இப்படித்தான் ஆரம்பம்-11

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,”என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?”என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன்
போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு “கண்ணதாசன்”என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் “ஆமாம் !பார்த்திருக்கிறேன்”என்று வேறு சொன்னாராம்.

 

அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை.
காலப்போக்கில் கிருஷ்ணபக்தராகவே கனிந்தார் கண்ணதாசன்.தன்னிடம் வாக்களித்துவிட்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட ஸ்டூடியோ அதிபரிடம்
‘உன் ஸ்டூடியோ தீப்பிடித்து சாம்பலாகப் போகும்’என்று சாபமிட்டு கண்ணதாசன் வீடு திரும்பினாராம். வீட்டுக்குள் வந்ததுமே,மின்கசிவினால் அந்த ஸ்டூடியோ தீப்பிடித்ததாகத் தொலைபேசியில் செய்தி வந்ததாம்
“கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்”என்று கவிஞர் எழுதிய பல்லவிக்கு இது போன்ற சம்பவங்களே காரணம் என்று அவரே எழுதியிருக்கிறார்.

கண்ணனை, மிக அந்தரங்கமான துணையாய் அவர் உணர்ந்திருக்கிறார்.தனிக்கவிதை ஒன்றில் இதனைப் பதிவு செய்தும் இருக்கிறார்.

“நள்ளிராப் போழ்தினில் நானும் என் கண்ணனும்
 உள்ளுறும் பொருள்களை உரைப்பதும் உண்டுகாண்!
கள்ளினும் இனிய என் கண்ணன் சொல்வது
‘பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே”
என்று கண்ணனுக்கும் தனக்குமான உரையாடலை எழுதுகிறார்.

ஸ்ரீகிருஷ்ண போதையின் உச்சத்தில் ஓரிரு நாட்களுக்குள் எழுதப்பட்ட பாடல்கள் கிருஷ்ணகானம் இசைத்தொகுப்பில் உள்ளவை.ஒவ்வோர் இசைக்கலைஞரும்
உருகி உருகிப் பாடியிருப்பார்கள்.

உள்ளே முழு விழிப்புநிலையில் இருப்பதையே பரந்தாமனின் அரிதுயில் என்று வைணவம் சொல்கிறது.அறிதுயில் என்கிற தத்துவத்தை அனாயசமாகப் பாடுகிறார் கண்ணதாசன். பாட்டு என்னவோ தாலாட்டுப் பாடல்தான்.

‘ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ”

என்ற பாட்டு. அதில்…

‘நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ!அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்,யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ”

என்கிற  வரிகளில் தத்துவத் தெறிப்பும் தாய்மைத் தவிப்பும் சேர்ந்து விளையாடும்.

பெரியாழ்வார் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறார்.கண்ணன் யசோதையிடம் முலையமுதம் உண்டு முடித்ததும் அவனைத் தங்கள் வீட்டுக்கு அள்ளிப்போக பெண்கள் காத்திருக்கிறார களாம்.அவர்களின் வாழ்க்கை இலட்சியமே ,கண்ணனைப்போலொரு குழந்தையைப் பெறுவதுதான்.

“பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே”

கண்ணனைப் போல் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமில்லையே! அதனால்
கண்ணனைக் கொஞ்சி,அவனை முத்தமிடச் சொல்லி ரகசியமாய்க் கெஞ்சத்தான்
அவனை பெண்கள் வீட்டுக்குக்குத் தூக்கிப் போவார்களாம்.

“வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்து நின்றார் கோவிந்தாநீ முலையுணாயே”
என்பது பெரியாழ்வார் பாடல்.

“கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ-அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ”

என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்குப் பெரியாழ்வாரை ஞாபகப்படுத்தும்.
(பெரியாழ்வாரை ஞாபகப்படுத்துவதில் இருபத்தோராம் நூற்றாண்டின் தாய்மார்களும்

சளைத்தவர்களில்லை.அதிகாலையில் குழந்தைகளை அரைத்தூக்கத்தில் எழுப்பி,அலற அலறக் குளிப்பாட்டி,அழுவதற்காகத் திறந்த வாய்க்குள் இட்லியைத் திணித்து,குழந்தையையே சீருடைக்குள் திணித்து,வாசலில் அலறும் ஹாரன் சத்தம் கேட்டு குழந்தையை புத்தகமூட்டையோடும் சாப்பாட்டு மூட்டையோடும் ஆட்டோவில் திணித்து,ஆட்டோ நகர நகர,அழுது கொண்டே கையசைக்கும் குழந்தையைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டே உள்ளே போகும் தாய்மார்களை வீதிதோறும் பார்க்கிறீர்கள்தானே!இதை ஒரே வரியில் பெரியாழ்வார் படம் பிடித்திருக்கிறார்.”தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவர் தரிக்க இல்லார்” என்கிறார் பெரியாழ்வார்)

கண்ணதாசனின் கிருஷ்ண கானங்களில் தாய்மையுண்ர்வு தூக்கலாக இருக்கும். குறிப்பாக,

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்”
என்ற பாடல்.

குருவாயூர்க் கோவிலில் கண்ணன் கருவறையில் மட்டுமா காட்சி
தருகிறான்?இல்லை என்கிறார் கண்ணதாசன். குழந்தைக்கு முதல்முதலாக சோறூட்டும் வைபவம்குருவாயூரில்  தினமும் நடக்கும்.
கண்ணனைக் காண்பது கருவறையில் மட்டுமில்லையாம்

குருவாயூருக்கு வாருங்கள் -ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒருவாய் சோறு ஊட்டும் தாய்முன் 
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
என்கிறார் கவிஞர்.

தன் குழந்தையைப் பார்த்து சிலிர்ப்பவள் தாய்.எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் சிலிர்ப்பதே தாய்மை.அதுவே பிரபஞ்சத் தாய்மை.யசோதை கண்ணனை வாய்திறக்கச் சொன்னபோது உள்ளே பிரபஞ்சமே தெரிந்ததாம்.அந்த விநாடியில் யசோதை பிரபஞ்சத்தையே தன் குழந்தையாக உணர்ந்திருப்பாள். சராசரியான தாய்க்கு தன் பிள்ளையே பிரபஞ்சம்.புவனம் முழுதுடைய தாய்மைக்கு பிரபஞ்சமே பிள்ளை. இந்த உணர்வை ஊட்டத்தான் கண்ணனும் கந்தனும் குழந்தைகளாகக் காட்சி தருகிறார்கள். குருவாயூர்ப் பாலகனுக்கு ஒவ்வொரு பொழுதுக்கும்  ஒவ்வோர் அலங்காரம் நடக்கிறது. அதைப்பார்க்கும் போது தாய்மைக்கு என்ன நிகழ்கிறது?
கவிஞர் எழுதுகிறார் பாருங்கள்:

உச்சிக் காலத்தில் ஸ்ருங்காரம்-அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்.

நம்மில் இருக்கும் தாய்மை உணர்வைத் தூண்டி ரீங்காரமிடச் செய்வதுதானே கடவுளின் கனவு!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-10

மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில்  முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்.”மனிதத் தேனீ'”என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் “கம்பன் காட்டும் இந்திரசித்தன்” நூல் வெளியீட்டு விழா முடிந்து இரவு பத்து மணியளவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.பீளமேடு பேரவை நண்பர்கள் வந்திருந்தார்கள்.

கண்ணதாசனை மையமாகக் கொண்டு தொடங்கப்படுவது,நிச்சயம் இலக்கிய அமைப்பாகத்தான் இருக்க முடியும்.சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் அமைப்பாகவோ,அரசியல் அமைப்பாகவோ உருவாக வாய்ப்பில்லை.கம்பன் கழகம் போல் இந்த அமைப்பு செயல்படும்.இதற்கு மாநிலந்தழுவிய நிரல் எதுவுமில்லை என்று தோன்றியது.எனவே இந்த ஆலோசனையில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை.இரவு 12 மணியளவில் இந்தக் கூட்டம் முடிவடைந்தது.

கண்ணதாசனுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அபரிமிதமான செல்வாக்கையே களமாக்கிக் கொண்டால் போதும்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கோலலலம்பூரில் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு.கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்,”இங்கனக்குள்ள கண்ணதாசன் விழா நடக்குதுன்னு ஒரு தட்டி எழுதி வைச்சாக்கூட போதும்ணே!சாயங்காலம் ஒரு ஐந்நூறு பேரு வந்திடுவாஹ”என்று.உண்மைதான்.

கண்ணதாசனைக் கொண்டாடுவது மிக இயல்பான எளிதான விஷயம்.பீளமேடு கண்ணதசன் பேரவை நண்பர்கள் விழா தொடங்கும்போது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”என்ற பாடலைப் பாடுவார்கள்.

தங்களுக்குப் பாடத் தெரியாதே என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.பாடலின் இறுதியில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று முடிக்க வேண்டும்.அதுதான் அவர்களுக்கு முக்கியம்.அப்போதெல்லாம் திரைப்பாடல்களைப் பட்டிமண்டபங்களில் பாடுபவர்கள் மிகக் குறைவு.பேரா.சரசுவதி ராமநாதன்,புலவர்.கோ.சாரங்கபாணி.திருமதி.சி.எஸ்.விசாலாட்சி,என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர்களும் நான்கு வரிகளைப் பாடிவிட்டு விஷயத்திற்கு வந்து விடுவார்கள்.

அந்தத் தாக்கத்தில் நான்கூட கண்ணதாசன் பட்டிமன்றம் ஒன்றில் நான்கு வரிகள் பாடிக் காண்பித்தேன்.அடுத்து கோவையைச் சேர்ந்த கவிஞர் உமாமகேஸ்வரி பேச வந்தார்.எடுத்த எடுப்பிலேயே மிக அமைதியாக ஆரம்பித்தார்.அப்போதே எனக்கு சந்தேகம்.”நான் பல மேடைகளில் மரபின்மைந்தன் பேசிக் கேட்டிருக்கிறேன்.இன்றுதான் பாடிக் கேட்கிறேன்.” சில விநாடிகள் அமைதி காத்துவிட்டு அடுத்த வரியைச் சொன்னார்..”இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்’. இப்படி ஆளுக்காள் அநியாயத்திற்கு உண்மை சொல்லத் தொடங்கிய பிறகு நான் மேடைகளில் பாடிக்காட்டும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் பற்றியும் நான் மேடைகளில் சொல்வதுண்டு.பட்டுப்போன மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகும்.புல்லாங்குழல்தான் புருஷோத்தமனைப் பாடும்.ஆனால் கவிஞரோ ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்‘என்று எழுதுகிறார்.ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும்,பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும்.மூங்கில்,இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு.பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழலாவது போல உலக ஆசைகள் பட்டுப்போன மனிதன் பரம்பொருளைச் சேர்கிறான்.எனவே மூங்கில்கள் புருஷோத்தமனைப்பாடி தாங்களும் புல்லாங்குழல்களாவதற்குத் தவம் செய்ய வேண்டும்.
இந்த வரிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.பகவத்கீதையில்,கண்ணன்,பசுக்களில் காமதேனுவாயிருக்கிறேன்,யானைகளில் ஐராவதமாயிருக்கிறேன்,என்றெல்லாம் சொல்வான்.அப்படியானால்,மற்ற பசுக்களிலும் யானைகளிலும் கண்ணன் இல்லையா என்றொரு சீடர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருவார். பசு என்ற படைப்பின் உச்சம்,காமதேனு.
யானை என்கிற படைப்பின் உச்சம்,.ஐராவதம்.உண்மையில் ஒவ்வொரு பசுவும் காமதேனுவாகிற சாத்தியத்துடன் படைக்கப்பட்டதுதான்.ஒவ்வொரு யானையும் ஐராவதமாகும் சாத்தியமும் சக்தியும் கொண்டதுதான்.தன் படைப்பின் உச்சத்தை உனர்பவர் யாரோ அவருக்குள் இறைத்தன்மை அல்லது விழிப்பு நிகழ்கிறது.தன்னை உணர்ந்த ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உண்டு என்பார் ஒஷோ.மூங்கிலின் உச்சம்,புல்லாங்குழலாவது.அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது.
அடுத்த வரியில் “வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே !எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்”என்கிறார் கவிஞர்.மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன.நந்தவனம்,இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.மலரில் உள்ள மது,உலக இன்பங்களுக்கும் வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு.
உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டு விட்டு,மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.கண்ணனின் திருவுருவை,”கார்மேனி’என்று வர்ணிப்பது வைணவ இலக்கியங்களில் நிறைய உண்டு.
அந்த மேகங்கள்,கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல்,அதில் ஈடுபட்டு புகழ்ந்துபாட வேண்டுமாம்.”பன்னீர் மலர்சொரியும் மேகங்களே!எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்” என்கிறார் கவிஞர்.

திருவரங்கத்தில்.பெருமாள் தெற்குநோக்கி,வடதிசைக்கு முதுகுகாட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார்.தெற்குத்திசை,ஆழ்வார்களின் ஈரப்பசுந்தமிழ் படிந்தமையால் தென்திசையைப் பார்த்துப் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன் என்று வைணவ உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தென்திசைக்கு அப்படியொரு பெருமை.பாடலின்
நான்காவது வரியில்.‘தென்கோடித் தென்றல்தரும் ராகங்களே!எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்’ என்கிறார் கவிஞர்.
இந்தப் பாடலில்தான் பெருமாளின் நின்ற கோலம்,இருந்த கோலம்,கிடந்த கோலம் ஆகியவற்றுடன் நில்லாமல் தவழ்ந்த கோலத்தையும் பாடுகின்றார்.

“குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் -ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் -அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்.
பாரதக்கதையின் நான்குவரிச் சுருக்கமும் இந்தப் பாட்டில் உண்டு.

பாஞ்சாலி புகழ்காக்கத் தன்-கை கொடுத்தான் -அன்று
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ண கானத்தின் ஒவ்வொரு பாட்டும் இப்படி நயங்களின் சுரங்கம்தான்!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம் -9

கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர்
ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா?
இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது.

வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி மனிதர்கள்.கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள காமராஜ் சாலையில் கண்ணதாசன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவருடைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.கண்ணதாசன் விழாக்களின் போது அடிப்படை ஏற்பாடுகளில் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்களாக வந்து பங்கேற்பார்கள்.

கண்ணதாசனை நான் ரசித்து ரசித்துப் பேசப் பழகியது கூட அவர்கள் மத்தியில்தான்.கண்ணதாசனின் கவிதைகளில் திளைத்திருந்த நான் அவருடைய திரைப்பாடல்களின் ஆழ அகலங்களை அறிந்ததும் பகிர்ந்ததும் அங்கேதான்.ஒரு பாடலை,பகுதி பகுதியாகப் பிரித்துக்கொண்டு அவற்றின் இடையே
கண்ணுக்குப் புலப்படாத கவித்துவச் சங்கிலியால் கண்ணதாசன் இணைத்திருக்கும் நுட்பங்களை நான்
இனங்கண்டதும் அங்கேதான்

தம்பதிகள் மத்தியிலான நெருக்கத்தை கவிஞர் சொன்ன பாணி பற்றி அவர்களிடையே ஒருமுறை சொன்னேன்.
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.
பெண்ணை மலரென்றும் ஆணை வண்டென்றும் சொல்கிற வழக்கம் காலங்காலமாய் உள்ளதுதான்.ஆனால்
அந்தப்பெண் மனைவியா அல்லது விலைமகளா என்பதை கண்ணதாசன் இங்கே நுட்பமாக உணர்த்துகிறார்.
“உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது” என்ற வரி ,அது காமத்தையும் தாண்டிய உறவையும் காதலையும் உணர்த்துகிறது.இது காதல் உறவிலும் தாம்பத்யத்திலும்தான் சாத்தியம்.
தனக்கு விருப்பமான பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறங்கி விழுவதை ஒப்பிட்டால் சொர்க்கம் மிகவும் சாதாரணமான விஷயம்தான் என்கிறார் திருவள்ளுவர்.
“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு”என்பது திருக்குறள்.

“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது”.என்பது தாம்பத்ய சங்கீதம்.இதுவே ஒரு விலைமகளுடனான உறவாக இருந்திருந்தால்
“வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-சென்று விடுகின்றது’என்று கவிஞர் எழுதியிருக்கக் கூடும்.

அந்தரங்கமான அந்த சொந்தத்தை நாகரீகம் குறையாமல் கவிஞர் வர்ணிக்கும் பாங்கு அத்துடன் நிற்கவில்லை.அடுத்த வரிகளைப் பாருங்கள்.
“வானம் பொழிகின்றது-பூமி நனைகின்றது-மேனி குளிர்கின்றது-வெள்ளம் வடிகின்றது”.
அடுத்த சரணத்தில் வைகறைப் பொழுதைக் காட்டுகிறார் கவிஞர்.

“இரவு விடிகின்றது-இளமை எழுகின்றது,குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது.
அருகில் அமர்கின்றது-அத்தான் என்கின்றது,ஆண்மை விழிக்கின்றது,அள்ளி அணைக்கின்றது”

இங்கே ஒரு நிமிஷம் நிறுத்துவேன்.”அப்புறமென்ன? அதன்பின் மீண்டும் வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது என்று முதல் சரணத்தையே ஆரம்பிக்க வேண்டியதுதான்.அது அவரவர் வசதி’என்றதும் அவை ஆரவாரிக்கும்.

கண்ணதாசனின் பாடல்களுக்கான வாழும் உதாரணங்களையும் பேரவையில் பார்க்க முடிந்தது.
குணசேகரன் அப்படிப்பட்டவர்.ஆலை ஒன்றில் பணிபுரிகிற போது ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய
இடதுகையை இழந்தவர்.கண்ணதாசனின் அதிதீவிர ரசிகர்.நயமான இடங்கள் சொல்லப்படும்போது
கையால் தொடையைத் தட்டிக்கொண்டு கலகலவென்று சிரிப்பார்.அது ஆயிரம் கரவொலிகளுக்குச் சமம்.
அவருக்கு நிகழ்ந்தது காதல்திருமணம்.அவர் ஊனமடைந்த பின்னர்தான் காதல் அரும்பியது.கரத்தை அவர் இழந்தது1988ல்.திருமணம் நடந்தது 1990ல்.

“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ”
என்ற கவிஞரின் வரிகளுக்கு ஒரு நாயகி வாயசைத்துக் காட்டியுள்ளார்.குணசேகரனின் நாயகி வாழ்ந்து காட்டுகிறார்.

தன் கணவரின் குறை தன் கணவருக்குக்கூட தெரியக்கூடாது என்பதில் கவனமாயிருப்பவர் திருமதி சாவித்திரி குணசேகரன்.அதற்கொரு சம்பவம் சாட்சி சொன்னது.
மதுரையில் தமிழருவி மணியனின் நூல்வெளியீட்டு விழா ஒன்றிற்காக கண்ணதாசன் பேரவை நண்பர்கள் குடும்பத்துடன் படைதிரண்டு வந்திருந்தார்கள்.எல்லோருமாக கோவிலுக்குப்போனார்கள்.மீனாட்சியம்மன் சந்நிதியில் ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் மறுபக்கமும் நின்றனர்.கையில் குங்குமம் வாங்கிய மறுவிநாடி ஆண்கள் பக்கத்திற்கு விரைந்த சாவித்திரி கணவனின் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு
பிறகே தான் இட்டுக் கொண்டார்.கனநேரமும் கூட தன் குறை குணசேகரனுக்குத் தெரியக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம் அவருக்கு.

திமுக அனுதாபியாக இருந்த குணசேகரன் தங்கள் மகளுக்கு உதயா என்று பெயர் சூட்டினார்.பிறகு மதிமுகவில் இணைந்தார்.இன்று அரசியல் சார்பில்லாமல்.கட்டிடப்பொருள் விற்பனையகம் ஒன்றை நிறுவி கணவனும் மனைவியுமாய் நடத்தி வருகிறார்கள்.

காளிதாசும் ஆலைப்பணியை விட்டுவிட்டு இருகூரில் தன் பரம்பரைத் தொழிலாகிய ஜோதிடத்தொழிலில்
கொடிகட்டிப் பறக்கிறார்.மகளிர் அணித்தலைவி விஜயசாந்தியை மணந்து கொண்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தது,
கவிஞரின் புகைப்படம்.
கண்ணதாசன் பேரவையில் தங்கள் பெற்றோரின் துணையுடன் முழுமையாக ஈடுபட்டு பேரவையையே ஒரு குடும்பமாகக் கருதிவந்த கணேசன் என்கிற குலசேகரன்,மற்றும் அவருடைய சகோதரர் ஆனந்தன் ஆகியோர் அதே பாச உணர்வுடன் பேரவை நண்பர்களுடன் தொடர்பிலிருந்து கொண்டு தங்கள் அச்சகத்தை விரிவுபடுத்தி நடத்தி வருகிறார்கள்.

பள்ளிப்படிப்பு முடித்த கையுடன் என்னிடம் உதவியாளராக சேர்ந்த தேவ.சீனிவாசன்,வெவ்வேறு துறைகளில் பரிசோதனை முயற்சிகள் செய்துவிட்டு இன்று வரைகலை வடிவமைப்பாளரான தன் மனைவியின் துணையுடன் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி கண்ணதாசன் பேரவை நண்பர்கள் வாழ்வின் நிர்ப்பந்தங்களால் தனித்தனி பிரயத்தனங்களில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருப்பதும் அவ்வப்போது பசுமைநிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆறுதலான விஷயங்கள்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை நண்பர்களை மையப்படுத்தி கண்ணதாசன் இயக்கத்தை
மாநிலந் தழுவிய இயக்கமாய் உருவாக்க மதுரையில் ஒரு கூட்டம் நடந்தது.அந்த நள்ளிரவுகூட்டம்,ஒரு
சுவாரசியமான அனுபவம்.

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-8

“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்”என்றார்
கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன்.
இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில் ஆரம்பித்து,சசி போன்ற நிறுவனங்கள் துணையுடன் நடத்திய கண்ணதாசன் விழாக்கள்,மற்றும் உலகின் பல நாடுகளில் கண்ணதாசனைப் பற்றிப் பேசிய அனுபவங்கள்,அனைத்துமே எனக்கோர் உண்மையை உணர்த்தின.

தமிழ்மக்கள்,தங்கள் அந்தரங்கத்தில் நுழைந்த கவிஞராகக் கண்ணதாசனைக் கான்கிறார்கள்.
தங்கள் தனிவாழ்வின் அனுபவங்களை,வளமான தமிழால் பாடிய கவிஞராக மட்டுமின்றி,வாழ்வு பற்றிய தெளிவைத் தந்த கவிஞராகவும் கண்ணதாசனைக் காண்கிறார்கள்.என்னுடைய கணிப்பில் வெகுமக்கள் அப்படி நெருக்கமாக தங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்ட இன்னொரு கவிஞர் இல்லை.
ரீ மிக்ஸ் என்ற பெயரில் கண்ணதாசனின் வரிகளைக் கற்பழிக்கும் இன்றைய வன்கொடுமைச் சூழலில்
கூட கண்ணதாசன் வீடுகள் தோறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கண்ணதாசனின் ஒரு பாடலைக்கூட முழுதாகக் கேட்டிராத இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும்
கூட “அது கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து”என்று பாடுவதைக் கேட்கும்போது சின்ன சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

கண்ணதாசனை நேரடியாக அறிந்து கொள்ளும் இசைச்சூழல் இல்லாமல் போனாலும்கூட,தமிழ் சினிமாவின் கடைசிப் பாடலாசிரியன் இருக்கும்வரை கண்ணதாசனின் பெயர் திரும்பத் திரும்ப
சொல்லப்படும் என்றே தோன்றுகிறது.

“காளிதாசன் கம்பன் நாளை வாழ்த்தும் தலைமுற-நாங்க
கண்ணதாசன் தொடங்கிவச்ச பாட்டுப் பரம்பர”

“காளிதாசன்,கண்ணதாசன்,கவிதைநீ..நெருங்கிவா”

“மீன்செத்தா கருவாடு நீசெத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க”

“கண்ணதாசன்போல தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு”

“கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு-என்
காதல் கவிதை வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு”

“சொன்னான் நம்ம கண்ணதாசன் பாட்டுலெ-ஒருசேதி
அது தேவையிப்ப நாட்டுலெ”

போன்ற பாடல்கள் கண்ணதாசனின் இடத்தை உறவுணர்வோடும்,உரிமையோடும் நினைவுகூரும் கவிஞர்களின் பிரியத்தை உணர்த்துபவை.
“கண்ணதாசன் காரக்குடி”போன்றவை விதிவிலக்குகள்.

கண்ணதாசனின் எழுத்துக்களால் தங்கள் வாழ்வில் மலர்ச்சி கண்ட மனிதர்கள்,
அவர்பால் கொண்ட நன்றியுணர்வின் காரணமாக தமிழகமெங்கும் எத்தனையோ
அமைப்புகளை அவர் பெயரால் தொடங்கினர்.கோவை,ஈரோடு,சேலம் போன்ற
பகுதிகளில் இத்தகைய உணர்வும் அமைப்புகளும் அதிகம்.

பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை வலிமையாக வளர்ந்தது.
பக்கத்திலுள்ள சிற்றூர்களில் கிளை அமைப்புகள்,கிளை அமைப்பு தொடங்க முடியாத இடங்களில் கண்ணதாசன் விழாக்கள் என்று பட்டையைக் கிளப்பினார்கள்.
இவர்களைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் எல்.சோமு குறிப்பிடத்தக்கவர்.

செட்டிநாட்டுக்காரரான இவர் அசப்பில் கண்ணதாசனைப் போலவே இருப்பார்.இதை யாராவது சொன்னால் உடனே முகம்மலர்ந்து கண்ணதாசன் போலவே சிரிப்பார்.
கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை சார்பில் மகளிர் அணி தொடங்கப்பட்டது.விஜயசாந்தி,ஜெயந்தி என்று பலரும் மகளிர் அமைப்பை வலிமையாக இயங்க வைத்தர்கள்.
இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் வைரமுத்து அவர்களுடனான என் அறிமுகமும் அரும்பியது.கோவையில் அவருடைய ‘சிகரங்களை நோக்கி’ நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். அதற்கடுத்த நாள் கண்ணதாசன் விழாவில் அவர் சிறப்புரை நிகழ்த்துவதாக அமைத்திருந்தோம்.

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?,கண்ணதாசனா வைரமுத்துவா என்பது போன்ற
கோழிச்சண்டைகள் தமிழக மேடைகளில் பட்டிமன்றம் என்ற பெயரில் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலம் அது.பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த சகோதர பாசத்தை,கண்ணதாசன் வைரமுத்து இடையிலான குருசிஷ்ய பாவத்தை இத்தகைய மேடைகள் கொச்சைப்படுத்துகின்றன என்பது என் அபிப்பிராயம்.

கண்ணதாசனைப்பற்றி தரக்குறைவாய் எழுதிய பத்திரிகையாளர் ஒருவரை பட்டுக்கோட்டை அடிக்கப் போனார்.பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் முதல் ஃபோன் கண்ணதாசனுக்குத்தான்.அங்கே முதலில் வந்தவரும் அவரே.பட்டுக்கோட்டை இறந்ததும்,”தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்”என்று எழுதியவர் கண்ணதாசன்.

அதேபோல் கண்ணதாசன் மீது வைரமுத்து கொண்டிருக்கும் அளப்பரிய பக்தி பற்றி
“ஒரு தோப்புக் குயிலாக’புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.தமிழ் மக்களுக்கு,கவிஞர்கள் மத்தியிலான இந்தப் பாசம்தான் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

கண்ணதாசன் விழாவில் வைரமுத்து கலந்து கொள்கிறார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.மேளதாளம் முழங்க வரவேற்பு தரப்பட்டது.
“வானத்தின் நீலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அருவியின் ஆலோலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
கேட்டுக் கொண்டிருக்கலாம்.கண்ணதாசனின் பெருமையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்” என்று அவர் தொடங்கிய போது
அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டதால் இரண்டு நன்மைகள் நிகழ்ந்தன.கவிஞர் வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை கோவயில் கிளைபரப்பிய போது கண்ணதாசன் இயக்கம் அதனைத் தோழமையுடன் அரவணைத்தது.அதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளில் கோவையில் கண்ணதாசன் விழா நடந்தபோதெல்லாம்,கவிஞர் வைரமுத்துவின் கட் அவுட்டும் விழா அரங்கில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்தது.

கவிஞர் வைரமுத்துவை குறை கூறுவதன் மூலமே கண்ணதாசன் விழாவில் கைத்தட்டல் பெறலாம் என்ற உத்தியை ஊரெங்கும் கடைப்பிடித்து வந்த ஒருசில பேச்சாளர்கள்,இந்த அரங்கத்தில் தடுமாறினார்கள். கண்ணதாசனை உணர்வுபூர்வமாகப் பேசுகிற பேச்சாளர்கள் அந்த அரங்கினை ஆட்சி செய்தார்கள்.
கண்ணதாசனைக் கேட்டும் கற்றும் தேறிய பார்வையாளர்கள் ஆளுகையில் அந்த
அரங்கம் இருந்தது. ஊடகங்களின் துணையால் விளம்பரம் பெற்ற பல பட்டிமண்டபப் புலிகள்,இந்த அரங்கை வெற்றி கொள்ள முடியாமல் மண்ணைக் கவ்வியதும் நிகழ்ந்தது.”என்னடா இது! மதுரைக்கு வந்த சோதனை!”என்று அவர்கள் வருத்தத்துடன் விடைபெற்றனர்.

பேச்சுக்கலைக்கு ஆதாரம்,பாரதி சொன்ன அடிப்படை வரையறைதான்:
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்பது,
கண்ணதாசன் மேடைகளில் மீண்டும் நிரூபணமானது.

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-7

பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான் வாரம் ஒருமுறையாவது அங்கே செல்வதுண்டு.
காலையில் மில்லுக்குப் போகும்முன் காளிதாஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேரவைக்கு வருவார்.அவர் வருகிற போது பேரவை நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால்
பிரச்சினையில்லை”பொட்டாட்டம்” மில்லுக்குப் போவார்.பேரவை உறுப்பினர் ஒருவரைப்பார்த்தாலும் காளிதாசுக்குள் கண்ணதாசன் இறங்கி விடுவார்.கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி எதிர்ப்படுபவரை அறைகிற கதைதான்.
“ஒரு பாட்லீங்க ராஜேந்திரன்..” என்று தொடங்கினால் ராஜேந்திரன்,காளிதாஸ்,இருவருமே அன்றைக்கு லீவுதான்.தினசரி சந்திப்புகள்,வாராந்திர இலக்கிய அமர்வுகள் ஆண்டுக்கொரு விழா என்று உற்சாகமாக இயங்கியது பேரவை.
இதற்கிடையே கோவை சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சுவாமிநாதன் வாழ்வில் ஓர் அசம்பாவிதம் நடந்தது.கோவையில் ஏழாம் வகுப்பு வரை ஏ.எல்.ஜி. மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்.எட்டாம் வகுப்பிலிருந்து மணிமேல்நிலைப்பள்லியிலும் படித்தேன்.மணி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்,பி.வி.பத்மநாபன் என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் ஒருவர்.நான் படிப்பில் வெகுசுமார் என்றும் அவருக்குத் தெரியும்.கவிதைகள் எழுதுவேன் என்றும் தெரியும்.இவை இரண்டுமே என் பலங்கள் என்று அவர் நினைத்தார்…என்னைப் போலவே!
மற்ற ஆசிரியர்களிடம்,”விடுங்க சார்! நூறு மார்க் எல்லாரும்தான் வாங்கறான்.இவனுக்கு மரத்தைப் பார்த்தா வித்தியாசமாத் தோணுது,பறவையைப் பார்த்தா பேசனும்னு தோணுது” என்று பரிந்து பேசுவார்.

நான் முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்தபோது,அவர் ஓய்வு பெறுவதாகவும்,அவருக்கான வழியனுப்பு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டுமென்றும் பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள்.மணிமேல்நிலைப்பள்ளி
முன்னாள் மாணவர் சங்கம் அந்த விழாவை நடத்தியது.

பத்மநாபன் நல்ல கல்வியாளர்.சுவாரசியமான மனிதர்.சிறந்த ஆசிரியர்களுக்கு தண்டிக்கத் தெரியாது என்பது அவர் விஷயத்திலும் உண்மையானது.ஆனால் தலைமையாசிரியராக இருந்ததால் அவர் தண்டிக்க வேண்டியிருந்த நேரங்கள்,அவருக்குத் தரப்பட்ட தண்டனைகளாகவே இருந்தன.நல்ல உயரம்.கண்ணாடிக்குள் தெரியும் போலீஸ் கண்கள்.மழிக்கப்பட்ட முகம்.தலைமையாசிரியர்களின் தலையாய இலக்கணமாகிய வழுக்கை.

சரளமாகப் பேச வரும்.திட்டும்போது மட்டும் தடுமாறுவார்.ஒரு வாக்கியத்தைத் தொடங்கும் போதும்,வாக்கியத்தை முடிக்கும் போதும்,வாக்கியத்தின் நடுவிலும் தோராயமாக ஐந்தாறு பழமொழிகள் சொல்வார்.

இங்கே ஒருஃபிளாஷ் பேக்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது,எங்கள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரும்,பள்ளித் தாளாளருமான
திரு,சின்னசாமி நாயுடு இறந்திருந்தார்.நான் அவருக்கு ஓர் இரங்கல் கவிதை எழுதியிருந்தேன்.
“விடிவெள்ளி விடைபெற்றுச் சென்றதோ-இனி
வாழுங்கள் என்வழியில் என்றதோ
அடிவேரும் அடியோடு சரிந்ததோ
அரியதொரு சரித்திரமே முடிந்ததோ”
என்று தொடங்கிய அந்தக் கவிதையை என் தமிழாசிரியர் க.மீ.வெங்கடேசனிடம்
காட்ட,அவர் தலைமையாசிரியரிடம் காட்ட,ஓவிய ஆசிரியர் தண்டபாணியைக் கொண்டு
அந்தக் கவிதையை ஒரு கறுப்பு சார்ட்டில் வெள்ளை வண்ணத்தில் தீட்டி,கூடவே சின்னசாமி நாயுடுவின் உருவத்தையும் வரைந்து பள்ளியில் பெரிதாக மாட்டி வைத்தார்கள்.அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில்,பள்ளி அறங்காவலர்,திரு.ஜி.கே.சுந்தரம்,தலைமையாசிரியர் பத்மநாபன் ஆகியோர் பேசியபிறகு நான் அந்தக் கவிதையை வாசித்தேன்.

அந்தக்கூட்டம் முடிந்து கீழே வந்ததும் எல்லோரும் பாராட்ட,12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அம்பலவாணன் மட்டும் காதுக்கருகே வந்து,”யார் எழுதிக் கொடுத்தாங்க” என்று ரகசியமாக விசாரித்தான்.செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பது போல எனக்கு புகழையும் புதுவாழ்க்கைக்கான திறவுகோலையும், செத்தும் கொடுத்தார் சின்னச்சாமி என்பது எனக்கு அப்போது தெரியாது.

இந்த சம்பவத்தால் பத்மநாபன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மாணவனாக ஆகியிருந்தேன்.”விளையும் பயிர் முளையில் தெரியும்”என்ற பழமொழியை அவர் அடிக்கடி என்மேல் பிரயோகித்து வந்தார்.
அவருக்கான வழியனுப்பு விழாவை நான் தொகுத்து வழங்கியதும்,முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான சசி அட்வர்டைசிங் சுவாமிநாதன்,தன்னுடைய விசிட்டிங்கார்டை என்னிடம் தந்து,”நாளைக்கு வந்து எங்க ஆபீஸ்லே ஜாய்ன் பண்ணிக்கங்க” என்றார்.
“சார்! நான் படிச்சுகிட்டிருக்கேன் சார்!” என்றதும்,”பரவாயில்லை!சாயங்காலத்திலே ரெண்டு மணிநேரம் வந்தீங்கன்னா போதும்” என்றார்.

எனக்கிருந்த விளையாட்டுப்புத்தியில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு.”இன்னைக்கு ஆபீசுக்கு வாங்களேன்” என்றார்.
சென்றேன்.அப்போதே நவீனமாக இருந்தது அலுவலகம்.வரவேற்பறையில் காத்திருந்தேன் மிக அழகான
தட்டச்சிகள் இருந்தனர்..
“எந்திரத்தில் உள்ள எழுத்தாய்ப் பிறந்திருந்தால்
வந்தென்னைத் தீண்டும் விரல்”
என்று மனசுக்குள் எழுதிக்கொண்டிருந்தபோது உள்ளே போகச் சொன்னார்கள்.
உற்சாகமாக வரவேற்றார் சுவாமிநாதன்.பேசிக்கொண்டிருந்தபோதே
காபி வந்தது.அலுவலக மேலாளர் சங்கரிடம் சொல்லி எனக்கான பணிநியமன உத்தரவைத் தயார் செய்யச் சொன்னார்.தினமும் மாலை 4-6 வேலை நேரம்.சங்கர் தயார் செய்த பணிநியமன உத்தரவில் மாதச் சம்பளம் 500/ என்றிருந்தது.சுவாமிநாதன் அதை அடித்து விட்டு 750/ என்று திருத்தினார்.1990ல் தினம் இரண்டுமணிநேரம்
வந்து போக 750/ரூபாய் என்பது என் ஆசையையும் தூண்டியது.வேலையில் சேர்ந்தேன்.ஆறே மாதங்களில் சம்பளத்தை 1250ரூபாய்களாக உயர்த்தினார்.

பாரதிதாசன் நூற்றாண்டுவிழாவிற்கு சசி விளம்பர நிறுவனம் வாயிலாக பாரதிதாசனின் வாசகங்கள்
அடங்கிய ஸ்டிக்கர்கள் வெளியிடச் செய்தேன்.பாவேந்தர் நூற்றாண்டு விழாவையும் நடத்தினோம்.சசி
விளம்பர நிறுவனம் சார்பாக நாங்கள் நடத்திய அடுத்த விழா என்னவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்…. ஆமாம்! கண்ணதாசன் விழாதான்!!

(தொடரும்)

இப்படித்தான் ஆரம்பம்-6

கனவுகளுடன் தொடங்கப்படும் அமைப்புகள் காற்றில் கலைவதும்,காற்றில் கட்டப்படும் சீட்டுக்கட்டு மாளிகைகள் காலூன்றி எழுவதும்,புதிதல்ல.பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை
தொடங்கப்பட்ட நாட்களில் எனக்கு அதன்மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.
முதல்காரணம்,அதற்குத் தலைவர்,உள்ளூர் அரசியல் பிரமுகர்.இரண்டாவது காரணம்,அந்த அமைப்பில் பெரும்பங்கு வகித்த ஆலைத்தொழிலாளர்கள்.

அரசியல் பிரமுகர்கள் ஏற்கெனவே தங்களை ஓர் அரசியல் அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஆலைத் தொழிலாளர்கள் ஏதேனுமோர் அரசியல் சித்தாந்தத்தின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எனவே
கலை இலக்கிய அமைப்பொன்றைத் தொடங்கிவிட்டார்களே தவிர தொடர்வார்களா என்கிற கேள்வி எழுந்தது உண்மை.ஆனால் மிக வலிமையான அமைப்பாக அந்தப்பேரவை உருவாக அவர்களுக்குக்
கண்ணதாசன் மீதிருந்த களங்கமில்லாத பக்தியே காரணம்.

அமைப்பின் தலைவர்,சிங்கை முத்து.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்.அமைப்பின் செயலாளர்,காளிதாஸ்.ஆலைத் தொழிலாளி.சிங்கை முத்துவிற்கு ஹோப்காலேஜ் பகுதியில் ஒரு திரையரங்கம்,ஒரு திருமணமண்டபம்,ஒரு பேக்கரி ஆகியவை சொந்தம்.அரிமா இயக்கத்திலும்,
அவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

கண்ணதாசன் மீது வெறிகொண்ட பக்தர் காளிதாஸ்.ஒர் இயக்கத்தை உருவாக்கி வழிநடத்தும் பண்புகள்
அவரிடம் இயல்பாகவே இருந்தன.பேச்சாற்றல் போன்ற அம்சங்கள் அவரிடம் பெரிதாக இல்லை.ஆனால்
மிகக் குறுகிய காலத்தில் கண்ணதாசன் பேரவையை வலிமையாக வளர்த்தெடுத்தார் அவர்.சிவந்த உருவம்.சிரித்த முகம்.பூனைக்கண்கள்.அப்போது பேரவை,பைந்தமிழ் அச்சகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.பைந்தமிழ் அச்சக உரிமையாளர் திரு. கந்தசாமி.அவருடைய புதல்வர்கள் கணேசன்,ஆனந்தன் இருவருமே பேரவையின் தீவிர உறுப்பினர்கள்.குணசேகரன்,கனராஜ்,ராஜேந்திரன்,பாலச்சந்திரன்,வேலுமணி,தேவ.சீனிவாசன் என்று பலரும் அந்த அமைப்பில் இருந்தார்கள்.

கோவையின் பிரதான சாலைகளாகிய அவினாசி ரோட்டையும் திருச்சி ரோட்டையும் இணைக்கும் முக்கியமான சாலை காமராஜ் ரோடு.காமராஜ் ரோட்டின் மீதே மணீஸ் தியேட்டரும்,சற்றே உள்ளடங்கி
மணிமகால் என்கிற திருமண மண்டபமும் இருந்தன. சொந்தமாக ஒரு மண்டபம் இருப்பது ஓர் அமைப்பிற்கு எவ்வளவு பெரிய பலம் என்று அப்போதுதான் தெரிந்தது.

மண்டபம் கொடுக்க சிங்கை முத்து,அழைப்பிதழ் அடிக்க பைந்தமிழ் அச்சகம்,விழா ஏற்பாடுகளை
துல்லியமாகச் செய்ய காளிதாஸ்,தீவிரமாக உழைக்க உறுப்பினர்கள்,தலைப்புகள் தேர்ந்தெடுக்கவும்,பேச்சாளர்களைத் தெரிவு செய்யவும் தொடர்பு கொள்ளவும் நான் .போதாதா!

கண்ணதாசனுக்குக் கோலாகலமான விழாக்களை எடுத்துத் தள்ளியது பேரவை.ஆலைத் தொழிலாளர்களின் வேலைப்பளு,சம்பந்தப்பட்ட மற்றவர்களின் வெவ்வேறு பணிகள் ஆகியவற்றுக்கிடையே,இது வெறும் ஆண்டுவிழா அமைப்பாக அருகிப் போயிருந்தாலும் யாரும்
கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.ஆனால் முதலில் வாரம் ஒருமுறை என்று தொடங்கி,பிறகு பேரவை உறுப்பினர்கள் தினம்தினம் சந்தித்துக் கொள்ளும் அமைப்பாக உருவானது கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை.

சுகிசிவம் அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்,சுழலும் சொற்போர் என்று விதம்விதமான நிகழ்ச்சிகள் இங்கே நடந்தன. மேடையில் பேசியவர்களைவிட பேரவை உறுப்பினர்கள் கண்ணதாசனை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

கண்ணதாசன் பேரவையில் இருந்தவர்களில் ஒருவரான கனகராஜ்,வித்தியாசமான மனிதர்.
கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளைச் சொல்லி புதிர்போட்டு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பார்.

“பட்டகடன் தீர்ப்பேனா?பாதகரைப் பார்ப்பேனா?பாவலர்க்கு மேடையிலே பரிந்துரைக்கப் போவேனா?
கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?கொல்லும் கவலைகளைக் குடித்து மறப்பேனா?”
என்பது கவிஞரின் கவிதை வரிகள்.

தயங்கித் தயங்கித்தான் ஆரம்பிப்பார் கனகராஜ்.”சார்! இந்தக் கவிதையிலே கவிஞர் ” கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?” அப்படீன்னு ஏன் பாடினார் தெரியுங்களா?”என்று ஆரம்பிப்பார்.

“தெரியலீங்களே கனகராஜ்”

‘அதாவதுங்கோ..இந்தத் தேளு பார்த்தீங்கன்னா,ஒருத்தர கொட்டோணும்னு வைங்க..கொடுக்கைத் தூக்குமுங்க.அப்போ அதோட காலு ரெண்டு பார்த்தீங்கன்னா,கும்புடற மாதிரி குவிஞ்சிருக்குமுங்கோ.
நம்ம கவிஞரு அப்பிராணியாச்சுங்களா….அது கும்புடுதாக்கும்னு இவுருங் கும்புட அது போட்டுத் தள்ளீருமுங்கோ.நம்ம கவிஞரு கூடப் பழகினவிய பலபேரும் அப்படி தேளாத்தான் இருந்திருக்காங்கோ..”

கவிஞரின் கவிதைகளுக்கு கனகராஜ் போலப்பல பாமரப் பரிமேலழகர்கள் பேரவையில் இருந்தார்கள்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியாகியிருந்த சமயம்.

“நம்ம கவிஞரு சொன்ன மாதிரியே நடந்து போச்சுங்கோ”என்றார் கனகராஜ்.
“என்ன கனகராஜ்”? என்றதும்,நேரு மறைந்த போது கண்ணதாசன் எழுதிய ஏராளமான கவிதைகளிலிருந்து
மிகச்சரியாக மூன்று வரிகளை எடுத்துக் காட்டினார் .

‘அம்மம்மா என்ன சொல்வேன் அண்ணலைத் தீயிலிட்டார்!
அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்!”

“பாருங்கோ! அண்ணல்னு காந்தியைத்தானேங்க சொல்வோம்.காந்தியவும் கொன்னாங்கோ.’அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்னு பாடுனாரு.இந்திரா காந்தியயுமு
இப்போ ராஜீவையுமு கொன்னுட்டாங்கோ” என்று தயங்கித் தயங்கிச் சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விட்டார் கனகராஜ்.
சுகிசிவம் அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் கண்ணதாசனை,”ஆறடி வளர்ந்த அப்பாவித்தனம்”என்று வர்ணித்திருந்தார்அவர்.

கண்ணதாசன் பேரவை உறுப்பினர்கள் பலருடைய வீடுகளில் கவிஞர் படம் மாட்டப்பட்டிருக்கும்.உறுப்பினர்களின் சகோதரிகளுக்கோ,உறுப்பினர்களுக்கோ நடைபெற்ற
திருமண அழைப்பிதழ்களில் கவிஞரின் படமும்,அவருடைய மங்கல வரிகளும் கண்டிப்பாக
இடம்பெற்றிருக்கும்.

இன்று நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.அவர்களில் பெரும்பாலோர் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.கனகராஜைத் தவிர..

தீவிர கடன்சுமை காரணமாய் சில ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார் கனகராஜ்.

(தொடரும்)

ஓசை எழுப்பும் உள்மனமே

வீசிய பந்தின் விசைபோலே

வெய்யில் நாளின் திசைபோலே

ஏசிய வார்த்தையின் வலிபோலே
எழுதி முடியாக் கவிபோலே
பேசிட முடியாத் தீவிரமாய்
பேறுகாலத்தின் ஆத்திரமாய்
ஓசை எழுப்பும் உள்மனமே

உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே
எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே
எல்லாக் கனவையும் காண்பதெங்கே
நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே
நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே
கல்லால் எறிந்த காயங்களே
கண்ணைக் கட்டிய மாயங்களே
பொல்லா விடுகதைப் பொழுதுகளே
போதிக்க என்னென்ன பாடங்களே

உலகை வெல்வதும் ஒருபொழுது
உவகை மிகுவதும் ஒருபொழுது
நிலைகள் குலைவதும் ஒருபொழுது
நிஜங்கள் உணர்வதும் ஒருபொழுது
மலராய் மலர்வதும் ஒருபொழுது
மெழுகாய் உருகவும் ஒருபொழுது
மலையாய் எழுவதும் ஒருபொழுது
மனவான் காண்பது பலபொழுது

காட்சிப் பொருளாய்இருக்கும்வரை
காண்பவை எல்லாம் போராட்டம்
சூழ்ச்சிக் கிரையாய் ஆகும்வரை
சோர்வு கொடுக்கும் திண்டாட்டம்
சாட்சிப் பொருளாய் ஆனபின்னே
சட்டென்று விலகும் பனிமூட்டம்
ஆட்சி புரிகிற அமைதியிலே
ஆனந்தம் பருகிடு வண்டாட்டம்

இராமனிடம் சில கேள்விகள்

சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்
சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்
எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்
அத்தை மடியினில் நடந்துவந்தாய்

கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்
கால்துகள் பட்டதும் பெண்ணானாள்
முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்
மோதுகணை பட்டேன் மண்ணானாள்?

நாத மொழிகேட்ட சபரியுமே-உனை
நேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்
காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்
கண்களில் பட்டென்ன பாடுபட்டாள்

காதல் நெருப்பில் சிலகாலம்-கொடுங்
காட்டு நெருப்பினில் சிலகாலம்
ஆதரவில்லாமல் தென்னிலங்கை- மண்ணில்
அச்ச நெருப்பினில் சிலகாலம்

கற்பின் பெருங்கனல் சானகியும்-அய்யோ
கண்ட துயரங்கள் பார்த்துவிட்டாய்
அற்புதப் பெண்ணவள் வாடும்படி-நீ
அக்கினி யில்இட்டு வாட்டிவிட்டாய்

வாலியை மட்டுமா?யாரையும்நீ
வாழ்வினில் நேர்படக் கொல்வதில்லை
கால்ன் எனுமம்பை ஏவுகிறாய்-எவர்
கண்களின் முன்னும்நீ செல்வதில்லை

எல்லாம் மறைபொருள் உன்னிடத்தில்-உனை
எல்லா மறைகளும் தேடிவரும்
சொல்லால் அளக்கிற கம்பன்தமிழ் -உனை
சிக்கெனப் பிடித்துக் காட்டிவிடும்

காலக் கணக்குகள் நீத்தவன்நீ-என்று
காரியம் யாவிலும் காட்டிக் கொண்டாய்
சீலக் கவிமன்னன் கம்பன்வைத்த-ஒரு
செந்தமிழ்க் கண்ணியில் மாட்டிக் கொண்டாய்

ஜீவநதியொன்று….

திருவடித் தாமரை மலர்ந்தது
தேன்துளி என்னுள் நிறைந்தது
குருவடிவாக அருளுருவாக
குளிர்மழை இங்கு பொழிந்தது-என்
கொடும்வினை எல்லாம் கரைந்தது
 
சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு
தருநிழல் தேடியே தினம்நடந்தேன்
திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன்
அருளெனும் சுனையினில் உயிர்நனைந்தேன்

தாவரம் ஒன்றின் தவிப்படங்க
ஜீவநதியொன்று தரையிறங்க
அடடா…இதுஎன்ன அதிசயமோ
அதுதான் அதுதான் ரகசியமோ

வினைகளின் வலையினில் நேற்றின்சுகம்
புதிரென்று விரட்டிடும் பார்த்த சுகம்
கதவுகள் திறந்ததும் காற்றின்சுகம்
குழலினில் மிதந்திடும் பாட்டின் சுகம்

ஏங்கிடும் வாழ்வினில் ஏதுசுகம்
தாங்கிடும் உன்கரம் தேவசுகம்
உணர்ந்தேன்… உனது பாதசுகம்
உடைந்தேன் அதுதான் ஞானசுகம்