தாழை மடலோசை-தாயர்தயிர் மத்தோசை

அடுத்து பொழுது புலர்கிறது.கோழி கூவுகிறது. பொங்கல் பொங்குகிறது.உடனே குழந்தைகள் “பொங்கலோ  பொங்கல்” என்று கூவுகின்றனர்

 கோழிக்குரலோசை – குழவியர்வாய் தேனோசை

கூடவே கடலலைகள் புரண்டெழும் ஓசையும் கேட்கிறது.இத்தனை ஒலிகளும் சேர்ந்து தைமகளை வரவேற்கின்றன.
இந்தக்காட்சிகளை மனக்கண்ணால் பார்த்தபடி பாடலை மீண்டும் பாருங்கள்,
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

எவ்வித முன்திட்டமும் இல்லாமல் பொங்கும் ஊற்றில் கூட ஆற்றின்
ஒழுங்கு அமைவதுபோன்ற அற்புதம்தான் கவிஞரின் கவியோட்டம்.

தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை.
சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி
துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம்
வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள்.

“வாளைத் தொடு காளை வடிவைத் தொடும் வேளை
வேலைக்கென ஓலை விரைவுற்றது-சென்றான்
நூலைத் தொடும் இடையாள் நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள் வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை அமைவுற்றிட இத்-தை
காலம்வரல்கூறாய் கனிவாய தைப்பாவாய்”

இதுபோன்ற செம்மாந்த பாடல்கள் தைப்பாவையில் ஏராளம். மூவேந்தர்கள் பற்றிய பாடல்களில் சேரனைப்பற்றிய பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.

“இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்”

இப்படி தைத்திங்களில் பாடி மகிழ நாளுக்கொரு பாடலாய் தைப்பாவை
நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர்.திருப்பாவை,திருவெம்பாவை ஆகியவற்றை பக்தி இயக்கங்கள் பரப்பியதுபோல், தைத்திங்களை தமிழர் புத்தாண்டாக அறிவித்துள்ள தமிழியக்கங்கள் தைப்பாவை நூலைப் பரப்பலாமே என்று தோன்றுகிறது.

(கடந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்த கண்ணனுக்குதாசன் கண்ணதாசன்
பாடல்கள் காஸ்மிக் நிறுவனத்தால் ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண என்ற தலைப்பில் இசைவட்டாக வெளிவந்துள்ளது)

(தொடரும்)

அப்பாடா சாமி இது எப்போது முடியும்

திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ,சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டது. அதிலிருந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு….

1.ஏற்றுமதிக்கு வசதியாக திருப்பூருக்குக் கடலைக் கொண்டு வருவது

2.எங்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடுமென்பதால் மொண்டு குடிக்க ஆளுக்கொரு டம்ளர் இலவசமாய்த் தருவது

என்று நீண்ட அந்தப் பட்டியலைக்கண்டு திகைத்த பொதுமக்கள் வேட்பாளரின் பெயரைப் பார்த்ததும்  . அவர்,சிற்பி இரகுநாதன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிட்டார்.தேர்தல் ஆணையத்திடம் போராடி அவர் பெற்ற சின்னம், “சூட்கேஸ்”.

இது போதாதென்று திருப்பூரில் ஒரே மேடையில் தோன்றிய சர்வகட்சி வேட்பாளர்கள் கூட்டத்திலும் பேசினார்.

தன் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு விட்டு “ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை, நாலரை கோடித் தமிழர்களின் நம்பிக்கை நாயகன், புரட்சித் திலகம், புதுமைத் தென்றல், வாரி வழங்கும் வள்ளல், வேந்தர், அருமை அண்ணன் சிற்பி இரகுநாதனாகிய எனக்கே போடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று முடித்தார்.

ஆனாலும் தேர்தல் முறையைப் பகடி செய்வதுதான் தன் நோக்கமென்றும் தனக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய வேண்டாமென்றும் தேர்தலுக்கு முன்னர் தெளிவுபடுத்தினார். அதையும் மீறி முப்பது ஓட்டுகள் விழுந்ததில் அவருக்கு வருத்தம்தான்.

கூர்மையும் சமூக எள்ளலும் மிக்க நகைச்சுவை, சிற்பி ரகுநாதனின் நகைச்சுவை. பல நகைச்சுவைப் பேச்சாளர்கள் இருந்த போதும் அவருடைய தனித்தன்மையான பேச்சு, native humour எனப்படும் மண்ணின் மணம்கமழும் நகைச்சுவையால் முத்திரை பதித்தது.

குடும்பங்களில்,குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் அரட்டை, சண்டைகள் போன்றவற்றை தத்ரூபமாக செய்து காட்டி விமர்சித்து, பெண்ணியவாதிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளான போதும், பெண்கள் பற்றிய அவரின் விமர்சனங்களைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் பெண்களே! பட்டிமன்றங்களின் பொதுத் தலைப்புகளான ஆணா பெண்ணா, மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா பின்பா என்பது போன்றவற்றைக்கூட தனித்தன்மையுடன் கையாள்வதில் சிற்பி சமர்த்தர். பட்டி மண்டபங்களில் குறைந்தது 45 நிமிடங்கள் வாதிடுவார். நடுவர்களுக்கு மணியடிக்கத் தோன்றாது.

மேடையைத் தவிர மற்றபடி இறுக்கமானவர் என்று கருதப்படும் சிற்பி,நெருங்கிப் பழகும்போது கலகலப்பானவர்தான்.பாலக்காடு அருகே ஓரிடத்தில் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். காபியும் மாரி பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார்கள். சிற்பி என் காதருகே வந்து “இந்த பிஸ்கட்டைங்க..ஒரு பாக்கெட் வாங்கி வச்சுகிட்டா ஆறு மாசத்துக்காவது விருந்தாளிகளை சமாளிச்சுடலாம். ஒடைச்சு வீசீட்டா போதும். ஒருத்தனும் கிட்ட போக மாட்டான். பழைய மாதிரி எடுத்து பாட்டல்ல போட்டு வச்சுக்கலாம்” என்றார்.

‘திருப்பூர் விகடகவி’ என்ற தலைப்பில் சிற்றிதழொன்றையும் நடத்திவந்தார் அவர்.வள்ளலார் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு உண்டு.கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்கேயும் தன்னை முன்னிறுத்தாதவர்..எளிய தொழிலாளியாய் வாழ்வைத் தொடங்கி முயற்சியாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் வளர்ந்தவர் சிற்பி.அசைவம் சாப்பிட மாட்டார். புகையோ மதுவோ தொடமாடார்.

அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆனது. ஒரே பெண். நாற்பதுகளிலேயே தாத்தா ஆகிவிட்டார். மார்ச் 31ஆம் தேதி நெருங்கிய நண்பர் ஒருவர் போன் செய்தார்.”சிற்பி!அங்காடித்தெரு படம் பாருங்க!பிரமாதமா இருக்கு “கடைசியாக பெரியார் படம் வந்தபோது திரையரங்குக்குப் போனவர் சிற்பி இரகுநாதன்.

நண்பர் சொன்னதைக்கேட்டு அன்று மாட்னி ஷோ பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்திருக்கிறது. வீடு திரும்பியவருக்கு மாலையில் உடல் நலமில்லை. என்று சோடா குடித்தவர் இரவு மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனைக்குப் போவதற்குள் மரணம்.  ஐந்து மணிக்கே வந்த மாரடைப்பு சிற்பியுடனான பேச்சு சுவாரஸ்யத்தில் வந்த வேலையை மறந்துவிட்டு இரவு பத்து மணிக்கு அவரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. கூட்டங்களில் பேசும்போது, “அப்பாடா சாமியிது எப்போது முடியுமென்று அவஸ்தையுடன் நெளிகின்ற அவையோரே “என்று கிண்டல் செய்பவர், வாழ்க்கை என்கிற சொற்பொழிவை அவையடக்கம் பொங்க நிகழ்த்திவிட்டு 49ஆவது வயதில் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்”என்று முடித்து விட்டார்

ஏப்ரல் 1 காலை,சிற்பி இரகுநாதன் செல்போனில் இருந்து அழைப்பு நண்பர்களுக்கு வந்தது. அவருடைய நண்பர் பேசினார். சிற்பிஇரகுநாதன் மறைந்ததாக செய்தி கேட்டு ஏப்ரல்1க்கு சிற்பியின் ஏற்பாடு என்று சிரித்துக் கொண்டனர் நண்பர்கள்.வாழ்வின் நிகழ்வுகளைமுன்கூட்டியே

அனுமானிப்பதைவிட முட்டாள்தனம் ஏதும் உண்டா என்ன?

இப்படித்தான் ஆரம்பம்-13

கண்ணதாசனின் எழுத்துக்களில் இருக்கும் எளிமை,ஆபத்தான எளிமை.மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றுமில்லாததுபோல் தோன்றிவிடும். ஆனால் ஆழமான விஷயங்கள்அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.  வைணவத்தின் முக்கியமான தத்துவக்கூறு ஒன்றுண்டு. இறைவனை, ஐந்து நிலைகளில் வைத்துப் பார்க்கிறது வைணவம். பரம்பொருளாக செயல் கடந்த நிலையில் இருப்பது, பரநிலை. இருபுறமும் தேவியர் சூழ்ந்திருக்க, பள்ளி கொந்திருக்கும் நிலை, வியூக நிலை. பத்து அவதாரங்களாக பூமிக்கு வந்தது, அவதாரநிலை. ஆலயங்களில் மூர்த்தமாக எழுந்தருளியுள்ள நிலை, அர்ச்சை நிலை.காற்று, ஒளி, ஒலி, வெளிச்சம் என்று எங்கும் வியாபித்துள்ள நிலை, அந்தர்யாமி நிலை.

தனிக்கவிதையொன்றில்,போகிற போக்கில் கண்ணதாசன் இதைச் சொல்லிவிட்டு நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறார்.

                “மூலம் திருமாலாய்
                  முளைத்தெழுந்த  பெருமாளாய்
                  ஏலும் தனியறத்தில்
                  இயங்குகிற ராமனுமாய்
                  நாலு வடிவெடுத்த
                  நந்தகோபன் மகனை
                  மாலே மணிவண்ணா
                  வாராய் என அழைத்தால்
                  காலையிலே நம்வீட்டுக்
                   கதவைத் திறக்கின்றான்”

இதில். நாலு வடிவெடுத்த நந்தகோபன் மகனை என்பது, முதல் நான்கு நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில வரிகளுக்குப்பிறகு அந்தர்யாமி நிலையையும் பாடிவிடுகிறார் கவிஞர்.

                    “காற்றாக வானாகக்
                     கனலாகப் புனலாக
                      ஊற்றாக உருவாக
                      ஒளியாக மழையாக
                      நேற்றாக இன்றாக
                       நாளைக்கும் நிலையாக
                       ஏற்றாத தீபத்தும்
                        எரிகின்ற ஜோதியவன்  “

இதில் வைணவத்தின் ஐந்து நிலைகளை வைத்துப் பாட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் அவருக்கிருந்ததாய்த் தெரியவில்லை.வெள்ளம் பெருக்கெடுக்கும் வேகத்தில் வந்து விழுகிற விஷயங்கள் இவை.

“எல்லா உயிரிலும் நானேயிருக்கிறேன் என்றனன் கண்ண பெருமான்’ என்று கீதையின் சாரத்தை பாரதி பாடுவான் .கண்ணதாசனுக்கோ
எல்லா உயிர்களிலும் எல்லாப் பொருள்களிலும் கண்ணனைப் பார்க்க முடிகிறது.

“தந்தைதாய் மக்கள்
என்குலத்தின் உறவினர்கள்
முந்தைப்பிறவிகளில்
முன்பிருந்த பெரியோர்கள்
அத்தனையும் கண்ணனவன்
அவதாரம் என்றிருந்தேன்!
தாயாக வந்தக்கால்
தலைமாட்டில் நிற்கின்றான்
நோயாக வந்தக்கால்
நோய்மருந்தும் ஆகின்றான்
பாரதத்தில் அன்று
பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்
ஓரளவு எந்தன்
உள்ளத்தும் சொல்கின்றான்”
என்கிறார் கண்ணதாசன்.

‘  குருவாயூருக்கு வாருங்கள்-ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்  ” என்ற பாடலில்,

“பாத்திரம் கண்ணன் பால்போல் மக்கள்-பக்தியில் பிறந்த தனிநீதி”
என்று பாடுகிறார் அல்லவா!!

தனிகவிதையில் அவர் குரலைக் கேளுங்கள்:

                “நாத்திகன் வீட்டிலும்
நடக்கும் சங்கமம்
ஆத்திகன் வீட்டிலும்
அருளும் சங்கமம்
சாத்திரக் கூட்டினுள்
தழைக்கும் தெய்வதம்
பாத்திரம் நான் -அதில்
                பால் என் கண்ணனே” 

உயிர்களைத் தாங்கும் பாத்திரமாய் கண்ணன் இருக்க கண்ணனைத் தாங்கும் பாத்திரமாய்
தன்னை வைத்துப் பார்க்கும் இடத்தில் கண்ணதாசனிடம் யசோதையின் தாயன்பு வெளிப்படுகிறது.

கண்ணனை ஆண்டாள் திருப்பாவையில் பாடுகிறார்.சிவபெருமானை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார்.சமய உணர்வின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு பேதம் தெரியாது. திருப்பாவை திருவெம்பாவை பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“இந்து சமயத்தின் இரண்டு கண்கள் சைவமும் வைணவமும் என்றால், அந்தக் கண்களின் இரண்டு பாவைகள்தான் திருவெம்பாவையும் திருப்பாவையும்.மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாடல்,
‘ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியை”என்று தொடங்கும்.இதன் முதலெழுத்து திருப்பாவை பாடிய ஆண்டாளை நினைவுபடுத்துகிறது . திருப்பாவையின் முதல்பாடல், “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”என்று தொடங்குகிறது. இதன் முதலெழுத்து,திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த இரண்டெழுத்துக்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்-“ஆமா’என்று அதுவே சொல்லும்” என்றாராம் மஹாபெரியவர். சைவ சாத்திரங்களும் யாதொரு தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் மாதொரு பாகர்தான் அந்த வடிவில்
வருவாரென்கிறது. இது சமய ஒற்றுமை சார்ந்த பிரச்சாரமல்ல. எல்லாக் கடவுளும் ஒன்றே என்ற புரிதல்.

கிருஷ்ண கானத்தில் அப்படியொரு பாடல் உண்டு:

“கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவப் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஓதிய தமிழ்கேட்டு கண்ணன் வந்தான்”
எதைக் கண்டாலும் கண்ணனாகவே காண்கிற பக்தியின் உன்மத்தம் இந்தப்பாடலில்
வெகுஅழகாக வெளிப்படும்

“மார்கழித் திருநாளில்  மங்கையர் இளந்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்”
என்பார் கவிஞர். கிருஷ்ண கானம் வந்து பல நாட்களுக்குப்பின்,கவிஞரின் மறைவுக்கு சற்று முன்போ பின்போ ‘கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன்” என்றோர் இசைத்தொகுப்பு வெளிவந்தது. புகழ்பெற்ற பாடகர்களுடன் எம்.எஸ்.வி.,இளையராஜா ஆகியோரும் கவிஞரின் பாடல்களை அதில் பாடியிருப்பார்கள்.

நான் காசிக்குப் போயிருந்தபோது அதிலிருந்து ஒருபாடலை என் வாய் இடையறாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“கங்கைக் கரையினிலே-ஒரு
கற்பகச் சோலையுண்டு
மங்கையர் வந்துநின்றால்-அவர்முன்
மாதவன் வந்துநிற்பான்

தேவன் நடனமிடும்-யமுனை
தீர்த்தக் கரையினிலே
பாவியர் வந்துநின்றால்-அவர்
பாவமும் தீர்ந்துவிடும்

பார்த்தனைக் காத்தவனே-தனது
பக்தரைக் காப்பவனாம்
ஆர்த்தெழும் சங்கினிலே -நமக்கோர்
அட்சதை வைத்தவனாம் ”
என்ற பாடல்தான் அது.

கவிஞர் மொழிபெயர்த்த பஜகோவிந்தம் நூலின் சில பாடல்களை எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும் அதில் பாடியிருப்பார்கள்.

‘பிருந்தாவனம் என்ன வெகுதூரமா-இந்தப்
பேதைக்கு அவனின்றிப் பரிகாரமா’என்ற பாடலை வாணிஜெயராம் பாடியிருந்ததாக ஞாபகம்.இப்போது அந்த கேசட் கிடைப்பதில்லை.ஆனால் கண்ணதாசன் கவிதைகள்
ஏழாவது தொகுதியிலும்,பஜகோவிந்தம் தொகுப்பிலும் அந்தப்பாடல்கள் உள்ளன.

கண்ணதாசனின் பக்தி அவரை எந்தவிதமான பக்குவத்திற்குக் கொண்டு செலுத்தியிருந்தது என்பதை உணர்த்தும் பாடலொன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மனதை உலுக்கக்கூடிய-உறுத்தக்கூடிய கேள்விகள் மூன்றுதான்.

கடவுள் நம்மை எத்தனைநாட்கள் இந்த மண்ணில் வைத்திருப்பார்? எப்போது அழைப்பார்?அழைத்தபின் முக்தியா-மறுபிறப்பா?
இந்த மூன்று கவலைகளும் தனக்கில்லையென்று கண்ணனிடம் சொல்கிறார் கண்ணதாசன்.

“நின்றுவா என்றுநீ

நீட்டினை கையெனில்
நின்றுநான் பணிசெயக் கடவேன்!

இன்றுவா என்பதே
இட்ட கட்டளையெனில்
இப்பொழுதே வரத் துணிவேன்1

சென்றுவா என்றெனைத்
திரும்பவும் விட்டாயேல்
திரும்பவும் தோன்றுவேன் நானே !

கன்றினைத் தாயொடு
கரந்தபேர் ஐயனே
கர்த்தனே கண்ணபிரானே!”

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம் – 12

ஒருபுறம் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கண்ணதாசன் காட்டிய ஈடுபாடும், மறுபுறம் கண்ணனில் மூழ்கித் திளைத்த மனப்போக்கும், வாழ்க்கை அனுபவங்களை சாட்சிபூர்வமாகப் பார்க்கும் சமநிலையை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. கண்ணனின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களின் ஊடே புகுந்து நிகழ்காலம் குறித்த சில சுவையான பிரகடனங்களைக் கவிஞர் வெளிப்படுத்துவார். இலக்கண பாஷையில் இதைத் தற்குறிப்பேற்றம் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.ஆனால் அதையும் தாண்டிய அபூர்வமான தொடுகை ஒன்றில் அவர் கவித்துவமாய் சில மாயங்களைச் செய்வார். தண்ணீர்ப்பாம்பில் ஏன் விஷமில்லை என்பதற்குஅவர் சொல்லும் காரணத்தை கிருஷ்ணகானத்தில் கேட்டிருப்பீர்கள்.

“கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி!-அவன்

கனியிதழில் பால்குடித்து பூதகியைக் கொன்ற பின்தான்

கன்னியர்பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி”

இது மிகவும் கோலாகலமான பாடல். வாழ்க்கையில் புரிதல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உணர்தல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உள்மனதில் ஊற்றெடுக்கும் காதலிலோ பக்தியிலோ சில பரவசமான பொற்கணங்கள் பூப்பதுண்டு. புரியவைக்க முயன்றால் அது பெருந்தோல்வியில் முடியும். ஏனெனில் அது உணர்தலின் பாற்பட்டது. தத்துவத் தேடலில் முதல் கேள்வி என்ன என்றொரு சீடர் ஜென் குருவிடம் கேட்டாராம்.அதற்கு அந்த குரு, “முதல் கேள்வியை உனக்கு நான் சொன்னால் அது இரண்டாவது கேள்வியாகிவிடும்” என்றாராம். முதல் கேள்வியின் தீவிரம் கேட்கப்படுவதல்ல-அது ஒரு வேட்கை என்பார் ஓஷோ. தாகம் புரிதலின் எல்லைக்குள் வராதது.உணர்வில் மட்டும் உன்னதங்களை நிகழ்த்துவது. அப்படி சில நிமிஷங்களை இந்தப் பாடலில் எழுதியிருப்பார் கவிஞர்.

“குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பேரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது ராமாரி-சேலை
திருத்தும்போது அவன்பெயரை ஸ்ரீரங்கா என்றுசொன்னால்
அழுத்தமான சுகமிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி”

இந்த வரிகளைப் புரியவைக்க முயன்றால் அது மிக அபத்தமான முயற்சியாகப் போகும். பொழிப்புரைகளுக்கு எட்டாத பொழிவு இது. பக்தியை ஓர் இயக்கமாக ஏற்படுத்தியவர்கள் மக்கள் மத்தியில் தங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுசேர்க்க, சில அற்புதங்களை மையமிட்டுத் தொடங்குவார்கள்.பின்னர் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே அந்தரங்கமான உரையாடல் நிகழத் தொடங்கும். மேலே சொன்ன வரிகள் அந்த அந்தரங்க உணர்வின் வெளிப்பாடுகள்.ஆனால் இந்தப் பாடல், கண்ணனின் அற்புதங்களைப் பொதுவில் பாடிக்கொண்டாடும் விதமாகத்தான் தொடங்குகிறது.

கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால்கறக்குது ராமாரி-அந்த
மோகனனின் பேரைச்சொல்லி மூடிவைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய்யிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி

பக்தியில் ஈடுபடும் மனம் பொதுத்தன்மையிலிருந்து தனித்த அனுபவம் நோக்கி நகரவதன் படிநிலைகள் இந்தப் பாடலில் படிப்படியாக வெளிப்படுவதைப்பார்க்கலாம்.

“கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி”

என்ற வரி எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.அதன் விளைவாக புதுக்கோட்டை கம்பன் கழகம் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் மலருக்காக கம்பன் பற்றி ஒரு கவிதை எழுதினேன்.

‘காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவு கொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன

சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன

ராம ராம என்றுசொல்லி ஜபித்திருந்தன
நாமம்சொல்லும் பரவசத்தில் லயித்திருந்தன
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்

தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
‘கம்பநாடன்’என்றுசொல்லிச் சிறகசைத்தன

ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர் தச்சன்செய்த தேரசைந்தது

பனைமரங்கள் அவனிடத்தில் பக்திகொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதென்று கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டு தந்தன

கம்பநாடன் விழிமலர்கள் கருணை தந்தன-அவன்
கவிதைகள்தாம் பனையின் நுங்கில் சுவையும் தந்தன
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின”

கண்ணதாசனின் தற்குறிப்பேற்ற உத்தியைப் பின்பற்றி எழுதிப்பார்க்கும் ஆசையால் எழுந்தகவிதை இது.(இந்தக் கவிதையில் கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்தின் அடிப்படையில் இரண்டுவரிகளை மாற்றியது பற்றி ‘ஒரு தோப்புக் குயிலாக’ நூலில் எழுதியிருக்கிறேன்) கவிதை எழுதுவதில் மட்டுமின்றி,அப்போது நான் மேற்கொண்ட விளம்பர எழுத்தாளர் பணியிலும் புதுமைகள் செய்ய கண்ணதாசனின் உத்திகள் மிகவும் உதவியாய்இருந்தன.

விளம்பர வாசகங்கள் எழுதித் தருபவர்களை அந்தத் துறையில் ‘காப்பி ரைட்டர்’ என்பார்கள்.காப்பி ரைட்டர் என்ற சொல் பொதுவில் பலருக்கும் புரியாது. படியெடுத்து எழுதுகிற வேலை என்று நினைத்துக் கொண்டு, “ஏன்! உங்க ஆபீஸிலே ஜெராக்ஸ் மெஷின் கிடையாதா?”என்று அனுதாபத்துடன் விசாரிப்பார்கள். விளம்பர எழுத்தாளர் என்றாலும் விளங்காது. சிலர்,சுவரில் விளம்பரம் எழுதும் வேலை என்று நினைக்கத் தொடங்கினார்கள். இப்படியே விட்டால் சரிப்படாதென்று தோன்றியது. ஒரு தயாரிப்பை சிலாகித்து எழுதுகிற வேலைதான் காப்பிரைட்டர் வேலை என்பதை உணர்த்துவதற்காக,என் பதவியைக்குறிக்கும் விதமாய் சமஸ்கிருதத்தில் ஒரு பதத்தை உருவாக்கினேன். ‘சிலாகித்ய வாக்ய சிருஷ்டி கர்த்தா’ என்று சொல்லத் தொடங்கினேன்.இப்போதும் யாருக்கும் புரியவில்லை.ஆனால் மரியாதையாகப் பார்த்தார்கள்.

விளம்பரங்கள் எழுதுவது சில சமயங்களில் ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் எல்லா மொழிகளிலும் விளம்பரங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்.அதனால்மூலக்கருவை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொண்டு வெவ்வேறு மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள்.வரிக்குவரி மொழிபெயர்க்காமல் முடிந்தவரை தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொனியை விளம்பரங்களில் கொண்டு வந்துவிடுவேன்.The pride posession of a privileged man என்ற வாசகத்திற்கு நான் செய்த மொழிபெயர்ப்பு “பீடுமிக்க ஆடவரின் பெருமைகளில் ஒன்று”. விளம்பரப்படுத்தப்பட்ட பொருள் என்னவென்று சொல்லவில்லையே..ஆண்களின் உள்ளாடை!. Bare essentials என்று பொஸிஷனிங் செய்திருந்தார்கள். அதற்கு தமிழில் நான் கொடுத்த வாசகம் “அந்தரங்க சொந்தம்”. எல்லாம் கவிஞரின் தாக்கத்தில்தான்…

(தொடரும்…)

இப்படித்தான் ஆரம்பம்-11

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,”என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?”என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன்
போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு “கண்ணதாசன்”என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் “ஆமாம் !பார்த்திருக்கிறேன்”என்று வேறு சொன்னாராம்.

 

அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை.
காலப்போக்கில் கிருஷ்ணபக்தராகவே கனிந்தார் கண்ணதாசன்.தன்னிடம் வாக்களித்துவிட்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட ஸ்டூடியோ அதிபரிடம்
‘உன் ஸ்டூடியோ தீப்பிடித்து சாம்பலாகப் போகும்’என்று சாபமிட்டு கண்ணதாசன் வீடு திரும்பினாராம். வீட்டுக்குள் வந்ததுமே,மின்கசிவினால் அந்த ஸ்டூடியோ தீப்பிடித்ததாகத் தொலைபேசியில் செய்தி வந்ததாம்
“கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்”என்று கவிஞர் எழுதிய பல்லவிக்கு இது போன்ற சம்பவங்களே காரணம் என்று அவரே எழுதியிருக்கிறார்.

கண்ணனை, மிக அந்தரங்கமான துணையாய் அவர் உணர்ந்திருக்கிறார்.தனிக்கவிதை ஒன்றில் இதனைப் பதிவு செய்தும் இருக்கிறார்.

“நள்ளிராப் போழ்தினில் நானும் என் கண்ணனும்
 உள்ளுறும் பொருள்களை உரைப்பதும் உண்டுகாண்!
கள்ளினும் இனிய என் கண்ணன் சொல்வது
‘பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே”
என்று கண்ணனுக்கும் தனக்குமான உரையாடலை எழுதுகிறார்.

ஸ்ரீகிருஷ்ண போதையின் உச்சத்தில் ஓரிரு நாட்களுக்குள் எழுதப்பட்ட பாடல்கள் கிருஷ்ணகானம் இசைத்தொகுப்பில் உள்ளவை.ஒவ்வோர் இசைக்கலைஞரும்
உருகி உருகிப் பாடியிருப்பார்கள்.

உள்ளே முழு விழிப்புநிலையில் இருப்பதையே பரந்தாமனின் அரிதுயில் என்று வைணவம் சொல்கிறது.அறிதுயில் என்கிற தத்துவத்தை அனாயசமாகப் பாடுகிறார் கண்ணதாசன். பாட்டு என்னவோ தாலாட்டுப் பாடல்தான்.

‘ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ”

என்ற பாட்டு. அதில்…

‘நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ!அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்,யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ”

என்கிற  வரிகளில் தத்துவத் தெறிப்பும் தாய்மைத் தவிப்பும் சேர்ந்து விளையாடும்.

பெரியாழ்வார் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறார்.கண்ணன் யசோதையிடம் முலையமுதம் உண்டு முடித்ததும் அவனைத் தங்கள் வீட்டுக்கு அள்ளிப்போக பெண்கள் காத்திருக்கிறார களாம்.அவர்களின் வாழ்க்கை இலட்சியமே ,கண்ணனைப்போலொரு குழந்தையைப் பெறுவதுதான்.

“பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே”

கண்ணனைப் போல் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமில்லையே! அதனால்
கண்ணனைக் கொஞ்சி,அவனை முத்தமிடச் சொல்லி ரகசியமாய்க் கெஞ்சத்தான்
அவனை பெண்கள் வீட்டுக்குக்குத் தூக்கிப் போவார்களாம்.

“வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்து நின்றார் கோவிந்தாநீ முலையுணாயே”
என்பது பெரியாழ்வார் பாடல்.

“கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ-அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ”

என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்குப் பெரியாழ்வாரை ஞாபகப்படுத்தும்.
(பெரியாழ்வாரை ஞாபகப்படுத்துவதில் இருபத்தோராம் நூற்றாண்டின் தாய்மார்களும்

சளைத்தவர்களில்லை.அதிகாலையில் குழந்தைகளை அரைத்தூக்கத்தில் எழுப்பி,அலற அலறக் குளிப்பாட்டி,அழுவதற்காகத் திறந்த வாய்க்குள் இட்லியைத் திணித்து,குழந்தையையே சீருடைக்குள் திணித்து,வாசலில் அலறும் ஹாரன் சத்தம் கேட்டு குழந்தையை புத்தகமூட்டையோடும் சாப்பாட்டு மூட்டையோடும் ஆட்டோவில் திணித்து,ஆட்டோ நகர நகர,அழுது கொண்டே கையசைக்கும் குழந்தையைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டே உள்ளே போகும் தாய்மார்களை வீதிதோறும் பார்க்கிறீர்கள்தானே!இதை ஒரே வரியில் பெரியாழ்வார் படம் பிடித்திருக்கிறார்.”தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவர் தரிக்க இல்லார்” என்கிறார் பெரியாழ்வார்)

கண்ணதாசனின் கிருஷ்ண கானங்களில் தாய்மையுண்ர்வு தூக்கலாக இருக்கும். குறிப்பாக,

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்”
என்ற பாடல்.

குருவாயூர்க் கோவிலில் கண்ணன் கருவறையில் மட்டுமா காட்சி
தருகிறான்?இல்லை என்கிறார் கண்ணதாசன். குழந்தைக்கு முதல்முதலாக சோறூட்டும் வைபவம்குருவாயூரில்  தினமும் நடக்கும்.
கண்ணனைக் காண்பது கருவறையில் மட்டுமில்லையாம்

குருவாயூருக்கு வாருங்கள் -ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒருவாய் சோறு ஊட்டும் தாய்முன் 
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
என்கிறார் கவிஞர்.

தன் குழந்தையைப் பார்த்து சிலிர்ப்பவள் தாய்.எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் சிலிர்ப்பதே தாய்மை.அதுவே பிரபஞ்சத் தாய்மை.யசோதை கண்ணனை வாய்திறக்கச் சொன்னபோது உள்ளே பிரபஞ்சமே தெரிந்ததாம்.அந்த விநாடியில் யசோதை பிரபஞ்சத்தையே தன் குழந்தையாக உணர்ந்திருப்பாள். சராசரியான தாய்க்கு தன் பிள்ளையே பிரபஞ்சம்.புவனம் முழுதுடைய தாய்மைக்கு பிரபஞ்சமே பிள்ளை. இந்த உணர்வை ஊட்டத்தான் கண்ணனும் கந்தனும் குழந்தைகளாகக் காட்சி தருகிறார்கள். குருவாயூர்ப் பாலகனுக்கு ஒவ்வொரு பொழுதுக்கும்  ஒவ்வோர் அலங்காரம் நடக்கிறது. அதைப்பார்க்கும் போது தாய்மைக்கு என்ன நிகழ்கிறது?
கவிஞர் எழுதுகிறார் பாருங்கள்:

உச்சிக் காலத்தில் ஸ்ருங்காரம்-அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்.

நம்மில் இருக்கும் தாய்மை உணர்வைத் தூண்டி ரீங்காரமிடச் செய்வதுதானே கடவுளின் கனவு!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-10

மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில்  முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்.”மனிதத் தேனீ'”என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் “கம்பன் காட்டும் இந்திரசித்தன்” நூல் வெளியீட்டு விழா முடிந்து இரவு பத்து மணியளவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.பீளமேடு பேரவை நண்பர்கள் வந்திருந்தார்கள்.

கண்ணதாசனை மையமாகக் கொண்டு தொடங்கப்படுவது,நிச்சயம் இலக்கிய அமைப்பாகத்தான் இருக்க முடியும்.சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் அமைப்பாகவோ,அரசியல் அமைப்பாகவோ உருவாக வாய்ப்பில்லை.கம்பன் கழகம் போல் இந்த அமைப்பு செயல்படும்.இதற்கு மாநிலந்தழுவிய நிரல் எதுவுமில்லை என்று தோன்றியது.எனவே இந்த ஆலோசனையில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை.இரவு 12 மணியளவில் இந்தக் கூட்டம் முடிவடைந்தது.

கண்ணதாசனுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அபரிமிதமான செல்வாக்கையே களமாக்கிக் கொண்டால் போதும்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கோலலலம்பூரில் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு.கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்,”இங்கனக்குள்ள கண்ணதாசன் விழா நடக்குதுன்னு ஒரு தட்டி எழுதி வைச்சாக்கூட போதும்ணே!சாயங்காலம் ஒரு ஐந்நூறு பேரு வந்திடுவாஹ”என்று.உண்மைதான்.

கண்ணதாசனைக் கொண்டாடுவது மிக இயல்பான எளிதான விஷயம்.பீளமேடு கண்ணதசன் பேரவை நண்பர்கள் விழா தொடங்கும்போது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”என்ற பாடலைப் பாடுவார்கள்.

தங்களுக்குப் பாடத் தெரியாதே என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.பாடலின் இறுதியில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று முடிக்க வேண்டும்.அதுதான் அவர்களுக்கு முக்கியம்.அப்போதெல்லாம் திரைப்பாடல்களைப் பட்டிமண்டபங்களில் பாடுபவர்கள் மிகக் குறைவு.பேரா.சரசுவதி ராமநாதன்,புலவர்.கோ.சாரங்கபாணி.திருமதி.சி.எஸ்.விசாலாட்சி,என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர்களும் நான்கு வரிகளைப் பாடிவிட்டு விஷயத்திற்கு வந்து விடுவார்கள்.

அந்தத் தாக்கத்தில் நான்கூட கண்ணதாசன் பட்டிமன்றம் ஒன்றில் நான்கு வரிகள் பாடிக் காண்பித்தேன்.அடுத்து கோவையைச் சேர்ந்த கவிஞர் உமாமகேஸ்வரி பேச வந்தார்.எடுத்த எடுப்பிலேயே மிக அமைதியாக ஆரம்பித்தார்.அப்போதே எனக்கு சந்தேகம்.”நான் பல மேடைகளில் மரபின்மைந்தன் பேசிக் கேட்டிருக்கிறேன்.இன்றுதான் பாடிக் கேட்கிறேன்.” சில விநாடிகள் அமைதி காத்துவிட்டு அடுத்த வரியைச் சொன்னார்..”இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்’. இப்படி ஆளுக்காள் அநியாயத்திற்கு உண்மை சொல்லத் தொடங்கிய பிறகு நான் மேடைகளில் பாடிக்காட்டும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் பற்றியும் நான் மேடைகளில் சொல்வதுண்டு.பட்டுப்போன மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகும்.புல்லாங்குழல்தான் புருஷோத்தமனைப் பாடும்.ஆனால் கவிஞரோ ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்‘என்று எழுதுகிறார்.ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும்,பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும்.மூங்கில்,இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு.பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழலாவது போல உலக ஆசைகள் பட்டுப்போன மனிதன் பரம்பொருளைச் சேர்கிறான்.எனவே மூங்கில்கள் புருஷோத்தமனைப்பாடி தாங்களும் புல்லாங்குழல்களாவதற்குத் தவம் செய்ய வேண்டும்.
இந்த வரிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.பகவத்கீதையில்,கண்ணன்,பசுக்களில் காமதேனுவாயிருக்கிறேன்,யானைகளில் ஐராவதமாயிருக்கிறேன்,என்றெல்லாம் சொல்வான்.அப்படியானால்,மற்ற பசுக்களிலும் யானைகளிலும் கண்ணன் இல்லையா என்றொரு சீடர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருவார். பசு என்ற படைப்பின் உச்சம்,காமதேனு.
யானை என்கிற படைப்பின் உச்சம்,.ஐராவதம்.உண்மையில் ஒவ்வொரு பசுவும் காமதேனுவாகிற சாத்தியத்துடன் படைக்கப்பட்டதுதான்.ஒவ்வொரு யானையும் ஐராவதமாகும் சாத்தியமும் சக்தியும் கொண்டதுதான்.தன் படைப்பின் உச்சத்தை உனர்பவர் யாரோ அவருக்குள் இறைத்தன்மை அல்லது விழிப்பு நிகழ்கிறது.தன்னை உணர்ந்த ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உண்டு என்பார் ஒஷோ.மூங்கிலின் உச்சம்,புல்லாங்குழலாவது.அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது.
அடுத்த வரியில் “வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே !எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்”என்கிறார் கவிஞர்.மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன.நந்தவனம்,இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.மலரில் உள்ள மது,உலக இன்பங்களுக்கும் வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு.
உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டு விட்டு,மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.கண்ணனின் திருவுருவை,”கார்மேனி’என்று வர்ணிப்பது வைணவ இலக்கியங்களில் நிறைய உண்டு.
அந்த மேகங்கள்,கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல்,அதில் ஈடுபட்டு புகழ்ந்துபாட வேண்டுமாம்.”பன்னீர் மலர்சொரியும் மேகங்களே!எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்” என்கிறார் கவிஞர்.

திருவரங்கத்தில்.பெருமாள் தெற்குநோக்கி,வடதிசைக்கு முதுகுகாட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார்.தெற்குத்திசை,ஆழ்வார்களின் ஈரப்பசுந்தமிழ் படிந்தமையால் தென்திசையைப் பார்த்துப் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன் என்று வைணவ உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தென்திசைக்கு அப்படியொரு பெருமை.பாடலின்
நான்காவது வரியில்.‘தென்கோடித் தென்றல்தரும் ராகங்களே!எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்’ என்கிறார் கவிஞர்.
இந்தப் பாடலில்தான் பெருமாளின் நின்ற கோலம்,இருந்த கோலம்,கிடந்த கோலம் ஆகியவற்றுடன் நில்லாமல் தவழ்ந்த கோலத்தையும் பாடுகின்றார்.

“குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் -ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் -அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்.
பாரதக்கதையின் நான்குவரிச் சுருக்கமும் இந்தப் பாட்டில் உண்டு.

பாஞ்சாலி புகழ்காக்கத் தன்-கை கொடுத்தான் -அன்று
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ண கானத்தின் ஒவ்வொரு பாட்டும் இப்படி நயங்களின் சுரங்கம்தான்!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம் -9

கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர்
ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா?
இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது.

வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி மனிதர்கள்.கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள காமராஜ் சாலையில் கண்ணதாசன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவருடைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.கண்ணதாசன் விழாக்களின் போது அடிப்படை ஏற்பாடுகளில் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்களாக வந்து பங்கேற்பார்கள்.

கண்ணதாசனை நான் ரசித்து ரசித்துப் பேசப் பழகியது கூட அவர்கள் மத்தியில்தான்.கண்ணதாசனின் கவிதைகளில் திளைத்திருந்த நான் அவருடைய திரைப்பாடல்களின் ஆழ அகலங்களை அறிந்ததும் பகிர்ந்ததும் அங்கேதான்.ஒரு பாடலை,பகுதி பகுதியாகப் பிரித்துக்கொண்டு அவற்றின் இடையே
கண்ணுக்குப் புலப்படாத கவித்துவச் சங்கிலியால் கண்ணதாசன் இணைத்திருக்கும் நுட்பங்களை நான்
இனங்கண்டதும் அங்கேதான்

தம்பதிகள் மத்தியிலான நெருக்கத்தை கவிஞர் சொன்ன பாணி பற்றி அவர்களிடையே ஒருமுறை சொன்னேன்.
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.
பெண்ணை மலரென்றும் ஆணை வண்டென்றும் சொல்கிற வழக்கம் காலங்காலமாய் உள்ளதுதான்.ஆனால்
அந்தப்பெண் மனைவியா அல்லது விலைமகளா என்பதை கண்ணதாசன் இங்கே நுட்பமாக உணர்த்துகிறார்.
“உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது” என்ற வரி ,அது காமத்தையும் தாண்டிய உறவையும் காதலையும் உணர்த்துகிறது.இது காதல் உறவிலும் தாம்பத்யத்திலும்தான் சாத்தியம்.
தனக்கு விருப்பமான பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறங்கி விழுவதை ஒப்பிட்டால் சொர்க்கம் மிகவும் சாதாரணமான விஷயம்தான் என்கிறார் திருவள்ளுவர்.
“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு”என்பது திருக்குறள்.

“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.என்பது தாம்பத்ய சங்கீதம்.இதுவே ஒரு விலைமகளுடனான உறவாக இருந்திருந்தால்
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-சென்று விடுகின்றது’என்று கவிஞர் எழுதியிருக்கக் கூடும்.

அந்தரங்கமான அந்த சொந்தத்தை நாகரீகம் குறையாமல் கவிஞர் வர்ணிக்கும் பாங்கு அத்துடன் நிற்கவில்லை.அடுத்த வரிகளைப் பாருங்கள்.
“வானம் பொழிகின்றது-பூமி நனைகின்றது-மேனி குளிர்கின்றது-வெள்ளம் வடிகின்றது”.
அடுத்த சரணத்தில் வைகறைப் பொழுதைக் காட்டுகிறார் கவிஞர்.

“இரவு விடிகின்றது-இளமை எழுகின்றது,குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது.
அருகில் அமர்கின்றது-அத்தான் என்கின்றது,ஆண்மை விழிக்கின்றது,அள்ளி அணைக்கின்றது”

இங்கே ஒரு நிமிஷம் நிறுத்துவேன்.”அப்புறமென்ன? அதன்பின் மீண்டும் வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது என்று முதல் சரணத்தையே ஆரம்பிக்க வேண்டியதுதான்.அது அவரவர் வசதி’என்றதும் அவை ஆரவாரிக்கும்.

கண்ணதாசனின் பாடல்களுக்கான வாழும் உதாரணங்களையும் பேரவையில் பார்க்க முடிந்தது.
குணசேகரன் அப்படிப்பட்டவர்.ஆலை ஒன்றில் பணிபுரிகிற போது ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய
இடதுகையை இழந்தவர்.கண்ணதாசனின் அதிதீவிர ரசிகர்.நயமான இடங்கள் சொல்லப்படும்போது
கையால் தொடையைத் தட்டிக்கொண்டு கலகலவென்று சிரிப்பார்.அது ஆயிரம் கரவொலிகளுக்குச் சமம்.
அவருக்கு நிகழ்ந்தது காதல்திருமணம்.அவர் ஊனமடைந்த பின்னர்தான் காதல் அரும்பியது.கரத்தை அவர் இழந்தது1988ல்.திருமணம் நடந்தது 1990ல்.

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ”
என்ற கவிஞரின் வரிகளுக்கு ஒரு நாயகி வாயசைத்துக் காட்டியுள்ளார்.குணசேகரனின் நாயகி வாழ்ந்து காட்டுகிறார்.

தன் கணவரின் குறை தன் கணவருக்குக்கூட தெரியக்கூடாது என்பதில் கவனமாயிருப்பவர் திருமதி சாவித்திரி குணசேகரன்.அதற்கொரு சம்பவம் சாட்சி சொன்னது.
மதுரையில் தமிழருவி மணியனின் நூல்வெளியீட்டு விழா ஒன்றிற்காக கண்ணதாசன் பேரவை நண்பர்கள் குடும்பத்துடன் படைதிரண்டு வந்திருந்தார்கள்.எல்லோருமாக கோவிலுக்குப்போனார்கள்.மீனாட்சியம்மன் சந்நிதியில் ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் மறுபக்கமும் நின்றனர்.கையில் குங்குமம் வாங்கிய மறுவிநாடி ஆண்கள் பக்கத்திற்கு விரைந்த சாவித்திரி கணவனின் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு
பிறகே தான் இட்டுக் கொண்டார்.கனநேரமும் கூட தன் குறை குணசேகரனுக்குத் தெரியக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம் அவருக்கு.

திமுக அனுதாபியாக இருந்த குணசேகரன் தங்கள் மகளுக்கு உதயா என்று பெயர் சூட்டினார்.பிறகு மதிமுகவில் இணைந்தார்.இன்று அரசியல் சார்பில்லாமல்.கட்டிடப்பொருள் விற்பனையகம் ஒன்றை நிறுவி கணவனும் மனைவியுமாய் நடத்தி வருகிறார்கள்.

காளிதாசும் ஆலைப்பணியை விட்டுவிட்டு இருகூரில் தன் பரம்பரைத் தொழிலாகிய ஜோதிடத்தொழிலில்
கொடிகட்டிப் பறக்கிறார்.மகளிர் அணித்தலைவி விஜயசாந்தியை மணந்து கொண்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தது,
கவிஞரின் புகைப்படம்.
கண்ணதாசன் பேரவையில் தங்கள் பெற்றோரின் துணையுடன் முழுமையாக ஈடுபட்டு பேரவையையே ஒரு குடும்பமாகக் கருதிவந்த கணேசன் என்கிற குலசேகரன்,மற்றும் அவருடைய சகோதரர் ஆனந்தன் ஆகியோர் அதே பாச உணர்வுடன் பேரவை நண்பர்களுடன் தொடர்பிலிருந்து கொண்டு தங்கள் அச்சகத்தை விரிவுபடுத்தி நடத்தி வருகிறார்கள்.

பள்ளிப்படிப்பு முடித்த கையுடன் என்னிடம் உதவியாளராக சேர்ந்த தேவ.சீனிவாசன்,வெவ்வேறு துறைகளில் பரிசோதனை முயற்சிகள் செய்துவிட்டு இன்று வரைகலை வடிவமைப்பாளரான தன் மனைவியின் துணையுடன் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி கண்ணதாசன் பேரவை நண்பர்கள் வாழ்வின் நிர்ப்பந்தங்களால் தனித்தனி பிரயத்தனங்களில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருப்பதும் அவ்வப்போது பசுமைநிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆறுதலான விஷயங்கள்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை நண்பர்களை மையப்படுத்தி கண்ணதாசன் இயக்கத்தை
மாநிலந் தழுவிய இயக்கமாய் உருவாக்க மதுரையில் ஒரு கூட்டம் நடந்தது.அந்த நள்ளிரவுகூட்டம்,ஒரு
சுவாரசியமான அனுபவம்.

(தொடரும்)