அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி

அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை
பேசி முடியாப் பேரழகு
பொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ நெடுந் தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும்.
அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை. அவற்றில் ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்…
“சின்னஞ்சிறு பெண்போலே
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்”

முன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும் அமர வைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல்.வரிகளுக்கிடையிலான நிறுத்தங்களும் நிதானமும் ஓர் உரையாடலுக்கான தொனியை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

“பின்னல் ஜடை போட்டு…” என்று சில நொடிகள் நிறுத்தாமல் நிறுத்தி, “பிச்சிப் பூ சூடிடுவாள்..” என்கிறபோது அந்தப் பிச்சியின் கூந்தலில் இருந்து பிச்சிப்பூ மணம் சூழ்வதை உணரலாம்.
“பித்தனுக்கு இணையாக…” என்று நீட்டி, ஒரு விடுகதைபோல் நிறுத்தி “நர்த்தனம் ஆ..ஆ..ஆடிடுவாள்” என்கிறபோது தோன்றும் பரவசம் ஒவ்வொரு முறையும் புதியது.
எனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாட்டின் உச்ச வரிகள் இரண்டு.
“பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது…
பேரழகுக்கீடாக…வேறொன்றும் கிடையாது.”

இறைமையின் பேரழகையோ பேராற்றலையோ விளக்க முயலும் எந்தக் கலைகளும் தம் எல்லையைக் கண்டு கொள்ளும் இடம் இதுதான். கலைகளென்ன? வேதங்களுக்கே அந்தக் கதிதான். “வேதங்கள் ஐயா எனவோங்கி நிற்கும் அளவு ஆழ்ந்தகன்றதும் நுண்ணியதுமான இறைத் தன்மையை விளக்கும் முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் முயற்சி தோற்றாலும் அந்த அனுபவம் அவர்களுக்கு சித்தித்துவிடுகிறது. அந்த அனுபவம் சிந்தாமல் சிதறாமல் பகிரப்படும்போது கிடைக்கும் உன்னத உன்மத்தத்தை என்னென்பது? அத்தகைய உன்னதம்தான், அத்தகைய உன்மத்தம்தான் அபிராமி அந்தாதி.

“ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாட”
என்றார் மாணிக்கவாசகர். ஆதியந்தம் இல்லாத அம்பிகையை அந்தாதியிலேயே பாடினார் அபிராமி பட்டர். இஷ்ட தெய்வத்தை இதயத்தில் இருத்துவதும் துதியிலும் தியானத்திலும் அதனுடனேயேகலந்திருப்பதும் முடிவுறாத் தொடர்ச்சிதானே! அந்தத் தொடர்ச்சியின்ஆனந்தத்தைத் தருவது அபிராமி அந்தாதி.

வாழ்வின் அற்புத கணங்கள் எவையென்று கேட்டால் தன்னை மறக்கும் கணங்கள் தன்னை இழக்கும் கணங்கள் என்றெல்லாம் பலரும் சொல்வார்கள். தன்னை மறப்பதைவிட தன்னை இழப்பதைவிட தன்னைக் கடக்கிற கணம் தான் உண்மையிலேயே மிக அற்புதமான கணம்.

அலுவலகம் விட்டுவரும் அப்பா குழந்தையின் கையிடுக்குகளில் கைகள் கோர்த்து கரகரவென சுற்றுவார். கண்கள் செருக தலைசுற்ற அலறிச்சிரிக்கும் குழந்தை. இறக்கிவிட்ட மறுநொடியே “இன்னும் இன்னும்” என்று கைவிரித்து ஓடிவரும். இதில் குழந்தைக்கு ஒன்று தெரிகிறது.
கண்கள் செருகினாலும் தலை சுற்றினாலும் அப்பாவின் கைகளில் பத்திரமாக இருக்கிறோம் என்பதால் அது தன்னை மறக்கிற போதே தன்னைப் பற்றிய அச்சத்தைக் கடக்கவும் செய்கிறது.
அபிராமி பட்டர் என்னும் அப்பாவின் கவிதைக் கரங்களைப் பற்றி கரகரவென சுற்றும் உயிருக்கு ஏற்படும் அபிராமி அனுபவம், தன்னை மறக்கவும் செய்கிறது, தன்னை, தன் வினைகளை, பிறவித் தொடர்களை கடக்கவும் செய்கிறது.

அபிராமி என்ற சொல்லுக்கே பேரழகி என்றுதான் பொருள். பேச்சில் அடங்காப் பேரழகு. பேசி முடியாப் பேரழகு. “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி.” அது வெறும் திருமேனி அழகா?? இல்லை. கருணையின் அழகு. பேரறிவின் அழகு. மூவராலும் பணிந்து வணங்கப்படும் பேரருளின் பேரழகு. “அவள் இருக்கிறாள்” என்னும் பாதுகாப்புணர்வில் நம்மில் பெருகுகிற நிம்மதி என்ன அழகோ, அந்த அழகே அபிராமி.

தன்னில் அவளை ஒளியாக உணர்ந்து அவளின் அருளமுதத்தில் முற்றாய் நனைந்து அந்த மௌனத்திலேயே அமிழ்ந்து, சரியான தருணம் தாழ்திறக்க தனக்குள் தளும்பி வழியும் அந்த அனுபவம் தன்னையும் தாண்டி உடைப்பெடுப்பதையும் பெருக்கெடுப்பதையும் அபிராமிபட்டர் மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க உருவான பனுவல்களே அபிராமி அந்தாதி.
தை அமாவாசையில் சரபோஜி மன்னன் திருக்கடவூர் வந்ததும், அன்னையின் திருமுகவிலாசத்தை மனத்தே வைத்து தன்னந்தனியிருந்த அபிராமி பட்டரிடம் என்ன திதி என்று வினவியதும் அவர் பவுர்ணமி என்று சொன்னதும் அந்தத் தருணத்தின் தாழ்திறப்புக்கான ஏற்பாடுகள் மட்டுமே. திதிகேட்க வைத்தவளும் அவளே! தமிழ்பாட வைத்தவளும் அவளே!
எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை. ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு.

“தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே”

இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில் பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமி அந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை விட்டு விட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்?
இப்படி வேண்டுமானால் இருக்கலாம். திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்கு திருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக் குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ள வாரணப் பிள்ளையார் அவர். தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர்.

அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்றுகூட அதனைக் காக்கும் பொறுப்பை கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்.

எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே தொடங்கிவைக்கிறார் அபிராமிபட்டர். அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில் அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக் கோலத்திலேயே காட்டுவார் அபிராமிபட்டர். அந்தக் காட்சி காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது.

தார், ஆண்களுக்குரியது. மாலை பெண்களுக்குரியது. முனைகள் கட்டப் படாதது தார். முனைகள் கட்டப்பட்டது மாலை. அதிலும் கொன்றையந்தார் சிவ பெருமானுக்குரியது. சண்பகமாலை அம்பிகைக்குரியது இரண்டும் ஒருங்கே சார்த்தப்பட்ட உமையொரு பாகராம் தில்லை ஊரரின் புதல்வராகிய கார்மேனிக் கணபதியே! உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும் என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார்.

விநாயகப் பெருமானின் திருமேனி மேக நிறம். “நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும் கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி. அந்த விநாயகர் திருவருளால் முகிலில் இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார் பட்டர்.
ஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. “சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே.”

அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும் இந்தப் பாடல் அமைகிறது.
(தொடரும்)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *